உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g95 6/22 பக். 17-19
  • திருடுதல்—ஏன் கூடாது?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • திருடுதல்—ஏன் கூடாது?
  • விழித்தெழு!—1995
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ஏன் திருடுகிறார்கள்
  • வேதனையை மூடிமறைத்தலா?
  • சகாக்களும் அவர்களுடைய அழுத்தமும்
  • கடவுளுடைய நோக்குநிலையைத் தெரிந்துகொள்ளுதல்
  • சோதனையை எதிர்த்துப் போராடுதல்
  • பைபிளின் கருத்து
    விழித்தெழு!—1997
  • திருடுதல் ஏன் அதிகரித்துக்கொண்டிருக்கிறது?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
  • கடைச் சாமான்களைத் திருடுதல்—ஏன்?
    விழித்தெழு!—2005
  • கடைச் சாமான்களைத் திருடுதல்—யாருக்கு நஷ்டம்?
    விழித்தெழு!—2005
மேலும் பார்க்க
விழித்தெழு!—1995
g95 6/22 பக். 17-19

இளைஞர் கேட்கின்றனர்

திருடுதல்—ஏன் கூடாது?

“எனக்கு 16 வயதாகிறது, எனக்கு ஒரு பெரிய பிரச்சினை இருக்கிறது. இப்போதெல்லாம் நான் ஏராளமாகத் திருடுகிறேன். வெறுமனே ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்ஸுக்குச் சென்று, ஏழு ஜோடி காது வளையங்களைத் திருடினேன். என்னுடைய பிரச்சினையைப்பற்றி யாரிடமும் சொல்ல எனக்கு பயமாக இருக்கிறது. தயவு செய்து எனக்கு உதவுங்கள்!”

ஒரு பத்திரிகை ஆலோசனைப் பகுதிக்கு எழுதுகையில் கலக்கமடைந்த ஒரு பருவப்பெண் இவ்வாறுதான் எழுதினாள். எழுத்தாளர் ஒருவர் அறிக்கைசெய்தார்: “[ஐக்கிய மாகாணங்களில்] ஒவ்வொரு வருடமும் சில்லறை வியாபார கடைகளிலிருந்து, . . . பத்து பில்லியன் டாலர் மதிப்புள்ள நுகர் பொருட்கள் திருடப்படுகின்றன, சூறையாடப்படுகின்றன, கொள்ளையடிக்கப்படுகின்றன, அல்லது மற்றவகையில் களவாடப்படுகின்றன. கடையிலிருந்து திருடியமைக்காக கைது செய்யப்பட்டவர்களில் கிட்டத்தட்ட பாதிப்பேர் பருவவயதினராக இருக்கின்றனர்.”

சமீப சுற்றாய்வு ஒன்றின்படி, மேல்நிலைப்பள்ளி மாணவர்களில் மூன்றிலொரு பாகத்திற்கு அதிகமானவர்கள் கடையிலிருந்து திருடியதாக ஒப்புக்கொண்டனர். ஆராய்ச்சியாளர்கள் ஜேன் நார்மன், மைரன் ஹேரிஸ் ஆகியோரால் நடத்தப்பட்ட மற்றொரு சுற்றாய்வு காண்பித்ததுபோல, “ஏதோவொரு சமயத்தில் ஏதோவொரு பொருளை பணம் கொடுக்காமல் எடுத்ததாக ஏறக்குறைய [இளைஞர்கள்] அனைவரும் ஒப்புக்கொண்டனர்.”

ஏன் திருடுகிறார்கள்

மற்றொருவருடைய பொருளை தெரிந்தே அனுமதியின்றி எடுப்பவன் திருடன் ஆவான். சில சமயங்களில் தனிப்பட்ட தேவையினிமித்தம் திருட்டு சரியென விவாதிக்கப்படக்கூடும். “நான் இக்கட்டான சூழ்நிலையில் இருந்தேன்,” என்று நலிவுற்ற இளைஞன் ஒருவன் சொல்கிறான். “நான் ஒரு [விரைவுசிற்றுண்டிச் சாலையின்] பின்பக்க வாசலுக்குச் சென்று, கதவை ஒரே உதையில் திறந்து கொஞ்சம் கோழித்துண்டுகளை எடுத்துச் செல்வேன். அவ்வளவுதான். நான் பசியாயிருந்ததனால் மட்டுமே இவ்வாறு செய்தேன்.”

“திருடன் தன் பசியை ஆற்றத் திருடினால் ஜனங்கள் அவனை இகழமாட்டார்கள்,” என்று பைபிள் நீதிமொழி ஒன்று சொல்கிறது. அப்படியிருந்தாலும் திருடுதல் தார்மீக ரீதியில் தவறானதே. இதன்காரணமாக பசியாயிருக்கிற திருடனும்கூட கடுமையான தண்டனையைக் “கொடுத்துத் தீர” வேண்டியிருக்கிறது என்பதாக அதற்கடுத்த பைபிள் வசனம் காண்பித்தது.—நீதிமொழிகள் 6:30, 31.

இருப்பினும், நம்பமுடியாத வகையில், பருவவயதினரில் ஒரு சிறுபான்மையினரே எந்தவொரு நியாயமான தேவைக்காக திருடுகின்றனர். மெரி ஜேன் இதற்கு சரியான எடுத்துக்காட்டாக இருக்கிறாள். “ஆம், கடைகளிலிருந்து நான் திருடினேன். அது வினோதமாக இருக்கிறது, ஆனால் ஏன் செய்தேன் என்றுதான் எனக்குப் புரியவில்லை. தேவையான எல்லாவற்றிற்கும் என் பெற்றோர்கள் பணம் கொடுக்கின்றனர். எனக்கு வேறொன்றுமே தேவையில்லை,” என்று அவள் ஒத்துக்கொண்டாள்.a அதைப்போலவே செவண்டீன் பத்திரிகையும் பின்வருமாறு அறிக்கை செய்தது: “தேசிய குற்றச்செயல் தடுப்புக் குழுவால் நடத்தப்பட்ட சுற்றாய்வு ஒன்றில், குற்றவாளிகள் கொடுத்த மிகப் பொதுவான காரணம் அவர்களுக்கு ஏதேனும் இலவசமாக கிடைக்கவேண்டும் என்பதாகவே இருந்தது.” ‘கடைக்காரர்கள் அதிக விலைக்கு விற்கிறார்கள்’ என்று வாதாடுவதன்மூலம் சில வாலிபர்கள் தங்களுடைய திருட்டை சரியானதாக விவாதிக்கப் பார்த்தார்கள்!

திருடுவதென்பது அநேக இளைஞர்களுக்குச் சலிப்புத்தட்டுவதைத் தவிர்ப்பதற்கான ஒரு வழியாக மட்டுமே இருக்கிறது. “பள்ளிக்கூடம் முடிந்த பிறகு செய்வதற்கு ஏதாவது வேண்டுமே, அதனால்தான்,” என்று விவரிக்கிறான் ஜெரமி என்ற பெயருடைய முன்னாள் திருடன். திருடுதல் பேராபத்து நிறைந்த ஒருவகை விளையாட்டாக இருப்பதாகவும் தோன்றுகிறது. சிலர் தாங்கள் ஒரு மேலாடையைத் திருடி பர்ஸுக்குள் திணிக்கும்போதோ அல்லது காம்பேக்ட் டிஸ்க் ஒன்றை தோள்பைக்குள் ஒளித்து வைக்கும்போதோ ஏற்படக்கூடிய விறுவிறுப்பான கிளர்ச்சியை விரும்புவதாகத் தெரிகிறது.

வேதனையை மூடிமறைத்தலா?

சந்தேகமேயின்றி, சலிப்புத்தட்டுதலை வெல்ல ஜெயில் தண்டனையைப் பெறும் ஆபத்தில் வைத்துக்கொள்வதைவிட அதிக பாதுகாப்பான முறைகள் இருக்கின்றன. அப்படியானால், அத்தகைய கிளர்ச்சியைத் தேடுவதற்குப் பின்னால் ஏதோ கொஞ்சம் ஜாலிக்கான ஆசையைவிட அதிகம் மறைந்திருக்கக்கூடுமா? அதிகம் இருப்பதாகத்தான் அநேக நிபுணர்கள் நினைக்கின்றனர். சில இளைஞர்கள் “வளர்ச்சியடைவதோடு தொடர்புடைய அழுத்தங்களைச் சமாளிப்பதைக் கடினமானதாகக் காண்கின்றனர். தங்களுடைய பெற்றோர்களோடு போட்ட ஒரு சண்டை, ஒரு நண்பனோடு நட்பை முறித்துக்கொள்ளுதல், பரீட்சையில் குறைந்த மதிப்பெண்கள் பெறுதல் ஆகியவை அவர்களைக் கட்டுப்பாடிழந்தவர்களாக உணரச்செய்யக்கூடும்; சட்டங்களை மீறுவதானது, தங்களுக்குப் பலம் உண்டு என்ற உணர்ச்சியைப் பிரதிபலனாகத் தருகிறது,” என்பதாக லேடீஸ் ஹோம் ஜர்னல் குறிப்பிட்டது.

ஆம், ஒரு திருடனின் போலித்துணிச்சலின் பின்னால், ஏராளமான காயங்களும் வேதனைகளும் இருக்கலாம். பைபிள் சொல்லுவதுபோல, “நகைப்பிலும் மனதுக்குத் துக்கமுண்டு.” (நீதிமொழிகள் 14:13) திரும்பத் திரும்ப கடைகளில் திருடுவதானது மனச்சோர்வின் அடையாளமாக இருக்கலாம் என்று ஆதாரங்கள் காட்டுகின்றன. சில இளம் திருடர்களுக்குக் குழந்தைப் பருவத்தில் துர்ப்பிரயோகப்படுத்தப்பட்ட அனுபவம் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வேதனையின் காரணம் எதுவாக இருந்தாலும்சரி, திருடுவதன் கிளர்ச்சி அதை—குறைந்தபட்சம், கொஞ்ச காலத்திற்காவது—மறைப்பதாகத் தோன்றலாம்.b உதாரணமாக, ஒரு அமெரிக்க இளைஞனைப்பற்றி சிந்தித்துப் பாருங்கள். இவன் கார்களைத் திருடி அதைக் காட்டுத்தனமாக ஓட்டிச் செல்வதில் சந்தோஷத்தைப் பெறுகிறான். “அது நன்றாக இருக்கும். நீங்கள் பயப்படுவதைப் போன்ற, போதையிலிருப்பதைப் போன்ற உணர்ச்சி உங்களுக்குக் கிடைக்கும்,” என்கிறான் அவன்.

சகாக்களும் அவர்களுடைய அழுத்தமும்

“ஆகாத கூட்டுறவுகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்,” என்று பைபிள் சொல்லுகிறது. (1 கொரிந்தியர் 15:33, NW) இந்தச் சத்தியம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. எழுத்தாசிரியர் டனிஸ் வி. லேங் இவ்விதம் குறிப்பிட்டார்: “ஒரு வாலிபன் தானாகவே பிரச்சினைக்குள் மாட்டிக்கொள்வது மிக அபூர்வம்.” அடிக்கடி, எதையாவது திருடுவதில் சகாக்கள் ஒருவரோடொருவர் போட்டிபோடுகின்றனர். வருந்தத்தக்க வகையில், அநேக இளைஞர்கள் அழுத்தத்தின்கீழ் விட்டுக்கொடுத்துவிடுகின்றனர்.

“நடுநிலைப் பள்ளியிலுள்ள பெண்கள் கூட்டத்தில் நான் சேர்ந்துகொண்டேன்,” என்று சொல்கிறாள் வாலிபப் பெண் கேத்தி. தனித்தன்மை வாய்ந்த அந்தக் க்ளபில் அங்கத்தினராக செலுத்தவேண்டிய கட்டணம்? விலையுயர்ந்த ஒரு ஸ்வெட்டரைத் திருடுவது. “நான் அந்தக் க்ளபில் இருக்கவிரும்பினேன், ஆகவே ஒரு கடைக்குள் புகுந்து ஒரு ஸ்வெட்டரைத் திருடிக்கொண்டு வந்துவிட்டேன்,” என்று அவள் மனம்திறந்து சொல்கிறாள்.

கடவுளுடைய நோக்குநிலையைத் தெரிந்துகொள்ளுதல்

உங்களால் விலைகொடுத்து வாங்கமுடியாத பொருட்களை வைத்திருப்பது, பேராபத்தான கிளர்ச்சியை அனுபவித்து மகிழ்வது, அல்லது சகாக்களால் ஏற்றுக்கொள்ளப்படுவது ஆகியவற்றிற்கு இருக்கும் வாய்ப்புகள் திருடுவதை மிகக் கவர்ச்சியுள்ளதாகத் தோன்றச்செய்யலாம். இருந்தபோதிலும், பைபிளில் உள்ள பத்துக்கட்டளைகளில் ஒன்று: “களவு செய்யாதிருப்பாயாக,” என்பதாகும். (யாத்திராகமம் 20:15) ‘கொள்ளைக்காரர் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிப்பதில்லை’ என்று எழுதினார் அப்போஸ்தலன் பவுல். (1 கொரிந்தியர் 6:10) கிறிஸ்தவர்களாக வளர்க்கப்பட்ட இளைஞர்களுக்குக் கடவுளுடைய நோக்குநிலை குறிப்பிடத்தக்க அக்கறையாக இருக்கவேண்டும். நீதிமானைப்போல பாசாங்கு செய்து, ரகசியமாக திருட்டுத்தனம் பண்ணுவது எவ்வளவு மாய்மாலத்தன்மையாக இருக்கும்! அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு சொல்கிறார்: “மற்றவனுக்குப் போதிக்கிற நீ உனக்குத்தானே போதியாமலிருக்கலாமா? களவுசெய்யக்கூடாதென்று பிரசங்கிக்கிற நீ களவுசெய்யலாமா?”—ரோமர் 2:21.

கைதுசெய்யப்பட்டு, மானம்போவதற்கான வாய்ப்புதானே திருடும் கெட்டகாரியத்தைத் தவிர்ப்பதற்குப் போதுமான காரணமாக இருக்கிறது. கையும்களவுமாக பிடிபட்டபின் இளம் திருடன் ஒருவன் இவ்வாறு சொன்னான்: “நான் சாக விரும்பினேன்.” யெகோவா ‘கொள்ளையடிப்பதை வெறுக்கிறார்,’ என்றறிவது திருடத்தூண்டும் உணர்ச்சிக்கு, அல்லது அழுத்தத்திற்கு விட்டுக்கொடுப்பதைத் தவிர்ப்பதற்கான மிகப் பலமான காரணமாகும். (ஏசாயா 61:8) ஸ்டோரில் உள்ள அதிகாரிகள், காவல்துறையினர், பெற்றோர்கள் ஆகியோரிடமிருந்து திருட்டை மறைத்து வைக்க ஒருவரால் முடிந்தாலும், அதை யெகோவாவிடமிருந்து ஒளித்துவைக்க முடியாது. வெட்டவெளிச்சமாவது தவிர்க்கமுடியாதது.—ஏசாயா 29:15.

பாவம் ஒரு நபரைக் கடினப்படுத்துகிறது என்பதை ஞாபகத்தில் வையுங்கள். (எபிரெயர் 3:13) அற்ப திருட்டுகள் கொடூரமும் துணிகரமுமான செயல்களாக அதிகரிக்கக்கூடும். இளம் ராஜர், உதாரணமாக, தன்னுடைய அம்மாவின் பர்ஸிலிருந்து பணம் திருடுவதோடு தன்னுடைய குற்றச்செயல் வாழ்க்கையைத் தொடங்கினான். இறுதியில், வயதான பெண்களைக் கீழே விழத்தள்ளி அவர்களுடைய பர்ஸ்களைத் திருடினான்!

சோதனையை எதிர்த்துப் போராடுதல்

ஒருவர் ரகசியமாக திருட ஆரம்பித்துவிட்டால் நிறுத்துவது சுலபமாக இருக்காது என்பது ஒப்புக்கொள்ளத்தக்கதே. “அது ஒருவகை அடிமையாக்கும் பழக்கத்தைப் போன்று இருந்தது,” என்று ஒப்புக்கொண்டான் ஒரு இளைஞன். ஒருவனுடைய அல்லது ஒருத்தியுடைய வழிகளை மாற்ற இளைஞருக்கு உதவக்கூடியது எது?

உங்கள் பாவத்தைத் தேவனிடம் மனம்திறந்து சொல்லுங்கள். தங்களுடைய தவறுகளுக்காக மனம்திரும்பி மனம்திறந்து அவரிடம் அறிக்கையிட்டால், அவர், “மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார்.”—ஏசாயா 55:7.

உதவியைப் பெறுங்கள். இந்தப் பத்திரிகையின் வாசகர்களில் அநேகர் தங்களுடைய பகுதியிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிறிஸ்தவ சபையோடு பழக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் உள்ளூர் கிறிஸ்தவ கண்காணிகளை அணுகி ஆவிக்குரிய உதவிக்காகவும் சரிப்படுத்துதலுக்காகவும் கேட்டுக்கொள்ளலாம். (யாக்கோபு 5:14, 15) நல்ல ஒழுக்க நியமங்களைக் கடைப்பிடிக்கும் பெற்றோர்களும்கூட உதவி மற்றும் ஆதரவுக்கு ஊற்றுமூலமாக இருக்கலாம். புண்படுதல், வேதனை அல்லது சலிப்புத்தட்டுதல் போன்றவை அந்தத் தவறான நடத்தைக்குக் காரணமாக இருக்குமானால், பரிவோடு கவனித்துக் கேட்கக்கூடிய ஒருவரோடு காரியங்களை மனம்விட்டுப் பேசுவதானது மிகவும் உதவுவதாக இருக்கலாம்.—நீதிமொழிகள் 12:25.

திரும்பவும் ஒப்படையுங்கள். மோசேயின் நியாயப்பிரமாணத்தின்கீழ், திருடர்கள் தாங்கள் திருடிய பொருட்களை வட்டியும் முதலுமாக திருப்பித் தரவேண்டியிருந்தது. (லேவியராகமம் 6:4, 5) இதைப்போல செய்வது ஒருவருடைய மனச்சாட்சியை சுத்தமாக வைத்துக்கொள்வதற்கு மட்டுமல்லாமல், திருடுதல் மற்றவர்களுக்கு எவ்வளவு துன்பத்தைத் தருகிறது என்பதை ஒருவரது மனதில் பதியவைக்கிறது. ஒருவர், “கொள்ளையிட்ட பொருளையும் திரும்பக்கொடுத்துவிட்டு, . . . ஜீவப்பிரமாணங்களில் நடந்தால், அவன் சாகாமல் பிழைக்கவே பிழைப்பான்,” என்று பைபிள் உறுதியளிக்கிறது.—எசேக்கியேல் 33:15.

பொறாமையுணர்ச்சி மற்றும் பேராசையை அறவே ஒழித்துக்கட்டுங்கள். “பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக,” என்பது பத்துக்கட்டளைகளில் கடைசி கட்டளையாகும். (யாத்திராகமம் 20:17) உங்களுக்கு ஏதாவதொன்று உண்மையிலேயே தேவையாய் இருந்து—அல்லது நீங்கள் விரும்பி—ஆனால் உங்களால் விலைகொடுத்து வாங்கமுடியாமல் இருந்தால், ஒருவேளை அதை வாங்கத் தேவையான பணத்தை சம்பாதிக்கும் ஏதாவது வழியைத் தேடலாம். அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு அறிவுரை கூறினார்: “திருடுகிறவன் இனித் திருடாமல், . . . தன் கைகளினால் நலமான வேலைசெய்து, பிரயாசப்படக்கடவன்.”—எபேசியர் 4:28.

உங்கள் கூட்டாளிகளைப்பற்றி கவனமாயிருங்கள். “ஏதோ தவறைச் செய்கிற, அல்லது ஒரு குற்றச்செயலைச் செய்கிற ஒரு நண்பனோடோ அல்லது நண்பர்களின் ஒரு கூட்டத்தோடோ நீங்கள் இருப்பீர்களானால், குற்றம் நடந்த இடத்தில் வெறுமனே அவர்களோடு இருந்த காரணத்திற்காக நீங்களும் குற்றவாளியாகக் கருதப்படுவீர்கள்,” என்று எழுத்தாசிரியர் டனிஸ் லேங் நினைவூட்டுகிறார். சட்டவிரோதமான ஏதாவது காரியத்தைச் செய்யும்படி உங்கள் சகாக்கள் உங்களுக்கு ஆலோசனை தருவார்களேயானால், முடியாது என்று சொல்ல மனோதைரியத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.—நீதிமொழிகள் 1:10-19.

திருடுதல் மற்றவர்களுக்கு இழைக்கும் துன்பத்தைப்பற்றி சிந்தித்துப்பாருங்கள். திருடன் தன்னைப்பற்றி மட்டுமே நினைக்கிறான். ஆனால், “மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்,” என்று இயேசு அறிவுரை கூறுகிறார். (மத்தேயு 7:12) ஒருவர் மற்றவர்கள் மேல் கரிசனைகாட்ட கற்றுக்கொள்ளும்போது, மற்றவர்களுக்குக் கெடுதி விளைவிக்கும் எதையும் செய்வதற்கான மனச்சாய்வு ஏற்படும் சாத்தியம் குறைகிறது.

உங்களுக்கு ஏற்படும் விளைவுகளைப்பற்றி சிந்தித்துப் பாருங்கள். (கலாத்தியர் 6:7) உங்களால் விலைகொடுத்து வாங்க முடியாத, பளபளக்கும் அந்த ஆடையை அல்லது உபகரணத்தை சொந்தமாக வைத்திருப்பது எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைப்பதற்கு பதிலாக, கையும்களவுமாக பிடிக்கப்பட்டு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்போது, எவ்வளவு தர்மசங்கடமாக இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்; உங்களுடைய பெற்றோர்கள்மீதும் கடவுள்மீதும் நீங்கள் குவிக்கப்போகும் நிந்தையைப்பற்றி நினைத்துப் பாருங்கள்! திருடுவது நல்ல ஒரு யோசனையே கிடையாது என்ற முடிவுக்கு நீங்கள் வருவது நிச்சயம்.

[அடிக்குறிப்புகள்]

a பெயர்களில் சில மாற்றப்பட்டிருக்கின்றன.

b அனிச்சைத் திருட்டு (kleptomania) எனப்படும் ஒரு மனக்கோளாறைப் பற்றி நாங்கள் இங்கு பேசவில்லை. இம்மனக்கோளாறு உள்ளவர்கள் அவர்களுக்கே உரித்தான திருடும்படி கட்டாயப்படுத்தும் ஒரு தூண்டுதலைப் பெறுகிறார்கள். இக்கோளாறு மிக அபூர்வமானது என்றும், கடைகளிலிருந்து திருடுவதற்கு பேர்போனவர்களில் 5 சதவீதத்திற்கும் குறைவானவர்களையே பாதிக்கிறது என்றும் டாக்டர்கள் சொல்கின்றனர். இந்தக் கோளாறு பெரும்பாலும் மருந்தினால் குணப்படுத்தப்படுகிறது.

[பக்கம் 18-ன் படம்]

கடைகளில் திருடுபவர்கள் அடிக்கடி கையும்களவுமாக பிடிக்கப்பட்டு அவமானமுள்ள நிலைக்கு ஆளாகின்றனர்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்