ஆர்வம் காட்டுவோரை மீண்டும் சந்தித்தல்—எப்போது?
1. சீடராக்குவதில் எது உட்பட்டிருக்கிறது?
1 யெகோவாவுடைய அரசாங்கத்தின் ஆசீர்வாதங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள யாராவது விருப்பம் காட்டினால், அவரை மீண்டும் போய்ச் சந்திப்பது சீடராக்கும் வேலையில் உட்பட்டிருக்கிறது. (மத். 28:19, 20) பொதுவாக, நமக்கும் ஆர்வம் காட்டுபவருக்கும் சௌகரியப்படும் நேரமே மறுசந்திப்பு செய்வதற்கு மிகச் சிறந்த நேரமாகும். முதல் சந்திப்புக்குப் பிறகு, ஆர்வம் காட்டுபவர்களை ஏன் சீக்கிரமாக மீண்டும் போய்ச் சந்திக்க வேண்டும்?
2, 3. நாம் ஏன் முடிந்தவரை சீக்கிரம் மறுசந்திப்பு செய்ய வேண்டும்?
2 ஏன் சீக்கிரம் மறுசந்திப்பு செய்ய வேண்டும்? ஆர்வம் காட்டுபவர்கள் ‘மீட்பு நாளிலிருந்து’ பயனடைய இன்னும் காலம் இருக்கையிலேயே, ‘கடவுளுடைய வார்த்தையை . . . அவசர உணர்வுடன் பிரசங்கிக்கும்படி’ கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைக்கு நாம் கீழ்ப்படிய வேண்டும்; அவர்களுடைய ஆர்வத்தை வளர்க்க முடிந்தவரை, சீக்கிரமாக மறுசந்திப்பு செய்வதும் இதில் உட்பட்டுள்ளது.—2 கொ. 6:1, 2; 2 தீ. 4:2.
3 ஆர்வம் காட்டுபவரின் இருதயத்தில் நாம் விதைக்கும் சத்திய விதையை எடுத்துப்போடுவதற்குச் சாத்தான் ஆவலோடு காத்திருக்கிறான். (மாற். 4:14, 15) நாம் சீக்கிரம் மறுசந்திப்பு செய்வது, அவர்களுடைய ஆர்வக் கனலை மற்றவர்கள் அணைத்து விடுவதற்கு முன்பு அதைக் கொழுந்துவிட்டு எரியச் செய்ய உதவுகிறது.
4. மறுசந்திப்பிற்கு நாம் எப்படி முதல் சந்திப்பிலேயே ஏற்பாடு செய்யலாம்?
4 சந்திக்கும் நேரத்தை நிர்ணயுங்கள்: வீட்டுக்காரர் உண்மையிலேயே ஆர்வம் காட்டுகிறார் என்றும், உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் வராது என்றும் உறுதியாகத் தெரிந்தால், முதல் சந்திப்பின் முடிவிலேயே மறுசந்திப்பிற்குத் திட்டவட்டமான ஏற்பாடுகளைச் செய்யுங்கள். ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு, மறுசந்திப்பின்போது அதற்குப் பதிலளிப்பதாகச் சொல்லுங்கள். அந்த விவரங்களைத் தெளிவாக எழுதி வைத்துக்கொள்வது அவசியம். உங்களுக்கு வசதிப்பட்டால், மறுநாளோ அல்லது அதன் பின் சீக்கிரத்திலோ அவரை வந்து மீண்டும் சந்திக்கலாமாவென கேளுங்கள். ஆர்வம் காட்டும் ஒருவரைச் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நீங்கள் முதன்முறை சந்தித்திருக்கலாம்; அவர் வார நாட்களில் வேலைக்குச் செல்பவராக இருந்தால், அடுத்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அவரை மீண்டும் சந்திக்க அவர் சம்மதிக்கலாம். பிரச்சினைகள் தலைதூக்கும் பிராந்தியங்களில், ஒருவருக்கு உண்மையிலேயே ஆர்வம் இருப்பது தெரிந்தால் மட்டுமே பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தை அளிக்கும்படி மூப்பர்கள் நமக்கு ஆலோசனை கொடுக்கலாம்; ஒருவேளை, இரண்டாவது அல்லது மூன்றாவது முறை செல்லும்போது அதை அளிக்கும்படி ஆலோசனை கொடுக்கலாம். அப்படிச் சந்திப்பதற்கு நேரத்தை நிர்ணயித்திருந்தால், சொன்ன சொல்லைக் காப்பாற்றுங்கள்.—மத். 5:37.
5. தாமதிக்காமல் மீண்டும் போய்ச் சந்திப்பது, சீடராக்கும்படி இயேசு கொடுத்த கட்டளையை நிறைவேற்ற நமக்கு எப்படி உதவும்?
5 ஆர்வம் காட்டுபவர்களை முடிந்தவரை சீக்கிரமாக மீண்டும் போய்ச் சந்திக்க நமக்கு நியாயமான காரணங்கள் உள்ளன. எனவே, சந்திப்பதற்கு நேரத்தை நிர்ணயித்துக் கொண்டு, சீக்கிரம் போய் சந்தியுங்கள்; ஏனெனில், “இன்னும் கொஞ்சக் காலமே மீந்திருக்கிறது.” (1 கொ. 7:29) நற்செய்தியிடம் ஆர்வம் காட்டுபவர்களை எந்தளவு சீக்கிரமாக மீண்டும் போய்ச் சந்திக்கிறோமோ அந்தளவு நம்முடைய முயற்சிகள் அதிக பலனளிக்க வாய்ப்பிருக்கிறது.