ரவுடி கும்பல்களைப்பற்றி தெரிந்திருக்க வேண்டியவை
வேட் என்ற கலிபோர்னியா கும்பலின் முன்னாள் அங்கத்தினர் இவ்விதம் கூறினார்: “நாங்கல்லாம் சாதாரணமாக ஒரே பகுதியில வாழ்ந்தவங்க. நாங்க, ஒண்ணாங்கிளாஸ்லேந்து ஒண்ணாப் படிச்சோம். ஆனா, எங்க வாழ்க்கையில சரியான தீர்மானத்ததான் எடுக்கல.”
ஏறக்குறைய, ஒரே பகுதியில் சாதாரண நண்பர் தொகுதிகளாகத்தான் ரவுடி கும்பல்கள் ஆரம்பமானது. வளர் பருவ வயதினர் அல்லது அதைவிட சிறிய வயதுடையவர்கள் தெருக்களில் குழுவாகக்கூடினர். அவர்கள் ஒரு குழுவாக எல்லா காரியங்களையும் செய்ய ஆரம்பித்தனர், பின்னர், அருகில் இருக்கும் தங்களைவிட நிலையான தொகுதிகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக ஒன்றுபட்டார்கள். வெகு சீக்கிரத்திலேயே அந்தக் குழுவில் மிக அதிகமான வன்முறையில் ஈடுபடும் அங்கத்தினர்கள் நுழைந்ததால் பயங்கரமான குற்றச்செயல்களில் ஈடுபட்டார்கள்.
அடுத்த தெருவிலிருக்கும் இன்னொரு போட்டி கும்பல் இந்தப் புதியவர்களை ஒரு எதிரியாக நோக்கினர். இதனால் கோபம் உருவெடுத்து வன்முறையில் விளைவடைந்தது. சட்டவிரோதமாக போதைப்பொருட்களை விற்பவர்கள், அவற்றை விற்க இந்தக் கும்பலை பயன்படுத்தினர். அதோடு சேர்ந்து மற்ற குற்றசெயல்களும் ஆரம்பமானது.
நண்பர்கள் ஒன்றுசேர்ந்து ஒரு கும்பலை ஆரம்பித்தபோது லூயிஸுக்கு 11 வயதுதான். 12 வயதில் அவன் போதைப்பொருட்களை உபயோகிக்க ஆரம்பித்துவிட்டான். 13 வயதில் முதல் முறையாக கைது செய்யப்பட்டான். கார் திருட்டு, வீடுபுகுந்து திருடுதல், ஆயுதங்களுடன் வழிப்பறி போன்ற செயல்களில் ஈடுபட்டான். ரவுடி கும்பலுடன் சண்டைகளிலும் கலகங்களிலும் ஈடுபட்டதற்காக சிறைக்கு செல்வதும் வெளிவருவதுமாக வாழ ஆரம்பித்தான்.
ரவுடி கும்பல்களின் அங்கத்தினர்களை கவனிக்கும்போது சில சமயங்களில் நமக்கு ஆச்சரியமாக இருக்கும். மார்த்தா என்ற பெண், நல்ல சிகை அலங்காரத்துடன், உயர்நிலைப் பள்ளியில் மிக நல்ல மார்க்குகள் எடுத்து, பள்ளியில் மிகவும் ஒழுங்கானவள் என்று பெயரெடுத்த புத்திசாலிப் பெண். ஆனால் அவள்தான் கஞ்சா, ஹிரோயின், கொக்கெயின் போன்றவற்றை விற்கும் ஒரு ரவுடி கும்பலின் தலைவி. அவளுடைய தோழிகளில் ஒருத்தி பலமுறை சுடப்பட்டு இறந்ததை பார்த்து பயந்துபோன பின்தானே அவள் தன் வாழ்க்கைப்பாணியை மாற்றிக்கொண்டாள்.
ஏன் அவர்கள் ரவுடி கும்பலில் சேர்கிறார்கள்
அன்பிற்காக ஏங்கியே தாங்கள் கும்பலில் சேர்ந்ததாக, சில அங்கத்தினர்கள் சொல்வது ஆச்சரியமாக இருக்கலாம். வீட்டில் கிடைக்காத தோழமையுணர்ச்சிக்காகவும் நெருங்கிய உறவிற்காகவும் அவர்கள் ஏங்கினார்கள். ஜெர்மனியிலுள்ள ஹாம்பர்கில் வெளியாகும், டீ சைட் என்ற செய்தித்தாள் இவ்விதம் குறிப்பிட்டது, இளைஞர்கள், எங்கும் கிடைக்காத பாதுகாப்பு ரவுடி கும்பல்களிடத்தில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அங்கே செல்கின்றனர். எரிக் என்ற முன்னாள் ரவுடி கும்பல் அங்கத்தினர் இவ்விதம் குறிப்பிடுகிறார், வீட்டில் அன்பு கிடைக்கவில்லை என்றால் “வெளியே மேம்பட்டது ஏதாவது கிடைக்குமா என்று தேட ஆரம்பித்துவிடுகிறீர்கள்.”
முன்பு, ஒரு ரவுடி கும்பலின் அங்கத்தினராக இருந்த ஒரு தகப்பன் தன்னுடைய இளம் வயது அனுபவங்களைப்பற்றி இவ்விதம் எழுதினார்: “மோசமான நடத்தை, ரவுடி கும்பல் சண்டைகள், கலகங்கள், காரில் போகும்போது எதிரில் வந்தவரை துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயன்ற கொலை முயற்சி போன்றவற்றிற்காக நான் ஜெயிலுக்கு செல்வதும் வெளிவருவதுமாக இருந்தேன்.” பின்னர், அவருடைய மகனாகிய ராமிரோ பிறந்த பின் பையனோடு அவரால் நேரம் செலவிட முடியவில்லை. ராமிரோ வளர்ந்தபின் அவனும் ஒரு ரவுடி கும்பலில் சேர்ந்து, ஒரு கும்பல் சண்டையின் நிமித்தம் கைது செய்யப்பட்டான். அப்பொழுது அவனுடைய தந்தை அந்த ரவுடி கும்பலைவிட்டு கட்டாயம் வெளியேறவேண்டும் என்று சொன்னபோது அவன் இவ்விதம் கத்தினான்: “அவங்கதான் இப்பொ என் குடும்பம்.”
டெக்ஸாஸ் மருத்துவமனையில் பணிசெய்யும் ஒரு நர்ஸ், ஒரே வருடத்திற்குள், துப்பாக்கியால் சுடப்பட்ட 114 இளைஞர்களிடம் பேசியபின் இவ்விதம் குறிப்பிட்டாள்: “இத என்னால நம்பவே முடியல. அவர்களில் ஒருத்தர்கூட தன்னுடைய அம்மா அல்லது குடும்ப அங்கத்தினரைப் பார்க்கணும்னு கேட்கவேயில்லை.”
குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் நகரத்தில் வறுமை நிலையிலுள்ள பிள்ளைகள் மட்டும்தான் ரவுடி கும்பலில் சேர்கிறார்கள் என்பதல்ல. நகரத்திலுள்ள மிகப் பணக்கார சமுதாயத்திலிருந்தும் மிக ஏழை நிலையிலிருந்தும் வந்த இளைஞர்கள், ஒரே ரவுடி கும்பலில் இருந்ததை கவனித்ததாக, போலீஸ் குறிப்பிட்டதை சில ஆண்டுகளுக்கு முன்பாக கனடா நாட்டு பத்திரிகை மக்லீன்ஸ் விவரித்தது. இப்படிப்பட்ட வித்தியாசமான சூழ்நிலையிலிருந்து வந்த இளைஞர்கள் ஒன்றாக சேர்வதற்கு அடிப்படையில் ஒரு காரணமிருக்கிறது—வீட்டில் கிடைக்காத குடும்பத்தைப் போன்ற ஒற்றுமையை அவர்கள் தேடுகிறார்கள்.
சில இடங்களில், ரவுடி கும்பலில் சேர்வது சாதாரணமாக வாழ்க்கையின் பாகம் என்பதாக இளைஞர்கள் எண்ணுகிறார்கள். பதினாறு வயது ஃபெர்னான்டோ இவ்விதம் விளக்குகிறான்: “கும்பல்ல சேந்துட்டா பிரச்சனைல்லாம் தீந்திடும்னு நெனச்சுக்குறாங்க. அவங்க இப்படித்தான் யோசிக்கிறாங்க: ‘எனக்கு நல்ல கூட்டாளிங்க கெடைப்பாங்க. அவங்கல்லாம் ரொம்ப பெலசாலியா இருப்பாங்க, துப்பாக்கி வைச்சிட்டு இருப்பாங்க. அவங்க என்ன காப்பாத்துவாங்க, யாராலும் என்னை ஒண்ணும் பண்ண முடியாது.’” ஆனால் புதிய அங்கத்தினர் சீக்கிரமே புரிந்துகொள்ளக்கூடிய இன்னொரு உண்மை என்னவென்றால், ஒரு ரவுடி கும்பலில் சேர்வதால் அதனுடைய எதிர் கும்பலுக்கு இலக்காகிவிட நேரிடுகிறது என்பதே.
சாதாரணமாக ரவுடி கும்பல்கள் காணப்படும் இடங்களில், பணப்புழக்கம் மிகக் குறைவாகவும், ஆனால் துப்பாக்கி புழக்கமோ அதிகமாகவும் இருக்கும். பெரிய நகரங்களில் இருக்கும் பள்ளிகளைப் பற்றிய செய்தி அறிக்கை இவ்விதம் தெரிவிக்கிறது, பள்ளி மாணவர்களில் 3-ல் 2-பேர் ஒற்றை பெற்றோர் குடும்பத்தில் வசிக்கின்றனர். சில சமயங்களில் மாணவியின் ஒற்றை பெற்றோர் போதை மருந்திற்கு அடிமையானவராக, ஒருவேளை இரவில் வீட்டிற்கு வராதவராக இருக்கலாம்; அந்த மாணவி, தான் காலை பள்ளிக்குச் செல்லுமுன் தன்னுடைய தகப்பனில்லாத குழந்தையை, குழந்தைக்காப்பகத்தில் விட்டுவிட்டு பின்னர் பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலை இருக்கிறது.
கலிஃபோர்னியாவின் ஆளுநர் பீட் வில்சன் இவ்விதம் சொன்னார்: “ஏராளமான பிள்ளைகள் தகப்பனில்லாமல் வளர்வதாலும், ஒரு முன்மாதிரியான ஆண், அவர்களுக்கு அன்பு, வழிநடத்துதல், சிட்சை, வாழ்க்கையின் மதிப்பீடுகள் ஆகியவற்றை போதிக்காததாலும் அவர்கள் தங்களையும் மற்றவர்களையும் ஏன் மதிக்கவேண்டும் என்ற உணர்வின்றியே வளர்கின்றனர்; இது ஒரு மிகப்பெரிய பிரச்சினை.” மற்றவர்கள்மேல் காட்டப்படவேண்டிய கரிசனை என்றால் என்ன என்பதுகூட தெரியாமல், சில இளைஞர்கள் வளர்வதால்தான் அவர்கள், “எந்தவிதமான குற்ற உணர்வுமின்றி மற்றவர்களைச் சுட்டுக் கொன்றுவிடுகின்றனர்,” என்றும் அவர் தொடர்ந்து குறிப்பிட்டார்.
குடும்ப ஒற்றுமை, தனிப்பட்ட கவனமெடுத்து போதித்தல், ஒழுக்ககாரியங்களில் ஒரு உறுதியான முன்மாதிரி ஆகியவை இல்லாமலிருப்பது, ரவுடி கும்பலின் வளர்ச்சியில் முக்கியமான பங்கேற்பது உண்மைதான் என்றாலும் மற்ற காரணங்களும் இருக்கின்றன. அவையாவன, டிவி காட்சிகளும் சினிமா படங்களும், பிரச்சினைகளுக்கு வன்முறை மிக எளிதாக தீர்வை அளிப்பதாகக் காட்டுவது, ஏழைகளை தோல்வியடைந்தவர்கள் என்று பலமுறை சுட்டிக்காட்டும் ஒரு சமுதாயம், மற்றவர்கள் செய்வதுபோல் அவர்கள் செய்ய முடியாது என்று அவர்களை ஞாபகப்படுத்துவது, வளர்ந்துவரும் ஒற்றை பெற்றோர் குடும்பம், இதில் ஏற்கெனவே அதிக வேலையால் களைத்துப்போன இளம் தாய், ஒன்று அல்லது அதற்கு அதிகமான பிள்ளைகளை எந்தவித கவனிப்புமின்றி வளர்த்து ஆதரிப்பதற்காக படும் கஷ்டம் ஆகியவை முக்கிய காரணங்கள். இந்தக் காரணங்களில் அநேகம் அல்லது எல்லாம் சேர்ந்துகொள்வது அல்லது மற்ற காரணங்களும் சேர்ந்து கொள்வதால், உலகளாவிய விதத்தில் ரவுடி கும்பல்கள் பூதாகரமாக வளர்ந்து உலகை உலுக்கும் பிரச்சினையாக உருவெடுப்பதற்கு வழிநடத்தியுள்ளது.
வெளியேறுவது எளிதல்ல
கொஞ்ச காலத்திற்கு பிறகு சில அங்கத்தினர்கள் ரவுடி கும்பலிலிருந்து விலகி மற்ற வேலைகளில் ஈடுபடுவது உண்மைதான். மற்றவர்கள் வேறு இடத்திற்கு சென்று தங்களுடைய சொந்தக்காரர்களுடன் வாழ்வதால் ரவுடி கும்பலிடமிருந்து தப்பிக்கின்றனர். ஆனால், அநேக சந்தர்ப்பங்களில் ரவுடி கும்பலிலிருந்து வெளியேறுவது அவ்வளவு சுலபமல்ல.
சாதாரணமாக ரவுடி கும்பலிலிருந்து ஒருவர் உயிரோடு வெளியேற அனுமதி பெறவேண்டுமென்றால், மற்ற அங்கத்தினரிடமிருந்து பயங்கரமாக அடிபடவேண்டும். உண்மையில், சில ரவுடி கும்பலிலிருந்து சிலர் வெளியேற விரும்பினால் அவர்கள் துப்பாக்கியால் சுடப்படுவர். அதில் ஒருவேளை உயிர் தப்பினால் அவர்கள் உயிரோடு வெளியேற அனுமதிக்கப்பட்டனர்! ஒரு ரவுடி கும்பலிலிருந்து வெளியேறுவதற்கு இவ்வளவு அவதிபடுவது அவசியம்தானா?
தான் எதற்காக ரவுடி கும்பலிலிருந்து வெளியேற விரும்பினார் என்பதைப்பற்றி முன்னாள் அங்கத்தினர் ஒருவர் இவ்விதம் விவரித்தார்: “ஏற்கெனவே, என்னோட நண்பர்களில் அஞ்சுபேர் செத்தே போயிட்டாங்க.” மெய்யாகவே ரவுடி கும்பலின் அங்கத்தினராக இருப்பது நம்பமுடியாத அளவில் உயிருக்கு ஆபத்தாகும். டைம் பத்திரிகை சிகாகோ ரவுடி கும்பலின் முன்னாள் அங்கத்தினர் ஒருவரைப்பற்றி இவ்விதம் அறிவித்தது: “இவருடைய ஏழு வருட அனுபவத்தில் வயிற்றில் சுடப்பட்டார், தண்டவாளக் கட்டையால் தலையில் தாக்கப்பட்டார், சண்டையில் இரண்டுமுறை கை எலும்பு முறிந்தது, கார் திருடியதற்காக இரண்டுமுறை ஜெயிலுக்கு சென்றார் . . . ஆனால், கடைசியாக அவர் குற்றசெயல்களில் ஈடுபடுவதை நிறுத்தியபடியால் அவருடைய முன்னாள் நண்பர்களே அவரை பழிவாங்கத் துடிக்கின்றனர்.”
மேம்பட்ட வாழ்க்கை சாத்தியமே
பிரேஸிலிலிருந்த எலினோ முன்பு ஹெட்பேங்கர்ஸ் என்ற ரவுடி கும்பலின் அங்கத்தினராக இருந்தார்; இவர்கள் கத்திகளுடனும் சிலநேரங்களில் துப்பாக்கிகளுடனும் சண்டையிடுவர். அவர் சமுதாயத்திலே தான் பாதிக்கப்பட்டதாக உணர்ந்ததால், சாமான்களை உடைப்பதிலும் ஜனங்களை தாக்குவதிலும் திருப்தியடைந்தார். அவரோடு வேலை செய்தவர் அவரிடம் பைபிளைப்பற்றி பேசினார். பின்னர் எலினோ யெகோவாவின் சாட்சிகளின் மாநாட்டில் கலந்துகொண்டார்; அங்கு தன்னுடைய ரவுடி கும்பலைவிட்டு வெளியேறிய முன்னாள் அங்கத்தினர்களையும் எதிரி ரவுடி கும்பலின் முன்னாள் அங்கத்தினரையும் சந்தித்தார். அவர்கள் ஒருவரை ஒருவர் சகோதரர்கள் என்று அழைத்துக்கொண்டனர்; ஒருவேளை முன்பு இவர்கள் சந்தித்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதிலிருந்து இது எவ்வளவு வித்தியாசமாக இருந்தது!
இது உண்மையில் நடைபெற முடியுமா? நிச்சயமாகவே நடக்கிறது! யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளில் சேவை செய்யும், லாஸ் ஏஞ்சலிஸின் பிரதான ரவுடி கும்பல்களின் முன்னாள் அங்கத்தினர்களிடம் விழித்தெழு! பத்திரிகையின் பிரதிநிதி பேசினார். பல மணிநேரங்கள் பேசிய பிறகு அவர்களில் ஒருவர் பேச்சை நிறுத்தி, தன்னுடைய நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து இவ்விதம் சொன்னார்: “இங்கே கொஞ்சம் கவனியுங்கள்! முன்னாள் பிளட்ஸ் மற்றும் க்ரிப்ஸ் அங்கத்தினர்கள் இங்கே அமர்ந்து ஒருவரை ஒருவர் சகோதரர்களாக நேசிக்கிறோம்!” இரக்கமற்ற ரவுடி கும்பல்களின் அங்கத்தினராக இருந்ததிலிருந்து தயவுள்ள மற்றும் அன்பான நபர்களாவதற்கு பைபிளை கவனமாகப் படித்து, பைபிள் நியமங்களை கற்றுக்கொண்டதே காரணம் என்று அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
இந்த 1990-களில் இப்படிப்பட்ட சம்பவம் நிகழுமா? ரவுடி கும்பல் அங்கத்தினரால் இப்படிப்பட்ட மாற்றங்களை உண்மையில் செய்ய இயலுமா? கடவுளுடைய வார்த்தையில் கொடுக்கப்பட்டிருக்கும் வல்லமைவாய்ந்த உற்சாகத்தை கவனிக்கவும், தங்களுடைய வாழ்க்கையை பைபிள் நியமங்களுக்கு இசைவாக மாற்றிக்கொள்ளவும், அவர்களுக்கு விருப்பமிருந்தால் நிச்சயமாகவே இயலும். நீங்கள் ஒருவேளை ஒரு ரவுடி கும்பலின் அங்கத்தினராக இருந்தால் இப்படிப்பட்ட மாற்றத்தை செய்வதைப்பற்றி ஏன் யோசிக்கக்கூடாது?
“முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுபோகின்ற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு” அதைத் தொடர்ந்து, “மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்,” என்று பைபிள் நம்மை உற்சாகப்படுத்துகிறது. (எபேசியர் 4:22-24) அந்தப் புதிய ஆள்தன்மை எவ்விதம் வளர்கின்றது? “திருத்தமான அறிவின்” மூலம் என்று பைபிள் குறிப்பிட்டு, ஒருவருடைய ஆள்தன்மை, ‘தன்னை சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய் புதிதாக ஆக்கப்பட முடியும்’ என்று அது சொல்கிறது.—கொலோசெயர் 3:9-11, NW.
இப்படிப்பட்ட மாற்றத்தை செய்வது பயனுள்ளதா? நிச்சயமாகவே பயனுள்ளதுதான்! ஒருவேளை, நீங்கள் ஒரு ரவுடி கும்பலின் அங்கத்தினராக இருந்தால் உங்களுக்கு உதவி தேவை. உங்கள் பிராந்தியத்திலிருக்கும் சிலர் உங்களுக்கு உதவ ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால், பிள்ளைகள்மேல் ஆக்கபூர்வமான செல்வாக்கினை பெற்றோரே அநேக சந்தர்ப்பத்தில் செலுத்தமுடியும். ஆகவே தங்களுடைய பிள்ளைகளை ரவுடி கும்பல்களிடமிருந்து காப்பாற்ற பெற்றோர் என்ன செய்யக்கூடும் என்பதை இப்பொழுது கவனிக்கலாம்.
[பக்கம் 7-ன் படம்]
எதிர் அணியில் இருந்த முன்னாள் ரவுடி கும்பல்களின் அங்கத்தினர்கள் இப்பொழுது பைபிள் சத்தியத்தினால் இணைக்கப்பட்டிருக்கிறார்கள்