உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w26 பிப்ரவரி பக். 8-13
  • ஞானஸ்நானம்—அதன் அர்த்தம் என்ன?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஞானஸ்நானம்—அதன் அர்த்தம் என்ன?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2026
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • உங்கள் ஞானஸ்நானத்தின் அர்த்தம்
  • ஞானஸ்நானம் எடுப்பதில் எவையெல்லாம் உட்பட்டிருக்கின்றன
  • ‘தகப்பனின் பெயரிலும், மகனின் பெயரிலும், சக்தியின் பெயரிலும்’
  • ஞானஸ்நானம்​—⁠சிறந்த லட்சியம்!
    இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
  • உங்கள் முழுக்காட்டுதல் குறிப்பது
    ஒரே உண்மையான கடவுளுடைய வணக்கத்தில் ஒன்றுபடுதல்
  • கிறிஸ்தவர்கள் ஞானஸ்நானம் எடுப்பது முக்கியம்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2018
  • ஞானஸ்நானம் என்றால் என்ன?
    பைபிள் தரும் பதில்கள்
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2026
w26 பிப்ரவரி பக். 8-13

ஏப்ரல் 13-19, 2026

பாட்டு 52 நம் அர்ப்பணம்

ஞானஸ்நானம்—அதன் அர்த்தம் என்ன?

“எல்லா தேசத்தாரையும் சீஷர்களாக்கி, . . . ஞானஸ்நானம் கொடுங்கள்.”—மத். 28:19.

என்ன கற்றுக்கொள்வோம்?

ஞானஸ்நானத்தின் அர்த்தம் என்ன? அது ஏன் முக்கியம்? அதில் என்னவெல்லாம் உட்பட்டிருக்கிறது? என்பதைப் பற்றியெல்லாம் கற்றுக்கொள்வோம்.

1. ஞானஸ்நானம் ஒரு முக்கியமான பைபிள் போதனை என்று ஏன் சொல்லலாம்?

புதிதாக ஒருவர் ஞானஸ்நானம் எடுக்கும்போது நமக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது! இதே சந்தோஷம்தான் கிறிஸ்தவ சபை உருவான சமயத்தில் நடந்த முதல் கூட்டத்திலும் இருந்தது. அந்தக் கூட்டத்தில், ஞானஸ்நானம் எடுப்பது எவ்வளவு முக்கியம் என்பதைக் காட்டும் ஒரு பேச்சை அப்போஸ்தலன் பேதுரு கொடுத்தார். பிறகு, நிறைய பேர் ஞானஸ்நானம் எடுத்தார்கள். (அப். 2:38, 40, 41) ‘கிறிஸ்துவைப் பற்றிய அடிப்படை போதனைகளில்’ ‘ஞானஸ்நானங்கள் பற்றிய போதனைகளும்’ இருக்கின்றன என்று அப்போஸ்தலன் பவுல்கூட எழுதினார். (எபி. 6:1, 2) ஞானஸ்நானம் ஒரு அடிப்படை போதனையாக இருந்தாலும் அதைப் பற்றி நன்றாகப் புரிந்துகொள்வது முக்கியம். ஏன்?

2. ஞானஸ்நானத்தைப் பற்றி நாம் ஏன் ஆழமாகப் புரிந்திருக்க வேண்டும்?

2 அஸ்திவாரம் ஆழமாக இருந்தால், வீடு உறுதியாக இருக்கும். அதேமாதிரி, ஞானஸ்நானத்தைப் பற்றி ஆழமாகப் புரிந்துவைத்திருக்கும்போது, நம் விசுவாசம் உறுதியாக இருக்கும். நாம் ஞானஸ்நானம் எடுப்பதற்காக உழைத்துக்கொண்டு இருந்தாலும் சரி, ஞானஸ்நானம் எடுத்து பல வருஷங்கள் ஆகியிருந்தாலும் சரி, அதைப் பற்றி நன்றாகப் புரிந்திருப்பது ரொம்ப முக்கியம். அதனால், இந்தக் கட்டுரையில் மூன்று கேள்விகளுக்குப் பதில் பார்ப்போம்: ஞானஸ்நானத்துக்கு என்ன அர்த்தம்? கிறிஸ்தவ ஞானஸ்நானத்தில் எவையெல்லாம் உட்பட்டிருக்கின்றன? நாம் ஏன் தகப்பனுடைய பெயரிலும், மகனுடைய பெயரிலும், கடவுளுடைய சக்தியின் பெயரிலும் ஞானஸ்நானம் எடுக்கிறோம்?

உங்கள் ஞானஸ்நானத்தின் அர்த்தம்

3. ஞானஸ்நானம் எடுப்பதன் மூலம் எதையெல்லாம் தெரியப்படுத்துகிறீர்கள்?

3 ஞானஸ்நானம் எடுப்பதன் மூலம் எல்லார் முன்பும் சில விஷயங்களை நீங்கள் தெரியப்படுத்துகிறீர்கள். அதாவது, யெகோவாவையும் கிறிஸ்து இயேசுவையும் பற்றிய சத்தியங்களை ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள்... பாவங்களிலிருந்து மனம் திருந்தியிருக்கிறீர்கள்... யெகோவாவுக்குச் சேவை செய்வதற்காக உங்கள் வாழ்க்கையையே மாற்றியிருக்கிறீர்கள்... இயேசுவின் மூலம்தான் கடவுள் மீட்பு தரப்போகிறார் என்பதைப் புரிந்துவைத்திருக்கிறீர்கள்... அமைப்போடு சேர்ந்து கடவுளுடைய விருப்பத்தைச் செய்ய ஆசைப்படுவதாக ஜெபத்தில் வாக்குக் கொடுத்திருக்கிறீர்கள்... என்பதையெல்லாம் தெரியப்படுத்துகிறீர்கள். இந்த வாக்குறுதியைக் கொடுத்து, அதாவது உங்களையே அர்ப்பணித்து, ஞானஸ்நானம் எடுக்கும்போது முடிவில்லாத வாழ்வுக்கான பாதையில் உங்கள் பயணம் ஆரம்பமாகிறது.

4. தண்ணீருக்குள் முழுமையாக மூழ்கி வெளியே வருவது எதற்கு அடையாளமாக இருக்கிறது? (படத்தையும் பாருங்கள்.)

4 நீங்கள் ஞானஸ்நானம் எடுக்கும்போது, தண்ணீருக்குள் முழுமையாக மூழ்கி, பிறகு வெளியே வருகிறீர்கள்.a இதை எதோடு ஒப்பிடலாம்? இறந்து, அடக்கம் செய்யப்பட்டு, பிறகு உயிரோடு எழுப்பப்படுவதோடு ஒப்பிடலாம். (கொலோசெயர் 2:12-ஐ ஒப்பிடுங்கள்.) இது ஒரு நல்ல உதாரணம்! ஏனென்றால், நீங்கள் தண்ணீருக்குள் போகும்போது, உங்கள் பழைய வாழ்க்கைக்கு முடிவுகட்டிவிட்டீர்கள் என்பதைக் காட்டுகிறீர்கள். தண்ணீரிலிருந்து வெளியே வரும்போது, கடவுளுடைய விருப்பத்துக்கு முதலிடம் கொடுக்கும் ஒரு புது வாழ்க்கையை ஆரம்பிக்கிறீர்கள்.

படத்தொகுப்பு: ஒருவர் தனக்கு இருந்த கெட்ட பழக்கங்களை விட்டுவிட்டு ஞானஸ்நானம் எடுக்கிறார். 1. டிவியில் ஒரு குத்துச்சண்டை போட்டியை ஆவலாகப் பார்க்கிறார். 2. சிகரெட் பிடிக்கிறார். 3. அளவுக்கு அதிகமாகக் குடிக்கிறார். 4. பிற்பாடு, ஞானஸ்நானம் எடுக்கிறார்.

நீங்கள் ஞானஸ்நானம் எடுக்கும்போது, உங்கள் பழைய வாழ்க்கைக்கு முடிவுகட்டிவிட்டு, கடவுளுடைய விருப்பத்துக்கு முதலிடம் கொடுக்கும் ஒரு புது வாழ்க்கையை ஆரம்பிக்கிறீர்கள் (பாரா 4)


5. ஞானஸ்நானத்துக்குத் தயாராக நீங்கள் எடுக்கிற முயற்சியை எதோடு ஒப்பிடலாம், ஏன்? (1 பேதுரு 3:18-21)

5 1 பேதுரு 3:18-21-ஐ வாசியுங்கள். ஞானஸ்நானத்துக்குத் தயாராவதற்கு நீங்கள் எடுக்கிற முயற்சிகளை, நோவா பேழையைக் கட்டுவதற்கு எடுத்த முயற்சிகளோடு ஒப்பிடலாம். யெகோவாவைப் பற்றி நீங்கள் இப்போதுதான் கற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறீர்களா? அப்படியென்றால், ஞானஸ்நானத்துக்காக நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் ரொம்ப பெரிதாகத் தோன்றலாம். ஏன், நோவாவுக்கு முன் இருந்த பிரமாண்டமான வேலை மாதிரிகூட தோன்றலாம். அவ்வளவு முயற்சி உண்மையிலேயே தேவைதானா என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால் அந்த முயற்சி உங்கள் உயிரைக் காப்பாற்றும். நோவா எடுத்த முயற்சி அவருடைய உயிரைக் காப்பாற்றியது. பேழையின் வடிவமைப்பை நோவாவுக்கு கடவுள் கொடுத்திருந்தார். உயிர் பிழைக்க வேண்டுமென்றால், அந்த வடிவமைப்பை நோவா அப்படியே பின்பற்ற வேண்டியிருந்தது. நோவா யெகோவாமேல் விசுவாசம் வைத்து, அவருக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய உதவியோடு பேழையைக் கட்டி முடித்தார். நோவா மாதிரியே உங்களாலும் “கடவுள் சொன்ன எல்லாவற்றையும்” செய்ய முடியும்.—ஆதி. 6:22.

6. ஞானஸ்நானம் எப்படி உங்களைக் காப்பாற்றும்?

6 21-வது வசனத்தில், ஞானஸ்நானம் “உங்களைக் காப்பாற்றுகிறது” என்று அப்போஸ்தலன் பேதுரு எழுதினார். உண்மைதான், வெறுமனே தண்ணீருக்குள் மூழ்கி வெளியே வருவது உங்களைக் காப்பாற்றும் என்று சொல்ல முடியாது. அது உங்கள் பாவங்களையெல்லாம் ஏதோவொரு விதத்தில் கழுவி, உங்களைச் சுத்தமாக்குகிறது என்றும் சொல்ல முடியாது. இயேசுவின் இரத்தம் மட்டும்தான் உங்களைப் பாவங்களிலிருந்து சுத்தமாக்கும். (1 யோ. 1:7) இருந்தாலும், கடவுளுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து வாழ நினைக்கும் ஒருவர் எடுக்க வேண்டிய முதல் படியே ஞானஸ்நானம்தான். அதுமட்டுமல்ல, ஞானஸ்நானம் எடுப்பது, ‘நல்ல மனசாட்சிக்காகக் கடவுளிடம் வேண்டுதல் செய்வது போல் இருக்கிறது.’ யெகோவா உங்கள் வேண்டுதலைக் கேட்டு, இயேசுவின் மீட்புப் பலியின் அடிப்படையில் உங்கள் பாவங்களை மன்னிக்கிறார். இந்த விதத்தில், ஞானஸ்நானம் “உங்களைக் காப்பாற்றுகிறது,” அதாவது மீட்புக்கு வழிநடத்துகிறது.

ஞானஸ்நானம் எடுப்பதில் எவையெல்லாம் உட்பட்டிருக்கின்றன

7. ஞானஸ்நானம் எப்படிக் கொடுக்கப்பட வேண்டும்?

7 ஞானஸ்நானம் எடுக்க, ஒருவர் தண்ணீருக்குள் முழுமையாக மூழ்கி-எழ வேண்டும். இதைத் தவிர வேறெந்த வழிமுறையும் பைபிளில் சொல்லப்படவில்லை. ஆனால், ஞானஸ்நானம் எடுக்கிற சமயத்தில் எப்படி நடந்துகொள்வது பொருத்தமாக இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள பைபிள் உதவுகிறது. உதாரணத்துக்கு, ஞானஸ்நானம் எடுக்கிறவர்கள் என்ன மாதிரி உடை உடுத்த வேண்டும்... பார்வையாளர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும்... என்பதையெல்லாம் புரிந்துகொள்ள பைபிள் நியமங்கள் உதவுகின்றன. (1 கொ. 14:40; 1 தீ. 2:9) பொதுவாக, ஒரு மூப்பர்தான் ஞானஸ்நானம் கொடுப்பார். ஆனால் அந்தப் பொறுப்பைச் செய்வதால் அவரைப் பெரிய ஆளாக மற்றவர்கள் நினைக்கக் கூடாது. (1 கொ. 1:14, 15) ஒருவர் ஞானஸ்நானம் எடுப்பதை நிறைய பேர் பார்த்தால்தான் அது செல்லுபடியாகும் என்றும் கிடையாது.—அப். 8:36.

8. ஞானஸ்நானம் எடுக்கப்போகிறவர்களிடம் என்ன கேள்விகள் கேட்கப்படுகின்றன, ஏன்? (அப்போஸ்தலர் 2:38-42) (படத்தையும் பாருங்கள்.)

8 ஒருவன் “தன்னுடைய வாயினால் அறிவிக்கும்போது,” அதாவது விசுவாசத்தை வெளிப்படையாகச் சொல்லும்போது, “மீட்புப் பெறுகிறான்” என்று பைபிள் சொல்கிறது. (ரோ. 10:9, 10) நல்ல செய்தியை மற்றவர்களிடம் சொல்லும்போது வாயினால் அறிவிக்கிறோம் என்பது உண்மைதான். ஆனாலும், ஞானஸ்நானம் எடுக்கும்போது வாயினால் அறிவிப்பது ரொம்பவே பொருத்தமாக இருக்கும். அதனால்தான், அந்தச் சமயத்தில் இரண்டு கேள்விகள் கேட்கப்படுகின்றன. முதல் கேள்வி: “நீங்கள் உங்கள் பாவங்களைவிட்டு மனம் திருந்தி, யெகோவாவுக்கு உங்களை அர்ப்பணித்து, மீட்புக்காக இயேசு கிறிஸ்து மூலம் அவர் செய்திருக்கிற ஏற்பாட்டை ஏற்றுக்கொண்டிருக்கிறீர்களா?” இந்தக் கேள்வி, ஞானஸ்நானத்துக்காகத் தயாராவதற்கு, அந்த நபர் ஏற்கெனவே என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்பதைக் காட்டுகிறது. பெந்தெகொஸ்தே பண்டிகைக்காக வந்திருந்தவர்களிடம், மனம் திருந்தி ஞானஸ்நானம் எடுக்கச் சொல்லி பேதுரு சொன்னதுபோலவே இந்தக் கேள்வி இருக்கிறது. இரண்டாவது கேள்வி: “நீங்கள் ஞானஸ்நானம் எடுக்கும்போது, யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராகவும் அவருடைய அமைப்பில் ஒருவராகவும் ஆகிறீர்கள் என்பதைப் புரிந்து வைத்திருக்கிறீர்களா?” இந்தக் கேள்வி, ஞானஸ்நானத்துக்குப் பிறகு அந்த நபர் என்ன செய்யப்போகிறார் என்பதைக் காட்டுகிறது. யெகோவாவின் அமைப்பு தரும் வழிநடத்துதலுக்குக் கீழ்ப்படிந்து, சகோதர சகோதரிகளோடு சேர்ந்து யெகோவாவுக்குச் சேவை செய்வதாக அவர் வாக்குக் கொடுப்பதைக் காட்டுகிறது. பெந்தெகொஸ்தே பண்டிகைக்கு வந்திருந்தவர்களும் ஞானஸ்நானத்துக்குப் பிறகு அப்படித்தான் செய்தார்கள். (அப்போஸ்தலர் 2:38-42-ஐ வாசியுங்கள்.) இந்த இரண்டு கேள்விகளுக்கும் ஒருவர் முழுமனதோடு ‘ஆம்’ என்று பதில் சொன்னால், அவர் ஞானஸ்நானம் எடுக்க தகுதிபெறுகிறார் என்று அர்த்தம்.

வித்தியாசமான வயதில் இருப்பவர்கள் ஞானஸ்நானம் எடுப்பதற்காக மாநாட்டில் முன் வரிசைகளில் நிற்கிறார்கள். தங்கள் விசுவாசத்தை வாயினால் அறிவிக்கிறார்கள்.

ஞானஸ்நானம் எடுக்கும்போது நீங்கள் ‘வாயினால் அறிவிப்பு’ செய்கிறீர்கள். இது ‘மீட்புப் பெற’ உதவுகிறது (பாரா 8)d


9. யெகோவா நம்மை ஏற்றுக்கொள்ள, நாம் எல்லாருமே என்னென்ன படிகளை எடுக்க வேண்டும்?

9 ஒருவேளை, சத்தியத்தைத் தெரிந்துகொள்வதற்கு முன்பே நீங்கள் நல்லவர்களாக இருந்திருக்கலாம்; பெரிய பாவம் எதுவும் செய்யாமல் இருந்திருக்கலாம். அல்லது, நீங்கள் சின்ன வயதிலிருந்தே யெகோவாவின் சாட்சிகளுடைய குடும்பத்தில் வளர்க்கப்பட்டிருக்கலாம்; யெகோவாமேல் அன்பை வளர்த்துக்கொள்ள உங்கள் அப்பா-அம்மா உதவி செய்திருக்கலாம். அப்படியிருந்தாலும், மனம் திருந்தி ஞானஸ்நானம் எடுத்தால்தான் கடவுள் உங்களை ஏற்றுக்கொள்வாரா? ஆமாம்! நாம் எப்படிப்பட்ட சூழ்நிலையில் வளர்ந்திருந்தாலும் சரி, எல்லாருமே வழிவழியாக வந்த பாவத்தில் சிக்கியிருக்கிறோம்; அந்தப் பாவம் யெகோவாவிடமிருந்து நம்மைப் பிரித்து வைத்திருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். (சங். 51:5) யெகோவாவைப் பற்றிக் கற்றுக்கொள்ள கற்றுக்கொள்ள, நம்முடைய விருப்பத்தைவிட அவருடைய விருப்பத்துக்கு வாழ்க்கையில் முதலிடம் கொடுக்க முடிவு எடுக்கிறோம். அந்த முடிவை எடுத்த பிறகு, நாம் மனம் திருந்தி நம் வழியை மாற்றிக்கொண்டு பரலோக அப்பாவுக்குப் பிடித்த மாதிரி வாழ ஆரம்பிக்கிறோம். அதன் பிறகு, நாம் ஞானஸ்நானம் எடுக்கலாம்.—அப். 3:19.

10. வேறொரு மதத்தில் நீங்கள் ஞானஸ்நானம் எடுத்திருந்தால், இப்போது என்ன செய்ய வேண்டும்?

10 நீங்கள் ஏற்கெனவே வேறொரு மதத்தில் ஞானஸ்நானம் எடுத்திருந்தாலும், ஒரு யெகோவாவின் சாட்சியாக ஆக திரும்பவும் ஞானஸ்நானம் எடுப்பது முக்கியம். ஏன்? ஏனென்றால் அந்தச் சமயத்தில், யெகோவாவையும் இயேசுவையும் பற்றிய சத்தியங்கள், உங்களுக்குப் போதுமான அளவு தெரிந்திருக்காது. அதுமட்டுமல்ல, கடவுளுக்கு உங்களை அர்ப்பணிப்பதாக அப்போது நீங்கள் ஒருவேளை வேண்டியிருந்தாலும், கடவுளுடைய விருப்பத்தைப் பற்றிய சரியான புரிந்துகொள்ளுதல் உங்களுக்கு இருந்திருக்காது. ஒருசமயம், எபேசுவில் இருந்த சில சீஷர்களை அப்போஸ்தலன் பவுல் சந்தித்தார். அவர்கள் கிறிஸ்துவைப் பற்றிய சத்தியங்களைப் புரிந்துகொள்ளாமலேயே ஞானஸ்நானம் எடுத்திருந்தார்கள். அதனால், அவர்களுக்குத் திரும்பவும் ஞானஸ்நானம் கொடுக்க பவுல் ஏற்பாடு செய்தார்.b (அப். 19:1-5) அதேபோல் இன்றும், கடவுளுடைய விருப்பத்தைப் பற்றிய திருத்தமான அறிவு ஒருவருக்கு இருந்தால் மட்டும்தான், அவருடைய ஞானஸ்நானம் செல்லுபடியாகும்.

‘தகப்பனின் பெயரிலும், மகனின் பெயரிலும், சக்தியின் பெயரிலும்’

11. ‘தகப்பனின் பெயரிலும், மகனின் பெயரிலும், சக்தியின் பெயரிலும்’ ஞானஸ்நானம் எடுப்பது என்றால் என்ன? (மத்தேயு 28:18-20)

11 புதிதாக சீஷராகிறவர்கள் “பரலோகத் தகப்பனின் பெயரிலும், அவருடைய மகனின் பெயரிலும், அவருடைய சக்தியின் பெயரிலும்” ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் என்று இயேசு கட்டளை கொடுத்தார். (மத்தேயு 28:18-20-ஐ வாசியுங்கள்.) பைபிளில், “பெயர்” என்ற வார்த்தை, பெரும்பாலும் ஒரு நபர் எடுத்திருக்கும் பெயரைக் குறிக்கிறது. அந்தப் பெயரைத் தாங்கிய நபருக்கு இருக்கிற அதிகாரத்தையும் ஸ்தானத்தையும்கூட அது குறிக்கலாம். அதனால், ஒருவருடைய ‘பெயரில்’ அல்லது ஏதோவொன்றின் ‘பெயரில்’ நாம் ஒரு விஷயத்தைச் செய்கிறோம் என்றால், அந்தப் பெயருக்குப் பின்னால் இருக்கிற அதிகாரத்தை ஏற்றுக்கொண்டு அவற்றைச் செய்கிறோம் என்று அர்த்தம். (மத்தேயு 10:41-ஐ ஒப்பிடுங்கள்; “ஒருவர் தீர்க்கதரிசியாக இருப்பதால்” என்ற ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.) அப்படியென்றால், தகப்பன் மற்றும் மகனுடைய அதிகாரத்தையும் ஸ்தானத்தையும் ஏற்றுக்கொண்டு நீங்கள் எப்படி ஞானஸ்நானம் எடுக்கலாம்? கடவுளுடைய சக்திக்கு இருக்கும் பங்கைப் புரிந்துகொண்டு நீங்கள் எப்படி ஞானஸ்நானம் எடுக்கலாம்? அதைப் பற்றிப் பார்க்கலாம்.

12. பரலோகத் தகப்பனுடைய பெயரில் ஞானஸ்நானம் எடுக்க எவற்றையெல்லாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்? (வெளிப்படுத்துதல் 4:11) (படத்தையும் பாருங்கள்.)

12 பரலோகத் தகப்பனின் பெயரில். யெகோவாவுடைய பெயரில் ஞானஸ்நானம் எடுக்கும்போது நாம் பின்வரும் விஷயங்களை ஏற்றுக்கொள்கிறோம் என்று அர்த்தம். யெகோவாவை நம்முடைய பரலோக அப்பாவாக, அதாவது நமக்கு உயிர் கொடுத்தவராக நாம் ஏற்றுக்கொள்கிறோம். அவர்தான் சர்வவல்லமையுள்ள கடவுள், எல்லாவற்றையும் படைத்தவர். (வெளிப்படுத்துதல் 4:11-ஐ வாசியுங்கள்.) நம் ஜெபத்தைக் கேட்கிறவர் அவர்தான் என்பதையும் ஏற்றுக்கொள்கிறோம். (சங். 65:2) ஜெபம் செய்யும்போதும் அவரைப் பற்றிப் பேசும்போதும் அவருடைய பெயரை மரியாதையான விதத்தில் தாராளமாகப் பயன்படுத்தலாம் என்பதையும் தெரிந்துவைத்திருக்கிறோம். ஆனால், கடவுளுடைய பெயரில் ஞானஸ்நானம் எடுக்க இன்னொரு விஷயத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். பெந்தெகொஸ்தே பண்டிகையில் பேதுரு சொன்னதைக் கேட்டுக்கொண்டு இருந்தவர்களுக்கு யெகோவாவைப் பற்றி ஏற்கெனவே தெரிந்திருந்தது. இருந்தாலும், இயேசு கிறிஸ்து மூலமாகத்தான் நிரந்தர மீட்பை யெகோவா கொடுக்கிறார் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது; நாமும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.—ரோ. 5:8.

போன படத்தில் காட்டப்பட்ட ஒரு சகோதரி, ஞானஸ்நானத்துக்குப் பிறகு தன் வீட்டில் ஜெபம் செய்கிறார்.

ஞானஸ்நானத்துக்குப் பிறகு, தகப்பனுடைய அதிகாரத்தையும் ஸ்தானத்தையும் எப்போதும் மனதில் வைத்து வாழுங்கள் (பாரா 12)


13. மகனுடைய பெயரில் ஞானஸ்நானம் எடுக்க நாம் எவற்றையெல்லாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்? (படத்தையும் பாருங்கள்.)

13 மகனின் பெயரில். மகனுடைய பெயரில் ஞானஸ்நானம் எடுக்கும்போது நாம் பின்வரும் விஷயங்களை ஏற்றுக்கொள்கிறோம் என்று அர்த்தம். இயேசுதான் கடவுளுடைய ஒரே மகன். அவர்தான் “வழி,” அதாவது அவர் மூலமாகத்தான் நம்மால் கடவுளோடு ஒரு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்ள முடிகிறது. (யோவா. 14:6) அவர்தான் நம் மீட்பர்; நாம் என்றென்றும் வாழ்வதற்காக தன்னுடைய உயிரையே கொடுத்திருக்கிறார். இதைப் புரிந்துவைத்திருப்பதால், ஞானஸ்நானம் எடுக்கும்போது மட்டுமல்ல, ஒவ்வொரு நாளுமே அவரை மாதிரி வாழ தூண்டப்படுகிறோம். (1 யோ. 2:6) எவ்வளவு தடைகள் வந்தாலும் சுறுசுறுப்பாக அவரை மாதிரியே பிரசங்கிக்கிறோம். (லூக். 4:43) கடவுளுக்கு உண்மையாகச் சேவை செய்யும்போது துன்புறுத்துதல் வந்தால்கூட அதைச் சகிக்க தயாராக இருக்கிறோம். (2 தீ. 3:12) ‘சபைக்குத் தலைவராக’ இயேசுவுக்கு இருக்கிற அதிகாரத்தையும் நாம் மதிக்கிறோம். அதனால், தன் சீஷர்களை வழிநடத்தவும் கவனித்துக்கொள்ளவும் அவர் யாரை நியமித்திருக்கிறாரோ அவர்களுக்கும் நாம் சந்தோஷமாகக் கீழ்ப்படிகிறோம்.—எபே. 4:8, 11, 12; 5:23.

போன படத்தில் காட்டப்பட்ட ஒரு சகோதரர், ஞானஸ்நானத்துக்குப் பிறகு வீட்டுக்கு வீடு ஊழியத்தில் பார்க்கும் ஒருவரிடம் ஒரு வசனத்தைக் காட்டுகிறார்.

ஞானஸ்நானத்துக்குப் பிறகு, மகனுடைய அதிகாரத்தையும் ஸ்தானத்தையும் எப்போதும் மனதில் வைத்து வாழுங்கள் (பாரா 13)


14. (அ) கடவுளுடைய சக்தியின் பெயரில் ஞானஸ்நானம் எடுக்க எவற்றையெல்லாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்? (படத்தையும் பாருங்கள்.) (ஆ) பரலோக நம்பிக்கை உள்ளவர்களுக்கு வேறு என்னென்ன ஞானஸ்நானங்கள் கிடைக்கின்றன? (“பரலோக நம்பிக்கை உள்ளவர்களுக்குக் கிடைக்கும் ஞானஸ்நானங்கள்” என்ற பெட்டியைப் பாருங்கள்.)

14 கடவுளுடைய சக்தியின் பெயரில். கடவுளுடைய சக்தியைப் பற்றிய உண்மைகளை நாம் ஏற்றுக்கொள்கிறோம். அது ஒரு நபர் கிடையாது, திரித்துவத்தின் பாகமும் கிடையாது; அது கடவுளுடைய செயல் நடப்பிக்கும் ஆற்றல். தீர்க்கதரிசிகளையும் பைபிள் எழுத்தாளர்களையும் கடவுளுடைய சக்திதான் வழிநடத்தியது என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். அதனால், தவறாமல் பைபிளைப் படிக்கிறோம், அதன்படி வாழ்கிறோம். (2 பே. 1:20, 21) மோசமான பாவங்களைச் செய்வதையும் தவிர்க்கிறோம். ஏனென்றால், அப்படிப்பட்ட பாவம் செய்தால் கடவுளுடைய சக்தி நமக்கும் கிடைக்காமல் போய்விடலாம், சபையிலும் அது செயல்படாமல் போய்விடலாம்.—எபே. 4:30.

போன படத்தில் காட்டப்பட்ட ஒரு சகோதரி, ஞானஸ்நானத்துக்குப் பிறகு தன் வீட்டில் பைபிளைப் படிக்கிறார்.

ஞானஸ்நானத்துக்குப் பிறகு, கடவுளுடைய சக்தியின் பங்கை எப்போதும் மனதில் வைத்து வாழுங்கள் (பாரா 14)


பரலோக நம்பிக்கை உள்ளவர்களுக்குக் கிடைக்கும் ஞானஸ்நானங்கள்

பரலோக நம்பிக்கை உள்ளவர்களுக்கு, தண்ணீர் ஞானஸ்நானத்தோடு சேர்த்து வேறுசில ஞானஸ்நானங்களும் கிடைக்கின்றன:

  • அவர்களுக்குக் கடவுளுடைய சக்தியால் ஞானஸ்நானம் கிடைக்கிறது. பரலோகத்தில் கிறிஸ்துவோடு சேர்ந்து சேவை செய்யும் அழைப்பு கிடைக்கிற சமயத்தில் அது கிடைக்கிறது. (மத். 3:11)

  • அவர்களுக்கு “கிறிஸ்துவுக்குள் ஞானஸ்நானம்” கிடைக்கிறது. எந்த அர்த்தத்தில்? கிறிஸ்துவோடு அவர்கள் ரொம்ப நெருக்கமாக ஒன்றுபட்டிருக்கிறார்கள். சொல்லப்போனால், அவர்கள் கிறிஸ்துவின் உடலாக இருக்கிறார்கள் என்றுகூட சொல்லலாம். (கலா. 3:27, 28; 1 கொ. 12:27)

  • அவர்கள் கிறிஸ்துவின் மரணத்துக்குள் ஞானஸ்நானம் எடுக்கிறார்கள். எந்த அர்த்தத்தில்? பூமியில் தங்கள் வாழ்க்கையை முடித்து பரலோகத்துக்கு உயிர்த்தெழுப்பப்படும்வரை, அவர்கள் இயேசுவின் வாழ்க்கையை அப்படியே உண்மையாக பின்பற்றுகிறார்கள். (ரோ. 6:3-5)

15. நாம் எதில் உறுதியாக இருக்க வேண்டும்?

15 நீங்கள் ஏற்கெனவே ஞானஸ்நானம் எடுத்துவிட்டீர்களா? அப்படியென்றால், ‘ஞானஸ்நானங்கள் பற்றிய போதனைகளில்’c உட்பட்டிருக்கிற எல்லா விஷயங்களையும் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள். அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுத்தபோது யெகோவாவுக்குக் கொடுத்த வாக்குறுதியின்படி வாழ வேண்டும் என்பதிலும் உறுதியாக இருங்கள். நீங்கள் இன்னும் ஞானஸ்நானம் எடுக்கவில்லையா? எதையாவது நினைத்து தயங்குகிறீர்களா? ஞானஸ்நானம் எடுக்க நீங்கள் என்ன செய்யலாம் என்று அடுத்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

உங்கள் பதில் என்ன?

  • ஞானஸ்நானம் எடுக்கும்போது தண்ணீரில் மூழ்கி வெளியே வருவது எதைக் குறிக்கிறது?

  • ஞானஸ்நானம் எடுக்கப் போகிறவர்களிடம் என்ன கேள்விகள் கேட்கப்படுகின்றன, ஏன்?

  • ‘தகப்பனின் பெயரிலும், மகனின் பெயரிலும், சக்தியின் பெயரிலும்’ ஞானஸ்நானம் எடுப்பது என்றால் என்ன?

பாட்டு 161 உம் சித்தம்தான் என் சந்தோஷம்!

a “ஞானஸ்நானம்” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் பாப்டிஸ்மா என்ற கிரேக்க வார்த்தைக்கு, “மூழ்குவது,” அல்லது “அமிழ்த்தி எடுப்பது” போன்ற அர்த்தங்கள் இருக்கின்றன. அதனால், ஞானஸ்நானம் என்பது ஒருவர் தண்ணீருக்குள் முழுமையாக மூழ்கி எழுவதைக் குறிக்கிறது. சில மதங்கள் கற்றுக்கொடுப்பதுபோல், வெறுமனே ஒருவர்மேல் தண்ணீரைத் தெளிப்பதை அது குறிக்காது.

b எபேசுவில் இருந்த சிலர், “யோவான் கொடுத்த ஞானஸ்நானத்தை” பெற்றிருந்தார்கள். (அப். 19:3) திருச்சட்டத்துக்கு எதிராகச் செய்யப்பட்ட பாவங்களிலிருந்து மனம் திருந்த சொல்லி யோவான் ஸ்நானகர் யூதர்களை உற்சாகப்படுத்தினார். அப்படி மனம் திருந்தியவர்களுக்கு, அவர் ஞானஸ்நானம் கொடுத்தார். (மாற். 1:4, 5) ஆனால், திருச்சட்டம் முடிவுக்கு வந்த பிறகு, யோவான் கொடுத்த ஞானஸ்நானம் செல்லுபடி ஆகாமல் போனது. அந்தச் சமயத்திலிருந்து, ‘ஒரே ஞானஸ்நானத்தைத்தான்’ யெகோவா அங்கீகரிக்கிறார்; அந்த ஞானஸ்நானம்தான் மீட்புக்கு வழிநடத்துகிறது.—எபே. 4:5.

c jw.org மற்றும் JW லைப்ரரியில், “பைபிள் தரும் பதில்கள்” என்ற தொடர் கட்டுரைகளில் வந்திருக்கும் “ஞானஸ்நானம் என்றால் என்ன?” என்ற கட்டுரையைப் பாருங்கள்.

d படவிளக்கம்: மாநாட்டில் ஞானஸ்நானம் எடுக்கப்போகிறவர்கள் தங்கள் விசுவாசத்தை வாயினால் அறிவிப்பதற்கு நிற்கிறார்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்