வறுமையை ஒழிக்க—போராட்டம் வெல்லுமா?
நியூ யார்க் நகரத்தில் உள்ள ஐக்கிய நாட்டு சங்கத்தின் பொருளாதார மற்றும் சமூகப் பேரவையின் கூடத்தைப் பார்வையிட சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அந்தக் கூடத்தின் மேற்கூரையிலுள்ள குழாய்களும் மற்ற கேபில் லைன்களும் வேலை முடிக்கப்படாமல் அப்படியே அலங்கோலமாக காட்சியளிப்பதை காண்கின்றனர். சுற்றுலா பயணிகளின் வழிகாட்டி இவ்வாறு சொல்கிறார்: “ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக வேலை ஒருகாலும் முடிவடையாது என்பதையே ‘முடிக்கப்படாமல்’ அப்படியே கிடக்கும் மேற்கூரை ‘சிம்பாலிக்காக’ சொல்கிறது. உலக மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றுவிப்பதற்கு சாதிக்க வேண்டிய காரியங்கள் எப்பொழுதும் இருந்துகொண்டேதான் இருக்கும்.”
அனைவருடைய வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நல்ல நோக்கத்தோடு இந்தப் பேரவை ஸ்தாபிக்கப்பட்டிருந்தாலும், அது செய்துமுடிக்க வேண்டிய வேலைக்கு முடிவே இல்லாததுபோல் தோன்றுகிறது. முதல் நூற்றாண்டில் தம்முடைய ஊழியத்தின்போது இயேசு கிறிஸ்து சொன்னது அக்கறைக்குரியது: “கர்த்தருடைய ஆவியானவர் என் மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம் பண்ணினார்.” (லூக்கா 4:18) அவர் அறிவித்த ‘சுவிசேஷம்’ என்ன? இயேசு கிறிஸ்துவை ராஜாவாக கொண்டு ஆளப்படும் யெகோவா தேவனுடைய—அதாவது, ‘ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனுமாக’ விளங்கும் யெகோவா தேவனுடைய—ராஜ்யத்தின் சம்பந்தமான செய்தியே அது. அந்த ராஜ்யம் எதை சாதிக்கும்? ஏசாயா இவ்வாறு முன்னறிவித்தார்: “சேனைகளின் கர்த்தர் [“யெகோவா,” NW] . . . சகல ஜனங்களுக்கும் ஒரு விருந்தை ஆயத்தப்படுத்துவார்; அது கொழுமையான பதார்த்தங்களும், பழமையான திராட்சரசமும், ஊனும் நிணமுமுள்ள பதார்த்தங்களும், தெளிந்த பழமையான திராட்சரசமும் நிறைந்த விருந்தாயிருக்கும். அவர் மரணத்தை ஜெயமாக விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடை[ப்பார்].”—ஏசாயா 25:4-6, 8.
இனிமேல் எந்தப் பற்றாக்குறைக்கும் இடமளிக்காமல் எப்படி கடவுளுடைய ராஜ்யம் ‘உலக மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றுவிக்கும்’ என்பதைப் பற்றி கூடுதலாக அறிந்துகொள்ள விரும்புகிறீர்களா? இந்த விஷயங்களைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதை தகுதிவாய்ந்த ஒருவர் உங்களுக்கு சொல்லித் தருவதற்கு ஏற்பாடு செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பாருங்கள்.