அவர்கள் தேனீக்களிடமிருந்து கற்றுக்கொள்ளலாம்
“சமீபத்திய ஆண்டுகளில் பொறியாளர்களும் பொருள் உருவமைப்பாளர்களும் தேனீக்கள் வெளிப்படையாக எப்போதும் அறிந்திருந்த ஏதோவொன்றை அதிக தெளிவாக உணர்ந்திருக்கின்றனர்: மிக மெல்லிய மூலப்பொருளும்கூட ஆறு-பக்கமுள்ள தேன்கூடு படிவத்தில் உருவங்கொடுக்கப்பட்டால், வேறு ஏதாவது வடிவத்தில் இருப்பதைவிட அதிக பலமானதாக ஆகிறது.”—தி நியு யார்க் டைம்ஸ், அக்டோபர் 6, 1991.
பூச்சிகளை கூர்ந்து கவனிப்பதிலிருந்து மனிதர்கள் பயனடையலாம் என்பது ஆச்சரியமூட்டுவதாய் இல்லை. பண்டையக் கால விசுவாசமுள்ள மனிதனாகிய யோபு ஒருசமயம் இவ்வாறு சொன்னார்: “இப்போதும் நீ மிருகங்களைக் கேட்டுப்பார், அவைகள் உனக்குப் போதிக்கும்; ஆகாயத்துப் பறவைகளை கேள், அவைகள் உனக்கு அறிவிக்கும் . . . கர்த்தருடைய கரம் இதை செய்தது என்று இவைகள் எல்லாவற்றினாலும் அறியாதவன் யார்?” (யோபு 12:7-9) ஆம், சிருஷ்டிகரின் ஞானம், தேன்கூட்டில் நீங்கள் காணும் ஆறு-பக்கங்களையுடைய செல்களின் வடிவம் போன்ற இப்படிப்பட்ட சாதாரண பொருட்களில் வெளிப்படையாக காணப்படுகிறது.
இந்தச் செல்களின் மெழுகு சுவர்கள் வெறும் 1/3 மில்லிமீட்டர் தடிப்பாக இருந்தபோதிலும், அவைகள் அதிக பலமுள்ளவையாக இருக்கின்றன. உண்மையில், அவைகள் தங்கள் எடைக்கு 30 தடவைகள் அதிகமாக இருக்கும் பாரத்தைத் தாங்கக்கூடும்.
இந்த உறுதி நடைமுறையான தேவைகளுக்கு பயன்படுத்தப்படலாம். உதாரணமாக, கருவிகள் இடிபட்டு நொறுக்கப்படாமல் பாதுகாக்க பயன்படுத்தப்படலாம். பாரசூட் மூலம் விமானத்திலிருந்து எறியப்படும் இராணுவக் கருவிகளையும்கூட அப்படி பாதுகாக்கலாம். நியு யார்க் டைம்ஸ் இதைப் பற்றி குறிப்பிடுகிறது: “ஜீப் போன்ற கனமான பொருட்களும்கூட தேன்கூடு போன்ற அமைப்புகளை அடியில் கொண்ட மேடைகளின் மேல் வைக்கப்பட்டு போடப்படுகையில், அதிர்ச்சியைத் தாங்கிக் கொள்கின்றன.”
இதே வடிவத்தில் மற்றப் பொருட்களைக் கொண்டும் உருவமைக்கலாம். இதற்கு அதிகமாக உபயோகிக்கப்படும் பொருள் காகிதம். நைலான் நார்களைக் கொண்டு செய்யப்பட்ட காகிதமும் பிசினும் சேர்த்து தேன்கூடு போன்று செய்யப்பட்ட வடிவங்களால் சில பெரிய விமானங்களின் உடற்பகுதிகள் உருவாக்கப்படுகின்றன. வெகு குறைவான எடையால் மிக அதிக உறுதி கிடைக்கிறது. ஏன்? இத்தகைய சட்டங்களின் இடைவெளியில் காற்று நிரம்பியிருக்கிறது. எனவே எடை வெகு குறைவு. காற்றுக்கு மின்சாரம் பாயாமல் காப்பிடும் தன்மைகளும்கூட உண்டு.
எளிய தேனீக்கு இதெல்லாம் ‘தெரியாது,’ ஏனென்றால், அது பொறியியல் பட்டம் பெறவில்லை. எனினும், அதன் சிருஷ்டிகராகிய யெகோவா தந்த இயல்புணர்வு ஞானத்தைக் கொண்டு தினமும் அது தன் வேலையை செய்துகொண்டிருக்கிறது. (w92 6/15)