உதவி ஊழியர்களே நல்ல நிலையை காத்துக்கொள்ளுங்கள்
“இப்படி உதவிக்காரருடைய ஊழியத்தை நன்றாய்ச் செய்கிறவர்கள் தங்களுக்கு நல்ல நிலையையும் கிறிஸ்து இயேசுவைப் பற்றும் விசுவாசத்தில் மிகுந்த தைரியத்தையும் அடைவார்கள்.”—1 தீமோத்தேயு 3:13.
இப்பொழுது உதவி ஊழியர்களாக இருக்கும் ஆண்கள் “முன்னதாகச் சோதிக்கப்” பட்டவர்களாக இருக்கிறார்கள். (1 தீமோத்தேயு 3:10) ஆனால் அவர்களுடைய நியமனம் ஒரு முடிவாக இருப்பதில்லை. தங்களுடைய கடமைகளை “நன்றாய்ச்” செய்வதன் மூலம் தொடர்ந்து “நல்ல நிலையை” காத்துக்கொள்வதே அவர்களுடைய இலக்காக இருக்கிறது. (1 தீமோத்தேயு 3:13) இந்த இலக்கை அவர்கள் முயன்று அடைய, ஐக்கியப்பட்ட கிறிஸ்தவ சபையின் ஒவ்வொரு அங்கத்தினரும் அவர்களுக்கு உதவியாக இருக்க விரும்புவார்கள்.
2 கிறிஸ்துவின் ஆவிக்குரிய சரீரத்தின் அங்கத்தினர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து வேலை செய்து, ஒருவரில் ஒருவர் அக்கறையுள்ளவர்களாக இருப்பதன் மூலம் நன்மையடைவார்கள் என்பதாக அப்போஸ்தலனாகிய பவுல் குறிப்பிட்டான். (1 கொரிந்தியர் 12:12-31) அதேவிதமாகவே உதவி ஊழியர்கள், கடவுளால் கொடுக்கப்பட்டிருக்கும் வேலையை “நன்றாய்ச்” செய்யும்போது, நவீன நாளைய கிறிஸ்தவ சபையின் ஒவ்வொரு அங்கத்தினரும் நன்மையடைகிறார்கள். ஆனால் உதவி ஊழியர்கள் தங்களுடைய கடமைகளை சரிவர நிறைவேற்ற முடியாதபடி அவர்களுக்கு தடையாக இருக்கும் பிரச்னைகளை அவர்கள் எதிர்படும்போது, இது சபையிலுள்ள எல்லா அங்கத்தினர்களுக்கும் தொந்தரவாக இருக்கக்கூடும்.
3. யெகோவாவின் ஜனங்கள் அனைவருக்கும் “மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல. . .வானமண்டலங்கலிலுள்ள பொல்லாத ஆவியின் சேனைகளோடு” ஒரே போராட்டம்தானே இருக்கிறது. (எபேசியர் 6:12) மேலுமாக யெகோவாவின் ஊழியர்கள் அனைவருமே தங்களுடைய அபூரணத்தன்மைகளுடனும் பாவமுள்ள மனசாய்வுகளுடனும் போராட வேண்டியவர்களாக இருக்கிறார்கள். ஆனால் ஒரு தொகுதியாக உதவி ஊழியர்கள் யெகோவாவின் சாட்சிகளிலுள்ள மற்ற தொகுதிகளை விட ஒரு சில பிரச்னைகளை, அதிக தெளிவாக தனிப்படுத்திக் காட்டக்கூடிய வகையில் எதிர்படுகிறார்கள். இதைவிளக்க, ஒரு மேற்கத்திய தேசத்தில் 320-க்கும் மேற்பட்ட சபைகளில் இருந்த 1,360 உதவி ஊழியர்களை வைத்து சமீபத்தில் செய்யப்பட்ட சுற்றாய்வு உதவியாக இருக்கிறது.
விவாகமில்லாதிருத்தலும் விவாகமும்
4. பரிசீலனைச் செய்யப்பட்ட உதவி ஊழியர்களில் 10 சதவிகிதத்துக்கு சற்று மேலாக அவர்கள் இன்னும் விவாகமில்லாதவர்களாகவே இருக்கிறார்கள். விவாகமான சுமார் 90 சதவிகிதத்தினருக்குமுரிய பொதுவான சில பொறுப்புகளிலிருந்து அவர்கள் விடுபட்டவர்களாக அதை அவர்கள் அனுபவித்துக் களிக்கிறார்கள். ஆனால் விவாகமில்லாத சகோதரர்கள், இந்த சுயாதீனத்தை, மட்டுக்கு மீறிய பொழுது போக்கு அல்லது சமுதாய கூட்டுறவு போன்ற தனிப்பட்ட காரியங்களை நாடிக் கொண்டிருப்பதிலேயே, பயன்படுத்திக் கொண்டிராதபடி கவனமாக இருக்க வேண்டும் அல்லது விவாகம் செய்து கொள்ள வேண்டும் என்ற இயற்கையான ஆவல், வாழ்க்கையில் மற்ற எல்லாவற்றிற்கும் மேலாக முதலிடத்தை எடுத்துக்கொள்ளவும் கூட அனுமதிக்கக்கூடாது (மத்தேயு 6:33) அல்லது விவாகமான அவர்களுடைய நண்பர்களின் அழுத்தங்களின் காரணமாக அவசரப்பட்டோ அல்லது விவாகமில்லாமலோ ஒரு விவாகத்தை அவர்கள் செய்துக் கொள்ளக்கூடாது. நிச்சயமாகவே, ஒருவரில் ஒருவர் அக்கறையுள்ளவர்களாக இருக்கும் கிறிஸ்தவர்கள், விவாகமில்லாத உடன் விசுவாசிகளின் விவாகமில்லாத நிலையை மதித்து. ஒருவேளை முழுநேரஊழியத்தை எடுத்துக் கொள்வதன் மூலம், தேவராஜ்ய அக்கறைகளுக்கு அதிகமாக நேரத்தை ஒதுக்கி வைப்பதற்கு தங்களுக்கிருக்கும் அதிகமான சுதந்திரத்தை அனுகூலப்படுத்திக் கொள்ளுமாறு அவர்களை உற்சாகப்படுத்துவார்கள்.
5. முன்னால் குறிப்பிடப்பட்ட சுற்றாய்வின்படி, உதவி ஊழியர்களில் 62 சதவிகிதத்தினர் பெற்றோர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு, விவாகமில்லாத சகோதர்களைவிட, இவர்களுடைய இருதயங்கள் “லவுகீக கவலைகளினால் பாரமடைந்து” விடக்கூடிய அபாயம் அதிகமாக இருக்கிறது. (லூக்கா 21:34-36) ஆகவே விவாகமில்லாத நிலையை சிபாரிசு செய்கையில் பவுல் இவ்விதமாகச் சொன்னான்: “நீங்கள் கவலையற்றவர்களாயிருக்க விரும்புகிறேன் விவாகமில்லாதவன் கர்த்தருக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று கர்த்தருக்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறான். விவாகம் பண்ணினவன் தன் மனைவிக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று உலகத்திற்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறான். . .விவாகம் பண்ணிக் கொடுக்கிறவன் நன்மை செய்கிறான்; கொடாமலிருக்கிறவனும் அதிக நன்மை செய்கிறான்”.—1 கொரிந்தியர் 7:32-38.
6. ‘விவாகங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன‘ என்பதாக யெகோவாவின் ஜனங்கள் நம்பாத போதிலும், விவாகம் சம்பந்தமான பிரச்னைகளை தீர்ப்பதற்கு பரம ஞானம் தேவையாக இருக்கிறது என்பதை அவர்கள் அறிவார்கள். (சங்கீதம் 19:7; நீதிமொழிகள் 3:5,6) ஆகவே விவாகமான உதவி ஊழியர்கள் கடவுளுடைய வார்த்தையின் புத்திமதியை எவ்வளவு கவனமாக பின்பற்றமுடியுமோ அவ்வளவு கவனமாக பின்பற்றுவது அவசியமாகும். குடும்ப பொறுப்புகளை நிறைவேற்றுவதில் சரியான சமநிலையைக் கொண்டிருக்க அவர்கள் உழைக்கவேண்டும். அதே சமயத்தில் சபையில் அவர்களுடைய தேவராஜ்ய கடமைகளை புறக்கணிப்பதற்கு இவற்றை ஒரு காரணமாக ஒருபோதும் அவர்கள் பயன்படுத்தக் கூடாது. மற்ற காரியங்களோடுகூட, நன்றாக சிந்தித்து தயாரிக்கப்பட்ட ஒரு அட்டவணை. இன்றியமையாததாக இருக்கிறது, வயதான மற்றும் அதிக அனுபவமுள்ள விவாகமான தம்பதிகளிடம் இதன் சம்பந்தமாக உதவி கேட்கும் போது குறைந்தவயதிலுள்ளவர்களுக்கு பிரயோஜனமான ஆலோசனைகளை அவர்கள் தரக்கூடும்.
7. விவாகமான உதவி ஊழியருக்கு அவருடைய குடும்பத்திலிருந்து கிடைக்கும் ஆதரவு பெறும் உதவியாக இருக்கிறது. நிச்சயமாகவே குடும்ப அங்கத்தினர்கள் மட்டுக்கு மீறிய அளவில் அவருடைய நேரத்தையும் கவனத்தையும் வற்புறுத்திக் கேட்பார்களேயானால் அல்லது பொருளாதார காரியங்களை மட்டுக்கு மீறிய அளவில் கேட்பார்களேயானால், அது அவருடைய ஆவிக்குரிய முன்னேற்றத்தை தடைச் செய்யக்கூடும். ஆனால் “ஊழியத்தை நன்றாகச் செய்கிறதற்கு” அவர் எடுக்கும் முயற்சிகளை அவருடைய முழு குடும்பமும் ஆதரிக்கும்போது அது ஒரு ஆசீர்வாதமாக இருக்கிறது. (1 தீமோத்தேயு 3:13) ஆகவே விவாகமில்லாத ஒரு உதவிஊழியன் வருங்கால விவாகத்துணையோடு உணர்ச்சிப் பூர்வமான ஈடுபாட்டைக் கொள்வதற்கு முன்னால் அவள் அவர்களுடைய ஆவிக்குரிய முன்னேற்றத்துக்கு உதவியாக இருப்பாளா என்பதை தீர்மானிக்க முயற்சிப்பது எவ்வளவு இன்றியமையாததாக இருக்கிறது!
உத்தியோகமும் பொருளாசையும்
8. பரிசீலனைச் செய்யப்பட்ட உதவி ஊழியர்களில் பத்துக்கு எட்டுப் பேர் 60 வயதுக்கும் பெரும்பாலானவர்களின் விஷயத்தில், அவர்கள் தங்களையும் தங்களுடைய குடும்பங்களையும் காப்பாற்றிக்கொள்ள, இன்னும் உலகப் பிரகாரமான வேலையைச் செய்து கொண்டிருப்பவர்களாக இருக்கிறார்கள். அவர்களில் பத்தில் ஐந்து பேர் 20-40 இடைப்பட்ட வயதினராக இருக்கிறார்கள்—இந்த வயதில்தானே உலகிலுள்ள மனிதர்கள் பொதுவாக ஒரு வேலையில் அல்லது தொழிலில் தங்களை ஸ்திரமாக்கிக்கொண்டு அதில் முன்னேறவும் பொருளாதாரத்தில் பாதுகாப்புள்ளவர்களாகவும் முயற்சி செய்கிறார்கள். நீங்கள் அந்த வயதிலுள்ள ஒரு உதவி ஊழியனாக இருந்தால், உங்களை ஆவிக்குரிய விதத்தில் பலவீனப்படுத்தி விடக்கூடிய உலகப் பிரகாரமான, பொருள்பற்றுள்ள மனநிலைகளை வளர்த்துக் கொள்ளும் அபாயத்தை ஒருபோதும் குறைவாக மதிப்பிட்டு விடாதீர்கள் மாறாக, பவுல் இவ்விதமாகச் சொன்னதை நினைவில் கொள்ளுங்கள்: “உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம்.” (1 தீமோத்தேயு 6:8) பொருளாசையை எதிர்த்து போராடவும் அனைவருக்கும் உதவக்கூடிய சிறந்த புத்திமதியை இயேசுவும்கூட கொடுத்தார். நீங்களே அதை மத்தேயு 6:19-34-ல் வாசித்துப் பாருங்கள்.
9. குறிப்பாக, வயதில் குறைந்த உதவி ஊழியர்களாக இருக்கும் நீங்கள், தங்களுடைய யோசனைகளில் யெகோவாவை விலக்கி விட்டு, உலகப் பிரகாரமான தொழில்களில் ஈடுபடும் அல்லது செல்வங்களை சேர்த்துக் கொண்டிருக்கும் “வெற்றிகரமான” மனிதர்களை பார்க்கிறீர்கள். (நீதிமொழிகள் 16:3; 19:21 ஒப்பிடவும்) சீக்கிரத்தில் “மகா உபத்திரவத்தின்” போது அழிக்கப்படப்போகும் ஆவிக்குரிய தன்மையற்ற பொருளாசை மிக்க மனிதர்களைப் பின்பற்றுவதுதான் எவ்வளவு ஞானமாயிருக்கும்? (மத்தேயு 224:21) யெகோவாவின் எந்த ஊழியன் அவர்களுடைய இடத்துக்கு தன்னுடைய இடத்தை மாற்றிக் கொள்வான்? ஏனென்றால் “மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?” என்று இயேசு கேட்டார். (மத்தேயு 16:26) நிச்சயமாகவே சாத்தானுடைய அதிகாரத்தின் கீழிருக்கும் அழிந்துகொண்டிருக்கும் இந்த உலகத்தோடு மிகவும் பாதுகாப்பற்ற மற்றும் குறுகிய ஒரு எதிர்காலத்தைக் கட்டுவதைவிட யெகோவாவின் அமைப்போடு பாதுகாப்பான ஒரு எதிர்காலத்தைக் கட்டுவதே ஞானமுள்ள போக்காக இருக்கிறது.
கடவுளுடைய ராஜ்யத்துக்கு பற்றுறுதி
10. யெகோவாவின் மேசியானிய ராஜாவைக் குறித்து தீர்க்கதரிசனமாக இவ்விதமாகச் சொல்லப்பட்டது: “உமது பராக்கிரமத்தின் நாளிலே உம்முடைய ஜனங்கள் மனப்பூர்வமும் பரிசுத்த அலங்காரமுமுள்ளவர்களாயிருப்பார்கள்: விடியற்காலத்துக் கர்ப்பத்தில் பிறக்கும் பனிக்குச் சமானமாய் உம்முடைய யௌன ஜனம் உமக்கு பிறக்கும்” (சங்கீதம் 110:3) 1914 முதற்கொண்டு இந்த தீர்க்கதரிசனம் நிறைவேறி வருகிறது. அதிகமான “யௌவன ஜனம்” மகிமைப்படுத்பட்ட இயேசு கிறிஸ்துவை ராஜாவாகக்கொண்ட கடவுளுடைய ராஜ்யத்துக்கே தாங்கள் முதலாவதாக பற்றுறுதியுள்ளவர்களாக இருக்கவேண்டும் என்பதை உணர்ந்து வருகிறார்கள். ஆகவே, உதவி ஊழியர்கள் உட்பட, ஒப்புக்கொடுக்கப்பட்ட இந்த மனிதர்கள், அரசாங்கத்தின் “மேலான அதிகாரங்களுக்கு” சம்பந்தப்பட்ட கீழ்பபடிதலைக் காட்டியபோதிலும், கருத்து முரண்படும் போது, அவர்கள், “மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது.” (ரோமர் 13:1; அப்போஸ்தலர் 5:29) இயேசு சொன்ன விதமாகவே அவரை பின்பற்றுகிறவர்கள், “உலகத்தின் பாகமா இல்லை” திருக்கிறார்கள். (யோவான் 15:19; 18:36) தேசங்களின் அரசியல் விவகாரங்களில் அவர்கள் நடுநிலையை காத்துக் கொள்கிறார்கள், ஏனென்றால் மற்றபடி செய்வது அவர்களை கடவுளுடைய ராஜ்யத்துக்கு துரோகிகளாக்கிவிடும் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.
11. உதவி ஊழியர்களோ அல்லது மற்றவர்களோ கிறிஸ்தவ நடுநிலைமையைக் காத்துக்கொள்வதன் காரணமாக, தங்களுடைய உத்தியோகத்தையோ அல்லது தங்களுடைய சுதந்தரத்தையோ கூட இழந்து விடுவார்களேயானால் எப்படி? (ஏசாயா 2:2-4; யோவான் 17:16) அப்பொழுது அவர்களுடைய ஆவிக்குரிய சகோதர சகோதரிகள் அவர்களுக்கு எல்லா சாத்தியமான ஆவிக்குரிய உதவியையும், அவசியமானால் பொருளுதவியையும்கூட கொடுப்பார்கள் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். இது ஏனென்றால் யெகோவாவின் ஜனங்கள் ஒருவரிலொருவர் அன்பான அக்கறையுள்ளவர்களாக இருக்கிறார்கள்.—யோவான் 13:34,35; 1 கொரிந்தியர் 12:24,25 ஒப்பிடவும்.
அதிகமான அனுபவத்துக்கான தேவை
12. பரிசீலனைச் செய்யப்பட்ட உதவி ஊழியர்களில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கானோர் பத்து வருடத்துக்கும் குறைவாகவே யெகோவாவின் சாட்சிகளாக இருந்திருக்கிறார்கள். சபையிலுள்ள அதிக அனுபவமுள்ள அங்கத்தினர்களின் உதவியையும் அறிவுரைகளாயும் இந்த மனிதர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெளிவாக இருக்கிறது. ஆனால் “நல்ல நிலையை அடைவது” மற்றவர்களிடமிருந்து கற்றுக் கொள்வதையும் அனுபவத்தை சேகரிப்பதையும் உட்படுத்துவதாக இருக்கும். இடைவிடாமல் தனிப்பட்ட இலகுகளை வைத்து, அவற்றை எட்ட கடமையுணர்ச்சியுடன் உழைப்பதையும் கூட இது அர்த்தப்படுத்துகிறது. ஆகவே ஒரு உதவி ஊழியனாக. பிரயோஜனமுள்ள நோக்கங்களுக்கு உதவியாக இருக்க நீங்கள் உண்மையாகவே விரும்புவீர்களேயானால் அல்லது அந்த சிலாக்கியத்துக்காக முயன்று கொண்டிருப்பீர்களேயானால், ஏதாவது தனிப்பட்ட இலக்குகளை நீங்கள் வைத்திருக்கிறீர்களா? உதாரணமாக ஒரு குறிப்பிட்ட தேதிக்குள் முழுபைபிளையும் ஒரு முறை வாசித்துவிட அல்லது சில மாதங்களில் துணைப் பயனியர் ஊழியசெய்ய ஏன் தீர்மானிக்கக்கூடாது?
13. நீங்கள் வயதில் அல்லது அனுபவத்தில் இளையவராக இருந்தால், 1 தீமோத்தேயு 4:12-15-ல் சொல்லப்பட்டிருக்கும் காரியங்களிலிருந்து நீங்கள் நன்மையடையலாம், இளைஞனாக இருந்த கண்காணியான தீமோத்தேயுவுக்கு இந்த வார்த்தைகள் சொல்லப்பட்டபோதிலும், பேச்சையும் நடத்தையும் பற்றி பவுல் சொன்ன அநேக காரியங்கள், உதவி ஊழியனாக வரவிரும்பும் எந்த சகோதரனுக்கும் அல்லது அந்த ஸ்தானத்தில் ஏற்கெனவே ஊழியஞ் செய்துவரும் எவருக்கும் பிரயோஜனமாயிருக்கும் அப்போஸ்தலன் இவ்விதமாக எழுதினான்: “உன் இளமையைக் குறித்து ஒருவனும் உன்னை அசட்டை பண்ணாதபடிக்கு, நீ வார்த்தையிலும் நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும் விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு நான் வருமளவும் வாசிக்கிறதிலும், புத்திசொல்லுகிறதிலும், உபதேசிக்கிறதிலும் ஜாக்கிரதையாயிரு. மூப்பராகிய சங்கத்தார் உன் மேல் கைகளை வைத்தபோது தீர்க்கதரிசனத்தினால் உனக்கு அளிக்கப்பட்ட வரத்தைப்பற்றி அசதியாயிராதே. நீ தேறுகிறது யாவருக்கும் விளங்கும்படி இவைகளையே சிந்தித்துக்கொண்டு இவைகளிலே நிலைத்திரு” “நீங்கள் என்ன செய்வது அவசியமாயிருக்கிறது? நீங்கள் என்ன செய்வது அவசியம் என்பதை ஜெபசிந்தையோடு தீர்மானித்துப் பின்னர், யெகோவாவின் உதவியோடு அதை செய்யுங்கள்!
சோர்வை சமாளித்தல்
14. இளைஞர்களுக்கே உரிய பிரச்னைகளோடு அநேக உதவி ஊழியர்கள் இனிமேலும் போராடிக்கொண்டிருக்க வேண்டியவர்களாக இல்லை. அவர்கள் சோர்வுக்கு வழிநடத்தக்கூடிய வயோதிபம் அல்லது உடல்நல குறைபாட்டை எதிர்படுகிறார்கள். ஆனால் ஆவிக்குரிய விதத்தில் பலமாக தங்களை வைத்துக் கொள்கிறவர்கள், அபிஷேகம் பண்ணப்பட்ட உடன் கிறிஸ்தவர்களுக்கு பவுல் எழுதிய இந்த வார்த்தைகளிலிருந்து ஆற்றலைப் பெற்றுக் கொள்ளலாம்: “ஆனபடியினாலே நாங்கள் சேர்ந்து போகிறதில்லை; எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்கு நாள் புதிதாக்கப்படுகிறது. மேலும் காணப்படுகிறவைகளை யல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது. ஏனெனில் காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்” (2 கொரிந்தியர் 4:16-18) பூமிக்குரிய நம்பிக்கைகளையுடைய யெகோவாவின் ஊழியர்களுக்கும் கூட மிகவும் உற்சாகமூட்டும் எதிர்பார்ப்புகள் இருக்கின்றன-பூமிக்குரிய பரதீஸில் நித்திய ஜீவனாக அது இருக்கிறது.—லூக்கா 23:43; யோவான் 17:3.
15. ஆகவே உடல்நலக்குறைவு அல்லது வயோதிபத்தின் காரணமாக மற்றவர்கள் செய்வது போல அவ்வளவு அதிகத்தைச் செய்ய இயலாத நிலையிலிருக்கும் உதவி ஊழியர்கள், சந்தோஷமும் நம்பிக்கையுமான மனநிலையை காத்துக் கொள்வதற்கு நல்ல காரணமாயிருக்கிறது. இது அவர்கள் சத்தியத்தை போற்றுவதையும், நித்தியமானவையாக இருக்கும் காரியங்களில் ஆழ்ந்த விசுவாசமுள்ளவர்களாயிருப்பதையும் காண்பிக்கிறது. இத்தகைய ஒரு சிறந்த ஆவி, மனத்தாழ்மையுள்ள ஊழியத்தோடு சேர்ந்து, சபையிலுள்ள அனைவருக்கும் பெரும் உதவியாகவும் உற்சாகமாகவும் இருக்கும்.
16. நீங்கள் ஒரு உதவி ஊழியனாக இருந்தால், உங்களுடைய போதனா திறமையையும், ஆவிக்குரிய குணாதிசயங்களையும் அபிவிருத்திசெய்வதன் மூலம் தொடர்ந்து “கண்காணியின் வேலையை அடைய நாடிக்” கொண்டிருங்கள். (1 தீமோத்தேயு 3:1) ஆனால் நீங்கள் உடனடியாக மூப்பராக நியமிக்கப்படாவிட்டால் உற்சாகமிழந்து விடாதீர்கள். ஒரு உதவி ஊழியனாக உங்களுடைய கடமைகளை “நன்றாய்ச்” செய்து வருகையில், நீங்கள் பிரயோஜனமான நோக்கங்களை சேவிக்கிறீர்கள். நீங்கள் சபைக்கு உண்மையான ஒரு சொத்தாக இருக்கிறீர்கள். யேகோவாவின் அமைப்பினுள்ளே எந்த வழியிலும் சேவை செய்வதும், ராஜ்ய பிரசங்கிப்பு வேலையை நிறைவேற்ற உடன் விசுவாசிகளுக்கு உதவி செய்வதும் பெரும் சிலாக்கியமாக இருக்கிறது. மத்தேயு 24:14; 28:19,20.
மற்றவர்கள் எவ்விதமாக உதவலாம்
17 உதவி ஊழியர்கள் நிறைவேற்றும் பிரயோஜனமான நோக்கங்களை உணர்ந்தவர்களாய், யெகோவாவின் ஜனங்கள் அனைவரும் அவர்களுடைய முயற்சிகளை ஆதரிக்க விரும்பவேண்டும். உதாரணமாக, அவருடைய மனைவியும் பிள்ளைகளும் வாழ்க்கையின் தேவைகளைப் பெற்றுக் கொள்வதில் திருப்தியாக இருந்து, அவர் உலகப்பிரகாரமான வேலையில் கூடுதலாகபாடுபடுவதை தேவைப்படுத்தும் சொகுசான வாழ்க்கையை வற்புறுத்தாவிட்டால். அத்தகைய மனிதனுக்கு தொடர்ந்து ‘ஊழியத்தை நன்றாய்ச் செய்வது எளிதாக இருக்கும்.—1 தீமோத்தேயு 6:6-8.
18. மூப்பர்கள், தேவையான அறிவுரைகளையும் புத்திமதிகளையும் கொடுப்பதன் மூலம் உதவி ஊழியர்களுக்கு உதவிச் செய்யலாம். முன்னேற்றம் செய்யப்படும் போது உண்மையான பாராட்டுதல் தெரிவிக்கப்பட வேண்டும். மற்ற காரியங்களோடு வெளி ஊழியத்தில் வேலை செய்து, பேச்சுக்களை தயாரிப்பதில் உதவி செய்து, அவர்களுடைய ஏராளமான கிறிஸ்தவ அனுபவத்தை அவர்களோடு பகிர்ந்து கொள்ளலாம். சில சமயங்களில் இதுபோன்ற அக்கறையும் பேச்சுத்தொடர்பும் அசட்டை செய்யப்பட்டிருக்கின்றன. உதாரணமாக ஒரு உதவி ஊழியரிடம், அவருடைய மிகக் குறைவான வெளி ஊழிய அறிக்கையைப் பற்றி கேட்கப்பட்டபோது, அவர் வட்டார கண்காணியிடம் இவ்விதமாகச் சொன்னார்: “நீங்கள் ஏன் கேட்கிறீர்கள்? அது பல வருடங்களாக குறைவாகவே இருக்கிறது. ஆனால் அதைப்பற்றி பேசும் முதல் ஆள் நீங்களே” உதவி ஊழியர்களுக்கு ஆக்கப்பூர்வமான அன்பான புத்திமதியைக் கொடுத்து, அவர்களுடைய பிரச்னைகளில் அவர்களுக்கு பொறுமையாக உதவி செய்யும் மூப்பர்கள் அநேகமாக குறிப்பிடத்தக்க பலன்கள் கிடைப்பதை பார்க்கும் சந்தோஷத்தை அனுபவிக்கிறார்கள்.
19. உண்மையில், சபையிலுள்ள ஒவ்வொரு அங்கத்தினரும் அவர்களுடைய நல்ல நிலையைக் காத்துக் கொள்ள உதவி ஊழியர்களுக்கு உதவிசெய்யலாம் எவ்விதமாக? அவர்களோடு ஒத்துழைப்பதன் மூலமும் அவர்களுடைய வேலைக்கு இருதயப்பூர்வமான போற்றுதலை காண்பிப்பதன் முலமும் சரீர ஆரோக்கியத்தைக் காத்துக்கொள்ள, மனித சரீரத்தின் அனைத்துப் பாகங்களும் பொதுவாக ஒன்றாகச் சேர்ந்து வேலைசெய்வது போலவே, சபையில் நல்ல ஆவிக்குரிய ஆரோக்கியத்தை உறுதி செய்ய தன் எல்லா அங்கத்தினர்களும் ஒத்துழைக்க வேண்டும். (1 கொரிந்தியர் 12:24, 25) அதற்காக, பிரயோஜனமான நோக்கங்களை நிறைவேற்றி, நல்ல நிலையைக் காத்துக்கொள்ளும் கடினமாக உழைக்கும் உதவி ஊழியர்கள் அதிகத்தைச் செய்கிறார்கள். அவர்களும், யெகோவாவின் உண்மைத் தவறாத சாட்சிகள் அனைவரும் நித்திய மகிழ்ச்சியான ஒரு எதிர் காலத்தை நோக்கியிருந்து, ஐக்கியமாக “நித்தியானந்த தேவனின்” இருதயத்தை தொடர்ந்து சந்தோஷப் படுத்திக் கொண்டிருப்பார்களாக.—1 தீமோத்தேயு 1:11; நீதிமொழிகள் 27:11.—W859/15
தயவு செய்து விளக்கவும்
◻ உதவி ஊழியர்கள் என்ன பிரச்னைகளை எதிர்படக்கூடும்?
◻ உதவி ஊழியர்களின் மனைவிகளும் பிள்ளைகளும் அவர்களுக்கு உதவி செய்ய என்ன செய்யலாம்?
◻ உதவி ஊழியர்களுக்கு உதவி செய்ய மூப்பர்கள் என்ன செய்யலாம்?
◻ உதவி ஊழியர்களுக்கு உதவி செய்ய சபையிலுள்ள ஒவ்வொரு அங்கத்தினரும் என்ன செய்யலாம்?
[கேள்விகள்]
1. உதவி ஊழியனாக நியமிக்கப்பட்ட பின்பு, ஒரு மனிதனின் இலக்கு என்னவாக இருக்க வேண்டும்? சபையிலுள்ள மற்றவர்கள் என்ன செய்ய விருப்பம் வேண்டும்?
2. உதவி ஊழியர்கள் செய்யும் காரியத்தால் சபையின் அங்கத்தினர்கள் எவ்விதமாக பாதிக்கப்படுகிறார்கள்?
3. (எ) யெகோவாவின் ஜனங்கள் அனைவருக்கும் என்ன பிரச்னைகள் இருக்கின்றன? (பி) சமீபத்தில் செய்யப்பட்ட சுற்றாய்வு எதை விளக்க உதவியாக இருக்கிறது?
4. விவாகமில்லாத உதவி ஊழியர்கள், விவாகமில்லாத தங்களுடைய நிலையை எவ்விதமாக கருதவேண்டும்? மற்றவர்கள் என்ன ஊக்குவிப்பை அவர்களுக்கு கொடுக்கலாம்?
5. விவாகமில்லாதவர்களைவிட விவாகமான உதவி ஊழியர்களுக்கு என்ன அதிகமான அபாயமிருக்கிறது?
6. விவாகமான உதவி ஊழியர்கள் என்ன செய்வது அவசியமாக இருக்கிறது? யார் பிரயோஜனமான ஆலோசனைகளைத் தரக்கூடும்?
7. விவாகமான உதவி ஊழியரின் குடும்பம் எவ்விதமாக அவருடைய முயற்சிகளையும், ஆவிக்குரிய முன்னேற்றத்தையும் பாதிக்கக்கூடும்? (பி) விவாகம் செய்துகொள்ள திட்டமிட்டிருக்கும் உதவி ஊழியர்கள் எதை மனதில் வைப்பது நல்லதாக இருக்கும்?
8. (எ) உலகப்பிரகாரமான வேலையின் சம்பந்தமாக சில உதவி ஊழியர்கள் எதிர்படும் சாத்தியமான அபாயம் என்ன? (பி) எந்த வசனங்களின்பேரில் தியானம் செய்வது, பொருளாசையை எதிர்த்துப் போராட ஒரு நபருக்கு உதவி செய்யக்கூடும்?
9 மத்தேயு 16:26-ற்கு இசைவாக, குறிப்பாக குறைந்த வயதிலுள்ள உதவி ஊழியர்களுக்கு எது ஞானமுள்ள போக்காக இருக்கிறது?
10. அரசியல் விவகாரங்களில் சம்பந்தமாக, உதவி ஊழியர்கள் உட்பட, அதிகதிகமான “யௌவன ஜனம்” எடுக்கும் நிலைநிற்கை என்னவாக இருக்கிறது?
11. கிறிஸ்தவ நடுநிலைமையைக் காத்துக்கொள்வதன் காரணமாக துன்பப்படும் சகோதரர்கள் எதைக் குறித்து நிச்சயமாயிருக்கலாம்?
12. ‘நல்ல நிலையை அடைவது’ எதையும் உட்படுத்தும்?
13. உதவி ஊழியனாக வர விரும்பும் அல்லது அந்த ஸ்தானத்தில் இப்பொழுது ஊழியஞ்செய்துவரும் ஒரு சகோதரருக்கு, தீமோத்தேயுவுக்குக் கொடுக்கப்பட்ட எந்த புத்திமதி பிரயோஜனமாக இருக்கும்?
14, 15. (எ) வயோதிபம் அல்லது உடல்நலக்குறைவோடு போராடவேண்டியிருக்கும் உதவி ஊழியர்களுக்கு என்ன வேதப்பூர்வமான ஊக்குவிப்பு இருக்கிறது? (பி) இந்த மனிதர்கள் எவ்விதமாக சபையிலுள்ள மற்றவர்களை உற்சாகப்படுத்தலாம்?
16. ஒரு உதவி ஊழியன் மூப்பராக நியமிக்கப்படாவிட்டால், ஏன் உற்சாகமிழந்துவிடக்கூடாது?
17. ஒரு உதவி ஊழியன் எவ்விதமாக அவனுடைய மனைவியினாலும் பிள்ளைகளாலும் உதவப்படலாம்?
18. (எ) மூப்பர்கள் எவ்விதமாக உதவி ஊழியர்களுக்கு உதவி செய்யலாம்? (பி) மூப்பர்களுக்கு உதவி ஊழியர்களுக்குமிடையே ஒரு நல்ல பேச்சுத் தொடர்பு ஏன் இன்றியமையாததாக இருக்கிறது?
19. உதவி ஊழியர்கள் அவர்களுடைய நல்ல நிலையைக் காத்துக்கொள்ள, சபையிலுள்ள ஒவ்வொரு அங்கத்தினரும் எவ்விதமாக உதவி செய்யலாம்?
“நம்மில் இலட்சணமுள்ளவைகளுக்கு அலங்கரிப்பு வேண்டியதில்லை. சரீரத்திலே பிரிவினையுண்டாயிராமல், அவயங்கள் ஒன்றைக்குறித்து ஒன்று கவலையாயிருக்கும்படிக்கு, தேவன் கனத்தில் குறைவுள்ளதற்கு அதிக கனத்தைக் கொடுத்து, இப்படி சரீரத்தை அமைத்திருக்கிறார்.”—1 கொரிந்தியர் 12:24, 25
[பக்கம் 14-ன் படம்]
உதவி ஊழியர்கள் சீஷராக்கும் வேலையிலும் சபையினுள்ளேயும் உண்மையுடன் தங்களுடைய பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும்
[பக்கம் 16-ன் படம்]
வயதான உதவி ஊழியர்கள் சபைக்கு உதவவும் உற்சாகப்படுத்தவும் அதிகத்தைச் செய்ய முடியும்.