1995 “சந்தோஷமாய் துதிப்போர்” யெகோவாவின் சாட்சிகளுடைய மாவட்ட மாநாடு
1 கடந்த வருடம் இந்தியாவில் “தேவ பயம்” மாவட்ட மாநாடுகளுக்கு ஆஜராகியிருந்த 23,363 பேரின் மத்தியில் இருந்ததில் என்னே ஓர் சந்தோஷம்! மொத்தம் 830 பேர் முழுக்காட்டப்பட்டதன்மூலம் சரியான தேவ பயத்தை வெளிக்காட்டினார்கள். இந்த வருடம், 1995 “சந்தோஷமாய் துதிப்போர்” மூன்று-நாள் மாவட்ட மாநாடுகளுக்குக் கூடிவருவது எவ்வளவு உற்சாகமளிப்பதாய் இருக்கும்! அக்கறையூட்டும் அந்தப் பொருள், நம் பைபிள் மாணாக்கர்களுடன் சேர்ந்து அதில் ஆஜராவதற்கு எல்லா முயற்சியையும் எடுக்கும்படி உண்மையிலே நம்மைத் தூண்டவேண்டும். இந்த முடிவு காலத்தில் யெகோவாவைத் தொடர்ந்து உண்மையாகச் சேவித்துக்கொண்டிருக்கும் நம் எல்லாருக்கும் அந்த நிகழ்ச்சிகள் உண்மையிலேயே ஆவிக்குரிய புத்துணர்ச்சி அளிப்பதாய் இருக்கும்.
2 ஆரம்பப் பாட்டிலிருந்து முடிவு ஜெபம் வரையாக, அந்த மூன்று நாட்களின் இன்பமான ஆவிக்குரிய நிகழ்ச்சி முழுவதையும் அனுபவிப்பதற்கு ஏதுவாக உங்கள் மாநாட்டு ஏற்பாடுகளை முன்னதாகவே செய்ய நிச்சயமாயிருங்கள். குறிப்பாக புதிதாக அக்கறைகாண்பிப்பவர்கள் போன்ற உதவி தேவைப்படுகிறவர்களை உங்கள் திட்டங்களில் உட்படுத்துவது அன்பான செயலாக இருக்கும்; அப்போது அவர்களும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஆஜராக முடியும். ஆஜராகப்போவதாகத் திட்டமிடும் பைபிள் மாணாக்கர்களுடன் இந்த உட்சேர்க்கையிலுள்ள தகவலைச் சிந்திப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். (கலா. 6:6, 10) நிகழ்ச்சிநிரல், வெள்ளிக்கிழமை அன்று காலை 9:40 மணிக்கு இசையுடன் ஆரம்பித்து, மாலை சுமார் 5:00 மணியளவில் முடிவடைகிறது. சனிக்கிழமை நிகழ்ச்சிநிரல், காலை 9:30 மணிக்கு ஆரம்பித்து, பாட்டோடும் ஜெபத்தோடும் மாலை சுமார் 4:50 மணிக்கு முடிவடைகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை நிகழ்ச்சிநிரல் 9:30 மணிக்குத் தொடங்குகிறது; அந்நாளின் நிகழ்ச்சி, மதியம் சுமார் 3:50 மணிக்கு முடிவு பெறுகிறது.
3 சபை கூட்டங்களானாலும் சரி, வட்டார மாநாடுகள், விசேஷ மாநாட்டு தினங்கள், அல்லது மாவட்ட மாநாடுகளானாலும் சரி, ஆவிக்குரிய விருந்துகளில் ஆஜராகி இருப்பது எவ்வளவு கிளர்ச்சியூட்டுவதாக இருக்கிறது! ஏன்? கடவுள்-பயமுள்ள ஆட்களுடன் கூட்டுறவு கொள்வது புத்துணர்ச்சி அளிப்பதாய் இருக்கிறது; மேலும் அப்படிப்பட்ட சமயங்களில் அளிக்கப்படும் ஆவிக்குரிய விஷயங்கள், அதிக முக்கியமான காரியங்களை நமக்கு நினைவுபடுத்துகின்றன.
4 அப்படிப்பட்ட ஆவிக்குரிய கூடிவருதல்களுக்குச் சமீப வருடங்களில் அதிகரித்துவரும் ஆயிரக்கணக்கானோர் கவர்ந்திழுக்கப்படுகின்றனர். 1985-க்கும் 1994-க்கும் இடையிலான வருடங்களில், உலகளாவிய சபைகளின் எண்ணிக்கை 49,716-லிருந்து 75,573 வரையாக 50 சதவீதத்துக்கும் மேலாக அதிகரித்தது. கூட்டிச்சேர்க்கும் வேலையை யெகோவா தீவிரமாக்குகையில், மாவட்ட மாநாடுகள் மற்றும் வட்டார மாநாடுகளின் எண்ணிக்கையும் அதற்கேற்றாற்போல் அதிகரிக்கின்றன. (ஏசா. 60:22) இந்தியாவில் மாவட்ட மாநாடுகளுக்கு ஆஜரானவர்களின் எண்ணிக்கை, 1985-ல் 11,243-லிருந்து 1994-ல் 23,363-ஆக அதிகரித்தது—பத்தே வருடங்களில் 108 சதவீத அதிகரிப்பு! இது அமைப்பிலுள்ள பிரமாண்டமான அதிகரிப்பைப் பிரதிபலிக்கிறது. இதன் காரணமாக, இந்த மாநாடுகளை ஏற்பாடு செய்வதிலும் கையாளுவதிலும் உட்பட்டிருக்கும் வேலையும் அதிகரித்துக்கொண்டுவருகிறது. இந்த விருந்துகளுக்காக தயார்செய்யப்பட்ட ஆவிக்குரிய நிகழ்ச்சிநிரலிலிருந்து பயன்பெறும்படி நாம் கூடிவருவதால், சரீரத்தேவைகளுக்கான ஏற்பாடுகளைக் கவனிப்பதில் நடைமுறையான அளவுக்கு எவ்வளவு எளிமையாக வைத்துக்கொள்ள முடியுமோ அவ்வளவுக்கு அது ஞானமானதாக இருக்கிறது.
5 எடுக்கவேண்டிய படிகள்: நாம் முன்னேற்றப் பாதையில் சென்றுகொண்டிருக்கையில், யெகோவாவின் ஆசீர்வாதத்துக்காக அவரை நோக்கி இருக்கிறோம். அவர் தம்முடைய மக்களுக்குத் தேவையான ஞானம் மற்றும் புரிந்துகொள்ளுதலின் ஆவியைக் கொடுத்திருப்பதைக் காண்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. யெகோவாவின் நோக்கத்தை மகத்தான ஒரு முறையில் நிறைவேற்றுவதற்காக, உண்மையுள்ள அடிமை வகுப்பின் மூலமாக இயேசு காரியங்களைத் திறம்பட்ட விதத்தில் வழிநடத்தியிருக்கிறார் என்பதை நாம் ஒத்துக்கொள்ளவே வேண்டும். (மத். 24:45-47, NW; கொலோ. 1:9-11) ஜூன் மாத நம் ராஜ்ய ஊழியத்தில் ஓர் அறிவிப்பு இவ்வாறு குறிப்பிட்டது: “இதுமுதற்கொண்டு, மாவட்ட மாநாடுகள், வட்டார மாநாடுகள், விசேஷ மாநாட்டு தினங்கள் ஆகியவற்றில் எளிய சிற்றுண்டிகள் மாத்திரமே கிடைக்கும். கேஃபிட்டிரியா பாணியில் சாப்பாடுகள் எதுவும் வழங்கப்படமாட்டா. விரும்பினால், ஆஜராகுபவர்கள் சிற்றுண்டிச் சாலைகளில் கிடைப்பதற்கும் கூடுதலானதற்கு தங்களுடைய சொந்த உணவைக் கொண்டுவரலாம்.” இந்த ஏற்பாடு உடனடியாகச் செயல்பட தொடங்கிவிட்டது; இந்த அறிவிப்பிற்கு நல்ல பிரதிபலிப்பு இருந்திருக்கிறது. இந்த மாற்றம் எப்படி பயனுள்ளதாக இருக்கும் என்று அறிந்துகொள்வதில் நீங்கள் அக்கறை உள்ளவர்களாக இருக்கக்கூடும். இந்த மாற்றத்திற்குக் காரணமாக இருந்த பின்வருபவற்றை சிந்திப்பது, மாநாடுகளில் வேலையை எளியதாக்கியதன் மூலம் ஏற்கெனவே கிடைத்திருக்கும் பயன்களைப்பற்றிய நல்ல நினைப்பூட்டுதலாக ஒருவேளை இருக்கலாம்.
6 எளிமையாக்குவதற்காக முன்னர் செய்யப்பட்ட மாற்றங்கள்: மாவட்ட மாநாட்டிற்கான வாலண்டியர் சேவை, அறைவசதி ஏற்பாடு போன்ற தரமான மற்றும் எளிய ஏற்பாடுகள் செயல்படுத்தப்படுவதற்குமுன், மாநாட்டிற்கு முன்னாக செய்யப்படவேண்டிய காரியங்களுக்காக ஆயிரக்கணக்கான உள்ளூர் சகோதர சகோதரிகள் அதிகப்படியான வேலை செய்யவேண்டிய அவசியம் இருந்தது. அன்றாட வாழ்க்கை நம் சகோதரர்களுக்குக் கொண்டுவரும் அழுத்தங்களையும் தேவைப்படுத்தும் காரியங்களையும் அமைப்பின் தொடர்ச்சியான வளர்ச்சியையும் கருத்தில்கொள்கையில், வேலையை எளியதாக்குவதற்கான மாற்றங்கள் உண்மையிலேயே அவசியப்பட்டன. மேலுமாக, ஐக்கிய மாகாணங்களில் உணவு ஏற்பாடுகளை எளிமையாக்கியதால் மட்டுமே, உணவளிப்பதற்காக நிகழ்ச்சியின்போது கடினமாக உழைத்துவந்த 70,000-க்கும் மேலான சகோதர சகோதரிகளால், 1978-ல் நிகழ்ச்சிநிரலைக் கவனிக்க முடிந்தது. 1987-லும் அதற்கடுத்த ஊழிய ஆண்டிலும் அந்த நாட்டிலுள்ள மாநாட்டு மன்றங்களில், மாநாடுகளில் உணவு ஏற்பாடுகளைக் குறித்த விஷயத்தில் மேலும் எளிமையாக்கும் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. இந்த வருடம் முதற்கொண்டு, அந்த நாட்டில் எந்த வகையான உணவும் எந்த மாநாட்டிலும் கொடுக்கப்படுவதில்லை. இவை பயன்தரத்தக்க மாற்றங்களாக நிரூபிக்கப்பட்டிருக்கின்றன; இது வேலையை எளிதாக்கி, மாநாட்டின் ஆவிக்குரிய அம்சங்களுக்கு அதிக கவனம்செலுத்த அனுமதித்திருக்கிறது; இதனால் வேலை செய்பவர்கள் நிகழ்ச்சியைக் கேட்டு அனுபவிக்க முடிகிறது. (உபா. 31:12) பல வருடங்களாக உண்மையாக சேவித்துக்கொண்டு நம் மத்தியில் இருக்கும் உண்மைப் பற்றுறுதியுள்ளவர்கள் இந்த முன்னேற்றங்களை நன்கு நினைவுகூர்ந்து, பெறப்பட்ட வழிநடத்துதலுக்காகப் போற்றுதலைத் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் வேலையைக் குறைத்து, இன்னும் அதிகம்பேர் அந்த ஆவிக்குரிய நிகழ்ச்சிகளிலிருந்து முழுமையாகப் பயன்பெறுவதைச் சாத்தியமாக்கும்படி அதுபோன்ற மாற்றங்கள் இந்த நாட்டிலும் செய்யப்பட முடியுமா?
7 எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள்: மற்ற நாடுகளில் எளிய உணவு வகை தயாரிக்கப்பட்டு அளிக்கப்பட்ட வருடங்களில், ஓரளவுக்கு “ஒருசில காரியங்களே” உண்மையில் “தேவையானவை”யென காணப்பட்டது. (ஒப்பிடுக: லூக்கா 10:38-42, NW.) ஆஜராகும் அனைவருக்கும் உணவைச் சமைப்பது அதிகப்படியான பொருள்களையும் வேலையையும் உட்படுத்தும்; மேலும் விலையுள்ள சாதனங்கள் வாடகைக்கு எடுக்கப்படவேண்டும், அல்லது விலைக்கு வாங்கி, பின்னர் பராமரிக்கப்பட்டு, வட்டாரங்களால் கொண்டுசெல்லப்பட வேண்டும். மேலுமாக, இந்த ஏற்பாடுகளை ஒழுங்கமைக்கவும் ஆதரிக்கவும் அதிக எண்ணிக்கையில் வாலண்டியர்கள் தேவை. சிறிது காலத்திற்காவது உணவு பத்திரப்படுத்தி வைக்கப்படவேண்டும். கேஃபிட்டிரியா இலாக்காவிடமிருந்து எத்தனை பேர் உணவைப் பெறுவார்கள் என்பதைக் கணக்கிடுவது ஏறக்குறைய சாத்தியமற்றதாக இருக்கிறது; ஆகவே சில சமயங்களில் உணவு போதாமல் போய்விடுகிறது; உணவு குறைபாட்டை எதிர்ப்பட சகோதரர்கள் தயாரற்றவர்களாக இருக்கிறார்கள், அல்லது வீணாகிவிடுகிறது. இவை யாவற்றிலும் உட்பட்டிருக்கும் நஷ்ட ஈடுகளைக் குறித்து சொஸைட்டி அதிக அக்கறையுள்ளதாய் இருக்கிறது. தங்கள் சொந்த சமையல் சாதனங்களைக் கொண்டிருக்கும் வட்டாரங்களில், பராமரிப்பு, பாதுகாப்பு, அவற்றைக் கொண்டுசெல்லுதல் ஆகியவை அவசியப்படுகிறது; இது வேலை, நேரம், மற்றும் செலவை உட்படுத்துகின்றன. எளிமையாக்குவதன்மூலம், இதில் அதிகப்படியான வேலை குறைக்கப்படுகிறது; அநேக சகோதரர்கள் இந்த வேலைகளிலிருந்து விடுபடுவார்கள்.
8 இவை சம்பந்தப்பட்ட காரியங்களில், வாலண்டியர்களாக வேலை செய்தவர்களின் மனமுவந்த சேவை கணக்கிட முடியாதளவுக்கு மதிப்புவாய்ந்ததாக இருந்து வந்திருக்கிறது; அது மிகவும் போற்றப்படுகிறது. என்றபோதிலும், இவ்வாறு எளிமையாக்கப்படும்போது, சாதனங்களைக் கவனித்தல், வாங்குதல், தயாரித்தல், சமைத்தல், உணவை அளித்தல் போன்ற வேலைகளைச் செய்த நூற்றுக்கணக்கான சகோதர சகோதரிகள் தங்கள் நேரத்தை, மாநாடுகளில் அதிக முழுமையாக கூட்டுறவை அனுபவிப்பது உட்பட தேவையான மற்ற ராஜ்ய அக்கறைகளில் பயன்படுத்த முடியும். உணவு இலாக்காவில் சேவைசெய்துவந்த அநேக வாலண்டியர்கள் இப்போது அட்டன்டன்டுகள் மற்றும் சுத்தம்செய்தல்போன்ற மற்ற இலாக்காக்களில் உதவி செய்ய முடியும். இது எல்லாருடைய சுமையையும் குறைக்கும்; உணவு இலாக்காவில் வேலைசெய்த பலருக்கு ஏற்பட்டதுபோல இரவு நேரத்தில் பிந்தியோ, அதிகாலையிலோ, அல்லது நிகழ்ச்சிகளின்போதோ பலர் வேலைசெய்ய வேண்டியதிருக்காது.
9 ஏற்பாடுகளை ஆதரித்தல்: உணவு வழங்குதல் உட்பட மாநாட்டு ஏற்பாடுகளுக்காக சகோதர சகோதரிகளாகிய நீங்கள் “முழு இருதயத்தோடே” கொடுத்துவந்திருக்கும் சிறந்த ஆதரவை சொஸைட்டி மிகவும் போற்றுகிறது. (1 நா. 29:9, NW) இது பல வழிகளில் உதவியிருக்கிறது. இது நல்ல கட்டடங்களை வாடகைக்கு எடுப்பதையும் மாநாட்டு செலவைக் கவனிப்பதையும் சாத்தியமாக்கி இருக்கிறது. அங்கு வந்திருப்பவர்கள் அனைவரும், குறுகிய மதிய இடைவேளையின்போது, மாநாடு நடந்த இடத்தில் இருக்கவும், வசதியாக உணவைப் பெறவும், களைப்பை நீக்கவும், பின்னர் ஆவிக்குரிய நிகழ்ச்சிக்கு ஆஜராயிருக்கவும் உதவி செய்திருக்கிறது. இந்த ஏற்பாடுகளுக்காக நன்கொடை அளிப்பதன்மூலம் சகோதர சகோதரிகளால் காண்பிக்கப்பட்டிருக்கும் தாராளகுணமும் ஆதரவும் சந்தேகமின்றி தொடரும். இது நடைமுறையான வழியில் அவர்களுடைய போற்றுதலுக்கான ஒரு வெளிக்காட்டாக இருந்திருக்கிறது.—நீதி. 11:25; லூக். 16:9.
10 உங்கள் உணவு தேவைகளைக் கவனித்தல்: இந்த மாற்றங்களின் காரணமாக, தனிப்பட்டவர்களுக்கு அல்லது குடும்ப தொகுதிகளுக்கு மதிய இடைவேளையின்போது தங்கள் உணவு தேவையைப் பூர்த்தி செய்ய தங்களுக்காக எதையாவது கொண்டுவருவது அவசியமாக இருக்கக்கூடும். ஆவிக்குரிய நிகழ்ச்சியின் சிறந்த நன்மைகளை நாம் உயர்வாக மதிக்கிறோம். சரீரப்பிரகாரமான உணவு அளவுக்கதிக முக்கியத்துவத்தை எடுத்துக்கொள்ள அனுமதிப்பது ஞானமற்றதாக இருக்கும். இந்த விஷயத்தைக் குறித்ததில் ஒவ்வொருவரும் ‘அதிக முக்கியமான காரியங்களை நிச்சயப்படுத்திக்கொள்வது’ இன்றியமையாததாக இருக்கிறது. (பிலி. 1:9, 10அ, NW) போலாந்து, ரஷ்யா, உக்ரேன், இன்னும் மற்ற இடங்களில் யெகோவாவின் மக்களுடைய சமீபத்திய பெரிய மாநாடுகள் உணவு வழங்கும் ஏற்பாடுகளின்றி வெற்றிகரமாக நடத்தப்பட்டிருக்கின்றன. மேலுமாக, இந்த நாட்டிலுள்ள சில வட்டாரங்கள், ஏற்கெனவே தங்கள் வட்டார மாநாடுகள் மற்றும் விசேஷ மாநாட்டு தின நிகழ்ச்சிகளை முழுமையான சாப்பாடு வழங்காமல் எளிய சிற்றுண்டிகளுடன் மட்டும் நடத்தியிருக்கின்றன. சில சமயங்களில் வந்திருந்தவர்கள் தங்கள் சொந்த உணவை மதியத்திற்காகக் கொண்டுவந்திருந்தனர். சான்ட்விச்சுகள், அவித்த முட்டைகள், மற்றும் பழம் போன்ற சிற்றுண்டிகள் கிடைக்கும்; வந்திருப்பவர்கள் பலருக்கு இது போதுமானதாக இருக்கக்கூடும். ஏதாவது அதிக பலமான உணவு தேவை என்று வேறுசிலர் உணருவார்களானால், வெறும் எளிய மதிய உணவைக் கொண்டுவருவது விழிப்புள்ள மனநிலையைக் காத்துக்கொள்ள உதவும் என்பதைக் காண்பார்கள்; இது மதிய நிகழ்ச்சியிலிருந்து முழு பலனையும் பெற அவர்களுக்கு உதவும். இதற்கு இசைவாக, உணவு கொண்டுவருகிறவர்கள் எளியதாகவும் ஊட்டச்சத்துள்ளதாகவும் இருக்கும் உணவைக் கொண்டுவரவேண்டும். உதாரணமாக, இயேசு ஜனக்கூட்டத்தாருக்கு உணவளித்தபோது, வெறும் இரண்டு வகைகளையே, அப்பத்தையும் மீனையுமே அளித்தார். (மத். 14:16-20; லூக்கா 10:42அ-ஐயும் காண்க.) குறைக்கப்பட்டிருக்கும் மதிய இடைவேளையையும் நாம் பயன்படுத்தும் வகையான வசதிகளையும் கருத்தில் கொண்டு, அதற்கேற்றபடி எது பொருத்தமானதாகவும் நடைமுறையானதாகவும் இருக்கக்கூடும் என்பதற்கு சில ஆலோசனைகளை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.
11 மாநாட்டில் உணவு வழங்கும் ஏற்பாடுகள் இனிமேலும் இருக்காது என்பதால், நல்லபடி திட்டமிட்டால், அங்கு ஆஜராகிறவர்கள் தங்கள் குடும்பத்துடன் காலை உணவை வீட்டிலோ பொதுவாகச் சாப்பிடும் ஓரிடத்திலோ அனுபவிக்கமுடியும். முந்தினநாள் இரவு, போதுமான ஓய்வைப் பெறுவதன்மூலம், காலையில் தேவையானதைச் சாப்பிட்டுவிட்டு, வெகுநேரத்திற்கு முன்பே மாநாட்டிற்கு வந்து, வந்திருக்கும் மற்ற பிரதிநிதிகளுடன் கூட்டுறவை அனுபவிக்கும்படி முன்னதாகவே எழுந்திருக்க முடியும். இந்தப் புதிய ஏற்பாட்டின் மற்றொரு நன்மை என்னவென்றால், உணவளிக்கும் சேவைக்கான வாலண்டியர்களையும் அவர்களுடைய குடும்பங்களையும் உள்ளே அனுமதிக்கும்படியாக அதை முன்னதாகவே திறக்க மன்றத்தில் ஆட்களை நிறுத்திவைக்க வேண்டிய அவசியம் இருக்காது. பெரும்பாலான சமயங்களில், எல்லா பிரதிநிதிகளுக்கும் அந்தக் கட்டடத்தின் கதவுகள் காலை 8:00 மணிக்குத் திறக்கப்படும்; விதிவிலக்காக, குறிப்பிட்ட வேலைகளை உடைய ஒருசிலர் முன்னரே உள்ளே நுழைவது அவசியமாயிருக்கிறது. முன்பு இருந்ததைப்போல, உட்கார இடம் தேடிக்கொண்டு மாநாடு நடக்குமிடத்திற்கு அவசரமாகச் செல்லவேண்டியதில்லை; ஏனென்றால் கணக்கிடப்பட்ட கூட்டத்தாருக்குப் போதுமான இடவசதி திட்டமிடப்பட்டிருக்கிறது.
12 முந்தின மாநாடுகளில் இருந்ததைவிட மதிய இடைவேளை சற்று குறைவாக இருக்கும். என்றபோதிலும், ஏதோ கொஞ்சம் எளிய சிற்றுண்டியை உட்கொள்ளவும் மற்றவர்களுடன் கொஞ்சம் கூட்டுறவை அனுபவிக்கவும் அது வாய்ப்பை அளிக்கும். மாநாடு நடக்கும் இடத்திலோ அதற்கு பக்கத்திலோ வாழ்பவர்களும் தினமும் மாலையில் வீடு திரும்புகிறவர்களுமான நம் சகோதர சகோதரிகள், சிற்றுண்டி கிடைக்கும் இடங்களிலுள்ளவை அல்லாத வேறு பொருள்களை விரும்புவார்களானால், குடும்பத்திலுள்ள ஒவ்வொரு நபருக்காகவும் ஒரு நாளின் மதிய இடைவேளைக்காக சிறிதளவு உணவைத் தயாரித்துக் கொண்டுவர முடியும். இது கிட்டத்தட்ட இளைஞர்கள் பள்ளிக்குக் கொண்டுபோகும் உணவைப் போன்றே இருக்கும். அநேக மக்கள் தங்கள் உலகப்பிரகாரமான வேலைகளுக்கு அதுபோன்ற மதிய உணவையே கொண்டுசெல்கின்றனர்.
13 மாநாடு நடக்கும் நகரத்திற்கு வெளியே உள்ள இடங்களிலிருந்து வருகிறவர்களுக்கு இது சந்தேகமின்றி அதிக சவாலாக இருக்கும்; ஏனென்றால், அவர்கள் மதிய உணவு வகைகளை விரும்பினால் அதற்காகக் கொஞ்சம் முன்னரே திட்டமிடவேண்டியது அவசியமாக இருக்கும். உலர்ந்த மற்றும் கெட்டுப்போகாமல் வைக்கக்கூடிய சில உணவு வகைகள் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமானதென சிலர் காணக்கூடும்; இதையும் வீட்டிலிருந்தே கொண்டுவரலாம். ஒவ்வொரு நாளின் மதிய இடைவேளைக்கும் தேவையான மற்ற உணவுகளை மாநாட்டு நகரிலுள்ள ஒரு பலசரக்குக் கடையிலிருந்து வாங்கக்கூடும்.
14 ஒரு நினைப்பூட்டுதல் என்னவென்றால், தயவுசெய்து சமைப்பதற்கான ஏற்பாடு இருந்தாலொழிய ஹோட்டல் அறைகளில் சமையல் செய்யாதீர்கள். அவ்வாறு செய்வது ஆபத்தானதாகவும் சில சமயங்களில் சட்டவிரோதமானதாகவும் இருக்கிறது; அங்குள்ள பொருள்களுக்கு (furnishings) கறைகளாலும் எண்ணெய் பசையாலும் சேதம் விளைவிக்கக்கூடும். அறையிலிருந்து நாட்கணக்காக நீக்கமுடியாத வாசனைகளை அது உருவாக்கும். ஹோட்டல், இந்த அறையை முழுமையாகச் சுத்தம்செய்வதற்கான செலவும் வேலையும் இன்றி மறுபடியும் வாடகைக்கு விடுவதை இது கடினமாக்குகிறது. அதன் காரணமாகவே, மாநாட்டில் ஓரிரு நாட்களாவது பயன்படுத்துவதற்காக அழுகி கெட்டுப்போகாமல் இருக்கக்கூடிய உணவு வகைகளை வீட்டிலிருந்து கொண்டுவருவது அல்லது வாங்கிக்கொண்டுவருவது ஞானமாக இருக்கக்கூடும். எளிய, உலர் உணவுப் பொதியை மதியத்துக்காக பொதிந்துதரக்கூடிய ஒரு உணவகத்தைக் கண்டுபிடித்து வாங்கி, அங்கிருந்து அதைக் காலையிலேயே மாநாட்டு மன்றத்திற்குக் கொண்டுவரலாம். இந்த வகையாக, பொதிந்து வைக்கப்பட்ட உணவை வாங்குவது ஹோட்டலில் உணவு தயாரிக்காமல் இருக்கச் செய்கிறது.
15 மாநாட்டின்போது மாநாடு நடக்கும் இடம் உண்மையில் ஒரு பெரிய ராஜ்ய மன்றமாவதன் காரணமாக, மதிய இடைவேளையின்போது ஒரு பிக்னிக்கைப் போன்ற சூழல் ஏற்பட்டுவிடுவதைத் தவிர்ப்பதும் ஞானமானதாக இருக்கும். மேலும் ராஜ்ய மன்றத்தில் கூட்டங்கள் நடக்கும்போது நாம் சாப்பிடாமல் இருப்பதுபோலவே மாநாட்டு நிகழ்ச்சிகளின்போது நாம் சாப்பிட்டுக்கொண்டு அல்லது குடித்துக்கொண்டு இருக்கமாட்டோம். சாப்பாடு வைக்கும் பெரிய கலங்களை மன்றத்திற்குள் கொண்டுவருவது ஞானமான காரியமாக இருக்காது. அவற்றை இருக்கைகளுக்குச் செல்லும் வழியிலோ இருக்கைகளிலோ வைக்கமுடியாது; அவை தொந்தரவாக இருக்கலாம். நம்முடைய மதிய இடைவேளைக்குத் தேவையான எளிய உணவுப் பொருள்களை வைக்க பிளாஸ்டிக் பைகள் அல்லது பாக்கெட்டுகள் பொருத்தமானவையாக ஒருவேளை இருக்கலாம். தேவைப்பட்டால், இருக்கையின் மீதல்ல, ஆனால் இருக்கையின்கீழ் வைக்கக்கூடிய சிறிய டிஃபன் அல்லது பிளாஸ்டிக் கலங்கள் பயன்படுத்தப்படலாம்.
16 மாநாட்டு மன்றத்திற்கு நாம் கொண்டுவரும்படி தெரிந்துகொள்ளும் கலங்களின் வகைகளிலும் எச்சரிப்பு தேவையாய் இருக்கிறது. எந்த வகையான கண்ணாடிக் கலங்களும் ஆபத்தானவையாக இருக்கும். சில இடங்களில் அவற்றைப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டும்கூட இருக்கிறது. ஆகவே, தயவுசெய்து எந்தவிதமான கண்ணாடி கலங்களையோ புட்டிகளையோ அந்த இடத்திற்குள் கொண்டுவரவேண்டாம்.
17 கூடுதலான நன்மைகள்: அப்படிப்பட்ட மாற்றப்பட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதிலுள்ள ஞானத்தை நம்மால் உண்மையிலே காணமுடிகிறது. நாம் கூடிவருவதன் உண்மையான நோக்கத்தில்—ஆவிக்குரிய நன்மைகளைப் பெறுவதில்—எல்லாரும் முழு கவனத்தையும் செலுத்த முடியும். நாம் அனுபவித்து மகிழும் கூட்டுறவிலும் அந்த நிகழ்ச்சிநிரலிலும் தானே இந்த நன்மைகள் கிடைக்கின்றன. ஆகவே, மதிய இடைவேளையின்போது உணவைத் தேடிக்கொண்டு மன்றத்தைவிட்டுச் செல்வதற்குப் பதிலாக, அங்கு சிற்றுண்டி இலாக்காவில் அளிக்கப்படுவதற்கும் அதிகமாக நமக்கு ஏதாவது தேவையிருக்குமென நினைத்தால் அதை நம்முடன் கொண்டுவருவது எவ்வளவு நன்மையானதாக இருக்கும். இது நம் சகோதர சகோதரிகளின் கூட்டுறவை அனுபவித்து மகிழுவதை சாத்தியமாக்கும்; மேலும் மதிய நிகழ்ச்சியில் எதையும் தவறவிடாமல் தடுக்கும்.
18 மதிய நிகழ்ச்சிநிரலுக்குப் பின் ஆவிக்குரியவிதத்தில் புத்துணர்ச்சி அடைந்தவர்களாய் சிலர் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் உள்ளூர் சாப்பாட்டு நிறுவனங்களில் அதிக பலமான உணவைச் சாப்பிடுகையில், தொடர்ந்து கிறிஸ்தவ கூட்டுறவையும் கற்றுக்கொண்ட நல்ல காரியங்களைப் பற்றிய உரையாடலையும் அனுபவிக்கக்கூடும். வேறு சிலர் ஒரு உணவகத்திலிருந்து அல்லது பலசரக்குக் கடையிலிருந்து எதையாவது வாங்கிக்கொண்டுசெல்லக்கூடும். தங்கள் சொந்த வீட்டுக்குத் திரும்பிச்செல்ல முடிகிறவர்கள், மற்ற நாட்களை உலகப்பிரகாரமான வேலையிலோ வெளி ஊழியத்திலோ செலவிட்டபின் செய்வதுபோல அங்குசென்றே தங்கள் மாலை உணவைச் சமைத்து சாப்பிட விரும்பக்கூடும்.
19 புதிய பிரசுரங்களையும் சிறந்த போதனையையும் நடைமுறையான ஆலோசனையையும் நாம் பெறும் இந்த மாநாடுகளில் உண்மையிலேயே ஆவிக்குரிய விருந்தை அனுபவிக்கிறோம். கடவுளுடைய மக்களுடன் சேர்ந்திருக்கும் சந்தோஷத்தோடுகூட இந்த ஆசீர்வாதங்களே எல்லாருடைய நினைவிலும் இருக்கின்றன. நீதிமொழிகள் 10:22 சொல்லுகிறது: “கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்.” இது ஏனென்றால், யெகோவாவின் மக்களாக நாம் பொருளாதார தேவைகளையோ வசதிகளையோ கருத்தில்கொண்டு மாநாடுகளுக்கு ஆஜராவதில்லை. ஆவிக்குரிய விதத்தில் எவ்வளவு அதிக நன்மையைப் பெறுவது சாத்தியமோ அவ்வளவு அதிகத்தைப் பெறவேண்டும் என்ற நல்ல விருப்பத்துடன் நாம் கூடுகிறோம்; நாம் காண்பிக்கும் அந்த மனநிலைக்காக யெகோவா நமக்கு செழுமையாக பலனளிக்கிறார்.—1 தீ. 6:6-8; எபி. 11:6.
20 உற்சாகமளிக்கும் இந்தச் சந்தர்ப்பங்கள் ஆவிக்குரிய அறுவடையின் முன்னேற்றத்தைக் குறித்தும் நமக்கு நினைப்பூட்டுகின்றன. (யோவா. 4:35, 36) ஏசாயா 54-ம் அதிகாரத்தின் ஆரம்ப வசனங்கள், யெகோவாவின் மனைவிபோன்ற அமைப்பைச் சந்தோஷமுள்ள அதிகரிப்புகளுக்குத் தயாராகும்படி அழைப்புவிடுக்கின்றன. மேலுமான வளர்ச்சி, விஸ்தரிப்பு மற்றும் புதுப்பிக்கப்பட்ட பலம் ஆகியவை ஏசாயா தீர்க்கதரிசனமுரைத்ததுபோல அருகில் இருக்கின்றன: “உன் கூடாரத்தின் இடத்தை விசாலமாக்கு; உன் வாசஸ்தலங்களின் திரைகள் விரிவாகட்டும்; தடைசெய்யாதே; உன் கயிறுகளை நீளமாக்கி, உன் முளைகளை உறுதிப்படுத்து. நீ வலதுபுறத்திலும் இடதுபுறத்திலும் இடங்கொண்டு பெருகுவாய்.” இந்தக் கிளர்ச்சியூட்டும் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றம், நாம் இப்போது காண்கிற, உண்மை வணக்கத்தின் குறிப்பிடத்தக்க விஸ்தரிப்பில் விளைவடைந்திருக்கிறது.—ஏசா. 54:1-4.
21 தயாரிக்கப்பட்டிருக்கிற ஆவிக்குரிய நிகழ்ச்சியை அதிக கவனச்சிதறலின்றி எல்லாரும் அனுபவித்து மகிழுவதற்கு இந்த எளிமையாக்கப்பட்ட மாநாட்டு ஏற்பாட்டை அமல்படுத்துவது நல்ல தீர்மானமாகவே உண்மையில் தோன்றுகிறது. மேலுமான வளர்ச்சியை அதிக திறம்பட்ட விதத்தில் கையாளுவதை இது அனுமதிக்கும் என்பதால் இதுவும் யெகோவாவின் ஆசீர்வாதத்தைப் பெறும் என்று நாங்கள் நம்புகிறோம். தேவையானவற்றிற்கு கவனத்தைச் செலுத்துவதன்மூலம், மகிழ்ச்சியுள்ள கூட்டுறவுக்காகவும் ஆவிக்குரிய நற்காரியங்களுக்காகவும் திட்டமிடப்பட்ட நாட்களை நாம் அனுபவித்துக்களிக்க முடியும். நாம் தொடர்ந்து ஒன்றுகூடி யெகோவாவின் மேசையில் போஷிக்கப்பட்டு வருகையில் நம் எல்லா முயற்சிகளையும் அவர் ஆசீர்வதிக்க வேண்டும் என்பது நம்முடைய உண்மையான ஜெபமாக இருக்கிறது.—ஒப்பிடுக: உபாகமம் 16:14, 15.
[பக்கம் 6-ன் பெட்டி]
எளிமையாக்கப்பட்ட உணவு வழங்கும் ஏற்பாடுகளின் நன்மைகள்
◼ நிகழ்ச்சிக்கு முன்னும், பின்னும், நிகழ்ச்சியின் போதும் குறைந்த வேலை, அதிக கூட்டுறவுக்கு நேரமளிக்கிறது
◼ பராமரிப்பதற்கு உணவளிப்பு சம்பந்தப்பட்ட சாதனங்கள் குறைவாக இருக்கும்
◼ அதிகமானோர் ஆவிக்குரிய நிகழ்ச்சிக்கு முழு கவனம் செலுத்தமுடிகிறது
◼ மற்ற இலாக்காக்களில் உதவிசெய்ய அதிக வாலண்டியர்கள் கிடைக்கிறார்கள்
◼ மற்ற தேவராஜ்ய அக்கறைகளுக்கு அதிக நேரம் கிடைக்கிறது
மதிய இடைவேளைக்காக, விரும்பினால் கொண்டுவரும்படி ஆலோசனையாகக் கொடுக்கப்படும் உணவு வகைகள்
◼ எளிய, ஊட்டச்சத்துள்ள மதிய உணவு வகைகள்
◼ சப்பாத்தி அல்லது புரோட்டாவும் காய்கறி பொறியலும்
◼ உலர்ந்த பழங்கள், கொட்டை வகைகள், சுடப்பட்ட (baked) பொருள்கள், பழம்
◼ மாநாட்டு மன்றத்தில் சாப்பிட வசதியிருக்கும் இடங்களில் சோறு மற்றும் சமைக்கப்பட்ட காய்கறிகளை உடைய ஒரு டிஃபனைக்கூட கொண்டுவரலாம்
மாநாட்டு மன்றத்திற்கு இவற்றைக் கொண்டுவராதீர்கள்
◼ மதுபானங்கள்
◼ கண்ணாடி கலங்கள் அல்லது புட்டிகள்
◼ குடும்ப-அளவு பெரிய உணவுக் கலங்கள்
அசைவ உணவைக் கொண்டுவருவது குறித்து எச்சரிக்கையாய் இருங்கள். அநேக மன்றங்கள் அப்படிப்பட்ட உணவை அந்த இடத்தில் உட்கொள்வதைத் தடை செய்கின்றன. சந்தேகமிருந்தால், அப்படிப்பட்ட உணவு வகைகளைத் தவிர்ப்பது பாதுகாப்பானதாக இருக்கும்.
[பக்கம் 2-ன் பெட்டி]
1995-96 “சந்தோஷமாய் துதிப்போர்” மாவட்ட மாநாட்டு அலுவலக விலாசங்கள்
CITY DATES LANG. ADDRESSES
1. Mapusa (Goa) Oct. 20-22 KT/E Stan Fernandes, 177/2A, Fernandes Vaddo, Siolim, Bardez, GOA 403 517
2. New Delhi Oct. 27-29 HI/E Joseph Yep, 68 Pocket-B, Sector I, DDA SFS Flats, Sarita Vihar, New Delhi, UT 110 044
3. Shimoga Nov. 10-12 KA Jacob Susai, Kingdom Hall, Pension Mohalla, Shimoga, KAR 577 202
4. Bombay Nov. 17-19 HI Felix Dias, P.O. Bag 17723, Borivli (W), Bombay, MAH 400 092
5. Bombay Nov. 24-26 E P. Soans, The Watchtower, G-37, 15th Road, Santa Cruz West, Bombay, MAH 400 054
6. Bangalore Nov. 24-26 TL/E S. T. Solomon, 32 Ramakrishnappa Road, Cox Town, Bangalore, KAR 560 005
7. Pune Dec. 1-3 MR/E N. Tarapore, 601 Airy Apts, 878 Bootee Street, Pune, MAH 411 001
8. Vijayawada Dec. 1-3 TU/E R. P. Wilson, 54-14/8/45 Bharathi Nagar, Vijayawada, AP 520 008
9. Anand Dec. 8-10 GU J. A. Parmar, Crescent Villa, Garden Society, Bhalej Road, Anand, GUJ 388 001
10. Coimbatore Dec. 8-10 TL D. P. Chellappa, c/o Sanjay Peters, 4C/9, Lakshmipuram, Ganapathy, Coimbatore, TN 641 006
11. Guwahati Dec. 15-17 AE/E A.J. Philip, Kingdom Hall, Gandhi Basti, Silpukhuri, Guwahati, Assam 781 003
12. Calcutta Dec. 22-24 BE/E/HI A. Lucas, Kingdom Hall, 5/1 Pearl Road, Beck Bagan, Calcutta, WB 700 017
13. Port Blair Dec. 22-24 HI T.S. Abraham, Kingdom Hall, Shadipur P.O., Port Blair, A&N 744 106
14. Madras Dec. 29-31 TL/E D. Caleb, 53 Metha Nagar, Madhavaram Milk Colony, Madras, TN 600 051
15. Kottayam Dec. 29-31 MY G. Thomas, VIII/II, Watch Tower Property, Mariyathuruthu P.O., Kottayam, KER 686 027
16. Calicut Jan. 5-7 MY K. A. Francis, Shalohm, Thalakkulathur P.O., Calicut, KER 673 317