ராஜ்ய அறிவிப்பாளர் அறிக்கை
கடவுளுடைய பெயருக்கு ஏற்பட்ட களங்கம் நீங்கியது
“புறஜாதிகள் உங்களை அக்கிரமக்காரரென்று விரோதமாய்ப் பேசும் விஷயத்தில், அவர்கள் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள்” என கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள் கூறுகிறது. (1 பேதுரு 2:12) ஆகவே, யெகோவாவின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக மெய் கிறிஸ்தவர்கள் நல்நடத்தையைக் காத்துக்கொள்ள அரும்பாடு படுகின்றனர்.
ஜாம்பியாவில் செனாங்கா என்பது ஒரு தொலைதூர பட்டணம். அங்கு வசிக்கும் பள்ளி ஆசிரியர் ஒருவரின் வீட்டிலிருந்த ரேடியோ தொலைந்துபோனது. அந்த சமயத்தில் யெகோவாவின் சாட்சிகள் அந்தப் பகுதியில் ஊழியம் செய்ததால் அவர்கள்தான் அதைத் திருடியிருக்க வேண்டும் என அவர் குற்றஞ்சாட்டினார். சாட்சிகள் தன் ரேடியோவை திருடிவிட்டனர் என போலீஸிலும் புகார் செய்தார். அவர்கள் தன் வீட்டிற்கு வந்திருந்ததற்கு அத்தாட்சியாக தன் வீட்டில் கிடந்த ஒரு துண்டுப்பிரதியையும் காண்பித்தார். போலீஸாரோ அவரை நம்ப மறுத்தனர். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் இன்னும் நன்றாக விசாரித்து பார்க்கும்படி அவரை அனுப்பிவிட்டனர்.
அன்று அந்தப் பிராந்தியத்தில் ஊழியம் செய்த சாட்சிகள் அந்த ஆசிரியரை சந்தித்து பேசும்படி சபையின் மூப்பர் குழு அவர்களிடம் கூறியது. எனவே சில சகோதரர்கள் அவரிடம் சென்று யெகோவாவின் பெயர்மீது வந்த களங்கத்தை நீக்க விரும்புவதாக கூறினர். அவ்வாறு பேசுகையில், அவருடைய வீட்டில் ஒரு வாலிபனை பார்த்ததாகவும் அவனிடம் ஒரு துண்டுப்பிரதியை கொடுத்ததாகவும் அவர்கள் கூறினர். அவர்கள் கூறிய அங்க அடையாளங்களை வைத்து அந்த வாலிபன் யார் என ஆசிரியர் தெரிந்துகொண்டார். அவர்கள் ஒரே சர்ச்சை சேர்ந்தவர்களே. ஆசிரியர் அந்த வாலிபனிடம் விசாரித்தபோது அவன் அதை மறுத்துவிட்டான். பிறகு அவனுடைய பெற்றோரிடம் அதைப் பற்றி கூறிவிட்டு அந்த ஆசிரியர் வீட்டிற்கு திரும்பிவிட்டார். ஒரு மணிநேரத்திற்குள் அந்த வாலிபனின் தாய் திருட்டுப்போன ரேடியோவை ஆசிரியரிடம் கொண்டுவந்து கொடுத்தார்.
ஆசிரியருக்கோ அவமானம் தாங்க முடியவில்லை. ஆகவே மூப்பர் குழுவை அணுகி, தவறாக குற்றஞ்சாட்டியதற்காக மன்னிப்பு கேட்டார். மூப்பர்கள் அதை ஏற்றுக்கொண்டாலும், சாட்சிகள் குற்றமற்றவர்கள் என்பதை அனைவரும் அறிந்துகொள்வதற்காக அதை யாவரறிய அறிவிக்கும்படி கேட்டுக்கொண்டனர். அதனால் பள்ளியில் ஓர் அறிவிப்பு செய்யப்பட்டது. இவ்வாறு யெகோவாவின் பெயருக்கு ஏற்பட்ட களங்கம் நீக்கப்பட்டது. யெகோவாவின் சாட்சிகள் அந்தப் பகுதியில் எந்தப் பிரச்சினையுமின்றி தொடர்ந்து பிரசங்கிக்க முடிகிறது.
[பக்கம் 19-ன் தேசப்படங்கள்/படம்]
ஆப்பிரிக்கா
ஜாம்பியா
[படத்திற்கான நன்றி]
Mountain High Maps® Copyright © 1997 Digital Wisdom, Inc.