எங்கள் தாயக மிஷனரி பிராந்தியத்தைச் சந்தித்தல்
நான் சந்திக்கும் கிறிஸ்தவ சபைகளின் தொகுதி, போர்த்துகலில் இருந்து சீனா வரையாக என்னைக் கொண்டுசெல்கிறது—அல்லது அவ்வாறே தோன்றுகிறது. எனினும், என் மனைவி ஆலிவும், நானும் பிரிட்டனை விட்டு ஒருபோதும் செல்லவில்லை.
இந்த நாடு முழுவதிலும் பரவலாக காணப்படும், எண்ணிக்கையில் பெருகிக்கொண்டே வரும் யெகோவாவின் சாட்சிகளினுடைய பிற மொழி சபைகளை நாங்கள் சந்தித்து வருகிறோம். பிரான்ஸின் நார்மண்டி கடற்கரையைத் தாண்டி ஏறக்குறைய 20 கிலோமீட்டர் தூரத்திலுள்ள ஜெர்ஸி தீவிலிருந்து தொடங்குகிறோம். இங்கு போர்த்துகீஸிய தொகுதி உள்ளது. இங்கிருந்து இங்கிலாந்தின் வடக்கில் சந்தர்லாந்து பட்டணம் வரையாகச் செல்கிறோம்; அங்கு அக்கறை காட்டும் சீன மொழி ஆட்களை நாங்கள் சந்திக்கிறோம். முன்னேறிக்கொண்டிருப்பதும் ஆவிக்குரியப் பிரகாரமாய்ச் செழித்தோங்குவதுமான பன்மொழி பிராந்தியத்தில் நாங்கள் பங்குகொள்கிறோம். இந்த அசாதாரண ஊழிய நியமிப்பை நாங்கள் எப்படி பெற்றோம்? எங்கள் தாயக மிஷனரி பிராந்தியத்துக்கு என்ன சம்பவித்துக்கொண்டிருக்கிறது? என்னை விளக்க அனுமதியுங்கள்.
ஒவ்வொரு வாரமும் வெவ்வேறு சபையைச் சந்தித்து, ஆலிவும் நானும் ஏறக்குறைய 20 ஆண்டுகள் பயண ஊழியத்தில் செலவிட்டிருக்கிறோம். வடக்கிலிருந்து தெற்காகவும், கிழக்கிலிருந்து மேற்காகவும், பிரிட்டன் முழுவதற்கும் எங்கள் பயணங்கள் எங்களைக் கொண்டுசென்றிருக்கின்றன. மேலும், சமீபத்தில், மத்தியதரைக் கடலிலுள்ள மால்டா தீவில் இருக்கும் நம் கிறிஸ்தவ சகோதரரிடமும் கொண்டுசென்றது. அங்கு மேம்பட்ட கிறிஸ்தவ உபசரிப்பை நாங்கள் அனுபவித்தோம். (அப்போஸ்தலர் 28:1, 2-ஐ ஒப்பிடுக.) மால்டாவில் மூன்று ஆண்டுகள் இருந்த பின்பு, எங்களுடைய அடுத்த ஊழிய நியமிப்பு எங்கிருக்குமென சிந்திக்கத் தொடங்கினோம். அது ஒருவேளை நாட்டுப்புறத்திலுள்ள ஆங்கிலேயரது பகுதியை நாங்கள் சந்திக்கவேண்டியதாய் இருக்கலாம் என்று நாங்கள் கற்பனை செய்துகொண்டு, இதற்கு ஏற்றவாறு எங்கள் மனதைப் பக்குவப்படுத்திக்கொள்ளத் தொடங்கினோம். வெவ்வேறுபட்ட 23 மொழிகளைப் பேசும் தொகுதிகளும் சபைகளும் அடங்கிய இந்தப் புதிய வட்டாரத்தில் சேவிக்கும்படியான எங்கள் ஊழிய நியமிப்பு கடிதத்தை நாங்கள் பெற்றபோது எத்தகைய வியப்பூட்டுவதாக இருந்தது!
நாங்கள் இதை எவ்வாறு சமாளிப்போமோ என வியப்படைந்தோம். மால்டாவில் எங்களுக்கு கிடைத்த அனுபவத்தைத் தவிர, வேறுபட்ட வளர்ப்பு சூழ்நிலையும் நாகரிக பண்பாடுமுடைய ஆட்களோடு நாங்கள் ஒருபோதும் பழக்கப்பட்டிருக்கவில்லை. அதிகமாக ஆங்கிலம் புரியாதவர்களை ஊக்கப்படுத்தி உதவிசெய்வதற்கு உண்மையில் எங்களால் முடியுமா? பிற மொழிகள் எங்களுக்குத் தெரியாமல் எவ்வாறு பேச்சுத்தொடர்பு கொள்வோம்? வித்தியாசமான பழக்கவழக்கங்களையும் உணவையும் பற்றியதென்ன? தக்கவாறு எங்களை மாற்றியமைத்துக் கொள்வோமா? இந்த மக்கெதோனிய அழைப்புக்குப் பதிலளிப்பதை ஜெபத்துடன் நாங்கள் சிந்திக்கையில், இவற்றைப்போன்ற கேள்விகளே எங்கள் மனங்களுக்குள் எழும்பின.—அப்போஸ்தலர் 16:9, 10; 1 கொரிந்தியர் 9:19-22.
மொழி சம்பந்தப்பட்ட இடையூறை மேற்கொள்ளுதல்
“பல மொழிகளை அறியாததால், இது என்னால் இயலாதென முதன்முதலில் நான் உணர்ந்தேன்” என்று ஆலிவ் விளக்குகிறாள். “சகோதரிகளுக்கு நான் எப்படி உதவிசெய்ய முடியுமென்று புரியவில்லை. பின்பு, ஒரு ஊழிய நியமிப்பை ஏற்க ஒருபோதும் மறுக்காதீர்கள் என்று, எங்களோடு முதன்முதல் பைபிளைப் படித்த தம்பதிகள் எங்களை ஊக்கப்படுத்தினது என் நினைவுக்கு வந்தது. நாம் செய்யமுடியாத ஒன்றை செய்யும்படி யெகோவா நம்மை ஒருபோதும் கேட்கிறதில்லை என்று அவர்கள் எங்களுக்குக் கற்பித்திருந்தார்கள்.” ஆகையால் நாங்கள் இருவரும் அந்த ஊழிய நியமிப்பை மனப்பூர்வமாய் ஏற்றுக்கொண்டோம்.
இப்போது சிந்தித்துப் பார்க்கையில், மற்றொரு மொழி எங்களுக்குத் தெரியாதிருந்ததானது, பட்சபாதம் இல்லாமல் எல்லாரையும் ஒரே மாதிரியாக நடத்த எங்களுக்கு உதவிசெய்ததென்று நாங்கள் காண்கிறோம். உதாரணமாக, ஒவ்வொரு வாரமும் வெவ்வேறுபட்ட ஒரு மொழியில் நடத்தப்பட்ட கூட்டங்களில் ஆஜராயிருந்ததானது, சொல்லப்படுவது என்னவென்று பெரும்பாலும் புரிந்துகொள்ளமுடியாமல் ஆங்கில மொழியில் நடத்தப்பட்ட கூட்டங்கள் முழுவதிலும் உட்கார்ந்திருக்கையில் சகோதரர் எவ்வாறு உணர்ந்திருப்பார்கள் என்பதை நாங்கள் புரிந்துகொள்ளும்படி செய்தது. சொல்லப்படுவதன் கருத்தைப் புரிந்துகொள்ளக்கூடும்படி, கூட்டங்களுக்காக நாங்கள் உண்மையில் நன்றாய் தயாரிப்பு செய்ய வேண்டியிருக்கிறது. கூட்டங்களில் ஏதாவது ஒரு கேள்விக்கு ஆலிவ் எப்பொழுதும் பதில் சொல்கிறாள். அந்தப் பதிலை அவள் ஆங்கிலத்தில் தயாரித்து, ஒரு சகோதரி அதைத் தனக்காக மொழிபெயர்த்து தரும்படி செய்து, அந்த மொழிபெயர்ப்பை ஓசையின் அடிப்படையில் ஆங்கிலத்தில் எழுதிக்கொள்கிறாள். குறிப்பு சொல்வதற்குச் சிறிது தயக்கத்துடனேயே தன் கையைத் தூக்குவதாக அவள் சொல்கிறாள். அவளுடைய முயற்சிகள் சில சமயங்களில் சிரிப்பை வரவழைக்கின்றன. ஆனால் இது அவளைத் தடுத்து நிறுத்துகிறதில்லை. “பதில்சொல்லும்படி நான் எடுக்கும் பிரயாசத்தைக் குறித்து சகோதரர் மகிழ்ச்சியடைகிறார்கள் என்பது எனக்குத் தெரியும். நான் பதில் சொல்வதானது, அந்த மொழியில் நன்றாய்ப் பேசத் தெரிந்தவர்களைக் கூட்டத்தில் பங்குகொள்ளும்படி உண்மையில் தூண்டுவிக்கிறது” என்று அவள் சொல்கிறாள்.
பேச்சுகளைக் கொடுப்பது எனக்கும் வேறுபட்டதாக இருக்கிறது. ஏனெனில், மொழிபெயர்ப்பாளருக்காக, ஒவ்வொரு வாக்கியத்திற்குப் பின்பும் நான் நிறுத்தவேண்டும். என் எண்ணக்கோர்வையை நான் எளிதாக இழந்துவிடலாம். நான் மேலுமதிக அளவில் கவனத்தை ஒருமுகப்படுத்தி, என் பேச்சை வெகுவாய்ச் சுருக்கிக்கொள்ள வேண்டியிருப்பதாகக் காண்கிறேன். ஆனாலும் அது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.
பலவகைப்பட்ட ஊழியம்
பிரிட்டனின் நகர பகுதிகள் பலவற்றில், பிற மொழிகளைப் பேசும் ஆட்கள் எங்கும் சிதறியிருக்கின்றனர். ஒருவேளை, ஒரு வீதியில் இருவரே வாழலாம், பின்பு மற்றவர்களைக் காண்பதற்கு தூரமாகப் பயணப்பட வேண்டியிருக்கிறது. எனினும், அவர்களுடைய சொந்த மொழியில் அவர்களுக்கு வணக்கம் தெரிவித்து அவர்களுடைய பிரதிபலிப்பைக் காண்கையில், எடுத்தப் பிரயாசம் வீணல்லவென்று உணரச் செய்கிறது. நான் உடன்சேர்ந்து செல்லும் சகோதரர், வீட்டுக்காரரின் சொந்த மொழியில் ராஜ்ய செய்தியை சொல்கையில், அதற்குப் பதில் மகிழ்ச்சி மிகுந்ததாக அடிக்கடி உள்ளது.
எங்கள் 40 ஆண்டுகால ராஜ்ய சேவையின்போது நாங்கள் அனுபவித்திருக்கிறவற்றில், பிறமொழி பேசும் பிராந்தியத்தில் செய்யும் ஊழியம் நிச்சயமாகவே ஆர்வத்தை வெகுவாகத் தூண்டி எழுப்பும் ஒன்றாக இருந்திருக்கிறது. அதிகரிப்புக்கான வாய்ப்பு மிகுதியாய் உள்ளது. தங்கள் தாய்மொழியில் சத்தியம் போதிக்கப்பட்டால், பலர் அதை அதிக விரைவாகவும் ஆழ்ந்த மதித்துணர்வுடனும் கற்றுக்கொள்கின்றனர் என்பதில் சந்தேகமில்லை. (அப்போஸ்தலர் 2:8, 14, 41) கூட்டத்தின் முடிவில் சகோதரரும் சகோதரிகளும் ஆனந்தக் கண்ணீருடன் இருப்பதைக் காண்பது உணர்ச்சிப்பூர்வமாய் மனதை மிகவும் கனிவிக்கச் செய்கிறது. சிலருடைய காரியங்களில், முதல் தடவையாக முழு நிகழ்ச்சிநிரலையும் செவிகொடுத்துக் கேட்டு புரிந்துகொள்ள முடிந்த அனுபவமாக அது இருந்திருக்கிறது.
வீடுவீடாகப் பிரசங்கிக்கும்போது, அறிமுகத்தையாகிலும் வீட்டுக்காரரின் மொழியில் சொல்ல நாங்கள் பிரயாசப்படுகிறோம். அதைச் சொல்வது எங்களுக்குச் சிலசமயங்களில் தடுமாற்றமாக இருந்தாலும் அவ்வாறு செய்ய பிரயாசப்படுகிறோம். உதாரணமாக, குஜராத்தி வீட்டாருக்குப் பொதுவாகச் சொல்லும் வாழ்த்துரை கெம்ச்சோ என்பதாகும். “எப்படி இருக்கிறீர்கள்?” என இது வெறுமனே அர்த்தப்படுத்துகிறது. ஒரு சமயத்தில் நான் இதைத் தவறாக உச்சரித்துவிட்டது, பிரபல்யமாக இருந்த ஒரு தரமானக் காப்பிக்கு வியாபார விளம்பரம் செய்வதைப்போல் தொனித்ததாகத் தெரிகிறது; இருந்தபோதிலும், ஒரு வீட்டில் இருந்தவர்களுக்கு நான் குஜராத்தியில் வாழ்த்துரை சொன்னபோது, அந்தக் கணவரும் மனைவியும் முகம்மலர்ந்தனர். அவர்கள் உடனடியாக எங்களை வீட்டுக்குள் அழைத்து, தயவாக எங்களுக்குக் காப்பி கொடுத்தார்கள்—தவறாக உச்சரித்ததனால் அல்ல. சந்தித்துக்கொண்டிருந்த எங்கள் தொகுதியிலுள்ள யெகோவாவின் சாட்சிகளில் சிலருக்கு அவர்கள் உறவினராக இருந்தார்கள், சத்தியத்தில் உண்மையான அக்கறையையும் அவர்கள் காண்பித்தார்கள்.
ஆங்கிலம் பேசும் ஒரு சகோதரி, சீன மொழியைப் பேசும் ஓர் அம்மாளுக்குப் பல ஆண்டுகளாக பத்திரிகைகளை அடிக்கடி அளித்து வந்தார்கள். இலவச பைபிள் படிப்பு நடத்த விரும்புவதாக அவ்வப்போது சொல்லிவந்தார்கள், ஆனால் இது ஏற்கப்படவில்லை. சீன மொழியைக் கற்றுக்கொண்டிருந்த ஒரு சகோதரி, ஒருநாள் அவர்களோடுகூட சென்று, நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் புத்தகத்தை அந்த மொழியில் அளித்தார்கள். அக்கறைகாட்டின அந்த வீட்டுக்கார அம்மாள் அதை உடனடியாக ஏற்றார்கள். a அந்தப் புத்தகத்தைத் தன்னுடைய மொழியில் இப்போது வைத்திருந்ததனால், ஒரு பைபிள் படிப்புக்கு அவர்கள் சம்மதித்தார்கள். அந்த அம்மாளின் சொந்த மொழியில் பேசின அந்த சில சொற்கள் அந்த அம்மாளை சாதகமான முறையில் செயல்பட தூண்டியது.
பல்வேறு நாகரிக பண்பாடுகள்
சில நாகரிக பண்பாடுகளில், தங்கள் மனைவிகள் இரவில் தனிமையாகச் செல்வதை ஆண்கள் விரும்புகிறதில்லை என்பதை நாங்கள் அறிந்திருக்கவில்லை. இது சாயங்காலத்தில் நடத்தப்படும் கூட்டங்களுக்கு ஆஜராவதை, சகோதரிகள் பலருக்கு மிகக் கடினமாக்குகிறது. மணம் செய்துகொள்ளாமல் வீட்டிலேயே தொடர்ந்து வாழத் தெரிந்துகொள்ளும் வாலிபப் பெண்கள், அந்தக் குடும்பத்துக்கு அவமதிப்பைக் கொண்டுவருகிறார்கள் என்று ஆசிய சமுதாயத்தினரில் சிலர் நம்புகின்றனர். திருமணம் செய்துவைக்கும்படி குடும்பத்தினர் தனக்குத் தெரிந்தெடுத்திருந்த ஆளை மணம் செய்துகொள்வதற்கு ஓர் இளம் சகோதரி மறுத்தபோது, அவளுடைய தகப்பன் விஷம்குடித்து சாக விரும்பினார். ஆம், இத்தகைய சகோதரிகள் சகிக்க வேண்டியதாக இருப்பது குறிப்பிடத்தக்கதாயுள்ளது! இருப்பினும், அந்தக் குடும்பத்தின் வாழ்க்கையின்பேரில் சத்தியத்தின் பாதிப்பையும், யெகோவாவினிடமாக அந்த சகோதரிகள் கொண்டுள்ள உண்மைப்பற்றுறுதி அவர்களுடைய பெற்றோரின் மனதை எந்தளவுக்கு பாதிக்கிறதென்பதையும் நீங்கள் காண்கையில், அது உண்மையிலேயே வியப்பாக இருக்கிறது.
இந்த ஊழிய நியமிப்பை ஏற்றதால், எங்களில் சில மாற்றங்களை நாங்கள் செய்ய வேண்டியதாக இருந்திருக்கிறது. இந்தப் பயண ஊழியம் செய்ய நாங்கள் தொடங்குவதற்கு முன்னால், என் உணவு, இங்கிலாந்தில் சமைக்கும் முறையில் இருக்க வேண்டியதாக இருந்தது; ஆனால் இப்போதோ, அது எவ்வளவுக்கெவ்வளவு காரசாரமாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு நல்லதாக இருக்கிறது. இத்தகைய—சமைக்கப்படாத மீன்களிலிருந்து பல்வேறு கறிமசாலை நிரம்பிய—சமையல்களை அனுபவித்து மகிழ்வதற்கு முன்பாக, அவற்றைச் சாப்பிடாமல் விட்ட பல ஆண்டுகளுக்காக நாங்கள் வருந்துகிறோம்.
சிறப்பான எதிர்கால வாய்ப்புகள்
பல இடப்பகுதிகளில் பிற மொழி பிராந்தியம் செழித்தோங்குவதற்கு இதுவே காலமாக இருப்பதாய்த் தெளிவாகத் தோன்றுகிறது. மேலும் மேலும் அதிகமானப் பிரசுரங்கள் பல்வேறுபட்ட மொழிகளில் இப்போது கிடைக்கின்றன. புதிய சபைகள் அமைக்கப்பட்டு வருகையில் யெகோவாவின் ஆசீர்வாதத்தைக் காண முடிகிறது. பிற மொழிகளை அறிந்திருக்கும் சகோதரர்கள், உதவிசெய்வதற்காக, தூரத்திலுள்ள சபைகளிலிருந்து வருகின்றனர்.
இதற்கான ஒரு சிறந்த உதாரணம், பிரெஞ்சு மொழியில் ராஜ்ய நற்செய்தியைப் பிரசங்கித்தபோது கிடைத்த பலனாகும். ஜயரிலிருந்தும் மற்ற ஆப்பிரிக்க நாடுகளிலிருந்தும் பிரெஞ்சு மொழி பேசும் அகதிகள் பலர், சமீப ஆண்டுகளில் பிரிட்டனுக்கு வந்திருக்கின்றனர். பிரெஞ்சு மொழியில் முதல் சபை, லண்டனில் ஸ்தாபிக்கப்பட்டபோது, ஏறக்குறைய 65 ராஜ்ய பிரஸ்தாபிகள் அதில் இருந்தனர். ஓர் ஆண்டுக்குப் பின்பு, இந்த எண்ணிக்கை 117-க்கு உயர்ந்துவிட்டது; இவர்களில், 48 பேர் ஒழுங்கான பயனியர்களாக முழுநேரம் சேவித்தனர். பெருகிக்கொண்டே போகும் அக்கறையைக் கவனிப்பதற்கு சீக்கிரத்தில் இரண்டாவது சபை ஒன்று ஸ்தாபிக்கப்பட்டது. அக்கறை காட்டுவோருக்கு இப்போது மேலும் அதிகக் கவனம் செலுத்த முடிகிறது. இவர்களில் 345 பேர் 1995-ல் நினைவு ஆசரிப்புக்கு வந்திருந்தனர். அக்கறைகாட்டுவோர் அதிகரித்துக்கொண்டேயிருக்கும் இந்தப் பிராந்தியத்தைக் கவனிப்பதற்கு, பெனின், கோட் டிவாய்ரி, மொராக்கோ, ஜயர் ஆகிய இடங்களில் சேவித்திருந்த முன்னாள் கிலியட் பட்டதாரிகள் தங்கள் அனுபவத்தை இப்போது பயன்படுத்துகின்றனர். இதன் பிரதிபலிப்பு வியப்பூட்டுகிறது.
பிரெஞ்சு மொழி சபையை சந்தித்த சமயத்தில், ஓர் இளம் ஆப்பிரிக்க பெண்ணுடன் ஒரு பைபிள் படிப்புக்குச் சென்றேன். சபை சந்திப்பு முடிந்து நாங்கள் அவ்விடத்தைவிட்டு செல்லும்போது, “தயவுசெய்து போகாதீர்கள். இன்னும் கொஞ்ச நாட்கள் இருங்கள்” என்று அந்த இளம் பெண் கெஞ்சினாள். இன்னும் அதிகமானவற்றை அறிந்துகொள்ள அவள் விரும்பினாள். முதல் நூற்றாண்டு லீதியாளை எனக்கு நினைப்பூட்டுபவளாக அவள் இருந்தாள்.—அப்போஸ்தலர் 16:14, 15.
சபைகளாக வளரும்படி அந்த பிற மொழி சிறிய தொகுதிகளுக்கு உதவிசெய்வதே எங்கள் முதல் வேலையாக இருந்தது. அந்தத் தொகுதிகளில் வாராந்தர சபை புத்தகப் படிப்பைச் சகோதரர்கள் நடத்திவந்தார்கள். சுருக்கமாக தேவராஜ்ய ஊழியப் பள்ளியை மாதத்திற்கு ஒருமுறை நடத்தும்படி நாங்கள் அதை ஆரம்பித்து வைத்தோம். வெளி ஊழியத்தில் நல்ல முறையில் பேசுவதற்கு இது அவர்களுக்கு உதவிசெய்கிறது. பின்பு, வாராந்தர சபைக் கூட்டங்கள் ஐந்தையும் நடத்தும்படி அவர்கள் படிப்படியாய் முயற்சி செய்கிறார்கள். சீனமொழி (கன்டோனீஸ்), பிரெஞ்சு, குஜராத்தி, ஜாப்பனீஸ், போர்ச்சுகீஸ், பஞ்சாபி, தமிழ், உவெல்ஷ் ஆகியவற்றை பேசும் புதிய சபைகள் எங்களுக்கு ஏற்கெனவே இருக்கின்றன.
செவிடராக இருக்கும் சகோதரரின் கூட்டங்களுக்கு ஆஜராகும் சிலாக்கியத்தையும் நாங்கள் அனுபவித்து மகிழ்ந்திருக்கிறோம். தங்கள் கை சைகை மொழியில் சகோதரர் பாடுவதைக் கவனிப்பது மனதை உருக்கும் விஷயமாக இருக்கிறது. தங்கள் பிரசங்க ஊழியத்தில் சைகை மொழியில் அவர்கள் பேசுகிறார்கள் என்பதை நான் அறிந்து, ராஜ்ய பிரசங்கத்தில் பங்குகொள்வதற்கு அவர்கள் எடுக்கும் உள்ளார்ந்த முயற்சிகளை உயர்வாய் மதிக்கிறேன். செவிடரும் ஊமையுமாய் இருப்போரின் சைகை பேச்சை மொழிபெயர்ப்பவர்களும் அவர்களுக்கு இருக்கிறார்கள். ஒருவரும் அசட்டைசெய்யப்படாதபடி யெகோவா நிச்சயப்படுத்திக்கொள்கிறார் எனத் தோன்றுகிறது.
குறிப்பிட்ட ஒரு வேண்டுகோளை நாங்கள் செய்ய வேண்டுமென்றால், அது இயேசு பின்வருமாறு செய்ததைப் போன்றதாகவே இருக்கும்: “அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள்.” (மத்தேயு 9:38) நம்முடைய சகோதரரில் பலர், தங்கள் சபை பிராந்தியத்தில் உள்ள இனத் தொகுதியாரின் மொழியைக் கற்கும் சவாலை ஏற்கின்றனர். வெவ்வேறு மொழிகளைப் பேசும் அற்புத வரங்களை உடையோராக நாம் இல்லை என்றபோதிலும், எங்கள் தாயக மிஷனரி பிராந்தியத்தில்—அறுவடைக்கு முற்றியுள்ள வயலில்—பிரசங்க ஊழியத்திற்கு யெகோவா நிச்சயமாகவே வாய்ப்பளித்துக்கொண்டிருக்கிறார். (யோவான் 4:35, 36)—காலின் சேமர் என்பவரால் சொல்லப்பட்டபடி.
[அடிக்குறிப்புகள்]
a உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸையிட்டி ஆஃப் இண்டியா பிரசுரித்தது.