நியாயங்காட்டி பேசும் திறமையை வளர்ப்பது எப்படி
1 “நியாயங்காட்டி பேசுவது” என்பதற்கு ஓர் அர்த்தம், “ஒருவருடைய செயல்கள் அல்லது சிந்தனைகளை தூண்டும் விதமாக பேசுவது.” ஊழியத்தில் இன்னும் திறம்பட்டவராக இருக்க விரும்பினால், நீங்கள் சந்திக்கும் ஆட்களிடம் நியாயங்காட்டி பேசும் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். (அப். 17:2-4) ஆனால் இந்தத் திறமையை எப்படி வளர்க்கலாம்?
2 முதலில் தியானம் அவசியம்: பைபிள் சத்தியங்களைப் படிக்கும்போதே அவற்றைப் பற்றி சிந்தியுங்கள். சில விஷயங்கள் அதிக கடினமாக இருந்தால் அதைப் பற்றி கூடுதலான ஆராய்ச்சி செய்யுங்கள், கிடைக்கும் பதில்களைப் பற்றி தியானியுங்கள். கொடுக்கப்படும் விளக்கங்களை மட்டுமல்லாமல் அவற்றிற்கான வேதப்பூர்வ காரணங்களையும் தெளிவாக புரிந்துகொள்ள முயலுங்கள்.
3 ஊழியத்திற்காக தயாரிப்பதும் தேவை: சத்தியத்தை பலதரப்பட்ட மக்களுக்கு எவ்வாறு விளக்குவீர்கள் என சிந்தியுங்கள். அக்கறையைத் தூண்டுவதற்காக கவனத்தைக் கவரும் ஒரு கேள்வியை தயாரியுங்கள். ஒரு வேதப்பூர்வ கருத்தை அதோடு இணைத்து, எவ்வாறு நியாயங்காட்டி பேசலாம் என்பதைத் தீர்மானியுங்கள். எழும்பக்கூடிய கேள்விகளை யோசித்து, அவற்றை எவ்வாறு சமாளிப்பது என்பதைப் பற்றி சிந்தியுங்கள். நீங்கள் கொடுக்கப்போகிற பிரசுரத்திலிருந்து இதற்கு பொருத்தமான ஒரு குறிப்பை தெரிவு செய்யுங்கள்.
4 இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றுங்கள்: வேதவசனங்களிலிருந்து திறம்பட்ட விதமாக நியாயங்காட்டி பேசுவதில் இயேசுவே மிகச் சிறந்த முன்மாதிரி. அவருடைய போதனா திறமையை அறிய, லூக்கா 10:25-37-ல் உள்ள விவரப்பதிவை அலசி ஆராயுங்கள். அதில் இந்த வரிசையை உங்களால் காண முடிகிறதா? (1) ஆட்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் பைபிளிடம் கவனத்தை திருப்புங்கள். (2) அவர்களுடைய கருத்தைக் கூறும்படி சொல்லுங்கள், ஞானமாக கூறுகையில் பாராட்டுங்கள். (3) அவர்கள் கேட்கும் கேள்விக்கும் நீங்கள் உபயோகிக்கும் வேதவசனங்களுக்கும் உள்ள தொடர்பை தெளிவாக வையுங்கள். (4) கேள்விக்கான பதிலை முழுமையாக புரிந்துகொள்ள இதயத்தைத் தொடும் ஓர் உதாரணத்தை உபயோகியுங்கள்.—மார்ச் 1, 1986, ஆங்கில காவற்கோபுரம், பக்கங்கள் 27-8, பாராக்கள் 8-10-ஐக் காண்க.
5 நம்மிடமுள்ள கருவியை உபயோகியுங்கள்: வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம் ஊழியத்தில் நமக்கு உதவுவதற்காகவே வெளியிடப்பட்டது. அதிலுள்ள அறிமுகங்கள், உரையாடலை நிறுத்தக்கூடியவர்களுக்கு பதிலளிக்கும் முறைகள், மற்ற குறிப்புகள் போன்றவை நியாயங்காட்டி பேசும் திறமையை வளர்த்துக்கொள்ள நமக்கு உதவுகின்றன. நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம் மிகச் சிறந்த ஒரு கருவியாகும். ஆகவே, ஊழியத்திற்கு செல்லும்போது அதை எப்போதும் நம்மோடு வைத்திருக்க வேண்டும், பைபிளைப் பற்றி கலந்தாலோசிக்கையில் அதை உபயோகிக்க தயங்கக்கூடாது. அந்தப் புத்தகத்தை எவ்வாறு மிகச் சிறந்த விதத்தில் உபயோகிக்கலாம் என்பதை அறிய அதன் 7-8 பக்கங்களை மறுபார்வை செய்யுங்கள்.
6 நியாயங்காட்டி பேசும் திறமையை வளர்த்துக்கொள்வது பிரசங்கித்து போதிக்கும் வேலையில் உங்கள் ஆற்றலை அதிகரிக்க உதவும். இதனால் உங்களுக்கும் ஊழியத்தில் நீங்கள் சந்திக்கும் ஆட்களுக்கும் அபரிமிதமான ஆசீர்வாதங்கள் கிடைக்கும்.