கிறிஸ்தவ ஊழியர்களுக்கான ஓர் ஏற்பாடு
1. என்ன புதிய ஏற்பாடு 1938-ல் ஆரம்பிக்கப்பட்டது, என்ன காரணத்திற்காக?
1 1938-ல் யெகோவாவின் அமைப்பில் ஒரு புதிய ஏற்பாடு ஆரம்பிக்கப்பட்டது. மண்டல மாநாடுகளில் (இப்போது, வட்டார மாநாடுகள்) கலந்துகொள்ள ஒவ்வொரு வட்டாரத்தில் இருந்த சபைகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. என்ன காரணத்திற்காக? ஜனவரி 1939-ல் வெளியான இன்ஃபார்மென்ட் (இப்போது, நம் ராஜ்ய ஊழியம்) இவ்வாறு பதிலளிக்கிறது: “ஊழியத்தில் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைப் பற்றி இப்படிப்பட்ட மாநாடுகள் கற்றுக்கொடுக்கின்றன. இந்த மாநாடுகள் யெகோவாவின் தேவராஜ்ய அமைப்பின் ஒரு பாகமாக இருக்கின்றன. நமக்கு நியமிக்கப்பட்டிருக்கும் வேலையை நாம் ஒவ்வொருவரும் சரியாகச் செய்ய அங்கு கொடுக்கப்படும் போதனை மிகவும் அவசியமாக இருக்கிறது.” 1938-ல் வெறும் 58,000 ராஜ்ய பிரசங்கிப்பாளர்கள் இருந்தார்கள்; ஆனால், 2009-ல் அவர்களுடைய எண்ணிக்கை 70,00,000-ஐத் தாண்டிவிட்டது; இதற்குக் காரணம், அவர்களுக்கு “நியமிக்கப்பட்டிருக்கும் வேலையை” அவர்கள் சரியாகச் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் வட்டார மாநாடுகளே!
2. புதிய ஊழிய ஆண்டில் நடைபெறவிருக்கிற வட்டார மாநாட்டில் நாம் என்னென்ன பேச்சுகளைக் கேட்டு அனுபவிப்போம்?
2 அடுத்த வட்டார மாநாட்டின் தலைப்பு: செப்டம்பர் முதற்கொண்டு நடைபெறவிருக்கும் வட்டார மாநாட்டில் கலந்துகொள்வதற்கும் அதிலிருந்து ஊக்கம் பெறுவதற்கும் நாம் ஆவலோடு காத்திருக்கிறோம். இந்த மாநாட்டின் தலைப்பு: ‘நீங்கள் உலகத்தின் பாகமாக இல்லை.’ இது யோவான் 15:19-ன் அடிப்படையில் இருக்கிறது. கிறிஸ்தவ ஊழியர்களுக்கு மிகுந்த பலன் அளிக்கும் சில பேச்சுகளை இந்த மாநாட்டில் கேட்கப்போகிறோம். சனிக்கிழமை நாம் கேட்கப்போகிற பேச்சின் தலைப்பு, “முழுநேர சேவை நம்மை எவ்வாறு பாதுகாக்கிறது?” மூன்று பகுதிகளைக் கொண்ட தொடர்பேச்சையும் நாம் கேட்டு மகிழ்வோம்: “இவற்றால் கறைபடாதபடி பார்த்துக்கொள்ளுங்கள் . . .” “மூர்க்க மிருகம்,” “பேர்போன விலைமகள்” மற்றும் “பயண வியாபாரிகள்.” ஞாயிற்றுக்கிழமை நாம் கேட்கப்போகிற தொடர்பேச்சின் தலைப்பு “யெகோவாவை நேசியுங்கள், இந்த உலகத்தை அல்ல.” மாநாட்டில் இடம்பெறும் வேறு சில பேச்சுகள்: “தொடர்ந்து ‘அந்நியர்களும் தற்காலிகக் குடிகளுமாய் இருங்கள்,’” “தைரியமாயிருங்கள்! நீங்கள் இந்த உலகத்தை ஜெயிக்க முடியும்.”
3. வட்டார மாநாட்டில் கலந்துகொள்வதன் மூலமாக நாம் என்னென்ன நன்மைகளைப் பெறலாம்?
3 ஊழியத்தில் பின்தங்கியிருந்த ஒரு சகோதரி சமீபத்தில் நடந்த ஒரு வட்டார மாநாட்டில் கலந்துகொண்ட பிறகு தன்னுடைய சூழ்நிலையைச் சீர்தூக்கிப் பார்த்தார். “இனி சாக்குப்போக்கு சொல்லாமல் ஊழியத்தில் ஈடுபட வேண்டும்” என்று உறுதிகொள்ள அந்த மாநாடு தனக்கு உதவியதாக அவர் எழுதினார். புதிய ஊழிய ஆண்டிற்கான வட்டார மாநாட்டின் நிகழ்ச்சிகள் உலகத்தின் மீது அன்பு வைக்காமல் யெகோவாமீது அன்பு வைப்பதற்கு நம் அனைவருக்கும் உதவும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. (1 யோ. 2:15-17) கிறிஸ்தவ ஊழியர்களுக்காகத் தயார் செய்யப்பட்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, நன்கு கவனித்துக் கேட்டு அதிலிருந்து முழுமையாகப் பயனடைய உங்களால் முடிந்த அனைத்தையும் செய்யுங்கள்.