உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w26 பிப்ரவரி பக். 20-25
  • ஞானஸ்நானத்துக்குப் பிறகு வரும் சவால்களுக்குத் தயாராகுங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஞானஸ்நானத்துக்குப் பிறகு வரும் சவால்களுக்குத் தயாராகுங்கள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2026
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ஒரு சகோதரரோ சகோதரியோ உங்களைக் காயப்படுத்தும்போது...
  • விட்டுவந்த விஷயங்களை நினைத்து ஏங்கும்போது...
  • மற்றவர்கள் யெகோவாவைவிட்டு போகும்போது...
  • ‘உள்ளம் உடைந்தவர்களை யெகோவா குணமாக்குகிறார்’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2024
  • அடக்கத்தைக் காட்டுங்கள்​—நமக்கு எல்லாம் தெரியாது!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
  • யெகோவா “உயிருள்ள கடவுள்” என்பதை மறந்துவிடாதீர்கள்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2024
  • ஒருவரோடு ஒருவர் நெருங்கிப் போவது நமக்கு நல்லது!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2026
w26 பிப்ரவரி பக். 20-25

ஏப்ரல் 27–மே 3, 2026

பாட்டு 99 மாபெரும் குடும்பம்

ஞானஸ்நானத்துக்குப் பிறகு வரும் சவால்களுக்குத் தயாராகுங்கள்

“உங்களுடைய பாதைகளிலேயே நடக்க எனக்கு உதவி செய்யுங்கள்.”—சங். 17:5.

என்ன கற்றுக்கொள்வோம்?

புதிதாக ஞானஸ்நானம் எடுத்த கிறிஸ்தவர்கள் தங்களுக்கு வருகிற சவால்களைச் சமாளிக்க எப்படித் தயாராகலாம் என்று பார்ப்போம்.

1-2. ஞானஸ்நானத்துக்குப் பிறகு வரும் சவால்களைச் சந்திக்க தயாராவதற்கு என்னென்ன படிகளை எடுக்கலாம்? உதாரணம் சொல்லுங்கள்.

சாத்தானுடைய உலகத்தில் நமக்குப் பிரச்சினைகள் வரும் என்று நாம் எதிர்பார்க்கலாம். “மக்களைப் பாவம் செய்ய வைக்கிற காரியங்கள் கண்டிப்பாக வரும்” என்ற எதார்த்தமான எச்சரிப்பை இயேசுவும் கொடுத்தார். (மத். 18:7, அடிக்குறிப்பு) அந்த எச்சரிப்பை மனதில் வைத்து, நமக்கு வரும் சவால்களைச் சமாளிக்க நாம் தயாராக வேண்டும். சகோதர சகோதரிகளோடு வரும் பிரச்சினைகளும் இதில் அடங்கும்.

2 இந்த உதாரணத்தை யோசித்துப் பாருங்கள்: இயற்கை பேரழிவுகளுக்காகத் தயாராகச் சொல்லி அமைப்பு நம்மிடம் சொல்கிறது. நாம் எப்படித் தயாராகிறோம்? முதலில், நாம் வாழ்கிற இடத்தில் என்னென்ன இயற்கை பேரழிவுகள் வரலாம் என்பதைக் கண்டுபிடிப்போம். அதுவும், அந்த இடத்துக்குப் புதிதாகக் குடிமாறி வந்திருந்தால், அதைத் தெரிந்துகொள்வது ரொம்ப முக்கியம். பிறகு, அந்த இயற்கை பேரழிவிலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை முன்பே யோசித்து வைப்போம். (நீதி. 21:5) அதேமாதிரிதான், ஞானஸ்நானத்துக்குப் பிறகு நமக்கு என்னென்ன சவால்கள் வரலாம் என்பதை முன்பே யோசிக்க வேண்டும்; அதற்காக முன்பே தயாராக வேண்டும். அப்படிச் செய்தால், அந்தச் சவால்களால் நமக்குப் பெரிய பாதிப்பு ஏற்படாது, யெகோவாவோடு நமக்கு இருக்கும் உறவும் பாதிக்கப்படாது. (சங். 17:5) என்ன மூன்று சவால்கள் நமக்கு வர வாய்ப்பு இருக்கிறது என்று இப்போது பார்க்கலாம். அவை ஒவ்வொன்றுக்கும் எப்படித் தயாராகலாம் என்றும் பார்க்கலாம்.a

ஒரு சகோதரரோ சகோதரியோ உங்களைக் காயப்படுத்தும்போது...

3. சபையில் நமக்கு என்ன சவால் வரலாம்?

3 முதல்முறையாகக் கூட்டத்துக்கு வந்தபோது உங்களுக்கு எப்படி இருந்தது? யெகோவாவின் மக்கள் மத்தியில் இருக்கிற அன்பைப் பார்த்தபோது எப்படி உணர்ந்தீர்கள்? ‘உண்மை மதத்தைக் கண்டுபிடித்துவிட்டேன்!’ என்று உங்களுக்குத் தோன்றியிருக்கும். (யோவா. 13:35; கொலோ. 3:12) பிளாங்க்காb என்ற சகோதரிக்கும் அப்படித்தான் இருந்தது. ஆனால் அவர் ஞானஸ்நானம் எடுத்த பிறகு, எதிர்பார்க்காத ஒரு விஷயம் நடந்தது. “ஒரு சகோதரி என்னிடம் அன்பில்லாமல், கடுகடுப்பாக நடந்துகொண்டார். அவர் மற்றவர்களைப் பற்றித் தப்புத் தப்பாகப் பேசுவதையும் நான் பார்த்தேன். இதை நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால், யெகோவாவின் சாட்சிகள் சமாதானத்தை விரும்புகிறவர்கள்... மற்றவர்களிடம் அன்பாக நடந்துகொள்கிறவர்கள்... என்றுதான் நான் படித்திருக்கிறேன், அதைத்தான் பார்த்திருக்கிறேன்” என்கிறார் பிளாங்க்கா. உங்களுடைய சகோதர சகோதரிகள் கிறிஸ்தவ குணங்களை இன்னும் நன்றாக காட்டுவதற்காக கடினமாக உழைக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால், அவர்களும் பாவ இயல்பு உள்ளவர்கள். (எபே. 4:23, 24; 1 யோ. 1:8) அவர்கள் சொல்கிற, செய்கிற விஷயங்கள் சிலசமயத்தில் நம்மைக் காயப்படுத்திவிடலாம். (யாக். 3:8) வருத்தமான விஷயம் என்னவென்றால், இந்த மாதிரி சவால்களால் சிலர் யெகோவாவுக்குச் சேவை செய்வதையே நிறுத்தியிருக்கிறார்கள்.

4. ஒரு சகோதரரோ சகோதரியோ உங்களைக் காயப்படுத்தும் சூழ்நிலை வந்தால், அதைச் சமாளிக்க நீங்கள் எப்படி இப்போதே தயாராகலாம்? (எபேசியர் 4:32)

4 ஒரு சகோதரரோ சகோதரியோ உங்களைக் காயப்படுத்தும் சூழ்நிலை வந்தால், அதைச் சமாளிக்க நீங்கள் எப்படி இப்போதே தயாராகலாம்? எபேசியர் 4:32-ல் இருக்கிற ஆலோசனைப்படி செய்வதைப் பழக்கமாக்கிக்கொள்ளுங்கள். (வாசியுங்கள்.) எப்போதுமே கருணையோடும் கரிசனையோடும் நடந்துகொள்ள முயற்சி செய்யும்போது, மற்றவர்களோடு தேவையில்லாத உரசல்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும். மற்றவர்கள் செய்யும் தவறுகளைத் தாராளமாக மன்னிக்க வேண்டும் என்ற குறிக்கோளையும் வையுங்கள். அதைச் செய்ய எது உதவும்? யெகோவாவிடம் நீங்கள் எத்தனை தடவை மன்னிப்பு கேட்கிறீர்கள் என்பதையும், அவர் எவ்வளவு தாராளமாக உங்களை மன்னிக்கிறார் என்பதையும் யோசித்துப் பாருங்கள். (மத். 6:12) இதை யோசிக்கும்போது, மற்றவர்களை மன்னிப்பது உங்களுக்குச் சுலபமாக இருக்கும்.

5. ஒருவர் நம்மைக் காயப்படுத்தும்போது எந்த பைபிள் நியமம் நமக்கு உதவும்? (நீதிமொழிகள் 19:11) (படங்களையும் பாருங்கள்.)

5 நீதிமொழிகள் 19:11-ஐ வாசியுங்கள். நம் மனம் காயப்பட்டிருக்கும்போது, விவேகம்c நம்முடைய கோபத்தைத் தணிக்கும் என்று பைபிள் சொல்கிறது. இந்த நியமம் ரீமா என்ற சகோதரிக்கு உதவியது. அவர் ஞானஸ்நானம் எடுத்து ஒருசில வருஷங்கள் ஆகிறது. ரீமா சொல்கிறார்: “சகோதர சகோதரிகள் என்னைக் காயப்படுத்தும்போது, நீதிமொழிகள் 19:11-ஐ நான் முதலில் ஞாபகப்படுத்திக்கொள்வேன். பிறகு, அவர்களுடைய சூழ்நிலையையும் அவர்கள் வளர்ந்த விதத்தையும் யோசித்துப் பார்ப்பேன். அவர்கள் ஏன் அப்படி நடந்திருக்கலாம் என்றும் யோசித்துப் பார்ப்பேன். அவர்களோடு சேர்ந்து ஊழியம் செய்ய முயற்சி செய்வேன். இப்படிச் செய்யும்போது, அவர்களை இன்னும் நன்றாகத் தெரிந்துகொள்ள முடிகிறது.” எவ்வளவு நல்ல ஆலோசனை! சகோதர சகோதரிகளைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு நாம் இப்போதே முயற்சி செய்ய வேண்டும். அவர்களைப் பற்றி நாம் எந்தளவுக்குப் புரிந்து வைத்திருக்கிறோமோ அந்தளவுக்கு அவர்களை மன்னிப்பது நமக்குச் சுலபமாக இருக்கும்.

படத்தொகுப்பு: 1. இரண்டு சகோதரர்கள் ராஜ்ய மன்றத்துக்கு வெளியே பராமரிப்பு வேலையைச் செய்கிறார்கள். ஒரு சகோதரர் பேசிய விதம் இன்னொருவரின் மனதைக் காயப்படுத்துகிறது. 2. பிறகு, புண்பட்ட சகோதரர் அவரைக் காயப்படுத்திய சகோதரரோடு சேர்ந்து சந்தோஷமாக வீட்டுக்கு வீடு ஊழியம் செய்கிறார்.

ஒரு சகோதரரோடோ சகோதரியோடோ உங்களுக்கு உரசல் ஏற்பட்டிருந்தால், அவரோடு சேர்ந்து ஊழியம் செய்யுங்கள் (பாரா 5)


6. சபையில் நல்ல நண்பர்கள் கிடைக்க நாம் என்ன செய்யலாம்?

6 சபையில் நல்ல நண்பர்கள் கிடைக்க நீங்கள் வேறென்ன செய்யலாம்? சகோதர சகோதரிகளோடு நெருங்கிப் பழகும்போது, அவர்களிடம் இருக்கிற நல்ல குணங்களை மட்டுமே பாருங்கள். (நீதிமொழிகள் 10:12-ஐ ஒப்பிடுங்கள்; ரோ. 12:10; பிலி. 2:2, 3) புதிதாக ஞானஸ்நானம் எடுத்த மார்க் என்ற சகோதரருடைய உதாரணத்தைக் கவனியுங்கள். சகோதர சகோதரிகளோடு பழக பழக, அவர்களிடம் இருக்கிற நிறைய குறைகள் அவருக்குத் தெரிய வந்தது. அந்தக் குறைகளைப் பார்த்து தடுமாறாமல் இருக்க அவருக்கு எது உதவியது? “அவர்களிடம் இருக்கிற சின்ன சின்ன குறைகளை நான் பூதக்கண்ணாடி வைத்து பார்த்துக்கொண்டு இருந்தேன் என்று பிறகுதான் எனக்குப் புரிந்தது. இந்த உலகத்தில் நடக்கிற மோசமான விஷயங்களோடு ஒப்பிட்டால் அந்தக் குறைகள் எல்லாம் ஒன்றுமே இல்லை. அதனால், சகோதர சகோதரிகளுடைய சின்ன சின்ன குறைகளை மனதில் போட்டு மெல்லாமல், அவர்களிடம் இருக்கிற நல்ல விஷயங்களை யோசிக்க ஆரம்பித்தேன்” என்கிறார் மார்க். இதேமாதிரி நாமும் செய்தால், சபையில் நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள்.

விட்டுவந்த விஷயங்களை நினைத்து ஏங்கும்போது...

7. விட்டுவந்த விஷயங்களை நினைத்து ஒருவர் ஏன் ஏங்க ஆரம்பிக்கலாம்?

7 சத்தியத்தைக் கற்றுக்கொண்டபோது சாத்தானுடைய மோசமான உலகத்திலிருந்து வெளியே வந்ததை நினைத்து நிம்மதிப் பெருமூச்சு விட்டிருப்பீர்கள். ‘யெகோவா கொடுக்கிற இந்த அருமையான வாழ்க்கையை விட்டு பழைய வாழ்க்கைக்கு யாராவது திரும்பிப் போவார்களா?’ என்றுகூட நீங்கள் நினைத்திருக்கலாம். ஆனால், பயங்கர இக்கட்டான ஒரு சூழ்நிலை வரும்போது, பழைய வாழ்க்கையை நீங்கள் நினைக்க ஆரம்பிக்கலாம்—ஏன், அதற்காக ஏங்கக்கூட ஆரம்பிக்கலாம்! (எண்ணாகமம் 11:4-6-ஐ ஒப்பிடுங்கள்.) சில சகோதரர்கள், ரொம்ப கவுரவமான, அதேசமயத்தில் அதிக நேரத்தை உறிஞ்சும் ஒரு வேலையை விட்டு வந்திருக்கலாம். வேறு சிலர், பைபிளைப் படிக்க ஆரம்பித்ததால் நெருங்கிய நண்பர்களை இழந்திருக்கலாம். இன்னும் சிலர், அசுத்தமான ஒரு பழக்கத்துக்கு அடிமையாக இருந்திருக்கலாம்; அது அவர்களுக்கு ஓரளவு சந்தோஷத்தைக் கொடுத்திருந்தாலும், யெகோவா அதை வெறுக்கிறார் என்பதால் அதை விட்டிருக்கலாம். விட்டுவந்த விஷயங்களை ஒரு கிறிஸ்தவர் திரும்ப செய்ய ஆரம்பித்து, யெகோவாவிடமிருந்து விலகிப் போய்விட்டால் அது எவ்வளவு சோகமான விஷயம்! எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும், விட்டுவந்த விஷயங்கள் பக்கம் தலைவைக்காமல் இருக்க இப்போதே நீங்கள் என்ன செய்யலாம்?

8. ஆபிரகாம்-சாராளின் உதாரணத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

8 விட்டுவந்த விஷயங்களை நினைத்து ஏங்காத நிறைய உண்மையுள்ள ஊழியர்களின் உதாரணங்கள் பைபிளில் இருக்கின்றன. அவர்களில் ஒரு தம்பதிதான் ஆபிரகாம்-சாராள். யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து, கோட்டைபோல் பாதுகாப்பாகவும் அழகாகவும் இருந்த ஊர் நகரத்தை அவர்கள் விட்டுவிட்டு போனார்கள்; கூடாரங்களில் தங்கினார்கள். (எபி. 11:8, 9) விட்டுவந்த சொகுசான வாழ்க்கையைப் பற்றி அவர்கள் ஒருவேளை அவ்வப்போது யோசித்திருப்பார்கள். ஆனால், அவர்கள் அதை மனதில் அசைபோட்டுக்கொண்டே இருந்திருந்தால்... அதற்காக ஏங்கியிருந்தால்... சொகுசான பழைய வாழ்க்கைக்கே திரும்பிப் போக வேண்டுமென்ற ஆசை வந்திருக்கும். ஆனால் அவர்கள் அப்படிச் செய்யவில்லை. எதிர்காலத்தின்மேல் தங்கள் கண்களைப் பதிய வைத்திருந்தார்கள்.—எபி. 11:15, 16.

9. விட்டுவந்த விஷயங்களைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் என்ன நினைத்தார்? (பிலிப்பியர் 3:7, 8, 13)

9 யெகோவாவுக்குச் சேவை செய்வதற்காக அப்போஸ்தலன் பவுல் தன்னுடைய வாழ்க்கையையே மாற்றினார். கிறிஸ்தவராக ஆவதற்கு முன்பு, புகழ்பெற்ற கமாலியேல் என்பவரிடம் யூதச் சட்டம் படித்தார். (அப். 22:3) யூத மதத்தில் பெரிய ஆளாக ஆகும் வாய்ப்பு அவருக்குக் காத்திருந்தது. (கலா. 1:13, 14) ஆனால், அவர் நல்ல செய்தியை ஏற்றுக்கொண்டபோது எல்லாவற்றையும் விட்டுவிட்டார். கிறிஸ்தவராக மாறிய பிறகு அவருடைய வாழ்க்கை ரோஜா படுக்கையாக இருந்ததா? இல்லை! மற்றவர்களிடம் அடி வாங்கினார், சிறையில் தள்ளப்பட்டார். அவருடைய சொந்த மக்களே அவரை வெறுத்தார்கள். (2 கொ. 11:23-26) ஒருவேளை, இந்தப் பிரச்சினைகளைப் பற்றியே அவர் யோசித்திருந்தால்... தற்போது இருந்த வாழ்க்கையை, விட்டுவந்த வாழ்க்கையோடு ஒப்பிட்டிருந்தால்... பழைய வாழ்க்கையே ரொம்ப நன்றாக இருந்தது என்று நினைத்திருப்பார். ஆனால் அப்படி நினைப்பதற்குப் பதிலாக, அப்போது அவருக்கு இருந்த அருமையான பாக்கியத்தை, அதாவது கிறிஸ்து இயேசுவுக்குச் சேவை செய்கிற பாக்கியத்தை, பற்றி யோசித்தார். அற்புதமான எதிர்கால நம்பிக்கையைப் பற்றியும் யோசித்தார். இந்த ஆசீர்வாதங்களோடு ஒப்பிடும்போது, தான் செய்த தியாகங்களெல்லாம் அவ்வளவு பெரிது இல்லை என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.—பிலிப்பியர் 3:7, 8, 13-ஐ வாசியுங்கள்.

10. எதைப் பற்றி அடிக்கடி யோசித்துப் பார்க்க வேண்டும்? (மாற்கு 10:29, 30) (படங்களையும் பாருங்கள்.)

10 நமக்கு என்ன பாடம்? விட்டுவந்த விஷயங்களை உங்கள் மனம் மீண்டும் தேட ஆரம்பித்தால், நீங்கள் ஏன் அதை விட்டுவந்தீர்கள் என்பதை யோசித்துப் பாருங்கள். (பிர. 7:10) விட்டுவந்த விஷயங்களை, தற்போது உங்களுக்குக் கிடைத்திருக்கிற ஆசீர்வாதங்களோடு ஒப்பிட்டுப் பாருங்கள். இந்தப் பிரபஞ்சத்தின் பேரரசரோடு ஒரு நல்ல நட்பு உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. (நீதி. 3:32) உலகம் முழுவதும் இருக்கிற ஒரு அன்பான குடும்பம் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. (மாற்கு 10:29, 30-ஐ வாசியுங்கள்.) ஒரு அருமையான எதிர்கால நம்பிக்கை கிடைத்திருக்கிறது. (ஏசா. 65:21-23) யெகோவாவுக்குச் சேவை செய்வதால் கிடைக்கிற ஆசீர்வாதங்களைப் பற்றி அடிக்கடி யோசித்தால், விட்டுவந்த விஷயங்களை நினைத்து ஏங்க மாட்டீர்கள்.

விட்டுவந்த விஷயங்களுக்காக ஏங்காமல், கடவுள் உங்களுக்குக் கொடுத்திருக்கிற ஊழியம் என்ற பொக்கிஷத்தை சந்தோஷமாக அனுபவியுங்கள் (பாரா 10)e


11. ரோஸ்மேரியின் உதாரணத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?

11 ரோஸ்மேரி என்ற சகோதரி, கிட்டத்தட்ட 50 வயதில் ஞானஸ்நானம் எடுத்தார். விட்டுவந்த விஷயங்களுக்கான ஏக்கத்தைத் தாண்டி வர அவர் என்ன செய்தார் என்று பாருங்கள். அவர் சொல்கிறார்: “ஆரம்பத்தில், கிறிஸ்மஸ் பண்டிகையை நினைத்து ஏங்கினேன். ஏனென்றால், அந்தச் சமயத்தில் குடும்பமாக ஒன்றுசேர்ந்து சந்தோஷமாக இருப்போம். என் உறவுகளுக்கு நான் பரிசுகளைக் கொடுப்பேன். கிறிஸ்மஸ் மரத்தைச் சுற்றி பிள்ளைகள் இருப்பதையும், பரிசுகளைத் திறக்கும்போது அவர்களுடைய முகங்கள் மலர்வதையும் பார்த்து சந்தோஷப்படுவேன்.” இதைத் தாண்டி வர எது அவருக்கு உதவியது? ரோஸ்மேரி சொல்கிறார்: “கிறிஸ்மஸுக்குப் பதிலாக, குடும்பத்தோடு சேர்ந்து சந்தோஷமாக இருக்க வேறுசில தருணங்களை உருவாக்கினேன். ஒவ்வொரு வருஷமும், வேறொரு நாளில் என் குடும்பத்திலிருக்கும் எல்லாரையும் வீட்டுக்குக் கூப்பிடுவேன். அவர்களுக்குப் பரிசுகளைக் கொடுப்பேன். பிறகு, அவர்களிடம் இருக்கிற நல்ல விஷயங்களைச் சொல்லி பாராட்டுவேன்.” ரோஸ்மேரி இன்னொரு சவாலையும் சந்தித்தார். “நான் சத்தியத்தைக் கற்றுக்கொண்டபோது என்னுடைய நண்பர்கள் என்னோடு இருந்த நட்பை முறித்துக்கொண்டார்கள். அவர்கள் இல்லையே என்று நினைத்து சிலசமயம் வருத்தப்படுவேன், தனிமையாக உணர்வேன்” என்கிறார்.d அவருக்கு எது உதவியது? வெவ்வேறு சகோதரிகளோடு சேர்ந்து ஊழியம் செய்தது உதவியது. அவர் சொல்கிறார்: “இப்படிச் செய்ததால் எனக்குப் புதிய நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். அவர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர்களை உயர்வாக மதிக்கிறேன்.” பாடம்? சத்தியத்துக்கு வருவதற்கு முன்பு நீங்கள் சந்தோஷமாக செய்த சில விஷயங்களை நினைத்து கவலைப்படாதீர்கள். அதைவிட சிறந்த... அதிக சந்தோஷத்தைத் தருகிற... நிறைய விஷயங்கள் இப்போது இருக்கின்றன என்பதை மறந்துவிடாதீர்கள்! (பிலி. 4:8, 9) யெகோவா பக்கம் வந்ததால், நீங்கள் இழந்தது கடுகளவு! ஆனால் கிடைத்திருப்பது கடலளவு!!

மற்றவர்கள் யெகோவாவைவிட்டு போகும்போது...

12. எந்தச் சவால் உண்மையிலேயே கஷ்டமாக இருக்கலாம்?

12 ஒரு யெகோவாவின் சாட்சியாக ஆனபோது, ஊழல் நிறைந்த உலகத்திலிருந்து வெளியே வந்த நிம்மதி உங்களுக்குக் கிடைத்திருக்கும். ஆன்மீக மற்றும் ஒழுக்க விஷயத்தில் செழிப்பாக இருக்கும் ஒரு சோலைக்குள் வந்திருப்பதை நினைத்து பூரித்துப்போயிருப்பீர்கள். (ஏசா. 65:14) இருந்தாலும், சபையில் இருக்கிற ஒருவர் மோசமான தவறு செய்வதை நீங்கள் கேள்விப்படலாம். அவர் சபையிலிருந்துகூட நீக்கப்படலாம். (1 கொ. 5:13) இந்த மாதிரி ஒரு விஷயம், சஹானா என்ற சகோதரியை எப்படிப் பாதித்தது என்று பார்க்கலாம். அவர் சொல்கிறார்: “நான் ஞானஸ்நானம் எடுத்த கொஞ்ச நாளிலேயே, ஒரு மூப்பர் மோசமான பாவத்தைச் செய்து சபையிலிருந்து நீக்கப்பட்டார். அதைக் கேட்டபோது என்னுடைய விசுவாசம் ஆட்டம்கண்ட மாதிரி ஆகிவிட்டது. ‘ஒரு மூப்பரால் எப்படி யெகோவாவுக்கும் சபைக்கும் எதிராக பாவம் செய்ய முடியும்!’ என்று யோசித்தேன். அதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.” உண்மைதான், நம் சகோதர சகோதரிகள் யெகோவாவை நேசிக்கிறார்கள்... அவருக்குப் பிடித்த மாதிரி வாழ கடினமாக உழைக்கிறார்கள்... என்று நாம் நம்ப வேண்டும். (1 கொ. 13:4, 7) ஆனால், நாம் எதார்த்தமாகவும் இருக்க வேண்டும்; ஒவ்வொரு வருஷமும் சிலர் சபையிலிருந்து நீக்கப்படுகிறார்கள். நமக்கு நெருக்கமாக இருக்கிற ஒருவரோ நாம் உயர்வாக மதிக்கிற ஒருவரோ சபையிலிருந்து நீக்கப்பட்டால், அது உண்மையிலேயே நமக்குச் சவாலாக இருக்கலாம்.

13. நெருக்கமான ஒருவர் யெகோவாவைவிட்டு போனாலும், நம் விசுவாசம் ஆட்டம் காணாமல் இருக்க நாம் எப்படி இப்போதே தயாராகலாம்?

13 நெருக்கமாக இருக்கிற ஒருவர் யெகோவாவைவிட்டு போனாலும், உங்கள் விசுவாசம் ஆட்டம்காணாமல் இருக்க நீங்கள் எப்படி இப்போதே தயாராகலாம்? யெகோவாவோடு உங்களுக்கு இருக்கிற பந்தத்தைப் பலப்படுத்திக்கொண்டே இருங்கள். (யாக். 4:8) யெகோவாவோடு உங்களுக்கு இருக்கும் பந்தம் இன்னொருவரின் விசுவாசத்தைப் பொறுத்து இருக்கக் கூடாது. நாம் குடும்பமாகவும் சபையாகவும் ஒன்றுசேர்ந்து யெகோவாவை வணங்குகிறோம் என்பது உண்மைதான். ஆனாலும், தனிப்பட்ட விதத்தில் ஜெபம் செய்வதையும் பைபிள் படிப்பதையும் பழக்கமாக ஆக்கிக்கொள்ள வேண்டும்.—சங். 1:2; 62:8.

14. அப்போஸ்தலன் பேதுருவின் உதாரணத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (யோவான் 6:66-68)

14 இயேசுவைப் பின்பற்றுவதை நிறைய சீஷர்கள் நிறுத்தியபோது, அப்போஸ்தலன் பேதுரு எப்படி நடந்துகொண்டார் என்பதிலிருந்தும் நாம் பாடம் கற்றுக்கொள்ளலாம். பேதுருவுக்கும் அந்தச் சமயத்தில் கொஞ்சம் குழப்பமாக இருந்திருக்கலாம். ஆனால், அவர் என்ன சொன்னார் என்று யோவான் 6:66-68-ல் பாருங்கள். (வாசியுங்கள்.) மற்றவர்கள் எப்படி நடந்துகொண்டார்கள் என்பதில் பேதுரு கவனம் செலுத்தவில்லை; இயேசுவிடமிருந்து கற்றுக்கொண்ட சத்திய வார்த்தைகள்மேல் அவர் கவனம் செலுத்தினார். அதனால்தான், அவருடைய விசுவாசம் ஆட்டம்காணவில்லை. பாடம்? யாரோ ஒருவர் செய்கிற தவறுகளால் கடவுளுடைய அமைப்பு மூலம் நாம் கற்றுக்கொண்ட சத்தியத்தின் மதிப்பு குறைந்துவிடாது. அந்தச் சத்தியத்தை உறுதியாகப் பிடித்துக்கொள்ளுங்கள்! நாம் முன்பு பார்த்த சஹானா இப்படிச் சொல்கிறார்: “சபையில் ஒருவர் தப்பு செய்கிறார் என்பதற்காக முழு சபையையுமே தப்பு சொல்லிவிட முடியாது. அமைப்பையோ யெகோவாவையோ குறை சொல்ல முடியாது. இதை நான் அடிக்கடி ஞாபகப்படுத்திக்கொள்வேன்.”

15. எமிலியிடமிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?

15 எமிலி என்ற சகோதரியின் உதாரணத்தைப் பாருங்கள். அவர் ஞானஸ்நானம் எடுத்த ஒரு வாரத்திலேயே அவருடைய அம்மா குடும்பத்தை விட்டு போய்விட்டார்; சபையிலிருந்தும் நீக்கப்பட்டார். எமிலி சொல்கிறார்: “இப்படி நடக்கும் என்று நான் கனவில்கூட நினைக்கவில்லை. என் வாழ்க்கையிலேயே இதுதான் பெரிய சோதனை. அம்மா இல்லாததால் எனக்கு வெறுமையாக இருக்கிறது.” எமிலிக்கு எது உதவுகிறது? “என் அப்பா எனக்குத் துணையாக இருக்கிறார். சபையில் இருக்கிறவர்களும் எனக்கு ஒரு குடும்பம்போல் இருக்கிறார்கள். அதனால் நான் தனியாக இல்லை. எல்லாருக்குமே ஏதோவொரு பிரச்சினை இருந்துகொண்டுதான் இருக்கிறது. அதனால், ஒருவருக்கு ஒருவர் நெருக்கமாக இருப்பதும் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்துவதும் ரொம்ப முக்கியம்” என்று சொல்கிறார். (1 பே. 5:9) இப்போதேகூட—சவால்கள் வருவதற்கு முன்பே—சகோதர சகோதரிகளோடு நெருக்கமாகுங்கள். சவால்கள் வந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நினைக்காதீர்கள். அப்படிச் செய்தால், என்ன நடந்தாலும் தனிமையில் தவிக்க மாட்டீர்கள்.

16. நாம் எதை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்? (படத்தையும் பாருங்கள்.)

16 இதையும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்: யெகோவா யார்மேல் அன்பு வைத்திருக்கிறாரோ, அவரைக் கண்டித்துத் திருத்துகிறார். (எபி. 12:6) சபையிலிருந்து நீக்கப்பட்ட எல்லாரும் தன்னிடம் திரும்பி வர வேண்டும் என்று ஆசையாக இருக்கிறார். (2 பே. 3:9) அதனால், உங்களுக்கு நெருக்கமான ஒருவர் சபையிலிருந்து நீக்கப்பட்டிருந்தால், அவர் யெகோவாவிடம் திரும்பி வர மூப்பர்கள் கண்டிப்பாக உதவுவார்கள் என்று நீங்கள் நம்பிக்கையோடு இருக்கலாம்.—2 தீ. 2:24, 25.

சபையிலிருந்து நீக்கப்பட்ட ஒரு நபரை இரண்டு மூப்பர்கள் சந்திக்கிறார்கள். ஒரு மூப்பர், கையில் பைபிளைத் திறந்து வைத்திருக்கிறார், மற்றொருவர் “யெகோவாவிடம் திரும்பி வந்துவிடுங்கள்” சிறுபுத்தகத்திலிருந்து ஒரு பாடத்தைக் காட்டி பேசுகிறார்.

உங்களுக்கு நெருக்கமான ஒருவர் சபையிலிருந்து நீக்கப்பட்டால், அவர் யெகோவாவிடம் திரும்பி வர மூப்பர்கள் உதவுவார்கள் என்பதில் நம்பிக்கையோடு இருங்கள் (பாரா 16)f


17. நீங்கள் எதில் உறுதியாக இருக்கலாம்?

17 இந்தக் கட்டுரையில், ஞானஸ்நானத்துக்குப் பிறகு உங்களுக்கு வர வாய்ப்பிருக்கிற சில சவால்களைப் பற்றிப் பார்த்தோம். உண்மைதான், சில சவால்கள் மலைபோல் தெரியலாம். ஆனால் பயப்படாதீர்கள்! அவற்றைச் சந்திக்க இப்போதே உங்களால் தயாராக முடியும். அதோடு, யெகோவாவுடைய மாபெரும் உதவிக்கரம் உங்களோடு இருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள்! அவர் இதுவரை உங்களுக்கு உதவியிருக்கிறார், என்றுமே உங்களுக்கு உதவுவார். (1 பே. 5:10) எப்படிப்பட்ட சவாலையும் தாங்கிக்கொள்ள தேவையான பலத்தையும் சகிப்புத்தன்மையையும் அவர் எப்போதும் தருவார். யெகோவாவுடைய உதவியை ஏற்றுக்கொண்டே இருந்தால், எந்தச் சவாலுமே உங்களை அவரிடமிருந்து பிரிக்க முடியாது!—சங். 119:165; ரோ. 8:38, 39.

இந்தச் சவால்களைச் சந்திக்க நாம் எப்படித் தயாராகலாம்?

  • ஒரு சகோதரரோ சகோதரியோ காயப்படுத்தும்போது...

  • விட்டுவந்த விஷயங்களைப் பற்றிய ஏக்கம் வரும்போது...

  • சபையிலிருந்து ஒருவர் நீக்கப்படும்போது...

பாட்டு 154 உண்மை அன்பு

a இந்தக் கட்டுரை புதிதாக ஞானஸ்நானம் எடுத்தவர்களுக்காக எழுதப்பட்டிருந்தாலும், இதில் இருக்கிற தகவல்கள் நம் எல்லாருக்குமே பிரயோஜனமாக இருக்கும்.

b பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

c விவேகம் என்பது ஒரு விஷயத்தை மேலோட்டமாக இல்லாமல் ஆழமாகப் பார்க்கும் திறனைக் குறிக்கிறது. ஒரு நபர் ஏன் அப்படிப் பேசினார் அல்லது நடந்துகொண்டார் என்பதைப் புரிந்துகொள்ள விவேகம் உதவும்.

d பைபிள் படிப்பு நடத்துகிறவர்கள் மட்டுமல்ல, நாம் எல்லாருமே சபைக்கு வரும் பைபிள் மாணவர்கள்மேலும் புதிதாக ஞானஸ்நானம் எடுத்தவர்கள்மேலும் அன்பைப் பொழிய வேண்டும். மார்ச் 2021 காவற்கோபுரத்தில், “பைபிள் மாணவர்கள் முன்னேற நாம் ஒவ்வொருவரும் எப்படி உதவலாம்?” என்ற கட்டுரையில் பாராக்கள் 15 மற்றும் 16-ஐ பாருங்கள்.

e படவிளக்கம்: ஊழியம் செய்யும்போது ஒரு சகோதரி, ஒரு விளையாட்டு அணி விளையாடிக்கொண்டு இருப்பதைக் கவனிக்கிறார். முன்பு, விளையாட்டு வீராங்கனையாக இருந்தது அந்தச் சகோதரிக்கு ஞாபகம் வருகிறது. பிறகு, ஒரு பெண் வீராங்கனையிடம் அவர் சாட்சி கொடுக்கிறார். ஒருவேளை, முன்பு அவர்கள் ஒரே அணியில் விளையாடியிருக்கலாம்.

f படவிளக்கம்: சபையிலிருந்து நீக்கப்பட்ட ஒருவரை இரண்டு மூப்பர்கள் சந்திக்கிறார்கள். யெகோவாவிடம் திரும்பி வர அவரை உற்சாகப்படுத்துகிறார்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்