கேள்விப் பெட்டி
◼ ஒருவர் திரும்ப சேர்த்துக்கொள்ளப்பட்டது பற்றிய அறிவிப்பு செய்யப்படும்போது கைத்தட்டுவது சரியா?
யெகோவா தேவன் தம்முடைய அன்புள்ள தயவின் காரணமாக ஓர் அருமையான ஏற்பாடு செய்திருக்கிறார். அதுவே, பாவம் செய்து மனந்திரும்பியவர்கள் திரும்பவும் அவருடைய தயவிற்குள் வருவதற்கும் கிறிஸ்தவ சபைக்குள் திரும்ப சேர்க்கப்படுவதற்குமான வேதப்பூர்வ ஏற்பாடு. (சங். 51:12, 17) இவ்வாறு, உண்மையிலேயே மனந்திரும்பியவர்கள் திரும்ப சேர்க்கப்படும்போது நாம் அவர்கள் மீது அன்புகூருவதை உறுதிப்படுத்தும்படி பைபிள் நமக்கு ஆலோசனை கொடுக்கிறது.—2 கொ. 2:6-8.
ஓர் உறவினரோ நண்பரோ திரும்ப சேர்க்கப்படும்போது நாம் எல்லையில்லா மகிழ்ச்சி அடைகிறோம் என்பது உண்மையே. இருப்பினும் அந்த நபர் திரும்ப சேர்க்கப்படுவது பற்றி சபையில் அறிவிப்பு செய்யப்படும்போது கண்ணியத்தோடு அமைதியாய் இருப்பதே பொருத்தமானது. இதைப் பற்றி அக்டோபர் 1, 1998, காவற்கோபுரம், பக்கம் 17 இவ்வாறு கூறியது: “சபையிலுள்ள பெரும்பாலானோருக்கு ஏன் ஒரு நபர் சபைநீக்கம் செய்யப்பட்டார் என்றோ, ஏன் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டார் என்றோ தெரியாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். கூடுதலாக, மனந்திரும்பிய நபர் செய்திருந்த தவறால் சிலர் தனிப்பட்ட விதமாக பாதிக்கப்பட்டோ புண்படுத்தப்பட்டோ இருக்கலாம்; ஒருவேளை நீண்ட காலத்துக்குக்கூட அதன் பாதிப்பு இருக்கலாம். அத்தகைய விஷயங்களில் சிலருக்கு உள்ள மனநிலை புரிந்துகொள்ளத்தக்கதே; தனிப்பட்ட விதமாக, அவர்களை வரவேற்றாலொழிய ஒருவர் திரும்ப சேர்த்துக் கொள்ளப்பட்டதைக் குறித்து அறிவிப்பு செய்யப்படும்போது, அவரை வரவேற்பது கடினமாக இருக்கும்.”
ஒருவர் சத்தியத்திற்கு திரும்பி வரும்போது நாம் மட்டில்லா மகிழ்ச்சி கொள்கிறோம். என்றாலும், அவர் திரும்ப சேர்த்துக்கொள்ளப்படும்போது கைத்தட்டுவது பொருத்தமாய் இருக்காது.