ஒரே நொடியில் அழிந்துவிடுகின்றன!
உங்கள் தலைக்கு மேல் 15 மாடி உயரத்துக்கு உயர்ந்து நிற்கும், அழியாது காக்கப்பட்ட வரிசையான மரங்களின் மத்தியில், பசுமையான வைகறையின் மெல்லிய ஒளி பாயும் பகுதியினூடே நீங்கள் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு மேலே, மாபெரும் கடுஞ்சிக்கலான உயிர்வகைகளும் அங்கே பூமியின் மீதுள்ள மிக அடர்த்தியான வளப்புமிக்க உயிரின வாழ்க்கைச் சூழலும் உள்ளது. நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான அடிகள் நீளமுள்ள கொடிமுந்திரி திராட்சை, மரங்கள் மீது தோரணமாய் அமைய, அடிமரத்தையும் கிளைகளையும் பற்றிக்கொண்டிருக்கும் தாவரங்கள் அவைகளுக்கு மலர் வளையமாக அமைந்திருக்கின்றன. வளமைத் ததும்பிய வெப்பமண்டல பூங்கொத்துகள் சந்தடியில்லாத வெப்ப வீட்டுக்கு நறுமணமூட்டுகின்றன.
இதுவே வெப்பமண்டல மழைக் காடாகும். ஆனால் அது கண்ணுக்கினிய ஓரிடமாக இருப்பதைக் காட்டிலும் அதிகமாக, ஒளிக்கீற்று பாய்ந்து வரும் மூடுபனி சூழ்ந்த காட்டின் இடைவழியைக் காட்டிலும் அதிகமான ஒன்றாக இருக்கிறது. இதன் பாகங்கள் கிளர்ச்சியூட்டும் துல்லிபத்தோடு செயல்பட, இது நம்பமுடியாத கடுஞ்சிக்கல் வாய்ந்த ஒரு நுணுக்கமாக இருக்கிறது.
உயிர் இங்கே ஏராளமாக உள்ளன. இங்குள்ள உயிர் வகைகள் நம்முடைய கிரகத்தின் நிலப்பகுதியின் மீது வேறு எந்த இடத்திலிருப்பதோடும் ஒப்பிடமுடியாததாக இருக்கிறது. மழைக் காடுகள் பூமியின் நிலப் பகுதியில் 6 சதவீதத்தை மாத்திரமே எடுத்துக் கொள்கிறது. ஆனால் எல்லாத் தாவர மற்றும் மிருக உயிர் வகைகளில் பாதியைத் தன்னில் கொண்டுள்ளது. நிலத்திலுள்ள எல்லா உயிர்ப் பொருட்களிலும் மூன்றில் ஒரு பங்கை அவை உற்பத்திச் செய்கின்றன. உங்களுக்கு மேலே வெகு தூரத்தில், காடு விதானம், விநோதமான அழகுள்ள பூச்சிகளுக்கும் பறவைகளுக்கும், குரங்குகளுக்கும் மற்ற பாலூட்டிகளுக்கும் புகலிடமாக உள்ளன. பெரும்பாலானவை கீழே நிலத்துக்கு வருவதே கிடையாது. மரங்கள் அவைகளுக்கு உணவளித்து, உறைவிடம் கொடுக்க, அவை மரங்களில் மகரந்த சேர்க்கையை உண்டுபண்ணி, அல்லது பழங்களை உண்டு, சாணம் மூலம் விதைகளைக் கீழே விழும்படிச் செய்து நாற்புறமும் பரப்புகின்றன.
மழை தினமும் பொழிந்து, காடுகளை நனைத்து அவைகளின் நுட்பமான உயிர் சுழற்சிக்கு சக்தியளிக்கிறது. மழை நீர் இலைகளையும் கழிவுப் பொருட்களையும் அடிமரத்தின் வழியாக அடித்துக் கொண்டுச் செல்ல, மரங்களின் மீது வளரும் ஒட்டுச் செடிகளுக்கு ஊட்டச் சத்து நிறைந்த வடிசாறு ஊட்டமளிக்கிறது. ஒட்டுச் செடிகள் மரங்களுக்கு அதன் முக்கிய உணவாகிய நைட்ரஜனை காற்றிலிருந்து இழுத்துக் கொள்ள உதவி செய்கின்றன. அநேக ஒட்டுச் செடிகள் பல காலன்கள் தண்ணீர் இடங்கொள்ளும் இலைமயமான “நீர்த்தேக்கத் தொட்டிகளைக்” கொண்டிருக்கின்றன. இவை தவளைகள், நிலத்திலும் நீரிலும் வசிக்கும் வாலுள்ள விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு உறைவிடமாக இருக்கும் சிறிய குளங்களை மேலே காற்றுமண்டலத்தில் உண்டுபண்ணுகின்றன.
காட்டின் தரைக்கு வந்துசேரும் எந்த ஊட்டச்சத்தும் வேகமாக விழுங்கப்படுகிறது. கொட்டைகளையும் விலங்கின் பிணங்களையும் இலைகளையும் கழிவுப்பொருட்களாக உருமாற்றுவதற்கு பாலூட்டிகளும், திரளான பூச்சிகளும், கிருமிகளும் ஆகிய அனைத்துமே சேர்ந்து வேலைசெய்கின்றன. பின்னர், தரைதானே, அதை ஆவலோடு ஏற்றுக்கொள்கிறது. உங்கள் காலடியின் கீழுள்ள குப்பையைத் தள்ளிப் பார்ப்பீர்களேயானால், வேர்கள் மற்றும் காளானின் பின்னல் அமைப்பாக இருக்கும் நார்களாலான கெட்டியான, கடற்பாசிப் போன்ற ஒரு பாயை நீங்கள் காண்பீர்கள். மழை ஊட்டச்சத்தை அடித்துக் கொண்டுச் சென்றுவிடுவதற்கு முன்பாக, இந்தக் காளான்கள் அவற்றை வேகமாக உறிஞ்சிக்கொள்ள வேர்களுக்கு உதவிசெய்கின்றன.
ஆனால் இப்பொழுது மழைக் காட்டினூடே நீங்கள் சுற்றித் திரிவது ஒரு சிறிய பகுதிக்கு, ஓர் அமெரிக்க கால்பந்தாட்டக் களத்தின் பரப்பளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்டதாக வைத்துக் கொள்வோம். திடீரென்று அந்தக் காட்டின் முழு பகுதியும் மறைந்துவிடுகிறது. அது முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிடுகிறது—ஒரே நொடியில்! நீங்கள் நடுக்கத்தோடு கவனித்துக் கொண்டிருக்கையில், உங்களுக்கு அடுத்துள்ள அதே அளவுடைய பகுதி அடுத்த நொடியிலும், மற்றொன்று அதற்கு அடுத்த நொடியிலுமாக துடைத்தழிக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. கடைசியாக, நீங்கள் வெக்கையான வெப்பமண்டல சூரியனுக்குக் கீழே வெயிலில் காய்ந்து கெட்டியாகிவிட்ட பூமியின் மீது வெறுமையாக்கப்பட்ட சமவெளியில் தனிமையில் நின்றுக்கொண்டிருக்கிறீர்கள்.
ஒருசில மதிப்பீடுகளின்படி, உலகிலுள்ள வெப்பமண்டல மழைக் காடுகள் அந்த வேகத்தில்தான் அழிக்கப்பட்டு வருகின்றன. ஒரு சிலர் இதைவிட அதிக வேகத்தில் இது நிகழ்வதாகத் தெரிவிக்கின்றனர். நியூஸ்வீக் பத்திரிகையின்படி, ஒவ்வொரு ஆண்டும் கலிஃபோர்னியாவின் பாதி அளவு பரப்பளவு தரைமட்டமாக்கப்படுகிறது. செப்டம்பர் 1989 சையன்டிபிக் அமெரிக்கன் பத்திரிகை, சுவிட்ஸர்லாந்தும் நெதர்லாந்தும் சேர்ந்தால் இருக்கும் பரப்பளவு என்பதாக குறிப்பிடுகிறது.
ஆனால் பரப்பளவு எவ்வளவாக இருப்பினும் சேதம் அதிர்ச்சிதருவதாக உள்ளது. காடுகளை அழித்தல் உலகெங்கும் ஓர் அமளியை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலும் ஒரே தேசத்தின் மீதே கவனம் ஒருமுகப்படுத்தப்படுகிறது.
ஓர் உதாரணம்: பிரேஸில்
1987-ல் அமேசான் ஆற்றுப்பள்ளத்தாக்கை துணைக்கோளிலிருந்து எடுத்தப் புகைப்படங்கள், இந்த ஒரு பகுதியில் காடு அழிக்கப்படும் வேகம், முழு கிரகத்திலும் காடு அழிக்கப்படும் வேகத்தின் ஒருசில மதிப்பீடுகளைக் காட்டிலும் அதிகமாக இருப்பதைக் காண்பித்தது! மக்கள் காடுகளை, வெட்டவெளியாக்க அதை எரிக்கையில், ஆயிரக்கணக்கில் காட்டுத் தீ இராக்காலங்களுக்கு ஒளியூட்டின. புகைமேகம் இந்தியாவின் அளவிலும் அத்தனை அடர்த்தியாகவும் இருந்ததால், விமான நிலையங்கள் மூடப்பட வேண்டியிருந்தது. ஒரு மதிப்பீட்டின்படி, அமேசான் ஆற்றுப்பள்ளத்தாக்கு ஆண்டுதோறும் பெல்ஜியம் அளவு பரப்பளவான மழைக் காடுகளை இழந்துவருகிறது.
ப்ரேஸில் நாட்டுச் சுற்றுப்புறச் சூழல் ஆய்வாளர் ஜோஸ் லெட்சென்பெர்கர் இதை “வாழ்க்கை வரலாற்றின் மிகப்பெரிய படுகொலை” என்பதாக அழைத்தார். உலகம் முழுவதிலும் சுற்றுப்புறச்சூழல் ஆய்வாளர்கள் இதை எதிர்த்துப் போரட ஆயத்தமாக இருக்கிறார்கள். மழைக் காடுகளின் நிலைமையை பொதுமக்களின் கவனத்துக்கு கொண்டுவந்திருக்கின்றனர். மேற்சட்டைகளும் ராக் இசை நிகழ்ச்சிகளும்கூட “மழைக்காடுகளை காப்பாற்றுங்கள்” என்று விளம்பரப்படுத்தின. பின்னர் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.
ப்ரேஸில், அந்நிய நாடுகளுக்குக் கோடிக்கணக்கில் பணம் கடன்பட்டிருக்கிறது. வெறுமென வட்டியைச் செலுத்த மாத்திரமே அதன் ஏற்றுமதி வருவாயில் சுமார் 40 சதவீதத்தை அது செலவழிக்க வேண்டும். அது அந்நிய நாட்டு உதவிகள் மற்றும் கடன்களின் மீது வெகுவாக சார்ந்திருக்கிறது. ஆகவே சர்வதேச வங்கிகள் காடுகளுக்குச் சேதத்தை ஏற்படுத்த பயன்படக்கூடிய கடனுதவிகளை கொடுப்பதை நிறுத்திக் கொள்ள ஆரம்பித்தன. வளர்ச்சியடைந்த தேசங்கள் அவர்களுடைய சுற்றுப்புறச்சூழலின் மேம்பட்ட பாதுகாப்புக்காக ப்ரேஸிலின் கடன்களில் சிலவற்றை பொருள்வகையில் மாற்றிக்கொள்ள முன்வந்தன. அமெரிக்க ஜனாதிபதி புஷ், தூய்மையான மழைக் காடுகளினூடே நெடுஞ்சாலை கட்டுவதற்கு ப்ரேஸிலுக்குக் கடனுதவி அளிக்க வேண்டம் என்றும்கூட ஜப்பானைக் கேட்டுக்கொண்டார்.
ஒரு முழு உலகளாவிய இரண்டக நிலை
அநேக ப்ரேஸில் நாட்டவருக்கு இந்த எல்லா அழுத்தமும் மாய்மாலமாகவே இருக்கிறது. வளர்ச்சியடைந்த தேசங்கள் முற்காலங்களிலிருந்த தங்கள் சொந்த காடுகளில் பெரும்பகுதியை அழித்துவிட்டிருக்கின்றன. இவ்விதமாகச் செய்வதிலிருந்து அவர்களை எந்த அந்நிய வல்லரசும் தடை செய்ய அவர்கள் அனுமதித்திருக்க மாட்டார்கள். ஐக்கிய மாகாணங்கள் தற்போது, கடைசியாக உள்ள தன்னுடைய சொந்த மழைக்காடுகளையே துடைத்தழித்துக் கொண்டிருக்கிறது. அவை நிச்சயமாகவே வெப்பமண்டலத்தைச் சார்ந்தவை அல்ல; அவை பசிபிக் வடமேற்கின் நடுவெப்பநிலை மழைக் காடுகளாகும். அங்கும்கூட உயிர்கள் இல்லாமற்போகும்.
ஆகவே காடுகளை அழித்தல் வெறுமென ப்ரேஸில் நாட்டுப் பிரச்னையாக இல்லாமல், அது முழு உலகளாவிய ஒரு பிரச்னையாகும். வெப்பமண்டல மழைக் காடுகளின் இழப்பு இப்பொழுதே மிக அதிக ஆபத்தானவையாகும். இவற்றில் பாதிக்கும் மேற்பட்ட இழப்பு ப்ரேஸிலுக்கு வெளியே நிகழ்கின்றன. மத்திய ஆப்பிரிக்காவும் தென்கிழக்கு ஆசியாவும், உலகின் மற்ற இரண்டு மிகப் பெரிய மழைக்காடு பகுதிகளாகும். அங்கும்கூட காடுகள் வேகமாக மறைந்துகொண்டு வருகின்றன.
காடுகளை அழித்தல், உலகமனைத்தையும் சமஅளவில் பாதிக்கும் பாதிப்புடையவையாகும். இது இலட்சக்கணக்கானோருக்குப் பசியையும், தாகத்தையும், மரணத்தையும் அர்த்தப்படுத்துகிறது. இது உங்கள் வாழ்க்கையைத் தொடும் ஒரு பிரச்னையாகும். அது நீங்கள் உண்ணும் உணவை, நீங்கள் பயன்படுத்தும் மருந்துகளை, நீங்கள் வாழுமிடத்தின் சீதோஷண நிலையை ஒருவேளை மனிதவர்க்கத்தின் எதிர்காலத்தையும்கூட பாதிப்பதாக இருக்கிறது.
ஆனால், ‘இந்த மழைக்காடுகள் எவ்விதமாக இப்படிப்பட்ட வெகுதூரம் சென்றெட்டும் பாதிப்புகளைக் கொண்டிருக்கக்கூடும்? ஒருசில நிபுணர்கள் அவ்விதமாகவே நடக்கும் என்று சொல்லும் வண்ணமாக ஒருசில பத்தாண்டுகளில் அவை மறைந்துபோனால் என்ன? அது உண்மையில் அத்தனை பெரிய ஓர் அவல நிகழ்ச்சியாக இருக்குமா?’ என்பதாக நீங்கள் யோசிக்கக்கூடும்.
அந்தக் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு முன்பாக, மற்றொன்று முதலில் வர வேண்டும்: முதலாவதாக மழைக் காடுகளை அழிக்கக் காரணம் என்ன? (g90 3/22)
[பக்கம் 5-ன் வரைப்படம்/படம்]
மறைந்துகொண்டிருக்கும் மழைக்காடுகள்
காடுகளின் அழிவுக்கு முன்பு
தற்போதைய அளவு
காடுகளின் இன்றைய அழிவு வேகத்தில் 2000 ஆண்டு