சமாதானத்தைத் தேடி
“மதக் கலவரம் என்ற இராட்சத விலங்கு கூண்டைவிட்டு வெளியே வந்துள்ளது.” 1969-ல் வட அயர்லாந்தில் கலவரங்கள் தலைவிரித்தாட ஆரம்பித்தபோது இந்த அறிக்கை வெளியானது.
அரசியலாலும், மதத்தாலும் பிரிந்திருந்த புராட்டஸ்டன்ட்டினரும், கத்தோலிக்கரும் அயர்லாந்தில் ஆதிக்கம் செலுத்த முனைந்த போது, “இந்த இரு மத தீவிரவாதிகள்” செய்த அட்டூழியங்கள் எல்லை மீறின. நித்தம் மதக் கலவரம். வாழையென வெட்டி சாய்க்கப்பட்ட மனித உடல்கள். இவ்வாறு “கடந்த 30 வருடமாக நடக்கிற வன்முறை சம்பவங்களால் ஆயிரக்கணக்கானோரின் உடலும் பொருளும் சின்னாபின்னமாகி உள்ளன. சுமார் 3,600 பேர் கொல்லப்பட்டனர்” என்று தி ஐரிஷ் டைம்ஸ் பத்திரிகை அறிக்கை செய்கிறது.
அயர்லாந்தில் இது போன்ற கலவரம் தலைதூக்குவது நேற்று இன்று அல்ல. பல நூற்றாண்டுகளாகவே தாண்டவமாடுகிறது. அயர்லாந்து மக்களின் வாழ்க்கை சிதைந்துள்ளதால் அவர்கள் வெறுப்படைந்து கொதித்துப்போய் இருக்கிறார்கள். இப்போதும் வட அயர்லாந்துதான் கொடூரமாக பாதிக்கப்பட்டிருக்கிறது.
இத்தேசத்தில் கலவரங்களும் கொந்தளிப்புகளும் ஒருபுறம் தொடர்ந்து கொண்டிருந்தாலும், இவற்றிற்கு சரியான தீர்வு என்ன என்பதை நூறு வருஷங்களுக்கு மேல் யெகோவாவின் சாட்சிகள் அறிவித்து வருகிறார்கள். இயேசு கிறிஸ்துவால் ஆளப்படும் கடவுளுடைய ராஜ்யமே அந்தத் தீர்வு. (மத்தேயு 6:9, 10) கலவரங்கள் நிறைந்த அயர்லாந்தில் 1969-ல் 876 யெகோவாவின் சாட்சிகளே இருந்தனர். இப்போது 100-க்கும் மேலான சபைகளில் 4,500-க்கும் அதிகமானோர் உள்ளனர்! அரசியலிலிருந்தும் விடுதலை படையிலிருந்தும் (paramilitary) தங்களை விலக்கிக்கொண்ட ஒருசில சாட்சிகளின் அனுபவங்களை இக்கட்டுரையில் காணலாம்.
“நான் பெரியவனாயிட்டா IRA-ல் சேருவேன்!”
மைக்கேல்.a இவர் அயர்லாந்து குடியரசில் கத்தோலிக்க குடும்பத்தில் வளர்ந்தவர். பள்ளியில் அவருக்கு வரலாற்றுப் பாடத்தில் அயர்லாந்தைப் பற்றியும், அதற்கும் பிரிட்டனுக்கும் பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து வரும் சச்சரவைப் பற்றியும் கற்பிக்கப்பட்டது. சிறுவயதிலிருந்தே ஆங்கிலேயர்மீது வெறுப்பை வளர்த்துக் கொண்டார். அவர்களைக் கண்டாலே “அயர்லாந்து ஜனங்களை ஒடுக்குபவர்கள்” என்று நினைத்தார். அவருக்கு பத்து வயதிருக்கும். அவருடைய பாட்டியிடம் போய் இவ்வாறு சொன்னார்: “பாட்டி! நான் பெரியவனாயிட்டா IRA-ல் சேருவேன்!” (The Irish Republican Army [அயர்லாந்து குடியரசு படை]) அப்படி சொன்னதும் பாட்டி “பளார்! என்று கன்னத்தில் ஓங்கி அடித்தார்.” அது “இன்றும் ஞாபகமிருக்கிறது” என்று அவர் கூறினார். முதல் உலகப் போரின் போது அவருடைய தாத்தா பிரிட்டிஷ் ராணுவத்தில் பணிபுரிந்த விஷயத்தையும், ஒருமுறை IRA சேர்ந்தவர்கள் தாத்தாவை சுட்டுக் கொல்ல வந்த போது பாட்டி முன்னே வந்து தடுத்த சம்பவத்தையும் பிறகு தெரிந்துகொண்டார்.
ஆனாலும் மைக்கேல் வளர்ந்தபின் வட அயர்லாந்தில் உள்ள தன் உடன் கத்தோலிக்கர்களுக்கு ஏதாவது உதவி செய்ய விரும்பினார். “வட அயர்லாந்து கத்தோலிக்க ஜனங்களுக்கு உதவி செய்கிறவர்கள் IRA அங்கத்தினர்களே என்று எனக்கு அந்த சமயத்தில் தோன்றியது” என்கிறார் மைக்கேல். IRA நியாயத்திற்காக போராடுவதாக நினைத்து இவரும் படையில் சேர்ந்தார். இவருக்கு ஆயுத பயிற்சியும் அளிக்கப்பட்டது. ஆனால், இவருடைய மூன்று நண்பர்களை வட அயர்லாந்திலுள்ள புராட்டஸ்டன்ட் விடுதலை படையினர் சுட்டுக் கொன்றனர்.
அயர்லாந்தில் பல்வேறு விடுதலை படைகளுக்குள் இருந்த பயங்கர போட்டி, பொறாமை, பகைமை கண்டு மைக்கேல் குழப்பமும் ஏமாற்றமும் அடைந்தார். IRA நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றங்களுக்காக மைக்கேல் சிறை சென்றார். அப்போது நிலையான சமாதானத்தையும் நீதியையும் அடையும் வழியை தனக்குக் காண்பிக்கும்படி கடவுளிடம் வேண்டினார். சிறையிலிருந்து வந்து, சிலநாட்களுக்குப் பிறகு யெகோவாவின் சாட்சிகள் இவரை வீட்டில் சந்தித்தனர். வந்த சாட்சிகளோ ஆங்கிலேயர்கள். உடனே பழைய பகைமை சுவரென இடையே நின்றது. அவர்கள் சொல்வதை கேட்க விரும்பவில்லை. இதோ அவரே சொல்கிறார். “அவங்க வரப்போயெல்லாம் கொஞ்சம்கூட முகம் கொடுத்து பேச மாட்டேன். ஆனாலும் அவங்க சலிக்காம வந்து என்கிட்ட பேசினாங்க. எந்த அரசியல, நாட்டுல இருந்த அக்கிரம, அநியாயங்கள நீக்கணும்னு நா போராடிக்கிட்டிருந்தேனோ, அவற்றை கடவுளுடைய ராஜ்யம் அடியோடு அகற்றப்போறத தெரிஞ்சுக்கிட்டேன்.”—சங்கீதம் 37:10, 11; 72:12-14.
ஒரு நாள் மாலை, மைக்கேல் தன் IRA கமாண்டரை சந்தித்தபோது இக்கட்டான சூழ்நிலை உருவானது. “மைக்கேல்! உனக்கு ஒரு வேலை வெச்சிருக்கேன். அத நீ தான் முடிக்கணும்” என்று கமாண்டர் சொன்னார். அப்போது, “படையில் இருக்கணுமா, கடவுள் பக்கம் இருக்கணுமானு உடனே முடிவு செய்யற கட்டாயம் எனக்கு ஏற்பட்டது” என்கிறார் மைக்கேல். “நான் இன்னும் முழுக்காட்டப்படவில்லை. யெகோவாவுக்கு ஊழியனா ஆகணும்னு விரும்பினேன். இதை என் கமாண்டரிடம் எப்படி சொல்லறது! ஊ. . .ம் எப்படியும் பதில் சொல்லியாகணும். கமாண்டரிடம்: ‘சார், இப்போ நான் ஒரு யெகோவாவின் சாட்சி’ என்றேன்.” அதுக்கு, “உன்ன சுவரோடு வெச்சு சுடணும்” என்று கமாண்டர் கத்தினார். இவருடைய மிரட்டலுக்கு அஞ்சாமல் மைக்கேல் IRA-லிருந்து விலகினார். யெகோவாவின் வார்த்தைகள் அவருடைய மனதிலும் இருதயத்திலும் நிறைந்திருந்ததால் இதைச் செய்வதற்கான தைரியம் கிடைத்தது. “பிறகு என் மனைவியும் என்னோட சில பிள்ளைகளும் யெகோவாவுக்கு தங்கள அர்ப்பணிச்சாங்க. இப்பதான் எங்க மனசுல உண்மையான சமாதானம் இருக்குது. சத்தியத்த கத்துக்கிட்ட நாங்க, சண்டையும் சச்சரவும் நெறஞ்ச எங்க நாட்டுல சமாதான செய்திய அறிவிக்கிறோம். இதுக்காக யெகோவாவுக்கு நாங்க எப்பவும் நன்றி கடன்பட்டிருக்கோம்.”—சங்கீதம் 34:14; 119:165.
நடுநிலைமையே நல்ல பாதுகாப்பு
பேட்ரிக். “நான் வட அயர்லாந்தின் கன்டி டெறியில் ஒரு கிராமத்தில் வளர்ந்தேன். சிறுவயதில் எப்போதும் பிரச்சினைகளை மாத்திரம் கேட்டும் பார்த்தும் பாதிக்கப்பட்டதால், வாழ்கையே இதுதானோ என்ற எண்ணம் வந்தது.” தீவிர தேசப்பற்றும், பிரிட்டீஷுக்கு எதிரான தப்பெண்ணங்களும் பேட்ரிக்கை மாற்றியது. தீவிர தேசியவாதிகளின் கொள்கைகளை ஆதரிக்க ஆரம்பித்தார். அரசியல் சண்டையில் ஈடுபட்ட அயர்லாந்து கத்தோலிக்கர்களும்சரி, இங்கிலாந்து புராட்டஸ்டன்டினரும்சரி முக்கிய கிறிஸ்தவ நியமங்களை ஓரங்கட்டி, கொஞ்சம்கூட மனித நாகரிகமேயின்றி நடந்துகொண்டதை அவர் கண்டார். அதன் விளைவாக அவர் மதத்தைவிட்டு விலகி ஒரு நாத்திகராகவும் தீவிர மார்க்கிஸ்டாகவும் (பொதுவுடைமை வாதி) மாறினார்.—ஒப்பிடுக: மத்தேயு 15:7-9; 23:27, 28.
பேட்ரிக் சொல்கிறார்: “நான் சிறுவனாக இருந்தபோது வட அயர்லாந்து குடியரசில் சிறைக் கைதிகள் உண்ணாவிரதம் இருந்தது எனக்கு இப்போதும் நினைவிருக்கிறது. அது என்னை அதிகமாக பாதித்தது. என்னால் முடிந்த வரை எல்லா இடங்களிலும் அயர்லாந்து கொடியை நாட்டி, ஆங்கிலேயருக்கு எதிராக தாறுமாறாக எழுதினேன். உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட ஒரு கைதி இறந்துபோனார். அவருடைய ஈமச்சடங்கை என்னுடைய 15-ம் வயதிலேயே முன்நின்று நடத்தினேன்.” எங்குப் பார்த்தாலும் கலவரமும் குழப்பமும் நிறைந்திருந்ததால், மக்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தனர். இன்னொரு புறம், சமுதாயத்தில் நீதி வேண்டும், சமத்துவம் வேண்டும் என்ற கோஷங்களோடு ஊர்வலங்களும் கலவரங்களும் நடைபெற்றன. அவற்றில் பேட்ரிக்கும் ஈடுபட்டார். அப்போது அவருக்கு பல தீவிர தேசியவாதிகளின் நெருங்கிய நட்பு கிடைத்தது. இந்த தேசியவாதிகள் பலரை பிரிட்டிஷ் அதிகாரிகள் சிறையில் அடைத்தனர்.
பேட்ரிக் சொல்கிறார்: “அதற்குப்பின் பணப்பிரச்சினையின் காரணமாக சில காலம் நான் இங்கிலாந்தில் தங்கினேன். அங்கு இருக்கையில், என்னுடைய நண்பன் குண்டுவீச்சு செயலில் ஈடுபடவிருந்ததால், அவனை பிரிட்டீஷ் போலீஸ் கைது செய்தது.” பேட்ரிக் தேசிய நலனில் ஆர்வமிக்கவராய் இருந்தபோதிலும் அவருடைய மனம் மாறியது. ஆங்கிலேயருக்கு எதிரான பகைமைக்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதை அவர் காண ஆரம்பித்தார். “விடுதலை படையால் பிரச்சனைகளை தீர்க்க முடியாது என்பதையும், எந்த அநீதிகளை கண்டு என் மனம் கொதித்தெழுந்ததோ அவற்றை நீக்க முடியாது என்பதையும் புரிந்துகொண்டேன். அதோடு, விடுதலை படை அதிகாரிகளுக்கு இடையிலும் ஊழலும் மற்ற குறைபாடுகளும் மலிந்து கிடந்தன” என்கிறார் பேட்ரிக்.—பிரசங்கி 4:1; எரேமியா 10:23.
பிறகு பேட்ரிக் வட அயர்லாந்துக்கு திரும்பினார். “நான் திரும்பி வந்தபோது நண்பர் ஒருவர் யெகோவாவின் சாட்சிகளிடம் என்னை அறிமுகப்படுத்தினார்.” மனிதர்களிடையே உள்ள பூசல்களுக்கு உண்மையான தீர்வு என்ன என்பதை சாட்சிகளுடன் பைபிள் படித்து பேட்ரிக் அறிந்துகொண்டார். அவரது மனதிலும், இருதயத்திலும் பைபிள் நியமங்கள் புகுந்துகொண்டதால், அதி வேகமாக ஆன்மீக விஷயங்களில் முன்னேற்றம் செய்தார். (எபேசியர் 4:20-24) அவர் சொல்கிறார், “அரசியல் அமைப்பை கவிழ்க்கிற சதி திட்டத்தை கைவிட்டுவிட்டேன். இப்போது, பைபிளிலிருந்து சமாதானத்தின் செய்தியை மக்களுக்கு பிரசங்கிக்கிறேன். விடுதலை படையிலுள்ள கத்தோலிக்கர்களுக்கும், புராட்டஸ்டன்ட்டுகளுக்கும் இச்செய்தியை சொல்கிறேன். ஒருவேளை நான் விடுதலை படையில் இருந்திருந்தால் இவ்விடங்களுக்கு என்னால் வந்திருக்கவே முடியாது. சொல்லப்போனால் பெல்ஃபாஸ்டில் இன/மத கலவரத்தால் கொலைகள் நடக்கையில் விடுதலை படையைச் சேர்ந்த புராட்டஸ்டான்டினர் மற்றும் கத்தோலிக்கர்கள் வசிக்கும் பகுதிகளில் மக்கள் எல்லாரும் குண்டு துளைக்காத கார்களில் சென்ற போது, யெகோவாவின் சாட்சிகள் மட்டும் இத்தகைய பாதுகாப்பு ஏதுமின்றி சென்றார்கள்.” ஆரம்பகால கிறிஸ்தவர்களை போலவே, வட அயர்லாந்திலுள்ள சாட்சிகளும் அரசியல் விஷயத்தில் நடுநிலைமை வகித்தனர். பேட்ரிக்கும் நடுநிலைமை வகித்ததால், அதுவே நல்ல பாதுகாப்பாக அமைந்தது. (யோவான் 17:16; 18:36) இவர் இவ்வாறு கூறி முடிக்கிறார்: “இயேசு கிறிஸ்து மூலமாய் யெகோவா, மனித குலத்தை கொடுங்கோன்மையிலிருந்து விடுதலை செய்து, சரியான நீதியை வழங்குவார் என்பதை நினைக்கும்போது உண்மையில் சுதந்திரம் கிடைத்துவிட்ட உணர்வு ஏற்படுகிறது.”—ஏசாயா 32:1, 16-18.
“என் பாதுகாப்பு துப்பாக்கியே”
வில்லியம். “அரசியலாலும் மதத்தாலும் பிளவுற்றிருந்த [அயர்லாந்தில்] அல்ல, [இங்கிலாந்தில்] வளர்ந்தேன். புராட்டஸ்டன்டினர் கத்தோலிக்கர்களிடம் கொண்டிருந்த பகைமையை நானும் ஆதரித்தேன். கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த எதையும் அறவே வெறுத்தேன். கூடுமானவரை கத்தோலிக்க கடைக்குக்கூட போகமாட்டேன். அயர்லாந்து குடியரசுக்கு ஒருமுறை தான் சென்றிருக்கிறேன். நான் புராட்டஸ்டன்டினரின் பல்வேறு இயக்கங்களிலும், அமைப்புகளிலும் ஈடுபட்டேன். உதாரணத்திற்கு, ஆரஞ்ச் ஆர்டர் என்பது, புராட்டஸ்டன்ட் மதத்தையும், வாழ்க்கை முறையையும் காப்பதற்காக அமைக்கப்பட்ட ஸ்தாபனம். இதில் அங்கத்தினனாக இருந்தேன்.” அல்ஸ்டர் பாதுகாப்பு படை என்பது பிரிட்டிஷ் இராணுவம் உள்ளூரில் அமைத்த ஒரு துணை படையாகும். வில்லியம் தனது 22-ம் வயதில் இந்த படையில் சேர்ந்தார். இப்படையில் கிட்டத்தட்ட அனைவருமே புராட்டஸ்டன்டினர். தன் மதத்தை, கலாச்சாரத்தைக் கட்டிக்காக்க கொலை செய்யக்கூட தயாராக இருந்தார். “என்னிடம் நிறைய துப்பாக்கிகள் இருந்தன. சந்தர்ப்பம் மட்டும் கிடைத்திருந்தால் கண்டிப்பாக அவற்றை உபயோகித்திருப்பேன். இரவில் தூங்கும் போதுகூட தலையணைக்குக் கீழ் என் துப்பாக்கி தூங்கும்.”
ஆனால் வாழ்க்கையில் ஒரு திருப்புக்கட்டம் ஏற்பட்டது. “ஒரு வீட்டை புதுப்பிக்கும் வேலையை செய்து கொண்டிருந்தேன். என்னுடன் ஒரு யெகோவாவின் சாட்சியும் வேலை செய்து கொண்டிருந்தார். அவரிடம் பழகியதால் யெகோவாவின் சாட்சிகளிடம் ஏதோ விசேஷம் இருப்பது தெரிந்தது. என் வாழ்க்கையே மாறியது. நாங்கள் ஒன்றாக வேலை செய்கையில், என் மனதை உறுத்திக் கொண்டிருந்த கேள்விகளை அவரிடம் கேட்டேன். உதாரணமாக, இன்னல்களுக்கான காரணத்தையும், மதத்தைப் பற்றியும், கடவுளைப் பற்றியும் கேட்டேன். அவர் அதற்கு எளிய, தெளிவான விடைகளை அளித்தார். அவர் அளித்த விடைகளிலிருந்து யெகோவாவின் சாட்சிகள் ஒற்றுமையான, வன்முறையில் ஈடுபடாத, அரசியல் விவகாரங்களில் நடுநிலை வகிக்கிற, எல்லாவற்றிற்கும் மேலாக கடவுளிடமும் சக மனிதர்களிடமும் அன்பு காட்டுகிற மக்கள் என்பதை புரிந்து கொண்டேன்.”—யோவான் 13:34, 35.
வில்லியம் சாட்சிகளோடு பைபிள் படிக்க ஆரம்பித்த நான்கே மாதங்களில், அவர் தொடர்பு வைத்திருந்த மத ஸ்தாபனங்களிலிருந்தும் அரசியலிலிருந்தும் விலகிக்கொண்டார். இதோ அவரே கூறுகிறார்: “இவ்வாறு நான் விலகியது என் வாழ்க்கையில் செய்த மிகப் பெரிய மாற்றம். ஏனென்றால் காலங்காலமாக பேணிக்காத்து வந்த எண்ணங்களையும் பழக்கவழக்கங்களையும் நான் விட்டுவிட வேண்டியிருந்தது.” இதைவிட பெரிய சோதனை அவருக்கு வந்தது. “வட அயர்லாந்தின் பதட்டநிலை காரணமாக என் பாதுகாப்பு துப்பாக்கியே என்று நினைத்தேன். IRA படையினர் ‘முக்கியமாக குறி’ வைத்தவர்களில் நானும் ஒருவன். ஆகவே என்னுடைய துப்பாக்கிகளை துறந்துவிட மனசே வரவில்லை.” ஆயுதங்களை துறப்பது பற்றி ஏசாயா 2:2-4-லும் மற்ற வசனங்களிலும் உள்ள பைபிள் ஆலோசனைகள் படிப்படியாக அவருடைய மனநிலையை மாற்றியது. முடிவாக, முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கு யெகோவா உண்மையான பாதுகாப்பாக இருந்ததைப் போல் தனக்கும் யெகோவா பாதுகாப்பாக இருந்ததைக் கண்டார். அதற்குப்பின் வில்லியம் தனது துப்பாக்கிகளை தயங்காமல் தூக்கியெறிந்தார்.
வில்லியம் சொல்கிறார்: “ஒரு காலத்தில் நான் யாரை பரம விரோதியாக நினைத்தேனோ அவர்கள் இப்பொழுது என் உயிர் நண்பர்கள். இதைவிட எனக்கு வேறு என்ன வேண்டும்! மேலும் நான் ஒரு சாட்சியாக மாறுவதற்கு முன்பு, போக முடியாத இடங்களுக்குக்கூட இப்போது தைரியமாகச் சென்று பைபிள் சத்தியத்தை சொல்ல முடிகிறது! இதை நினைத்தால் எனக்கு ஆனந்த கண்ணீர் வருகிறது. எனக்கும் என் குடும்பத்திற்கும் பைபிள் சத்தியத்தால் கிடைத்த நன்மைகள் ஏராளம். யெகோவாவுக்கும் அவருடைய அமைப்புக்கும் கோடி கோடி நன்றி.”
“எனக்கு ஒண்ணுமே புரியவில்லை”
ராபர்ட்டும் தெரஸாவும் இரு வெவ்வேறு துருவங்களிலிருந்து வந்தவர்கள். ராபர்ட் சொல்கிறார்: “நான் தீவிர புராட்டஸ்டன்ட் குடும்பத்தில் பிறந்தவன். என் உறவினர்களில் சிலர் விடுதலை படையில் இருந்தார்கள். நானோ 19 வயதில் அல்ஸ்டர் பாதுகாப்பு படையில் சேர்ந்தேன். அப்போது எனக்கு பெரும்பாலும் தெரஸா வாழ்ந்த பகுதியில்தான் ரோந்து சுற்றும் பணி. ஒரு நாள் இரவு ரோந்து சுற்றும் பணிக்கு பதிலாக வேறு வேலை கொடுத்தார்கள். அன்று நான் வரவேண்டிய லாண்ட் ரோவர் என்ற வண்டியை [எதிரிகள்] குண்டு வைத்து தகர்த்தார்கள். அதில் இரண்டு படைவீரர்கள் கொல்லப்பட்டார்கள்; இரண்டு பேர் படுகாயமடைந்தார்கள்.”
அப்போதுதான் ராபர்ட் வாழ்க்கையைப் பற்றி யோசிக்கவே ஆரம்பித்தார். “எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. ஆனால் உண்மையில் கடவுள் இருந்தால் ஏன் வட அயர்லாந்தில் இப்படி கலவரங்கள் நடக்கிறது? எனக்கு ஒண்ணுமே புரியவில்லை. நான் கடவுளிடம் ஜெபம் செய்தேன். கடவுள் என்று ஒருவர் இருந்தால் எனக்கு வாழ வேண்டிய வழியை காட்டும்படி கேட்டேன். உண்மை மதம் ஒன்று கண்டிப்பாக இருக்க வேண்டும். அதை காட்டும்படி வேண்டினேன்.” சில நாட்களுக்குப்பின் ஒரு யெகோவாவின் சாட்சி ராபர்டை வீட்டில் சந்தித்து, சில புத்தகங்களைக் கொடுத்தார். ராபர்ட் அன்று இரவு ரோந்து வேலை முடித்து, வீட்டிற்கு தாமதமாக வந்தார். அதை எடுத்து படிக்க ஆரம்பித்தவர் முடிக்கும் வரை கீழே வைக்கவில்லை. விடிய விடிய ஐந்து மணி வரை படித்தார். “புத்தகத்தை படிக்க துவங்கியதும் சத்தியம் எது என்பது உடனே பிடிபட்டது. அதில் எல்லாவற்றிற்கும் பைபிளிலிருந்து நேரடியாக விளக்கம் கொடுக்கப்பட்டிருந்தது” என்கிறார் ராபர்ட். (2 தீமோத்தேயு 3:16) சாட்சியோடு சேர்ந்து பைபிள் படிக்க ஆரம்பித்தார். உடனே தன்னை கடவுளுக்கு ஒப்புக்கொடுத்தார்.
“கேள்விகளுக்கு பதில்களை எப்போதும் பைபிளிலிருந்து சொன்னார்கள்”
ராபர்ட் புராட்டஸ்டன்ட் தீவிரவாதி. ஆனால் தெரஸாவோ கத்தோலிக்க தீவிரவாதி. விடுதலை படை கொள்கைகளில் ஆழ்ந்த பற்றுடையவர். தெரஸாவே சொல்கிறார்: “இளம் வயதிலே நான் ஷின் ஃபேன் b என்ற அமைப்பில் சேர்ந்தேன். அதனால் விடுதலை படைக்கு எல்லா விதத்திலும் ஆதரவளித்தேன். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விடுதலை படைக்கு நிதி திரட்டினேன். நான் இருந்த பகுதியில் உளவுபார்த்து IRA-க்கு அறிவித்தேன். மற்றவர்களோடு சேர்ந்து நானும் கலவரத்தில் ஈடுபட்டு, ரோந்து வந்த போலீஸார் மீதும் ராணுவத்தினர் மீதும் கற்களை எறிந்தேன்.”
தெரஸாவின் குடும்பத்தில் சிலர் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிள் படிக்க ஆரம்பித்தபோது அவருக்கும் பைபிள் படிக்க ஆர்வம் ஏற்பட்டது. கடவுளுடைய வார்த்தையின் சக்தி அவரை அதிகமாக மாற்றியது. அவர் சொல்கிறார்; “எங்கள் கேள்விகளுக்கு பதில்களை எப்போதும் பைபிளிலிருந்து சொன்னார்கள். தானியேல் 2:44-ல் கொடுக்கப்பட்டுள்ள எதிர்கால வாக்குறுதி உண்மையிலேயே என் கண்களை திறந்தது. எந்த அநீதிகளை ஒழிக்க நான் போராடிக்கொண்டிருந்தேனோ அவற்றை கடவுளுடைய ராஜ்யம் மாத்திரம் அகற்றும் என்பதை நான் அறிந்தேன்.” விடுதலை படையினர் தொடர்ந்து செய்த சில அட்டூழியங்களை கண்டு வெறுத்துப்போன அவர் அதிலிருந்து விலகினார். உதாரணத்திற்கு, தீவிரவாதிகள் இராணுவ வீரர்களையோ மக்களையோ கொலை செய்து அல்லது அடித்து நொறுக்கி, குடும்பங்களை பாழாக்கி, அதனால் மக்கள் துயரத்தில் தவிக்கிற செய்தியை கேட்டு விடுதலை படையினர் மகிழ்ச்சியில் துள்ளினார்கள். இவர்களது இரக்கமற்ற செயலை கண்டு தெரஸா அதிர்ச்சியடைந்தார். ‘இப்படி செய்ய யாருக்குத்தான் மனம் வரும்? இது எவ்வளவு அநாகரிகம்!’ என்று நினைத்தாள். ஆகவே, அவளும் பைபிள் சத்தியத்தை ஏற்றுக்கொண்டு, கடவுளுடைய நியமங்களுக்கு ஏற்றபடி தன்னுடைய எண்ணங்களை மாற்றிக்கொண்டாள். அவள் யெகோவாவுக்கு தன்னை ஒப்புக்கொடுத்து, சீக்கிரத்திலே முழுக்காட்டுதல் பெற்றாள்.—நீதிமொழிகள் 2:1-5, 10-14.
வட அயர்லாந்தில், யெகோவாவின் சாட்சிகளுடைய சபைக் கூட்டத்திற்கு ராபர்ட்டும் தெரஸாவும் சென்றிருந்தார்கள். அங்குதான் இருவரும் ஒருவரைஒருவர் சந்தித்தனர். தெரஸா உதிர்த்தவை: “பிரிட்டீஷ் அரசுக்கும் ராணுவத்திற்கும் கைப்பாவையாக இருந்த ராபர்ட்டை, ஒருகாலத்தில் என் பரம விரோதியாக நினைத்தவரை முதன்முதலில் சந்தித்து, அவரோடு அமைதியா, நிதானமா பேசியதை என்னாலே நம்ப முடியவில்லை. மனதில் ஆழமாக வேர்கொண்டிருந்த பகையையும் தப்பெண்ணங்களையும் நீக்க கடவுளுடைய வார்த்தையே எனக்கு உதவியது என்றால் அது மிகையல்ல.” வித்தியாசப்பட்ட பாரம்பரியங்களிலிருந்து, கலாச்சாரங்களிலிருந்து உருவான பகைமையாலும் தப்பெண்ணங்களாலும் பிளவுப்பட்டிருந்த தெரஸாவும் ராபர்ட்டும் சத்தியத்தால் ஒன்றுபட்டார்கள். அநேக விஷயங்களில் ஒத்துப்போகிறார்கள். குறிப்பாக, யெகோவாவின் மீதுள்ள அன்பே சக்திபடைத்தது என்பதை இருவரும் மனதார அறிந்துள்ளனர். இருவரும் திருமணம் செய்து கொண்டனர். எந்நாளும் கலவரமும் கொந்தளிப்பும் மிகுந்த தேசத்தில் பல்வேறு பின்னணிகளையுடைய மக்களுக்கு கடவுள் அளிக்கும் உண்மையான சமாதானத்தைத் தேட இருவரும் ஒன்று சேர்ந்து உதவுகிறார்கள்.
அயர்லாந்திலுள்ள மற்றவர்களுக்கும் இதுபோன்ற அனுபவங்கள் உள்ளன. இவர்கள் கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளின் போதனைகளை கேட்டு, ஏற்றுக்கொண்டதால், மனுஷருடைய ‘தத்துவசாஸ்திரத்தாலும், மாயமான வஞ்சகத்தாலும்’ பாதிக்கப்படாமல் இருக்கிறார்கள். (கொலோசெயர் 2:8, திருத்திய மொழிபெயர்ப்பு) பைபிளில் பதிவு செய்யப்பட்டுள்ள கடவுளுடைய வாக்குறுதிகளை முழுமையாக நம்புகிறார்கள். அமைதி நிலவும் எதிர்காலத்தைப் பற்றிய செய்தியை கேட்க யாரெல்லாம் விரும்புகிறார்களோ அவர்களுக்கு மகிழ்ச்சியோடு சொல்கிறார்கள். இனி இவர்களது அகராதியில் மத/இன வேறுபாடு என்ற வார்த்தைக்கே இடமில்லை! வன்முறை பக்கம் தலைவைத்துக்கூட படுப்பதில்லை!—ஏசாயா 11:6-9.
[அடிக்குறிப்புகள்]
a பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
b இது புரொவிஷனல் IRA உடன் நெருங்கிய தொடர்புடைய அரசியல் கட்சி.
[பக்கம் 10-ன் படங்கள்]
வட அயர்லாந்து சுவரெங்கும் விடுதலை படையின் போராட்டத்தை போற்றி புகழும் சுலோகங்கள்