மழைக் காடுகளை அழிப்பது யார்?
உலகில் ஏழ்மையில் வாழும் மக்களைக் குற்றஞ்சாட்டுவதன் மூலம் அந்தக் கேள்விக்கு அநேகமாக பதிலளிக்கப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக, வெப்பமண்டல நாடுகளிலுள்ள விவசாயிகள், மரங்களை வெட்டி சிதைத்து எரித்து அழித்து நிலத்தை உழுதுவந்திருக்கிறார்கள். காட்டின் ஒரு துண்டுநிலத்திலுள்ள மரங்களை வெட்டி சாய்த்து, அவைகளை எரிக்கிறார்கள், எரிப்பதற்கு சற்று முன்போ அல்லது பின்போ பயிர்களை பயிர் செய்கிறார்கள். காட்டின் சாம்பல் பயிர்களுக்கு ஊட்டச்சத்தை அளிக்கின்றன.
இவ்வகையாக விவசாயம் செய்தல், வெகு காலத்துக்கு முன்பாகவே, வெப்பமண்டல மழைக் காடுகளைப் பற்றிய வியப்பூட்டும் ஓர் உண்மையை வெளிப்படுத்தியது. அவைகளில் 95 சதவீதம், மிகவும் வளமற்ற மண்களில் வளருகின்றன. காடு ஊட்டச்சத்துக்களை அத்தனை வேகமாக மறுசுழற்சி செய்வதன் காரணமாக, நிலத்திலிருந்து போதுமான அளவுக்கு மேலே பெரும்பாலும் அவை மரங்களிலும் தாவரங்களிலும் சேமித்து வைக்கப்பட்டு இவ்விதமாக மண்ணிலிருந்து அவற்றை அடித்துக்கொண்டு செல்லக்கூடிய மழையினால் அவை சேதமடையாதிருக்கின்றன. ஆகவே மழைக்காடுகள் சுற்றுப்புறச்சூழலுக்கு நுட்பமாக பொருத்தமாக உள்ளன. இந்தச் செய்தி உழவருக்கு அத்தனை நல்ல செய்தியாக இல்லை.
ஏழை மக்களின் நிலை
வெகு சீக்கிரத்திலேயே எரிக்கப்பட்ட காடுகள் விட்டுச்செல்லும் சாம்பலின் ஊட்டச்சத்துக்களை மழை நீர் அடித்துக்கொண்டு சென்றுவிடுகிறது. படிப்படியாக விவசாயம் செய்வது ஒரு கொடுங்கனவாகி விடுகிறது. பொலிவியா நாட்டைச் சேர்ந்த ஒரு விவசாயி இவ்விதமாகச் சொல்கிறார்: “முதல் ஆண்டில் நான் மரங்களை வெட்டி அவைகளை எரித்தேன். மக்காச்சோளம் உயரமாகவும் இனிப்பாகவும் சாம்பலில் வளர்ந்தது. கடைசியில் நாம் வெற்றிகண்டுவிட்டோம் என்பதாக நாங்கள் அனைவருமே நினைத்தோம். . . . ஆனால் அப்போது முதற்கொண்டு காரியங்கள் மோசமாகிவிட்டன. மண் மேலும் மேலும் வறண்டு போய், களை செடிகளைத் தவிர வேறு எதுவும் அதில் வளரவில்லை. . . . அழிவு செய்யும் ஜந்துக்கள்? இத்தனை வகைகளை நான் ஒருபோதும் பார்த்தது கிடையாது. . . . நாங்கள் நொடித்துப் போகும் தருவாயில் இருக்கிறோம்.”
கடந்த காலங்களில், ஒரு விவசாயி காட்டின் புதிய துண்டு நிலங்களிலுள்ள மரங்களை வெட்டி சாய்த்து, பழைய துண்டு நிலத்தைப் பயிரிடாமல் விட்டு வைப்பான். இந்நிலங்களில் மீண்டும் காடு வளர்ந்த பிறகு, அதிலுள்ள மரங்கள் மறுபடியுமாக திரும்ப வெட்டப்படலாம். ஆனால் இந்த இயல்பான வளர்ச்சி ஒழுங்காக நடைபெறுவதற்கு பூச்சிகளும் பறவைகளும் மிருகங்களும் விதைகளை நாற்புறமும் சிதறச் செய்து புதிய இளங்கன்றுகளுக்காக மகரந்த சேர்க்கை உண்டுபண்ணுவதற்கு வெட்டவெளியாக்கப்பட்ட இவ்விடங்கள் ஆரம்பத்திலிருந்த காட்டினால் சூழப்பட்டிருக்க வேண்டும். இதற்கு காலமெடுக்கிறது.
மக்கள்தொகை வெடிப்பும்கூட காரியங்களில் மாறுதல்களை ஏற்படுத்தியிருக்கிறது. விவசாயிகள் கும்பலாக ஒரே இடத்தில் சேரும்போது, நிலத்தைப் பயிரிடாமல் விடும் காலம் குறைந்து கொண்டே வருகிறது. அநேகமாக இடம்விட்டு இடம் பெயர்ந்து செல்லும் விவசாயிகள் வெறுமென ஒருசில ஆண்டுகளில் தங்கள் நிலத்தின் உரத்தை அழியச்செய்துவிட்டு காடுகளை நோக்கிச் சென்று விரிவான அதன் முன்பக்கம் நெடுகிலுமாக அவைகளை எரித்துவிடுகிறார்கள். மற்றொரு காரியம் நிலைமையை இன்னும் மோசமாக்கிவிடுகிறது. குறைந்த அளவே வளர்ச்சியடைந்துள்ள தேசங்களில் வாழும் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் சமைப்பதற்கும் சூடாக்குவதற்கும் எரிபொருளாக விறகுகளையே நம்பியிருக்கிறார்கள். நூறுகோடி மக்களுக்கும் மேற்பட்டவர்கள், மரங்களை அவை தற்போது மறுநடவு செய்யப்படுவதைவிட அதிக வேகமாக வெட்டுவதன் மூலமாக மாத்திரமே தங்கள் எரிபொருள் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளும் நிலையிலிருக்கிறார்கள்.
ஆழமான காரணங்கள்
ஏழை மக்களை குற்றஞ்சாட்டுவது எளிதே. ஆனால் உயிரின வாழ்க்கைச் சூழல் ஆய்வாளர்கள் ஜேம்ஸ் D. நேஷனஸ் மற்றும் டேனியேல் I. கோமர் குறிப்பிடும் வண்ணமாக இது “போர்களை உண்டுபண்ணுவதற்காக போர் வீரர்களைக் குற்றஞ்சாட்டுவது” போல இருக்கிறது. அவர்கள் மேலுமாகச் சொல்கிறார்கள்: “அவர்கள் வெறுமென படைப் பெருந்தலைவரின் விளையாட்டில் பிணையமாக இருக்கிறார்கள். காடுகளை அழிப்பதில் குடியேற்ற நாட்டவரின் பங்கைப் புரிந்து கொள்வதற்கு, முதலாவதாக, இந்தக் குடும்பங்கள் ஏன் மழைக் காடுகளுக்குள் பிரவேசிக்கின்றனர் என்று ஒருவர் கேட்கக்கூடும். பதில் தெளிவாக உள்ளது: அவர்களுக்கு வேறு இடங்களில் நிலம் கிடையாது.”
வெப்பமண்டல தேசம் ஒன்றில் நிலத்தில் 72 சதவீதம் வெறும் 2 சதவீத நிலக்கிழார்களுக்கு சொந்தமாக இருக்கிறது. இதற்கிடையில், சுமார் 83 சதவீத விவசாயக் குடும்பங்கள் பிழைப்புக்குப் போதிய அளவு நிலமோ அல்லது நிலமே இல்லாமலோ இருக்கிறார்கள். அதே மாதிரியானது உலகம் முழுவதிலும் வித்தியாசமான அளவுகளில் திரும்பத்திரும்ப நிகழ்கிறது. தனியாருக்குச் சொந்தமான மிகப்பெரிய நிலங்கள் உள்ளூர்வாசிகளுக்கு உணவு உற்பத்தி செய்வதற்காகப் பயன்படுத்தப்படாமல், நடுவெப்பநிலை மண்டலத்திலுள்ள பணக்கார நாடுகளுக்கு பயிர்களை, ஏற்றுமதி செய்வதற்காக வளர்க்க பயன்படுத்தப்படுகிறது.
மரவெட்டி தொழிற்சாலை மற்றொரு பிரசித்திப் பெற்ற குற்றவாளியாகும். அது காட்டுக்கு ஏற்படுத்தும் நேரடி சேதத்தைத் தவிர, மரம் வெட்டுதல், மழைக் காடுகளை தீயினாலும் மனிதர்களாலும் அதிகமாகப் பாதிக்கப்படும் நிலையிலும்கூட வைக்கிறது. நிலத்தைச் சமன் செய்யும் கருவியினால் தூய்மையான காட்டில் உழன்று முன்னேறுகையில் ஏற்படும் மரவெட்டி பாதைகள், இடம் பெயர்ந்து செல்லும் விவசாயக் கூட்டம் முன்னேச் செல்ல வழிச்செய்கிறது.
அநேகமாக பயிர் செய்தல் தோல்வியடையும் வண்ணமாக, அவை தோல்வியடைகையில், அவை கால்நடை வளர்ப்பு பண்ணை நடத்துவர்கள் நிலத்தை வாங்கி கால்நடை மேய்ச்சலுக்காக அதை மேய்ச்சல் நிலமாக மாற்றிவிடுகிறார்கள். குறிப்பாக தென் மற்றும் மத்திய அமெரிக்காவில் இது இவ்விதமாக உள்ளது. இறைச்சிக்காக கொழுக்க வைத்து அவர்கள் வளர்க்கும் மாடுகள் பணக்கார நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஐக்கிய மாகாணங்களில் சராசரியாக, வீட்டில் வளரும் ஒரு பூனை ஆண்டுக்கு மத்திய அமெரிக்காவில் வாழும் ஒரு சராசரி மனிதனைக் காட்டிலும் அதிகமாக மாட்டிறைச்சியை சாப்பிடுகிறது.
கடைசியாக, வளர்ச்சியடைந்துள்ள தேசங்கள் தாமே தங்களின் சொந்த தீராப் பசி வேட்கையை பூர்த்தி செய்து கொள்ள வெப்ப மண்டல காடுகளின் அழிவுக்கு நிதியுதவி அளிக்கின்றன. அவர்கள் வெப்பமண்டல தேசங்களிலிருந்து மிகவும் விரும்பி வாங்கும் விநோதமான அழகுள்ள மரங்கள், விளைப்பொருட்கள், மற்றும் மாட்டிறைச்சி அனைத்துமே காடுகளை இடம் பெயர்ப்பதை அல்லது இழிவுபடுத்துவதைத் தேவைப்படுத்துகிறது. கொக்கேயினுக்கான அமெரிக்க மற்றும் ஐரோப்பிய தீரா விருப்பம், பெருவில் மிகுந்த ஆதாயம் கொண்டுவரும் கொக்கோ பயிர்களை பயிர் செய்வதற்காக நூறாயிரக்கணக்கான ஏக்கர்கள் மழைக் காடுகளை வெட்டவெளியாக்குவதை அர்த்தப்படுத்தியிருக்கிறது.
வெறுப்புக்கொள்ளச் செய்யும் ஆதாயங்கள்
அநேக அரசாங்கங்கள் காடுகளை அழிப்பதைச் சுறுசுறுப்பாக ஊக்குவிக்கின்றன. கால்நடை வளர்ப்புப் பண்ணை நடத்துபவர்களுக்கு, மர வியாபார கம்பெனிகளுக்கு மற்றும் ஏற்றுமதி விவசாயத்துக்கு வரிவிலக்குகளை அளிக்கின்றன. சில தேசங்கள் காட்டில் மரங்களை வெட்டி அதைத் திறந்த வெளியாக்குவதன் மூலம் ஒரு விவசாயி அதை “மேம்படுத்துவானேயானால்” ஒரு நிலத்தை அவனுக்கு கொடுத்துவிடும். தென்கிழக்கு ஆசியாவிலுள்ள ஒரு தேசம், இடம் பெயர்ந்து செல்லும் விவசாயிகளை இலட்சக்கணக்கில் நெடுந்தொலைவிலுள்ள அதன் மழைக்காடுகளுக்கு அனுப்பிவைத்திருக்கிறது.
ஏழை மக்களுக்கு பயன்படும் வகையில் காடுகள் பயன்படுத்திக் கொள்ளப்படுவதாக அல்லது தொய்வுற்ற பொருளாதாரத்தை முன்னுக்குக் கொண்டு வருவதாகச் சொல்லி இப்படிப்பட்ட கொள்கைகளுக்கு விளக்கமளிக்கப்படுகிறது. ஆனால் திறனாய்வாளர்கள் காண்கிறவிதமாக, இந்தக் குறுகிய–கால ஆதாயங்களும்கூட பொய்த் தோற்றத்தால் ஏமாற்றுவதாக உள்ளது. உதாரணமாக, விவசாயினுடைய பயிர்களுக்கு ஆதரவு தராத நிலம், கால்நடை வளர்ப்பு பண்ணை நடத்துபவர்களுக்கும் ஆதரவாக இருக்காது. கால்நடை வளர்ப்பு பண்ணைகள் பொதுவாக பத்து ஆண்டுகளுக்குப் பின்பு கைவிடப்படுகின்றன.
மரவியாபாரமும்கூட அநேகமாக வெற்றியடைவதில்லை. எதிர்காலத்தைப் பற்றிய எந்தச் சிந்தனையுமின்றி காடுகளிலிருந்து வெப்பமண்டல வயிரம் பாய்ந்த கட்டைகள் பிரித்தெடுக்கப்படுகையில் காடுகள் வேகமாக குறைந்துவிடுகின்றன. தற்போது தங்கள் வெப்பமண்டல மரக்கட்டைகளை ஏற்றுமதி செய்யும் 33 தேசங்களில் 20-க்கும் மேற்பட்ட தேசங்கள் பத்தே ஆண்டுகளுக்குள் தங்கள் கையிருப்பினை செலவழித்துவிடும் என்பதாக உலக வங்கி மதிப்பிடுகிறது. தாய்லாந்து காடுகள் அத்தனை மோசமாக அழிக்கப்பட்டதன் காரணமாக எல்லாவிதமான மரவெட்டி வேலைகளும் தடை செய்யப்பட வேண்டியதாயிற்று. 1990-களின் இடைப்பகுதிக்குள் பிலிப்பைன்ஸில் முழுவதுமாக மரங்கள் வெட்டப்பட்டுவிடும் என்று மதிப்பிடப்படுகிறது.
ஆனால் கசப்பான வேடிக்கை இதுவே: மழைக் காட்டின் ஒரு பகுதி தொடமல் விடப்படுகையில், உதாரணமாக அதன் விளைப் பொருட்களாகிய பழங்களும் ரப்பரும் அறுவடைச் செய்யப்படுகையில் அது அதிகமான வருமானத்தைக் கொடுக்கும் என்பதை ஆய்வுகள் காண்பித்திருக்கின்றன. ஆம், அதே நிலத்தில் விவசாயம், கால்நடை மேய்ச்சல் அல்லது மரங்களை வெட்டுவதைக் காட்டிலும் அதிகப் பணம். என்றபோதிலும் தொடர்ந்து அழிவுவேலை செய்யப்பட்டு வருகிறது.
நிலவுலகம் இத்தகைய செயலை என்றுமாகத் தாங்கிக் கொண்டிருக்க இயலாது. வெப்பமண்டலக் காடுகளைப் பாதுகாத்தல் புத்தகம் குறிப்பிடுகிறபடி: “தற்போதைய நாசவேலையை நாம் தொடர்ந்து செய்வோமேயானால், மழைக் காடு மறைந்துவிடுமா என்பதல்ல, ஆனால் எப்போது என்பதே கேள்வியாக இருக்கும்.” ஆனால் எல்லா மழைக் காடுகளும் அழிக்கப்பட்டுவிட்டால் உலகம் உண்மையில் அவதியுறுமா? (g90 3/22)
[பக்கம் 7-ன் படம்]
காடுகளை அழிக்கும் ஏஜென்டுகள்
மரங்களை வெட்டி சாய்த்து எரித்து அழித்து விவசாயம் செய்தல்
அணைக்கட்டுகளினால் உண்டுபண்ணப்படும் வெள்ளப்பெருக்கு
கால்நடை வளர்ப்பு மேய்ச்சல்
மரங்களை வெட்டும் செயல்கள்