போற்றுதலை வளர்ப்பதற்குத் திரும்பிச்செல்லுதல்
1 அர்த்தமுள்ள மறுசந்திப்புகள், வீட்டுக்காரர் ஒரு விசுவாசியாக ஆவதைநோக்கி வளர அவரைப் படிப்படியாகத் தூண்டுகின்றன மற்றும் முன்னேற்றுவிக்கின்றன. அக்கறை காண்பித்திருக்கிறவர்களை மீண்டும் சந்திக்கும்போது, மனதில் வைத்திருக்கவேண்டிய சில நடைமுறை ஆலோசனைகள் யாவை?
2 முதலாவதாக, நன்கு தயார்செய்யுங்கள். இது ஆரம்ப சந்திப்பில் தொடங்குகிறது. எவ்விதமாக? அக்கறை காண்பித்தவர்களைப் பற்றிய திருத்தமானப் பதிவுகளை வைத்திருப்பதன் மூலமாகும். வீட்டுக்காரருடைய பெயர், கலந்தாலோசிக்கப்பட்ட பொருள், பிரதிபலிப்பு மற்றும் கொடுக்கப்பட்ட எந்த அளிப்புகளையும் குறித்துவைத்துக்கொள்ளுங்கள். பிறகு நீங்கள் திரும்பிச்செல்வதற்கு முன்பாக உங்களுடைய வீட்டுக்கு வீடு பதிவுச் சீட்டை மறுபார்வைசெய்து, நீங்கள் என்ன சொல்வீர்கள் என்பதற்கு ஜெபத்துடன் சிந்தனைசெய்யுங்கள்.
3 இப்பொழுது நீங்கள் தயாராயிருக்கிறீர்கள். நீங்கள் என்ன சொல்லலாம்? ஆரம்ப சந்திப்பில் நீங்கள் ஒரு கேள்வியுடன் வீட்டுக்காரரை விட்டுவந்திருப்பீர்களானால், நீங்கள் திரும்பிச்செல்லும்போது அந்தப் பொருளின்பேரில் விளக்கியுரைக்கலாம். உதாரணமாக, கடவுள் அக்கறை உள்ளவராக இருக்கிறாரா சிற்றேட்டில் விளக்கமாக வருணித்துக் கூறப்பட்டுள்ளதுபோன்ற எதிர்காலத்திற்கான நம்முடைய அதிசயிக்கத்தக்க நம்பிக்கையின்பேரில் ஆரம்ப சந்திப்பு ஒருமுகப்படுத்தப்பட்டிருந்தால், “கடவுள் ஏன் துன்பத்தை அனுமதித்திருக்கிறார்?” என்ற கேள்வியை நீங்கள் எழுப்பலாம்?
நீங்கள் திரும்பிச்செல்லும்போது, உங்களை அறிமுகப்படுத்திக்கொண்ட பிறகு இவ்வாறு சொல்லலாம்:
◼ “போனதடவை நாம் சந்தித்தபோது, கடவுள் வெகு சீக்கிரத்தில் ஸ்தாபிக்கப்போகிற நிலைமைகளைப்பற்றிய இந்த அழகிய படத்தை நாம் பார்த்தோம். ஆனால் எழுப்பப்பட்ட கேள்வி என்னவென்றால், அவ்விதமாகச் செய்வதற்கு கடவுள் வல்லமை உடையவராயிருக்கிறார், மேலும் அவர் உண்மையில் நம்மீது அக்கறைகொள்கிறார் என்றால், அவர் ஏன் துன்பத்தை அனுமதித்திருக்கிறார்? இந்த சிற்றேட்டிலுள்ள பகுதி 6-ல் திருப்திகரமான பதில் காணப்படுகிறது . . . .” சம்பாஷணையை அதிலிருந்து தொடரலாம்.
4 இதுபோன்ற ஒரு கேள்வியை நீங்கள் எழுப்பி நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியம் புத்தகத்தை அளித்திருந்தால், நீங்கள் இவ்வாறு சொல்லலாம்: “கடைசியாக நாம் பேசியபோது, அன்புள்ள ஒரு கடவுள் ஏன் இப்படிப்பட்ட அக்கிரமத்தை இன்று அனுமதிக்கிறார் என்பதைக்குறித்து நாம் கலந்தாலோசித்தோம். இதற்கு நீங்கள் மேலுமான சிந்தனைச் செலுத்தியிருக்கிறீர்களா? [பதிலுக்காக அனுமதியுங்கள்.] யோவான் 3:16-ல் பைபிள் என்ன சொல்லுகிறது என்பதைக் கவனியுங்கள்.” அந்த வசனத்தை வாசித்தப் பிறகு, சத்தியம் புத்தகத்தில் அதிகாரம் 8-ல் உள்ள திட்டவட்டமான பகுதிகளுக்கு நீங்கள் கவனத்தைத் திருப்பலாம். இன்று துன்மார்க்கத்தைக் கடவுள் சகித்திருப்பதற்கான காரணங்களை அது காண்பிக்கிறது.
5 உங்களுடைய ஆரம்ப சந்திப்பில் நீங்கள் விட்டுவரக்கூடிய சிந்தனையைத் தூண்டும் மற்றொரு கேள்வி: “மனிதன் என்றும் வாழவேண்டும் என்று கடவுள் எண்ணியிருந்தால், ஏன் மக்கள் வயோதிபராகி மரிக்கின்றனர்?” நீங்கள் திரும்பிச்செல்லும்போது, அந்தக் கேள்விக்கு ரோமர் 5:12-ல் காணப்படுகிற பைபிளின் பதிலைக் காண்பிக்கலாம். அந்த வசனத்தை வாசித்தப் பிறகு, இருப்பதெல்லாம் இந்த வாழ்க்கைதானா? புத்தகத்தின் 35-ம் பக்கத்திலுள்ள முதல் பாராவை நீங்கள் குறிப்பிடுங்கள். மனிதன் ஏன் வயதாகி மரிக்கிறான் என்பதற்கான அடிப்படை காரணத்தை அது கலந்தாலோசிக்கிறது.
6 ஓர் எச்சரிப்பூட்டும் ஆலோசனை. திரும்பிச்செல்லும்போது நீங்கள் கேட்கிற கேள்விகளைக் குறித்து கவனமாயிருங்கள். “நான் விட்டுச்சென்ற கட்டுரையை வாசித்தீர்களா?” அல்லது “என்னை உங்களுக்கு நினைவிருக்கிறதா?” அல்லது “போனதடவை நான் இங்கு வந்திருந்தபோது நாம் எதைப் பற்றி பேசினோம் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா?” என்று கேள்விகள் கேட்பது, வீட்டுக்காரரை தடுமாற்றமான நிலையில் வைக்கும். சாதாரணமாக இப்படிப்பட்ட கேள்விகள் நல்ல பலன்களைக் கொண்டுவருவதில்லை. மறுபட்சத்தில், சிநேகப்பான்மையாக, இணக்கமுள்ளவர்களாக, சுருங்கப்பேசுகிறவர்களாக இருங்கள். இந்தக் குணங்கள் செய்தியை விலைமதிப்புடையதாக்கும்.
7 இந்த அணுகுமுறைகளும் மற்ற அணுகுமுறைகளும் அக்கறையுள்ளவர்களின் இருதயங்களில் போற்றுதலை வளர்ப்பதற்கு பயன்படுத்தப்படலாம். ஒவ்வொரு வாரமும் குறைந்தபட்சம் ஒரு மறுசந்திப்பாவது செய்வதற்கு ஏன் தனிப்பட்ட இலக்கு வைக்கக்கூடாது? மேலே கூறப்பட்டுள்ள நடைமுறை ஆலோசனைகளைப் பயன்படுத்துங்கள், மேலும் உங்களுக்கு உதவிசெய்யும் அனுபவம்வாய்ந்த பிரஸ்தாபிகளை அணுகுங்கள். பலன்தரத்தக்க மறுசந்திப்புகள் செய்வதன்மூலம் முதலில் நீங்கள் அக்கறையை ஊக்குவிக்கையில் உங்களுடைய சந்தோஷம் அதிகரிக்கும்.