வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
திருடப்பட்ட பொருட்களை வாங்குவதை யெகோவாவின் சாட்சிகள் எவ்வாறு நோக்குகின்றனர்?
திருடப்பட்ட விற்பனைப் பொருட்கள் அல்லது சாதனங்களைத் தெரிந்து வாங்குவதில் எந்தப் பங்கையும் கொண்டிருப்பதை கிறிஸ்தவர்கள் தவிர்க்கின்றனர்.
திருடுதல் நிச்சயமாகவே தவறு. சந்தேகத்துக்கு இடமின்றி இஸ்ரவேலுக்கு கடவுளுடைய சட்டம் “களவு செய்யாதிருப்பாயாக,” என்று தெளிவாக குறிப்பிட்டது. (யாத்திராகமம் 20:15; லேவியராகமம் 19:11) ஒரு திருடன் பிடிக்கப்பட்டால், சூழ்நிலைமையைப் பொறுத்து அவன் இரண்டு மடங்கு, நான்கு மடங்கு அல்லது ஐந்து மடங்கு சரியீடு செய்ய வேண்டும்.
விரைவாக லாபம் பெற்றுக்கொள்ள திருடர்கள் திருடிய பொருட்களை கைக்குக் கை மாற்றியனுப்ப பண்டைய காலங்களிலிருந்து முயற்சி செய்திருக்கின்றனர். அப்போது அவர்கள் குற்றப்பழி அத்தாட்சியோடு பிடிபடாமல் இருப்பர். இந்த நோக்கத்துக்காக அவர்கள் திருடிய பொருட்களைப் பொதுவாக குறைவான விலைக்கு விற்கின்றனர். ஆகையால் அதை வேண்டாம் என்று மறுப்பதற்கு வாங்குபவர்களுக்கு கடினமாக இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு பழக்கம் யாத்திராகமம் 22:1-ல் நாம் வாசிக்கும் விஷயத்தில் ஒருவேளை உட்பட்டிருக்கலாம்: “ஒருவன் ஒரு மாட்டையாவது ஒரு ஆட்டையாவது திருடி, அதைக் கொன்றால், அல்லது அதை விற்றால், அவன் அந்த மாட்டுக்கு ஐந்து மாடுகளையும், அந்த ஆட்டுக்கு நாலு ஆடுகளையும் பதிலாகக் கொடுக்கக்கடவன்.”
இப்படிப்பட்ட சட்டங்களின் விளைவுகளை உணர்ந்தவராய் ரபி ஆபிரகாம் சில் என்பவர் இவ்வாறு எழுதுகிறார்: “திருடப்பட்ட சொத்தை வாங்குவதோ அல்லது ஏற்றுக்கொள்வதோ தடைசெய்யப்பட்டிருக்கிறது. அந்தச் சொத்து திருடப்பட்ட பொருளாக அடையாளங்கண்டு கொள்ளப்படாவிட்டாலும்கூட. ஆகையால், ஒருவர் ஒரு மேய்ப்பனிடமிருந்து ஓர் ஆட்டை வாங்கக்கூடாது, ஏனென்றால் மேய்ப்பன் ஒருவேளை தன் எஜமானுக்குத் தெரியாமலேயே அதை விற்பனை செய்து அந்தப் பணத்தை தனக்கென்று எடுத்துக் கொள்ள திட்டமிட்டிருக்கலாம்.”—The Mitzvot—The Commandments and Their Rationale.
உண்மையில், திருடிய ஆட்டை விற்பதன் பலனாக அவன் தன் எஜமானின் பணத்தை ஒருவேளை எடுத்துக்கொள்ளலாம் என்று சந்தேகிப்பதனாலேயே ‘ஒரு மேய்ப்பனிடமிருந்து ஓர் ஆட்டை வாங்குவதை’ கடவுளுடைய சட்டம் தடை செய்கிறதில்லை. ஆனால் பிரச்னையின் மறு பக்கத்தைப் பார்த்தால், விற்பவர் அந்தப் பொருளுக்கு உரிமையாளர் அல்ல அல்லது அது ஒருவேளை திருடப்பட்ட பொருளாக இருக்கலாம் என்பது தெளிவாக இருந்தால், அப்படிப்பட்ட (ஆடு அல்லது வேறு எந்தப் பொருளின்) விற்பனைக்கு யெகோவாவின் ஊழியர்கள் தெரிந்து மனமார உடந்தையாக இருக்கக்கூடாது. தனிப்பட்டவர்களின் சொத்துக்களை கடவுள் அங்கீகரிக்கிறார் என்று கடவுளுடைய சட்டம் காண்பிக்கிறது. ஆனால் ஒரு திருடன் சொத்துக்கு சொந்தக்காரரிடமிருந்து அதைப் பறித்துக் கொள்கிறான். திருடியப் பொருள் என்று அறியப்பட்டிருக்கும் ஒன்றை யாராவது ஒருவர் வாங்கினால் அவர் திருடனாக ஆக மாட்டார். ஆனால் அவர் அவ்வாறு வாங்குவது அந்தச் சொந்தக்காரர் தன் சொத்தை திரும்பவும் பெற்றுக்கொள்ளும் சாத்தியத்தைக் குறைத்துவிடுகிறது.—நீதிமொழிகள் 16:19; 1 தெசலோனிக்கேயர் 4:6-ஐ ஒப்பிடவும்.
வாங்குபவர்கள்—மனைவிகளாக இருந்தாலும் சரி அல்லது நிறுவனத்துக்காகப் பொருட்களை வாங்குபவர்களாக இருந்தாலும் சரி—அவர்கள் சரக்குகளை குறைந்த விலைக்கு வாங்குவதற்கு விரும்புகின்றனர். உலக முழுவதிலும் உள்ள பெண்கள் விலைகள் குறைவாக ஆகும் காலம் வரை பொருட்களை வாங்காமல் காத்திருக்க முயற்சி செய்கின்றனர், அல்லது பெரும் அளவு சரக்குகளைப் பேரம் பேசி வாங்கும் சந்தைகளில் வாங்குகின்றனர், அல்லது அலுவலகச் செலவுகள் குறைவாயுள்ள கடைகளில் நல்ல விலைக்கு வாங்குகின்றனர். (நீதிமொழிகள் 31:14) என்றபோதிலும், பேரம் பேசி வாங்குவதில் ஆர்வமாயிருத்தல் ஒழுக்க சம்பந்தமான வரம்புகளை கொண்டிருக்க வேண்டும். நெகேமியாவின் நாட்களில் இருந்த உத்தமமானவர்கள் ஓய்வுநாளில் விலைகொடுத்து வாங்க மறுத்தனர். அந்த நாட்களில் நல்ல கொள்முதல் கிடைத்தாலும்கூட அவர்கள் வாங்க மறுத்தனர். (நெகேமியா 10:31; ஆமோஸ் 8:4-6-ஐ ஒப்பிடவும்.) அதே போன்று தான் கிறிஸ்தவர்களும் இருக்கின்றனர். திருடப்பட்ட பொருட்களை அவர்கள் வேண்டாம் என்று மறுப்பது, குறைந்த விலையில் கிடைக்கும் அப்பொருட்களை வாங்குவதற்கு இருக்கும் சோதனையை கட்டுப்படுத்த அவர்களுக்கு உதவி செய்கிறது.
சில வியாபாரிகள் திருடப்பட்ட பொருட்களை விற்பவர்கள் என்று அனைவரும் அறிந்திருக்கலாம். அல்லது இரகசியமாக சிலர் விலையை குறிப்பிடுவர். அது அசாதாரணமாக குறைந்த விலையில் இருக்கும். அப்போது அந்தச் சரக்கு சட்டத்துக்கு விரோதமாக பெறப்பட்டது என்று எந்தச் சாதாரண நபரும் முடிவுக்கு வருவார். தேசத்தின் சட்டமும்கூட அப்படிப்பட்ட நியாயமான யோசனைக்கான தேவையை ஒப்புக்கொள்ளலாம். சட்ட நூல் ஒன்று இவ்வாறு குறிப்பிடுகிறது:
“சட்டப்படி குற்றமான நடத்தைக்கு குற்றவாளி என்று ஒருவரை குறிப்பிடுவதற்கு தேவையான உண்மைகளை அவர் அறிந்திருக்க வேண்டிய தேவையில்லை; யாரிடமிருந்து அல்லது யாரால் அந்தச் சொத்து திருடப்பட்டது அல்லது எப்போது அல்லது எங்கே திருடப்பட்டது, அல்லது எந்தச் சூழ்நிலைமைகளின் கீழ் அது திருடப்பட்டது என்பதை குற்றம் சாட்டப்பட்டவர் அறிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. அது திருடப்பட்டது என்பதை அவர் அறிந்திருப்பது போதுமானது. . . . ஒரு சாதாரண மனிதனின் சிந்தனைக்கு அது திருடப்பட்ட பொருள் என்று தோன்றும் சூழ்நிலைமைகளின் கீழ் அப்பொருளை வாங்குவதே குற்றவாளி தெரிந்தே வாங்கினார் என்று தீர்ப்பதற்கு போதுமானது என சில நீதிமன்றங்கள் கருதுகின்றன.”
திருடப்பட்ட பொருட்களை வாங்குவதை தவிர்ப்பதற்கு ஒரு கிறிஸ்தவனுக்கு இது முழுமையான காரணத்தைக் கூட்டுகிறது. அவர் அப்படிப்பட்ட பொருட்களை வாங்குவது அவரைச் சட்ட மீறுபவராக ஆக்கக்கூடும். தண்டனையின்றி தப்பித்துக் கொள்ளக்கூடுமென்று அவர்கள் நினைத்தால் அநேக ஜனங்கள் சட்டத்தை மீறுவதைக் குறித்து அவர்களுடைய மனச்சாட்சி குத்துவதில்லை. மெய்க் கிறிஸ்தவர்களின் விஷயத்தில் அது அவ்வாறு இல்லை. அவர்கள் “மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படிய” விரும்புகின்றனர். சட்டத்துக்குக் கீழ்ப்படிவது, குற்றவாளிகள் என்று குற்றம் சாட்டப்படுவதிலிருந்து அவர்களைப் பாதுகாக்கிறது. யெகோவாவுக்கு முன்பு நல்ல மனச்சாட்சியைக் கொண்டிருக்க அது உதவுகிறது.—ரோமர் 13:1, 4, 5.
கடவுளுடைய நண்பனாகிய ஆபிரகாம் மனச்சாட்சியைக் குறித்ததில் ஒரு நல்ல முன்மாதிரியை வைத்தார். அவருடைய நாளில் நான்கு கிழக்கத்திய ஆட்சியாளர்கள் லோத்து வாழ்ந்திருந்த இடத்தில் இருந்த ராஜாக்களைத் தோற்கடித்தனர். ஒரு வகை இராணுவ கொள்ளை என்ற வடிவில் அநேக விலைமதிப்புள்ள பொருட்களை எடுத்துச் சென்றனர். ஆபிரகாம் அவர்களைப் பின்தொடர்ந்தார், எதிரிகளை மேற்கொண்டார், திருடப்பட்ட பொருட்களை திரும்பவும் கொண்டு வந்தார். வெகுமதியாக “பொருள்களை நீர் எடுத்துக் கொள்ளும்,” என்று சோதோமின் ராஜா ஆபிரகாமிடம் சொன்னார். அதற்கு மாறாக, ஆபிரகாம் அந்தப் பொருட்களுக்கு உரிமையாளரிடமே அவைகளைத் திரும்ப கொடுத்தார். “ஆபிராமை ஐசுவரியவானாக்கினேன் என்று நீர் சொல்லாதபடிக்கு . . . உமக்கு உண்டானவைகளில் யாதொன்றையாகிலும் எடுத்துக்கொள்ளேன்,” என்று ஆபிரகாம் அந்த ராஜாவைப் பார்த்துச் சொன்னார்.—ஆதியாகமம் 14:1-24.
திருடப்பட்ட பொருட்கள் மூலம் பணசம்பந்தமான அனுகூலம் பெற்றுக்கொள்வதில் கிறிஸ்தவர்கள் அக்கறையுள்ளவர்களாய் இல்லை. “அநியாயமாய் ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறவன் முட்டையிட்டு அவயங்காத்தும், குஞ்சுபொரிக்காமற் போகிற கவுதாரிக்குச் சமானமாயிருக்கிறான்,” என்று எரேமியா எழுதினார். (எரேமியா 17:11) ஆகையால், திருடப்பட்ட சொத்தைக் குறித்த விஷயத்தில் இராயனின் சட்டங்களை மீறாமல் இருப்பதன் மூலம் ஞானத்தைக் காட்டுவது மட்டுமன்றி, திருட்டு என்ற அநீதியோடு எந்த விதத்திலும் சம்பந்தப்பட்டிருப்பதற்கு மறுப்பதன் மூலம் கிறிஸ்தவர்கள் கடவுளின் நீதியை உறுதியாக கடைப்பிடிப்பதற்கு விரும்புகின்றனர். “அநேக துன்மார்க்கருக்குள்ள செல்வத்திரட்சியைப்பார்க்கிலும், நீதிமானுக்குள்ள கொஞ்சமே நல்லது,” என்று தாவீது நன்றாக எழுதினார்.—சங்கீதம் 37:16.