உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g98 4/22 பக். 3-5
  • பரவிவரும் பிரச்சினை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பரவிவரும் பிரச்சினை
  • விழித்தெழு!—1998
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • கடுந்துயர் ஏற்படுத்தும் பிரச்சினை
  • ரவுடி கும்பல்களைப்பற்றி தெரிந்திருக்க வேண்டியவை
    விழித்தெழு!—1998
  • ரவுடி கும்பல்களிடமிருந்து நம் பிள்ளைகளை பாதுகாத்தல்
    விழித்தெழு!—1998
  • பெண் கும்பல்கள்—பீதியுண்டாக்கும் ஒரு போக்கு
    விழித்தெழு!—1996
  • “எனக்கு நானே குழி வெட்டிக்கொண்டு இருந்தேன்”
    பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது
மேலும் பார்க்க
விழித்தெழு!—1998
g98 4/22 பக். 3-5

பரவிவரும் பிரச்சினை

பாழடைந்த ஒரு பாலத்திற்கு கீழே குப்புற கிடந்த ஒரு சிறுவனை கண்டுபிடித்தார்கள், ராபர்ட் என்ற அச்சிறுவனுக்கு 11 வயது மட்டுமே. அவனுடைய பின்னந்தலையில் புல்லட் ஏற்படுத்திய இரண்டு துளைகள் இருந்தன. அவனுடைய, வாலிப ரவுடி கும்பலே அந்தச் சிறுவனின் கொலைக்குக் காரணம் என்று நம்பப்படுகிறது.

பதினைந்து வயது அலெக்ஸ் ரவுடி கும்பலில் ஒரு அங்கத்தினனாக முயன்றான், அவ்வாறு நடந்திருந்தால் ஒருவேளை சீக்கிரத்திலேயே கல்லறைக்கு போயிருப்பான். ஆனால் அந்தச் சமயத்தில் அவனுடைய நண்பன் இறப்பதைக் கண்ணால் கண்டான், பின்னர் இவ்விதம் யோசித்தான்: ‘நாளை எனக்கும் இதுதான் முடிவுன்னா வேண்டவே வேண்டாம்.’

வன்முறை ரவுடி கும்பல்கள் உலகம் முழுவதும் பரவியிருக்கின்றன; இவை முன்பு லாஸ் ஏஞ்சலிஸில் பிரபலமாக அறியப்பட்டிருந்த பிளட்ஸ் மற்றும் க்ரிப்ஸோடு தொடர்புபடுத்தப்பட்டன. ஆனால், அதிசயப்படும் விதமாக கும்பல்கள் எங்கேயிருந்தாலும் ஒரேவிதமாகவே செயல்படுகின்றன.

இங்கிலாந்தின் “டெடி பாய்ஸ்” 1950-களில் உலகை அதிர்ச்சியடைய வைத்தனர். அப்பாவி ஜனங்கள்மீது “பயங்கர காயங்களை ஏற்படுத்த” அவர்கள் கோடாலிகள், கத்திகள், சைக்கிள் செயின்கள், பிற ஆயுதங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தினர் என்று த டைம்ஸ் என்ற லண்டன் பத்திரிகை குறிப்பிட்டது. ‘கத்திச் சண்டைகள் நடந்தன, சிற்றுண்டிச்சாலைகளும் காப்பி கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டன.’ ஜனங்கள் துன்புறுத்தப்பட்டனர், திருடப்பட்டனர், அடிக்கப்பட்டனர் சில நேரங்களில் கொல்லவும்பட்டனர்.

ஜெர்மனியைச் சேர்ந்த ஹாம்பர்க் நகரத்தில் வெளியாகும் டீ வெல்ட் செய்தித்தாள் இவ்விதம் குறிப்பிட்டது: சமீப காலங்களில் “டிஸ்கோ நடன அரங்கிற்கு போகும் வழியில் அல்லது வீட்டிற்கு திரும்பிச் செல்லும் வழியில்” இளைஞர்கள், “பேஸ்பால் மட்டைகள், கத்திகள், துப்பாக்கிகளைக்கொண்டு” ரவுடி கும்பல்களால் தாக்கப்பட்டிருக்கிறார்கள். மூனிச்சின் ஸுட்டைஷி ஸைட்டுங் என்ற செய்தித்தாள் பெர்லினிலுள்ள ஸ்கின்ஹெட்ஸ் என்பவர்களைப் பற்றி இவ்விதம் அறிவிக்கின்றது: அவர்கள் “வீடில்லாதவர்கள், ஊனமுற்றோர், ஓய்வுபெற்ற பெண்கள் போன்ற பலவீனமானவர்களை குறிவைத்துத் தாக்குகிறார்கள்.”

வளர் இளம்பருவத்தினர் ரவுடி கும்பலில் சேருவது என்ற பிரச்சினை புதிதாக ஆரம்பமாகியிருக்கிறது, ஆனால் அது வேகமாக வளருகின்றது என்று ஸ்பெய்னிலுள்ள விழித்தெழு! நிருபர் அறிவிக்கிறார். மாட்ரிட்டிலிருந்து வரும் ஏபிஸி என்ற செய்தித்தாள் கீழ்க்கண்ட தலைப்புச் செய்தியை வெளியிட்டது, “ஸ்கின்ஹெட்ஸ்—தெருக்களில் தோன்றியிருக்கும் புதிய பயங்கரம்.” ஸ்பெய்னிலிருக்கும் ஸ்கின்ஹெட்ஸின் பழைய அங்கத்தினர் ஒருவர் இவ்விதம் குறிப்பிட்டார்: “வெளிநாட்லேந்து வந்திருக்கும் பன்னிங்க, விபச்சாரிகள், ஒத்தபாலினத்தவர்” போன்ற ஜனங்களை அவர்களாகவே கண்டுபிடித்துவிடுவதாகக்கூறி, பின்வருமாறு தொடர்ந்தார்: “ராத்திரியில வன்முறையில்லன்னா அதில திரில்லே இல்ல.”

தென் ஆப்பிரிக்காவிலுள்ள கேப் டைம்ஸ் குறிப்பிடுவது என்னவென்றால் அங்கு நடக்கும் அநேக வன்முறைகளுக்கு “கொடிய ரவுடி கலாச்சாரமே மூலகாரணம்.” கேப் டௌனில் வெளியான ஒரு புத்தகம் இவ்விதம் குறிப்பிடுகிறது: தென் ஆப்பிரிக்க ரவுடி கும்பல்கள் ஏழை குடியிருப்புகளில், “அட்டைகளைப்போல் ஒட்டிக்கொண்டு, தாங்கள் வாழும் இடத்திலுள்ள சமுதாயத்தினரிடமே கொள்ளையடித்து, கற்பழித்து, தங்களுடைய எல்லைகள், மார்க்கெட்கள், பெண்கள் போன்ற காரணங்களுக்காக கும்பல் சண்டைகளில் ஈடுபட்டனர்.”

ஆ எஸ்டாடொ ட எஸ். பவ்லூ என்ற பிரேஸில் செய்தித்தாள் இவ்விதம் குறிப்பிடுகிறது: ரவுடி கும்பல்கள் “பயமுறுத்தும் அளவில் பன்மடங்காகியிருக்கின்றன.” அவை போட்டி கும்பல்கள், பணக்கார வாலிபர்கள், மற்ற இனத்தவர், குடியேறிய ஏழை தொழிலாளிகள் ஆகியோரை தாக்குகின்றன என்று அது தெரிவித்தது. அது தொடர்ந்து இவ்விதம் அறிவித்தது, ஒரு நாள் அநேக கும்பல்கள் சேர்ந்து ஒரு இழு வலையைப்போல் செயல்பட்டு ரியோ டி ஜனீரோவின் முக்கியமான இடத்தை ஒரு “யுத்த களமாக்கினார்கள், கடற்கரைக்கு வந்த ஜனங்களை கொள்ளையடித்தனர் . . . , தங்களுக்குள் சண்டையிட்டன.” பிரேஸிலில் இருந்து வந்த இன்னொரு அறிக்கையின்படி, பெரிய நகரங்களாகிய சாவோ பாலோ, ரியோ டி ஜனீரோ போன்றவற்றிலும் சிறிய ஊர்களிலும் ரவுடி கும்பல்களின் எண்ணிக்கை பெருகுகிறது.

கனடாவில் வெளியான மக்லீன்ஸ் 1995-ஆம் ஆண்டு இவ்விதம் அறிவித்தது, போலீஸ் கணக்கின்படி கனடாவில் வின்னிபெக் என்ற இடத்தில் குறைந்தது எட்டு ரவுடி கும்பல்களாவது சுறுசுறுப்பாக இயங்குகின்றன. அமெரிக்க தென்மேற்கு பகுதிகளில், ரவுடி கும்பல்கள் அவற்றின் பிரத்தியேகமான உடைகளையும் சின்னங்களையும் ஒதுக்கீட்டுப்பகுதிகளில் உள்ள இந்தியர்களுக்கு அறிமுகப்படுத்தியிருப்பதை சில அமெரிக்க மாகாணங்களிலுள்ள செய்தித்தாள்கள் படத்துடன் பிரசுரித்தன.

சென்ற வருடம் நியூ யார்க்கில் ரவுடி கும்பல்களால், குறுகிய காலத்தில் பெரும் எண்ணிக்கையில் வன்முறை சம்பவங்கள் ஏற்பட்டன. லாஸ் ஏஞ்சலிஸில் பிரபலமாகியிருந்த பிளட்ஸ் மற்றும் க்ரிப்ஸ் கும்பல்களின் அங்கத்தினரே இவற்றில் ஈடுபட்டதாகச் சொல்லப்படுகிறது. ஜூலை முதல் செப்டம்பர் வரை நிகழ்ந்த ரவுடி கும்பல்களுடைய நேரடியான நடவடிக்கைகளின் தொடர்பாக போலீஸார் 702 பேரை கைது செய்ததாக நியூ யார்க்கின் மேயர் குறிப்பிடுகிறார்.

இந்தப் பிரச்சினை பெரிய நகரங்களில் மட்டுமே காணப்படுவதில்லை. “வளரிளம்பருவத்தினரிடையே வன்முறை அதிகரித்து, போதைப் பொருட்களின் உபயோகம் அதிகமாகி நம்பிக்கையின்மை பெருகியிருக்கிறது” என்று அமெரிக்க ஐக்கிய மாகாணங்களின் மத்திய பாகத்தில் பிரசுரிக்கப்படும் குவாட்-சிடி டைம்ஸ் குறிப்பிடுகிறது.

கடுந்துயர் ஏற்படுத்தும் பிரச்சினை

ஒரு ரவுடி கும்பல் சாதாரண நண்பர்களின் கூட்டத்தில் ஆரம்பமானது என்று சொல்லப்படுகிறது. ஆனால், அக்கும்பல் தலைவனுடைய பெயர் பிரபலமானவுடன் அதன் வன்முறையும் அதிகரித்தது. அந்தக் கும்பலின் தலைவன் தன் பாட்டி வீட்டில் வசித்தான், அந்த மூதாட்டி வீட்டிலிருக்கும்போதே அந்த வீடு பலமுறை துப்பாக்கி குண்டுகளால் சுடப்பட்டுள்ளது. 50-க்கும் அதிகமான புல்லட் ஓட்டைகள் இருந்தன என்று ஒரு செய்தித்தாள் அறிவிக்கிறது. அந்த மூதாட்டியின் பேரனுடைய ரவுடி கும்பல், செய்ததாக எண்ணப்படும் நடவடிக்கைகளுக்கு பதிலடியாக அவ்விதம் சுடப்பட்டதாக எண்ணப்படுகிறது. இதற்கும் மேலாக, அந்தக் கும்பலின் தலைவனுடைய அண்ணன், ரவுடி கும்பல் சம்பந்தப்பட்ட நடவடிக்கையில் ஈடுபட்டதால் சிறையில் இருந்தான்; வன்முறையை தவிர்ப்பதற்காக அந்த இடத்தைவிட்டே சென்றுவிட்டிருந்த அவர்களுடைய ஒரு நெருங்கிய உறவினர், வீட்டிற்கு வந்து எல்லாரையும் பார்த்துவிட்டுப்போகலாம் என்று வந்தபோது கடந்துசென்ற வேனிலிருந்து யாரோ அவரை சுட்டுக்கொன்றார்.

ஒரு ரவுடி கும்பல், லாஸ் ஏஞ்சலிஸில் ஒரு காரை சுட்டதால் அதில் இருந்த மூன்று வயது குழந்தை இறந்தது; அதன் தாயும் அத்தாயின் நண்பனும் தவறாக ஒரு தெருவிற்குள் காரை திருப்பியதால் இச்சம்பவம் நடந்தது. தன்னுடைய மாணவர்கள் தங்களுடைய வாழ்க்கையை எவ்விதம் மேம்படுத்திக்கொள்வது என்று போதித்துக்கொண்டிருந்த ஒரு ஆசிரியர், பள்ளிக்குள் பாய்ந்து வந்த துப்பாக்கி குண்டுக்கு இரையானார். ரவுடி கும்பலோடு எந்தவிதமான தொடர்பும் இல்லாத மற்ற அநேகர் இவ்விதம் அவற்றின் தாக்குதலுக்கு ஆளாகி கொல்லப்பட்டிருக்கின்றனர். நியூ யார்க்கிலுள்ள புரூக்லின் என்ற இடத்தில் ஒரு தாய் தன் அயலகத்தார் மத்தியில் சோகமே உருவானார்—அவருடைய மூன்று வாலிப மகன்களை ரவுடி கும்பல்களின் வன்முறையினால் இழந்தாள்.

உலகம் முழுவதிலும் இளைஞர் மத்தியில் இப்படிப்பட்ட வன்முறை ஏற்பட காரணம் என்ன? இதிலிருந்து அன்பான நம் குழந்தைகளை எவ்விதம் பாதுகாக்கலாம்? ரவுடி கும்பல் எவ்விதம் ஆரம்பிக்கிறது, ஏன் அநேகர் அதில் சேர்ந்துகொள்கின்றனர்? இப்படிப்பட்ட கேள்விகள் பின்வரும் கட்டுரைகளில் கலந்தாலோசிக்கப்படுகின்றன.

[பக்கம் 3-ன் படத்திற்கான நன்றி]

Scott Olson/Sipa Press

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்