உங்கள் உடல்பாவனைகள் உங்களைப் பற்றி சொல்வதென்ன?
நாம் மற்றவர்களிடம் பேசும்போது முகபாவங்களோடும் சைகைகளோடும் அங்க அசைவுகளோடும் நமக்கே உரிய பாணியில் பேசுகிறோம். இந்த உடல்பாவனைகள் உங்களைப் பற்றி என்ன சொல்கின்றன? நீங்கள் மரியாதையும் பணிவும் சந்தோஷமும் மிக்க நபரென சொல்கின்றனவா? அல்லது அகத்தில் கோபமும் எரிச்சலும் குடிகொண்டுள்ளதை காட்டிக்கொடுத்து விடுகின்றனவா? அதிக அர்த்தமும் வலிமையும் பெற்ற பல்வேறு தோரணைகளையும் பாவனைகளையும் பற்றி பைபிள் அநேக இடங்களில் குறிப்பிடுகிறது. எல்லாரும் ஒரேவிதமாக உணர்ச்சிகளை வெளிக்காட்டுவதில்லை என்பதும் சில நாட்டினர் மற்றவர்களைவிட எளிதில் உணர்ச்சிகளை வெளிக்காட்டிவிடுவர் என்பதும் உண்மைதான். இருந்தாலும், பைபிள் காலங்களில் உணர்ச்சிகள் வெளிக்காட்டப்பட்ட முறையை பற்றி சிந்திப்பதால் நாம் அதிகத்தைக் கற்றுக்கொள்ளலாம்.
மரியாதைக்குரிய தோரணை
யெகோவாவிடம் ஜெபம் செய்வது நமக்குக் கிடைத்துள்ள பாக்கியம்; ஆழ்ந்த மரியாதையைக் காட்டும் தோரணையில் நாம் ஜெபிக்க வேண்டும். கை கோர்த்தபடி அல்லது கை கூப்பியபடி அல்லது இதுபோன்ற வேறொரு குறிப்பிட்ட தோரணையில்தான் ஜெபம் செய்ய வேண்டும் என்ற எந்தவொரு வரைமுறையும் எபிரெயர்களுக்கோ ஆரம்பகால கிறிஸ்தவர்களுக்கோ இல்லை. இருந்தாலும் அவர்களது தோரணைகள் அனைத்தும் மிகுந்த மரியாதையை வெளிப்படுத்தின. பொதுவாக, நின்றுகொண்டோ முழங்கால்படியிட்டோ ஜெபம் செய்தனர். முழுக்காட்டுதலுக்குப் பின்னர் இயேசு நின்று ஜெபித்திருக்கலாம்; கெத்செமனே தோட்டத்திலோ முழங்கால்படியிட்டு ஜெபித்தார். (லூக்கா 3:21, 22; 22:41) பொதுவாக, ஜெபம் செய்பவர் நின்றிருந்தாலும்சரி மண்டியிட்டிருந்தாலும்சரி, இரு கரங்களும் வானத்தை நோக்கி ஏறெடுக்கப்பட்டன அல்லது மேலே உயர்த்தப்பட்டன அல்லது மன்றாடும் பாவனையில் நேராக நீட்டப்பட்டன. சிலர், வானத்தை அண்ணாந்து பார்த்தபடியும் ஜெபம் செய்தனர்.—நெகேமியா 8:6; மத்தேயு 14:19; யோபு 22:26.
சிலர் மண்டியிட்டு குதிங்காலில் உட்கார்ந்தவாறு தலைகுனிந்து ஜெபம் செய்தனர். அல்லது எலியா செய்தபடி மண்டியிட்டு, முகம் முழங்கால்களுக்கு இடையே தரையில் படும்படி குனிந்து ஜெபித்தனர். (1 இராஜாக்கள் 18:42) மிகுந்த துக்கத்தோடு அல்லது மிகுந்த ஊக்கமாக வேண்டிக்கொண்டபோது சிலர் முகங்குப்புற விழுந்தும் ஜெபித்தனர். இருந்தாலும், மற்றவர்கள் கவனத்தைக் கவரும் விதத்திலோ, மிகுந்த பக்திமான்கள் போல் காட்டிக்கொள்ளும் தோரணையிலோ ஜெபம் செய்வதை இயேசு கண்டனம் செய்தார். உள்ளப்பூர்வமாக ஜெபம் செய்ய வேண்டுமென அவர் தெளிவாக சொன்னார்.
கிழக்கத்திய தேசத்தவர், ஜெபம் செய்யும்போது என்ன தோரணைகளைப் பயன்படுத்தினார்களோ அவற்றையே ஒருவருக்கொருவர் மரியாதை தெரிவிக்கும்போதும் முக்கியமாக அதிகாரத்திலிருந்தவர்களை வேண்டிக்கொள்ளும்போதும் பெரும்பாலும் பயன்படுத்தினார்கள். மற்றவர்களுக்கு முன் மண்டியிட்டு மன்றாடியதற்கான உதாரணங்கள் பைபிளில் இருக்கின்றன. இது அந்நபரை வணங்கியதைக் குறிக்கவில்லை. மாறாக, அவரது ஸ்தானத்திற்கு அல்லது பதவிக்கு ஆழ்ந்த மரியாதை காட்டியதை குறித்தது. (மத்தேயு 17:14) மரியாதை காட்டுவதைக் குறித்து வேதவசனங்களிலிருந்து அதிகத்தை கற்றுக்கொள்ளலாம்.
பணிவான தோரணை
பைபிள் காலங்களில், இன்னொருவரது காலணிகளை கழற்றிவிடுவது அல்லது எடுத்துவருவது தாழ்ந்த வேலையாக கருதப்பட்டது; எஜமானுக்குப் பக்கத்தில் தான் அற்பமான ஊழியன் என உணர்ந்து பணிவு காட்டுவதை அது அர்த்தப்படுத்தியது. சாப்பிட்டு முடித்தவருக்கு கைகழுவ தண்ணீர் ஊற்றுவதும், பாதங்களைக் கழுவுவதும் உபசரிப்பையும் மரியாதையையும் சில சந்தர்ப்பங்களில் பணிவையும் அடையாளப்படுத்தின. எலிசா, ‘எலியாவின் கைகளுக்குத் தண்ணீர் வார்த்தார்’ என்ற வாக்கியம், அவர் எலியாவின் ஊழியக்காரன் என அடையாளம் காட்டியது. (2 இராஜாக்கள் 3:11) இந்தச் செயல் அவரது மனத்தாழ்மையைக் காட்டியது. இயேசு சீஷர்களுக்குப் பாடம் புகட்ட இப்படிப்பட்ட கிழக்கத்திய பழக்கங்களில் ஒன்றைத்தான் உதாரணமாக பயன்படுத்தினார். அதாவது, அவர் சீஷர்களின் பாதங்களைக் கழுவி, மனத்தாழ்மையோடு ஒருவரையொருவர் சேவிக்க வேண்டும் என்ற பாடத்தைக் கற்பித்தார்.—யோவான் 13:3-10.
கச்சை கட்டுவது, பணிவோடு சேவைசெய்ய காத்திருப்பதை அர்த்தப்படுத்தியது. வேலை செய்யும்போது, ஓடும்போது அல்லது இதுபோன்ற மற்ற சந்தர்ப்பங்களின்போது, தங்கள் நீண்ட அங்கி தொந்தரவாயிராதபடி அதை பட்டையால் அல்லது கச்சையால் கட்டும் பைபிள் காலத்து பழக்கத்தை இது அடிப்படையாக கொண்டிருந்தது. மற்றவர் கையை பிடித்துக்கொள்வதும் கை குலுக்குவதும், ஒன்று சேர்ந்து அல்லது கூட்டு சேர்ந்து ஐக்கியமாக பணிபுரிவதில் பணிவு காட்டுவதைக் குறித்தது. (கலாத்தியர் 2:9) சகோதரர்கள் ஒருவருக்கொருவர் இறுக கைகுலுக்குவது என்னே உற்சாகம் தருகிறது!
துக்கம், அவமானம், கோபம்
பூர்வ காலங்களில் யெகோவாவின் உத்தமமுள்ள ஊழியர்கள் இத்தகைய உணர்ச்சிகளை வெளிப்படையாக காட்டினார்கள். புழுதியை அல்லது சாம்பலை தலையில் அள்ளிப் போட்டுக்கொள்வது, வஸ்திரங்களை கிழித்துக்கொள்வது, இரட்டுடுத்திக் கொள்வது, அழுவது, சோகத்தில் தலையை தொங்கப்போடுவது, தரையில் உட்காருவது போன்ற சைகைகளால் துக்கத்தை வெளிக்காட்டினர். (யோபு 2:12, 13; 2 சாமுவேல் 13:19) கொஞ்சம் தலை மயிரை அல்லது தாடி மயிரை பிடுங்குவது, முக்காடிட்டுக்கொள்வது, தலைமேல் கைகளை வைத்துக்கொள்வது போன்றவை துக்கத்தை அல்லது அவமானத்தைக் குறித்தன. (எஸ்றா 9:3; எஸ்தர் 6:12; எரேமியா 2:37) தலைமேல் கைகளை வைத்துக்கொள்வது, இன்னலுக்கு அடையாளமான கடவுளுடைய கனமான கை தங்கள்மீது இருப்பதைக் குறித்ததாக சிலர் நினைத்தனர். துக்கத்தையோ அவமானத்தையோ உண்மை வணக்கத்தார் சாதாரணமாக அல்லது இலேசாக எடுத்துக்கொள்ளவில்லை. மனவருத்தத்தையும் மனந்திரும்புதலையும் உபவாசத்தால் வெளிக்காட்டினர். (2 சாமுவேல் 1:12; யோவேல் 1:13, 14) இயேசு பூமியில் இருந்தபோது, மாய்மாலக்காரர்கள் தாங்கள் உபவாசிக்கிறதை மற்றவர்கள் காணும்படி முகங்களை வாட்டமாக வைத்துக்கொண்டு, பரிசுத்தவான்கள் போல் காட்டிக்கொண்டனர். ஆனால், பிதா இருதயத்தைப் பார்ப்பதால், உபவாசிக்கும்போது தலைக்கு எண்ணெய் பூசி, முகத்தைக் கழுவி எப்போதும்போல் தோற்றமளிக்க வேண்டுமென இயேசு தம் சீஷர்களுக்கு சொன்னார். (மத்தேயு 6:16-18) ஆன்மீக விஷயங்களுக்கு முழு கவனம் செலுத்துவதற்கும் சிலசமயம் கிறிஸ்தவர்கள் உபவாசம் செய்தனர்.—அப்போஸ்தலர் 13:2, 3.
கோபம், வெறுப்பு, ஏளனம், நிந்தனை, அவமதிப்பு, பரிகாசம் போன்ற கடும் உணர்ச்சிகளை பல்வேறு சைகைகள் வெளிக்காட்டின. பொதுவாக அதற்கேற்ற சொற்களும் சொல்லப்பட்டன. வக்கணம் காட்டுவது, தலையை அல்லது கையை வெறுப்புடன் ஆட்டிப் பேசுவது, கன்னத்தில் அறைவது, புழுதியை வாரி வீசுவது, காலால் தட்டுவது போன்றவை அவற்றில் சில. (எசேக்கியேல் 25:6; சங்கீதம் 22:7; செப்பனியா 2:15; மத்தேயு 5:39; 2 சாமுவேல் 16:13) எதிரிக்கு, பரம விரோதிக்கு, அல்லது கொடுமைக்காரனுக்கு ஏற்பட்ட துயரத்தைக் கண்டு அகம் குளிர்ந்ததை இவை சொல்லாமல் சொல்லின. கிறிஸ்தவர்கள் துக்கத்தையும், பாவம் செய்திருந்தால் அவமானத்தையும் வெளிக்காட்டலாம் என்றாலும், கட்டுக்கடங்கா கோபத்தையோ அவமதிப்பையோ பாவனைகளில் வெளிக்காட்டுவதை தவிர்க்க எப்போதும் முயல வேண்டும்.
நட்பையும் அகமகிழ்ச்சியையும் வெளிக்காட்டுதல்
பைபிள் நாடுகளில் நட்பு அன்போடு வெளிக்காட்டப்பட்டது. முத்தம் கொடுப்பது, அல்லது இன்னுமதிக பாசத்தைக் காட்ட, கழுத்தைக் கட்டிக்கொண்டு கண்ணீரோடு முத்தம் செய்வது வழக்கமாக இருந்தது. (ஆதியாகமம் 33:4; அப்போஸ்தலர் 20:37, 38) இயேசு பூமியில் இருந்த காலத்தில், சாய்ந்தவாறு உணவு உண்ணும் பழக்கம் இருந்தது. மற்றவரின் மார்பில் சாய்வது, நெருக்கமான நட்பை அல்லது தயவை குறித்தது. (யோவான் 13:23, 25) இந்தப் பழக்கத்தின் அடிப்படையில்தான் லூக்கா 16:22, 23-ல் உள்ள உவமையும் சொல்லப்பட்டது. மற்றவர் தரும் அப்பத்தை அவரோடு சேர்ந்து உண்பது அவரோடு இருக்கும் நட்பையும் சமாதானத்தையும் அடையாளப்படுத்தியது. அவ்வாறு உண்ட பின் அவருக்கு ஏதேனும் தீங்கு செய்வது மிகக் கொடூரமான நம்பிக்கைத் துரோகமாக கருதப்பட்டது.—சங்கீதம் 41:9.
கைதட்டுவதாலும் நடனமாடுவதாலும் சந்தோஷம் வெளிக்காட்டப்பட்டது; பொதுவாக பின்னணி இசையும் இருந்தது. திராட்ச அறுவடை போன்ற வேலை செய்யும்போது ஆரவாரிப்பதும் பாடுவதும் சந்தோஷத்தை அல்லது நன்றிப் பரவசத்தைத் தெரியப்படுத்தின. (சங்கீதம் 47:1; நியாயாதிபதிகள் 11:34; எரேமியா 48:33) இன்று யெகோவாவை சேவிக்கும் சந்தோஷமிக்க ஊழியர்கள், உலகெங்குமுள்ள சகோதர சகோதரிகளின் நட்பை போற்றிப் பாதுகாக்கிறார்கள். ‘யெகோவாவில் மகிழ்ச்சியாயிருப்பதையே’ தங்கள் வலிமையாக கருதுகிறார்கள்; கடவுளுக்கு துதிப் பாடல்களை உற்சாகமாக பாடுகிறார்கள்.
நடப்பதும் ஓடுவதும்
‘நடப்பது’ என்பதன் அடையாள அர்த்தம், ஒரு குறிப்பிட்ட போக்கில் செல்வதாகும். உதாரணமாக, ‘நோவா உண்மை கடவுளோடு நடந்தார்’ என சொல்லப்படுகிறது. (ஆதியாகமம் 6:9, NW) கடவுளோடு நடந்தவர்கள் அவர் காட்டிய வழியில் நடந்து அவரது தயவைப் பெற்றனர். கிறிஸ்தவ கிரேக்க வேதாகமமும் இதே சொற்றொடரைப் பயன்படுத்துகிறது. கடவுளுடைய ஊழியராவதற்கு முன்பும் ஊழியரான பின்பும் பின்பற்றப்படும் இரு வேறுபட்ட வாழ்க்கைப் போக்குகளைப் பற்றி அது பேசுகிறது. (எபேசியர் 2:2, 10) அதேவிதமாக ‘ஓடுவதும்’ ஒரு குறிப்பிட்ட வாழ்க்கைப் போக்கிற்கு அடையாளமாக பயன்படுத்தப்படுகிறது. யூதாவிலிருந்த தீர்க்கதரிசிகளை தாம் அனுப்பாதிருந்தும் அவர்கள் ‘ஓடியதாக’ கடவுள் சொன்னார். அவர்கள் பொய்யான, அதிகாரம் பெறாத தீர்க்கதரிசன போக்கை பின்பற்றினர். கிறிஸ்தவ போக்கை பவுல் ‘ஓட்டத்தோடு’ சம்பந்தப்படுத்தி பேசினார். பரிசு பெறுவதற்காக பந்தய விதிமுறைகளுக்கு இணங்கி ஓடுவதோடு அவர் ஒப்பிட்டார்.—எரேமியா 23:21; 1 கொரிந்தியர் 9:24.
நம் உடல் பாவனைகள் அதிகத்தை தெரிவிக்கின்றன. அவை எப்போதும் மரியாதையையும் பணிவையும் நட்பையும் அகமகிழ்ச்சியையும் காட்டுபவையாக இருக்கட்டும். ஒருபோதும் கோபத்தையோ எரிச்சலையோ காட்டாதிருப்பதாக. நாம் ‘கடவுளோடு நடக்கும்’ பட்சத்தில், நித்திய ஜீவனுக்கான ஓட்டத்தை வெற்றிகரமாக ‘ஓடி’ முடிப்போம்.