நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தைப் பயன்படுத்துகிறீர்களா?
1. இயேசுவும் அப்போஸ்தலன் பவுலும் மற்றவர்களுக்கு எவ்வாறு கற்பித்தார்கள்?
1 கடவுளுடைய சித்தத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இயேசு அடிக்கடி வேதவசனங்களை மேற்கோள் காட்டிப் பேசினார், உதாரணங்களையும் பயன்படுத்தினார். (மத். 12:1–12 ) அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றி அப்போஸ்தலன் பவுலும்கூட ‘வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசினார்.’ (அப். 17:2, 3; 18:19, NW ) நாமும் அப்படிப் பேசுவதற்கு உதவியாகவே வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
2. ஆர்வத்தைத் தூண்டும் அறிமுகங்களைத் தயாரிக்க நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தை நாம் எவ்வாறு பயன்படுத்தலாம்?
2 ஆர்வத்தைத் தூண்டும் அறிமுகங்களைத் தயாரித்தல்: வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் ஆர்வத்தைத் தூண்டும் அறிமுகங்களைப் பக்கங்கள் 9-15-ல் காணலாம். இவற்றிலுள்ள வெவ்வேறு விதமான அறிமுகங்களைத் தெரிந்துகொண்டு அவற்றைப் பயன்படுத்தினோமென்றால், நம் ஊழியம் சலிப்புத்தட்டுவதாய் இருக்காது; பல்வேறு விதங்களில் உரையாடல்களை ஆரம்பிப்பதில் நாம் மேலும் திறம்பட்டவர்களாய் ஆகிவிடுவோம். முக்கியமாக, ஒரே பிராந்தியத்தில் நாம் அடிக்கடி ஊழியம் செய்துவந்தால் இந்தப் புத்தகத்தைப் பயன்படுத்துவது ரொம்பவே உதவியாக இருக்கும். தொலைபேசியில் சாட்சி கொடுக்கும்போது அல்லது பலத்த பாதுகாப்புள்ள கட்டிடங்களிலே இன்டர்காமில் பேசும்போது அறிமுகக் குறிப்புகளை இந்தப் புத்தகத்திலிருந்து நேரடியாகவே வாசிக்கலாம்.
3. ஊழியத்தில் நமக்கு உதவுகிற என்ன குறிப்புகள் நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தின் பக்கங்கள் 16-24-ல் உள்ளன?
3 ஆட்சேபணை தெரிவிப்போரைச் சமாளித்தல்: நீங்கள் போகும் பிராந்தியத்தில் யாராவது ஆட்சேபணை தெரிவிக்கக்கூடும் என்று மனதளவில் தயாராகிக்கொள்ளுங்கள்; அதோடு, ஊழியத்திற்குச் செல்வதற்கு முன் இந்தப் புத்தகத்தில் பக்கங்கள் 16-21-ல் உள்ள குறிப்புகளைப் பார்க்கச் சில நிமிடங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். நாம் சந்திக்கும் வீட்டுக்காரர்கள் புத்தமதத்தினராகவோ, இந்துக்களாகவோ, யூதர்களாகவோ, முஸ்லீம்களாகவோ இருந்தால், பக்கங்கள் 21-24-ல் உள்ள குறிப்புகள் உதவியாக இருக்கும்.
4. நாம் சந்திப்பவர் ஒரு கேள்வியைக் கேட்டாலோ, விவாதத்திற்குரிய ஒரு விஷயத்தை ஆரம்பித்தாலோ, நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தை நாம் எப்படிப் பயன்படுத்தலாம்?
4 கேள்விகளுக்குப் பதிலளித்தல்: ஊழியத்தில் நாம் சந்திப்பவர் ஒரு கேள்வியைக் கேட்கும்போதோ விவாதத்திற்குரிய ஒரு விஷயத்தை ஆரம்பிக்கும்போதோ, நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம் நமக்குக் கைகொடுக்கும். அதன் சம்பந்தமாய் சுவாரஸ்யமான ஒரு குறிப்பை நீங்கள் அவருக்குக் காட்ட விரும்புவதாகச் சொல்லிவிட்டு, நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தை வெளியே எடுத்துக்கொள்ளுங்கள். உங்களுக்குத் தேவையான தகவல் எந்தத் தலைப்பின்கீழ் இருக்குமென்று எதிர்பார்க்கிறீர்களோ அந்தத் தலைப்புக்குத் திருப்புங்கள். தடித்த எழுத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விகளைப் பாருங்கள். நீங்கள் தேடுகிற விஷயத்தின் பேரில் எந்தத் தகவலையும் உங்களால் கண்டுபிடிக்க முடியாவிட்டால், இந்தப் புத்தகத்தின் பின்பக்கத்திலுள்ள பொருளடக்க அட்டவணைக்குத் திருப்புங்கள். தேவையான தகவலைக் கண்டுபிடித்துவிட்டீர்களென்றால், பிரசுரத்திலிருந்தே வாசித்துக் காட்டுங்கள். ஒரு குறிப்பிட்ட வசனத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள் என்றால், பக்கம் 447-ல், “அடிக்கடி தவறாக பொருத்தப்படும் வேதவசனங்கள்” என்ற தலைப்பின்கீழ் உங்களுக்குத் தேவையான தகவல்கள் கிடைக்கலாம்.
5. நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம் இன்னும் என்னென்ன விதங்களில் பயனுள்ளது?
5 பிற பயன்கள்: நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தின் ஒரு பிரதியைச் சிலர் தங்கள் வேலையிடத்திலோ, பள்ளியிலோ வைத்துக்கொள்கிறார்கள். ‘நீங்கள் ஏன் பண்டிகை கொண்டாடுவதில்லை?’ போன்ற கேள்விகளை யாராவது கேட்கையில் அவர்களுக்குப் பதிலளிக்க அந்தப் புத்தகத்தைப் பயன்படுத்துகிறார்கள். இளைஞர்கள் பள்ளிக் கட்டுரைகள் எழுதும்போது, “சிருஷ்டிப்பு,” “பரிணாமம்” ஆகிய தலைப்புகளின் கீழ் பயனுள்ள தகவல்கள் இருப்பதைக் கண்டிருக்கிறார்கள். வியாதிப்பட்டிருப்பவர்களையோ, பிரியமானவர்களை மரணத்தில் பறிகொடுத்தவர்களையோ நீங்கள் சந்திக்கப் போகிறீர்களா? “ஊக்கமூட்டுதல்” என்ற தலைப்பின் கீழுள்ள தகவல் பைபிளிலிருந்து ஆறுதலான வார்த்தைகளைச் சொல்ல உங்களுக்கு உதவலாம். அதோடு, பேச்சுகளைத் தயாரிப்பதற்கும் வெளி ஊழியக் கூட்டங்களை நடத்துவதற்கும் இந்தப் புத்தகத்தில் பயனுள்ள தகவல்கள் உள்ளன.
6. நாம் எதற்காக ஊழியத்திற்குச் செல்கிறோம்?
6 நாம் ஊழியத்திற்குச் செல்வது, ஆட்களோடு வாதாடி ஜெயிப்பதற்காகவோ அவர்களிடம் தகவல்களை மட்டுமே சொல்வதற்காகவோ அல்ல. மாறாக, பைபிளிலிருந்து திறம்பட நியாயங்காட்டிப் பேசுவதற்காகவே. நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தை நாம் நன்றாகப் பயன்படுத்தினால், நம் உபதேசத்தைக் குறித்து எப்போதும் கவனமாக இருக்கிறோம் என்பதைக் காட்டுவோம்.—1 தீ. 4:16, NW.