டயோக்லீஷியன் கிறிஸ்தவத்தை தாக்குகிறார்
பொ.ச. 303, பிப்ரவரி 23 அன்று ரோம பேரரசின் புதிய தலைநகரான சிறிய ஆசியாவில் உள்ள நிக்கோமீடியா என்ற இடத்தில் டெர்மினஸ் என்ற ரோம கடவுளின் பண்டிகை நடைபெற்றது. அதில் ஆண்கள் தங்கள் நாட்டுப்பற்றைத் தெரிவிக்க ஒருவரோடொருவர் போட்டியிட்டனர். ஆனால் பெரிய எண்ணிக்கை கொண்ட கிறிஸ்தவ சமுதாயம் அதற்கு வரவில்லை.
தங்கள் அரண்மனையின் அனுகூலமான இடத்திலிருந்து, பேரரசர் டயோக்லீஷியனும், அவருக்கு அடுத்த நிலையில் இருந்த கலேரியஸ் இராயனும் உள்ளூர் கிறிஸ்தவ கூட்டம் நடைபெற்ற இடத்தை நோக்கினர். சைகை காட்டிய போது, படை வீரர்களும் அரசாங்க அதிகாரிகளும் வலிந்து வழியுண்டாக்கிக் கொண்டு கிறிஸ்தவர்களின் கட்டிடத்துக்குள் சென்று, அதை தாக்கி கொள்ளையடித்தனர். அங்கு அவர்கள் கண்டுபிடித்த பைபிள் பிரதிகளை எரித்தனர். இறுதியில், அவர்கள் கட்டிடத்தை தரைமட்டமாக்கினர்.
டயோக்லீஷியனின் ஆட்சியை மாசுபடுத்திய துன்புறுத்தல் காலப்பகுதி இவ்வாறு ஆரம்பமானது. “கடைசியான பெரிய துன்புறுத்தல்,” “அதிக வன்முறையான துன்புறுத்தல்,” “கிறிஸ்தவ பெயரை அடியோடு அழிக்க முயற்சி,” என்றும் கூட சரித்திர ஆசிரியர்கள் அதை குறிப்பிடுகின்றனர். இந்தத் திடுக்கிடும் சம்பவங்களின் பின்னணியை பார்ப்பது மறைவாக நடந்ததை வெளிப்படுத்திக் காட்டுவதாய் நிரூபிக்கும்.
கிறிஸ்தவத்திற்கு எதிராக புறமதம்
இன்று யூகோஸ்லாவியா என்றழைக்கப்படும் பகுதியான டால்மேஷியா என்ற இடத்தில் டயோக்லீஷியன் பிறந்தான். சாதாரண ரோம இராணுவ படைவீரனாயிருந்து மேற்பதவி பெற்று உயர்ந்தான். பொ.ச. 284-ல் பேரரசராக பாராட்டுப் பெற்றான். பேரரசை தலைமைத் தாங்குவதற்கு நான்கு பேர் அடங்கிய கூட்டு தலைமைத்துவம் என்ற மண்டல ஆளுநர் பதவியை அவன் நிறுவிய போது, அவன் அரசியல் சீர்திருத்தம் செய்வதில் பிரபலமானான். டயோக்லீஷியன் தன் முன்னாள் உடன்-படைவீரனாக இருந்த மாக்சிமியன் என்பவனை இரண்டாவது பேரரசனாக அவனோடு கூட சேவை செய்ய நியமித்தான். பேரரசின் மேற்கத்திய பகுதியில் விசேஷ உத்தரவாதத்தோடு அவனை இரண்டாவது அகுஸ்து என்ற உயர்பதவியில் அமர்த்தினான். டயோக்லீஷியனுக்கும் மாக்சிமியனுக்கும் கீழ் பணி செய்வதற்கு ஓர் இராயன் இருந்தான். அவனுக்கு பரம்பரை பதவி உரிமைகள் அளிக்கப்பட்டன. கான்ஸ்டன்டியஸ் க்லோரஸ் மாக்சிமியனுக்கு இராயன். த்ரேஸ் என்ற இடத்திலிருந்து வந்த கலேரியஸ், டயோக்லீஷியனின் கீழ் அதிகாரம் பெற்றிருந்தான்.
டயோக்லீஷியனைப் போன்று கலேரியஸ் இராயன் புறமதக் கடவுட்களை ஆர்வத்தோடு வழிபட்டான். பேரரசருக்கு அடுத்து பதவியில் வருவதற்கு பேராவல் உடையவராய் இருந்த கலேரியஸ் இராணுவத்தில் நம்பிக்கை துரோகம் ஏற்படுவதைக் குறித்து பயப்படுவதைப் போல் பாசாங்கு செய்தான். கிறிஸ்தவர்கள் என்று உரிமைபாராட்டிக் கொண்ட படைவீரர்களின் ஆதிக்கம் வளருவது அவனுக்குப் பிடிக்கவில்லை. பேரரசரின் நோக்குநிலையிலிருந்து, அவர்கள் புறமத வணக்கத்தில் பங்குகொள்ள மறுத்தது, அவருடைய அதிகாரத்துக்கு ஒரு சவாலாக இருந்ததற்கு சமமாக இருந்தது. ஆகையால் கிறிஸ்தவ மதத்தை அடியோடு அழிக்க படிகள் எடுக்கும்படி கலேரியஸ் டயோக்லீஷியனை வற்புறுத்தினான். இறுதியில், பொ.ச. 302/303-ஆம் ஆண்டு பனிக்காலத்தில் பேரரசன் கிறிஸ்தவ மதத்துக்கு எதிராக இருந்த இராயனின் உணர்ச்சிக்கு அடிபணிந்தான். இராணுவம், மன்னனின் அரண்மனை ஆகியவற்றில் இருந்த கிறிஸ்தவர்களை நீக்கிவிடுவதற்கு ஒப்புக்கொண்டான். ஆனால் டயோக்லீஷியன் இரத்தம் சிந்துவதற்கு எதிராக கட்டளை விதித்தான். மற்றவர்களை நெஞ்சுரத்தோடு உறுதியாக எதிர்த்து நிற்க கிறிஸ்தவ இரத்த சாட்சிகள் தூண்டிவிடுவார்கள் என்று அவன் பயந்தான்.
பிரச்னைக்கு இந்த அணுகுமுறையைக் குறித்து திருப்தியற்றவனாய் இருந்த டயோக்லீஷியன் ஹயரோக்கில்ஸ் என்ற பித்தினியா ஆளுநர் உட்பட இராணுவப் படைத்தலைவர்கள், அதிகாரிகள் ஆகியோரோடு கலந்து பேசினான். கிரேக்க கலாச்சாரத்தை ஆர்வத்தோடு பின்பற்றிய ஹயரோக்கில்ஸ் எல்லா கிறிஸ்தவர்களுக்கும் எதிராக வன்முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை ஆதரித்தான். ரோம பாரம்பரிய கடவுட்களுக்கு டயோக்லீஷியன் ஆதரவு கொடுத்தது, கிறிஸ்தவ மதத்தோடு சண்டையிடுவதற்கு வழிநடத்தியது. “ரோம கடவுட்களுக்கும் கிறிஸ்தவர்களின் கடவுளுக்கும் இடையே நடந்த தடுத்து நிறுத்தப்படாத போர் தான் அதன் விளைவு” என்று Diocletian and the Roman Recovery என்ற புத்தகத்தில் ஸ்டீஃபன் வில்லியம்ஸ் என்பவர் எழுதினார்.
அரசு ஆணைகள்
துன்புறுத்தல் ஏற்பாட்டை மேற்கொண்டு நடத்துவதற்கு டயோக்லீஷியன் நான்கு அரசு ஆணைகளை ஒன்றன் பின் ஒன்றாக பிறப்பித்தான். நிக்கோமீடியாவில் தாக்குதல் நடத்தியதற்கு அடுத்த நாள், கிறிஸ்தவர்கள் கூடும் இடங்களையும் சொத்துக்களையும் அழிக்க வேண்டும் என்று அவன் கட்டளையிட்டான். பரிசுத்த புத்தகங்களை ஒப்படைத்துவிட வேண்டும் என்றும் அவைகள் எரிக்கப்பட வேண்டும் என்றும் ஆணையிட்டான். அரசு அதிகார ஸ்தானங்களில் இருக்கும் கிறிஸ்தவர்கள் பதவியில் கீழ்நிலைக்கு தாழ்த்தப்பட வேண்டும் என்றும் கட்டளையிட்டான்.
பேரரசரின் அரண்மனைக்குள் இரண்டு இடங்களில் தீப்பற்றிக்கொண்ட போது, அங்கு வேலைசெய்துகொண்டிருந்த கிறிஸ்தவர்களின் மீது பழி சுமத்தப்பட்டது. இது இரண்டாவது ஆணையைப் பிறப்பிக்கத் தூண்டியது. எல்லா பிஷப்புகளையும், குருமார்களையும், உதவி குருமார்களையும் கைது செய்து சிறையிலடைக்க வேண்டும் என்று அது கட்டளையிட்டது. ரோம கடவுட்களுக்கு அவர்கள் பலி செலுத்தவேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது. அவர்கள் தங்கள் மத கொள்கைகளை நிராகரிக்கத் தூண்டும்படி மூன்றாவது ஆணை முயற்சி செய்தது. அவசியமேற்பட்டால் சித்திரவதை செய்யும்படி அதிகாரம் கொடுக்கப்பட்டது. கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் என்று எவராவது உரிமைபாராட்டிக் கொண்டால், அது குற்றச்செயலாக இருக்கும் என்று நான்காவது ஆணை கூறியது.
அதனால் விளைந்த கொடுமைகள், கடவுளுக்கும் கிறிஸ்துவுக்கும் விரோதமாக துரோகம் செய்தவர்கள் அடங்கிய ஒரு வகுப்பை, ட்ரெடிடர்ஸ் (“சரணடைந்துவிட்டவர்கள்” என்ற அர்த்தங்கொண்ட) என்று பெயரிடப்பட்ட வகுப்பை உண்டுபண்ணியது. தங்கள் வேதாகம பிரதிகளை ஒப்படைத்துவிடுவதன் மூலம் தங்கள் உயிர்களைப் பாதுகாத்துக்கொள்ள அவர்கள் முயற்சி செய்தனர். “ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் மறுதலித்துவிட்டனர். . . . ஆனால் துன்புறுத்தப்பட்டவர்களில் பெரும்பான்மையர் உறுதியாக இருந்தனர்; சித்திரவதையின் கீழ் வீரர்களைப் போன்று பற்றுமாறாத உறுதிப்பாடுடன் இருந்தவர்களைப் பார்த்தது அல்லது அவர்களைப் பற்றிய அறிக்கையைக் கேட்டது, மனஉறுதியற்று இருந்தவர்களின் விசுவாசத்தைப் பலப்படுத்தியது. ஆட்களுக்காக தேடிக் கண்டுபிடித்துக் கொண்டிருந்த சபைகளுக்கு புதிய அங்கத்தினர்கள் வந்தனர்,” என்று சரித்திர ஆசிரியர் வில் டூரன்ட் கூறினார். பிர்கியா, கப்பதோக்கியா, மெசபொத்தேமியா, போனீஷியா, எகிப்து, ரோம பேரரசில் இருந்த மற்ற அநேக பகுதிகள் ஆகிய இடங்களில் இருந்த கிறிஸ்தவர்கள் இரத்த சாட்சிகளாக மரித்தனர்.
துன்புறுத்தலின் போது ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் அழிந்துபோயினர் என்று செசரியாவைச் சேர்ந்த சர்ச் சரித்திர ஆசிரியர் யூசிபியஸ் மதிப்பிட்டார். மறுபட்சத்தில், இரண்டாயிரத்துக்கும் குறைந்த கிறிஸ்தவர்கள் தான் அழிந்துபோயினர் என்று The Decline and Fall of the Roman Empire என்ற புத்தகத்தில் நூலாசிரியர் எட்வர்ட் கிப்பன் என்பவர் உரிமைபாராட்டுகிறார். “இப்படிப்பட்ட கதைகளைக் குறித்து கிப்பன் சந்தேக மனப்பான்மையோடு எழுதுகிறார். உண்மையுள்ளவர்களை மேன்மைப்படுத்துவதிலும், இரத்த சாட்சிகளை மகிமைப்படுத்துவதிலும் விருப்பமுள்ள அதிக மிகைப்படுத்திக் கூறும் கிறிஸ்தவ ஆதாரங்களிலிருந்து இக்கதைகள் வருகின்றன,” என்று ஓர் எழுத்தாளர் விளக்குகிறார். “வெகு எளிதாக ஒரு சில மரணங்களை ‘பேரெண்ணிக்கையான’ மரணங்கள் என்றும், இரத்த சாட்சிகளுக்கும், வேண்டுமென்றே தாக்குதலைத் தூண்டி அதனால் கொல்லப்பட்டவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தைக் காட்டாமல், கேளிக்கை அரங்குகளிலிருந்த காட்டு மிருகங்கள் எவ்வாறு மற்ற எல்லா குற்றவாளிகளையும் வெறி கொண்டு சின்னாபின்னப்படுத்தியது என்றும் ஆனால் அவைகள் கிறிஸ்தவர்களை தொடாமல் இருக்க ‘இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தியால்’ நிறுத்தப்பட்டன என்றும் மிகைப்படுத்திக் கூறும் எழுத்தாளர்கள் இருந்தபோதும், அவர்கள் பொய்யாக கட்டி உருவாக்குவதற்கு சிறிது இடமளித்தாலும், எஞ்சிவிடப்படும் தகவல் அதிக பயங்கரமாக இருக்கிறது” என்கிறார். சித்திரவதைக் கருவிகள், எரித்து அழித்தல், தோல் உரித்தல், சித்திரவதைச் செய்வதற்கு குறடுகள் ஆகியவற்றைக் கொண்டு கொடூரமான துன்புறுத்தல் நிச்சயமாகவே நடந்தது.
டயோக்லீஷியனைவிட கலேரியஸ் தான் பின்நின்று துன்புறுத்தலைத் தூண்டிவிட்டவர் என்று சில அதிகாரிகள் எண்ணுகின்றனர். பேராசிரியர் வில்லியம் ப்ரைட் The Age of the Fathers என்ற புத்தகத்தில் கூறுகிறார்: “இந்த உலகத்தோடு சம்பந்தப்பட்டிராத இராஜ்யத்தின் ஜீவனை மிதித்து அழிப்பதற்கு புறமத உலக வல்லரசின் மிகைப்படியான முயற்சிக்கு, அதை உண்மையாக தூண்டிய கலேரியஸ்-ஐ விட டயோக்லீஷியனின் பெயர் கொடுக்கப்படுவதற்கு ஆழ்ந்த தார்மீக முக்கியத்துவம் உண்டு.” என்றபோதிலும், மண்டல ஆளுகையின் மத்தியிலும்கூட டயோக்லீஷியன் உயர்வான ஆட்சி அதிகாரத்தை விடாது வைத்திருந்தான். “304 வரை பேரரசில் இருந்த ஒவ்வொரு பெரிய கொள்கையையும் டயோக்லீஷியன் கட்டுப்படுத்தி வந்தான். அந்த வருடம் வரையாக நடந்த துன்புறுத்தலுக்கு பெருத்த உத்தரவாதம் உடையவனாய் இருக்கிறான்,” என்று எழுத்தாளர் ஸ்டீஃபன் வில்லியம்ஸ் உறுதியாகக் கூறுகிறார். டயோக்லீஷியன் நோய்பட்டு இறுதியில் தன் அதிகாரத்தை பொ.ச. 305-ல் ஒப்புவித்துவிட்டான். அதற்கு பிறகு சுமார் ஆறு வருடங்கள் தொடர்ந்து இருந்த துன்புறுத்தல், கிறிஸ்தவ மதம் சம்பந்தப்பட்ட எந்த விஷயத்திலும் கலேரியஸுக்கு இருந்த கசப்பான பகைமையை பிரதிபலித்தது.
நான்காம் நூற்றாண்டு கிறிஸ்தவ மதம்
அப்போஸ்தலர்களாகிய பவுலும் பேதுருவும், மற்ற ஏவப்பட்ட எழுத்தாளர்களும் முன்னறிவித்தவைகளை, நான்காம் நூற்றாண்டு ஆரம்பத்தில் நடந்த இப்படிப்பட்ட பயங்கரமான சம்பவங்கள் உறுதிசெய்கின்றன. முன்னறிவிக்கப்பட்ட “கேட்டின் மகன்,” கிறிஸ்தவர்களென்று உரிமைபாராட்டி ஆட்சிசெய்துகொண்டிருந்த குருவர்க்கம், டயோக்லீஷியனின் இரண்டாவது ஆணை குறிப்பாக சான்றளிக்கிறபடி தங்களுடைய ஸ்தானத்தை ஏற்கெனவே உறுதியாக்கிக் கொண்டிருந்தனர். (2 தெசலோனிக்கேயர் 2:3, 4; அப்போஸ்தலர் 20:29, 30; 2 பேதுரு 2:12) நான்காவது நூற்றாண்டுக்குள் விசுவாசதுரோக பழக்கங்கள் சாதாரணமாக ஆகிவிட்டிருந்தன. கிறிஸ்தவர்கள் என்று உரிமைபாராட்டிக் கொண்ட பெரும் எண்ணிக்கையானவர்கள் ரோம இராணுவத்தின் அங்கத்தினர்களாக இருந்தனர். அப்போஸ்தலர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட “ஆரோக்கியமான வசனங்களின் சட்டத்”துக்கு உண்மையுள்ளவர்களாயிருந்த கிறிஸ்தவர்கள் எவரும் அப்போது இல்லையா?—2 தீமோத்தேயு 1:13.
துன்புறுத்தலுக்கு ஆளானவர்களின் பெயர்களை யூசிபியஸ் குறிப்பிடுகிறார். அவர்கள் அனுபவித்த சித்திரவதை, துன்பம், இறுதியில் இரத்த சாட்சியான மரணம் ஆகியவற்றையும்கூட அவர் விளக்கமாக விவரிக்கிறார். அந்தச் சமயத்தில் கிடைத்த வெளிப்படுத்தப்பட்ட சத்தியத்துக்கு உத்தமத்தன்மையோடு எல்லா இரத்த சாட்சிகளும் மரித்தனரா என்பது இப்போது நமக்கு தெரியாது. பிரிவினைகள், ஒழுக்கக்கேடு, எல்லாவற்றுக்கும் இணங்கிப் போதல் ஆகியவற்றைத் தவிர்க்கும்படி இயேசு கொடுத்த எச்சரிக்கைகளை சிலர் தங்கள் இருதயத்துக்குள் ஏற்றிருந்தனர் என்பதில் சந்தேகமில்லை. (வெளிப்படுத்துதல் 2:15, 16, 20-23; 3:1-3) தப்பிப்பிழைத்த சில உண்மையுள்ளவர்கள் சரித்திர காட்சியிலிருந்து மறைவாகவே இருந்தனர். (மத்தேயு 13:24-30) ஆம், வெளிப்படையான கிறிஸ்தவ வழிபாட்டை முழுவதுமாக தடைசெய்வதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அவ்வளவு வெற்றிகரமானதாக இருந்ததால், அந்தக் காலப்பகுதியிலிருந்த ஒரு ஸ்பானிய நினைவுச்சின்னம் டயோக்லீஷியன் ‘கிறிஸ்துவின் பொய் நம்பிக்கைகளை அழித்ததால்,’ அவனைப் புகழ்ந்தது. வேதாகமத்தின் பிரதிகளைக் கைப்பற்றி அவைகளை அழிக்க எடுக்கப்பட்ட முயற்சிகள், கிறிஸ்தவ மதத்தின் மீது தாக்குதல் செய்த டயோக்லீஷியனின் ஒரு முக்கியமான அம்சமாக இருந்தபோதிலும், அந்த முயற்சிகள் கடவுளுடைய வார்த்தையை முழுவதுமாக அழித்துவிட முடியவில்லை.—1 பேதுரு 1:25.
கிறிஸ்தவ மதத்தை முழுவதுமாக துடைத்துழித்து விடுவதில் உலகத்தின் அதிபதியாகிய பிசாசாகிய சாத்தான் தோல்வியடைந்ததினால், பொ.ச. 306-337 வரை ஆட்சி செய்த பேரரசர் கான்ஸ்டன்டீன் மூலம் அவன் தன் தந்திரமான செயல்களை தொடர்ந்து செய்துவந்தான். (யோவான் 12:31; 16:11; எபேசியர் 6:11, NW அடிக்குறிப்பு) புறமதத்தைச் சேர்ந்த கான்ஸ்டன்டீன் கிறிஸ்தவர்களை எதிர்க்கவில்லை. அதற்கு மாறாக, புறமத நம்பிக்கையையும் கிறிஸ்தவ நம்பிக்கைகளையும் கலந்து ஒன்றாக்கி ஒரு புதிய அரசு மதமாக ஆக்குவதை அவன் உகந்ததாகக் கண்டான்.
நம் அனைவருக்கும் எப்படிப்பட்ட ஓர் எச்சரிக்கை! கொடூரமான துன்புறுத்தலை நாம் எதிர்ப்படும் போது, தற்காலிக சரீரப்பிரகாரமான விடுதலைக்காக இணங்கிப் போவதைத் தவிர்க்க யெகோவாவிடமாக நமக்கிருக்கும் அன்பு நமக்கு உதவிசெய்யும். (1 பேதுரு 5:9) அதேபோன்று சமாதானமான காலப்பகுதி நம்முடைய கிறிஸ்தவ ஆற்றலை உள்ளீடாக அழித்துவிடுவதற்கு நாம் அனுமதிக்க மாட்டோம். (எபிரெயர் 2:1; 3:12, 13) பைபிள் நியமங்களை கண்டிப்பாக கடைப்பிடிப்பது, தம்முடைய ஜனங்களை விடுவிக்கும் வல்லமையுடைய கடவுளாகிய யெகோவாவுக்கு பற்றுமாறாதவர்களாக நம்மை வைக்கும்.—சங்கீதம் 18:25, 48.