வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
கமர்ஷியல் சாஃப்ட்வேர் புரோகிராம்களின் நகல்களை மற்றவர்களுக்கு தரும் பழக்கத்தை உண்மை கிறிஸ்தவர்கள் எவ்வாறு கருத வேண்டும்?
“இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்” என்ற இயேசுவின் வார்த்தைகளை சிலர் ஒருவேளை தவறாக எடுத்துக்கொண்டு, இப்படி செய்வதில் தவறில்லை என்று சொல்லலாம். இயேசு இங்கே காப்பிரைட் செய்யப்பட்ட பிரசுரங்களின் அல்லது கம்ப்யூட்டர் புரோகிராம்களின் (சாஃப்ட்வேர்) நகல்களை இலவசமாக கொடுப்பதைப் பற்றி பேசிக்கொண்டில்லை, இவற்றை பயன்படுத்துவது சட்ட விதிக்குட்பட்டது. கொடுப்பதை இங்கே ஊழியத்தின் ஓர் அம்சமாக இயேசு பேசிக்கொண்டிருந்தார். பல்வேறு பட்டணங்களுக்கும் கிராமங்களுக்கும் போய்க்கொண்டிருந்த அப்போஸ்தலர்களிடம், ராஜ்யத்தைப் பிரசங்கித்து, நோயாளிகளைக் குணப்படுத்தி, பேய்களைத் துரத்த வேண்டும் என்று இயேசு சொன்னார். அப்படி செய்யும்போது அப்போஸ்தலர்கள் இதற்கெல்லாம் பணம் வாங்காமல் ‘இலவசமாய்க் கொடுக்க’ வேண்டும்.—மத்தேயு 10:7, 8.
தனிப்பட்டவர்களும் பிஸினஸ் செய்பவர்களும் அதிகமாக கம்ப்யூட்டர்களை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டதால், அநேகருக்கு சாஃப்ட்வேர் தேவைப்படுகிறது. பொதுவாக இதை பணம்கொடுத்து வாங்க வேண்டும். புரோகிராம்கள் தயாரித்து, கட்டணமின்றி விநியோகித்து, இவற்றை நகல் எடுத்து மற்றவர்களுக்கும் தரலாம் என்று சிலர் சொல்வது உண்மைதான். ஆனால் பெரும்பாலான கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் பணத்துக்காக விற்கப்படுகிறது. வீட்டில் தனிப்பட்ட விதமாக பயன்படுத்திக்கொள்வதற்காக இருந்தாலும்சரி அல்லது பிஸினஸுக்காக இருந்தாலும்சரி, சாஃப்ட்வேர் பயன்படுத்துவோர் அதை பணம்கொடுத்து வாங்கும்படி எதிர்பார்க்கப்படுகிறார்கள். கட்டணமின்றி ஒருவர் சாஃப்ட்வேர் பேக்கேஜ் ஒன்றை எடுத்தாலும் அல்லது நகலெடுத்தாலும் அது சட்ட விரோதமானது. புத்தகங்களை போட்டோகாப்பி எடுத்து மொத்த விற்பனை செய்வதோ அல்லது இலவசமாக கொடுப்பதோகூட எப்படி தவறாக இருக்குமோ அப்படியேதான் இதுவும்.
பெரும்பாலான கம்ப்யூட்டர் புரோகிராம்களுக்கு (விளையாட்டுகள் உட்பட) லைசென்ஸ் தேவை. இதை பயன்படுத்தும் உரிமையாளர் குறிப்பிட்ட சில நிபந்தனைகளையும் கட்டுப்பாடுகளையும் கடைப்பிடிக்க வேண்டும். இப்படி கொடுக்கப்படும் லைசென்ஸ்கள் பல, ஒரே ஒருவர் மாத்திரமே இந்த புரோகிராமை இன்ஸ்டால் செய்து பயன்படுத்த முடியும் என்று குறிப்பிடுகின்றன. அதாவது வீட்டிலிருந்தாலும், வியாபாரம் நடத்துமிடத்தில் இருந்தாலும் பள்ளியிலிருந்தாலும் பொதுவாக அதை ஒரேவொரு கம்ப்யூட்டரில் மாத்திரமே இன்ஸ்டால் செய்ய வேண்டும். இதை பயன்படுத்துகிறவர் ஒரு பேக்-அப் காப்பியை தனக்கு வைத்துக்கொள்வதை சில லைசென்ஸ்கள் அனுமதித்தாலும் மற்றவர்களுக்கு அதிலிருந்து அவர் நகலெடுத்து கொடுக்கக்கூடாது. சொந்தக்காரர் முழு புரோகிராமையும் (லைசென்ஸ் மற்றும் டாக்குமென்டேஷன் உட்பட) யாருக்காவது கொடுத்துவிட விரும்பினால் அப்படி செய்யலாம். ஆனால் அப்படி செய்துவிட்டால் அதை பயன்படுத்துவதற்கு இனிமேலும் அவருக்கு உரிமை இல்லை. லைசென்ஸ்கள் வித்தியாசப்படுகின்றன. ஆகவே ஒருவர் ஒரு புரோகிராம் வாங்கும்போது அல்லது அது அவருக்குக் கொடுக்கப்படும்போது அந்த லைசென்ஸ் என்ன நிபந்தனைகளை விதிக்கிறது என்பதை தெளிவாக தெரிந்துகொள்ள வேண்டும்.
பல நாடுகள் கம்ப்யூட்டர் புரோகிராம்கள் உள்ளிட்ட “அறிவாற்றல் சொத்துக்களை” (“intellectual property”) பாதுகாக்கும் காப்பிரைட் ஒப்பந்தங்களைச் செய்து காப்பிரைட் சட்டங்களை அமல்படுத்த முயற்சி செய்கின்றன. உதாரணமாக, ஜனவரி 14, 2000 தேதியிட்ட தி நியூ யார்க் டைம்ஸ், “மிகப் பயங்கரமான சாஃப்ட்வேர் திருட்டு கும்பல் உறுப்பினர்களை ஜெர்மன் மற்றும் டச்சு நாட்டு போலீஸார் கைது செய்தார்கள்” என்று அறிவித்தது. இவர்கள் கம்ப்யூட்டர் புரோகிராம்களையும் விளையாட்டுகளையும் நகலெடுத்து விநியோகித்து வந்திருக்கிறார்கள், இவற்றில் சிலவற்றை இன்டர்நெட் மூலமாகக்கூட விற்பனை செய்திருக்கிறார்கள்.
இந்த விஷயத்தில் கிறிஸ்தவ சபையிலுள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும்? இயேசு சொன்னார்: “இராயனுடையதை இராயனுக்கும் தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள்.” (மாற்கு 12:17) அப்படியென்றால் கடவுளுடைய சட்டங்களுக்கு முரணாக இல்லாத தேசத்தினுடைய சட்டங்களுக்கு கிறிஸ்தவர்கள் கீழ்ப்படிந்தே ஆகவேண்டும். அரசாங்கங்களைக் குறித்து அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்; . . . அதிகாரத்திற்கு எதிர்த்து நிற்கிறவன் தேவனுடைய நியமத்திற்கு எதிர்த்து நிற்கிறான்; அப்படி எதிர்த்து நிற்கிறவர்கள் தங்களுக்குத் தாங்களே ஆக்கினையை வருவித்துக்கொள்ளுகிறார்கள்.”—ரோமர் 13:1, 2.
கிறிஸ்தவ சபையிலுள்ள மூப்பர்களுக்கு மற்றவர்களின் கம்ப்யூட்டர்களை பரிசோதனை செய்ய வேண்டிய பொறுப்பு கிடையாது. காப்பிரைட் சட்டங்களுக்கு விளக்கமளிக்கவோ அல்லது அமல்படுத்தவோ அவர்களுக்கு அதிகாரம் இல்லை. ஆனால் தங்களுக்கு உரிமை இல்லாத ஒன்றை எடுக்கக்கூடாது, சட்டத்துக்கு கீழ்ப்படிந்து வாழ வேண்டும் என்பதை அவர்கள் நம்புகிறார்கள், அதையே அவர்கள் போதிக்கவும் செய்கிறார்கள். இவ்வாறு செய்வதால் சட்டத்தை மீறும் ஆட்களுக்கு வரும் தண்டனையிலிருந்து கிறிஸ்தவர்கள் பாதுகாக்கப்படுவதோடு கடவுளுக்கு முன்பாக நல்மனச்சாட்சியைக் காத்துக்கொள்ள அவர்களுக்கு இது உதவி செய்கிறது. பவுல் இவ்வாறு எழுதினார்: “ஆகையால் நீங்கள் கோபாக்கினையினிமித்தம் மாத்திரமல்ல, மனச்சாட்சியினிமித்தமும் கீழ்ப்படிய வேண்டும்.” (ரோமர் 13:5) அதேவிதமாகவே, உண்மை கிறிஸ்தவர்களின் ஆசையை பவுல் இவ்வாறு வெளிப்படுத்துகிறார்: “நாங்கள் நல்மனச்சாட்சியுள்ளவர்களாய் எல்லாவற்றிலும் யோக்கியமாய் நடக்க விரும்புகிறோமென்று நிச்சயித்திருக்கிறோம்.”—எபிரெயர் 13:18.
[பக்கம் 29-ன் பெட்டி]
சில பிஸினஸ் நிறுவனங்களும் பள்ளிகளும் பல பேர் பயன்படுத்துவதை அனுமதிக்கும் லைசென்ஸ் கொண்ட புரோகிராம்களை வாங்குகின்றன, அதிகபட்சமாக எத்தனை பேர் இந்த புரோகிராமை பயன்படுத்தலாம் என்பது இதில் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும். 1995-ல் யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளில் கலந்தாலோசிக்கப்பட்ட ஒரு கட்டுரையில் இந்த ஆலோசனையும் கொடுக்கப்பட்டிருந்தது:
“கம்ப்யூட்டர் புரோகிராம்களை தயாரித்து விற்கும் பெரும்பாலான கம்பெனிகள் இவற்றின் காப்பிரைட்டை பெற்றுக்கொண்டு, சட்டப்படி இந்தப் புரோகிராம்கள் எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பதைக் குறிப்பிடும் லைசென்ஸை கொடுக்கின்றன. சொந்தக்காரர் புரோகிராமின் நகல்களை மற்றவர்களுக்கு தரமுடியாது என்று லைசென்ஸ் குறிப்பிடுகிறது. உண்மையைச் சொன்னால், அப்படி செய்வது சட்ட விரோதமானது என்று சர்வதேச காப்பிரைட் சட்டம் கூறுகிறது. . . . பெரிய நிறுவனங்கள் சில ஏற்கெனவே இன்ஸ்டால் செய்யப்பட்ட லைசென்ஸ் உள்ள புரோகிராம்கள் கொண்ட கம்ப்யூட்டர்களை விற்கின்றன. ஆனால், சில கம்ப்யூட்டர் ஸ்டோர்கள், லைசென்ஸ்களைக் கொடுப்பதில்லை, ஏனென்றால் அவை இன்ஸ்டால் செய்திருக்கும் புரோகிராம்கள் சட்ட விரோதமான நகல்களாக இருக்கும். அப்படியென்றால் வாங்குபவர் இந்தப் புரோகிராம்களை பயன்படுத்துவதன் மூலம் சட்டத்தை மீறுகிறார். இதுபோன்றே காப்பிரைட் செய்யப்பட்டுள்ள (சங்கத்தின் பிரசுரங்கள் போன்றவை) தகவலை, சட்டப்படி சொந்தக்காரரிடமிருந்து அனுமதி பெறாமல் எடுக்கப்படும் அதன் நகல்களை எலக்ட்ரானிக் புல்லட்டின் போர்டுகளிலிருந்து டவுன்லோர்டு செய்வதையோ அவற்றில் போடுவதையே கிறிஸ்தவர்கள் தவிர்க்க வேண்டும்.”