ரவுடி கும்பல்களிடமிருந்து நம் பிள்ளைகளை பாதுகாத்தல்
“தங்கள் மீது அக்கறையாயிருக்கும் ஆட்கள் பிள்ளைகளுக்குத் தேவை”—“என் பிள்ளையா—பெற்றோர், ரவுடி கும்பலிடமிருந்து தடை செய்தல்.” (ஆங்கிலம்)
தேவனுடைய உறவிற்கு அடுத்ததாக இருக்கும் நம்முடைய மதிப்புமிக்க பொக்கிஷங்களில் நம் பிள்ளைகளும் அடங்குவர். நாம் அவர்களோடு பேச வேண்டும், அவர்கள் பேசுவதை கவனித்துக் கேட்கவேண்டும், அணைத்துக்கொள்ளவேண்டும், அவர்கள், நமக்கு மிக அருமையானவர்கள் என்பதை அவர்களே உணர்ந்திருக்கிறார்கள் என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும். நேர்மையாகவும், மற்றவர்களுக்கு உதவியாக இருக்கவும், திருப்தியான வாழ்க்கையை எவ்விதம் வாழ்வது என்பதைப்பற்றியும், மற்றவர்களிடம் எப்படி அன்பாக இருக்கவேண்டும் என்பதைப்போன்ற நல்ல காரியங்களை அவர்களுக்கு நாம் கற்றுக்கொடுக்க வேண்டும்.
இளைஞர் சீர்திருத்த மையத்தின் கண்காணிப்பாளர் இந்தப் பெரும் பிரச்சினைக்கு காரணத்தை இவ்விதம் விளக்குகிறார்: “குடும்பத்திற்குள் சரியான நடத்தையைப்பற்றிய தராதரங்கள் கற்றுக்கொடுக்கப்படுவதில்லை.” இதைச் செய்வதற்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். நம் பிள்ளைகள் எவ்விதம் வாழவேண்டும் என்று நாம் விரும்புகிறோமோ அப்படிப்பட்ட வாழ்க்கையை நாம் வாழ்ந்துகாட்ட வேண்டும்; அதனால் நம் வாழ்க்கை எவ்வளவு சந்தோஷமாயிருக்கிறது என்பதை அவர்கள் காணவேண்டும். நாம் அவர்களுக்கு சரியான நடத்தையைப்பற்றிய தராதரங்களைக் கற்றுத்தரவில்லையென்றால், அவர்கள் அவற்றை பின்பற்றவேண்டும் என்று எப்படி எதிர்பார்க்கலாம்?
அமெரிக்க பள்ளி ஆசிரியர்களுக்காக பிரசுரிக்கப்படும் டுடே என்ற பத்திரிகை இவ்விதம் சொல்கிறது, “தங்களை தோல்வி அடைந்தவர்களாக கருதுபவர்களுக்கும்,” “பாதுகாப்பை தேடக்கூடியவர்களுக்கும், நெருங்கிய உறவை நாடுபவர்களுக்கும், சமுதாய அங்கீகாரத்தை நாடுபவர்களுக்கும்,” ரவுடி கும்பல்கள் கவர்ச்சியாகத் தோன்றுகின்றன. நம்முடைய பிள்ளைகளுக்கு, பாதுகாப்பு, குடும்பத்திலும், தங்களுடைய சொந்த வாழ்விலும் மிகப்பெரிய வெற்றி அடைந்திருக்கின்றனர் என்ற உணர்ச்சி, போன்ற எல்லாவற்றையும் நம் வீட்டிலே அளிப்போம் என்றால், அவர்கள் ரவுடி கும்பல்களின் பொய் வாக்குறுதிகளால் ஈர்க்கப்படமாட்டார்கள்.
பெற்றோருடைய வீட்டின் கதவுகளைத்தட்டி, அவர்கள் பிள்ளைகள் பிரச்சினையில் சிக்கியிருக்கிறார்கள் என்று சொல்லும்போது, அவர்கள் முகங்களில் ஏற்படும் அதிர்ச்சியை தான் பலமுறை கவனித்திருப்பதாக கலிஃபோர்னியா போலீஸின் ரவுடி கும்பல் எதிர்ப்பு பிரிவின் தலைவர் சொல்கிறார். நன்றாக அறிந்திருப்பதாக தாங்கள் எண்ணும் தங்கள் பிள்ளைகளா இப்படியொரு காரியத்தை செய்தார்கள் என்பதை அவர்களால் நம்பமுடிவதில்லை. ஆனால், அவர்களின் பிள்ளைகள் புதிய நண்பர்களோடு சேர்ந்து மாறிவிட்டனர். இதைப் பெற்றோர் கவனிக்கத் தவறிவிட்டனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை மிக அவசியம்
ரவுடி கும்பல்களின் நடவடிக்கைகள் இருக்கும் இடங்களில் வசிக்கும், வாலிபர்களும் வயது வந்தவர்களும் பகுத்துணர்வுடன் செயல்பட்டு, ரவுடி கும்பலுக்கு சவால் விடுவதை அல்லது அவர்களை பயமுறுத்துவதை தவிர்க்கவேண்டும். ஒரு கூட்டமாக செல்வதை தவிர்க்கவேண்டும், அவர்களைப்போல் தோற்றமளிப்பது, அல்லது நடந்துகொள்வது, அவர்களுடைய பாணி மற்றும் நிறத்தில் உடை அணிவது போன்றவற்றை தவிர்க்கவேண்டும். அவர்களைப்போல் நீங்கள் நடந்துகொண்டால் அவர்களுடைய எதிரி கும்பலின் இலக்காவீர்கள்.
ஒருவேளை ஒரு நபர், தான் உடை உடுத்துவதிலும் தன்னுடைய நடவடிக்கைகளிலும் ஒரு ரவுடி கும்பலின் பாகமாக இருப்பதற்கு விரும்புவதைப்போல் காட்டிக்கொள்வார் என்றால், அதன் அங்கத்தினர் அவரை தங்களுடைய பாகமாவதற்கு வற்புறுத்த ஆரம்பித்துவிடுவர். சிகாகோவில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர், தங்களுடைய இடத்திலிருக்கும் ரவுடி கும்பலின் எண்ணங்களைப் புரிந்துகொள்வது அவசியம் என்பதை பின்வருமாறு எடுத்துச்சொன்னார். அவர் கண்ட விஷயம்: ‘நான் என்னோட தொப்பிய வலது பக்கமாக திருப்பி அணிந்தால் அவங்க, தங்களை அவமதிச்சதா நெனக்கிராங்க.’ அது வன்முறைக்கு வழி நடத்தக்கூடும்!
உங்கள் பிள்ளைகளிடத்தில் அன்னியோன்னியமாய் பழகுங்கள்
“நம்ம பிள்ளைகளைப்பத்தி, நாம நல்லா தெரிஞ்சுக்கணும், அவங்க என்ன நெனக்கிராங்க என்பதையும் என்ன செய்றாங்க என்பதையும் தெரிஞ்சுக்கணும். அவங்களோட வாழ்க்கையில தனிப்பட்ட அக்கறை காட்டலைன்னா, நாம் அவங்களுக்கு உதவவே முடியாது,” என்று ஒரு தாய் குறிப்பிட்டார். இன்னொருவர் குறிப்பிட்டது என்னவென்றால் ரவுடி கும்பல் பிரச்சினையை பெற்றோர் சரியானபடி கையாளவில்லை என்றால் அதை நிறுத்தவே முடியாது. அந்தத் தாய் தொடர்ந்து இவ்விதம் குறிப்பிட்டார்: “நாம் அவங்க மேல் பாச மழை பொழிவோம். அவங்க அழிஞ்சாங்கன்னா அது நம் அழிவு.”
நம் பிள்ளைகளின் நண்பர்களைப்பற்றியும், பள்ளி முடிந்தபின் எங்கே செல்கிறார்கள் என்பதும், மாலை வேளையில் சூரிய அஸ்தமனத்திற்குபின் எங்கு இருக்கிறார்கள் என்பதும் நமக்குத் தெரியுமா? தங்கள் பிள்ளைகள் பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும்போது எல்லா தாய்மார்களும் வீட்டில் இருக்க முடியாது என்பது உண்மைதான். ஆனால் ஒற்றை பெற்றோரான தனி தாய்மார்கள், வாடகை கொடுக்கவும் தங்கள் பிள்ளைகளுக்கு உணவு வழங்கவும் அரும்பாடுபடும் அதே சமயத்திலே, மதியம் பள்ளியிலிருந்து திரும்பியவுடன் பிள்ளையை கவனித்துக்கொள்ள மற்ற தாய்மார்களோடு அல்லது தான் நம்பக்கூடிய வேறு யாரிடமாவது ஏற்பாடு செய்யலாம்.
ரவுடி கும்பல்களின் நடவடிக்கை மிக அதிகம் இருக்கும் இடத்தில் வாழும் ஒருவரிடம் அவருடைய பிள்ளைகளை எவ்விதம் ரவுடி கும்பல்களிடமிருந்து பாதுகாக்க முடிகிறது என்று கேட்கப்பட்டது. அவர் தன் மகனை, அருகாமையில் இருக்கும் பகுதிகளுக்கு அழைத்துச் சென்று ரவுடி கும்பல்களின் நடவடிக்கையின் விளைவுகளை விவரித்துக்காட்டுவதாக சொன்னார். அவர்களுடைய சின்னங்கள் மற்றும் இடிந்து கிடக்கும் கட்டடங்களைக் காண்பித்து இவ்விதம் சொல்வார், “இந்த இடம் அவ்வளவு பாதுகாப்பா தெரியல, ரவுடி கும்பல் வெட்டியா பொழுதுப்போக்கிகிட்டு திரியிறாங்க எதையும் அவங்க உருப்படியாக செய்றதில்ல. அதன் பின், பைபிள் நியமங்களின்படி வாழ்ந்தால் அவனுக்கு இப்படியொரு நிலை வராது என்று விவரித்துக் கூறுவேன்.”
மிக சாதாரண காரியமான, பிள்ளைகளின் வீட்டுப்பாடத்தில் உண்மையான அக்கறை காட்டுவது அவர்களுக்கு ஒரு பாதுகாப்பாக இருக்கும். அவர்களுடைய பள்ளியில் பெற்றோரின் இரவு அல்லது வேறு ஏதாவது சந்தர்ப்பத்தில் பெற்றோர்கள் வகுப்பறைக்கு வந்து ஆசிரியர்களிடம் பேசுவதற்கு அழைக்கப்பட்டால் கட்டாயம் அங்கு செல்லுங்கள். உங்கள் பிள்ளைகளின் ஆசிரியர்களைத் தெரிந்துகொள்ளுங்கள், உங்கள் பிள்ளைமேல் உங்களுக்கு இருக்கும் அக்கறையையும் அவன் அல்லது அவளது பள்ளி படிப்பைப்பற்றிய உங்கள் ஆர்வத்தையும் அவர்கள் தெரிந்துகொள்ளட்டும். ஒருவேளை பள்ளியில் அப்படிப்பட்ட பெற்றோர் வந்து பார்க்கக்கூடிய ஏற்பாடு இல்லையென்றால், உங்கள் பிள்ளை எவ்விதம் முன்னேறி வருகிறான் என்பதைப்பற்றியும் எவ்விதம் உங்களால் இவ்விஷயத்தில் உதவி செய்யமுடியும் என்பதைக் குறித்தும் பள்ளி ஆசிரியர்களிடம் பேசுவதற்கு ஏதாவது சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.
ஒரு பெரிய அமெரிக்க நகரத்தில் செய்யப்பட்ட ஆய்வில் தெரியவருவது என்னவென்றால், குடும்ப அங்கத்தினர், பிள்ளைகளுக்கு வீட்டுப்பாடம் செய்வதில் உதவி செய்து அல்லது உற்சாகப்படுத்திய குடும்பங்களிலிருந்து 9 சதவீதத்தினர் மட்டுமே ரவுடி கும்பலில் சேர்ந்தனர். ஆனால் இப்படிப்பட்ட கவனிப்பு இல்லாத குடும்பங்களிலிருந்து அதைப்போல இரு மடங்கு, அதாவது 18 சதவீதத்தினர் ரவுடி கும்பலில் சேர்ந்தனர். நம்முடைய குடும்பம் அன்பாகவும், அன்னியோன்னியமாகவும் இருந்து, நலந்தரும் காரியங்களை ஒன்றாக சேர்ந்து செய்து வருவோமென்றால், ரவுடி கும்பல் அளிக்கும் பொய் வாக்குறுதிகளால் பிள்ளைகள் வசீகரிக்கப்படும் அபாயம் குறைகின்றது.
நம் பிள்ளைகளின் உண்மையான தேவை
நம் பிள்ளைகளுக்கும், நாம் வாஞ்சிக்கும் அதே அன்பு, தயவு, பாசம் ஆகியவை தேவை. அநேக பிள்ளைகள் பாசமாகவும் அன்புடனும் அணைக்கப்பட்டதேயில்லை அல்லது அவர்கள் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என்று சொல்லப்பட்டதில்லை. அப்படிப்பட்ட நிலை நம் பிள்ளைகளுக்கு ஒருபோதும் ஏற்படாமலிருப்பதாக! நாம் அவர்களை அணைத்துக்கொள்வோமாக, அவர்களை நேசிக்கிறோம் என்று சொல்வோமாக, அதோடுகூட, எவ்விதம் ஒழுக்க ரீதியில் அவர்கள் வாழவேண்டும் என்று போதித்தோமோ அதேவிதமாக அவர்கள் வாழ்வதைப் பார்ப்பதற்கு முயற்சி செய்வோம். அவர்கள் நமக்கு விலைமதிப்பானவர்கள், அவர்களை வேறு எவ்விதமும் கையாளக்கூடாது.
ஜெரால்ட் என்ற முன்னாள் ரவுடி கும்பல் அங்கத்தினர் இவ்விதம் விவரிக்கிறார்: “நான் முன்மாதிரியா கவனிச்சு நடக்க எனக்கு அப்பா இல்லை; ஆகவே, என் வாழ்க்கையில இந்த வெறுமையை நிறைவு செய்யத்தான் ரவுடி கும்பலுக்கு போனேன்.” அவன் 12 வயதில் போதைப்பொருட்களை உபயோகிக்க ஆரம்பித்தான். ஆனால், 17 வயதாக இருக்கும்போது அவன் தாய் யெகோவாவின் சாட்சிகளோடு ஒழுங்காக வாராந்திர வீட்டு பைபிள் படிப்பை ஆரம்பித்தார். அவர் தன்னுடைய வாழ்க்கையில் பைபிளின் நியமங்களை பொருத்தினார். அதை கவனித்த மகன் இவ்விதம் சொல்கிறான்: “அம்மா திடீர்ன்னு மாறினத கவனிச்சேன், ‘இதுக்கு ஏதோ காரணம் இருக்குன்னு நெனச்சேன்.’” அவருடைய நல்ல உதாரணத்தால் தன் வாழ்க்கையில் மாற்றத்தைச்செய்ய உந்துவிக்கப்பட்டான்.
நம்முடைய நல்ல முன் உதாரணத்தை பிள்ளைகள் காணவேண்டும். அவர்கள் எவ்விதம் வாழவேண்டும் என்று சொல்கின்றோமோ அப்படியே நாம் வாழ்கிறோம் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் தங்களுடைய குடும்பத்தைக் குறித்து நல்லவிதமாக உணரவேண்டும்; குடும்பத்தில் என்ன இருக்கிறது என்பதற்காக அல்ல, ஆனால் அது என்ன செய்கின்றது என்பதற்காக அவ்விதம் உணரவேண்டும். பிள்ளைகள் தங்களுடைய ஒழுக்க தராதரங்களைக் குறித்து பெருமையாக உணருவதற்கு உதவி செய்யப்படவேண்டும். முன்னாள் லாஸ் ஏஞ்சலிஸின் மாவட்ட உயர்நீதி மன்ற வழக்குரைஞர் ஐரா ரீனர் இவ்விதம் தெளிவுபடுத்தினார்: “பிள்ளைகள் ரவுடி கும்பலை அணுகுவதற்கு முன்பாக நாம் பிள்ளைகளை அணுக வேண்டும்.”
அவர்களது தேவையை நிறைவு செய்தல்
நம்முடைய பிள்ளைகளுக்கு நாம் அளிக்கும் பொருளாதாரக் காரியங்கள் அதிமுக்கியத்துவம் வாய்ந்தவையல்ல. எது உண்மையில் முக்கியத்துவம் வாய்ந்தது என்றால், நல்ல ஒழுக்க தராதரங்கள் நிறைந்த, அன்பான, அக்கறையுள்ள வயதுவந்தவர்களாக அவர்கள் வளருவதற்கு நாம் உதவி செய்வதே. நீதிமானாகிய யாக்கோபு தன் இளம் பிள்ளைகளை, “தேவன் [எனக்கு] அளித்த பரிசான பிள்ளைகள்,” என்று அழைத்ததாக பைபிள் கூறுகிறது. (ஆதியாகமம் 33:5, NW) கடவுள் நமக்களித்த பரிசுகளாக நாமும் நம்முடைய பிள்ளைகளை நோக்குவோம் என்றால், அவர்களை பொருத்தமாகவே அன்பாக நடத்தி, உண்மையாகவும், நேர்மையுடனும், ஒழுக்கமுள்ள வாழ்வையும் வாழ அவர்களுக்கு கற்றுக்கொடுப்போம்.
இதைச் செய்வதன்மூலம் நம் சொந்த வாழ்க்கையை நம் பிள்ளைகளுக்கு நல்ல முன்மாதிரியாக வைக்க இயலும். இதன் மூலம், தங்களுடைய குடும்பத்தைப்பற்றி சரியான ஆரோக்கியமான பெருமையை அவர்கள் பெற்றுக்கொள்வார்கள்; குடும்பத்தின் பொருளாதாரக் காரியங்களைப்பற்றி அல்ல, அதற்கு பதில் எப்படிப்பட்ட ஜனங்களாக நாம் இருக்கிறோம் என்பதைப்பற்றி பெருமைப்படுவார்கள். ஆகவே ஆதரவிற்காக, தெருக்களில் இருப்போரிடம் அவர்கள் செல்லும் வாய்ப்பு குறையும்.
தன்னுடைய வாலிபப் பருவத்தைக் குறித்து ஒரு தாத்தா இவ்விதம் கூறினார்: “குடும்பத்திற்கு மானக்கேடு உண்டாக்கும் எந்தக் காரியத்தையும் நான் செய்துவிடமாட்டேன்.” அவர் இவ்விதமாய் உணர்ந்ததற்கான காரணம் தன் பெற்றோர் தன் மேல் வைத்திருந்த அன்பை தான் நன்றாக அறிந்திருந்ததாக ஒப்புக்கொண்டார். தங்களுடைய பெற்றோரிடமிருந்து அன்பைப் பெறாத பெற்றோரால், அப்படிப்பட்ட அன்பை தங்கள் பிள்ளைகளிடம் காட்டுவது கடினம் என்பது உண்மைதான். ஆனாலும், தங்கள் பிள்ளைகளிடத்தில் அன்பை காட்டுவதற்கு பெற்றோர் பிரயாசப்படவேண்டும்.
இது ஏன் அவ்வளவு முக்கியமானது? ஏனென்பதைக் குறித்து உடா கேங் இன்வெஸ்டிகேடர்ஸ் அஸோஸியேஷன் பிரசுரித்த, “வாட்ஸ்அப்” பத்திரிகை பின்வருமாறு சொன்னது: “வாலிபர்கள் நேசிக்கப்பட்டதாகவும், பாதுகாப்பாகவும் உணர்ந்தால், அதாவது பணவிஷயத்தில் பாதுகாப்பாக அல்ல அதற்கு பதில் மனதளவில் அவ்விதம் உணர்ந்தால், ரவுடி கும்பலுக்கு செல்வதற்காக அவர்களை இழுக்கும் தேவைகள் மறைந்து போகின்றன.”
சில வாசகர்கள் அப்படிப்பட்ட அன்பான குடும்பங்கள் அரிதாகவே காணப்படுவதாக நினைக்கலாம். ஆனால் அப்படிப்பட்ட குடும்பங்கள் இருக்கின்றன. உலகம் முழுவதிலும் இருக்கும் யெகோவாவின் சாட்சிகளின் சபைகளில் அப்படிப்பட்ட குடும்பங்களை நீங்கள் காணலாம். இந்தக் குடும்பங்கள் பரிபூரணமானவை அல்ல என்பது உண்மைதான்; ஆனால் அவைகளுக்கு ஒரு பெரிய அனுகூலமிருக்கிறது: குழந்தை வளர்ப்பைப்பற்றி பைபிள் என்ன கூறுகிறது என்பதைப் படித்து பைபிளின், நியமங்களை தங்களுடைய வாழ்க்கையில் பொருத்த முயற்சி செய்கின்றனர். முக்கியமாக, இந்த நியமங்களைத் தங்கள் பிள்ளைகளுக்குப் போதிக்கின்றனர்.
ஜர்னல் ஆஃப் த அமெரிக்கன் மெடிகல் அஸோசியேஷன் வெளியிட்ட பின்வரும் வாசகத்தை யெகோவாவின் சாட்சிகள் ஒப்புக்கொள்கின்றனர்: “வளர் இளமைப் பிராயத்திலிருக்கும் வாலிபர்கள், சிலவற்றை, ‘வேண்டாம்’ என்று சொல்லவேண்டும் என்று ஒருவர் எதிர்பார்த்தால், அதற்கு முன்பாக அவர்களுக்கு ‘வேண்டும்’ என்று சொல்லக்கூடிய வேறு சிலவற்றை அளித்திருக்கவேண்டும்.” இதை வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டுமென்றால், நம் பிள்ளைகள் நன்மையான மற்றும் ஆரோக்கியமான காரியங்கள்தான் தனக்கு தேவை என்று கேட்கவேண்டும் என நாம் விரும்பினால், நாம்தான் அவர்களை அந்தப் பாதையில் நடத்தவேண்டும்.
நம்மில் ஒருவரும், ஒரு தந்தை குறிப்பிட்ட கீழ்கண்ட வார்த்தைகளைச் சொல்ல விரும்பமாட்டோம்: ‘என் மகன், தான் ஒரு நாளும் அனுபவிக்காத நட்பையும் மரியாதையையும் தன்னோட ரவுடி கும்பல்லதான் கெடைக்கிறதா நெனக்கிறான்.’ இதைப்போலவே, பின்வருமாறு குறிப்பிட்ட ஒரு வாலிபனைப்போல் நம் பிள்ளைகள் சொல்வதைக் கேட்க நம்மில் ஒருவரும் விரும்பமாட்டோம்: “எனக்குன்னு ஒரு குடும்பம் வேணும், அதனாலதான் நான் ரவுடி கும்பல்ல சேர்ந்துட்டேன்.”
பெற்றோர்களாகிய நாம்தானே அந்தக் குடும்பமாக இருக்க வேண்டும். நம்முடைய அருமையான பிள்ளைகள் அதின் பாகமாக இருப்பதற்கு மனமார்ந்த முறையிலும் அன்புடனும் நம்மால் இயன்ற எல்லாவற்றையும் செய்யவேண்டும்.
[பக்கம் 10-ன் பெட்டி/படங்கள்]
அக்கறையுள்ள பெற்றோர் கவனிப்பதற்கான பட்டியல்
✔ உங்கள் பிள்ளைகளோடு வீட்டில் பொழுதுபோக்குங்கள், குடும்பமாக சேர்ந்து எல்லாவற்றையும் செய்யுங்கள்
✔ உங்கள் பிள்ளைகளின் நண்பர்கள் யார் என்பதையும் அவர்களுடைய குடும்பத்தைப்பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள், உங்கள் பிள்ளைகள் எங்கே செல்கிறார்கள் என்பதையும் யாரோடு போகிறார்கள் என்பதையும் கவனியுங்கள்
✔ உங்கள் பிள்ளைகள் எந்தப் பிரச்சினையை குறித்தும் எந்தச் சமயத்திலும் உங்களிடத்தில் பேச வரலாம் என்பதைத் தெரிவியுங்கள்
✔ மற்ற ஜனங்கள், அவர்களுடைய உரிமைகள், அவர்களுடைய எண்ணங்கள் ஆகியவற்றை மதிக்க பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுங்கள்
✔ அவர்களுடைய ஆசிரியர்களிடம் அறிமுகமாவதன் மூலம் உங்கள் பிள்ளைகளை ஆதரியுங்கள், அதே நேரத்தில் ஆசிரியர்களும் நீங்கள் அவர்களை போற்றுகிறீர்கள் என்பதையும் அவர்களுடைய முயற்சிகளை ஆதரிக்கிறீர்கள் என்பதையும் அறியட்டும்
✔ பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு சத்தம் போடுவது அல்லது வன்முறையான நடவடிக்கை போன்றவற்றில் ஈடுபடாதீர்கள்
உங்களுடைய பிள்ளைகள் உங்கள் மனமார்ந்த பாசத்தையே நாடுகிறார்கள்
[பக்கம் 9-ன் படம்]
உங்களுடைய பிள்ளைகளின் வீட்டுப்பாடத்தில் நீங்கள் ஆர்வம் காட்டுவது பாதுகாப்பளிப்பதாக இருக்கும்