அனுபவமுள்ளவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்
சபையில் இருக்கும் அனுபவமுள்ள சகோதர சகோதரிகளை நாம் மதிக்கிறோம். இவர்களில் சிலர் பல வருடங்களாக யெகோவாவுக்கு உண்மையோடு சேவை செய்கிறார்கள். சிலர், ஊழியம் செய்ய ஆரம்பித்து கொஞ்ச நாளிலேயே நிறைய திறமைகளை வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தக் கடைசி நாட்களில் சபையையும் பிரசங்க வேலையையும் இயேசு எப்படி வழிநடத்துகிறார் என்பதை இவர்கள் பார்த்திருக்கிறார்கள். (மத். 28:19, 20) இந்தப் பிரசங்க வேலையை ஆர்வமாகச் செய்கிறார்கள். அதனால், இவர்களுக்கு ‘இயல்புக்கு மிஞ்சிய சக்தியை’ யெகோவா கொடுக்கிறார். எல்லா பிரச்சினையையும் சமாளிக்க அந்த சக்தி இவர்களுக்கு உதவுகிறது. (2 கொ. 4:7) கற்றுக்கொண்ட விஷயங்களை நமக்குச் சொல்லிக்கொடுக்க அவர்கள் ஆசைப்படுகிறார்கள். (சங். 71:18) நாமும் அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள எப்போதும் முயற்சி செய்ய வேண்டும். எப்படி?
அவர்களோடு ஊழியம் செய்யுங்கள்: நீங்கள் ரொம்ப காலமாக ஊழியம் செய்தாலும் சரி இப்போது ஊழியம் செய்ய ஆரம்பித்திருந்தாலும் சரி நன்றாக ஊழியம் செய்ய எல்லாருக்கும் பயிற்சி தேவை. அனுபவமுள்ளவர்களோடு சேர்ந்து ஊழியம் செய்தால் நிறைய கற்றுக்கொள்ளலாம். (பிப்ரவரி 15, 2015 காவற்கோபுரத்தில் “ஊழியத்துல ஆர்வம் குறையாம இருக்க என்ன செய்யலாம்?” என்ற கட்டுரையில் “புதிய பிரஸ்தாபிகளுக்கு உதவி செய்யுங்க” என்ற தலைப்பில் 3-வது பாராவைப் பாருங்கள்.) அனுபவமுள்ளவர்களோடு சேர்ந்து நீங்கள் ஊழியம் செய்திருக்கிறீர்களா? அவர்களிடம் இருந்து என்ன கற்றுக்கொண்டீர்கள்?
அனுபவமுள்ள பிரஸ்தாபிகளை உங்களோடு சேர்ந்து ஊழியம் செய்ய கூப்பிடுங்கள். ஒருவேளை வியாதியாலோ வயதானதாலோ அவர்களால் ஊழியத்திற்கு வர முடியவில்லை என்றால், உங்களோடு பைபிள் படிப்பவர்களை அவர்களுடைய வீட்டிற்கு அழைத்து சென்று படிப்பு நடத்துங்கள். படிப்பு முடிந்த பிறகு, இன்னும் நன்றாக எப்படிப் படிப்பு நடத்தலாம் என்று அவர்களிடம் கேளுங்கள்.
அவர்களோடு பேசிப் பழகுங்கள்: அவர்களோடு பேசிப் பழகும்போது அவர்களைப் பற்றி தெரிந்துகொள்ள முடியும். குடும்ப வழிபாட்டிற்கு அழைத்து அவர்களுடைய அனுபவத்தைக் கேளுங்கள். ஒருவேளை வியாதியாலோ வயதானதாலோ அவர்களால் வர முடியவில்லை என்றால், அவர்கள் வீட்டிற்கே சென்று குடும்ப வழிபாடு செய்யுங்கள். எப்படி யெகோவாவின் சாட்சி ஆனார்கள்? யெகோவாவுடைய சேவையில் என்ன ஆசீர்வாதங்கள் கிடைத்திருக்கிறது? அவர்கள் இருக்கும் இடத்தில் சபை எந்தளவுக்கு வளர்ச்சி அடைந்திருக்கிறது? யெகோவாவுக்கு சேவை செய்வதால் எப்படி சந்தோஷமாக இருக்கிறார்கள்? என்றெல்லாம் கேளுங்கள்.
அனுபவம் உள்ளவர்கள் எல்லாவற்றையும் சரியாகச் செய்ய வேண்டும் என்று நினைக்காதீர்கள். அவர்களைப் புரிந்து நடந்துகொள்ளுங்கள். அவர்கள் எல்லாரிடமும் வித்தியாசமான திறமை இருக்கிறது. (ரோ. 12:6-8) அவர்களில் சிலர் வயதானவர்கள். அதனால், நிறைய நேரம் எடுத்து நமக்குக் கற்றுக்கொடுக்க முடியாமல் போகலாம். ஆனால், நிறைய வருடங்களாக யெகோவாவுக்கு உண்மையோடு இருப்பதால் அவர்களுடைய வாழ்க்கையே நமக்கு ஒரு நல்ல பாடம்.