உதவி ஊழியர்கள் யெகோவாவின் ஜனங்களுக்கு ஓர் ஆசீர்வாதம்
“இவர்கள் முன்னதாகச் சோதிக்கப்பட வேண்டும்; குற்றச்சாட்டப்படாதவர்களானால் உதவிக்காரராக ஊழியஞ் செய்யலாம்.”—1 தீமோத்தேயு 3:10.
1. சபை சம்பந்தமாக மகிழ்ச்சியையும் ஐக்கியத்தையும் உறுதிசெய்ய உதவி செய்வது யார்?
யெகோவா “நித்தியானந்த தேவனாக” இருக்கிறார். தம்முடைய ஊழியர்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்: (1 தீமோத்தேயு 1:11) அதை கருத்தில் கொண்டு, அவர் தம்முடைய ஜனங்களின் ஆசீர்வாதத்துக்காக மூப்பர்களுக்கும் உதவி ஊழியர்களுக்கும் ஏற்பாடு செய்திருக்கிறார். பொறுப்புள்ள இந்த மனிதர்கள், பயனுள்ள நோக்கங்கள் நிறைவேற உதவியாக இருந்து, கிறிஸ்தவ சபை மகிழ்ச்சியாகவும், ஐக்கியமாகவும், சுமுகமாகவும் இயங்குவதை உறுதி செய்ய துணைபுரிகிறார்கள். கடவுளுடைய தேவ ராஜ்ய அமைப்பினுள்ளே, நியமனம் செய்யப்படும் இவர்கள் ஆற்றும் அன்புள்ள மற்றும் பயனுள்ள சேவைக்காக யெகோவாவின் சாட்சிகள் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கிறார்கள்!
2. மூப்பர்களும் உதவி ஊழியர்களும் என்ன மனநிலையை உடையவர்களாக இருக்க வேண்டும்? ஆனால் எதை அவர்கள் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது?
2 சபையில், மூப்பர்களுக்கும் உதவி ஊழியர்களுக்கும் இன்றியமையாத ஒரு பங்கு இருந்தபோதிலும், அவர்கள் தங்களுடைய சொந்த முக்கியத்துவத்தை பெரிதாக்கிக் காட்டக்கூடாதவர்களாக இருக்கிறார்கள். இயேசு கிறிஸ்து தம்மை பின்பற்றியவர்களை தாழ்மையுள்ளவர்களாக இருக்கும்படியாக எச்சரித்தார் என்பதை அவர்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும். ஒரு சமயம் அவர்களிடம் இவ்விதமாகச் சொன்னார்: “இந்தப் பிள்ளையைப் போலத் தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவனே பரலோக ராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான்.” (மத்தேயு 18:4) சீஷனாகிய யாக்கோபும் இவ்விதமாக எழுதினான்: “யெகோவாவுக்கு முன்பாகத் தாழ்மைப் படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்.” (யாக்கோபு 4:10; ரோமர் 12:3) ஆனால் தாழ்மையான மனநிலையை உடையவர்களாக இருப்பது, இந்த மனிதர்கள் மூப்பர்களாகவும் உதவி ஊழியர்களாகவும் தங்களுடைய வேலையின் முக்கியத்துவத்தை குறைத்துவிட வேண்டும் என்பதை தேவைப்படுத்துவதில்லை. அவர்கள் மனத்தாழ்மையுள்ளவர்களாகவும், அதே சமயத்தில் ஊழிய நடவடிக்கைகளில் முன்சென்று வழிநடத்துகிறவர்களாயும் இருக்க முடியும் அவர்களுடைய செயல் நடவடிக்கைகளால் நிறைவேற்றி முடிக்கப்படும் பயனுள்ள நோக்கங்களை அவர்கள் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. ஆனால் அவர்கள் இயன்ற அளவு சிறப்பாக தங்களுடைய கடமைகளை செய்து முடிப்பதற்கு யெகோவாவுக்கும் அவர்களுடைய கிறிஸ்தவ சகோதரர்களுக்கும் தாங்கள் கடமைப்பட்டிருப்பதை எப்பொழுதும் நினைவில் கொள்ள வேண்டும்.
3. யெகோவாவின் சாட்சிகள் ஐக்கியமாக செய்துவரும் செயல் நடவடிக்கைகள் எதற்கு ஒப்பிடப்படலாம்? ஒப்புக்கொடுக்கப்பட்ட மனிதர்கள் எவ்விதமாக இந்த ஐக்கியத்துக்கும் ராஜ்ய அக்கறைகளின் முன்னேற்றத்துக்கும் உதவி செய்யலாம்?
3 இன்று யெகோவாவின் சாட்சிகள் ஐக்கியமாக செய்துவரும் செயல் நடவடிக்கைகள், மனித உடலில் காணப்படும் ஒற்றுமைக்கு ஒப்பிடப்படலாம். உண்மையில், அப்போஸ்தலனாகிய பவுல், கிறிஸ்துவின் ஆவிக்குரிய சரீரத்தை, அநேக அங்கங்களாலான ஒரு மனித சரீரத்துக்கு ஒப்பிட்டு பேசினான். என்றபோதிலும், பரஸ்பர நலனுக்காக சரீரத்தின் எல்லா அங்கங்களும் சேர்ந்து வேலை செய்கின்றன. (1 கொரிந்தியர் 12:12-31) நிச்சயமாகவே, நியமிக்கப்பட்ட மூப்பர்களும் உதவி ஊழியர்களும் யெகோவாவின் ஜனங்களுக்கு ஒரு ஆசீர்வாதமாக இருக்கிறார்கள். ஏனென்றால் இந்த மனிதர்கள் இன்று கிறிஸ்தவ சபை ஒற்றுமையாக இயங்குவதற்கு உதவியாக இருக்கிறார்கள். (கொலோசெயர் 2:18, 19 ஒப்பிடவும்) “கண்காணியின் வேலையை அடைய நாடுவதன்” மூலம் யெகோவாவின் அமைப்பு சம்பந்தமான ஏற்பாட்டை ஆதரிக்க பாடுபடும் சபையிலுள்ள ஒப்புக்கொடுக்கப்பட்ட ஆண்கள் கிறிஸ்தவ ஐக்கியத்துக்கும் ராஜ்ய அக்கறைகளின் முன்னேற்றத்துக்கும் இன்றியமையாத வகையில் உதவி செய்கிறார்கள். (1 தீமோத்தேயு 3:10) ஆனால் முதலிடத்தில் ஒரு கிறிஸ்தவ ஆண், உதவி ஊழியனாவதற்கு எவ்விதமாக தகுதிப்பெறுகிறார்?
“முன்னதாகச் சோதிக்கப்படுதல்”
4. (எ) எதிர்கால உதவி ஊழியர்கள் ஏன் “முன்னதாகச் சோதிக்கப்பட” வேண்டியவர்களாக இருக்கிறார்கள்? (பி) இந்த மனிதர்கள் எதை செய்ய மனமுள்ளவர்களாக இருக்க வேண்டும்?
4 ஆண்கள் உதவி ஊழியர்களாக நியமிக்கப்படுவதற்கு முன்பாக தேவைப்படுவது என்ன என்பதைக் குறித்து அப்போஸ்தலனாகிய பவுல் தன்னுடைய உடன் வேலையாளானாகிய தீமோத்தேயுவுக்குச் சொன்னான். மற்ற காரியங்களோடுகூட பவுல் இவ்விதமாக எழுதினான்: “இவர்கள் முன்னதாகச் சோதிக்கப்பட வேண்டும்; குற்றஞ்சாட்டப்படாதவர்களானால் உதவிக்காரராக ஊழியஞ்செய்யலாம்.” (1 தீமோத்தேயு 3:10) இது, தகுதியில்லாத மனிதர்கள், ஒருசில அடிப்படை வேதப்பூர்வமான தேவைகளை பூர்த்தி செய்யாதவர்கள் நியமனம் செய்யப்படுவதை தடை செய்வதாக இருக்கிறது. எதிர்கால உதவி ஊழியர்களின் நோக்கங்களை தீர்மானிக்கவும்கூட இது நேரத்தை அனுமதிக்கிறது. நிச்சயமாகவே ஒரு அந்தஸ்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசையினால் இந்த மனிதர்கள் தூண்டப்பட்டவர்களாக இருக்கக்கூடாது. ஏனென்றால் அது மனத்தாழ்மை இல்லாதிருப்பதை சுட்டிக் காட்டுவதாக இருக்கும். மாறாக, ஒரு கிறிஸ்தவன் கடவுளுக்கு ஒப்புக் கொடுப்பது, நிபந்தனையின்றி செய்யப்படுகிறது என்பதையும் அது அனைத்தையும் உட்படுத்துகிறது என்பதையும் உணர்ந்தவனாக யெகோவா அவனைத் தம்முடைய அமைப்பில், எந்த ஸ்தானத்தில் பயன்படுத்துவது தகுதியாக இருக்கும் என்று காண்கிறாரோ அதில் வேலை செய்ய மனமுள்ளவனாக அவன் இருக்க வேண்டும். ஆம், எதிர்கால உதவி ஊழியர்கள் உண்மையுள்ள ஏசாயாவைப் போன்றே அவ்வளவாக சேவை செய்ய மனமுள்ளவர்களாக இருக்க வேண்டும். அவன் சொன்னான்: “இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும்.”—ஏசாயா 6:8.
5. (எ) 1 தீமோத்தேயு 3:8-ல் குறிப்பிடப்பட்டிருக்கும் உதவி ஊழியர்களுக்குரிய தகுதிகள் யாவை? (பி) “பொறுப்புணர்ச்சியுடன்” இருப்பது என்பதன் பொருள் என்ன? (சி) உதவி ஊழியர்கள் “இருநாக்குள்ளவர்களாக” இருக்கக்கூடாது என்பதாகச் சொல்லுகையில் பவுல் அர்த்தப்படுத்தியது என்ன?
5 அந்தப்படியே, உதவிக்காரரும் இருநாக்குள்ளவர்களாயும், மதுபானப் பிரியராயும், இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவர்களாயும் இராமல், நல்லொழுக்கமுள்ளவர்களாயும் இருக்க வேண்டும்,” என்பதாக பவுல் விளக்கினான். (1 தீமோத்தேயு 3:8) ஒப்பிடுகையில் சில உதவி ஊழியர்கள் வயதில் குறைந்தவர்களாயிருந்தாலும், அவர்கள் இளைஞர்களாக இல்லாமல்,” பொறுப்புணர்ச்சியுள்ளவர்”களாக இருக்க வேண்டும். அவர்கள் முக்கியமான காரியங்களை பொறுப்புணர்ச்சியோடு கவனிக்க கற்றுக் கொண்டிருக்க வேண்டும். (நீதிமொழிகள் 22:15 ஒப்பிடவும்) அவர்கள் நம்பத்தகுந்தவர்களாக, கடமை உணர்வுள்ளவர்களாக இருக்க வேண்டும். உத்தரவாதத்தை விளையாட்டுத்தனமாக எடுத்துக்கொள்ளும் மனசாய்வுள்ள ஆட்களாக இவர்கள் இருக்கக்கூடாது. ஆம், அவர்கள் நம்பத்தக்கவர்களாக, தங்களுடைய கடமைகளை பொறுப்புணர்ச்சியுடன் செய்கிறவர்களாக இருக்க வேண்டும். எப்படியிருந்தாலும் யெகோவாவுக்குச் செய்யும் பரிசுத்த சேவையைக் காட்டிலும் எது அதிக முக்கியத்துவமுள்ளதாக இருக்கக்கூடும்? அது அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஜீவனும் மரணமுமான ஒரு காரியமாக இருக்கிறது. (1 தீமோத்தேயு 4:16 ஒப்பிடவும்) உதவி ஊழியர்கள் “இருநாக்குள்ளவர்களாக” இருக்கக்கூடாது என்பதாக சொல்லுகையில், அவர்கள் வீணாக, மாய்மாலமாக, அல்லது சுற்றி வளைத்துப் பேசுகிறவர்களாக இல்லாமல், ஒளிவு மறைவில்லாமல், உண்மையாக பேசுகிறவர்களாக இருக்க வேண்டும் என்று பவுல் அர்த்தப்படுத்தினான்.—நீதிமொழிகள் 3:32.
6. உதவி ஊழியர்கள் என்ன சில வழிகளில் சமநிலையை வெளிகாட்ட வேண்டியவர்களாக இருக்கிறார்கள்?
6 உதவி ஊழியர்களாக தகுதிபெறுகிற மனிதர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் நல்ல சமநிலை கட்டாயமாக இருக்க வேண்டும். அவர்கள் “மதுபான பிரியராயும்” இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவர்களாயும்” இருக்கக்கூடாது என்பதாகச் சொன்னபோது, அவர்கள் குடிவெறி, பேராசை, நேர்மையின்மை ஆகியவற்றை விட்டு விலகியிருக்க வேண்டும் என்பதை பவுல் அர்த்தப்படுத்தினான் என்பது தெளிவாக இருக்கிறது. இந்த கிறிஸ்தவ மனிதர்கள் அவர்கள் மட்டுமீறிய அளவில் சிற்றின்பங்களில் அல்லது பொருட்களில் அக்கறையுள்ளவர்களாக இருப்பது போன்ற ஒரு உணர்வைகூட கொடுப்பதை தவிர்க்கிறவர்களாகவும் இருக்க வேண்டும். அவர்கள் எப்பொழுதும் ஆவிக்குரிய விஷயங்களுக்கு வாழ்க்கையில் முதலிடத்தைக் கொடுக்க பாடுபட வேண்டும். இது, உடன் மானிடருக்கு முன்பாக, அதிக முக்கியமாக, கடவுளுடைய பார்வையில், “சுத்தமனச்சாட்சியைக்” காத்துக்கொள்ள அவர்களுக்கு உதவி செய்யும்.—1 தீமோத்தேயு 3:8, 9.
7. (எ) உதவி ஊழியர்களின் உத்தரவாதங்கள், இளைஞர்களுக்குரியதல்ல என்று ஏன் சொல்லப்படலாம்? (பி) ஒரு உதவி ஊழியன் விவாகமில்லாதிருத்தல் அவரைப்பற்றி எதை வெளிப்படுத்தக்கூடும்?
7 உதவி ஊழியர்களின் மீது விழும் கனத்த உத்தரவாதம் இளைஞர்களுக்குரியதல்ல. இந்த மனிதர்கள் விவாகம் செய்துகொண்டு ஒரு குடும்பத்தைக் கொண்டிருக்கக்கூடிய வயதில் இருப்பதாக வேதவசனங்களில் பேசப்படுகிறார்கள். அந்த சூழ்நிலைமைகளின் கீழ் அவர்கள் “தங்கள் பிள்ளைகளையும் சொந்தக் குடும்பங்களையும் நன்றாய் நடத்துகிறவர்களுமாயிருக்க வேண்டும்.“ (1 தீமோத்தேயு 3:12) ஒரு இளம் மனிதன் முதலாவது விவாகம் செய்து கொண்டு ஒரு குடும்பத்தைக் கொண்டிருக்கும் வரை ஒரு உதவி ஊழியனாக இருப்பதற்கு தகுதிபெற முடியாது என்பதை இது அர்த்தப்படுத்துமா? இல்லை. நிச்சயமாகவே இல்லை. உண்மையில் போதிய முன்தயாரிப்பின்றி அவசரப்பட்டோ அல்லது பொருத்தமான முழுக்காட்டப்பட்ட கிறிஸ்தவ துணைவரை கண்டடைவதற்கு முன்பாக விவாகம் செய்துகொள்ளவோ அவருடைய தயக்கம், ஓரளவு முதிர்ச்சியை வெளிப்படுத்துகிறது. தனிப்பட்ட விவகாரங்களுக்கு, அதிக முக்கியமாக சபை சம்பந்தப்பட்ட பொறுப்புகளுக்கு சரியான கவனத்தைச் செலுத்த இது அவசியமாக இருக்கிறது.
8. 1 தீமோத்தேயு 3:13 மற்றும் மத்தேயு 24:14-ன் சம்பந்தமாக, என்ன உத்தரவாதம் உதவி ஊழியர்களின் மேல் தங்கியிருக்கிறது?
8 “உதவிக்காரருடைய ஊழியத்தை நன்றாய்ச் செய்கிறவர்கள், தங்களுக்கு நல்ல நிலையையும், கிறிஸ்து இயேசுவைப் பற்றும் விசுவாசத்தில் மிகுந்த தைரியத்தையும் அடைவார்கள்” என்பதாக பவுல் சொன்னான். (1 தீமோத்தேயு 3:13) தேவையாக இருக்கும் “விசுவாசத்தில் மிகுந்த தைரியத்தை” அவர்கள் காண்பிக்க ஒரு வழி, ராஜ்யத்தினுடைய இந்த நற்செய்தியை பிரசங்கிப்பதில் சுறுசுறுப்பாக பங்கு கொள்வதாக இருக்கிறது. (மத்தேயு 24:14) வீட்டுக்கு வீடு பிரசங்கிப்பதில் முன்சென்று வழிநடத்தவும் ஊழியத்தின் மற்ற அம்சங்களில் பங்குகொள்ளவும், உத்தரவாதத்தை மூப்பர்களோடு இணைந்து பங்குகொள்வதை அவர்கள் உணர வேண்டும். (அப்போஸ்தலர் 5:42; 20:20, 21) சாத்தானின் பொல்லாத ஒழுங்கு வேகமாக அதன் முடிவை நெருங்கி வந்துகொண்டிருக்கும்போது பிரசங்க வேலை அதிக அவசரமாக செய்யப்பட வேண்டியதாக இருக்கிறது. ஆகவே உதவி ஊழியர்கள் வெளி ஊழியத்தில் மிகச் சிறந்த முன்மாதிரிகளாக இருப்பதன் மூலம் ராஜ்ய பிரசங்கிப்பு வேலையின் அவசரத்தன்மையை சபைக்கு முன்பாக உணர்த்துகிறவர்களாக இருக்க வேண்டும்.
முழு நேர ஊழியத்தில் உதவப்படுதல்
9. நாம் வாழ்ந்து வரும் காலங்களின் அவசரத் தன்மையைக் கருதுகையில், என்ன ஊழியத்தை அநேகர் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்?
9 நாம் வாழ்ந்துவரும் கொடிய காலங்களின் அவசரத் தன்மையை முன்னிட்டு, அநேக கிறிஸ்தவ ஆண்களும் பெண்களும் முழு நேர ஊழியத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பயனியர்கள் என்பதாக அழைக்கப்படும் அநேகர், தினந்தோறும் சராசரியாக இரண்டிலிருந்து ஐந்து மணிநேரங்கள் பிரசங்க வேலையில் செலவழிக்கிறார்கள். இவர்களில் சிலர் அந்நிய தேசங்களில் மிஷனரிகளாக இருக்கிறார்கள். மற்றவர்கள காவற்கோபுரம் சங்கத்தின் தலைமைக் காரியாலயத்தில் அல்லது பூமியைச் சுற்றியுள்ள அதன் கிளைக் காரியாலயங்களில் முழு நேரமாக வேலை செய்கிறார்கள். அவர்களுடைய சேவை, அவர்களுக்கும் அவர்கள் சேவிக்கும் மற்றவர்களுக்கும் சந்தோஷத்துக்கும் மனநிறைவுக்கும் காரணமாக இருக்கிறது. அநேகருடைய விஷயங்களில் முழுநேர ஊழியத்தின் அனுபவம், உதவி ஊழியர்களாக சபையில் பிரயோஜனமாக சேவை செய்வதற்கு தேவைப்படும் தகுதிகளை வளர்த்துக்கொள்ள அவர்களுக்கு உதவியிருக்கிறது.
10, 11. இங்கு சான்றாக காட்டப்பட்டிருக்கும் தனிப்பட்ட கருத்துக்கள் சுட்டி காட்டுகிறபடி, உதவி ஊழியர்களாக விரும்பும் ஆட்கள், முழு நேர ஊழியத்தால் எவ்விதமாக நன்மையடையலாம்?
10 ஜெர்மனியிலுள்ள பெர்லினில் முன்னாள் உதவி ஊழியராகவும், இப்பொழுது மூப்பராகவும் இருக்கும் ஒருவர் பல வருடங்களுக்கு முன்பாக ஒரு இளைஞனாக இருக்கையில் தான் செய்த பயனியர் வேலையைக் குறித்து இவ்விதமாகச் சொல்லுகிறார்: “அந்த படியைக் குறித்து நான் ஒருபோதும் மனஸ்தாபப்பட்டதில்லை என்று என்னால் சொல்ல முடியும். யெகோவா என்னை ஆசீர்வதித்திருக்கிறார். அவரிடமாக என் உறவில் நான் அதிகமாக நெருங்கி வந்திருக்கிறேன்.” ஆம் ஆயிரக்கணக்கான மற்றவர்களைப் போல, முழு நேர ஊழியம் யெகோவாவோடு ஒரு நபரின் உறவை ஆழமுள்ளதாக்கி கிறிஸ்தவ முதிர்ச்சியினிடமாக முன்னேற்றத்தை தீவிரப்படுத்துகிறது என்பதை இந்த சகோதரர் கண்டுபிடித்தார்.
11 மற்றொரு நீண்ட கால பயனியர், முழு நேர ஊழியம் தனக்கு எவ்விதமாக உதவியது என்பதை விளக்குகிறார்: “நான் உணர்ச்சி வசப்படுவதை தவிர்த்து, அவசரமாக முடிவு செய்வதன் சம்பந்தமாக அதிக சமநிலையுள்ளவனானேன்” என்று அவர் சொல்லுகிறார். “நான் அதிக மகிழ்ச்சியுள்ளவனாகவும் பல்வேறு வித்தியாசமான ஆட்களோடு செயல் தொடர்பு கொள்வதில் அதிகமாக வளைந்து கொடுக்கிறவனுமானேன்.” உதவி ஊழியர்களாக சேவை செய்ய விரும்பும் மனிதர்களுக்கு தேவையான குணங்களில் இவைகளும் இடம் பெறுகின்றன அல்லவா?
12. (எ) முழு நேர ஊழியத்தில் பங்குகொள்ள என்ன வாய்ப்புகள் இருக்கின்றன? (பி) ஒரு உதவி ஊழியன் அவனுடைய சேவைகளை நிறைவேற்ற அவனுக்கு உதவியாக இருக்கும் என்ன திறமைகளை முழு நேர ஊழியத்தில் பங்குகொள்வது தேவைப்படுத்துகிறது?
12 தேவ ஆதாரமுள்ள உத்தரவாதங்கள் அனுமதிக்குமேயானால் முழு நேர ஊழியத்தில் பங்குகொள்வது, கிறிஸ்தவ ஆண்கள், “முன்னதாக சோதிக்கப்பட” ஒரு மகத்தான வாய்ப்பாக இருக்கக்கூடும். சிலர் இந்த ஊழியத்தை நிரந்தரமாகவும் மற்றவர்கள் அவ்வப்போதும் செய்யலாம். இளைஞர்கள் பள்ளி விடுமுறை சமயத்திலும் பெரியவர்கள் விடுப்பு காலங்களில் அல்லது வருடம் முழுவதிலும் மற்ற பொருத்தமான சமயங்களில் இதைச் செய்யலாம். நிச்சயமாகவே முழு நேர ஊழியத்துக்கு சமநிலையும் கவனமாக திட்டமிடுவதும் அவசியமாயிருக்கிறது. ஒரு உதவி ஊழியனுக்கு இந்த திறமைகள் அவசியமாக இருக்கின்றன. அவனுடைய சேவைகளை நிறைவேற்றுவதற்கு இது அவனுக்கு உதவி செய்யும். என்ன சேவைகள்?
உதவி ஊழியர்களின் சேவைகள்
13. என்ன விதமான வேலை உதவி ஊழியர்களுக்கு கொடுக்கப்படுகிறது என்பதைக் குறித்து அப்போஸ்தலர் 6:1-6 குறிப்பாக தெரிவிப்பது என்ன?
13 அப்போஸ்தலர் 6:1-6, நேரடியாக உதவி ஊழியர்கள் நியமிக்கப்படுவதைப் பற்றி பேசாவிட்டாலும் உதவி ஊழியர்களுக்கு பொதுவாக என்ன விதமான வேலை அல்லது என்ன மாதிரியான சேவைகள் கொடுக்கப்படுகின்றன என்பதைப் பற்றி அது குறிப்பாக தெரிவிக்கிறது. உடன் விசுவாசிகளுக்கு போதிப்பதன் மூலமல்ல, ஆனால் அப்பொழுது தெரிந்துகொள்ளப்பட்ட “நற்சாட்சி பெற்றிருக்கிறது ஏழு பேர்” உணவை பகிர்ந்தளிப்பதன் மூலம், அப்போஸ்தலர்கள் “ஜெபம் பண்ணுவதிலும் வசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருப்பதற்காக” அவர்களை விடுவித்தார்கள். மூப்பர்கள் மேய்க்கும் வேலைக்கும் “தேவனுடைய மந்தை”க்கு போதிப்பதற்கும் அதிக நேரத்தை செலவழிப்பதற்காக இதே போன்ற சேவைகளை இன்று செய்வதன் மூலம் உதவி ஊழியர்கள் உதவி செய்கிறார்கள்.—1 பேதுரு 5:2, 3.
14. என்ன பல்வேறு சேவைகளை உதவி ஊழியர்கள் பெறக்கூடும்?
14 உதவி ஊழியர்களின் சேவைகளைக் குறித்து நம்முடைய ஊழியத்தை நிறைவேற்ற ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் என்ற ஆங்கில புத்தகம் இவ்விதமாகச் சொல்லுகிறது: “சபையின் புத்தகங்களைக் கவனிக்கும்படி ஓர் உதவி ஊழியர் நியமிக்கப்படலாம். இது நாமெல்லாரும், நம்முடைய தனிப்பட்ட உபயோகத்துக்கும் வெளி ஊழியத்துக்கும் தேவைப்படுகிற புத்தகங்களைப் பெற்றுக் கொள்வதற்கு வசதியுண்டாக்குகிறது. மற்றொருவர் சபையிலிலுள்ள பத்திரிக்கைகளைக் கவனிக்கலாம். மற்றவர்கள், சபை கணக்கு விவரங்கள் அல்லது பிராந்தியத்தைக் கொடுப்பது போன்றவற்றிற்குத் தேவைப்படும் பதிவுகளை வைக்கும் வேலைகளைக் கவனிக்கலாம். அல்லது ஒலி பெருக்கிகளைக் கையாள, ஒலி கருவிகளை இயக்க, மேடையைக் கவனிக்க அல்லது மற்ற வகைகளில் மூப்பர்களுக்கு உதவி செய்ய அவர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். ராஜ்ய மன்றத்தைக் கவனித்துக் காக்கவும் அதைச் சுத்தமாக வைத்து வரவும் மிகுந்த வேலை செய்யப்பட வேண்டியதாயிருக்கிறது, ஆகவே இப்படிப்பட்ட பொறுப்புக்களைக் கவனிப்பதில் உதவி செய்ய உதவி உழியர்கள் அடிக்கடி அழைக்கப்படுகின்றனர். மேலும் வரவேற்பவர்களாக சேவிக்கவும், அதாவது புதியவர்களை வரவேற்று, சபை கூட்டங்களில் ஒழுங்கைக் காத்துவர உதவி செய்யும்படி உதவி ஊழியர் வேலை பெறுகின்றனர்.”—பக்கங்கள் 57-8.
15. (எ) ஒரு உதவி ஊழியனாக திறம்பட்ட விதமாக சேவை செய்வதற்கு, செயலாற்றும் திறமையைத் தவிர, வேறு என்ன தேவையாக இருக்கிறது? (பி) உதவி ஊழியர்கள் பல்வேறு காரியங்களை கவனித்துக் கொண்டாலும் அவர்களுடைய முக்கிய அக்கறை என்னவாக இருக்க வேண்டும்?
15 செயலாற்றும் திறமையுள்ள எவராவது ஒரு சகோதரர் இந்த வேலையைச் செய்ய முடியுமா? இல்லை, ஏனென்றால் எருசலேமில் முதல் நூற்றாண்டில் தெரிந்து கொள்ளப்பட்ட “நற்சாட்சி பெற்றிருந்த மனிதர்கள்,” “பரிசுத்த ஆவியும் ஞானமும் நிறைந்த”வர்களாக அல்லது “அனுபவமும் ஆவிக்குரிய சிந்தையு”முள்ளவர்ளாக இருந்தார்கள். (அப்போஸ்தலர் 6:3, பிலிப்ஸ்) யெகோவாவின் ஜனங்கள் மத்தியில் அவர்கள் ஏற்கெனவே மூப்பர்களாக இருந்தாலும், அவர்களும்கூட இப்பொழுது உதவி ஊழியர்களால் செய்யப்படும் அதே விதமான வேலையே கொடுக்கப்பட்டனர். ஆகவே இன்றைய நாளின் உதவி ஊழியர்கள் தங்களுடைய சேவையை திறம்பட்ட விதத்தில் செய்து முடிக்க அவர்கள் “அனுபவமும் ஆவிக்குரிய சிந்தையுமுள்ளவர்”களாக இருக்க வேண்டும். சபை சம்பந்தமான காரியங்களை கவனிக்க இவர்கள் உபயோகப்படுத்தப்பட்டாலும் ஆவிக்குரிய வகையில் பிரயோஜனமாயிருக்க ஆட்களுக்கு சேவை செய்வதே அவர்களுடைய முக்கிய அக்கறையாக இருக்க வேண்டும்.
16. சபையில் போதிய மூப்பர்கள் இல்லையென்றால், உதவி ஊழியர்கள் என்ன சேவைகளுக்கு நியமிக்கப்படலாம்?
16 உதவி ஊழியர்கள், ஆவிக்குரிய சிந்தையுள்ளவர்களாக இருக்க வேண்டியிருப்பதன் காரணமாக, சில சமயங்களில் பொதுவாக மூப்பர்களால் செய்யப்படும் வேலைக்கும்கூட அவர்கள் பயன்படுத்தப்படலாம். நம்முடைய ஊழியத்தை நிறைவேற்ற ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் (பக்கம் 58-9) இவ்விதமாக விளக்குகிறது: “சபை புத்தகப்படிப்புகளை நடத்துவதற்குப் போதிய மூப்பர்கள் இல்லையென்றால், நன்கு தகுதி பெற்ற உதவி ஊழியர்களில் சிலர், நியமிக்கப்பட்ட தொகுதிகளைக் கவனிக்க படிப்பு நடத்துகிறவர்களாக பயன்படுத்தப்படுகிறார்கள். ஊழியக் கூட்டத்திலும் தேவ ராஜ்ய ஊழியப் பள்ளியிலும் பாகங்களைக் கையாளவும், தங்கள் சபையில் பொதுப் பேச்சுகளைக் கொடுக்கவும் நியமிக்கப்படலாம். ஒரு குறிப்பிட்ட தேவை இருக்கையில், அந்த வேலை நியமிப்புக்குத் தகுதியுடையவர்களாக இருக்கிறார்களென்றால் அத்தகைய உதவி ஊழியருக்கு மற்ற சிலாக்கியங்களும் கொடுக்கப்படலாம்.—1 பேதுரு 4:10-ஐ ஒத்துப் பாருங்கள்.“
17. ஸ்தேவான் என்ன விதமான ஒரு மனிதனாக இருந்தான்? உதவி ஊழியர்களைப் பற்றியதில் இது என்ன கேள்வியை எழுப்புகிறது?
17 பைபிள் காலங்களில் “நற்சாட்சி பெற்றிருந்த ஏழு பேரில்” ஒருவரான ஸ்தேவான், “விசுவாசமும் பரிசுத்த ஆவியும் நிறைந்தவனாக” இருந்தான். (அப்போஸ்தலர் 6:5) உண்மையுள்ள உயிர்த்தியாகியாக மரிப்பதற்கு முன்பாக, ஸ்தேவான் யூத ஆலோசனை சங்கத்துக்கு முன்னால், கிளர்ச்சியூட்டும் சாட்சியைக் கொடுத்தான். பதிவை வாசித்துப் பாருங்கள். அப்பொழுது, அவன் ஆவிக்குரிய சிந்தையுள்ளவனாக, கடவுளுடைய பரிசுத்த ஆவியின் வழிநடத்தலை ஏற்றுக் கொண்ட குறிப்பிடத்தக்க சாட்சியாக, யெகோவாவின் ஊழியத்துக்கு தன்னுடைய ஜீவனைக் கொடுக்க மனமுள்ளவனாக இருந்ததை நீங்கள் உறுதியாக நம்புவீர்கள். (அப்போஸ்தலர் 6:8-7:60) நிங்கள் ஒரு உதவி ஊழியனாக இருந்தால், தன்னுடைய உத்தரவாதங்களையும், சத்தியத்தைப் பேச தனக்கு கிடைத்த சிலாக்கியத்தையும் ஸ்தேவான் கருதிய விதமாகவே நீங்கள், சபை சம்பந்தமாக உங்களுடைய கடமையையும் வெளி ஊழியத்தையும் பொறுப்புணர்ச்சியுடன் நிறைவேற்றுகிறீர்களா?
அவர்கள் எவ்விதமாக தகுதியுள்ளவர்களாக நிரூபிக்கிறார்கள்?
18. அநேக உதவி ஊழியர்களின் வேலையைக் குறித்து என்ன சொல்லப்படலாம்? அவர்கள் எதைக் குறித்து உறுதியாக இருக்கலாம்?
18 அநேக உதவி ஊழியர்கள், கிறிஸ்தவ வாழ்க்கையில் ஒரு சிறந்த முன்மாதிரியாக இருந்து சபை சம்பந்தமான பொறுப்புகளை நன்றாக கவனித்து, வெளி ஊழியத்தில் நல்ல விதமாக முன்சென்று வழிநடத்துகிறவர்களாக இருக்கிறார்கள். உடன் வணக்கத்தார் அவர்களுடைய வேலையை வெகுவாக போற்றுகிறார்கள். அவைகளுக்கு யெகோவா பலனளிக்காமல் இருந்துவிடமாட்டார். ஏனென்றால் எபிரெய கிறிஸ்தவர்களுக்கு இந்த உறுதியான நம்பிக்கை கொடுக்கப்பட்டது: “உங்கள் கிரியையையும் நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ் செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்குத் தேவன் அநீதியுள்ளவரல்லவே.”—எபிரெயர் 6:10.
19. (எ) ஒவ்வொரு உதவி ஊழியனும் என்ன கேள்விகளை கேட்டுக் கொள்ள வேண்டும். (பி) உதவி ஊழியர்களில் சிலர் அனுபவிக்கும் பிரச்னைகளை கலந்தாலோசிப்பது ஏன் பிரயோஜனமாக இருக்கும்?
19 என்றபோதிலும் ஒவ்வொரு உதவி ஊழியனும் தன்னை பின்வருமாறு கேட்டுக் கொள்வது நல்லது: வேதப்பூர்வமான தேவைகளுக்கு நான் எவ்விதமாக தகுதியுள்ளவனாக நிரூபித்துக் கொண்டிருக்கிறேன்? சபையில் ஐக்கியம் நிலவ நான் உண்மையில் உதவிக் கொண்டிருக்கிறேனா? எனக்குக் கொடுக்கப்படும் வேலைகளை நான் சரிவரவும் சுறுசுறுப்பாகவும் செய்து வருகிறேனா? வெளி ஊழியத்தில் நான் ஒரு நல்ல முன்மாதிரியை வைக்கிறேனா? சில உதவி ஊழியர்கள், அவர்களிடம் கேட்கப்படும் காரியங்களில் தகுதியுள்ளவர்களாக நிரூபிப்பதில் சில பிரச்னைகளை எதிர்பட்டிருக்கிறார்கள். ஆகவே இந்த பிரச்னைகளில் சிலவற்றை நாம் சிந்திப்போமாக. அவ்விதமாகச் செய்வது “தன் தன் சுயகிரியையைச் சோதித்துப் பார்க்க” ஒவ்வொரு உதவி ஊழியனுக்கும் உதவியாக இருக்க வேண்டும். (கலாத்தியர் 6:4) இந்த மனிதர்கள் செய்யும் அன்பின் உழைப்புக்கு மற்றவர்களுடைய போற்றுதலையும் இது அதிகரிக்க வேண்டும். இவர்கள் யெகோவாவின் சாட்சிகள் மத்தியில் பிரயோஜனமான நோக்கங்களை சேவித்து கடவுளுடைய ஜனங்களுக்கு உண்மையாக ஒரு ஆசீர்வாதமாக இருக்கிறார்கள். (w85 9/15)
உங்களால் விளக்க முடியுமா?
◻ உதவி ஊழியர்கள் எவ்விதமாக யெகோவாவின் ஜனங்களுக்கு ஒரு ஆசீர்வாதமாக இருக்கிறார்கள்?
◻ உதவி ஊழியர்களாக ஆக விரும்பும் சகோதரர்களுக்கு முழு நேர ஊழியம் எவ்விதமாக உதவக்கூடும்?
◻ உதவி ஊழியர்கள் ஏன் “அனுபவமுள்ளவர்களாகவும் ஆவிக்குரிய சிந்தையுள்ள”வர்களாகவும் இருக்க வேண்டும்?
◻ இன்றுள்ள உதவி ஊழியர்களுக்கு உண்மையுள்ள ஸ்தேவான் எவ்விதமாக ஒரு சிறந்த முன்மாதிரியாக இருந்தான்?
[பக்கம் 24-ன் படம்]
மூப்பர்களும் உதவி ஊழியர்களும் சபைக்கு ஒரு ஆசீர்வாதமாக இருக்கிறார்கள்
[பக்கம் 25-ன் படம்]
உதவி ஊழியர்களாக அல்லது மூப்பர்களாக ஆக விரும்புகிறவர்களுக்கு பயனியர் ஊழியம் மிகச் சிறந்த ஒரு பயிற்றுவிப்பாக இருக்கிறது