கண்களிலிருந்து மறைந்த விண்மீன்கள்
காரிருள், பரந்துவிரிந்த வானம், ஆயிரம் ஆயிரம் ஜொலிக்கும் விண்மீன்கள், அண்ணாந்து பார்த்து அழகில் மனம் மயங்காதவர் யாரோ? கண்களுக்கு விருந்து படைக்கும் இக்காட்சி கண்களிலிருந்து மெல்ல மெல்ல மறைந்துவருகிறது. ஏன்? ஒளி மாசு.
தெருக்கள், வீடுகள், வர்த்தக இடங்கள், பொது அரங்கங்கள், விளையாட்டு மைதானங்கள் என எல்லா இடங்களிலும் செயற்கை விளக்குகள் கண்கூசும் வெளிச்சத்தை உமிழ்கின்றன. இவ்வாறு உண்டாகும் ஒளி மாசு (Light pollution) பயங்கரமாக உள்ளது. இத்தகைய வெளிச்சத்தில் பாதி, வான்நோக்கி பரவுவதால், பல நட்சத்திரங்கள் நம் பார்வையிலிருந்து மறைக்கப்படுகின்றன. இந்தப் பிரச்சினை எவ்வளவு மோசமாக உள்ளது? உதாரணத்திற்கு, வடக்கு ஐரோப்பாவை எடுத்துக்கொள்வோம். இங்கு வானம் தெளிவாகவும், நன்கு இருளடைந்தும் இருக்கும்போது சாதாரணமாக பார்த்தாலே 2,000 விண்மீன்கள் தென்படும். ஆனால், புறநகர் பகுதிகளில் வாழும் மக்களால் 200 விண்மீன்களை மாத்திரம் பார்க்க முடிகிறது. ஜகஜோதியாக வெளிச்சம் பரவிய நகரின் மத்தியில் வாழும் ஒருவர் வெறும் 20 விண்மீன்களையே பார்க்க முடியும். இதற்கு சரியான நடவடிக்கை எடுக்காமல், இப்படியே விட்டுவிட்டால் இன்னும் 25 வருடங்களில் வடக்கு ஐரோப்பாவில் நட்சத்திரங்களை சுத்தமாக பார்க்க முடியாமல் போய்விடுமே என வானவியல் வல்லுநர்கள் சிலர் பயப்படுகிறார்கள்.
ஓரளவுக்கு வெளிச்சம் அவசியம் என்பதை மறுக்க முடியாது. ஏனெனில், அசம்பாவிதம் நிகழ்வதை வெளிச்சம் தடுக்கிறது; ஆபத்தான பகுதியில் வசிப்போருக்கு பாதுகாப்பு உணர்வை அளிக்கிறது. ஆனால், அநாவசியமாக அதிக வெளிச்சம் இருந்தால், மன உளைச்சலை உண்டாக்குவதோடு தூக்கத்தையும் கெடுக்கிறது. இதனால் பாதிக்கப்படுவது மனிதர்கள் மட்டும் அல்ல. இடம்விட்டு இடம் செல்லும் பறவைகளையும், பூச்சியினங்களையும் இந்த வெளிச்சம் குழப்பிவிடுகிறது. தாவரங்களில் ஏற்படும் சுழற்சியில்கூட குளறுபடி ஏற்படலாம்.
இந்தப் பிரச்சினையை ஒழிக்க என்ன செய்வது? விளக்கு வெளிச்சத்தை கவசமிட்டு (shade) கீழ்நோக்கி விழும்படி செய்வது ஒரு நல்ல முறை. பாதுகாப்பு விளக்குகளை இரவு முழுவதும் எரியவிடுவதற்குப் பதிலாக, நுண்ணலை உணர்விகள் (sensor) மூலம் எரியும்படி மாற்றியமைக்கலாம். பிரான்ஸில் உள்ள ஒரு நகரில் அதிக அழுத்த சோடியம் விளக்குகளை அறிமுகம் செய்வதன் மூலம், இப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டது. இவ்விளக்குகள் வெளிச்சத்தை சிதறடிக்காமல் திருப்பிய திசையில் சரியாக பாய்ச்சின. மேலும் ஏற்கெனவே அங்கிருந்த குறைந்த அழுத்த தெருவிளக்குகளுக்கு கவசங்களைப்போட்டு, வெளிச்சம் கீழ்நோக்கி பாயும்படி செய்யப்பட்டது. ரோடுகளில் வெளிச்சத்தை உள்வாங்கும் கறுப்பு தார் பூசப்பட்டன. இரவு 11 மணிக்கு மேல் பொது அரங்கங்களில் விளக்குகள் அணைக்கப்பட்டன. இவ்வாறாக, மேல்நோக்கி பாய்ந்த ஒளி மாசு கிட்டத்தட்ட முழுமையான அளவில் கட்டுப்படுத்தப்பட்டு, வெளிச்ச சிதறல் மூன்றில் இரண்டு பங்காக குறைக்கப்பட்டதோடு, செயல் திறனும் 30 சதம் அதிகரித்தது.
உண்மைதான், இப்படி பிரச்சினைகளை தீர்க்க நேரமும் பணமும் தேவை. இப்போதெல்லாம் நேரமும் பணமும் குதிரைக்கொம்பாகிவிட்டன. கடவுளுடைய குமாரன் இயேசு கிறிஸ்து ஆளுகை செய்யும் அரசாங்கம் வெகுவிரைவில் எல்லாவிதமான மாசுகளையும் ஒழித்துவிடும் என்று அறிவது எவ்வளவு இதமாக இருக்கிறது! அந்த அரசாங்க குடிமக்களால் தங்கள் படைப்பாளரின் கைவண்ணத்தை, அதாவது ஒளி வீசும் விண்மீன்கள் நிறைந்த வானத்தை எந்தவித ஒளி தடையின்றி அன்றுதான் காண முடியும்.—சங்கீதம் 19:1, 2; வெளிப்படுத்துதல் 11:18.