ஏப்ரல் 20-26, 2026
பாட்டு 49 யெகோவாவின் நெஞ்சத்தை மகிழ்விப்போம்
ஞானஸ்நானம்—அதைத் தள்ளிப்போடாதீர்கள்!
“இப்போதே அனுக்கிரகக் காலம்.”—2 கொ. 6:2.
என்ன கற்றுக்கொள்வோம்?
யெகோவாவிடம் நெருங்கிப்போவதற்கும் ஞானஸ்நானம் எடுப்பதற்கும் இதுதான் சரியான சமயம்.
1. (அ) ஞானஸ்நானம் எடுப்பதால் நமக்குக் கிடைக்கிற சில நன்மைகள் என்ன? (ஆ) இந்தக் கட்டுரையில் எதைப் பற்றியெல்லாம் பார்ப்போம்?
நீங்கள் உங்களையே யெகோவாவுக்கு அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுத்திருக்கிறீர்களா? அப்படியென்றால், நல்ல மனசாட்சிக்காக நீங்கள் கடவுளிடம் வேண்டியிருக்கிறீர்கள் என்று சொல்லலாம். (1 பே. 3:21) நீங்கள் எடுத்திருக்கிற முடிவு, ஒரு நல்ல முடிவு! இந்த முடிவை எடுத்ததன் மூலம், சபையில் இருக்கிற இளைஞர்களுக்கும் புதியவர்களுக்கும் ஒரு நல்ல முன்மாதிரி வைத்திருக்கிறீர்கள். ஒருவேளை, நீங்கள் இன்னும் ஞானஸ்நானம் எடுக்கவில்லையா? உங்களுக்கு யெகோவாமேல் அன்பு இருக்கிறது என்றும், அவருடைய விருப்பத்தைச் செய்ய நீங்கள் ஆசைப்படுகிறீர்கள் என்றும் எங்களுக்குத் தெரியும். பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கும் யெகோவாவின் அங்கீகாரம் கிடைப்பதற்கும் ஞானஸ்நானம் ரொம்ப முக்கியம் என்பதை நீங்கள் தெரிந்துவைத்திருப்பீர்கள். (அப். 2:38-40) இருந்தாலும், ஏதோவொரு காரணத்துக்காக நீங்கள் தயங்கிக்கொண்டு இருக்கலாம். இந்தக் கட்டுரையில் நாம் பார்க்கப்போகும் மூன்று கேள்விகளுக்கான பதில்கள் உங்களுக்கு உதவும். (1) ஏன் சிலர் ஞானஸ்நானம் எடுக்க தயங்குகிறார்கள்? (2) உலகத்துக்கு முடிவு நெருங்கிவிட்டதை ஞாபகம் வைத்துக்கொள்வது ஏன் நல்லது? (3) ஞானஸ்நானத்தைத் தள்ளிப்போடாமல் இருப்பதால் எப்படி நன்மையடைவோம்?
சிலர் ஏன் தயங்குகிறார்கள்
2. சிலர் ஏன் ஞானஸ்நானத்தைத் தள்ளிப்போடுகிறார்கள்?
2 பயம். சிலர் ஞானஸ்நானத்தைத் தள்ளிப்போடுவதற்கு இது ஒரு காரணம். அவர்கள் யெகோவாவுக்குச் சேவை செய்ய நினைத்தாலும், அவரைச் சந்தோஷப்படுத்தும் அளவுக்குத் தங்களால் வாழ முடியாது என்று நினைத்து பயப்படுகிறார்கள். உங்களுக்கும் அந்தப் பயம் இருக்கிறதா? அப்படியென்றால், குறிப்பிட்ட சில பைபிள் வசனங்களை நீங்கள் படித்துப் பார்க்கலாம். அதாவது, நாம் குறையுள்ளவர்கள் என்று யெகோவா புரிந்துகொள்கிறார் என்பதைக் காட்டும் வசனங்களையும், நம்மால் முடிந்த சிறந்ததைக் கொடுக்கும்போது அதைப் பார்த்து அவர் சந்தோஷப்படுகிறார் என்பதைக் காட்டும் வசனங்களையும் நீங்கள் படித்துப் பார்க்கலாம். (சங். 103:13, 14; கொலோ. 3:23) ஒருவேளை, எதிர்ப்பை நினைத்து நீங்கள் பயப்படுகிறீர்களா? அப்படியென்றால், சங்கீதக்காரர் ஒருவருக்கு இருந்த அதே நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள உதவும்படி யெகோவாவிடம் கேளுங்கள். அந்தச் சங்கீதக்காரர் இப்படிச் சொன்னார்: “யெகோவா என் பக்கத்தில் இருக்கிறார், நான் பயப்பட மாட்டேன். மனிதனால் என்னை என்ன செய்ய முடியும்?”—சங். 118:6.
3. எப்படிப்பட்ட எண்ணம் இருப்பதால் சிலர் ஞானஸ்நானத்தைத் தள்ளிப்போடுகிறார்கள்? (படத்தையும் பாருங்கள்.)
3 போதுமான அளவு தெரியவில்லை என்ற எண்ணம். யெகோவாவை நேசிக்கிற சிலருக்கு இப்படிப்பட்ட எண்ணம் இருப்பதால் ஞானஸ்நானத்தைத் தள்ளிப்போடுகிறார்கள். ஆனால், ஞானஸ்நானம் எடுப்பதற்கு உங்களுக்கு உண்மையிலேயே எவ்வளவு தெரிந்திருக்க வேண்டும்? பைபிளில் இருக்கும் ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். அப்போஸ்தலன் பவுலும் சீலாவும் சிறையில் தள்ளப்பட்டிருந்த சமயத்தில் ஒரு நிலநடுக்கம் வந்தது. அப்போது, சிறைக்காவலரிடமும் அவருடைய குடும்பத்தாரிடமும் அவர்கள் சாட்சி கொடுத்தார்கள். கடவுள் தன் ஊழியர்களை விடுதலை செய்வதற்காக அங்கே ஒரு அற்புதத்தைச் செய்திருக்கிறார் என்பதை அந்தக் குடும்பம் ஒருவேளை புரிந்திருக்கலாம். அந்த ராத்திரியே அவர்கள் யெகோவாவைப் பற்றியும் இயேசுவைப் பற்றியும் நிறைய முக்கியமான விஷயங்களைத் தெரிந்துகொண்டார்கள். அதனால், “தாமதிக்காமல் உடனடியாக ஞானஸ்நானம் எடுத்தார்கள்.” (அப். 16:25-33) இப்போது உங்கள் விஷயத்துக்கு வரலாம். உங்களுக்கு யெகோவாவைப் பற்றித் தெரியுமா? நீங்கள் அவரை முழுமனதோடு நேசிக்கிறீர்களா? (மாற். 12:30) அடிப்படை பைபிள் போதனைகள் உங்களுக்குத் தெரியுமா? உங்கள் பாவங்களிலிருந்து மனம் திருந்தியிருக்கிறீர்களா? யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி வாழ உறுதியாக இருக்கிறீர்களா? அப்படியென்றால், நீங்கள் ஞானஸ்நானத்துக்குத் தயார் என்றுதான் அர்த்தம்!
பவுலும் சீலாவும் சிறைக்காவலருக்கும் அவருடைய குடும்பத்துக்கும் சாட்சி கொடுத்தார்கள். அவர்கள் “தாமதிக்காமல் உடனடியாக ஞானஸ்நானம் எடுத்தார்கள்” (பாரா 3)
4. சிலர் எதைப் பற்றிக் கவலைப்படுவதால் ஞானஸ்நானம் எடுக்க தயங்குகிறார்கள்? (படத்தையும் பாருங்கள்.)
4 நிறைய தியாகங்களைச் செய்ய வேண்டியிருக்குமோ என்ற தயக்கம். சிலர் யெகோவாவைச் சந்தோஷப்படுத்த நினைக்கலாம், ஆனால் அவர்கள் செய்ய வேண்டிய தியாகங்கள் மலைபோல் தெரியலாம். ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பு, செலவைக் கணக்குப் பார்ப்பது, அதாவது என்னென்ன தியாகங்களைச் செய்ய வேண்டியிருக்கும் என்று யோசிப்பது, நல்லதுதான். (லூக். 14:27-30) ஆனால் சிலர், வெறுமனே தியாகங்களைப் பற்றியே யோசித்துக் கவலைப்படலாம். கேன்டஸ் என்ற பெண்ணும் அப்படி யோசித்தார். அவருக்குச் சின்ன வயதிலேயே சத்தியம் தெரியவந்தது. ஆனால், அவர் அதன்படி வாழவில்லை. வளர்ந்து பெரியவராக ஆன பிறகு, பைபிள் படிப்பு படிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. கேன்டஸ் சொல்கிறார்: “யெகோவாவைச் சந்தோஷப்படுத்த நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியும். இருந்தாலும், எனக்குள் ஒரு தயக்கம் இருந்தது. ஏனென்றால், நான் ஏற்கெனவே செய்துகொண்டிருந்த சில விஷயங்கள் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அதையெல்லாம் விட்டுவிட்டு வருவது கஷ்டம் என்று தோன்றியது.” வேறுசிலர், ‘ஞானஸ்நானத்துக்குப் பிறகு, ரொம்ப உயர்ந்த ஒழுக்க நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டுமே!’ என்று தயங்கலாம். ‘பெரிய தவறு செய்துவிட்டால் சபையிலிருந்து நீக்கிவிடுவார்களே!’ என்றுகூட அவர்கள் பயப்படலாம். இப்படிப்பட்ட விஷயங்களை நினைத்து நீங்களும் தயங்குகிறீர்களா? நீங்கள் என்ன செய்யலாம்?
சிலர் யெகோவாவைச் சந்தோஷப்படுத்த நினைத்தாலும், செய்ய வேண்டிய தியாகங்களை நினைத்து கவலைப்படுகிறார்கள் (பாரா 4)
5. ஞானஸ்நானம் எடுப்பதற்கு முன்பு நாம் எதைப் பற்றி அதிகமாக யோசிக்க வேண்டும்? (மத்தேயு 13:44-46)
5 ஒரு பொருளை வாங்க நினைக்கும்போது, அதற்காக எவ்வளவு செலவு செய்ய வேண்டியிருக்கும் என்று நாம் யோசிப்போம். ஆனால், அந்தப் பொருளின் விலையைவிட அதன் மதிப்பு ரொம்பவே உயர்ந்தது என்பதை நாம் புரிந்திருந்தால், அதை உடனே வாங்கிவிடுவோம். ஞானஸ்நானத்தைப் பொறுத்தவரைக்கூட அதுதான் உண்மை! ஞானஸ்நானம் எடுப்பதற்காக நாம் கொடுக்கிற விலையைப் பற்றியே, அதாவது நாம் செய்கிற தியாகங்களைப் பற்றியே, யோசித்துக்கொண்டிருக்காமல் ஞானஸ்நானம் எடுப்பதால் கிடைக்கும் விலைமதிக்க முடியாத பொக்கிஷத்தைப் பற்றி யோசிக்க வேண்டும். அதாவது, யெகோவாவோடு நமக்குக் கிடைக்கிற பந்தம் எவ்வளவு மதிப்புள்ளது என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். இதைப் புரிந்துகொள்ள இயேசு இரண்டு உதாரணங்களைச் சொன்னார். (மத்தேயு 13:44-46-ஐ வாசியுங்கள்.) அந்த இரண்டு உதாரணங்களிலும், ஒரு நபர் ரொம்பவே மதிப்புள்ள ஒரு விஷயத்தைக் கண்டுபிடிக்கிறார். அதை வாங்குவதற்காக, தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் மனசார விற்கிறார். அந்த நபரைப் போலவே நீங்களும், ரொம்ப ரொம்ப மதிப்புள்ள ஒரு விஷயத்தைக் கண்டுபிடித்திருக்கிறீர்கள். அதுதான் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய உண்மைகள்! ‘இந்த உண்மைகளின்படி வாழ்வதற்காக இவ்வளவு தியாகங்கள் செய்ய வேண்டியிருக்கிறதே’ என்று நீங்கள் நினைத்தால், இயேசு சொன்ன உதாரணங்களை ஆழமாக யோசித்துப் பாருங்கள். இந்தக் கேள்விகளைக்கூட நீங்கள் கேட்டுக்கொள்ளலாம்: ‘ரொம்பவே மதிப்புள்ள ஒன்றை நான் கண்டுபிடித்திருக்கிறேன் என்று உண்மையிலேயே நம்புகிறேனா? யெகோவாவோடு எனக்கு இருக்கிற பந்தத்தையும்... அவர் கொடுத்திருக்கிற எதிர்கால நம்பிக்கையையும்... அன்பான சகோதர சகோதரிகளையும்... ஒரு பொக்கிஷமாகப் பார்க்கிறேனா?’ உங்கள் பதிலை வைத்து, ஞானஸ்நானம் எடுப்பதற்கு எதில் உழைக்க வேண்டும் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள முடியும்.
6. நாம் எப்படி நல்ல இதயத்தை வளர்த்துக்கொள்ளலாம்?
6 இதய நிலை. விதைப்பவனைப் பற்றிய ஒரு உவமையை இயேசு சொன்னார். ஒரு நபர் முன்னேற்றம் செய்யாமல் போவதற்கு அவருடைய இதய நிலை காரணமாக இருக்கலாம் என்று அதில் அவர் விளக்கினார். ஆனால், சிலருக்கு ‘நேர்மையான நல்ல இதயம்’ இருப்பதால் அவர்கள் நல்ல செய்தியை உடனே ஏற்றுக்கொள்வார்கள் என்றும் அவர் சொன்னார். (லூக். 8:5-15) உங்களுடைய இதயம் எப்படி இருக்கிறது? நல்ல செய்தியின்படி வாழ்வதற்கு உங்கள் இதயம் ஒத்துழைக்கவில்லையா? அப்படியென்றால், சோர்ந்துவிடாதீர்கள்! யெகோவாவின் உதவியோடு உங்களால் ‘இதயத்தைப் புதிதாக்க’ முடியும். அப்படிப்பட்ட ஒரு இதயம், யெகோவாவின் வழிநடத்துதலுக்குக் கீழ்ப்படிய உங்களுக்கு உதவும். அதனால், சத்தியத்தின் விதை வேர்விட்டு வளர்வதற்கு ஏற்ற மாதிரி, உங்கள் இதயத்தை மென்மையாக்கும்படி யெகோவாவிடம் கேளுங்கள்.—எசே. 18:31; 36:26.
7-8. சில இளம் பிள்ளைகள் ஞானஸ்நானம் எடுக்கும் அளவுக்கு ஏன் முன்னேறாமல் போய்விடுகிறார்கள்? (படத்தையும் பாருங்கள்.)
7 மற்றவர்களின் செல்வாக்கு. சில இளம் பிள்ளைகள் யெகோவாவை நேசித்தாலும், ஞானஸ்நானம் எடுக்கும் அளவுக்கு முன்னேறாததற்குக் காரணம், மற்றவர்களுடைய செல்வாக்கு. உதாரணத்துக்கு, பள்ளியில் இருக்கிற சில ஆசிரியர்கள், ஒழுக்க விஷயங்களைப் பொறுத்தவரை “பரந்த மனப்பான்மையோடு” எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளும்படி உற்சாகப்படுத்தலாம். ஆனால் அப்படிப்பட்ட விஷயங்கள், யெகோவா வெறுக்கிற காரியங்களாக இருக்கலாம். இதுபோன்ற ஆலோசனைகள் இளம் பிள்ளைகளின் வாழ்க்கையைச் சீரழித்துவிடலாம். (சங். 1:1, 2; நீதி. 7:1-5) இந்த ஆபத்தைத் தவிர்க்க, சங்கீதக்காரர் செய்த மாதிரி நீங்களும் செய்யலாம். அவர் யெகோவாவிடம் இப்படிச் சொன்னார்: “உங்கள் நினைப்பூட்டுதல்களைப் பற்றி ஆழமாக யோசிக்கிறேன். அதனால், என்னுடைய எல்லா போதகர்களையும்விட விவேகமாக நடந்துகொள்கிறேன்.”—சங். 119:99.
8 சில இடங்களில், பெற்றோர்களே பிள்ளைகளின் ஞானஸ்நானத்துக்குத் தடையாக இருப்பது தெரியவந்திருக்கிறது. பிள்ளைகளுக்கு நல்ல கல்வி கிடைக்க வேண்டும்... நல்ல வேலை கிடைக்க வேண்டும்... என்பதிலேயே பெற்றோர்கள் குறியாக இருக்கிறார்கள். அல்லது, யெகோவாவிடம் நெருங்கிப்போக பிள்ளைகளுக்கு உதவ வேண்டும் என்பதை அவர்கள் ஒரு பொருட்டாகவே நினைக்காமல் இருக்கிறார்கள். உங்கள் பெற்றோரும் இப்படித்தான் இருக்கிறார்கள் என்று உங்களுக்குத் தோன்றுகிறதா? ஆன்மீக விதத்தில் நீங்கள் முன்னேற அவர்களுடைய உதவி கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா? அப்படியென்றால், அதைப் பற்றி அவர்களிடம் மனம்விட்டு பேசுங்கள். நீங்கள் எந்த வயதில் இருந்தாலும் சரி, உங்களால் கண்டிப்பாக யெகோவாவிடம் நெருங்கிப்போக முடியும்.—நீதி. 20:11.
ஞானஸ்நானம் எடுக்க நீங்கள் ஆசைப்படுவதைப் பற்றி உங்கள் அப்பா-அம்மாவிடம் மனம்திறந்து பேசுங்கள் (பாரா 8)
9. வேறுசிலர் ஏன் ஞானஸ்நானத்தைத் தள்ளிப்போடுகிறார்கள்?
9 சிலர் ஞானஸ்நானம் எடுக்கும் அளவுக்கு முன்னேறியிருக்கலாம்; ஆனால், மற்றவர்களுக்காகக் காத்துக்கொண்டு அதைத் தள்ளிப்போடலாம். உதாரணத்துக்கு, தங்களுடைய நண்பரோ குடும்பத்தில் இருக்கிற ஒருவரோ ஞானஸ்நானம் எடுக்கும் அதே நாளில் தாங்களும் எடுக்க வேண்டும் என்று நினைக்கலாம். பிடித்தவர்களோடு சேர்ந்து ஞானஸ்நானம் எடுப்பதில் தவறில்லைதான். ஆனால் இந்தக் காரணத்துக்காக, உங்கள் ஞானஸ்நானத்தைத் தள்ளிப்போடுவது சரியாக இருக்குமா? யெகோவாவுக்கு அர்ப்பணிப்பது என்பது நீங்கள் தனிப்பட்ட விதத்தில் அவருக்குக் கொடுக்கும் வாக்குறுதி. மற்றவர்கள் எப்போது ஞானஸ்நானம் எடுக்கிறார்கள் என்பதைப் பொறுத்து உங்கள் ஞானஸ்நானம் இருக்கக் கூடாது.—ரோ. 14:12.
முடிவு நெருங்கிவிட்டதை மறந்துவிடாதீர்கள்
10. சிலர் ஆன்மீக விதத்தில் முன்னேறாமல் இருப்பதற்கு எது காரணமாக இருக்கலாம்?
10 சிலர் ஆன்மீக விதத்தில் முன்னேறாமல் இருப்பதற்கு வேறொரு காரணம் இருக்கலாம். உலகத்தின் முடிவுக்கு இன்னும் நிறைய காலம் இருக்கிறது என்ற எண்ணம் அவர்களுக்கு இருக்கலாம். இந்த எண்ணம் சரியா? இயேசு தன்னுடைய சீஷர்களிடம் இந்த எச்சரிப்பைக் கொடுத்தார்: “தயாராயிருங்கள்; ஏனென்றால், நீங்கள் நினைக்காத நேரத்தில் மனிதகுமாரன் வருவார்.”—லூக். 12:40.
11. யெகோவாவைப் பற்றி நிறைய தெரிந்துகொள்ளும்போது, நாம் என்ன செய்ய தூண்டப்படுவோம், ஏன்? (சங்கீதம் 119:60)
11 யெகோவாமேல் இருக்கிற அன்பால் தூண்டப்பட்டு நாம் நம்மையே அவருக்கு அர்ப்பணிக்கிறோம். யெகோவாவைப் பற்றி நாம் அதிகமாகத் தெரிந்துகொள்ளும்போது, அவருடைய கட்டளைகளை நேசிப்போம்; அவற்றுக்கு உடனடியாகக் கீழ்ப்படிய வேண்டும் என்று ஆசைப்படுவோம். (சங்கீதம் 119:60-ஐ வாசியுங்கள்.) யெகோவாவின் கட்டளைகளுக்கு உடனடியாகக் கீழ்ப்படிவது ஏன் முக்கியம் என்பதற்கு யாக்கோபு இன்னொரு காரணத்தைச் சொன்னார்: நாளைக்கு என்ன நடக்கும் என்று யாருக்குமே தெரியாது. “சரியானதைச் செய்ய” நமக்கு இன்னொரு நாள் இல்லாமலேயே போய்விடலாம்; அதனால், உடனடியாகச் செயல்படுவது ரொம்ப ரொம்ப முக்கியம்!—யாக். 4:13-17.
12. இயேசு சொன்ன உதாரணத்திலிருந்து என்ன கற்றுக்கொள்கிறோம்?
12 திராட்சைத் தோட்டத்தைப் பற்றி இயேசு சொன்ன உதாரணத்திலிருந்து என்ன கற்றுக்கொள்கிறோம்? ஒருநாள் முழுவதும் வேலை செய்தவர்களுக்குக் கிடைத்த அதே கூலி, வெறுமனே ஒரு மணிநேரத்துக்கு வேலை செய்தவர்களுக்கும் கிடைத்தது என்று இயேசு சொன்னார். ஆனால், ஒரு மணிநேரம் வேலை செய்தவர்கள் ஏன் முன்பே வேலையை ஆரம்பிக்கவில்லை? “யாருமே எங்களுக்கு வேலை தரவில்லை” என்று அவர்கள் சொன்னார்கள். அப்படியென்றால், அவர்கள் ஒருநாள் முழுவதையும் சோம்பேறித்தனமாகக் கழிக்கவில்லை; அவர்களை யாருமே வேலைக்குக் கூப்பிடவில்லை, அவ்வளவுதான்! ஆனால், வேலைக்குக் கூப்பிட்ட உடனேயே மற்றவர்களோடு சேர்ந்து களத்தில் இறங்கினார்கள். (மத். 20:1-16) இன்று இயேசு நம்மையும் அழைத்திருக்கிறார். தன்னுடைய சீஷர்களாக இருப்பதற்கும் கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகளைச் செய்வதற்கும் அவர் நம்மை அழைத்திருக்கிறார். இயேசுவின் அழைப்பைக் கேட்டவுடனே நாம் களத்தில் இறங்குவதுதானே சரியாக இருக்கும்!
13. லோத்துவின் மனைவியிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
13 ஆன்மீக விதத்தில் முன்னேறுவதைத் தள்ளிப்போடுகிற சிலர் இப்படி நினைக்கலாம்: ‘யெகோவாவுக்குப் பிடிக்காத விஷயங்களைக் கடைசி நிமிஷத்தில் விட்டுவிட்டு வந்துவிடலாம்! அதை அப்போது பார்த்துக்கொள்ளலாம்!!’ ஆனால், அப்படிச் செய்வது சுலபம் அல்ல! இயேசுவுக்கு இது தெரிந்திருந்தது. அதனால்தான் தன்னுடைய சீஷர்களிடம், “லோத்துவின் மனைவியை நினைத்துப் பாருங்கள்” என்று எச்சரித்தார். (லூக். 17:31-35) சோதோம்-கொமோராவை யெகோவா சீக்கிரத்தில் அழிக்கப்போகிறார் என்று லோத்துவின் மனைவிக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. இருந்தாலும், சொத்துப்பத்துகள்மேல் அவளுக்கு இருந்த பிணைப்பை அவளால் வெட்டி எறிய முடிவில்லை. கடைசி நிமிஷத்தில் அதை விட்டுவிட்டு வருவது அவளுக்குக் கஷ்டமாக இருந்தது! (ஆதி. 19:23-26) இதிலிருந்து நாம் இன்னொரு பாடத்தையும் கற்றுக்கொள்கிறோம்: மீட்புக்கான கதவு என்றென்றும் திறந்திருக்காது. கடவுள் முடிவு செய்திருக்கிற நேரத்தில் அந்தக் கதவு மூடப்படும்! நிரந்தரமாகப் பூட்டப்படும்!!—லூக். 13:24, 25.
14. பைபிள் தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றத்தை நீங்கள் ஏன் கவனமாகப் பார்க்க வேண்டும்?
14 ஒவ்வொரு நாள் கடந்துபோகும்போதும், கடைசி நாட்களைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள் நிறைவேறுவதை உலக சம்பவங்கள் நிரூபிக்கின்றன. அந்தச் சம்பவங்களால் நீங்கள் நேரடியாகப் பாதிக்கப்படவில்லை என்றாலும், அடுத்தடுத்து நிறைய இடங்களில் அவை நிறைவேறுவதைப் பார்க்கும்போது, ஞானஸ்நானம் எடுப்பது எவ்வளவு அவசரம் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். முதல் நூற்றாண்டில் நடந்த ஒரு விஷயத்தை யோசியுங்கள். அப்போஸ்தலன் பேதுரு அன்றிருந்த கிறிஸ்தவர்களிடம், “எல்லாவற்றுக்கும் முடிவு நெருங்கிவிட்டது; அதனால் . . . விழிப்போடு இருங்கள்” என்றார். (1 பே. 4:7) பேதுரு இங்கே “முடிவு” என்று சொன்னபோது, எருசலேமுக்கும் அதிலிருந்த ஆலயத்துக்கும் வரவிருந்த முடிவைப் பற்றிச் சொன்னதாகத் தெரிகிறது. ஆனால், பேதுரு இந்தக் கடிதத்தை யாருக்கு எழுதினாரோ, அவர்கள் எருசலேமிலிருந்து ரொம்ப தூரத்தில் இருந்தார்கள்; எருசலேமின் அழிவால் அவர்கள் நேரடியாகப் பாதிக்கப்பட மாட்டார்கள். (1 பே. 1:1) இருந்தாலும், அந்தத் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்தைப் பார்க்கும்போது, யெகோவா கொடுத்த மற்ற வாக்குறுதிகளும் கண்டிப்பாக நிறைவேறும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு அதிகமாகும். அதேமாதிரி இன்று, முடிவு காலத்தைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள் நிறைவேறுவதைப் பார்க்கும்போது, விழிப்போடு இருந்து சீக்கிரம் ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் என்ற தூண்டுதல் உங்களுக்கு வரும்.
15. யெகோவாவின் நாளுக்காக நாம் எப்படித் தயாராக இருக்கலாம்? (2 பேதுரு 3:10-13)
15 பேதுரு எழுதிய இரண்டாவது கடிதத்தில் யெகோவாவின் நாளுக்காக, அதாவது இந்த உலகத்தின் முடிவுக்காக, நாம் எப்படித் தயாராக இருக்கலாம் என்று எழுதினார். முதல் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவர்களுக்கு, யெகோவாவின் நாள் ரொம்ப தூரத்தில்தான் இருந்தது. இருந்தாலும், அவர்கள் அந்த நாளை “எப்போதும் மனதில் வைத்து” வாழ வேண்டும், அதாவது அதற்காக “ஆசையாக எதிர்பார்த்து” இருக்க வேண்டும், என்று பேதுரு சொன்னார். (2 பேதுரு 3:10-13-ஐ வாசியுங்கள்; அடிக்குறிப்பு) நாமும் எப்படி யெகோவாவின் நாளை மனதில் வைத்து வாழலாம்? அந்த நாளுக்காக எப்போதும் தயாராக இருப்பதன் மூலமும், அதற்காக ஆவலோடு இருப்பதன் மூலமும் அப்படிச் செய்யலாம். “பரிசுத்த நடத்தை உள்ளவர்களாகவும் கடவுள்பக்திக்குரிய செயல்களைச் செய்கிறவர்களாகவும்” இருப்பதன் மூலம், அதற்காக ஆசையாகக் காத்திருப்பதைக் காட்டலாம். இப்படிப்பட்ட செயல்கள், யெகோவாவை எவ்வளவு சந்தோஷப்படுத்தும் என்று யோசித்துப் பாருங்கள்! யெகோவாவுக்கு உங்களையே அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுக்கும்போது, அவர் உண்மையிலேயே பூரித்துப்போவார்!!
தள்ளிப்போடாமல் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்
16. ஞானஸ்நானம் எடுக்க எது சரியான சமயம்? (2 கொரிந்தியர் 6:1, 2) (படங்களையும் பாருங்கள்.)
16 ஞானஸ்நானத்துக்காக முன்னேற இதுதான் சரியான சமயம்! (2 கொரிந்தியர் 6:1, 2-ஐ வாசியுங்கள்.) பிலிப்பு சந்தித்த எத்தியோப்பிய அதிகாரி, உடனே ஞானஸ்நானம் எடுப்பது எவ்வளவு முக்கியம் என்பதைப் புரிந்துவைத்திருந்தார். ‘முதலில் நல்ல செய்தியைப் பற்றி நான் நிறைய கற்றுக்கொள்கிறேன். போகிற வழியில் வேறு எங்கேயாவது தண்ணீர் இருக்கும். அங்கே ஞானஸ்நானம் எடுத்துக்கொள்ளலாம்’ என்று அவர் யோசிக்கவில்லை. நல்ல செய்தியைப் புரிந்துகொண்ட உடனே... ஞானஸ்நானம் எடுப்பதற்கான வாய்ப்பு கிடைத்த உடனே... அவர் செயலில் இறங்கினார். “ஞானஸ்நானம் எடுக்க இனி எனக்கு என்ன தடை?” என்று கேட்டார். (அப். 8:26, 27, 35-39) எவ்வளவு அருமையான முன்மாதிரி! ஞானஸ்நானம் எடுத்த பிறகு “அவர் சந்தோஷமாகத் தன் வழியில் போனார்.”
எத்தியோப்பிய அதிகாரியிடமிருந்து கற்றுக்கொள்ளும் முக்கியமான பாடம்: ஞானஸ்நானம் எடுக்க இதுதான் சரியான சமயம்! (பாரா 16)a
17. எந்த விஷயத்தில் நீங்கள் உறுதியோடு இருக்கலாம்?
17 ஞானஸ்நானம் எடுக்க உங்களுக்குத் தயக்கமாக இருந்தால், இந்த விஷயத்தில் உறுதியோடு இருங்கள்: தன்னோடு ஒரு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்ள விரும்புகிறவர்களுக்கு உதவ யெகோவா தயாராக இருக்கிறார்! (ரோ. 2:4) பயம், கவலை, மற்றவர்களுடைய செல்வாக்கு போன்ற தடைகளைத் தாண்டி வர அவர் உங்களுக்கு உதவுவார். ஞானஸ்நானத்தின் மூலம் அவர்முன் உங்களுக்கு ஒரு நல்ல மனசாட்சி கிடைக்கும்; அப்போது, “பின்னால்” இருக்கிற விஷயங்கள், அதாவது விட்டுவந்த விஷயங்கள், உங்களுக்குப் பெரிதாகத் தெரியாது. (பிலி. 3:8, 13) “முன்னால்” இருக்கிற விஷயங்களுக்காக ஆசையாகக் காத்திருப்பீர்கள். அதாவது, தனக்கு அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுத்தவர்களுக்காக யெகோவா கொடுத்திருக்கிற வாக்குறுதிகள் நிறைவேறுவதைப் பார்க்க நீங்கள் ஆசையாக இருப்பீர்கள்.—அப். 3:19.
பாட்டு 38 அவர் உன்னைப் பலப்படுத்துவார்
a படவிளக்கம்: ஞானஸ்நானம் எடுக்க ஆசைப்படுவதாக எத்தியோப்பிய அதிகாரி பிலிப்புவிடம் சொன்னது போலவே, இன்றும் பைபிள் படிப்பு படிக்கும் ஒரு பெண், மூப்பர்களிடம் சொல்கிறார்.