பின்வாங்கிச்சென்று அழியாதிருப்போமாக!
“நாம் அழிவுக்குப் பின்வாங்கிச் செல்வோர் அல்ல.”—எபிரெயர் 10:39, NW.
1. அப்போஸ்தலனாகிய பேதுருவின் பயத்திற்கு வழிநடத்தின சூழ்நிலைமைகள் யாவை?
அப்போஸ்தலர்கள் அனைவரும் தம்மை கைவிட்டுவிட்டு ஓடி விடுவார்கள் என்று இயேசு சொன்னார். உயிருக்கு உயிரான எஜமானரே இப்படி சொல்வதைக் கேட்டு அப்போஸ்தலர்கள் நிச்சயமாய் அதிர்ச்சியடைந்திருப்பார்கள். அவருக்கு பேருதவி தேவைப்படும் இந்த நேரத்திலா இப்படி நடக்கும்? பேதுரு இவ்வாறு அடித்துக் கூறினார்: “உமது நிமித்தம் எல்லாரும் இடறலடைந்தாலும், நான் இடறலடையேன்.” சொல்லப்போனால், பேதுரு துணிவும் தைரியமும் மிக்கவர். ஆனால் இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டு, கைது செய்யப்பட்டபோது அப்போஸ்தலர்கள்—பேதுருவும்தான்—நாலா திக்கும் ஓடிப்போனார்கள். பின்பு பிரதான ஆசாரியன் காய்பாவின் வீட்டில் இயேசு விசாரணை செய்யப்படுகையில், முற்றத்தில் பேதுரு பரிதவித்துக் கொண்டிருந்தார். குளிர்மிக்க அந்த இரவு நேரம் மெல்ல கரைந்து கொண்டிருந்தது. இயேசுவும் அவரோடு தொடர்புடையவர்களும் கொல்லப்படுவார்களோ என்ற பயம் பேதுருவை மெல்ல மெல்ல கவ்வியது. இயேசுவோடு நெருங்கிய தொடர்புடையவர்களில் இவரும் ஒருவர் என கூடியிருந்தவர்கள் அவரை அடையாளம் கண்டுகொண்டதும் நடுநடுங்கிப்போனார். அதனால் இயேசுவை பேதுரு மூன்று முறை மறுதலித்தார். அவரை தெரியவே தெரியாது என்றும் பேதுரு அடித்துக் கூறினார்!—மாற்கு 14:27-31, 66-72.
2. (அ) இயேசு கைது செய்யப்பட்ட இரவில் பேதுரு பயந்தது ஏன் அவரை ‘பின்வாங்கிச் செல்பவராக்காது?’ (ஆ) நம்முடைய தீர்மானம் என்னவாக இருக்க வேண்டும்?
2 பேதுரு விசுவாசத்தில் சற்று தளர்ந்துபோன சமயம் அது, அதற்காக வாழ்நாள் முழுவதும் கண்டிப்பாக வருந்தியிருப்பார். அந்த இரவு பேதுரு அப்படி நடந்துகொண்டதால் அவர் ஒரு கோழை என சொல்லிவிட முடியுமா? பிற்காலத்தில் அப்போஸ்தலன் பவுல் குறிப்பிட்ட, ‘அழிவுக்குப் பின்வாங்கிச் செல்வோரில்’ அவரும் சேர்ந்துவிட்டாரா? (எபிரெயர் 10:39, NW) பவுல் குறிப்பிட்ட வார்த்தைகள் பேதுருவுக்குப் பொருந்தாது என்பதை நம்மில் பெரும்பாலானோர் அநேகமாக ஒப்புக்கொள்வோம். ஏன்? ஏனென்றால் பேதுருவின் பயம் தற்காலிகமானதே, தைரியத்திற்கும் விசுவாசத்திற்கும் பெயர்பெற்ற அவருடைய வாழ்க்கையில் இது ஒரு சிறிய சறுக்கலே. இதுபோன்று நமக்கும்கூட சம்பவித்திருக்கலாம். நாம் சத்தியத்திற்காக உறுதியாக நிற்க வேண்டும் என்று விரும்பியிருப்போம். ஆனால் எதிர்பாராத சம்பவத்தால் பயந்துபோய் ஜீவனுக்கான ஓட்டத்தில் தடுமாறியிருக்கலாம். அதை இப்போது நினைத்தாலும் வெட்கப்படுவோம். (ரோமர் 7:21-23-ஐ ஒப்பிடுக.) எதேச்சையாக நடக்கும் இப்படிப்பட்ட தவறுகள் நம்மை அழிவுக்குப் பின்வாங்குபவராகச் செய்வதில்லை என்பதில் நாம் நிச்சயமாக இருக்கலாம். ஆனாலும் நாம் ஒருபோதும் அப்படிப்பட்டவர்களாக ஆகிவிடாதபடிக்கு திடத்தீர்மானமாய் இருக்க வேண்டும். ஏன்? மேலும், அப்படிப்பட்ட ஒருவராவதை நாம் எவ்வாறு தடுக்க முடியும்?
பின்வாங்கிச் சென்று அழிவுறுவது என்றால் என்ன?
3. தீர்க்கதரிசிகளாகிய எலிசாவும் யோனாவும் பயத்திற்கு ஆளானது எவ்வாறு?
3 ‘பின்வாங்கிச் செல்வோரைப்’ பற்றி பவுல் எழுதியபோது, சந்தர்ப்பவசமாக தைரியத்தை இழந்துவிடுபவர்களைப் பற்றி குறிப்பிடவில்லை. பேதுருவிற்கு நேரிட்ட சம்பவமும் அதைப் போன்ற மற்ற சம்பவங்களும் பவுலுக்கு நிச்சயமாகவே தெரியும். எலியா தைரியமாகவும் துணிவுடனும் பேசிய ஒரு தீர்க்கதரிசி. ஒருசமயம் பொல்லாத அரசியாகிய யேசபேல் கொல்லப்போவதாக மிரட்டியதால் அவரும்கூட உயிருக்குப் பயந்து ஓடிப்போனார். (1 இராஜாக்கள் 19:1-4) தீர்க்கதரிசியாகிய யோனாவும் ஒரு சந்தர்ப்பத்தில் பீதியடைந்தார். வன்முறைக்குப் பேர்போன பொல்லாத நகரமாகிய நினிவேக்கு செல்லும்படி யெகோவா சொன்னார். 3,500 கிலோமீட்டர் தூரத்தில் இருந்த தர்ஷீசுக்குச் செல்ல யோனா கப்பல் ஏறினார்—ஆனால் போகவேண்டிய இடத்திற்கு எதிர் திசையில்! (யோனா 1:1-3) இருந்தபோதிலும், உண்மையுள்ள இந்தத் தீர்க்கதரிசிகளோ அல்லது அப்போஸ்தலனாகிய பேதுருவோ ‘பின்வாங்கிச் செல்வோர்’ என்று சொல்ல முடியாது. ஏன்?
4, 5. (அ) எபிரெயர் 10:39-ல் பவுல் குறிப்பிட்டுள்ள “அழிவு” எதை அர்த்தப்படுத்துகிறது என்பதை தீர்மானிக்க சூழமைவு எவ்வாறு உதவுகிறது? (ஆ) “நாம் அழிவுக்குப் பின்வாங்கிச் செல்வோர் அல்ல” என்று சொன்னபோது பவுல் அர்த்தப்படுத்தியது என்ன?
4 பவுல் பயன்படுத்திய முழு சொற்றொடரையும் கவனியுங்கள்: ‘நாம் அழிவுக்குப் பின்வாங்கி செல்வோர் அல்ல.’ “அழிவு” என்று அவர் எதை அர்த்தப்படுத்தினார்? அவர் பயன்படுத்தியிருக்கும் கிரேக்க வார்த்தை சில சமயங்களில் நித்திய அழிவை குறிப்பிடுகிறது. இந்த விளக்கம் சூழமைவுக்கும் பொருந்துகிறது. பவுல் அப்போதுதான் இவ்வாறு எச்சரித்திருந்தார்: “சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல், நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும்.”—எபிரெயர் 10:26, 27.
5 ஆகவே, “நாம் அழிவுக்குப் பின்வாங்கி செல்வோர் அல்ல” என பவுல் தன் சக ஊழியர்களிடம் சொன்னபோது, அவரும் அவருடைய உண்மையுள்ள கிறிஸ்தவ வாசகர்களும் ஒருபோதும் யெகோவாவை விட்டு விலகாமலும் அவரை சேவிப்பதை நிறுத்திவிடாமலும் இருக்க தீர்மானமாய் இருந்ததையே அர்த்தப்படுத்தினார். அவ்வாறு பின்வாங்கிச் செல்வது நித்திய அழிவுக்கே வழிநடத்தியிருக்கும். யூதாஸ்காரியோத் பின்வாங்கிச் சென்று இப்படிப்பட்ட அழிவையே அடைந்தான். இதேபோன்று வேறுசிலரும் யெகோவாவின் ஆவிக்கு எதிராக செயல்பட்டு சத்தியத்திற்கு விரோதமாயிருந்தார்கள். (யோவான் 17:12; 2 தெசலோனிக்கேயர் 2:3) இப்படிப்பட்டவர்கள் அடையாள அர்த்தமுடைய அக்கினிக் கடலில் நித்திய அழிவை அடையப்போகும் ‘பயப்படுகிறவர்களோடு’ சங்கமமாகி இருக்கின்றனர். (வெளிப்படுத்துதல் 21:8) நாம் ஒருபோதும் அப்படிப்பட்டவர்களாக இருக்கக்கூடாது!
6. நாம் என்ன போக்கை பின்பற்றும்படி பிசாசாகிய சாத்தான் விரும்புகிறான்?
6 நாம் பின்வாங்கிச் சென்று அழியவே பிசாசாகிய சாத்தான் விரும்புகிறான். இப்படிப்பட்ட பேரழிவு சிறிய விஷயங்களில்தான் பெரும்பாலும் தொடங்குகிறது என்பது ‘தந்திரச் செயல்களின்’ தலைவனுக்கு நன்றாக தெரியும். (எபேசியர் 6:11, NW அடிக்குறிப்பு) நேரடியான துன்புறுத்துதல் செல்லுபடியாகவில்லை என்றால் மறைமுகமான சூழ்ச்சிகளால் உண்மை கிறிஸ்தவர்களின் விசுவாசத்தை கொஞ்சம் கொஞ்சமாக அரித்துப்போட வழி தேடுகிறான். துணிவும் வைராக்கியமும் உள்ள யெகோவாவின் ஊழியர்கள் மந்தமாவதைக் காண்பதில் அவனுக்கு அலாதி பிரியம். பவுல் இந்தக் கடிதத்தை எழுதிய எபிரெய கிறிஸ்தவர்களுக்கு எதிராக சாத்தான் பயன்படுத்திய தந்திரங்கள் என்ன என்பதை நாம் பார்க்கலாம்.
கிறிஸ்தவர்கள் பின்வாங்கிச் செல்லும் நெருக்கடிக்கு உள்ளானது எவ்வாறு
7. (அ) எருசலேமிலிருந்த சபையின் நிலை என்ன? (ஆ) பவுலின் வாசகர்கள் சிலர் மத்தியில் என்ன ஆவிக்குரிய சூழ்நிலைகள் நிலவின?
7 சுமார் பொ.ச. 61-ல் எபிரெயர்களுக்கு பவுல் இக்கடிதத்தை எழுதினார் என அத்தாட்சி சுட்டிக்காட்டுகிறது. எருசலேம் சபை கொந்தளிப்பான நிலைமையை எதிர்ப்பட்டது. இயேசுவின் மரணத்திற்குப்பின் கொடிய துன்புறுத்துதல் எனும் புயல் தாக்கியது. அதனால் கிறிஸ்தவர்கள் பலர் அந்தப் பட்டணத்தைவிட்டு நாலா பக்கமும் சிதறிப்போயினர். என்றபோதிலும், சமாதான தென்றல் வீசிய காலப்பகுதி வந்தபோது கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை பன்மடங்காய் பெருகியது. (அப்போஸ்தலர் 8:4; 9:31) காலங்கள் உருண்டோட மற்ற துன்புறுத்துதல்களும் இக்கட்டுகளும் அவ்வப்போது தலைதூக்கின. பவுல் இக்கடிதத்தை எபிரெயர்களுக்கு எழுதின சமயத்திற்குள், சபை மறுபடியும் ஓரளவு சமாதான காலப்பகுதியை அனுபவித்து மகிழ்ந்ததாய் தெரிகிறது. என்றாலும் நெருக்கடிகள் நின்றபாடில்லை. எருசலேமின் அழிவைக் குறித்து இயேசு முன்னறிவித்து கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் கடந்துவிட்டிருந்தன. முடிவு காரணமில்லாமல் தாமதித்துக்கொண்டே போகிறது என்றும் தங்களுடைய ஆயுசுகாலத்தில் முடிவு வரப்போவதில்லை என்றும்கூட சிலர் நினைத்திருக்கலாம். மற்றவர்களோ, அதிலும் புதியவர்களோ, இதுவரை எந்தக் கடுமையான துன்புறுத்தலையும் எதிர்ப்படவில்லை. சோதனையில் சகித்திருப்பதன் அவசியத்தைப் பற்றியும் அவ்வளவாக அறியவில்லை. (எபிரெயர் 12:4) இப்படிப்பட்ட சூழ்நிலைகளை சாதகமாக்கிக் கொள்வதில் சாத்தான் குறியாக இருந்தான். அவன் உபயோகித்த “தந்திரச் செயல்கள்” யாவை?
8. குழந்தையாயிருந்த கிறிஸ்தவ சபையிடம் யூதர்கள் எவ்விதமாக நடந்துகொண்டனர்?
8 எருசலேமிலும் யூதேயாவிலும் இருந்த யூத சமுதாயம் குழந்தையைப் போல இருந்த கிறிஸ்தவ சபைகளை அற்பமாக எண்ணியது. செருக்குமிக்க யூத மதத் தலைவர்களும் அவர்களைப் பின்பற்றியவர்களும் அந்தப் புதிய கிறிஸ்தவர்களை எந்தளவுக்கு ஏளனம் செய்தனர் என்பதை பவுலின் கடிதத்திலிருந்து ஓரளவு அறிய முடிகிறது. அவர்கள் இப்படி சொல்லியிருக்கலாம்: ‘எருசலேமில் எங்களுக்கு மாபெரும் ஆலயம் நூற்றாண்டுகளாக இருந்துவருகிறது! அங்கு ஆலய பணிகளைச் செய்வதற்கு அருமையான பிரதான ஆசாரியனும், துணை ஆசாரியர்களும் இருக்கிறார்கள். தினமும் பலிகள் செலுத்தப்படுகின்றன. சீனாய் மலையில் மோசேக்கு தூதர்கள் மூலம் அநேக பரவசமூட்டும் அடையாளங்களுடன் கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணம் எங்களிடம் இருக்கிறது. முளைத்து மூணு இலைகூட விடாத இந்தக் கிறிஸ்தவர்களுக்கு, யூதமத விசுவாச துரோகிகளுக்கு ஏது இவையெல்லாம், ஒன்றுமே கிடையாது!’ இப்படிப்பட்ட கேலி கிண்டல்கள் பலித்தனவா? இந்தத் தாக்குதல்களால் எபிரெய கிறிஸ்தவர்கள் சிலர் ஆடிப்போய்விட்டதாக தெரிகிறது. ஆனால் பவுலின் கடிதம் தக்க சமயத்தில் உதவிக்கரம் நீட்டியது.
ஏன் ஒருபோதும் பின்வாங்கிச் சென்று அழியக்கூடாது
9. (அ) எபிரெயர்களுக்கு எழுதிய கடிதத்தில் பரவியிருக்கும் விஷயம் என்ன? (ஆ) என்ன கருத்தில் கிறிஸ்தவர்கள் எருசலேமிலிருந்த ஆலயத்தைவிட மேம்பட்ட ஒரு ஆலயத்தில் சேவித்தனர்?
9 யூதேயாவிலுள்ள சகோதர சகோதரிகள் ஒருபோதும் அழிவுக்குப் பின்வாங்கிச் செல்லாதிருக்க பவுல் கொடுத்த இரண்டு காரணங்களை நாம் ஆராயலாம். முதல் காரணம் கிறிஸ்தவ வணக்கமுறையின் சிறப்பு. இந்த விஷயம் எபிரெயர்களுக்கு எழுதிய கடிதம் முழுவதிலும் பரவியிருக்கிறது. தனது கடிதம் முழுவதிலும் இந்தப் பொருளை பவுல் மிக அருமையாக விளக்கிக் காட்டினார். எருசலேம் ஆலயம், “கையினால் கட்டப்படாததாகிய” யெகோவாவின் மகிமைபொருந்திய ஆவிக்குரிய ஆலயத்திற்கு முன்நிழலாக மட்டுமே இருந்தது. (எபிரெயர் 9:11) தூய வணக்கத்திற்குரிய அந்த ஆவிக்குரிய ஏற்பாட்டில் சேவிக்கும் சிலாக்கியம் இந்தப் புதிய கிறிஸ்தவர்களுக்கு இருந்தது. அவர்கள் மேலான உடன்படிக்கையின்கீழ், அதாவது வெகு காலத்திற்கு முன்பே வாக்குப்பண்ணப்பட்ட புதிய உடன்படிக்கையின்கீழ் சேவித்தார்கள். இந்தப் புதிய உடன்படிக்கை மோசேக்கும் மேலான இயேசு கிறிஸ்துவை மத்தியஸ்தராக கொண்டிருந்தது.—எரேமியா 31:31-34.
10, 11. (அ) ஆவிக்குரிய ஆலயத்தில் பிரதான ஆசாரியராக சேவிப்பதற்கு ஏன் இயேசுவின் வம்சாவளி அவரை தகுதியற்றதாக்காது? (ஆ) என்ன வழிகளில் இயேசு எருசலேம் ஆலயத்தில் சேவை செய்யும் பிரதான ஆசாரியரைக் காட்டிலும் மேலானவராக இருந்தார்?
10 இந்தக் கிறிஸ்தவர்களுக்கும் மிக மேம்பட்ட பிரதான ஆசாரியர் இருந்தார், அவரே இயேசு கிறிஸ்து. இவர் ஆரோனின் வம்சாவளியில் வந்தவரல்ல. மாறாக, “மெல்கிசேதேக்கின் முறைமையின்படி” பிரதான ஆசாரியர். (சங்கீதம் 110:4) வம்சாவளி அறியப்படாத மெல்கிசேதேக் பூர்வ சாலேமின் ராஜாவாகவும் பிரதான ஆசாரியராகவும் இருந்தார். இவ்வாறு அவர் இயேசுவுக்குப் பொருத்தமான தீர்க்கதரிசன மாதிரியாக திகழ்ந்தார். இயேசுவுடைய ஆசாரியத்துவம் எந்தவொரு அபூரண மனிதனின் பரம்பரையைச் சார்ந்ததல்ல, ஆனால் மிக உயர்ந்த ஒன்றின்மீது—யெகோவா தேவனின் சொந்த ஆணையின்மீது—சார்ந்திருந்தது. மெல்கிசேதேக்கைப் போன்று இயேசுவும் பிரதான ஆசாரியராக சேவிக்கிறார். இனி ஒருகாலும் மரிக்காதிருக்கும் அரசராகவும் சேவிக்கிறார்.—எபிரெயர் 7:11-21.
11 மேலும், எருசலேம் ஆலயத்தின் பிரதான ஆசாரியனைப் போன்று இயேசு ஒவ்வொரு வருடமும் பலிகளை செலுத்த வேண்டியதில்லை. அவர் எல்லா காலத்துக்கும் ஒரே தடவையாக தன் சொந்த பரிபூரண ஜீவனையே பலியாகக் கொடுத்தார். (எபிரெயர் 7:27) ஆலயத்தில் செலுத்தப்பட்ட பலிகள் அனைத்தும் இயேசுவின் பலிக்கு நிழல்களாகவும் படங்களாகவும் மட்டுமே இருந்தன. விசுவாசம் வைத்த அனைவரின் பாவங்களும் அவருடைய பரிபூரண பலியின் மூலம் மன்னிக்கப்பட்டது. எருசலேமிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு நன்றாக தெரிந்த இயேசு எப்போதும் மாறாதவராகவே இருக்கிற பிரதான ஆசாரியர் என்ற பவுலின் குறிப்புகளும் இதயத்திற்கு இதமளிப்பதாய் உள்ளது. மேலும் இயேசு தாழ்மையான, தயவான மற்றும் “நம்முடைய பலவீனங்களைக் குறித்துப் பரிதபிக்கிற” ஒருவர். (எபிரெயர் 4:15; 13:8) அபிஷேகம் பண்ணப்பட்ட அந்தக் கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்துவின் துணை ஆசாரியர்களாய் சேவிக்கும் எதிர்பார்ப்பு இருந்தது! அப்படியானால் “பெலனற்றதும் வெறுமையானதுமான” கறைபட்ட யூத மதத்திற்கு பின்வாங்கிச் செல்வதைப் பற்றி அவர்கள் எப்படி நினைத்துப் பார்க்க முடியும்?—கலாத்தியர் 4:9.
12, 13. (அ) பின்வாங்காதிருப்பதற்கு பவுல் அளிக்கும் இரண்டாம் காரணம் என்ன? (ஆ) எபிரெய கிறிஸ்தவர்களுடைய சகிப்புத்தன்மையின் கடந்தகால பதிவு அவர்கள் அழிவுக்கு பின்வாங்காமலிருக்க எப்படி உற்சாகப்படுத்தியது?
12 அதோடு, ஒருபோதும் அழிவுக்குப் பின்வாங்கிச் செல்லாதிருக்க எபிரெயர்களுக்கு இரண்டாவது காரணத்தையும் பவுல் கொடுத்தார். அவர்கள் அவ்வளவு காலம் காட்டியிருந்த சகிப்புத்தன்மை அது. அவர் எழுதினார்: “முந்தின நாட்களை நினைத்துக்கொள்ளுங்கள்; நீங்கள் பிரகாசமாக்கப்பட்டிருந்த அந்த நாட்களில் உபத்திரவங்களாகிய மிகுந்த போராட்டத்தைச் சகித்தீர்களே.” அவர்கள் நிந்தைகளுக்கும் உபத்திரவங்களுக்கும் ‘வேடிக்கையாக்கப்பட்டதை’ பவுல் நினைப்பூட்டினார். சிலர் காவலில் அடைக்கப்பட்டனர்; மற்றவர்கள் அவர்களுக்காக பரிதபித்தது மட்டுமல்லாமல் அவர்களை ஆதரித்தார்கள். ஆம், அவர்கள் விசுவாசத்திற்கும் விடாமுயற்சிக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்தார்கள். (எபிரெயர் 10:32-34) இருப்பினும் அப்படிப்பட்ட வேதனைமிக்க அனுபவங்களை “நினைத்துக்கொண்டே இருங்கள்” (NW) என்பதாக பவுல் ஏன் அவர்களிடம் சொன்னார்? அது அவர்களை சோர்வடையச் செய்யாதா?
13 அதற்கு நேர்மாறாக ‘முந்தின நாட்களை நினைத்துக்கொள்வது’ சோதனையின்கீழ் யெகோவா அவர்களை எவ்வாறு ஆதரித்தார் என்பதை அவர்களுக்கு நினைப்பூட்டும். அவருடைய உதவியால் அவர்கள் ஏற்கனவே சாத்தானின் அநேக தாக்குதல்களுக்கு எதிர்த்து நின்றிருக்கிறார்கள். பவுல் எழுதினார்: “உங்கள் கிரியையையும், . . . தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே.” (எபிரெயர் 6:10) ஆம், யெகோவா அவர்களுடைய உண்மையுள்ள எல்லா பிரயாசத்தையும் தம்முடைய எல்லையற்ற நினைவாற்றலில் சேர்த்து வைத்தார். பரலோகத்திலே பொக்கிஷங்களைச் சேர்த்து வைப்பதைப் பற்றிய இயேசுவின் அறிவுரை நம் நினைவுக்கு வருகிறது. இந்தப் பொக்கிஷங்களை எந்தத் திருடனும் திருட முடியாது; பூச்சியோ துருவோ கெடுக்கவும் முடியாது. (மத்தேயு 6:19-21) சொல்லப்போனால் ஒரு கிறிஸ்தவன் பின்வாங்கிச் சென்று அழியும்போது மட்டுமே இந்தப் பொக்கிஷங்களும் அழிக்கப்படுகிறது. அதாவது அவன் பரலோகத்தில் சேர்த்து வைத்திருந்த அனைத்து பொக்கிஷங்களும் பிரயோஜனமற்றதாகிவிடும். எபிரெய கிறிஸ்தவர்கள் அப்படிப்பட்ட போக்கை ஒருபோதும் பின்தொடராமல் இருப்பதற்கு என்னே ஒரு பலமான காரணத்தை பவுல் அளித்தார்! ஆண்டாண்டு காலமாக செய்த அவர்களுடைய உண்மையான சேவையை ஏன் பிரயோஜனமற்றதாக்க வேண்டும்? சகிப்புத்தன்மையைக் காத்துக்கொள்வதே சரியானதும் மிக மேலானதுமாக இருக்கும்.
ஏன் நாம் ஒருபோதும் பின்வாங்கிச் சென்று அழிவுறுவோராக இருக்கக்கூடாது
14. முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் எதிர்ப்பட்டதைப் போன்ற என்ன சவால்களை நாம் எதிர்ப்படுகிறோம்?
14 இன்று உண்மை கிறிஸ்தவர்கள் அழிவுக்குப் பின்வாங்கிச் செல்லாதிருப்பதற்கு பலமான காரணங்கள் இருக்கின்றன. முதலாவதாக சுத்தமான வணக்கத்தின் பாகமாக இருக்கும் என்னே ஓர் சிறந்த ஆசீர்வாதத்தை யெகோவா நமக்கு கொடுத்திருக்கிறார் என்பதை நினைவில் வைப்போமாக. முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களது காலத்தைப் போலவே இன்றும், பிரபல மதத்தின் அங்கத்தினர்கள் அவர்களுடைய கவர்ச்சியூட்டும் கட்டிடங்களையும் பழம்பெருமைமிக்க பாரம்பரியத்தையும் சுட்டிக்காட்டி நம்மை பரிகசித்து கேலிசெய்கிறார்கள். ஆனாலும், நம்முடைய வணக்கமுறையை யெகோவா ஏற்றுக்கொள்வதாய் உறுதியளிக்கிறார். சொல்லப்போனால், முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்குக் கிடைக்காத ஆசீர்வாதங்களை இன்று நாம் அனுபவித்து மகிழ்கிறோம். ‘அது எப்படி?’ என்பதாக நீங்கள் யோசிக்கலாம். முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் ஆவிக்குரிய ஆலயம் செயல்பட ஆரம்பித்த சமயத்தில் வாழ்ந்தார்கள். பொ.ச. 29-ல் கிறிஸ்து முழுக்காட்டுதல் பெற்றது முதல் அவர் அதன் பிரதான ஆசாரியராக இருக்கிறார். அவர்களில் சிலர் அற்புதங்களைச் செய்த கடவுளுடைய குமாரனை நேருக்கு நேர் பார்த்தார்கள். அவருடைய மரணத்திற்குப் பிறகும்கூட அநேக அற்புதங்கள் செய்யப்பட்டன. இருந்தாலும், முன்னறிவித்தபடி அப்படிப்பட்ட வரங்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டன.—1 கொரிந்தியர் 13:8.
15. இன்று உண்மை கிறிஸ்தவர்கள் எந்தத் தீர்க்கதரிசன நிறைவேற்றத்தின் காலத்தில் வாழ்கிறார்கள், அது நமக்கு அர்த்தப்படுத்துவது என்ன?
15 என்றாலும், எசேக்கியல் 40 முதல் 48 அதிகாரங்களில் உள்ள ஆலயத்தைப் பற்றிய விரிவான தீர்க்கதரிசனம் நிறைவேறும் காலப்பகுதியில் நாம் வாழ்கிறோம். a ஆகவே கடவுளுடைய தூய வணக்கத்திற்கான ஏற்பாடுகள் மறுபடியும் ஸ்தாபிக்கப்பட்டதை நாம் கண்டிருக்கிறோம். அந்த ஆவிக்குரிய ஆலயம் எல்லாவித அசுத்தத்திலிருந்தும் விக்கிரக ஆராதனையிலிருந்தும் சுத்திகரிக்கப்பட்டுள்ளது. (எசேக்கியேல் 43:9; மல்கியா 3:1-5) அதனால் நாம் அடைந்துள்ள நன்மைகளை சற்று சிந்தித்துப் பாருங்கள்.
16. சோர்வடையச் செய்யும் என்ன நிலையை முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் எதிர்ப்பட்டனர்?
16 முதல் நூற்றாண்டில், ஒழுங்கமைக்கப்பட்ட கிறிஸ்தவ சபைக்கு எதிர்காலம் ஒளிமயமாக இல்லை. புதிதாக விதைக்கப்பட்ட கோதுமை வயலில் களைகள் விதைக்கப்படும்போது கோதுமைக்கும் களைக்கும் வித்தியாசம் தெரியாமல் போய்விடுவதைப்போல் ஒரு நிலைமை கிறிஸ்தவ சபைக்கு வரும் என்பதாக இயேசு முன்னறிவித்தார். (மத்தேயு 13:24-30) உண்மையில் நடந்தது அதுதான். முதல் நூற்றாண்டின் முடிவிற்குள் விசுவாசதுரோகம் செழித்தோங்கியிருந்தது. அப்போது தூய வணக்கத்தை கெடுப்பவற்றிற்கு எதிராக கடைசியாக போராடி கொண்டிருந்தவர் அப்போஸ்தலனாகிய யோவானே. (2 தெசலோனிக்கேயர் 2:6; 1 யோவான் 2:18) அப்போஸ்தலர்களுடைய மரணத்திற்கு சற்றுப்பின் புதிய குருவர்க்கம் எழும்பி குறிப்பிடத்தக்க வித்தியாசமான உடைகளை அணிந்து மந்தையை கொடுமைப்படுத்த ஆரம்பித்தது. விசுவாசதுரோகம் எங்கும் பரவியது. உண்மை கிறிஸ்தவர்களை இது எந்தளவு சோர்வடையச் செய்தது! புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட இந்தத் தூய வணக்கம் முழுமையாக கறைபடிந்துவிட்டதைக் கண்டார்கள். அதுவும் கிறிஸ்து சபையை ஸ்தாபித்து ஒரு நூற்றாண்டிற்குள்ளாகவே.
17. முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபையைவிட என்ன கருத்தில் நவீன நாளைய கிறிஸ்தவ சபை அதிக காலம் நிலைத்திருக்கிறது?
17 இப்போது இந்த வேறுபாட்டை ஒப்பிட்டுப் பாருங்கள். அப்போஸ்தலர்கள் மரிக்கும் வரையான காலத்தைவிட இன்று உண்மை வணக்கம் அதிக காலம் இருந்துவந்திருக்கிறது. 1879-ல் இந்தப் பத்திரிகையை வெளியிட ஆரம்பித்தது முதற்கொண்டு யெகோவா நம் வணக்கத்தை மேலுமாக சுத்திகரித்து ஆசீர்வதித்திருக்கிறார். இந்த சுத்திகரிப்புக்காக 1918-ல் யெகோவாவும் இயேசு கிறிஸ்துவும் ஆவிக்குரிய ஆலயத்திற்குள் பிரவேசித்தனர். (மல்கியா 3:1-5) 1919 முதற்கொண்டு யெகோவா தேவனை வணங்குவதற்கான ஏற்பாடு சிறிது சிறிதாய் சுத்திகரிக்கப்பட்டு வருகிறது. பைபிள் தீர்க்கதரிசனங்கள், நியமங்கள் போன்றவற்றின் பேரில் நம் புரிந்துகொள்ளுதல் தெளிவாகிக்கொண்டே வந்திருக்கிறது. (நீதிமொழிகள் 4:18) அப்படியானால், இதற்கான புகழ் யாரிடம் செல்கிறது? அபூரண மனிதர்களுக்கல்ல. சபையின் தலைவராகிய தம்முடைய குமாரன் இயேசுவோடு, யெகோவாவால் மட்டுமே அவருடைய மக்களை இன்றைய உலகின் சீர்கேட்டிலிருந்து காப்பாற்ற முடியும். அப்படியானால் நாம் இந்த சுத்தமான வணக்கத்தின் பாகமாக இருப்பதற்கு யெகோவாவுக்கு எப்போதும் நன்றிசொல்ல மறவாதிருப்போமாக. அதோடு ஒருபோதும் பின்வாங்கிச் சென்று அழியாதிருக்க திட தீர்மானமுள்ளவர்களாய் இருப்போமாக!
18. ஒருபோதும் அழிவுக்குப் பின்வாங்கிச் செல்லாதிருக்க நமக்கு என்ன காரணம் இருக்கிறது?
18 எபிரெய கிறிஸ்தவர்களைப் போலவே, பயத்தின் காரணமாக பின்வாங்குவதை தவிர்ப்பதற்கு நமக்கும் இரண்டாவது காரணம் இருக்கிறது. அதுதான் சகிப்புத்தன்மையின் நம்முடைய சொந்த பதிவு. நாம் சமீப வருடங்களில் யெகோவாவை சேவிக்க ஆரம்பித்திருந்தாலும் சரி அல்லது பல பத்தாண்டுகளாக உண்மையுடன் சேவித்துக் கொண்டிருந்தாலும் சரி, கிறிஸ்தவ வேலையில் நல்ல பதிவைக் கொண்டுள்ளோம். நம்மில் அநேகர் சிறை தண்டனை, தடைகள், கொடுமைகள் அல்லது சொத்துக்களை இழந்துபோதல் போன்ற கஷ்டங்களை சகித்திருக்கிறோம். மேலும், குடும்பத்தில் எதிர்ப்பு, ஏளனம், கேலி, புறக்கணிப்பு போன்றவற்றையும் பலர் எதிர்ப்பட்டிருக்கிறார்கள். வாழ்க்கையில் இப்படிப்பட்ட எல்லா சவால்களும் சோதனைகளும் இருந்தபோதிலும் அவற்றை சகித்து தொடர்ந்து யெகோவாவிற்கு சேவை செய்துவருகிறோம். அவ்வாறு செய்வதன்மூலம் நம்முடைய சகிப்புத்தன்மைக்கு ஒரு பதிவை ஏற்படுத்துகிறோம். பரலோக வங்கியில் சேர்த்து வைத்துள்ள இந்தப் பொக்கிஷத்தை யெகோவா ஒருபோதும் மறக்க மாட்டார். அப்படியானால், நாம் விட்டுவந்த சீர்கெட்ட உலகை நோக்கி பின்வாங்குவதற்கு இது சமயமல்ல! நம்முடைய எல்லா கடின பிரயாசங்களையும் ஏன் வீணாக்க வேண்டும்? அதுவும் முடிவுவர ‘கொஞ்ச காலமே’ இருக்கும் இந்தச் சமயத்தில்.—எபிரெயர் 10:37.
19. அடுத்த கட்டுரையில் நாம் எதை சிந்திப்போம்?
19 ‘நாம் அழிவுக்காக பின்வாங்கிச் செல்வோரில்’ சேராதபடி தீர்மானமாய் இருந்து, ‘விசுவாசிக்கிறவர்களாய்’ இருப்போமாக! (எபிரெயர் 10:39) இந்த வசனத்திற்கு இசைய வாழ்கிறோம் என நாம் எவ்வாறு உறுதியாக கூற முடியும்? மேலும் உடன் கிறிஸ்தவர்கள் இதே மனநிலையை கொண்டிருப்பதற்கு நாம் எவ்வாறு உதவலாம்? அடுத்த கட்டுரையில் இதை சிந்திப்போம்.
[அடிக்குறிப்புகள்]
a மார்ச் 1, 1999 காவற்கோபுரம் பக்கங்கள் 8-23-ஐக் காண்க.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ அழிவுக்குப் பின்வாங்கிச் செல்தல் என்பதன் பொருள் என்ன?
◻ எபிரெய கிறிஸ்தவர்களுக்கு பாரமாக இருந்த நெருக்கடிகள் யாவை?
◻ எபிரெயர்கள் அழிவுக்குப் பின்வாங்கிச் செல்லாதிருப்பதற்கு பவுல் என்ன காரணங்களை அளித்தார்?
◻ அழிவுக்குப் பின்வாங்கிச் செல்லாதிருப்பதில் தீர்மானமாக இருப்பதற்கு நமக்கு என்ன காரணங்கள் இருக்கின்றன?
[பக்கம் 15-ன் படங்கள்]
பேதுரு பயந்து பின்வாங்கியது அவரை ‘அழிவுக்குப் பின்வாங்கிச் செல்பவராக்கவில்லை’