புதிய வட்டார மாநாட்டு நிகழ்ச்சி
தற்போதுள்ள ‘கையாளுவதற்கு கடினமான கொடிய காலங்களில்,’ யெகோவாவின் அங்கீகாரத்தைப் பெற்று அதை தக்க வைத்துக்கொள்வதற்கு கடவுளுடைய ஞானம் நமக்குத் தேவை. (2 தீ. 3:1, NW) 2005 ஊழிய ஆண்டுக்கான வட்டார மாநாட்டு நிகழ்ச்சி, “‘பரத்திலிருந்து வருகிற ஞானத்தால்’ வழிநடத்தப்படுங்கள்” என்ற தலைப்பில் இருக்கும்; இது நடைமுறை ஆலோசனையையும் உற்சாகத்தையும் அளிக்கும்.—யாக். 3:17.
“‘பரத்திலிருந்து வரும் ஞானத்தை’ நம் வாழ்க்கையில் வெளிக்காட்டுதல்” என்பதே முதல் தொடர்பேச்சின் தலைப்பு. இது, சுத்தமும், சமாதானமும், சாந்தமும், இணக்கமும் உள்ளவர்களாய் இருப்பது எதை அர்த்தப்படுத்துகிறது என்பதைப் புரிந்துகொள்ள நமக்கு உதவும். பின்பு பரத்திலிருந்து வரும் ஞானத்தின் மற்ற மூன்று அம்சங்களுக்கு வட்டாரக் கண்காணி கவனம் செலுத்துவார். கிறிஸ்தவ ஊழியர்கள் “படிப்பறியாதவர்களென்றும் பேதைமையுள்ளவர்களென்றும்” சிலரால் கருதப்பட்டாலும், கடவுளுடைய ஞானத்தைப் பேசுவதற்கான தகுதியை அவர்கள் எப்படி பெற்றிருக்கிறார்கள் என்பதை விவரமாக எடுத்துரைத்து மாவட்டக் கண்காணி முதல் நாள் நிகழ்ச்சியை நிறைவு செய்வார்.—அப். 4:13.
இரண்டாம் நாளில், “உற்சாகமூட்டும் காரியங்களில் ஈடுபடுங்கள்” என்ற தலைப்பில் ஒரு தொடர்பேச்சு இருக்கும்; இது ஆன்மீக ரீதியில் நம்மை பலவீனப்படுத்துகிற காரியங்களை கண்டறிந்து அவற்றை தவிர்க்க நமக்கு உதவும். சபைக் கூட்டங்களிலும் வெளி ஊழியத்திலும் குடும்பத்திலும் நாம் மற்றவர்களை எப்படி உற்சாகப்படுத்தலாம் என்பதையும் இது காண்பிக்கும். “தெய்வீக ஞானம் நமக்கு எவ்விதத்தில் பயனளிக்கிறது” என்பதே பொதுப் பேச்சின் தலைப்பு. இப்பேச்சு, தெய்வீக நியமங்களை நம் வாழ்க்கையில் பொருத்தும்போது நாம் பெற்றுக்கொள்கிற பயன்களுக்கு நம் நன்றியுணர்வை அதிகரிக்க செய்யும். முடிவான பேச்சு, “தெய்வீக ஞானத்தின்படி நடப்பது நம்மை காக்கிறது” என்ற தலைப்பில் இருக்கும்; இந்தக் கடைசி நாட்களில் ஞானத்துக்காக யெகோவாவை நாட வேண்டுமென்ற நம் தீர்மானத்தை இது பலப்படுத்தும்.
எல்லா மாநாட்டிலும் இடம்பெறும் ஒரு சிறப்பு நிகழ்ச்சி, புதிய சீஷர்களின் முழுக்காட்டுதல் ஆகும். அந்த வாரத்திற்கான தேவராஜ்ய ஊழியப் பள்ளியும், காவற்கோபுர படிப்பும்கூட நிகழ்ச்சியில் இடம் பெறும். தாம் அளிக்கும் ஞானத்திலிருந்து நாம் அனைவருமே பயனடைய வேண்டுமென்று யெகோவா விரும்புகிறார். வட்டார மாநாட்டில் நமக்கு கிடைக்கவிருக்கிற ஆலோசனையும் உற்சாகமும் ஆவிக்குரிய ரீதியில் நம்மை செழிப்படைய செய்யும்.—நீதி. 3:13-18.