உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g91 2/8 பக். 12-14
  • காடுகளுக்கு ஓர் எதிர்காலம் உண்டா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • காடுகளுக்கு ஓர் எதிர்காலம் உண்டா?
  • விழித்தெழு!—1991
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • சுற்றுப்புறச்சூழல் பிரச்னைகளை தீர்க்க உழைக்கும் ஆட்கள் வித்தியாசத்தை உண்டுபண்ண முடியுமா?
  • பிரச்னையின் மூலகாரணம்
  • ஒரே நொடியில் அழிந்துவிடுகின்றன!
    விழித்தெழு!—1991
  • மழைக்காடுகளின் பயன்கள்
    விழித்தெழு!—1998
  • காடுகள்
    விழித்தெழு!-2023
  • மழைக் காடுகளை ஏன் பாதுகாக்க வேண்டும்?
    விழித்தெழு!—1991
மேலும் பார்க்க
விழித்தெழு!—1991
g91 2/8 பக். 12-14

காடுகளுக்கு ஓர் எதிர்காலம் உண்டா?

தென் பசிப்பிக்கிலுள்ள ஈஸ்டர் தீவில் மாபெரும் கல்லால் செய்யப்பட்ட தலைகள் அச்சுறுத்தும் உருவில் புல்படர்ந்த குன்றுகள் மேல் கவிந்த வண்ணம், கடலுக்கு எதிர்புறத்தில் காணப்படுகின்றன. இவைகளை கட்டிய ஆட்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக, எண்ணிக்கையில் குறைந்து பின்னர் மறைந்து போயினர். மேற்கத்திய ஐக்கிய மாகாணங்களில், ஆள்நடமாட்டமில்லாத தரிசு நிலத்தில் பண்டைய காலத்திய கட்டிடங்களின் இடிபாடுகள், அங்கே வெள்ளையர் துணிந்து முன்னேறிச் செல்வதற்கும் வெகு காலத்துக்கு முன்பாகவே மறைந்துவிட்டிருந்த ஒரு ஜனத்தின் ஒரே நினைவுச் சின்னமாக இருக்கின்றன. ஒரு சமயம் நாகரீகமும் வியாபாரமும் செழித்தோங்கியிருந்த ஒரு சில பைபிள் தேசங்கள் இப்பொழுது கடுங்காற்று வீசிக்கொண்டிருக்கும் பாலைவனங்களாக இருக்கின்றன. ஏன்?

இந்த மூன்று நிகழ்ச்சிகளிலுமே, காடுகளை அழித்தலே ஓரளவான பதிலாக இருக்கக்கூடும். அங்கிருந்த காடுகளை அவர்கள் துடைத்தழித்துவிட்டதால் இந்தப் பகுதிகளை அவர்கள் கைவிடவேண்டியதாயிற்று என்பதாக சில நிபுணர்கள் கருதுகிறார்கள். மரங்கள் இல்லாமல், அவை தரிசு நிலமாக மாற மனிதன் அவ்விடத்தைவிட்டு வேரிடத்துக்குப் புறப்பட்டு போக ஆரம்பித்தான். ஆனால் இன்று மனிதன் முழு கிரகத்துக்கும் அதையே செய்வதாக அச்சுறுத்திக் கொண்டிருக்கிறான். அவன் செய்வானா? இந்நிலையை எதுவும் தடுத்து நிறுத்த முடியாதா?

அநேகர் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். இமய மலையில் பெண்கள், மரங்களை வெட்டுபவர்கள் வெட்டி வீழ்த்தாதபடி செய்ய போரடும் முயற்சியில், அவைகளை கட்டியணைத்துக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. மலேசியாவில், காடுவாசி இனத்தவர், முன்னேறி வந்துகொண்டிருந்த மர வெட்டிகளையும் அவர்களின் கனமான இயந்திரங்களையும் தடை செய்ய மனித சங்கிலிகளையும் உருவாக்கியிருக்கின்றனர்.

மழைக் காடுகளினாலேயே பிழைப்பை நடத்திக்கொண்டிருக்கும் 20 கோடி மக்களுக்கு அதிக தனிப்பட்ட ஆதாரம் நெருக்கடியிலுள்ளது. நாகரீகம் முன்னேற்றமடைகையில் மலைகாடு வாசிகள் காட்டின் அடர்த்தியான உட்பகுதிகளுக்குள் பின்வாங்கிச் செல்கிறார்கள். சில சமயங்களில் அடுத்தப் பக்கத்திலிருந்து முன்னேறிவரும் குடியேற்ற மக்களைச் சந்திக்கும்வரை அவ்விதமாகச் செய்கிறார்கள். அயலாரின் நோய்களினால் அநேக மலைவாசிகள் துடைத்தழிக்கப்படுகின்றனர். வெளிஉலகத்துக்குத் தக்கவாறு தங்களை அமைத்துக் கொள்ள வற்புறுத்தப்படும் மற்றவர்கள் நகரில் வாழும் ஏழை மக்களின் மத்தியில் வந்து சேருகிறார்கள்—மனமுறிந்தவர்களாகவும் ஒழுக்கங் கெட்டவர்களாகவும் மாறுகிறார்கள். ஆனால் உலகம் அவர்கள் நிலைக் குறித்து விழிப்படைந்து வருகிறது. சுற்றுப்புறச்சூழலில் அக்கறையான ஒரு மனநிலை உலகமனைத்திலும் வீச ஆரம்பித்திருக்கிறது.

சுற்றுப்புறச்சூழல் பிரச்னைகளை தீர்க்க உழைக்கும் ஆட்கள் வித்தியாசத்தை உண்டுபண்ண முடியுமா?

“உலகின் வெப்பமண்டல காடுகளை பாதுகாக்க அறிவும் தொழில் நுணுக்கமும் ஆகிய இரண்டுமே இருக்கின்றன” என்பதாக வெப்பமண்டல காடுகளைப் பாதுகாத்தல் புத்தகம் ஆரம்பிக்கிறது. உலகம் முழுவதிலுமுள்ள பூங்காக்களில் இந்தக் குறிப்பு தெளிவுபடுத்திக் காட்டப்பட்டிருக்கிறது. கோஸ்டா ரிக்காவிலுள்ள குவனாகாஸ்ட் தேசீய பூங்கா பெரிய நிலப்பரப்பில் காடுகளை மறுநடவு செய்வதற்காகவே அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கென்னியா, இந்தியா, ஹேய்டி மற்றும் சீனா போன்ற தேசங்களில் மரங்கள் இலட்சக்கணக்கில் நடப்பட்டு வருகின்றன. ஆனால் மரங்களை நடுதல், காடுகளை திரும்பவும் நிறுவும் அதேக் காரியமாக இல்லை.

சில சமயங்களில், “காடுகளை மீண்டும் உண்டாக்குவது” உண்மையில் பின்னால் அறுவடை செய்வதற்காக ஒரே இன மரத்தை வியாபார நோக்குடன் நடவு செய்வதாக இருக்கிறது. இது ஒரு மழைக் காட்டின் சிக்கலான உயிரின வாழ்க்கைச்சூழல் அமைப்பாக நிச்சயமாக இருக்கமுடியாது. தவிர, ஓர் ஈரமான வெப்பமண்டலக் காட்டை ஒருபோதும் ஆரம்பத்திலிருந்த சிக்கலான நிலைக்கு திரும்பக் கொண்டு வர முடியாது என்பதாகச் சிலர் சொல்லுகிறார்கள். சுற்றுப்புறச்சூழல் பிரச்னைகளைத் தீர்க்க உழைக்கும் அநேகர் முன்னிலை மீட்புப் பணியைக் காட்டிலும் பாதுகாத்தலே மேலானது என்று சொல்வது குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஆனால் பாதுகாத்தல் என்பது அது தோன்றுவது போல அத்தனை எளிதாக இல்லை. ஒரு காட்டின் நிலப்பகுதி மிகவும் சிறியதாக இருக்குமானால், அது அழியாதிருக்காது. உலகின் மழைக்காடுகள் பல்வகைமையின் செல்வத்தைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமாயின் அவற்றில் குறைந்த பட்சம் 10-லிருந்து 20 சதவீதமாவது சேமித்து வைக்கப்பட வேண்டும் என்பதாக சுற்றுப்புறச்சூழல் பிரச்னைகளைத் தீர்க்க உழைப்பவர்கள் சிலர் ஆலோசனை கூறுகிறார்கள். ஆனால் தற்போது, ஆப்பிரிக்காவின் மழைக்காடுகளில் 3 சதவீதம் மாத்திரமே பாதுகாக்கப்பட்டிருக்கிறது. தென்கிழக்கு ஆசியாவில் எண்ணிக்கை 2 சதவீதம்; தென் அமெரிக்காவில் 1 சதவீதம்.

அந்தப் பகுதிகளில் சில வெறும் காகிதத்தில் மாத்திரமே பாதுகாக்கப்பட்டுள்ளது. பூங்காக்களும் இதற்காக விசேஷமாக ஒதுக்கி வைக்கப்பட்ட இடங்களும் அவை திறமையில்லாமல் திட்டமிடப்படுகையில் அல்லது நிர்வகிக்கப்படுகையில் அல்லது இலஞ்சம் வாங்கும் அதிகாரிகள் பூங்கா நிதிகளை தங்கள் சொந்த சட்டைப் பைக்குள் போட்டுக்கொள்கையில் அவை உதவாதவையாகிவிடுகின்றன. சிலர், திருட்டுத்தனமாக மரத்தை வெட்டி வீழ்த்த அனுமதிப்பதன் மூலம் பணமும்கூட சம்பாதிக்கின்றனர். மனித ஆற்றலும்கூட பற்றாக்குறையாக இருக்கிறது. அமேசானில், ஃபிரான்சின் அளவுள்ள ஒரு மழைக் காடு பகுதியை பாதுகாக்க தனியொரு காவலன் நியமிக்கப்பட்டான்.

விவசாயிகள் தொடர்ந்து இடம்விட்டு இடம் பெயர்ந்து கொண்டும் அதிகமான காடுகளை அழித்துக்கொண்டும் இருக்க வற்புறுத்தப்படாதபடி மண்ணின் ஆற்றலைக் குறைக்காமல் எவ்விதமாக விவசாயம் செய்வது என்று கற்பிக்கப்பட வேண்டும் என்றும்கூட சுற்றுப்புறச்சூழல் பிரச்னைகளைத் தீர்க்க உழைக்கும் ஆட்கள் துரிதப்படுத்தியிருக்கின்றனர். ஒரே விளைநிலப்பரப்பில் மிகப் பல்வகை பயிர்களை கலந்து விளைவிக்க சிலர் முயற்சி செய்திருக்கின்றனர். தனியொரு இனத்தை உண்ணும் பூச்சிகளை இது தடைசெய்கிறது. பழ மரங்கள் வெப்பமண்டல மழைகளிலிருந்து மண்ணுக்கு பாதுகாப்பளிக்க முடியும். மற்றவர்கள் பண்டையக் கால உத்தியை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவந்திருக்கின்றனர். அவர்கள் சிறிய துண்டு தோட்ட நிலங்களைச் சுற்றி வாய்க்கால்களைத் தோண்டி வாய்க்காலிலிருந்து சகதியையும் கடற்பாசியையும் பயிர்களுக்கு சத்துணவாக நிலங்களுக்குள் மண்வாரியால் அள்ளிப்போடுகின்றனர். வாய்க்காலில் மீன்கள் கூடுதலான உணவுப்பொருளாக வளர்க்கப்படலாம். சோதனைகளில் இப்படிப்பட்ட முறைகள் ஏற்கெனவே மாபெரும் வெற்றியை அடைந்திருக்கின்றன.

ஆனால் “எவ்விதமாக” என்பதை மக்களுக்கு கற்பிப்பதற்கு நேரமும் பணமும் செலவாகிறது. இது திறமையைக் கேட்பதாயும் இருக்கிறது. வெப்ப மண்டல நாடுகள், அது போன்ற நீண்ட கால முதலீடுகளைச் செய்வதற்கு அளவுக்கு அதிகமான மிக நெருங்கிய பொருளாதார பிரச்னைகளைக் கொண்டவையாய் இருக்கின்றன. தொழில் நுட்ப அறிவாற்றல் மிகப் பரவலாக இருப்பினும், அது பிரச்னையை தீர்க்காது. வெப்பமண்டல காடுகளைப் பாதுகாத்தல் புத்தகத்தில் மைக்கல் H. ராபின்சன் எழுதும் வண்ணமே: “மழைக் காடுகள் அறியாமை அல்லது மடமையின் நிமித்தமாக இல்லாமல், பெரும்பாலும் வறுமை மற்றும் பேராசையின் காரணமாகவே அழிக்கப்பட்டு வருகின்றன.”

பிரச்னையின் மூலகாரணம்

வறுமையும் பேராசையும். காடு அழியும் நெருக்கடி அதன் வேர்களை மழைக் காடு மரங்களின் வேர்கள் ஆழமற்ற வெப்பமண்டல மண்ணிற்குள் செல்வதைக் காட்டிலும் அதிக ஆழமாக மனித சமுதாய அமைப்புக்குள் கொண்டிருக்கின்றன. மனிதவர்க்கம் பிரச்னையை வேரோடு பிடுங்கி எறிய திறமையுள்ளதாக இருக்கிறதா?

நெதர்லாந்திலுள்ள ஹேக்கில், 24 தேசங்கள் கலந்து கொண்ட ஓர் உச்சிமாநாடு 1989-ம் ஆண்டு, ஐக்கிய நாடுகளின் உள்ளேயே க்ளோப் என்றழைக்கப்படும் புதிய அதிகார குழு ஒன்றை உருவாக்க வேண்டும் என முன்மொழிந்தது. லண்டனில் வெளியாகும் ஃபைன்னான்ஷியல் டைம்ஸ் பிரகாரம், க்ளோப், “சுற்றுப்புறச்சூழல் சம்பந்தப்பட்ட தராதரங்களை நிறுவவும் அமல்படுத்தவும் ஈடிணையற்ற அளவுகளில் அதிகாரமுடையதாக இருக்கும்.” க்ளோப் உண்மையில் எந்த ஓர் அதிகாரத்தையுமுடையதாயிருக்க, தேசங்கள் தாங்கள் போற்றி வளர்க்கும் ஒரு சில தேசீய ஆட்சி உரிமைகளை விட்டுக்கொடுக்க வேண்டியிருந்தாலும் இப்படிப்பட்ட ஓர் அமைப்பு ஒரு நாள் தோன்றுவது தவிர்க்கமுடியாததாகும். ஐக்கியப்பட்ட அனைத்துலக ஏஜென்ஸி ஒன்று மாத்திரமே அனைத்துலகப் பிரச்னைகளைத் தீர்க்க முடியும்.

அது நியாயமாக இருக்கிறது. ஆனால் எந்த மனித அரசாங்கம் அல்லது ஏஜென்ஸி, பேராசையையும் வறுமையையும் அடியோடு அழித்திட முடியும்? எந்த அரசாங்கம் இதுவரை இதைச் செய்திருக்கிறது? அநேகமாக அவை வறுமையை நீடித்திருக்கச் செய்வதற்காகவே பேராசையின் அடிப்படையில் அமைந்தவையாக இருந்திருக்கின்றன. இல்லை. மனித ஏஜென்ஸி ஒன்று காடுகள் அழியும் நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் என்று நாம் காத்திருப்போமேயானால், காடுகளுக்கு அல்லது உண்மையில் மனிதர்களுக்கு எந்த எதிர்காலமும் இல்லை.

ஆனால் இதைச் சிந்தித்துப் பாருங்கள். காடுகள் அளவிடமுடியாத புத்திக்கூர்மையுள்ள ஒரு நபரால் வடிவமைக்கப்பட்டது என்பதற்கு அத்தாட்சியைக் கொடுக்கின்றதா? ஆம், கொடுக்கின்றன! வேர்கள் முதல் இலைகள் வரையாக, அவை தேர்ச்சி திறம் பெற்ற உலகைத் தோற்றுவித்த ஒருவருடைய கைவேலைப்பாடு என்பதை அறிவிக்கின்றன.

சரி, அப்படியென்றால் உலகை தோற்றுவித்த இவர் மனிதன் எல்லா மழைக் காடுகளையும் அழித்து நம்முடைய பூமியைப் பாழாக்கிவிட அனுமதிப்பாரா? பைபிளிலுள்ள குறிப்பிடத்தக்க ஒரு தீர்க்கதரிசனம் இந்தக் கேள்விக்கு நேரடியாக பதிலளிக்கிறது. அது வாசிப்பதாவது: “ஜாதிகள் கோபித்தார்கள், அப்பொழுது உம்முடைய [கடவுளுடைய] கோபம் மூண்டது; . . . பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுக்கிறதற்கும், காலம் வந்தது.”—வெளிப்படுத்துதல் 11:18.

அந்தத் தீர்க்கதரிசனத்தைக் குறித்ததில் இரண்டு குறிப்பிடத்தக்க காரியங்கள் இருக்கின்றன. முதலாவது, முழு பூமியையும் மனிதன் உண்மையில் கெடுக்கக்கூடியவனாக இருக்கும் ஒரு காலத்தை அது சுட்டிக்காட்டுகிறது. சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக அந்த வார்த்தைகள் எழுதப்பட்ட போது, மனிதன் சந்திரனுக்கு பறந்து செல்லாதிருந்தது போல பூமியையும் கெடுக்கக்கூடாதவனாக இருந்தான். ஆனால் இன்று அவன் இரண்டையும் செய்கிறான். இரண்டாவதாக, மனிதன் பூமியை முழுவதுமாகக் கெடுத்துவிடுவானா என்ற கேள்விக்கு தெளிவாக இல்லை என்பதாக தீர்க்கதரிசனம் பதிலளிக்கிறது!

பூமியைப் பராமரிக்கவும் அதைப் பண்படுத்தவுமே கடவுள் மனிதனைப் படைத்தார். அதை வெறுமையாக்க அல்ல. பூர்வ இஸ்ரவேலில், அவருடைய மக்கள் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தைக் கைப்பற்றுகையில், அவர்கள் காடுகளை அழிப்பதன் பேரில் கட்டுப்பாடுகளை அவர் முன்வைத்திருந்தார். (உபாகமம் 20:19, 20) சமீப எதிர்காலத்தில் எல்லா மனிதவர்க்கமும் சுற்றுப்புறச்சூழலோடு ஒத்திசைவாக வாழ்வார்கள் என்பதாக அவர் வாக்களிக்கிறார்.—1 யோவான் 2:17; எரேமியா 10:10–12.

மனிதன் பூமியை நிலச்சமன்பொறி கொண்டு ஒரு பாலைவனமாக மாற்றுவதற்குப் பதிலாக அதைப் பண்படுத்தவும் அதைப் பழுதாக்குவதற்குப் பதிலாக பழுதுபார்க்கவும், கணநேர ஆதாயத்துக்காக அது வறண்டு போகும் வரை பேராசையுடன் தன்னலத்திற்காக பயன்படுத்திக்கொள்வதற்குப் பதிலாக தொலைதூர நோக்கோடு அதற்கு துணையாகவும் இருக்கப் போகும் ஒரு காலத்தைப் பற்றிய நம்பிக்கையை பைபிள் அளிக்கிறது. காடுகளுக்கு ஓர் எதிர்காலம் உண்டு. அவைகளையும் பூமி முழுவதையும் பாழாக்கிக் கொண்டிருக்கும் சீர்கெட்ட காரிய ஒழுங்கிற்கு எந்த எதிர்காலமும் இல்லை. (g90 3/22)

[பக்கம் 13-ன் படம்]

இங்கே ஈஸ்டர் தீவில் காடுகளின் அழிவு ஒரு நாகரீகம் மறைந்துபோவதற்கே காரணமாக இருந்திருக்கக்கூடும்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்