நம்முடைய தற்காப்புச் சாதனங்களை முழுமையாக பயன்படுத்துதல்
1 இன்று சாத்தான் குடும்பங்களைத் தாக்குகிறான். அவற்றை தகர்த்துப் போடுவதற்குத் தன்னால் 9இயன்றதை செய்து கொண்டிருக்கிறான். கிறிஸ்தவர்கள் இதை வெகு நன்றாகவே அறிந்திருக்கிறார்கள். பிள்ளைகள் பாலுறவு ஒழுக்கக்கேட்டிலும் குடிவெறியிலும் போதை மருந்துகளின் துர்ப்பிரயோகங்களிலும் அல்லது மற்ற தவறுகளிலும் சிக்கிக்கொள்வது, ஆ, எவ்வளவு விசனமாயிருக்கிறது! ஒரு சிலர் தங்களுடைய குமாரரும் குமாரத்திகளும் யெகோவாவைவிட்டு வழுவிப்போய் விட்டதை, உலக சிந்தனைகளிலும் ஆசைகளிலும் பிடிபட்டுப்போனதை உண்மையில் கண்டிருக்கின்றனர். (நீதி. 10:1; 17:21) அதே சமயத்தில் அநேக இளைஞர்கள் சுத்தமுள்ளவர்களாக நிலைத்திருக்கின்றனர். யெகோவாவின் சேவையில் தங்களை சுறுசுறுப்பாக வைத்துக் கொண்டனர். அவர்களுடைய நடத்தைப் போக்கு கடவுளுக்கு மகிமையையும் பெற்றோருக்கும் மற்றவர்களுக்கும் மகிழ்ச்சியையும் கொண்டு வந்திருக்கிறது. (3 யோவான் 3, 4) இந்த வித்தியாசத்தை உண்டுபண்ணியது எது? கொடுக்கப்பட்டிருக்கும் தற்காப்புச் சாதனங்களை முழுமையாகப் பயன்படுத்துவதற்குப் பெற்றோரும் பிள்ளைகளும் ஒரேவிதமாய் எடுத்த அந்தத் தீர்மானம்தானே பெரும்பாலருடைய விஷயத்தில் இந்த வித்தியாசத்தை உண்டுபண்ணியிருக்கிறது.
2 “தெய்வீக நீதி” மாவட்ட மாநாட்டில் பெற்றோருக்கும் இளைஞருக்கும் இன்று தேவைப்படக்கூடிய தற்காப்புச் சாதனங்களுக்குக் கவனம் செலுத்தப்பட்டது. இவற்றில் ஒரு சில “குடும்ப வட்டாரத்துக்குள் நியாயத்துடன் சிட்சை அளித்தல்” என்ற தொடர் பேச்சுகளிலும் “ஒழுக்கத்தின் தூய்மை இளைஞர்க்கு அழகு” என்ற பேச்சிலும் கையாளப்பட்டது. இந்தத் தகவல் உங்களுடைய நினைவிலிருக்கிறதா, அதை நீங்கள் தனிப்பட்ட விதத்திலும் உங்கள் குடும்பத்திலும் பொருத்தினீர்களா?
பெற்றோருக்குரிய உத்தரவாதங்கள்
3 ஒரு முக்கியமான தற்காப்புச் சாதனமானது ஒரு குடும்பத்தலைவனிடமிருந்து யெகோவா எதிர்பார்க்கிறவற்றை தகப்பன்மார் முழுமையாகப் புரிந்துகொள்வதும், வழிநடத்துதலுக்காக யெகோவாவின் பேரில் சார்ந்திருக்க வேண்டிய அவசியத்தை கண்டுணருவதுமாகும். ஒரு குடும்பத்தலைவன் தன் குடும்பத்தாருக்கு பைபிள் நியமங்களைப் போதிக்க வேண்டுமானால் அவன் அதை முதலில் அறிந்திருக்கவேண்டும். ஆனால் அதை அறிந்து வைத்திருப்பது மட்டுமே போதாது. அவற்றிலிருந்து குடும்பம் முழுமையாக பயனடைய அந்த நியமங்களைப் பொருத்திப் பிரயோகிப்பது அவசியம். ஓர் ஒப்புக்கொடுத்த தந்தை குடும்பத்தாரை ஆவிக்குரிய நிகழ்ச்சிநிரல்களான ஜெபம், படிப்பு, மற்றும் பரிசுத்த சேவை ஆகியவற்றில் வழிநடத்தவேண்டும். (1 தீமோ. 5:8) தன் மனைவியும் பிள்ளைகளும் தன்னுடைய அதிகாரத்தை மதிக்கும்படி தான் எதிர்பார்த்தால், கடவுளுக்கும் அவருடைய அமைப்புக்குமான தன்னுடைய கீழ்ப்படிதலில் மகிழ்ச்சியை வெளிக்காட்டவேண்டும். (1 யோவான் 5:3) தன்னுடைய குடும்பத்தாரை அனலாகவும் அன்பாகவும், முரண்பாடற்ற முறையிலும் நடத்துவதில் ஒரு தந்தை யெகோவாவைப் பின்பற்றுவானேயானால் அப்பொழுது அவன் அவர்களுடைய மரியாதையைச் சம்பாதித்துக் கொள்ளுகிறான். மேலும் அவர்கள் அவனுடைய முன்மாதிரியை பின்பற்றும் மனச்சாய்வு கொண்டவர்களாயிருப்பார்கள். இது யெகோவாவுக்குத் துதியையும் கனத்தையும் கொண்டுவரும்.
4 “பெற்றோர்களே—உங்கள் பிள்ளைகளை எட்டத்தக்க விதத்தில் உங்கள் போதனைகளை மாற்றியமையுங்கள்,” என்ற மாநாட்டு பேச்சின் பாகம் உங்களுக்கு நினைவிலிருக்கிறதா? ஒரு குடும்பம் பிப்ரவரி 1988-ம் ஆண்டு காவற்கோபுரம் பத்திரிகையிலிருந்து ஒரு கட்டுரையை படிப்பதைக் காட்டக்கூடிய ஒரு நடிப்பு அதிலடங்கியிருந்தது. பெற்றோர் ஒவ்வொரு பிள்ளையினுடைய கற்றுக்கொள்ளும் திறனின் அளவை கவனத்திற்கொண்டார்கள். அது இயந்திர பாணியில் அமைந்த வழக்கமான கேள்வி-பதில் முறைகள் அல்ல, ஆனால் பெற்றோர் பிள்ளைகளுடைய இருதயத்தில் சத்தியம் எட்டவேண்டும் என்ற குறியிலக்கைக் கொண்டிருந்தனர். தாய் எப்படி தன் கணவனுக்கு ஆதரவான பங்கை வகித்தாள் என்பதையும் தன்னுடைய கீழ்ப்படிதலை காண்பிப்பவளாய்ப் பிள்ளைகளுக்கு ஒரு நல்ல முன்மாதிரி வைத்ததையும் சகோதரிகள் முக்கியமாய் நினைவுகூரக்கூடும்.—எபே. 5:21-24.
பிள்ளைகளே—யெகோவா உங்களிடமிருந்து எதிர்பார்ப்பது என்ன?
5 உன் பெற்றோர் எவ்வாறு சாத்தானால் தாக்கப்படுகிறார்களோ அவ்வாறே நீயும் தாக்கப்படுகிறாய். உன்னுடைய தற்காப்புச் சாதனம் என்ன? யெகோவாவுக்கும் உன் பெற்றோருக்கும் கீழ்ப்படிவதேயாகும். மாநாட்டு பேச்சுகளில் உனக்கு உதவி செய்வதற்காக மிகச் சிறந்த யோசனைகள் தெரிவிக்கப்பட்டன. அது உனக்கு ஞாபகம் வருகிறதா? ஒரு குறிப்பை நீ நினைவுகூரக்கூடும், அதாவது நீ உன் பெற்றோரின் வஸ்திரத் தொங்கலை பிடித்துக்கொண்டு புதிய ஒழுங்குமுறைக்குள் பிரவேசித்து விடமுடியாது. மறுவார்த்தையில் சொல்லவேண்டுமானால் சத்தியத்தை நீ உனக்குச் சொந்தமானதாக ஆக்கிக்கொள்ளவேண்டும். உன் பெற்றோர் உனக்கு ஆகாரம் கொடுத்து உன்னை பராமரிக்கிறார்கள். அவர்கள் இதை இம்மட்டுமாக செய்து வந்திருக்கிறார்கள். ஆனால் நீ முதிர்ந்தவனாக ஆகும்போது ஆவிக்குரிய உத்தரவாதங்களை நீயே எடுத்துக் கொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எது சரி என்று நீ அறிந்திருக்கிறாயோ அதை நீ செய்யும்படி யெகோவா எதிர்பார்க்கிறார். (பிர. 11:9) யெகோவாவின் வழிகளே சரியானவை என்று கற்றிருப்பாயானால் அதை பின்பற்றுவதற்குரிய நல்லுணர்வைக் கொண்டிருப்பது உன் பேரிலேயே சார்ந்திருக்கிறது.
6 நீ பெரியவனாக வளருகையில் ஒழுக்கப்பிரகாரமாக சுத்தமுள்ளவனாய் நிலைத்திருப்பதற்கான சவால் விடாது தொடரும் ஒன்றாக ஆகிவிடுகிறது. அசுத்தமான செல்வாக்கின் ஓர் உலகளாவிய தொற்றுநோய் இருக்கிறது, அதை நீ ஒவ்வொரு நாளும் எதிர்ப்படுகிறாய். எது நன்மையோ அதை நேசிப்பதன் பேரிலும் எது தீமையோ அதை வெறுப்பதன் பேரிலும் உன்னுடைய தற்காப்பு சார்ந்திருக்கிறது. (சங். 52:3; 97:10) யெகோவாவை நேசிக்கிறவர்களுடன் கூட்டுறவு கொள். எது கட்டியெழுப்பக்கூடியதோ, அதையே வாசி. எது ஆரோக்கியமானதோ அதையே பார். (பிலி. 4:8) சோதனை ஏற்பட்டால், புத்தியீன வாலிபனுடைய பின் விளைவுகளை நினைவுபடுத்திப் பார். (நீதி. 7:6-27) உன்னுடைய சிந்தனைகள் செயல்கள் ஆகியவற்றை யெகோவா வழிநடத்தட்டும். அப்பொழுது அவர் பக்கத்தில் நீ பத்திரமாய் நிலைத்திருப்பாய்.
7 ஆம், பெற்றோரும் பிள்ளைகளும் ஒரேவிதமாய் நம் அனைவரையும் சுற்றியுள்ள ஆபத்துக்களுக்கு விழிப்புள்ளவர்களாய் நிலைத்திருக்கவேண்டும். நம்முடைய தற்காப்புச் சாதனங்களை முழுமையாகப் பயன்படுத்துவன் மூலம் போராட்டத்தில் நாம் வெற்றி பெறலாம். யெகோவாவை நித்தியமாய் துதிக்கும் சிலாக்கியத்தையும் பெறலாம்.