குடும்ப வாழ்க்கையில் தேவ சமாதானத்தை நாடுங்கள்
“ஜனங்களின் குடும்பங்களே, யெகோவாவுக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள், யெகோவாவுக்கே அதைச் செலுத்துங்கள்.”—சங்கீதம் 96:7, NW.
1. குடும்ப வாழ்க்கைக்கு என்ன வகையான ஆரம்பத்தை யெகோவா கொடுத்தார்?
முதல் ஆணையும் முதல் பெண்ணையும் திருமணத்தில் யெகோவா இணைத்தபோது, அவர் ஆரம்பித்து வைத்த குடும்ப வாழ்க்கை சமாதானமும் சந்தோஷமுமாய் இருந்தது. உண்மையில் சொல்லப்போனால், முதன்முதல் பதிவுசெய்யப்பட்ட கவிதையில் ஆதாம் தன்னுடைய மிகுந்த சந்தோஷத்தைப் பின்வருமாறு வெளிப்படுத்துமளவுக்கு அவ்வளவு மகிழ்ச்சியுள்ளவனாய் இருந்தான்: “இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள்.”—ஆதியாகமம் 2:23.
2. கடவுள் தம்முடைய மானிட பிள்ளைகளுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவருவதோடுகூட வேறு எதையும் தம் மனதில் வைத்திருந்தார்?
2 திருமணத்தையும் குடும்ப ஏற்பாட்டையும் கடவுள் தொடங்கி வைத்தபோது, தம்முடைய மானிட பிள்ளைகளுக்கு வெறுமனே மகிழ்ச்சியைக் கொண்டுவருவதைவிட அதிகத்தை மனதில் வைத்திருந்தார். அவர்கள் தம்முடைய சித்தத்தை செய்யும்படி விரும்பினார். அந்த முதல் ஜோடியிடம் கடவுள் இவ்வாறு சொன்னார்: “நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள்.” (ஆதியாகமம் 1:28) உண்மையிலேயே பலன்தரும் வேலை. இந்த முதல் தம்பதியாகிய ஆதாமும் ஏவாளும் கீழ்ப்படிதலோடு யெகோவாவின் சித்தத்தை செய்திருந்தால், இவர்களும் அவர்களுடைய வருங்கால பிள்ளைகளும் எவ்வளவு மகிழ்ச்சியுடன் இருந்திருப்பார்கள்!
3. தேவ பக்தியோடு வாழ்வதற்கு குடும்பங்களுக்கு என்ன தேவைப்படுகிறது?
3 என்றபோதிலும், இன்றும்கூட, ஒன்றுசேர்ந்து கடவுளுடைய சித்தத்தை செய்கிற குடும்பங்கள் மிகவும் மகிழ்ச்சி நிறைந்தவையாய் இருக்கின்றன. கீழ்ப்படிதலுள்ள அத்தகைய குடும்பங்கள் என்னே ஒரு ஒளிமயமான எதிர்காலத்தை பெற்றிருக்கின்றன! அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது.” (1 தீமோத்தேயு 4:8) உண்மையான தேவபக்தியோடு வாழும் குடும்பங்கள் யெகோவாவின் வார்த்தையில் காணப்படும் நியமங்களைப் பின்பற்றி, அவருடைய சித்தத்தைச் செய்கின்றன. அவை தேவ சமாதானத்தை நாடுகின்றன, அதன் காரணமாக ‘இந்த ஜீவனில்’ மகிழ்ச்சியைக் கண்டடைகின்றன.
குடும்ப வாழ்க்கை கஷ்டத்திற்குள்ளாக்கப்படுகிறது
4, 5. குடும்ப வாழ்க்கை இப்பொழுது உலகமுழுவதும் கஷ்டத்திற்குள்ளாக்கப்படுகிறது என்று ஏன் சொல்லலாம்?
4 சாதாரணமாக, நாம் எல்லா குடும்பத்திலும் சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் காண்பதில்லை. பாப்புலேஷன் கவுன்ஸில் என்றழைக்கப்படும் மக்கள் தொகையியல் நிலையம் ஒன்றினால் தயாரிக்கப்பட்ட ஒரு ஆராய்ச்சி அறிக்கையைக் குறிப்பிட்டு, த நியூ யார்க் டைம்ஸ் கூறுவதாவது: “பணக்கார நாடுகளிலும் ஏழை நாடுகளிலும் ஒரேமாதிரியாகவே, குடும்ப வாழ்க்கையின் அமைப்புமுறையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுவருகிறது.” இந்த அறிக்கையை எழுதிய ஒருவர் இவ்வாறு கூறியதாக சொல்லப்பட்டது: “குடும்பம் என்பது பொருளாதார தேவையை தகப்பன் பூர்த்தி செய்பவராகவும், உணர்ச்சி சம்பந்தமான தேவைகளை தாய் கவனித்துக் கொள்பவராகவும் இருக்கிற நிலையான, ஒன்றிணைந்த ஒரு அமைப்பு என்ற கருத்து தவறானது. நிஜம் என்னவென்றால், திருமணமாகாமலே தாய்மை, அதிகரிக்கும் மணவிலக்கு வீதம், சிறு குடும்பங்கள் போன்ற போக்குகளே உலகம் முழுவதும் இருந்துகொண்டிருக்கின்றன.” இத்தகைய போக்குகளின் காரணமாக, லட்சக்கணக்கான குடும்பங்கள் நிலையான தன்மையும் சமாதானமும் மகிழ்ச்சியும் இல்லாமல் இருக்கின்றன, அநேகம் முறிவடைந்தும் வருகின்றன. ஸ்பெய்னில், 20-ம் நூற்றாண்டின் இறுதி பத்தாண்டுகளுடைய தொடக்கத்தில், மணவிலக்கு வீதம் 8 திருமணங்களில் 1 என்ற அளவுக்கு அதிகரித்தது—வெறும் 25 ஆண்டுகளுக்கு முன் 100-க்கு 1 என்று இருந்த வீதத்திலிருந்து ஒரு பெரும் அதிகரிப்பு. ஐரோப்பாவிலேயே மிக உயர்ந்த மணவிலக்கு வீதத்தை பெற்றிருப்பது இங்கிலாந்துதான் என அறிக்கை செய்யப்படுகிறது—அதாவது 10 திருமணங்களில் 4 திருமணங்கள் தோல்வியுறுகின்றன. ஒற்றைப் பெற்றோர் குடும்பங்களின் எண்ணிக்கையிலும் இந்த நாடு அதிகரிப்பைக் கண்டிருக்கிறது.
5 சிலர் மணவிலக்குப் பெற கொஞ்சமும் பொறுமையற்றவர்கள்போல் இருக்கின்றனர். ஜப்பானில் டோக்கியோவுக்கு அருகில் உள்ள “பிணைப்பை முறிக்கும் கோயிலுக்கு” அநேகர் படையெடுத்துச் செல்கின்றனர். இந்த ஷின்டோ கோயில், மணவிலக்குக்கும் இஷ்டமில்லாத மற்ற உறவுகளை முறித்துக்கொள்வதற்குமான கோரிக்கை மனுக்களை ஏற்றுக்கொள்கிறது. ஒவ்வொரு வணக்கத்தாரும் அவனுடைய அல்லது அவளுடைய வேண்டுகோளை ஒரு மெல்லிய மரப்பலகையில் எழுதி, இந்தக் கோயிலின் சுவர்களில் தொங்கவிட்டுவிட்டு விடை கிடைப்பதற்காக வேண்டுகிறார். சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன் இந்தக் கோயில் ஸ்தாபிக்கப்பட்டபோது, “கணவன்மார்கள் தங்களுடைய ஆசைநாயகிகளை விட்டுவிட்டு தங்களிடம் திரும்ப வரவேண்டும் என்று பணக்கார உள்ளூர் வர்த்தகர்களின் மனைவிமார்கள் பிரார்த்தனைகளை எழுதினார்கள்” என்பதாக டோக்கியோ செய்தித்தாள் ஒன்று சொல்லுகிறது. ஆனால் இன்று, பெரும்பாலான வேண்டுகோள்கள் சமரசத்திற்காக அல்லாமல், மணவிலக்கிற்காகவே வருகின்றன. சந்தேகமின்றி, உலகத்தின் எல்லா பாகங்களிலும் குடும்ப வாழ்க்கை இடர்பாட்டுக்கு ஆளாகியிருக்கிறது. இது கிறிஸ்தவர்களை ஆச்சரியமடையச் செய்ய வேண்டுமா? வேண்டியதில்லை, ஏனென்றால் பைபிள் நமக்கு தற்கால குடும்ப நெருக்கடிக்கான உட்பார்வையைக் கொடுக்கிறது.
ஏன் குடும்ப நெருக்கடி?
6. இன்றைய குடும்ப நெருக்கடியின்மீது 1 யோவான் 5:19 என்ன முக்கியத்துவத்தை வைக்கிறது?
6 இன்றைய குடும்ப நெருக்கடிக்கான ஒரு காரணம்: “உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிற[து].” (1 யோவான் 5:19) அந்தப் பொல்லாங்கன் பிசாசாகிய சாத்தானிடமிருந்து நாம் எதை எதிர்பார்க்க முடியும்? அவன் ஒரு பொல்லாத, ஒழுக்கங்கெட்ட பொய்யன். (யோவான் 8:44) அவனுடைய உலகம், குடும்ப வாழ்க்கைக்கு பேரழிவை ஏற்படுத்தும் அளவுக்கு ஏமாற்று வேலையிலும் ஒழுக்கக்கேட்டிலும் மூழ்கியிருப்பதில் ஆச்சரியமேதுமில்லை! கடவுளுடைய அமைப்புக்கு வெளியே, சாத்தானுடைய ஆதிக்கம் யெகோவா துவக்கிவைத்த திருமண ஏற்பாட்டை நாசமாக்கி, சமாதானமுள்ள குடும்ப வாழ்க்கைக்கு ஒரு முடிவுகட்டுவதாக அச்சுறுத்துகிறது.
7. இந்தக் கடைசி நாட்களில் அநேகர் வெளிப்படுத்துகிற குணங்களால் எவ்வாறு குடும்பங்கள் பாதிக்கப்படலாம்?
7 தற்போது மனிதவர்க்கத்தை வாதிக்கும் குடும்ப பிரச்சினைக்கான மற்றொரு காரணம் 2 தீமோத்தேயு 3:1-5-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் பதிவு செய்யப்பட்டிருக்கும் பவுலின் தீர்க்கதரிசன வார்த்தைகள் நாம் “கடைசிநாட்களில்” வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதைக் காட்டுகின்றன. குடும்ப அங்கத்தினர்கள், “தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும் [“உண்மைத்தன்மையில்லாதவர்களாயும்,” NW], சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகப்போகப்பிரியராயும், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பலனை மறுதலிக்கிறவர்களாயும்” இருப்பார்களேயானால், அந்தக் குடும்பங்கள் சமாதானமும் மகிழ்ச்சியும் நிறைந்தவையாக இருக்கமுடியாது. ஒரு குடும்பத்தின் ஒரேவொரு அங்கத்தினர் சுபாவ அன்பில்லாதவராகவோ உண்மைத்தன்மையில்லாதவராகவோ இருந்தாலும்கூட அந்தக் குடும்பம் முழுமையான சந்தோஷமுள்ளதாக இருக்கமுடியாது. குடும்பத்தில் யாரேனும் ஒருவர் கொடுமையுள்ளவராயும் இணங்காதவராயும் இருந்தால், அந்தக் குடும்பம் எப்படி அமைதியான ஒன்றாக இருக்கமுடியும்? அதைவிட இன்னும் மோசமாக, குடும்ப அங்கத்தினர்கள் தேவப் பிரியராயிராமல் சுகப்போகப்பிரியராய் இருக்கும்போது அங்கு எப்படி சமாதானமும் மகிழ்ச்சியும் இருக்கமுடியும்? இவையெல்லாம் சாத்தானால் ஆளப்படும் இந்த உலக மக்களின் சுபாவங்கள். இந்தக் கடைசி நாட்களில் குடும்ப மகிழ்ச்சி நழுவிக்கொண்டு போவதில் எவ்வித ஆச்சரியமுமில்லை!
8, 9. பிள்ளைகளின் நடத்தை குடும்ப மகிழ்ச்சியின்மீது என்ன பாதிப்பை ஏற்படுத்தலாம்?
8 அநேக குடும்பங்களில் சமாதானமும் மகிழ்ச்சியும் இல்லாமல் இருப்பதற்கு மற்றொரு காரணம், பிள்ளைகளின் கெட்ட நடத்தையே. கடைசி நாட்களில் இருக்கும் நிலைமைகளை பவுல் முன்னுரைத்தபோது, அநேக பிள்ளைகள் தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாய் இருப்பார்கள் என்று அவர் முன்னுரைத்தார். நீங்கள் ஒரு வாலிபராக இருந்தால், உங்களுடைய நடத்தை உங்கள் குடும்பத்தை சமாதானமுள்ளதாகவும் மகிழ்ச்சியுள்ளதாகவும் ஆக்குவதற்கு உதவுகிறதா?
9 சில பிள்ளைகள் நடத்தையில் முன்மாதிரியாக இருப்பதில்லை. உதாரணமாக, ஒரு வாலிப பையன் தன் அப்பாவுக்கு மனவருத்தத்தை உண்டாக்கும் இந்தக் கடிதத்தை எழுதினான்: “அலெக்ஸான்ட்ரியாவுக்கு நீங்கள் என்னை கூட்டிக்கொண்டு போகவில்லையென்றால், உங்களுக்கு நான் லெட்டர் எழுதமாட்டேன், அல்லது உங்களோடு பேச மாட்டேன், அல்லது உங்களுக்கு டாட்டா சொல்லமாட்டேன். என்னை விட்டுவிட்டு நீங்கள் மட்டும் அலெக்ஸான்ட்ரியா போவீர்களென்றால், உங்களுடைய கையை நான் பிடித்துக்கொள்ள மாட்டேன் அல்லது ஒருபோதும் உங்களுக்கு ‘விஷ்’ பண்ணமாட்டேன். என்னை கூட்டிக்கொண்டு போகவில்லையென்றால் இதுதான் நடக்கும். . . . ஆனால் எனக்கு ஒரு [யாழ்] மட்டும் அனுப்பும்படி கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். அனுப்பி வைக்கவில்லையென்றால், நான் சாப்பிடவும்மாட்டேன் குடிக்கவும்மாட்டேன். இவ்வளவுதான் சொல்வேன்!” நவீன நாளைய சூழ்நிலையை இது அப்படியே சித்தரித்துக் காட்டுகிறதா? ஒரு பையன் தன் அப்பாவுக்கு எழுதிய இந்தக் கடிதம் 2,000-க்கும் அதிகமான வருடங்களுக்குமுன் பூர்வ எகிப்திலிருந்து எழுதப்பட்டது.
10. தேவ சமாதானத்தை நாடுவதற்கு இளைஞர் எவ்வாறு தங்கள் குடும்பங்களுக்கு உதவிசெய்யலாம்?
10 அந்த எகிப்திய வாலிபனின் மனநிலை குடும்ப சமாதானத்தை ஊக்குவிக்கவில்லை. நிச்சயமாகவே, இந்தக் கடைசி நாட்களில் இதைவிட ஆபத்தான விளைவுண்டாகும் காரியங்கள் நடைபெறுகின்றன. இருப்பினும், வாலிபர்களாகிய நீங்கள் தேவ சமாதானத்தை நாட உங்களுடைய குடும்பத்துக்கு உதவிசெய்யலாம். எப்படி? இந்த பைபிள் அறிவுரைக்கு கீழ்ப்படிவதன் மூலமே. “பிள்ளைகளே, உங்களைப் பெற்றாருக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படியுங்கள்; இது கர்த்தருக்கு பிரியமானது.”—கொலோசெயர் 3:20.
11. தங்கள் பிள்ளைகள் யெகோவாவின் உண்மையுள்ள ஊழியக்காரராக ஆவதற்கு பெற்றோர் எவ்வாறு உதவலாம்?
11 பெற்றோராகிய உங்களைப் பற்றியென்ன? உங்கள் பிள்ளைகள் யெகோவாவின் உண்மையுள்ள ஊழியக்காரர்களாக ஆவதற்கு அன்புடன் உதவுங்கள். “பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்” என்று நீதிமொழிகள் 22:6 சொல்லுகிறது. சிறந்த வேதப்பூர்வ போதனையும் பெற்றோரின் நல்ல முன்மாதிரியும் இருந்தால், அநேக சிறுவர் சிறுமியர் பெரியவர்களாய் ஆகும்போதுகூட சரியான வழியைவிட்டு விலகிப்போவதில்லை. ஆனால், பைபிள் பயிற்றுவிப்பின் தரம் மற்றும் அளவு, வாலிபரின் இருதய நிலை ஆகியவற்றின் பேரில் அதிகம் சார்ந்திருக்கிறது.
12. கிறிஸ்தவ வீடு ஏன் சமாதானம் நிறைந்ததாய் இருக்க வேண்டும்?
12 நம் குடும்பத்தின் அனைத்து அங்கத்தினருமே யெகோவாவின் சித்தத்தைச் செய்ய முற்பட்டால், நாம் தேவ சமாதானத்தை அனுபவிக்க வேண்டும். ஒரு கிறிஸ்தவ குடும்பம், ‘சமாதான புத்திரர்களால்’ நிறைந்திருக்க வேண்டும். “ஒரு வீட்டில் பிரவேசிக்கிறபோது: இந்த வீட்டுக்குச் சமாதானம் உண்டாவதாகவென்று முதலாவது சொல்லுங்கள். சமாதான பாத்திரன் அங்கே இருந்தால், நீங்கள் கூறின சமாதானம் அவனிடத்தில் தங்கும்” என்று சொல்லி இயேசு 70 சீஷர்களை ஊழியர்களாக அனுப்பியபோது, இத்தகைய ஆட்களைத்தான் அவர் மனதில் வைத்திருந்தார் என்று லூக்கா 10:1-6 காட்டுகிறது. யெகோவாவின் ஊழியர்கள் சமாதானத்தோடே வீடுவீடாக சென்று, “சமாதானத்தைச் சுவிசேஷமாய்” அறிவிக்கும்போது அவர்கள் ‘சமாதான பாத்திரர்களை’ தேடுகின்றனர். (அப்போஸ்தலர் 10:34-36; எபேசியர் 2:13-18) கட்டாயமாகவே, ‘சமாதான பாத்திரர்களால்’ ஆன ஒரு கிறிஸ்தவ குடும்பம் சமாதானம் நிறைந்ததாக இருக்கவேண்டும்.
13, 14. (அ) ரூத் மற்றும் ஒர்பாளுக்காக நகோமி எதை விரும்பினார்? (ஆ) ஒரு கிறிஸ்தவ குடும்பம் எந்த விதத்தில் அமைதி தங்கும் இடமாக இருக்க வேண்டும்?
13 குடும்பம் நிம்மதியான ஒரு இடமாக இருக்க வேண்டும். முதிர்வயதான விதவை நகோமி, வாலிப வயதில் விதவைகளான ரூத், ஒர்பாள் என்ற தன்னுடைய மருமக்களுக்கு கடவுள் நல்ல கணவனையும் குடும்பத்தையும் கிடைக்கச் செய்வதன்மூலம் நிம்மதியையும் ஆறுதலையும் கொடுப்பார் என எதிர்பார்த்தார். நகோமி சொன்னார்: “யெகோவா உங்களுக்கு ஒரு பரிசளிப்பாராக, உங்கள் இருவருக்கும் வாய்க்கும் புருஷனுடைய வீட்டிலே நீங்கள் நிம்மதியாய் வாழ்ந்திருக்கச் செய்வாராக.” (ரூத் 1:9, NW) நகோமியினுடைய விருப்பத்தைப் பற்றி அறிஞர் ஒருவர் எழுதுகையில், அப்படிப்பட்ட வீடுகளில், ரூத்தும் ஒர்பாளும், “மனக்கலக்கத்திலிருந்தும் கவலையிலிருந்தும் விடுதலை பெறுவார்கள். அவர்கள் நிம்மதி அடைவார்கள். அது அவர்கள் தொடர்ந்து வாழ்ந்திருக்கும் இடமாகவும், மிகவும் மென்மையான அவர்களுடைய உணர்ச்சிகளும் மிகவும் மதிக்கப்படத்தக்க அவர்களுடைய ஆசைகளும் திருப்தி செய்யப்பட்டு அமைதியைக் கண்டடையும் ஒரு இடமாகவும் இருக்கும். எபிரெய வார்த்தையின் தனித்தன்மைவாய்ந்த வலிமையானது . . . [ஏசாயா 32:17, 18-ல் உள்ள] இதோடு சம்பந்தப்பட்ட வார்த்தைகளின் தன்மையின் மூலம் அழகாக காட்டப்பட்டிருக்கிறது” என சொன்னார்.
14 ஏசாயா 32:17, 18-ற்கான இந்தக் குறிப்பை தயவுசெய்து கவனியுங்கள். நாம் அதில் இவ்வாறு வாசிக்கிறோம்: “நீதிமான் கிரியை சமாதானமும், நீதியின் பலன் என்றுமுள்ள அமரிக்கையும் சுகமுமாம். என் ஜனம் சமாதான தாபரங்களிலும், நிலையான வாசஸ்தலங்களிலும், அமைதியாய்த் தங்கும் இடங்களிலும் குடியிருக்கும்.” ஒரு கிறிஸ்தவனின் வீடு நீதி, அமரிக்கை, சுகம், தேவ சமாதானம் ஆகியவை தங்கும் இடமாக இருக்க வேண்டும். ஆனால், சோதனைகளோ கருத்து வேறுபாடுகளோ, அல்லது வேறு பிரச்சினைகளோ எழும்பினால் என்ன செய்வது? அப்படியானால், குடும்ப மகிழ்ச்சியின் இரகசியத்தை நாம் முக்கியமாய் அறிந்துகொள்ள வேண்டும்.
நான்கு இன்றியமையாத நியமங்கள்
15. குடும்ப மகிழ்ச்சியின் இரகசியத்தை நீங்கள் எவ்வாறு வரையறுப்பீர்கள்?
15 பூமியிலுள்ள ஒவ்வொரு குடும்பமும், குடும்பங்களை உண்டாக்கினவராகிய யெகோவா தேவனுக்கு கடமைப்பட்டிருக்கிறது. (எபேசியர் 3:14, 15) ஆகவே, குடும்ப மகிழ்ச்சியை விரும்புகிறவர்கள் அவருடைய வழிநடத்துதலை நாடி அவரைத் துதிக்க வேண்டும். சங்கீதக்காரன் இவ்விதமாகவே செய்தார்: “ஜனங்களின் குடும்பங்களே, யெகோவாவுக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள், யெகோவாவுக்கே அதைச் செலுத்துங்கள்.” (சங்கீதம் 96:7, NW) குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம், கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளிலும் அதன் நியமங்களைப் பொருத்திப் பயன்படுத்துவதிலுமே இருக்கிறது. இந்த நியமங்களைக் கடைப்பிடிக்கும் ஒரு குடும்பம் மகிழ்ச்சியுள்ளதாக இருக்கும், தேவ சமாதானத்தை மகிழ்ந்தனுபவிக்கும். இந்த நியமங்களில் நான்கு முக்கியமான நியமங்களை நாம் இப்போது கவனிக்கலாம்.
16. குடும்ப வாழ்க்கையில் தன்னடக்கம் என்ன பாகத்தை வகிக்க வேண்டும்?
16 இந்த நியமங்களில் ஒன்று இதன்மீது மையங்கொண்டிருக்கிறது: குடும்ப வாழ்க்கையில் தேவ சமாதானத்தை நாட இன்றியமையாத ஒன்று தன்னடக்கம். சாலொமோன் ராஜா இவ்வாறு சொன்னார்: “தன் ஆவியை அடக்காத மனுஷன் மதிலிடிந்த பாழான பட்டணம்போலிருக்கிறான்.” (நீதிமொழிகள் 25:28) சமாதானமும் மகிழ்ச்சியும் நிறைந்த குடும்பம் வேண்டுமென்று நாம் ஆசைப்பட்டோமானால், ‘நம் ஆவியை அடக்குவது’—தன்னடக்கத்தைக் கடைப்பிடிப்பது—இன்றியமையாதது. நாம் அபூரணராக இருக்கிறபோதிலும் தன்னடக்கத்தை காண்பிக்க வேண்டும், அது கடவுளுடைய ஆவியின் கனிகளில் ஒன்று. (ரோமர் 7:21, 22; கலாத்தியர் 5:22, 23) இந்தக் குணத்திற்காக நாம் ஜெபித்து, அதன் சம்பந்தமான பைபிள் அறிவுரைகளை வாழ்க்கையில் பொருத்தி, அதை வெளிக்காட்டுகிற மற்றவர்களோடு கூட்டுறவு கொண்டோமானால், ஆவி நம்மில் இந்தக் குணத்தைப் பிறப்பிக்கும். இந்தப் போக்கு, “வேசித்தனத்திற்கு விலகியோடு”வதற்கு நமக்கு உதவிசெய்யும். (1 கொரிந்தியர் 6:18) வன்முறையை ஒதுக்கவும் குடிப்பழக்கத்தைத் தவிர்க்கவும் அல்லது அதை மேற்கொள்ளவும், கடினமான சூழ்நிலைகளில் அமைதியாக நடந்துகொள்ளவும் தன்னடக்கம் உதவிசெய்யும்.
17, 18. (அ) கிறிஸ்தவ குடும்ப வாழ்க்கைக்கு 1 கொரிந்தியர் 11:3 எவ்வாறு பொருந்துகிறது? (ஆ) தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்வது குடும்பத்தில் எவ்வாறு தேவ சமாதானத்தை முன்னேற்றுவிக்கிறது?
17 முக்கியமான மற்றொரு நியமத்தை இவ்வாறு சொல்லலாம்: தலைமைத்துவத்திற்கு மதிப்பு காண்பிப்பது நம் குடும்பங்களில் தேவ சமாதானத்தை நாட உதவியாய் இருக்கும். பவுல் இவ்வாறு எழுதினார்: “ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்து தலையாயிருக்கிறாரென்றும், ஸ்திரீக்குப் புருஷன் தலையாயிருக்கிறானென்றும், கிறிஸ்துவுக்குத் தேவன் தலையாயிருக்கிறாரென்றும், நீங்கள் அறியவேண்டுமென்று விரும்புகிறேன்.” (1 கொரிந்தியர் 11:3) இதன் அர்த்தம் என்னவென்றால், ஒரு ஆண் குடும்பத்தை முன்நின்று வழிநடத்துகிறான், அவனுடைய மனைவியோ உண்மைத்தன்மையோடு ஆதரவு தருகிறாள், மற்றும் பிள்ளைகள் தங்களுடைய பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து நடக்கிறார்கள் என்பதே. (எபேசியர் 5:22-25, 28-33; 6:1-4) இத்தகைய நடத்தை குடும்ப வாழ்க்கையில் தேவ சமாதானத்தை வளர்க்கும்.
18 கிறிஸ்தவ தலைமைத்துவம் சர்வாதிகாரம் அல்ல என்பதை கிறிஸ்தவ கணவன்மார் நினைவுகூர வேண்டும். அவர் தன்னுடைய தலையாக இயேசுவைப் பின்பற்ற வேண்டும். அவர் “எல்லாவற்றிற்கும் மேலான தலையாக” இருக்க வேண்டிதாய் இருந்தபோதிலும், இயேசு, “ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்ய” வந்தார். (எபேசியர் 1:22, NW; மத்தேயு 20:28) அதைப்போலவே, ஒரு கிறிஸ்தவ ஆண் தன்னுடைய குடும்பத்தின் அக்கறைகளை நன்கு பூர்த்திசெய்ய உதவுகிற அன்பான முறையில் தலைமைத்துவத்தை கையாளுகிறார். நிச்சயமாகவே, ஒரு கிறிஸ்தவ மனைவி தன்னுடைய கணவனோடு ஒத்துழைக்க விரும்புகிறாள். அவருடைய ‘உதவியாளாகவும்’ ‘பூர்த்திசெய்யும் துணையாகவும்’ இருந்து, தன் கணவனிடம் குறைவுபடும் குணங்களைப் பூர்த்திசெய்து, இவ்வாறு அவனுக்கு தேவையான ஆதரவை அளிக்கிறாள். (ஆதியாகமம் 2:20; நீதிமொழிகள் 31:10-31) தலைமைத்துவத்தை தகுந்த முறையில் கையாளுவது, கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் மரியாதையுடன் நடத்த உதவிசெய்கிறது, பிள்ளைகள் அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருக்க உந்துவிக்கிறது. ஆம், தலைமைத்துவத்திற்கு மதிப்பு காண்பிப்பது குடும்ப வாழ்க்கையில் தேவ சமாதானத்தை வளர்க்கிறது.
19. குடும்ப சமாதானத்திற்கும் மகிழ்ச்சிக்கும் நல்ல பேச்சுத்தொடர்பு ஏன் இன்றியமையாதது?
19 மூன்றாவது முக்கியமான நியமத்தை இவ்வார்த்தைகளில் விளக்கலாம்: குடும்ப சமாதானத்திற்கும் மகிழ்ச்சிக்கும் நல்ல பேச்சுத்தொடர்பு அத்தியாவசியம். யாக்கோபு 1:19 நமக்குச் சொல்லுகிறது: “யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிப்பதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவர்கள்.” குடும்ப அங்கத்தினர்கள் செவிகொடுத்துக் கேட்டு ஒருவரோடொருவர் பேசுவது இன்றியமையாதது, ஏனென்றால் குடும்ப தொடர்பு என்பது பேசுவதும் செவிகொடுப்பதுமாகிய இருவழிப் பாதை. ஆனால், நாம் சொல்வது சரியாகவே இருக்கிறபோதிலும்கூட, அதை கொடூரமான, கர்வமான, அல்லது உணர்ச்சியற்ற முறையில் சொல்வோமானால், அது நன்மை செய்வதைவிட அதிக தீமையையே செய்யும் வாய்ப்பு இருக்கிறது. நம்முடைய பேச்சு இனிமையானதாய், ‘உப்பால் சாரமேறினதாய்’ இருக்க வேண்டும். (கொலோசெயர் 4:6) வேதப்பூர்வமான நியமங்களைப் பின்பற்றி, நன்கு பேச்சுத்தொடர்பு கொள்கிற குடும்பங்கள் தேவ சமாதானத்தை நாடுகின்றன.
20. குடும்ப சமாதானத்திற்கு அன்பு இன்றியமையாதது என்று ஏன் நீங்கள் சொல்கிறீர்கள்?
20 நான்காவது நியமம் இதுவே: அன்பு குடும்ப சமாதானத்திற்கும் மகிழ்ச்சிக்கும் இன்றியமையாதது. காதலன்பு திருமணத்தில் ஒரு முக்கிய பாகத்தை வகிக்கலாம், ஒரு குடும்பத்தின் அங்கத்தினர்கள் மத்தியில் ஆழ்ந்த பாசம் வளரக்கூடும். ஆனால், அகாப்பே என்ற கிரேக்க வார்த்தையால் அர்த்தப்படுத்திக் காண்பிக்கப்படும் அன்பே அதைவிட முக்கியம். யெகோவாவுக்கும் இயேசுவுக்கும் நம் அயலாருக்கும் நாம் வளர்த்துக்கொள்ள வேண்டிய அன்பு இதுதான். (மத்தேயு 22:37-39) யெகோவா, “தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய்” மனிதவர்க்கத்திற்கு இந்த அன்பை காண்பித்தார். (யோவான் 3:16) நம்முடைய குடும்ப அங்கத்தினர்களுக்கும் இதே வகையான அன்பை நம்மால் காண்பிக்க முடியும் என்பது எவ்வளவு அருமையானது! மிகவும் உயர்ந்த தரம்வாய்ந்த இந்த அன்பு, ‘பூரண சற்குணத்தின் கட்டாக’ இருக்கிறது. (கொலோசெயர் 3:14) இது தம்பதிகளை ஒன்றாக பிணைத்து, தங்களுக்கிடையேயும் தங்களுடைய பிள்ளைகளுக்கும் மிகச் சிறந்ததாய் இருப்பதைச் செய்யும்படி தூண்டுகிறது. கடினமான சூழ்நிலைகள் எழும்போது, காரியங்களை ஐக்கியமாய் ஒன்றுசேர்ந்து கையாளுவதற்கு அன்பு அவர்களுக்கு உதவிசெய்கிறது. நாம் இதை நிச்சயமாக நம்பலாம், ஏனென்றால் “அன்பு . . . தற்பொழிவை [“தன்னலத்தை,” NW] நாடாது, . . . சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும். அன்பு ஒருக்காலும் ஒழியாது.” (1 கொரிந்தியர் 13:4-8) ஒருவருக்கொருவர் காட்டும் அன்பு யெகோவாவுக்கான அன்பால் உறுதிப்படுத்தப்படுகையில், குடும்பங்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியுள்ள குடும்பங்களாக இருக்கின்றன!
தொடர்ந்து தேவ சமாதானத்தை நாடுங்கள்
21. உங்கள் குடும்ப சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் எது அதிகரிக்கும்?
21 மேற்குறிப்பிடப்பட்ட நியமங்களும் பைபிளிலிருந்து எடுக்கப்பட்ட மற்ற நியமங்களும், “உண்மையும் விவேகமுள்ள அடிமை” மூலம் யெகோவாவினால் அன்புடன் கொடுக்கப்பட்ட பிரசுரங்களில் காணப்படுகின்றன. (மத்தேயு 24:45, NW) உதாரணமாக, இப்படிப்பட்ட தகவல், குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என்ற 192-பக்க புத்தகத்தில் காணப்படுகிறது. இது, 1996/97-ல் உலகமுழுவதும் நடத்தப்பட்ட யெகோவாவின் சாட்சிகளுடைய “தேவ சமாதான தூதுவர்கள்” மாநாட்டில் வெளியிடப்பட்டது. இத்தகைய உதவிப் புத்தகம் ஒன்றைப் பயன்படுத்தி பைபிளை தனிப்பட்ட முறையிலும் குடும்பமாகவும் படிப்பது அநேக நன்மைகளைக் கொண்டுவரும். (ஏசாயா 48:17, 18) ஆம், வேதப்பூர்வமான ஆலோசனையைப் பொருத்திப் பிரயோகிப்பது உங்களுடைய குடும்பத்தின் சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் அதிகரிக்கும்.
22. எதன்மீது நம்முடைய குடும்ப வாழ்க்கையை அமைக்க வேண்டும்?
22 யெகோவா, தம்முடைய சித்தத்தை செய்யும் குடும்பங்களுக்காக ஆச்சரியமான காரியங்களை ஏற்பாடு செய்து வைத்திருக்கிறார். நம்முடைய துதியையும் சேவையையும் பெற்றுக்கொள்வதற்கு தகுதியுள்ளவராய் இருக்கிறார். (வெளிப்படுத்துதல் 21:1-4) உங்களுடைய குடும்ப வாழ்க்கையை யெகோவா தேவனின் வணக்கத்தின்மீதே அமைத்துக்கொள்வீர்களாக. நம்முடைய அன்பான பரலோகத் தந்தையாகிய யெகோவா, உங்களுடைய குடும்ப வாழ்க்கையில் நீங்கள் தேவ சமாதானத்தை நாடுகையில் உங்களை அபரிமிதமாக ஆசீர்வதிப்பாராக!
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ குடும்பங்கள் தேவ பக்தியோடு வாழவேண்டுமானால் எது தேவை?
◻ இன்று ஏன் குடும்ப நெருக்கடி இருக்கிறது?
◻ குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என்ன?
◻ குடும்ப வாழ்க்கையில் சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் முன்னேற்றுவிப்பதற்கு நமக்கு உதவும் நியமங்கள் சில யாவை?
[பக்கம் 24-ன் படம்]
குடும்ப வாழ்க்கையில் நல்ல பேச்சுத்தொடர்பு கொள்வது தேவ சமாதானத்தை நாட நமக்கு உதவுகிறது