உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w26 பிப்ரவரி பக். 2-7
  • சத்தியத்தில் இல்லாத சொந்தங்களுக்கு உதவுங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • சத்தியத்தில் இல்லாத சொந்தங்களுக்கு உதவுங்கள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2026
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • உதவிக்கரம் நீட்ட கரிசனை உங்களைத் தூண்டட்டும்
  • காயப்படுத்தும் வார்த்தைகளையும் செயல்களையும் தாண்டி பாருங்கள்
  • பொறுமையாகவும் நம்பிக்கையாகவும் இருங்கள்
  • அன்பு வைத்திருப்பதைக் காட்டுங்கள்
  • சொந்தக்காரர்கள்மேல் நம்பிக்கையை இழந்துவிடாதீர்கள்
  • சத்தியம் ‘சமாதானத்தை அல்ல, பிரிவினையையே உண்டாக்குகிறது’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2017
  • பதில் கண்டுபிடியுங்கள்
    2025-2026 வட்டார மாநாட்டு நிகழ்ச்சிநிரல்​—வட்டாரக் கண்காணியுடன்
  • முடிவுகள் எடுக்கும்போது யெகோவாவை நம்பியிருப்பதை காட்டுங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • அடிப்படை சத்தியங்கள் இப்போதும் நமக்கு உதவுமா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2026
w26 பிப்ரவரி பக். 2-7

ஏப்ரல் 6-12, 2026

பாட்டு 82 ‘உங்கள் ஒளியை பிரகாசிக்கச் செய்யுங்கள்’

சத்தியத்தில் இல்லாத சொந்தங்களுக்கு உதவுங்கள்

“நன்மை செய்வதை நாம் விட்டுவிடாமல் இருக்க வேண்டும்.”—கலா. 6:9.

என்ன கற்றுக்கொள்வோம்?

சத்தியத்தில் இல்லாத சொந்தங்களோடு எப்படி நல்ல பந்தத்தை வைத்துக்கொள்ளலாம் என்றும் வாய்ப்பு கிடைக்கும்போது அவர்களுக்கு எப்படிச் சத்தியத்தைச் சொல்லலாம் என்றும் கற்றுக்கொள்வோம்.

1-2. சத்தியத்தை நீங்கள் தெரிந்துகொண்டபோது, உங்கள் சொந்தக்காரர்களோடு இருந்த உறவில் விரிசல் வருவதற்கு எது காரணமாக இருந்திருக்கலாம்?

‘நீ உன் வீட்டுக்குப் போய், யெகோவா உனக்காகச் செய்த எல்லாவற்றையும் பற்றி உன் சொந்தக்காரர்களிடம் சொல்.’ தன்னைப் பின்பற்றி வர விரும்பிய ஒருவரிடம் இயேசு சொன்ன வார்த்தைகள் இது! (மாற். 5:19) ஏதாவது நல்லது நடக்கும்போது அல்லது நல்ல விஷயத்தைக் கேள்விப்படும்போது, நெருக்கமானவர்களிடம் அதைச் சொல்ல வேண்டும் என்ற ஆசை இயல்பாகவே மனிதர்களுக்கு இருக்கும் என்று இயேசுவுக்குத் தெரியும். அதனால்தான் அந்த நபரிடம் அப்படிச் சொன்னார்.

2 நீங்கள் முதல்முதலில் நல்ல செய்தியைக் கேட்டபோது, உங்களுக்கு எப்படி இருந்தது? உங்கள் சொந்தக்காரர்களிடம்a அதைச் சொல்ல கண்டிப்பாகத் துடித்திருப்பீர்கள்! ஆனால் நீங்கள் எதிர்பார்த்த மாதிரி, உங்கள் சொந்தக்காரர்கள் அதை வரவேற்றிருக்க மாட்டார்கள். அல்லது, நீங்கள் சொன்ன விதம் அவர்களுக்குப் பிடிக்காததால் உங்களுக்கும் அவர்களுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டிருக்கலாம். ஒருவேளை அப்படி ஏற்பட்டிருந்தால், அவர்களோடு உங்களுக்கு இருக்கிற பந்தத்தைச் சரிசெய்யவும், நல்ல பந்தத்தைக் காத்துக்கொள்ளவும் நீங்கள் என்ன செய்யலாம்? உங்களுடைய கிறிஸ்தவ நம்பிக்கைகளை விட்டுக்கொடுக்காமல் அதை எப்படிச் செய்யலாம்?

3. இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?

3 இந்தக் கட்டுரையில் நான்கு விஷயங்களைப் பார்ப்போம்: (1) நம் சொந்தக்காரர்கள் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், அவர்கள்மேல் தனிப்பட்ட அக்கறை காட்ட கரிசனை எப்படி நம்மைத் தூண்டும்? (2) நம்மைக் கஷ்டப்படுத்துகிற மாதிரி அவர்கள் எதையாவது சொன்னால், செய்தால் நாம் என்ன செய்ய வேண்டும்? (3) நாம் பொறுமையாகவும் நம்பிக்கையாகவும் இருப்பது, அவர்கள் சத்தியத்தை ஏற்றுக்கொள்ள எப்படி உதவும்? (4) அவர்கள்மேல் அன்பு வைத்திருக்கிறோம் என்பதை நாம் எப்படிக் காட்டலாம்?

உதவிக்கரம் நீட்ட கரிசனை உங்களைத் தூண்டட்டும்

4. தான் சொன்ன செய்தியைக் கேட்காத மக்களிடம் இயேசு எப்படி நடந்துகொண்டார்?

4 தான் சொன்ன செய்தியைக் கேட்காத மக்கள்மேலும் இயேசு நம்பிக்கை வைத்திருந்தார், தொடர்ந்து அவர்களுக்கு உதவினார். இயேசு சொன்ன ஒரு உதாரணத்தில், தன்னைத் திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்கிற ஒரு நபருக்கு ஒப்பிட்டுப் பேசினார். அந்தத் தோட்டக்காரர், கனி கொடுக்காத அத்திமரத்தை கனி கொடுக்க வைப்பதற்கு, வெவ்வேறு விதங்களில் முயற்சி செய்துகொண்டே இருந்தார். (லூக். 13:6-9) இயேசு இந்த உதாரணத்தைச் சொன்னபோது, யூதர்கள் தன்மேல் விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள மூன்று வருஷங்களுக்குமேல் உழைத்திருந்தார். ஏன் அந்தளவுக்கு முயற்சி செய்துகொண்டே இருந்தார்? ஏனென்றால், இயேசுவுக்கு அவர்கள்மேல் கரிசனை இருந்தது. பொறுமையாக உதவ அதுதான் அவருக்குக் கைகொடுத்தது.

5. தன் சொந்த மக்களான யூதர்கள்மேல் இயேசு ஏன் கரிசனை காட்டினார்?

5 தன் சொந்த மக்களான யூதர்கள்மேல் இயேசுவுக்குக் கரிசனை இருந்தது. ஏனென்றால், கடவுள்மேல் விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள அன்றிருந்த மதத் தலைவர்கள் அவர்களுக்கு உதவவில்லை. “மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போல்” அந்த மக்கள் இருந்ததை இயேசு கவனித்தார். (மாற். 6:34) அவர் இறப்பதற்குக் கொஞ்சம் முன்பு எருசலேமைப் பார்த்து அழுதார். ஏனென்றால், அதில் குடியிருந்த பெரும்பாலானவர்கள் விசுவாசத்தைக் காட்ட தவறியதால், உயிரையே இழக்கப்போகிறார்கள் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. (லூக். 19:41-44) இயேசு மாதிரியே நமக்கும் கரிசனை இருந்தால், நம் சொந்தங்களுக்கு உதவ தூண்டப்படுவோம்.

6. சத்தியத்தில் இல்லாத சொந்தக்காரர்களிடம் நாம் ஏன் பொறுமையாக இருக்க வேண்டும்? (கலாத்தியர் 6:9)

6 கலாத்தியர் 6:9-ஐ வாசியுங்கள். நம் சொந்தக்காரர்கள் இன்னமும் சத்தியத்தில் ஆர்வம் காட்டவில்லை என்றாலும், அவர்களிடம் நாம் பொறுமையாக இருக்க வேண்டும். அவர்களுக்கு “நன்மை செய்வதை நாம் விட்டுவிடாமல் இருக்க வேண்டும்.” மற்ற மதத்தைப் பற்றிய தப்பெண்ணம் அவர்களுடைய மனதில் ஆழமாக வேரூன்றியிருக்கலாம். அவற்றை எடுத்துப்போடவும், விசுவாசத்தை வளர்த்துக்கொள்ளவும் அவர்களுக்குக் கொஞ்சம் காலம் தேவைப்படலாம். ஒருகாலத்தில் நாமும் அவர்களைப் போலவே “நம்பிக்கை இல்லாதவர்களாகவும், கடவுளைப் பற்றித் தெரியாதவர்களாகவும் இந்த உலகத்தில் வாழ்ந்து” வந்தோம். (எபே. 2:12) இன்னொருவர் உதவி செய்ததால்தான் இன்று இங்கே இருக்கிறோம். அப்படியென்றால், நாமும் நம்முடைய சொந்தக்காரர்களுக்கு உதவ கடமைப்பட்டிருக்கிறோம், இல்லையா?

காயப்படுத்தும் வார்த்தைகளையும் செயல்களையும் தாண்டி பாருங்கள்

7. இயேசுவின் சகோதரர்கள் அவர்மேல் விசுவாசம் வைக்காமல் இருந்ததற்கு எவை காரணமாக இருந்திருக்கலாம்?

7 கலிலேயாவில் இயேசு செய்த அற்புதங்களை அவருடைய சகோதரர்களும் கேள்விப்பட்டிருக்கலாம். (லூக். 4:14, 22-24) இருந்தாலும், ஆரம்பத்தில் அவர்கள் அவர்மேல் விசுவாசம் வைக்கவில்லை. (யோவா. 7:5) ஏன்? அதற்கான காரணம் பைபிளில் இல்லை. ஆனால், அன்றிருந்த யூதர்களில் சிலர் இயேசுவின் சீஷராக ஆகாததற்கு, இரண்டு காரணங்களாவது இருந்திருக்கலாம் என்று பைபிள் காட்டுகிறது. சிலருக்கு, சமுதாயத்திலிருந்து தங்களை ஒதுக்கிவிடுவார்களோ என்ற பயம் இருந்தது. (யோவா. 9:18-22) வேறு சிலருக்கு, இயேசுவைச் சின்ன வயதில் இருந்தே தெரிந்திருந்ததால், அவரைக் கடவுளுடைய பிரதிநிதியாக அவர்களால் பார்க்க முடியவில்லை. (மாற். 6:1-4) ஒருவேளை, இயேசுவின் சகோதரர்களுக்கும் இந்த மாதிரியான எண்ணங்கள் இருந்திருக்கலாம். அதேமாதிரி, நம் சொந்தக்காரர்களும் சமுதாயத்தை நினைத்து பயப்படலாம். அல்லது, நம்மைப் போன்ற சாதாரண ஆட்கள் சொல்வதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கலாம்.

8. சத்தியத்தில் இல்லாத சொந்தக்காரர்கள் நம்மைக் காயப்படுத்த எது காரணமாக இருக்கலாம்?

8 அவர்கள் ஏன் அப்படிப் பேசுகிறார்கள், நடந்துகொள்கிறார்கள் என்று யோசியுங்கள். இயேசுவுக்கு “பைத்தியம் பிடித்துவிட்டது” என்று சொன்ன சொந்தக்காரர்களில், அவருடைய சகோதரர்களும் இருந்திருக்கலாம். (மாற். 3:21) அவர்கள் ஏன் அந்த முடிவுக்கு வந்திருக்கலாம்? ஊழியம் செய்வதிலும் மக்களைக் குணப்படுத்துவதிலும் இயேசு சுறுசுறுப்பாகச் சுற்றிக்கொண்டே இருந்ததால், ஒரேவொரு வேளை உணவு சாப்பிடக்கூட அவருக்கு நேரம் இல்லாமல்போனது என்று அந்தப் பதிவு காட்டுகிறது. (மாற். 3:20) இதையெல்லாம் கேள்விப்பட்ட அவருடைய சொந்தக்காரர்கள், அவர் அளவுக்குமீறி போய்க்கொண்டிருக்கிறார் என்று யோசித்து இருக்கலாமா? வாய்ப்பிருக்கிறது! நம் விஷயத்திலும் இப்படி நடக்கலாம். நாம் மதவெறி பிடித்தவர்களாக இருக்கிறோம் என்று நம் சொந்தக்காரர்கள் நினைக்கலாம். அப்படி அவர்கள் நினைத்தால், நாம் உண்மையிலேயே அப்படியில்லை என்றும் நியாயமாகத்தான் நடந்துகொள்கிறோம் என்றும் நம்முடைய செயல்களில் காட்டலாம்.

9. குடும்பத்தில் இருக்கிறவர்களுக்கு சாட்சிகள்மேல் நல்ல அபிப்பிராயம் வர எது உதவும்? (1 பேதுரு 3:1, 2) (படங்களையும் பாருங்கள்.)

9 உங்கள் நல்ல நடத்தையே உங்களுக்காகப் பேசும். சொந்தக்காரர்களிடம் அன்பாகப் பேசும்போதும் நடந்துகொள்ளும்போதும், அவர்கள் நம்மைப் பார்க்கிற விதமே மாறிவிடலாம். (1 பேதுரு 3:1, 2-ஐ வாசியுங்கள்.) ஒரு சகோதரியின் கணவர் யெகோவாவின் சாட்சியாக இல்லை என்று வைத்துக்கொள்வோம். நம் சகோதரி கூட்டங்களுக்கும் ஊழியத்துக்கும் போகும்போது அவருடைய கணவர் தனிமையாக உணரலாம்; ஏன், அவருக்குக் கோபம்கூட வரலாம். அவர் அப்படி உணராமல் இருக்க, அந்தச் சகோதரி தன்னுடைய அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்யலாம். ஒருவேளை, கணவர் வேலையாக இருக்கிற சமயத்தில் அல்லது வெளியே போயிருக்கிற சமயத்தில் அந்தச் சகோதரி ஊழியத்துக்குப் போகலாம். கிறிஸ்தவ மனைவிகள், வளைந்துகொடுக்கிறவர்களாகவும் நியாயமாக நடக்கிறவர்களாகவும் இருக்கும்போது, கணவர்களுக்கு சாட்சிகள்மேல் ஒரு நல்ல அபிப்பிராயம் வர வாய்ப்பிருக்கிறது.

படத்தொகுப்பு: 1. சத்தியத்தில் இல்லாத தன் கணவர், வேலைக்குப் போவதற்கு முன்பு ஒரு சகோதரி அவருக்காக மதிய உணவும் காஃபியும் செய்து கொடுக்கிறார். 2. பிற்பாடு, அந்தச் சகோதரி வேறொரு சகோதரியோடு சேர்ந்து ஊழியம் செய்கிறார். தன்னுடைய ஃபோனிலிருந்து ஒரு பைபிள் சத்தியத்தை ஒரு பெண்ணுக்குச் சொல்கிறார்.

நம் அன்பான வார்த்தைகளும் செயல்களும், சத்தியத்தில் இல்லாத துணைக்கு சாட்சிகளைப் பற்றி இருக்கும் அபிப்பிராயத்தை மாற்றும் (பாரா 9)g


10. மற்றவர்கள் நம்மைப் பற்றித் தவறாகப் பேசும்போது நாம் எப்படி இயேசு மாதிரியே நடந்துகொள்ளலாம்?

10 எல்லா குற்றச்சாட்டுகளுக்கும் கட்டாயம் பதில் சொல்ல வேண்டும் என்று நினைக்காதீர்கள். இயேசுவை ஒரு பெருந்தீனிக்காரன், குடிகாரன் என்றெல்லாம் மக்கள் பொய்யாகக் குற்றம்சாட்டினார்கள். அந்த எல்லா குற்றச்சாட்டுகளுக்கும் இயேசு பதில் சொல்லிக்கொண்டு இல்லை. அவர் நடந்துகொள்கிற விதத்தைப் பார்த்து, அந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையா பொய்யா என்பதை மக்களே புரிந்துகொள்ளட்டும் என்று அவர் நினைத்தார். (மத். 11:19) தன்னுடைய உதாரணத்தின் மூலம், தான் சமநிலையாக வாழ்வதைக் காட்டினார். (யோவான் 2:2, 6-10-ஐ ஒப்பிடுங்கள்.) பாடம்? உங்களைப் பற்றி மற்றவர்கள் சொல்கிற எல்லா குற்றச்சாட்டுகளுக்கும் கட்டாயம் பதில் சொல்ல வேண்டும் என்று நினைக்காதீர்கள். அதற்குப் பதிலாக, நீங்கள் நடந்துகொள்கிற விதத்தின் மூலம், சமநிலையாக இருக்கிறீர்கள்... சந்தோஷமாக இருக்கிறீர்கள்... என்பதைக் காட்டுங்கள். உங்கள் நடத்தையைப் பார்த்து அவர்களே ஒரு முடிவுக்கு வரட்டும். நம்மைப் பற்றி அவர்கள் கேள்விப்பட்ட தவறான விஷயங்கள் எல்லாம் பொய் என்பதை அவர்களே புரிந்துகொள்வார்கள்.

பொறுமையாகவும் நம்பிக்கையாகவும் இருங்கள்

11. தன்மேல் விசுவாசம் வைக்காத தன்னுடைய சகோதரர்களிடம் இயேசு எப்படி நடந்துகொண்டார்?

11 சுவிசேஷ பதிவுகள் காட்டுகிற மாதிரி, இயேசு தன் சகோதரர்களிடம் பொறுமையாக இருந்தார். உதாரணத்துக்கு, கானா ஊரில் முதல் அற்புதத்தை இயேசு செய்தபோது, அவர்களும் அநேகமாக அங்கேதான் இருந்திருக்க வேண்டும். (யோவா. 2:11, 12) ஆனாலும், நாம் ஏற்கனவே பார்த்த மாதிரி, இயேசுவின் சகோதரர்கள் அவர்மேல் விசுவாசம் வைக்கவில்லை. அதற்காக, அவர்களோடு எந்த ஒட்டுறவும் வைத்துக்கொள்ளக் கூடாது என்று இயேசு நினைக்கவில்லை. முதல் அற்புதத்தைச் செய்து கிட்டத்தட்ட மூன்று வருஷங்களுக்குப் பிறகுகூட, இயேசு தன் சகோதரர்களிடம் அன்பாகப் பேசினார் என்று பைபிள் காட்டுகிறது.—யோவா. 7:5-8.

12. நம் சொந்தக்காரர்களில் சிலர் தங்கள் மனதை மாற்றிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது என்று நம்பிக்கையோடு இருக்க எது உதவும்?

12 யெகோவாவின் இரக்கத்தைப் பற்றி நன்றாகத் தெரிந்துவைத்திருந்தால் நாம் நம்பிக்கையோடு இருப்போம். பொய் மதங்கள் அழியும் சமயத்தில், அந்த அழிவைப் பற்றி நாம் முன்பே சொன்னது நம் சொந்தக்காரர்களுக்கு ஞாபகம் வரலாம்.b (வெளி. 17:16) மிகுந்த உபத்திரவம் ஆரம்பித்தப் பிறகுகூட அவர்கள் நம்மோடு சேர்ந்து யெகோவாவை வணங்க வாய்ப்பிருக்கிறது. இதெல்லாம் நடப்பதற்கு முன்பே—இப்போதே—நாம் அவர்களுக்கு உதவி செய்யலாம்; அவர்களுடைய கஷ்டத்தில் கைகொடுக்கலாம். நாம் காட்டும் உண்மையான அன்பும் கரிசனையும், நல்ல செய்தியை ஏற்றுக்கொள்ள அவர்களைத் தூண்டலாம்.

அன்பு வைத்திருப்பதைக் காட்டுங்கள்

13. யெகோவாவின் சேவையில் நாம் சுறுசுறுப்பாக இருந்தாலும் எதில் கவனமாக இருக்க வேண்டும்?

13 யெகோவாவுக்குச் சேவை செய்வதில் நாம் சுறுசுறுப்பாக இருக்கிறோம் என்பது உண்மைதான். இருந்தாலும், சொந்தக்காரர்களுக்குக் கொடுப்பதற்கு நம்மிடம் நேரமே இல்லை... அவர்கள்மேல் நமக்கு அன்பே இல்லை... என்று அவர்கள் நினைக்கும் அளவுக்கு நடந்துகொள்ளக் கூடாது. (மத். 7:12) அவர்கள்மேல் நாம் அக்கறை வைத்திருக்கிறோம் என்பதை எப்படிக் காட்டலாம்? சில வழிகளைப் பார்க்கலாம்.

14-15. சத்தியத்தில் இல்லாத நம் சொந்தக்காரர்கள்மேல் அன்பு காட்ட ஒரு வழி என்ன? உதாரணம் சொல்லுங்கள்.

14 அவர்களிடம் அடிக்கடி பேசுங்கள், அன்பைச் செயலில் காட்டுங்கள். உங்கள் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை அவர்களுக்கு அடிக்கடி தெரியப்படுத்துங்கள். இப்படி, அவர்கள்மேல் அன்பு வைத்திருப்பதையும் அவர்களை முக்கியமாக நினைப்பதையும் உங்களால் காட்ட முடியும். உதாரணத்துக்கு, நீங்கள் அவர்களுக்கு மெசேஜ் அனுப்பும்போது கூடவே சில ஃபோட்டோக்களையும் அனுப்பலாம். நண்பர்களோடு சேர்ந்து நேரம் செலவு செய்தபோது அல்லது டூர் போனபோது எடுத்த ஃபோட்டோக்களை அனுப்பலாம். அவர்களோடு உங்களுக்கு இருக்கிற பந்தத்தைப் பலப்படுத்த, நீங்கள் கொடுக்கும் ஒரு எளிமையான பரிசோ அன்பாக எழுதிக்கொடுக்கிற சில வார்த்தைகளோகூட போதும்! நீங்களாக முன்வந்து இதையெல்லாம் செய்யும்போது அவர்கள்மேல் அன்பு வைத்திருக்கிறீர்கள் என்பதைச் சொல்லாமல் சொல்கிறீர்கள்.

15 ஆர்மீனியாவில் இருக்கிற ஹானா என்ற சகோதரியின் அனுபவத்தைப் பார்க்கலாம். ஹானாவின் சொந்தக்காரர்கள் ஒன்றாகச் சேர்ந்து நிறைய நேரம் செலவு செய்வார்கள். முக்கியமாக, பிறந்த நாட்கள் சமயத்திலும் பண்டிகை நாட்களிலும் ஒன்றாக இருப்பார்கள். ஆனால், ஹானா சத்தியத்துக்கு வந்த பிறகு, அவருடைய சொந்தக்காரர்கள் கவலைப்பட ஆரம்பித்தார்கள். முன்பு போல் ஹானா தங்களோடு நேரம் செலவு செய்யாமல் போய்விடுவாளோ என்று பயந்தார்கள். ஹானாவின் எதிர்காலம் என்ன ஆகுமோ என்றுகூட கவலைப்பட்டார்கள். இந்தச் சூழ்நிலையில் ஹானா என்ன செய்தார்? “என் வாழ்க்கை எப்படிப் போய்க்கொண்டு இருக்கிறது... நான் என்னவெல்லாம் செய்கிறேன்... என்றெல்லாம் சொந்தக்காரர்களுடைய வீட்டுக்குப் போகும்போது அவர்களிடம் சொல்வேன். என்னுடைய வீட்டுக்கும் அவர்களைக் கூப்பிடுவேன். என்னுடைய நண்பர்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்துவேன். அதனால் என்னுடைய நண்பர்கள் யார் என்று என்னுடைய சொந்தக்காரர்களில் நிறைய பேருக்குத் தெரியும். என் சொந்தக்காரர்கள் என் நண்பர்களோடு நன்றாகப் பேசிப் பழகுவார்கள். அதுமட்டுமல்ல, நான் இப்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன் என்பதை அவர்களே ஒத்துக்கொள்கிறார்கள். இப்போதெல்லாம் அவர்கள் என்னை நினைத்துக் கவலைப்படுவதில்லை” என்கிறார் ஹானா.

16. தன் சகோதரன் யாக்கோபுமேல் அக்கறை இருந்ததை இயேசு எப்படிக் காட்டினார்? (அடிக்குறிப்பையும் பாருங்கள்.)

16 அக்கறை காட்டுங்கள். உயிர்த்தெழுந்த பிறகு, இயேசு தன் சகோதரன் யாக்கோபைச் சந்தித்துப் பேசியதன் மூலம் அவர்மேல் அக்கறை வைத்திருப்பதைக் காட்டினார். (1 கொ. 15:7) இயேசு தன்மேல் இன்னமும் பாசம் வைத்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டபோது யாக்கோபுக்கு எப்படி இருந்திருக்கும்! அநேகமாக இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, இயேசுதான் மேசியா என்பதை யாக்கோபு உறுதியாக நம்ப ஆரம்பித்திருக்கலாம். இயேசு யார் என்பதைச் சரியாகப் புரிந்துகொள்ள குடும்பத்திலிருந்த மற்றவர்களுக்கும் யாக்கோபு ஒருவேளை உதவியிருக்கலாம்.c—அப். 1:14.

17. ரோமர் 12:15-ல் சொல்லியிருக்கிற மாதிரி நாம் எப்படி நடந்துகொள்ளலாம்? (படத்தையும் பாருங்கள்.)

17 ரோமர் 12:15-ஐ வாசியுங்கள். நம் சொந்தக்காரர்களின் வாழ்க்கையில் நல்லது-கெட்டது என நிறைய விஷயங்கள் நடக்கலாம். அதுபோன்ற முக்கியமான சமயங்களில், நாம் அவர்கள்மேல் அக்கறை காட்டும்போது அவர்களுக்கு நம்மேல் இருக்கிற அபிப்பிராயம் மாறலாம்.d உதாரணத்துக்கு, அவர்களுக்கு குழந்தை பிறக்கும்போது நாம் வாழ்த்து சொல்லலாம்; நாமும் அவர்களோடு சேர்ந்து சந்தோஷப்படுவதைக் காட்ட பரிசுகளைக் கொடுக்கலாம். குடும்பத்தில் ஒருவர் இறந்துவிட்டால், வேதனையில் இருப்பவர்களிடம் ஆறுதலாகப் பேசலாம். நடைமுறையான உதவிகளைச் செய்யலாம்; ஆறுதலான வார்த்தைகளை மெசேஜில்கூட அனுப்பலாம். அதுமட்டுமல்ல, அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று அடிக்கடி விசாரிக்கலாம். முக்கியமாக, அவர்கள் கஷ்டத்தில் துவண்டுபோய் இருக்கும்போது அப்படிச் செய்யலாம்.

போன படத்தில் பார்த்த சகோதரி, சத்தியத்தில் இல்லாத தன் கணவரோடும் மாமியாரோடும் சேர்ந்து ஃபோட்டோ எடுக்கிறார். அவருடைய மாமியார் வீல்-சேரில் இருக்கிறார்.

உதவி தேவைப்படும் சமயங்களில் நம் சொந்தக்காரர்கள்மேல் அக்கறை காட்டும்போது, நம்மேலும் நம்முடைய நம்பிக்கைகள்மேலும் அவர்களுக்கு இருக்கும் தப்பெண்ணம் மாறலாம் (பாரா 17)h


சொந்தக்காரருடைய கல்யாணத்திலோ சவ அடக்க நிகழ்ச்சியிலோ கலந்துகொள்வீர்களா?

கல்யாணத்தின்போதும் சவ அடக்க நிகழ்ச்சியின்போதும் சொந்தக்காரர்கள் எல்லாரும் ஒன்றாகக் கூடிவருவார்கள். அதுபோன்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளலாமா வேண்டாமா என்று முடிவுசெய்ய, சில பைபிள் நியமங்களை நீங்கள் யோசித்துப் பார்க்கலாம்.

  • அந்த நிகழ்ச்சியில் மதம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் இருக்குமா அல்லது அது ஒரு பொது நிகழ்ச்சியாக இருக்குமா? (2 கொ. 6:14, 15)

  • அதில் கலந்துகொள்ளும்போது, பைபிளுக்கு எதிரான விஷயங்களை அல்லது மதச் சடங்குகளைச் செய்ய சொல்லி வற்புறுத்தப்பட்டால் உங்களால் அதைச் சமாளிக்க முடியுமா? (நீதி. 22:3)

  • பைபிள் ஆதரிக்காத பழக்கவழக்கங்களில் நீங்கள் கலந்துகொள்ள மாட்டீர்கள் என்பது உங்கள் சொந்தக்காரர்களுக்குத் தெரியுமா?

  • மதத்தோடு சம்பந்தப்பட்ட ஒரு கட்டிடத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் நீங்கள் கலந்துகொண்டால், உங்கள் சகோதர சகோதரிகள் எப்படி உணர்வார்கள்? (பிலி. 1:10)

நீங்கள் என்ன முடிவெடுத்தாலும் சரி, அதை உங்கள் சொந்தக்காரர்களிடம் தெளிவாகவும் அவர்கள் ஏற்றுக்கொள்ளும் விதத்திலும் விளக்குங்கள். முக்கியமாக, கடவுளுக்குமுன் உங்களுக்கு சுத்தமான மனசாட்சி இருக்கிற மாதிரி பார்த்துக்கொள்ளுங்கள்.f

18. அந்திரேயா மாதிரி நாம் எப்படி நடந்துகொள்ளலாம்?

18 அவர்களைச் சகோதர சகோதரிகளுக்கு அறிமுகப்படுத்தி வையுங்கள். இயேசுதான் மேசியா என்பதை அந்திரேயா புரிந்துகொண்டபோது, தன்னுடைய சகோதரன் பேதுருவைக் கூட்டிக்கொண்டுபோய் இயேசுவுக்கு ஆர்வமாக அறிமுகப்படுத்தினார். (யோவா. 1:40-42) அந்திரேயாவைப் போல் நாம் எப்படி நடந்துகொள்ளலாம்? நம்முடைய சொந்தக்காரர்களை கூட்டத்துக்கோ நண்பர்களோடு உணவு சாப்பிடுவதற்கோ எப்போதாவது கூட்டிக்கொண்டு போகலாம். சகோதர சகோதரிகளிடம் அவர்களை அறிமுகப்படுத்தி வைக்கும்போது, யெகோவாவின் சாட்சிகளும் சாதாரண மக்கள்தான் என்பதையும் அவர்கள் நல்ல மக்கள் என்பதையும் புரிந்துகொள்வார்கள்.

19. சொந்தக்காரர்கள் நம் நம்பிக்கைகளை முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை என்றாலும் நாம் அவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? (1 பேதுரு 3:15)

19 1 பேதுரு 3:15-ஐ வாசியுங்கள். சில விஷயங்களை நாம் ஏன் செய்வதில்லை என்று நம் சொந்தக்காரர்கள் முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை என்றாலும், நாம் காட்டும் அன்பையும் மரியாதையையும் அவர்கள் என்றுமே மறக்க மாட்டார்கள். அதுமட்டுமல்ல, குறிப்பிட்ட சில விசேஷங்களில் நாம் அவர்களோடு இல்லை என்றாலும், மற்ற சமயங்களில் அவர்களோடு நேரம் செலவு செய்ய நாம் முயற்சி எடுப்பதை அவர்கள் உயர்வாக நினைக்கலாம். உதாரணத்துக்கு, பைபிள்படி தவறாக இருக்கும் பண்டிகைகளைக் கொண்டாடவோ சடங்குகளைச் செய்யவோ மாட்டோம் என்றாலும், மற்ற சமயங்களில் அவர்களைப் போய்ப் பார்க்கலாம்; அவர்களோடு சேர்ந்து சாப்பிடலாம், அவர்களுக்குப் பரிசுகளைக்கூட கொடுக்கலாம்.

சொந்தக்காரர்கள்மேல் நம்பிக்கையை இழந்துவிடாதீர்கள்

20. இயேசுவின் சகோதரர் யாக்கோபின் உதாரணம் எதைக் காட்டுகிறது?

20 இயேசுவோடு சேர்ந்து ஊழியம் செய்கிற வாய்ப்பை யாக்கோபு இழந்துவிட்டார். ஆனால், காலப்போக்கில் அவர் ஒரு சீஷராக ஆனார். (கலா. 1:18, 19; 2:9) ஆரம்பத்தில் அவர் இயேசுவின் சீஷராக ஆகவில்லை என்றாலும், இயேசு சொல்லிக்கொடுத்த விஷயங்களைத் தன் மனதில் பதிய வைத்திருந்தார் என்று தெரிகிறது. உதாரணத்துக்கு, கடவுளுடைய சக்தியால் தூண்டப்பட்டு அவர் எழுதிய கடிதத்தில், மலைப் பிரசங்கத்தில் இயேசு சொன்ன சில விஷயங்களையும் எழுதியிருக்கிறார்.e

21. சொந்தக்காரர்கள்மேல் வைத்திருக்கிற நம்பிக்கையை நாம் ஏன் இழந்துவிடக் கூடாது?

21 இதுவரை பார்த்த எல்லா முயற்சிகளையும் நாம் எடுத்த பிறகும்கூட, நம் சொந்தக்காரர்கள் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளாமல் போகலாம். அவர்கள்மேல் நாம் தனிப்பட்ட அக்கறை காட்டியும் அவர்கள் நம்மிடம் அன்பே இல்லாமல் நடந்துகொள்ளலாம். இருந்தாலும், அவர்கள்மேல் வைத்திருக்கிற நம்பிக்கையை நாம் இழந்துவிடக் கூடாது. ஏன்? ஏனென்றால், ஒவ்வொரு தடவை நாம் அவர்களிடம் அன்பாக நடந்துகொள்ளும்போதும், நம் இரக்கமுள்ள கடவுளான யெகோவா மாதிரியும் அவருடைய மகன் இயேசு மாதிரியும் நடந்துகொள்கிறோம்! (லூக். 6:33, 36) காலங்கள் போகப்போக, நம் நல்ல செயல்கள் அவர்களுடைய இதயத்தை இளக வைக்கலாம். நம் நம்பிக்கைகளைப் பற்றி நாம் ஏற்கெனவே சொன்னதுகூட அவர்களுடைய ஞாபகத்துக்கு வரலாம். சொந்தக்காரர்கள்மேல் இருக்கிற நம்பிக்கையை நாம் இழக்காமல் இருந்தால், அவர்களில் சிலராவது நம்மோடு சேர்ந்து உண்மை வணக்கம் பக்கம் வருவதைப் பார்த்து பூரித்துப்போவோம்!

உங்கள் பதில் என்ன?

  • சத்தியத்தில் இல்லாத சொந்தக்காரர்களுக்கு உதவி செய்ய கரிசனை எப்படி நம்மைத் தூண்டும்?

  • அவர்களிடம் பொறுமையோடும் நம்பிக்கையோடும் இருப்பது ஏன் முக்கியம்?

  • அவர்கள்மேல் நாம் அன்பு வைத்திருப்பதை எப்படிக் காட்டலாம்?

பாட்டு 60 உயிர் காக்கும் நற்செய்தி

a இந்தக் கட்டுரையில், “சொந்தக்காரர்கள்” என்ற வார்த்தை குடும்ப அங்கத்தினர்களையும் உட்படுத்தும்.

b மே 2024 காவற்கோபுரத்தில் “சீக்கிரத்தில் யெகோவா எப்படி மக்களை நியாயந்தீர்ப்பார்?” என்ற கட்டுரையில் பக். 10-11, பாரா. 11-13-ஐப் பாருங்கள்.

c இயேசுவின் சகோதரர்களில் குறைந்தது இரண்டு பேர், அவர் இறந்து உயிர்த்தெழுந்த பிறகு சத்தியத்தை ஏற்றுக்கொண்டார்கள். அவர்கள் யாக்கோபு மற்றும் யூதா.

d “சொந்தக்காரருடைய கல்யாணத்திலோ சவ அடக்க நிகழ்ச்சியிலோ கலந்துகொள்வீர்களா?” என்ற பெட்டியைப் பாருங்கள்.

e யாக்கோபு 1:2-ஐயும் மத்தேயு 5:11, 12-ஐயும் ஒப்பிடுங்கள்; யாக்கோபு 1:19-ஐயும் மத்தேயு 5:22-ஐயும் ஒப்பிடுங்கள்; யாக்கோபு 1:22; 2:24-ஐயும் மத்தேயு 7:21-ஐயும் ஒப்பிடுங்கள்; யாக்கோபு 2:13-ஐயும் மத்தேயு 5:7; 6:14, 15-ஐயும் ஒப்பிடுங்கள்.

f இதுபோன்ற சூழ்நிலைகளில் என்ன செய்யலாம் என்று கூடுதலாகத் தெரிந்துகொள்ள, மே 15, 2002 மற்றும் நவம்பர் 15, 2007 காவற்கோபுரத்தில் வந்த “வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்” கட்டுரைகளைப் பாருங்கள்.

g படவிளக்கம்: ஒரு சகோதரி ஊழியத்துக்குப் போவதற்கு முன்பு, தன் கணவருக்குத் தேவையான சாப்பாட்டை தயார் செய்து கொடுக்கிறார்.

h படவிளக்கம்: அதே சகோதரி சத்தியத்தில் இல்லாத தன் மாமியாரைச் சந்தித்து நேரம் செலவு செய்கிறார்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்