ஆசியாவில் கிறிஸ்மஸ் அலை
• சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர், கொரியா நாட்டைச் சேர்ந்த பிரபல கல்விமான் ஒருவர் சீனாவிலுள்ள பீஜிங்கிற்கு விஜயம் செய்தார். அங்குள்ள கத்தீட்ரல் உட்கூரையில் தீட்டப்பட்டிருந்த ஓவியத்தை உற்றுப் பார்த்தார். மரியாளின் கைகளில் குழந்தை இயேசு இருக்கும் காட்சியை கண்டார். ஓவியத்தில் கண்ட காட்சி அவரை திகைப்படையச் செய்தது. இதோ அவரே அந்தக் காட்சியை விளக்குகிறார்:
“ஒரு தாயின் மடியில் சுமார் ஐந்து அல்லது ஆறு வயது நோஞ்சான் குழந்தை இருந்தது. அந்தத் தாய்க்கு தன் தலையை நேராக தாங்கிப்பிடிக்கும் சக்திகூட இல்லையோ என தோன்றியது. ஒருவேளை தன் மகனின் பரிதாபகரமான நிலைமையை காண பொறுக்காமல், அவள் தன்னுடைய தலையை சாய்த்திருப்பாள். சற்று பின்னால், அநேக ஆவி ஆட்களும் இறக்கைகளையுடைய குழந்தைகளும் அவர்களைச் சுற்றி பறந்துகொண்டிருந்தார்கள். உயரத்தில் இருந்த அந்த ஓவியத்தை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு எந்த நேரத்திலும் அவர்கள் என்மீது விழுந்துவிடுவார்களோ என்று நினைக்கத் தோன்றியது. அவர்களைத் தாங்கிப்பிடிக்க என்னையே அறியாமல் என் கைகள் சென்றது.”
அந்தக் கல்விமான் இந்த ஓவியத்தைக் கண்டு வியந்தது வெகு காலத்திற்கு முன்பு அல்ல. ஐரோப்பாவில் சீர்திருத்தம் ஆரம்பித்து வெகுநாட்களுக்குப் பின்புதான், அதாவது இடைக்காலத்தின் இருண்ட சகாப்தத்திற்கு வெகு நாட்களுக்குப் பின்புதான். சுமார் இரு நூற்றாண்டுகளுக்கு முன்புகூட மரியாளைப் பற்றியும் இயேசுவை பற்றியும் ஆசிய மக்கள் அவ்வளவாக அறியவில்லை என்றே தெரிகிறது. அதேபோல் பெரும்பாலான ஆசிய மக்களுக்கு கிறிஸ்தவம் என்பது அந்த ஓவியத்தைப் போன்றே புரியாத ஒன்று. ஆனால் இன்றோ நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது! ஒவ்வொரு கிறிஸ்மஸ் சீஸனிலும் குழந்தை இயேசுவின் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்படுகின்றன. இவையெல்லாம் இப்போது ஆசிய மக்களுக்கு பழகிப்போய்விட்டது. ஆகவே, கிறிஸ்மஸ் காலங்களில் விழாக்கோலம் பூணும் ஐரோப்பிய தெருக்கள் போல் இங்குள்ள தெருக்களும் விழாக்கோலம் பூணுகின்றன.
கிறிஸ்மஸுக்கு ஒரு மாதத்திற்கு முன், அதாவது நவம்பர் 25, 1998 அந்தி வேளையில், வானத்து விண்மீன்கள் அத்தனையும் மலர்களாக உதிர்ந்து மரங்களில் வந்து ஒட்டிக்கொண்டது போல் 300 மரங்களில் அலங்கரிக்கப்பட்ட ஒரு லட்சத்திற்கும் மேலான பல்புகள் கண்சிமிட்ட பாரிஸிலுள்ள பிரபல ஷான்சலீஸா என்ற அந்த வீதியே ஜக ஜோதியாக ஜொலித்தது. கொரியாவிலுள்ள ஷியோலிலும் இதேபோல்தான்! இங்குள்ள பஜாரிலுள்ள ஒரு பெரிய அங்காடி ‘மெகா’ சைஸ் கிறிஸ்மஸ் மரத்தை காட்சிக்கு வைத்திருந்தது. அந்த மரத்தை அலங்கரித்த மின்சார ஒளி தீபங்கள் தலைநகரை ஆக்கிரமித்திருந்த இருளை விரட்டியடிக்க, வெகு சீக்கிரத்தில் அதன் மற்ற தெருக்கள் எல்லாமே அதற்கு கோரஸ் பாடுவது போல அலங்கார தீபங்களேற்றின. மொத்தத்தில் நகரமே ஒளி வெள்ளத்தால் மூழ்கியிருந்தது.
டிவியிலும் ரேடியோவிலும் செய்தித்தாள்களிலும் ஒவ்வொரு நாளும் கிறிஸ்மஸ் நிகழ்சிநிரல்களே ஆக்கிரமிப்பு செய்திருந்தன. நாடுமுழுவதும் கிறிஸ்மஸ் அலை, அந்த வருடத்தின் முடிவை வரவேற்பதிலேயே அனைவரும் திளைத்திருக்கின்றனர். ஷியோலில் உள்ள அநேக சர்ச்சுகளைப் பார்த்து பார்வையாளர்கள் ஆச்சரியப்படுகின்றனர். சர்ச்சுகள் அவசர அவசரமாக அலங்காரம் செய்கின்றன. ஐக்கிய மாகாணங்கள் நவம்பர் கடைசியில் தேங்ஸ்கிவிங் டே (நன்றி தெரிவிக்கும் நாள்) கொண்டாடுகிறார்கள். ஆனால், இதற்குள் ஆசிய நாடுகளிலுள்ள கொரியாவும் பிற நாடுகளும் கிறிஸ்மஸ் குதூகலத்தில் ஆழ்ந்துவிடுகின்றன.
பெரும்பாலான ஆசிய நாடுகள் கிறிஸ்தவ நாடுகள் அல்ல. எடுத்துக்காட்டாக, கொரியாவின் ஜனத்தொகையில் கிறிஸ்தவர்கள் எனப்படுவோர் 26.3 சதவீதத்தினரே. அதேபோல ஹாங் காங்கில் 7.9 சதவீதத்தினர், தைய்வானில் 7.4 சதவீதத்தினர், ஜப்பானில் 1.2 சதவீதத்தினரே உள்ளனர். ஆகவே ஆசிய நாட்டினர் எல்லாரும் கிறிஸ்தவத்தை கடைப்பிடிப்பதில்லை. ஆனால் கிறிஸ்மஸ் கொண்டாடுவதில் அவர்களுக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை. சொல்லப்போனால், ஐரோப்பிய நாட்டினரைவிட அதிக உற்சாகத்தோடு பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். உதாரணமாக, ஹாங்காங் மக்களில் அநேகர் புத்த மதத்தினராகவோ அல்லது தாவோ மதத்தினராக இருந்தாலும், கிறிஸ்மஸை ஆடம்பரமாக கொண்டாடுவதில் பேர் பெற்றவர்கள். வெறும் 0.1 சதவீதம் கிறிஸ்தவர்கள் உள்ள சீனாவில்கூட கிறிஸ்மஸ் வேகமாக பிரபலமாகி வருகிறது.
ஏன் ஆசியாவில் மூலைமுடுக்குகளில்கூட கிறிஸ்மஸ் கொண்டாட்டம்? கிறிஸ்தவர்களாக சொல்லிக்கொள்வோர் கிறிஸ்மஸை இயேசுவின் பிறந்த நாள் என்கிறார்கள். ஆனால் இயேசுவை மேசியாவாக ஏற்றுக்கொள்ளாத ஜனங்கள் எதற்காக கொண்டாடுகிறார்கள்? இவ்வாறு கிறிஸ்மஸை கொண்டாடும் மக்களோடு சேர்ந்து உண்மை கிறிஸ்தவர்களும் கொண்டாட வேண்டுமா? ஆசியாவின் பழம்பெரும் நாடாகிய கொரியாவில் கிறிஸ்மஸ் எவ்வாறு பிரபலமானது என்பதை தெரிந்துகொண்டால், இக்கேள்விகளுக்கு விடைகள் கிடைத்துவிடும். இவற்றை அடுத்த கட்டுரையில் காணலாம்.