கிறிஸ்மஸுக்கும்—ஆசியாவுக்கும் என்ன தொடர்பு?
கிறிஸ்மஸ் தாத்தா ஆசிய நாடுகளின் பழங்கால நம்பிக்கையின் மலரும் நினைவாக திகழ்கிறார். எப்படி? கொரிய மக்கள் நம்பிய ஷொவாங்ஷினுக்கு ஒப்பாக இருக்கிறார். சீனர்கள், ஜப்பானியர்கள் மத்தியிலும்கூட இதுபோன்ற நம்பிக்கை உண்டு.
ஷொவாங்ஷின் பண்டைய கொரிய மக்களின் அக்கினி தெய்வம். அந்த தெய்வத்தை சமையலறைக்கு பொறுப்பாளராக கருதினர். (அந்தக் காலத்தில் அடுப்புக்கரியின் தணல் அணைந்து விடாமல் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு கொரிய மக்கள் எடுத்துச் சென்றனர்.) இந்தக் கடவுள் குடும்ப அங்கத்தினர்களின் நடத்தையை ஒரு வருடத்திற்கு கண்காணித்து, அதற்குப்பின் சமையலறையின் அடுப்பு மற்றும் புகைப்போக்கி வழியாக வானுலகுக்கு செல்வதாக நம்பினார்கள்.
டிசம்பர் 23-ம் (சந்திரனை அடிப்படையாக கொண்ட நாள்காட்டியில்) தேதி அன்று, அந்த அக்கினி தெய்வம் ஷொவாங்ஷின் வான அரசரிடம் அறிக்கை செய்தார் என நம்பினார்கள். அந்த வருட இறுதியில் அவர் புகைபோக்கி மற்றும் அடுப்பு வழியாக திரும்பி வந்து, ஒவ்வொருவருடைய நடத்தைக்கு தக்கவாறு ஆசீர்வாதங்களையும் தண்டனைகளையும் வழங்குவார் என எதிர்பார்த்தனர். அவர் திரும்பி வரும் நாளன்று குடும்பத்தினர் வீட்டின் சமையலறையிலும் மற்ற இடங்களிலும் மெழுகுவர்த்திகளை கொளுத்தி வைக்க வேண்டும். இந்த சமையலறை கடவுளின் உருவப் படங்களை கிறிஸ்மஸ் தாத்தாவுடன் ஒப்பிட்டால் மற்றொரு ஒற்றுமையும் தெரியும். இரண்டுபேரும் சிவப்பு நிற உடையை அணிந்துள்ளனர்! குளிர்காலத்திற்குப்பின் முதன்முறையாக சூரியன் முகம் காட்டும் நாளை பண்டிகையாக கொண்டாடினார்கள். அப்பொழுது மருமகள் தன் மாமியாருக்காக ஒரு ஜோடி காலுறைகளை பின்னி கொடுப்பது வழக்கம். அந்தப் பண்டிகை நாள் முதற்கொண்டு பகல்பொழுது நீண்டிருக்கும். அதேபோல் தன் மாமியாரும் நீண்ட ஆயுசோடு வாழ வேண்டும் என்ற தன் விருப்பத்தைத் தெரிவிக்கவே மருமகள் பரிசு அளித்தாள்.
கொரிய மக்களின் பாரம்பரியத்திற்கும் கிறிஸ்மஸுக்கும் இடையே சில ஒற்றுமைகளை உங்களால் காண முடிகிறதா? இந்த இரு பண்டிகைகளில் செய்யப்படும் பழக்க வழக்கங்களில், உருவான கதைகளில் பின்வரும் ஒற்றுமைகளை காணலாம்: புகைபோக்கி, மெழுகுவர்த்தி, பரிசுகளை வழங்குதல், காலுறைகளை கொடுத்தல், சிவப்பு உடை உடுத்திய தாத்தா மற்றும் கொண்டாட்ட தேதி. ஆனால், கொரியாவில் கிறிஸ்மஸ் இவ்வளவு எளிதில் நுழைந்துவிட்டதற்கு இந்த ஒப்புமைகள் மட்டுமே காரணம் அல்ல. கொரிய மக்களிடையே இருந்த ஷொவாங்ஷின் வழிபாடு ஏறக்குறைய நின்றுபோன சமயமாக பார்த்து, முதன்முதலில் கிறிஸ்மஸ் அறிமுகப்படுத்தப்பட்டபோது உடனே ஏற்றுக்கொண்டனர். இப்படிப்பட்ட ஒரு நம்பிக்கை இருந்த உண்மை இன்றைய கொரிய மக்கள் அநேகருக்கு தெரிவதில்லை!
இந்த சூரிய திருவிழாவும், வருட இறுதி கொண்டாட்டங்களும், அவற்றோடு தொடர்புடைய பாரம்பரிய பழக்கவழக்கங்களும் எப்படி உலகம் முழுவதும் பரவின என்பது இப்போது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. பண்டைய ரோமர்கள் சாட்டர்னேலியா என்ற பண்டிகையை, அதாவது சூரிய கடவுளின் பிறந்த நாளை கொண்டாடினர். பொ.ச. நான்காம் நூற்றாண்டில், ரோம சாம்ராஜ்யத்திலிருந்த சர்ச் இப்பண்டிகைக்கு கிறிஸ்மஸ் என்று மறு பெயர் சூட்டியது. பெயர் மாத்திரம்தான் கிறிஸ்மஸ், ஆனால் காலம் காலமாக செய்துவந்த பழக்கவழக்கங்கள் புதுப்பொலிவோடு தொடர்ந்தன. கிறிஸ்மஸ் என்ற புதிய லேபிளில், அதே பழைய சரக்குகள். அது எப்படி?
பரிசு கொடுத்தலின் பங்கு
பரிசு வழங்கும் பழக்கம் மட்டும் மறையவில்லை. கொரிய மக்கள் பரிசுகளை கொடுத்து, பெற்று ஆண்டாண்டு காலம் ஆனந்தத்தை அனுபவித்தவர்கள். கொரியாவில் கிறிஸ்மஸ் பிரபலமாவதற்கு முதல் காரணம் இந்தப் பரிசு பரிமாற்றமே.
இரண்டாம் உலகப் போருக்குப்பின், கொரியாவில் இருந்த அமெரிக்க படைவீரர்கள் அங்குள்ள மக்களிடையே தங்கள் உறவை பலப்படுத்த விரும்பி, சர்ச்சுகளில் ஒன்றுகூடிவந்து பரிசுகளையும், நிவாரணப் பொருட்களையும் வழங்கினர். விசேஷமாக கிறிஸ்மஸ் நாளில் இவ்வாறு செய்தனர். சர்ச்சுகளில் என்ன நடக்கிறது என்று பிள்ளைகளுக்கு ஒரே குறுகுறுப்பு. அப்படி வந்த பிள்ளைகளுக்கு எடுத்த எடுப்பிலே சாக்லெட்டுகள் பரிசுகளாக கிடைத்ததும் சந்தோஷம் தாளவில்லை. அப்புறம் என்ன, ஒவ்வொரு வருஷமும் கிறிஸ்மஸ் எப்போது வரும் என காத்திருக்க ஆரம்பித்தனர்!
அந்தப் பிள்ளைகளைப் பொருத்தவரை கூம்பு வடிவ சிவப்பு தொப்பி அணிந்திருந்த அமெரிக்க வீரரே கிறிஸ்மஸ் தாத்தா. நீதிமொழிகள் 19:6 சொல்கிறது: “கொடை [பரிசு] கொடுக்கிறவனுக்கு எவனும் சிநேகிதன்.” உண்மைதான், பரிசுகளை கொடுத்தல் பயனுள்ள ஒன்றாக இருந்தது. ஆனால், பரிசுகளால் நீடித்த நட்பை பெறமுடியும் என இந்த வசனம் சொல்லவில்லை. இன்றும் கொரியாவில் அநேக ஆட்களிடம் அவர்களது சர்ச் அனுபவங்களை கேட்டால், இளமைக் காலங்களில் சாக்லேட்டை சாப்பிட்டு மகிழ்ந்ததை மாத்திரமே சொல்வார்கள். கிறிஸ்மஸை மறக்கவே இல்லை. கொரியாவின் பொருளாதாரமும் வியாபாரமும் மடமடவென்று வளர்ச்சியடைந்தன. கிறிஸ்மஸ் அன்று மக்கள் பரிசு வழங்கும் பழக்கத்தால் வியாபாரம் மேலும் பெருகியது. வியாபாரிகளுக்கோ கொழுத்த லாபம். ஆனால் வாடிக்கையாளருக்குத்தான் பெருத்த செலவு.
ஆசிய நாடுகளில் எப்படி கிறிஸ்மஸ் பரவியது என்பது இப்போது உங்களுக்கு தெரிந்திருக்கும். கிறிஸ்மஸின்போது மக்கள் கண்மூடித்தனமாக பொருட்களை வாங்குவதால் புதிய புதிய பொருட்கள் மார்க்கெட்டில் வந்த வண்ணம் உள்ளன. விளம்பரங்களுக்கான திட்டங்கள் ஜூன் மாத இறுதியிலேயே ஆரம்பிக்கின்றன. கிறிஸ்மஸ் பரிசுகள், கார்டுகள், இசைப் பதிவுகள் என மக்கள் வாங்கி குவிப்பதால் வருடத்தின் முடிவில் விற்பனை உச்ச அளவை எட்டுகிறது. இந்த விளம்பரங்கள் எந்த டீனேஜரையும் விட்டுவைப்பதில்லை. கிறிஸ்மஸுக்கு முந்தைய மாலையில் அவர்கள் கால் வீட்டில் தங்கவே தங்காது. ஏதாவது பரிசுகள் வாங்கவில்லையென்றால் அவர்கள் தலையே வெடித்துவிடும்!
கிறிஸ்மஸ் நாள் நெருங்க நெருங்க ஷியோலில் உள்ள ஸ்டோர்களிலும் ஷாப்பிங் சென்டர்களிலும் பரிசுகளை வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அலை மோதும். ஆசியாவின் மற்ற நகரங்களிலும் இதே கதைதான். எங்குப் பார்த்தாலும் போக்குவரத்து நெரிசல். ஹோட்டல்களில், கடைத்தெருக்களில், ரெஸ்டாரன்டுகளில், நைட் கிளப்புகளில் வாடிக்கையாளர்கள் பொங்கி வழிகின்றனர். எங்கும் கூத்தும் கும்மாளம். காதை துளைக்கும் இசை. கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முந்தைய மாலையில் தெருவெங்கும் குப்பைக் கூளங்களையும், ஆங்காங்கே ‘குடி’ மகனும் ‘குடி’ மகளும் வீதியை அளந்தபடி செல்லும் காட்சிகளையும் காணலாம்.
இதுதான் கிறிஸ்மஸ்! ஆகவே, கிறிஸ்மஸ் கொண்டாடுவது ஆசியாவில் உள்ள கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல, மற்றவர்களும் கொண்டாடுகிறார்கள். கொரியாவிலும் சரி, மற்ற இடங்களிலும் சரி, கிறிஸ்தவ மண்டலத்தின் இந்தப் பண்டிகையிலிருந்து வியாபாரத்துறை ஏராளமான லாபத்தை ஈட்டியுள்ளது என்பது ஊர் அறிந்த உண்மை. கிறிஸ்துவைப் பற்றிய உண்மையோடு எந்தத் தொடர்பும் இல்லாத கிறிஸ்மஸ் உலகெங்கும் பரவியதற்கு வியாபார உலகை மட்டும் குற்றம் சொல்ல முடியுமா? உண்மை கிறிஸ்தவர்கள் இந்த முக்கிய விஷயத்தில் உட்பட்டிருப்பவற்றை ஆழமாக ஆராய வேண்டியுள்ளது.
கிறிஸ்மஸின் ஆரம்பம்
மிருகக்காட்சி சாலையில் கூண்டில் வைக்கப்பட்டிருக்கும் காட்டு விலங்கு நாட்டு விலங்காக மாறிவிடுவதில்லை. அந்த மிருகத்தை கொஞ்ச காலம் கூண்டில் அடைத்து வைப்பதால் அல்லது கூண்டில் அதன் குட்டிகளோடு பழகுவதால் அது சாதுவாக ஆகிவிடாது. அப்படியாகும் என நினைத்தால் அதுபோல் முட்டாள்தனம் வேறுயில்லை. மிருகக் காட்சிசாலையின் பணியாட்களை மிருகங்கள் தாக்கிய செய்திகளை நீங்கள் அவ்வப்போது கேட்டிருப்பீர்களே!
இந்த உதாரணம் கிறிஸ்மஸுக்கும் பொருந்துகிறது. கிறிஸ்மஸ் என்ற இந்த “மிருகம்” முதலில் கிறிஸ்தவத்துக்கு வெளியே (காட்டில்) வாழ்ந்து வந்தது. த கிறிஸ்டியன் என்ஸைக்ளோப்பீடியா (கொரிய மொழியில்)a “ரோம சாட்டர்னேலியா திருவிழாவுடன் தொடர்பு” என்ற சிறு தலைப்பின்கீழ் கிறிஸ்மஸைப் பற்றி இவ்வாறு கூறுகிறது:
“கிறிஸ்தவ செல்வாக்கால் பிரிக்க முடியாதளவுக்கு சாட்டர்னேலியா, புருமலியா ஆகிய புறமத பழக்கங்கள் பிரபலமான பழக்கவழக்கங்களில் ஆழமாக வேரூன்றியிருந்தன. ஞாயிற்றுக்கிழமையை (ஃபீபஸ் மற்றும் மித்ராஸின் நாளையும் கர்த்தரின் நாளையும்) பேரரசர் கான்ஸ்டன்டைன் அங்கீகரித்ததால் . . . நான்காம் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள், சூரியனின் பிறந்த நாளை கடவுளுடைய குமாரனின் பிறந்த நாளாக கொண்டாடுவதில் எந்தத் தவறும் இல்லை என்று நினைத்தார்கள். ஆட்டம் பாட்டம் கும்மாளம் மிகுந்த இந்தப் புறமத பண்டிகை அதிக பிரபலமாக இருந்ததால், அதன் இயல்பில் அல்லது பாணியில் கண்துடைப்பிற்காக சிறிது மாற்றம் செய்து, தொடர்ந்து கொண்டாடுவதில் கிறிஸ்தவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.”
மக்கள் இவ்வாறு மாற்றியதற்கு எவ்வித எதிர்ப்பும் இருந்திருக்காது என நினைக்கிறீர்களா? அதே கலைக்களஞ்சியம் இவ்வாறு சொல்கிறது: “மேலை நாடுகளிலும் மேற்கு ஆசியாவிலும் உள்ள கிறிஸ்தவ போதகர்கள் கிறிஸ்துவின் பிறந்த நாளை இந்த அளவுக்கு அற்பமாக கொண்டாடியதற்கு கண்டனம் தெரிவித்தனர். அதேபோல், புறமத திருவிழாவை கிறிஸ்தவ திருவிழாவாக மாற்றி, அதில் மேற்கத்திய உருவ வழிபாட்டையும் சூரிய வழிபாட்டையும் புகுத்தியதற்கு மெசபொத்தேமியாவிலுள்ள கிறிஸ்தவர்களும் கண்டனக் குரல் எழுப்பினர்.” கிறிஸ்மஸை பொருத்தவரை முதல் கோணல் முற்றும் கோணல் ஆனது. “ஆனாலும், பதினாறாம் நூற்றாண்டு புராட்டஸ்டன்ட் புரட்சியாலும்கூட தடுக்க முடியாத அளவுக்கு இந்த பண்டிகை மடமடவென்று ஏற்றுக்கொள்ளப்பட்டு, அசைக்க முடியாத அளவுக்கு கால் ஊன்றியது” என்கிறது கலைக்களஞ்சியம்.
கிறிஸ்தவத்தின் பாகமல்லாத சூரிய கடவுளின் இந்தப் பண்டிகையை அப்போதைய சர்ச்களும் இருகரம் நீட்டி ஏற்றுக்கொண்டன. பண்டிகைக்கு புதிய பெயர் சூட்டியிருந்தாலும் பழைய பழக்கவழக்கங்கள் அப்படியே தொடர்ந்தன. இதனால், கிறிஸ்தவ சர்ச்சுகளுக்குள் பொய்மத வணக்கமுறை புகுத்தப்பட்டு, தனி நபரின் ஆன்மீகம் பாதிக்கப்பட்டது. உதாரணத்திற்கு வரலாற்றை புரட்டிப்பார்த்தால், எப்படி கிறிஸ்தவ மண்டலம் பரவ பரவ, “சத்துருக்களை சிநேகியுங்கள்” என்ற முக்கிய கிறிஸ்தவ கொள்கை கைவிடப்பட்டு, அதற்கு பதிலாக ஒழுக்க சீர்குலைவுகளும் யுத்தங்களும் சர்ச்சுகளுக்குள் புகுந்தன என்பதை அறிய முடியும்.
காலப்போக்கில் கிறிஸ்மஸ் என்ற முலாம் பூசினாலும், குடிவெறி, களியாட்டங்கள், நடனங்கள், பரிசு வழங்குதல், பசுமையான செடிகளால் வீடுகளை அலங்கரித்தல் போன்ற புறமத பழக்கங்கள் தொடர்வதை தெளிவாக காண முடிந்தது. வியாபாரிகளின் முக்கிய நோக்கமே வியாபாரத்தை பெருக்குவது. அதனால் கிறிஸ்மஸை சாக்காக பயன்படுத்தி மக்களை சுரண்டி பிழைக்கிறார்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் கிறிஸ்மஸை புகழ்ந்து தள்ளுகின்றன. மக்களுக்கோ ஜாலி. ஷியோல் நகரில் உள் ஆடைகளுக்கு பேர்போன கடை ஒன்று, கிறிஸ்மஸ் மரத்தை உள் ஆடைகளாலேயே அலங்கரித்து வைத்திருந்ததை டிவி செய்தி ஒலிபரப்பில் காட்டினர். கிறிஸ்மஸ் கோலாகலங்கள் என்னவோ பளிச்சென்று தெரிந்தன, ஆனால் இதுதான் கிறிஸ்துவை வரவேற்கும் முறையா?
கிறிஸ்மஸை பைபிளோடு ஒப்பிடல்
இதுவரை பார்த்த சரித்திர பின்னணியிலிருந்தும் கிறிஸ்மஸின் வளர்ச்சியிலிருந்தும் நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? உதாரணத்திற்கு, ஒரு சட்டைக்கு அல்லது ஜாக்கெட்டுக்கு பட்டன் போடும் போது மாற்றி மாற்றி போட்டுவிட்டால், அது தாறுமாறாக இருக்கும். அதை சரிசெய்வதற்கு ஒரே வழி மறுபடியும் முதலிலிருந்து ஒழுங்காக போட வேண்டும். கிறிஸ்மஸ் விஷயத்திலும் இவ்வாறே செய்ய வேண்டும் அல்லவா? ஆனால் சிலர், கிறிஸ்மஸ் சூரியக் கடவுள் வழிபாட்டை ஆதாரமாகக் கொண்டிருந்தாலும் கிறிஸ்தவ மண்டலம் அதை கிறிஸ்துவின் பிறந்த நாளாக ஏற்றுக்கொண்டிருப்பதாக விவாதிக்கிறார்கள். ஆகவே, புறமத பண்டிகையை கிறிஸ்துவின் பிறந்த நாளாக ஏற்றுக்கொண்டதால் அது பரிசுத்தமடைந்துவிட்டதாகவும் அதற்கு தனிச்சிறப்பு கிடைத்துவிட்டதாகவும் நினைக்கிறார்கள்.
இவர்கள் நினைப்பது சரியா? பூர்வ யூதாவில் நடந்த சரித்திரப்பூர்வ சம்பவத்தைக் காண்போம். பொ.ச.மு. 612-ல் யூதேயர்கள் சூரிய வழிபாட்டை எருசலேம் ஆலயத்தில் புகுத்தினர். யெகோவா தேவனுடைய சுத்தமான வழிப்பாட்டு ஸ்தலத்தில் இந்த புறமத வழிபாடு நடந்ததால் அது பரிசுத்தம் அடைந்திருக்குமா? எருசலேம் ஆலயத்தில் செய்யப்பட்டு வந்த சூரிய வணக்கத்தைப் பற்றி பைபிள் எழுத்தாளராகிய எசேக்கியேல் இவ்வாறு விவரிக்கிறார்: “இதோ, கர்த்தருடைய ஆலயத்தின் வாசல் நடையிலே மண்டபத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே, ஏறக்குறைய இருபத்தைந்து புருஷர், . . . தங்கள் முகத்தைக் கீழ்த்திசைக்கும் நேராகத் திருப்பினவர்களாய்க் கிழக்கே இருக்கும் சூரியனை நமஸ்கரித்தார்கள். அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இதைக் கண்டாயா? இங்கே யூதா வம்சத்தார் செய்கிற அருவருப்புகள் அற்பமான காரியமா? அவர்கள் தேசத்தைக் கொடுமையினால் நிரப்பி என்னை அடிக்கடி கோபமூட்டுகிறார்கள்; இதோ, அவர்கள் . . . கிளையை . . . [என்] நாசிக்கு நேராகப் பிடிக்கிறார்கள்.”—எசேக்கியேல் 8:16, 17.
ஆம், இந்த புறமத வழிபாடு பரிசுத்தமாகவில்லை. மாறாக ஆலயத்தின் பரிசுத்த தன்மையையே கெடுத்துப் போட்டது. இப்படிப்பட்ட சூரிய வழிபாடு யூதாவில் பரவியது. இதன் காரணமாக தேசமெங்கும் வன்முறையும் ஒழுக்கக் கேடும் தலைவிரித்தாடின. இதேபோல்தான் கிறிஸ்தவ மண்டலமும் சூரிய வழிபாட்டை ஆதாரமாகக்கொண்ட சாட்டர்னேலியா திருவிழாவை கிறிஸ்மஸாக ஏற்றுக்கொண்டிருக்கிறது. ஆனால் பூர்வ எருசலேமில் என்ன நடந்தது? எசேக்கியேல் தரிசனம் கண்டு, சில வருடங்கள் கழித்து, கடவுளுடைய நியாயத்தீர்ப்பு எருசலேம் மேல் வந்தது. பாபிலோனியர்களைக் கொண்டு அந்நகரை கடவுள் அழித்தார்.—2 நாளாகமம் 36:15-20.
முந்தின கட்டுரையில், குழந்தை இயேசுவைப் பற்றி கொரியா நாட்டைச் சேர்ந்த கல்விமான் வர்ணித்த விதம் உங்களுக்கு வேடிக்கையாக தோன்றியிருக்கலாம். ஆனால் கிறிஸ்துவை பற்றி அதிகமாக தெரியாத ஒருவர் இப்படி விவரித்ததில் அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது. இது கிறிஸ்மஸ் கொண்டாடுபவர்களை சிந்திக்கச் செய்யும். ஏன்? ஏனென்றால் கிறிஸ்மஸ் கிறிஸ்துவின் சரியான ஸ்தானத்தை எடுத்துக் கூறுவதில்லை. அதாவது இப்போது இயேசு உண்மையில் என்னவாக இருக்கிறார் என்பதை எடுத்துரைப்பதற்கு பதிலாக, அவரை இன்னும் மாட்டுக்கொட்டிலில் படுத்துறங்கும் குழந்தையாகவே வர்ணிக்கிறது.
இயேசு இப்பொழுது கடவுளால் நியமிக்கப்பட்ட மேசியாவாக அதாவது, பரலோக ராஜ்யத்தின் வல்லமையுள்ள அரசராக இருக்கிறார் என்பதை பைபிள் பல்வேறு இடங்களில் சுட்டிக்காட்டுகிறது. (வெளிப்படுத்துதல் 11:15) கிறிஸ்மஸ் சீஸனில்தான் ஏழைகளுக்கு ஏதோ தானதர்மம் பண்ண வேண்டும் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் ஏழ்மையையும் மனித துயரத்தையும் முற்றிலும் ஒழித்துவிடும் நிலையில் இப்போது இயேசு இருக்கிறார் என்பதை அறியாமலிருக்கிறார்களே!
வெளிப்படையாகச் சொன்னால், கிறிஸ்தவ நாடாக இருந்தாலும்சரி, ஆசிய நாடாக இருந்தாலும்சரி, கிறிஸ்மஸால் எந்த நாட்டுக்கும் பிரயோஜனம் இல்லை. மாறாக கடவுளுடைய ராஜ்யத்திலிருந்தும், கெட்ட உலகை கடவுள் முடிவுக்கு கொண்டுவரப்போகிற பைபிள் செய்தியிலிருந்தும் மக்களின் கவனத்தை கிறிஸ்மஸ் திசை திருப்புகிறது. (மத்தேயு 24:14) இந்த முடிவு எவ்வாறு வரும் என்பதை அறிய யெகோவாவின் சாட்சிகளை அணுகும்படி நாங்கள் உங்களை கேட்டுக்கொள்கிறோம். கடவுளுடைய ராஜ்யத்தில் அரசாளும் இயேசு கிறிஸ்துவின் வழிநடத்துதலால் இப்பூமியில் வரவிருக்கும் நிரந்தர ஆசீர்வாதங்களைப் பற்றி நீங்கள் அவர்களிடமிருந்து தெரிந்துகொள்ளலாம்.—வெளிப்படுத்துதல் 21:3, 4.
[அடிக்குறிப்புகள்]
a புதிய ஸ்காஃப்-ஹெர்ஸோக் மத அறிவு கலைக்களஞ்சியம் என்ற ஆங்கில நூலை அடிப்படையாகக் கொண்டது.
[பக்கம் 6-ன் சிறு குறிப்பு]
கிறிஸ்தவ சர்ச்சுகளில் புறமத வணக்கத்தை புகுத்திய பெருமை கிறிஸ்மஸையே சாரும்
[பக்கம் 5-ன் படம்]
சர்ச்சுகளுக்கு ஆர்வ குறுகுறுப்போடு சென்ற பிள்ளைகளுக்கு பரிசாக சாக்லெட்டுகள் கிடைத்ததும், ஒவ்வொரு வருஷமும் கிறிஸ்மஸ் எப்போது வரும் என காத்திருந்தனர்
[பக்கம் 7-ன் படம்]
கிறிஸ்மஸுக்கு முந்தைய மாலையில் கொரியாவின் ஷியோல் நகரம்
[பக்கம் 8-ன் படம்]
கிறிஸ்து இன்னமும் ஒரு குழந்தை அல்ல, ஆனால் கடவுளுடைய ராஜ்யத்தின் வல்லமையுள்ள ராஜா