மூப்பர்களுக்கும் உதவி ஊழியர்களுக்கும் இடையில் ஒத்திசைவைக் காத்துக்கொள்ளுதல்
பொ.ச. 33 பெந்தெகொஸ்தேவிற்குச் சற்றுப் பின்னர், புதிதாக அமைக்கப்பட்ட கிறிஸ்தவ சபையில் ஒரு அவசர தேவை ஏற்பட்டது. தேவையிலிருந்த விதவைகளைக் கவனிப்பதற்காக ஒரு ஏற்பாடு நிறுவப்பட்டிருந்தது. ஆனால் சற்றுப் பின்னர், “கிரேக்கரானவர்கள், தங்கள் விதவைகள் அன்றாடக விசாரணையில் திட்டமாய் விசாரிக்கப்படவில்லையென்று, எபிரெயருக்கு விரோதமாய் முறுமுறுத்தார்கள்.”—அப்போஸ்தலர் 6:1.
இந்த முணுமுணுப்புகள் அப்போஸ்தலரின் காதுகளைச் சென்றெட்டின. “அப்பொழுது பன்னிருவரும் சீஷர் கூட்டத்தை வரவழைத்து: நாங்கள் தேவவசனத்தைப் போதியாமல், பந்திவிசாரணைசெய்வது தகுதியல்ல. ஆதலால் சகோதரரே, பரிசுத்தஆவியும் ஞானமும் நிறைந்து, நற்சாட்சி பெற்றிருக்கிற ஏழுபேரை உங்களில் தெரிந்துகொள்ளுங்கள்; அவர்களை இந்த வேலைக்காக ஏற்படுத்துவோம்,” என்றார்கள்.—அப்போஸ்தலர் 6:2, 3.
கிறிஸ்தவ சபைக்குள் அமைப்புமுறைக்கான ஒரு முக்கியமான நியமத்தை இது விளக்குகிறது. பொறுப்புள்ள சில ஆண்கள் வழக்கமான காரியங்களைக் கவனிக்கும்படி பயன்படுத்தப்படுகிறார்கள்; ஆனால் மற்றவர்கள் அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஆவிக்குரிய அக்கறைகளைக் கவனிக்கிறார்கள். இதற்கு முன்னிகழ்வு இல்லாமல் இல்லை. பண்டைய இஸ்ரவேலில், ஆரோனும் அவருடைய சந்ததியாரும், கடவுளுக்குப் பலிகளைச் செலுத்துவதற்காக ஆசாரியர்களாகச் சேவை செய்யும்படி நியமிக்கப்பட்டார்கள். என்றபோதிலும், ‘ஆசரிப்புக் கூடாரத்தின் தட்டுமுட்டு முதலானவைகளைக் கவனிப்பதன்’ மூலமாக லேவியர்கள் அவர்களுக்கு உதவும்படி யெகோவா கட்டளையிட்டார். (எண்ணாகமம் 3:5-10) அதேவிதமாக, இன்று கண்காணிகள், உதவி ஊழியர்களால் உதவிசெய்யப்படுகிறார்கள்.
மூப்பர்கள் மற்றும் உதவி ஊழியர்களின் பங்கு
மூப்பர்களுக்கும் உதவி ஊழியர்களுக்கும் உயர்ந்த தகுதிகளை வேத எழுத்துக்கள் வரையறுக்கின்றன. (1 தீமோத்தேயு 3:1-10, 12, 13; தீத்து 1:6-9) அவர்கள் போட்டியிடுகிறவர்கள் அல்லர், ஆனால் ஒரே இலக்கிற்காக வேலைசெய்கிறவர்கள்—சபையை வளர்ப்பதற்காக. (எபேசியர் 4:11-13-ஐ ஒப்பிடவும்.) என்றாலும், அவர்கள் சபையில் செய்யும் வேலையில் சில வித்தியாசங்கள் இருக்கின்றன. 1 பேதுரு 5:2-ல் கண்காணிகள் இவ்வாறு சொல்லப்படுகிறார்கள்: “உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும், அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும்” மேய்க்கவேண்டும். இந்தப் பரிசுத்த உத்தரவாதத்தை எவ்வாறு நிறைவேற்றுகிறார்கள் என்று அவர்கள் கடவுளுக்குக் கணக்குக் கொடுக்கிறார்கள்.—எபிரெயர் 13:17.
உதவி ஊழியர்களைப் பற்றியென்ன? போதிக்கும் திறமையில் அவர்கள் அவ்வளவு தகுதிபெற்றவர்களாக இருக்கவேண்டுமென வேத எழுத்துக்கள் தேவைப்படுத்துவதில்லை. அவர்களுடைய வேலைகள் மூப்பர்களுடையதைவிட சற்று வேறுபட்டவையாக இருக்கின்றன. சந்தேகமின்றி, பொ.ச. முதல் நூற்றாண்டில், பொருள்சம்பந்தமான, வழக்கமான, அல்லது இயந்திரம்போல் செயல்படவேண்டிய இயல்பை உடைய, கவனத்தைத் தேவைப்படுத்திய அநேக காரியங்கள் இருந்தன; ஒருவேளை வேத எழுத்துக்களின் நகல்களை எடுப்பதற்குத் தேவையான பொருட்களை வாங்குவதை அல்லது நகல் எடுப்பதையும்கூட உட்படுத்தியிருக்கும்.
இன்று, உதவி ஊழியர்கள் சபைக்குள் பல்வேறு முக்கியமான வேலைகளை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார்கள்; சபை கணக்குகளையும் பிராந்தியங்களையும் கவனித்தல், பத்திரிகைகளையும் புத்தகங்களையும் விநியோகித்தல், ராஜ்ய மன்றத்தைப் பராமரித்தல் போன்றவற்றைச் செய்கிறார்கள். திறமை இருக்கும் சில உதவி ஊழியர்கள் போதிப்பதிலும்கூட பயன்படுத்தப்படலாம்; சில சமயங்களில் சபை புத்தக படிப்புகள் நடத்துவதற்கும், ஊழியக் கூட்டத்தின் பாகங்களைக் கையாளுவதற்கும், பொதுப் பேச்சுக்கள் கொடுப்பதற்கும் பயன்படுத்தப்படலாம்.
மூப்பர்களும் உதவி ஊழியர்களும் ஒத்திசைவாக வேலை செய்யும்போது, சபையின்—ஆவிக்குரிய மற்றும் அமைப்பிற்குரிய—தேவைகள் சமநிலையான முறையில் கவனிக்கப்படுகின்றன. அப்போது சபை அங்கத்தினர்கள் சந்தோஷமுள்ளவர்களாக, பலமுள்ளவர்களாக, ஆவிக்குரிய விதத்தில் பலன் கொடுப்பவர்களாக இருக்கிறார்கள். எபேசுவிலுள்ள அபிஷேகம் செய்யப்பட்டவர்களுக்கு பவுல் என்ன எழுதினார் என்பதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்: “அதற்கு உதவியாயிருக்கிற சகல கணுக்களினாலும் இசைவாய்க் கூட்டி இணைக்கப்பட்டு, ஒவ்வொரு அவயவமும் தன்தன் அளவுக்குத் தக்கதாய்க் கிரியைசெய்கிறபடியே, அது அன்பினாலே தனக்குப் பக்திவிருத்தி உண்டாக்குகிறதற்கேதுவாகச் சரீரவளர்ச்சியை உண்டாக்குகிறது.”—எபேசியர் 4:16.
அதைப்போன்ற ஒரு ஒத்திசைவை, அதாவது, ஒத்துப்போதல், இசைவு, ஒத்துழைப்பு, ஐக்கியம் ஆகியவற்றை வளர்க்க மூப்பர்களும் உதவி ஊழியர்களும் முயலவேண்டும். என்றபோதிலும், அப்படிப்பட்ட ஒத்திசைவு தானாகவே வருவதில்லை. அது வளர்க்கப்பட்டு, பத்திரமாகப் பாதுகாக்கப்படவேண்டும்.
மூப்பர்கள் என்ன செய்யலாம்
ஒரு மூப்பருக்கும் ஒரு உதவி ஊழியருக்கும் இடையிலான உறவு, ஒரு எஜமானுக்கும் ஒரு அடிமைக்குமுள்ளதைப்போன்று அல்லது வேலையிலமர்த்தியவருக்கும் வேலைசெய்பவருக்குமானதைப்போன்று இல்லை என்பது, உணர்ந்துகொள்ளவேண்டிய ஒரு முக்கியமான படியாகும். உண்மையான ஒத்திசைவு இருக்கும் இடத்தில், மூப்பர்கள் உதவி ஊழியர்களை கடவுளுடைய சக ஊழியர்களாகக் கருதுகின்றனர். (1 கொரிந்தியர் 3:6-9-ஐ ஒப்பிடவும்.) “கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்,” என்று ரோமர் 12:10 சொல்கிறது. ஆகவே, உதவி ஊழியர்களை தரக்குறைவாக அல்லது தாழ்வாகத் தோன்றக்கூடிய வழிகளில் நடத்துவதை மூப்பர்கள் தவிர்க்கவேண்டும். நற்பயனளிக்கும் துணிவான முயற்சிகளைச் சிதைத்துவிடுவதற்கு மாறாக, அவர்கள் உற்சாகப்படுத்துகிறார்கள். உதவி ஊழியர்களை மதிப்புடன் நடத்துவது, அவர்களுடைய மிகச் சிறந்ததை வெளிவரச்செய்து, சபையில் தங்கள் வேலையை அவர்கள் அனுபவித்துச் செய்யும்படி உதவுகிறது.
தங்களுடைய கவனிப்பில் உள்ள தேவனுடைய மந்தையை மேய்ப்பதற்கான கட்டளை, உதவி ஊழியர்களாக சேவைசெய்யும் சகோதரர்களையும் உட்படுத்துகிறது என்பதையும் மூப்பர்கள் மனதில் கொள்ளவேண்டும். அப்படிப்பட்ட பொறுப்புள்ள ஆண்கள் முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்களாக இருக்கும்படி எதிர்பார்க்கப்படுகிறார்கள் என்பது உண்மைதான். இருந்தாலும், மந்தையிலுள்ள மீதிப்பேரைப்போல், அவ்வப்போது அவர்களுக்கும் தனிப்பட்ட கவனம் தேவைப்படுகிறது. அவர்களுடைய ஆவிக்குரிய வளர்ச்சியில் மூப்பர்கள் ஆழ்ந்த அக்கறையுள்ளவர்களாய் இருக்கவேண்டும்.
எடுத்துக்காட்டாக, அப்போஸ்தலன் பவுல் இளைஞனாகிய தீமோத்தேயுவைச் சந்தித்தபோது, அவர் உடனடியாக தீமோத்தேயுவின் ஆற்றலைப் புரிந்துகொண்டு, ‘அவரைத் தன்னுடனே கூட்டிக்கொண்டு போகவேண்டுமென்று விரும்பினார்.’ (அப்போஸ்தலர் 16:3) தீமோத்தேயு பவுலின் பயணக் கூட்டாளியாக சேவைசெய்து, அதன் பயனாக விலைமதிக்கமுடியாத பயிற்சியைப் பெற்றுவந்தார். ஏன், பல வருடங்கள் கழித்து, கொரிந்துவிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு பவுலால் இவ்வாறு எழுத முடிந்தது: “எனக்குப் பிரியமும், கர்த்தருக்குள் உண்மையுமுள்ள என் குமாரனாகிய தீமோத்தேயுவை உங்களிடத்தில் அனுப்பினேன்; . . . கிறிஸ்துவுக்குள்ளான என் நடக்கைகளை அவன் உங்களுக்கு ஞாபகப்படுத்துவான்.”—1 கொரிந்தியர் 4:17.
மூப்பர்களே, உங்கள் சபையிலுள்ள உதவி ஊழியர்களின் முழு ஆற்றலையும் வெளிக்கொண்டுவந்து பயன்படுத்த ஆரம்பித்துவிட்டீர்களா? பொதுப் பேச்சுக் கொடுப்பதிலும், பைபிள் ஆராய்ச்சியிலும் தனிப்பட்ட பயிற்சி அளிப்பதன்மூலமாக அவர்கள் முன்னேறுவதற்கு உதவி செய்கிறீர்களா? மேய்ப்புச் சந்திப்புகளைச் செய்கையில், தகுதியுள்ளவர்கள் உங்களுடன்கூட வரும்படி அழைத்திருக்கிறீர்களா? வெளி ஊழியத்தில் அவர்களோடு சேர்ந்து வேலை செய்கிறீர்களா? தாலந்துகளைப் பற்றிய இயேசுவின் உவமையில், தம்முடைய உண்மையுள்ள ஊழியர்களிடம் அந்த எஜமான் சொன்னார்: “நல்லது, உத்தமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே”! (மத்தேயு 25:23) அடக்கத்துடன் தங்கள் பொறுப்புகளைச் சிறந்த முறையில் கையாளும் உதவி ஊழியர்களைப் புகழ்வதிலும் பாராட்டுவதிலும் நீங்கள் அதேவிதமாகத் தாராளமாக இருக்கிறீர்களா? (நீதிமொழிகள் 3:27-ஐ ஒப்பிடவும்.) அவ்வாறில்லையென்றால், அவர்களுடைய வேலை போற்றப்படவில்லை என்று அவர்கள் உணரமாட்டார்களா?
அதேபோன்று, ஒரு ஒத்திசைவான நல்ல உறவிற்கு பேச்சுத்தொடர்பு அத்தியாவசியமானது. (நீதிமொழிகள் 15:22-ஐ ஒப்பிடவும்.) வேலைகள் மனம்போன போக்கில் அல்லது தற்செயலான முறையில் கொடுக்கப்படவோ எடுக்கப்படவோ கூடாது. சபையில் ஒரு சகோதரருடைய திறமைகள் எவ்வளவு சிறந்த முறையில் பயன்படுத்தப்படலாம் என்றும் மூப்பர்கள் ஜெபத்துடன் கலந்தாலோசிக்கவேண்டும். (மத்தேயு 25:15-ஐ ஒப்பிடவும்.) ஒரு நியமனம் கொடுக்கப்பட்டதும், அந்தச் சகோதரனிடமிருந்து என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்பதைப்பற்றி அவருக்கு முழுமையாகச் சொல்லப்படவேண்டும். “ஆலோசனையில்லாத இடத்தில் ஜனங்கள் விழுந்துபோவார்கள்,” என்று நீதிமொழிகள் 11:14 எச்சரிக்கிறது.
கணக்குகள், பத்திரிகைகள், அல்லது பிரசுர இலாக்காவின் பொறுப்பை மற்றொரு ஊழியரிடமிருந்து எடுத்துக்கொள்ளும்படி ஒரு சகோதரரிடம் வெறுமனே சொல்லுவது நல்லதல்ல. சில சமயங்களில், துல்லியமாக இல்லாத அல்லது முழுமை பெறாத ஒரு தொகுதியான பதிவுகள் புதிதாக நியமிக்கப்பட்ட ஊழியரின் பொறுப்பிற்கு வருகின்றன. இது எவ்வளவு சோர்வூட்டுவதாக இருக்கும்! “சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படக்கடவது,” என்று 1 கொரிந்தியர் 14:40 கட்டளையிடுகிறது. சகோதரர்களைப் பயிற்றுவிப்பதற்கு மூப்பர்கள் முன்வர வேண்டும்; சபைக்குரிய செயல்பாட்டு முறைகளில் அவர்களைப் பழக்கப்படுத்தி, அப்படிப்பட்ட முறைமைகளைப் பின்பற்றுவதில் அவர்கள்தாமே ஒரு நல்ல முன்மாதிரி வைக்கவேண்டும். உதாரணமாக, சபை கணக்குகள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தணிக்கை செய்யப்படும்படி மூப்பர்கள் ஏற்பாடு செய்யவேண்டும். அவ்வளவு முக்கியமான ஒரு ஏற்பாட்டை அசட்டைசெய்வது, பிரச்சினைகளுக்கு வழிநடத்தி, அமைப்புசார்ந்த அறிவுரைகளுக்கு உதவி ஊழியர்கள் வைத்திருக்கிற மதிப்பைக் குறைக்கலாம்.
ஆனால் ஒரு குறிப்பிட்ட நியமனத்தைக் கையாளுவதில் ஒரு சகோதரர் அசட்டையாக இருப்பதாகத் தோன்றினால், என்ன செய்வது? உடனடியாக அவருடைய நியமனத்திலிருந்து அவரை நீக்கிவிடுவதற்குப் பதிலாக, மூப்பர்கள் அவரோடு காரியங்களைக் கலந்துபேசவேண்டும். ஒருவேளை போதுமான பயிற்சியின்மை பிரச்சினையாக இருக்கலாம். அந்தச் சகோதரர் தன்னுடைய நியமனத்தைக் கையாளுவதில் தொடர்ந்து பிரச்சினைகளைக் கொண்டிருந்தாரானால், ஒருவேளை அவர் மற்றொரு நியமனத்தில் நன்றாகச் செயல்படலாம்.
மூப்பர்கள் மனத்தாழ்மையை வெளிக்காட்டுவதன் மூலமாகவும் ஒத்திசைவை முன்னேற்றுவிக்கலாம். “ஒன்றையும் வாதினாலாவது வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்,” என்று பிலிப்பியர் 2:3 கிறிஸ்தவர்களை உற்சாகப்படுத்துகிறது. இதன் காரணமாக, ஒரு மூப்பரிடம், மன்றத்தில் ஒரு குறிப்பிட்ட இருக்கையில் உட்காரும்படி அட்டன்டண்ட் கூறினால், தான் ஒரு மூப்பர் என்பதால் கீழ்ப்படிய அவசியமில்லை என்று காரணம்காட்டாமல் ஒத்துழைக்க முயலவேண்டும். மன்றத்தின் வெவ்வேறு பகுதிகளில் உட்காரும்படியான ஆலோசனையை ஒருவேளை அந்த அட்டன்டண்ட் வெறுமனே பின்பற்றலாம்; இருந்தாலும் எல்லாரும் அதைப் பின்பற்றவேண்டும் என்று எந்தச் சட்டமும் இல்லை என்பதை அவர் நினைவில் வைக்கவேண்டும்.a ஒரு உதவி ஊழியருக்கு நியமிக்கப்பட்ட காரியங்களைக் குறித்த தீர்மானங்களை தேவையின்றி மாற்றுவதை ஒரு மூப்பர் தவிர்ப்பார்.
ஒத்திசைவுக்காக உழைக்கும் உதவி ஊழியர்கள்
“அதேவிதமாக உதவி ஊழியர்களும் காரியமனப்பான்மை உடையவர்களாக இருக்கவேண்டும்,” என்று அப்போஸ்தலன் பவுல் குறிப்பிட்டார். (1 தீமோத்தேயு 3:8, NW) நியமனங்களை காரியமனப்பான்மையுடன்—தங்கள் பரிசுத்த சேவையின் பாகமாக—அவர்கள் கருதுவது, அழுத்தங்கள் எழும்புவதைத் தவிர்க்க அதிகத்தைச் செய்கிறது. நீங்கள் ஒரு உதவி ஊழியராக இருந்தால், உங்கள் வேலைகளை ஆர்வத்துடன் செய்கிறீர்களா? (ரோமர் 12:7, 8) உங்களுடைய வேலைகளைக் கையாளுவதில் திறம்பட்டவர்களாக ஆகும்விதத்தில் உங்களை அதில் ஈடுபடுத்தியிருக்கிறீர்களா? நீங்கள் நம்பத்தக்கவராகவும் பொறுப்புக்குரியவராகவும் இருக்கிறீர்களா? நியமனங்களைப் பொறுத்தவரையில் மனமுவந்த தன்மையைக் காண்பிக்கிறீர்களா? ஒரு ஆப்பிரிக்க தேசத்திலுள்ள ஒரு உதவி ஊழியர் சபையில் மூன்று வித்தியாசப்பட்ட நியமனங்களைக் கையாளுகிறார். அவருடைய மனநிலை? “அது வெறுமனே அதிக கடின வேலையை உட்படுத்துகிறது, கடின வேலை உங்களைக் கொன்றுவிடுவதில்லை,” என்று அவர் சொல்கிறார். உண்மையில், தங்களையே அளிப்பவர்கள் மிகுந்த மகிழ்ச்சியை அனுபவிக்கிறார்கள்.—அப்போஸ்தலர் 20:35.
மூப்பர்களுடன் முழுமையாக ஒத்துழைப்பதன்மூலம் ஒத்திசைவை வளர்ப்பதற்கு நீங்களும் அதிகத்தைச் செய்யலாம். “உங்களை நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம் பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால், அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச் செய்யும்படி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள்; அவர்கள் துக்கத்தோடே அப்படிச் செய்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கமாட்டாதே,” என்று எபிரெயர் 13:17 சொல்லுகிறது. மூப்பர்கள் அபூர்ண மனிதர் என்பதும் அவர்களிடத்தில் குற்றம் கண்டுபிடிப்பது எளிது என்பதும் உண்மையே. இருந்தாலும், குறைகாணக்கூடிய ஒரு மனநிலை அவநம்பிக்கையை வளரச்செய்கிறது. அது உங்கள் சந்தோஷத்தைக் கெடுத்து, சபையிலுள்ள மற்றவர்களைக் கேடான விதத்தில் பாதிக்கலாம். இதனாலேயே அப்போஸ்தலன் பேதுரு இந்த ஆலோசனையைக் கொடுத்தார்: “இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; . . . ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்.”—1 பேதுரு 5:5, 6.
ஊழியச் சிலாக்கியங்கள் கொடுக்கப்படுவதில் நீங்கள் கவனிக்காமல் விடப்பட்டதாக உணரும்போது அப்படிப்பட்ட ஆலோசனை குறிப்பாகப் பொருந்தும். ஒருவேளை நீங்கள் ‘கண்காணியின் ஸ்தானத்திற்காகத் தகுதிபெறும்படி நாடிக்கொண்டு’ இருக்கலாம், ஆனால் எந்த நியமிப்பும் செய்யப்படவில்லை. (1 தீமோத்தேயு 3:1, NW) மனத்தாழ்மையானது ஒரு ‘காத்திருக்கும் மனநிலையை’ காத்துக்கொள்ள உங்களுக்கு உதவலாம். (புலம்பல் 3:24, NW) மூப்பர்களிடமாக கோப உணர்ச்சி உள்ளவர்களாய் இருப்பதற்கு—அது நிச்சயமாகவே உங்கள் நல்ல உறவிற்கு ஊறுவிளைவிக்கும்—மாறாக நீங்கள் முன்னேற்றத்தைக் காண்பிக்கவேண்டிய அம்சங்கள் இருக்கின்றனவா என்று அவர்களிடம் கேளுங்கள். ஆலோசனையை உண்மையாகவே மனமுவந்து ஏற்று, அதைப் பொருத்துவதானது, சந்தேகமின்றி உங்கள் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு அத்தாட்சியாகக் காணப்படும்.
ஒரு உதவி ஊழியர் தனிச்சிறப்புள்ள திறமைகளை அல்லது கல்விசார்ந்த மற்றும் சமூக அனுகூலங்களை உடையவராக இருந்தால், தெய்வீக மனத்தாழ்மையும் அடக்கமும், அவர் தன்னுடைய சமநிலையைக் காத்துக்கொள்ள உதவலாம். மூப்பர்களைவிட மேம்பட்டு நிற்க முயல்வதோ தன் சொந்த திறமைகளுக்குக் கவனத்தை ஈர்ப்பதோ அவருக்கு எவ்வளவு ஆசையூட்டுவதாக இருக்கக்கூடும்! “தாழ்ந்த சிந்தையுள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு,” என்பதாக நீதிமொழிகள் 11:2 நமக்கு நினைவுபடுத்துகிறது. அடக்கமுள்ள ஒரு சகோதரன் தன்னுடைய வரையறைகளை அறிந்திருக்கிறார். அவர் அமைதலாக பின்னணியிலிருந்து வேலை செய்யவும், மூப்பர்களுக்கு ஆதரவாகத் தன் திறமைகளைப் பயன்படுத்தவும் மனமுள்ளவராய் இருக்கிறார். அவருக்கு உலகப்பிரகாரமான வழியில் அதிக அறிவு இருந்தாலும்,—மூப்பர்கள் சிறந்து விளங்கக்கூடிய குணங்களாகிய—ஆவிக்குரிய ஞானம் மற்றும் பகுத்துணர்வு என்னும் அதிக முக்கியமான அம்சங்களில் அவர் இன்னும் குறைவுபடக்கூடும் என்று உணரும்படியும் அடக்கம் அவருக்கு உதவி செய்யக்கூடும்.—1 கொரிந்தியர் 1:26–2:13; பிலிப்பியர் 1:9, 11.
தெளிவாகவே, மூப்பர்களும் உதவி ஊழியர்களும் அத்தியாவசியமான பாகங்களை வகிக்கிறார்கள். அவர்கள் சேர்ந்து சபையிலுள்ள எல்லாரையும் கட்டியெழுப்ப அதிகத்தைச் செய்ய முடியும். ஆனால் அவ்வாறு செய்வதற்கு, அவர்கள் ‘மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய், அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி, சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருந்து’ ஒன்றுசேர்ந்து ஒத்திசைவாக உழைக்கவேண்டும்.—எபேசியர் 4:2, 3.
[அடிக்குறிப்புகள்]
a காவற்கோபுரம், நவம்பர் 15, 1992, பக்கம் 12-ஐப் பார்க்கவும்.
[பக்கம் 27-ன் படங்கள்]
மூப்பர்கள் உதவி ஊழியர்களை, தங்களுக்குக்கீழ் வேலைசெய்கிறவர்களாக அல்ல, ஆனால் கடவுளுடைய சக ஊழியர்களாகக் கருதுகிறார்கள்