“முந்தின நாட்களை நினைத்துக்கொள்ளுங்கள்” ஏன்?
“முந்தின நாட்களை நினைத்துக்கொள்ளுங்கள்.” ஏறக்குறைய பொ.ச. 61-ல் எழுதப்பட்ட, அப்போஸ்தலன் பவுல் கொடுத்த இந்த அறிவுரை, யூதேயாவிலிருந்த எபிரெயக் கிறிஸ்தவர்களுக்கு முகவரியிடப்பட்டது. (எபிரெயர் 10;32) இந்தக் குறிப்புரையை எழுதும்படி தூண்டியது எது? முதல் நூற்றாண்டில் யெகோவாவை வணங்கின அவர்கள், கடந்த காலத்தை மறவாதிருப்பது ஏன் தேவைப்பட்டது? இன்று, இதைப்போன்ற நினைப்பூட்டுதலுக்குச் செவிகொடுப்பதன்மூலம் நாம் பயனடைய முடியுமா?
நூற்றாண்டுகளாக பைபிள் எழுத்தாளர்கள், கடந்த காலத்தை மதியாமல் அல்லது கவனியாமல் இருப்பதற்கு எதிராக மறுபடியும் மறுபடியுமாக எச்சரித்திருக்கிறார்கள். முற்காலங்களையும் சம்பவங்களையும் மனதில் வைத்து சிந்திக்க வேண்டும். யெகோவாதாமேயும் இவ்வாறு சொன்னார்: “முந்திப் பூர்வகாலத்தில் நடந்தவைகளை நினையுங்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை; நானே தேவன், எனக்குச் சமானமில்லை.” (ஏசாயா 46:9) இந்த அறிவுரைக்குச் செவிகொடுப்பதற்குரிய, சக்திவாய்ந்த மூன்று காரணங்களை நாம் ஆராயலாம்.
உள்நோக்கத் தூண்டுதலும் ஊக்கமூட்டுதலும்
முதலாவதாக, உள்நோக்கத் தூண்டுதலுக்கும் ஊக்கமூட்டுதலுக்கும் பெரும் மூலகாரணமாக இது இருக்கலாம். எபிரெய சபைக்கு பவுல் தன் நிருபத்தை எழுதினபோது, யூதர்களுடைய எதிர்ப்பின் காரணமாகத் தங்கள் விசுவாசம் அனுதினமும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த உடன்கிறிஸ்தவர்களுக்கு அவர் எழுதுபவராக இருந்தார். சகிப்புத் தன்மையைக் கட்டியெழுப்புவதற்கான அவர்களுடைய தேவையை உணர்ந்தவராக, பவுல் இவ்வாறு சொன்னார்: “முந்தின நாட்களைத் தொடர்ந்து நினைவுபடுத்திக்கொண்டிருங்கள், அதில், நீங்கள் அறிவொளியூட்டப்பட்ட பின்பு, உபத்திரவங்களின்கீழ் பெரும் போராட்டத்தைச் சகித்தீர்களே.” (எபிரெயர் 10:32, NW) ஆவிக்குரிய போராட்டத்தில் நடப்பித்த, கடந்தகால உண்மைத்தவறா செயல்களை அவர்கள் நினைவுக்கு கொண்டுவருவது, ஓட்டத்தை ஓடி முடிப்பதற்குத் தேவைப்பட்ட தைரியத்தை அவர்களுக்குக் கொடுக்க உதவிசெய்யும். தீர்க்கதரிசியாகிய ஏசாயா அவ்வாறு எழுதினார்: “ஜனங்களே நீங்கள் தைரியத்தை திரட்டும்படி. இதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்.” (ஏசாயா 46:8, NW) இதைப்போன்ற விரும்பத்தக்க பாதிப்பை மனதில் கொண்டே இயேசு கிறிஸ்து, எபேசுவிலிருந்த சபைக்கு இவ்வாறு சொன்னார்: “ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக.”—வெளிப்படுத்துதல் 2:4, 5.
“பூர்வநாட்களை நினை; தலைமுறை தலைமுறையாய்ச் சென்ற வருஷங்களைக் கவனித்துப்பார்” என்ற அறிவுரை, மோசே இஸ்ரவேலருக்குக் கொடுத்த பேச்சுகளில் திரும்பத்திரும்ப கவனத்துக்குக் கொண்டுவரப்பட்ட அம்சமாக இருந்தது. பயத்துக்கு இடங்கொடாத உண்மைத்தவறாமையைக் காட்டும்படி அந்த ஜனத்துக்கு அந்தப் பேச்சில் அவர் ஊக்கமூட்டிக்கொண்டிருந்தார். (உபாகமம் 32:7) உபாகமம் 7:18, 19-ல் (தி.மொ.) பதிவுசெய்யப்பட்ட, அவருடைய வார்த்தைகளைக் கவனியுங்கள்: “நீ அவர்களுக்குப் [கானானியர்களுக்கு] பயப்பட வேண்டாம்; உன் கடவுளாகிய யெகோவா பார்வோனுக்கும் எகிப்து முழுவதுக்கும் செய்ததையும் . . . மறவாமல் நினைத்துக்கொள்.” யெகோவா தம்முடைய ஜனங்களைக் காப்பாற்றுவதற்கு நடப்பித்தச் செயல்களை மனதில் திரும்ப நினைவுபடுத்திக்கொள்வது, அவர்கள் தொடர்ந்து கடவுளுடைய கட்டளைகளை உண்மையுடன் கடைப்பிடிப்பதற்கு ஒரு ஊக்கத்தூண்டுதலாக இருக்க வேண்டும்.—உபாகமம் 5:15; 15:15.
துயரத்துக்கேதுவாக இஸ்ரவேலர், மறந்துவிடும் இந்தப் பாவத்திற்கு அடிக்கடி உட்பட்டார்கள். இதன் விளைவென்ன? “அவர்கள் திரும்பி தேவனைப் பரீட்சை பார்த்து, இஸ்ரவேலின் பரிசுத்தரை மட்டுப்படுத்தினார்கள் [“வேதனை உண்டாக்கினார்கள்,” NW] அவருடைய கரத்தையும், அவர் தங்களைச் சத்துருவுக்கு விலக்கி மீட்ட நாளையும் நினையாமற்போனார்கள்.” (சங்கீதம் 78:41, 42) யெகோவாவின் கட்டளைகளை அவர்கள் மறந்தது, கடைசியாக, அவர்கள் அவரால் தள்ளப்பட்டுப்போவதில் விளைவடைந்தது.—மத்தேயு 21:42, 43.
சங்கீதக்காரன் ஒரு நல்ல முன்மாதிரியை வைத்தார், அவர் எழுதினதாவது: “யெகோவாவின் செயல்களை நினைவுக்குக் கொண்டுவருவேன், பூர்வகாலத்தில் நீர் செய்த அதிசயங்களை நினைப்பேன். உமது கிரியைகளையெல்லாம் தியானிப்பேன், உமது செயல்களை யோசிப்பேன்.” (சங்கீதம் 77:11, 12, தி.மொ.) கடந்தகால உண்மைத்தவறாத சேவையையும், யெகோவாவின் அன்புள்ள செயல்களையும் நினைவுபடுத்தி தியானிப்பது, உள்ளத்தூண்டுதலையும், ஊக்கமூட்டுதலையும், மதித்துணர்வையும் நமக்கு அளிக்கும். மேலும், ‘முந்தின நாட்களை நினைத்துக்கொள்வது,’ சோர்வை அகற்றி, நம்மால் இயலும் எல்லாவற்றையும் செய்யவும், உண்மையுடன் சகித்துநிலைத்திருக்கவும் உதவிசெய்யும்.
கடந்தகால பிழைகளிலிருந்து கற்றுக்கொள்ளுதல்
இரண்டாவதாக, மறந்துவிடாதிருப்பது, கடந்தகாலப் பிழைகளிலும் அவற்றின் விளைவுகளிலுமிருந்து கற்றுக்கொள்வதற்கு ஒரு வழியாக இருக்கலாம். இதை மனதில் வைத்தே மோசே இஸ்ரவேலருக்கு இவ்வாறு அறிவுரை கூறினார்: “நீ வனாந்தரத்தில் உன் கடவுளாகிய யெகோவாவுக்குக் கடுங்கோபம் உண்டாக்கினதை நினை, அதை மறவாதே; நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட நாள் முதல் இவ்விடத்தில்வந்து சேருமட்டும் யெகோவாவுக்கு விரோதமாய்க் கலகம் பண்ணினீர்கள்.” (உபாகமம் 9:7, தி.மொ.) மோசே குறிப்பிட்டபடி, இஸ்ரவேலின் பங்கில், அத்தகைய கீழ்ப்படியாமையின் விளைவாக, ‘அவர்கள் கடவுளாகிய யெகோவா, அவர்களை நாற்பது வருஷங்கள் வனாந்தரத்தில் நடக்கச் செய்தார்,’ இதை நினைவுபடுத்திக்கொள்ளும்படி அவர்கள் ஏன் ஊக்குவிக்கபட்டார்கள்? அவர்கள் தங்கள் “கடவுளாகிய யெகோவாவின் வழிகளில் நடந்து அவருக்குப் பயப்படும்படி அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ள” செய்ய, அவர்கள் அகந்தையை அடக்கி, அவர்களுடைய கலகத்தனப் போக்குகளுக்கு ஒரு சிட்சையாகச் சேவிப்பதற்கேயாகும். (உபாகமம் 8:2-6, தி.மொ.) கடந்தகால பிழைகளைத் திரும்பத்திரும்ப செய்யாதிருக்கும்படியான இந்தக் கருத்தில் அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டியதாக இருந்தது.
ஓர் எழுத்தாளர் இவ்வாறு கூறினார்: “விவேகமுள்ள ஓர் ஆள் சொந்த அனுபவத்திலிருந்து பயனடைகிறார், ஞானமுள்ள ஒருவர் மற்றவர்களின் அனுபவத்திலிருந்து பயனடைகிறார்.” தங்கள் முற்கால சொந்த பிழைகளைச் சிந்திப்பதிலிருந்து பயனடையும்படி மோசே இஸ்ரவேலரைக் கேட்டுக்கொண்டார், அப்போஸ்தலன் பவுல் மற்றவர்களுக்கு—முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபைக்கும், நீடிப்பாக நமக்கும் இவ்வாறு அறிவுரை கூறி—அதே சரித்திரப் பதிவிலிருந்து ஒரு பாடத்தைக் கற்கும்படி அழைத்தார். அவர் எழுதினதாவது: ‘இவைகளெல்லாம் திருஷ்டாந்தங்களாக அவர்களுக்குச் சம்பவித்தது; உலகத்தின் முடிவுகாலத்திலுள்ள நமக்கு எச்சரிப்புண்டாக்கும்படி எழுதப்பட்டும் இருக்கிறது.’ (1 கொரிந்தியர் 10:11) “லோத்தின் மனைவியை நினைத்துக்கொள்ளுங்கள்,” என்று இயேசு கிறிஸ்து சொன்னபோது, இன்னும் ஒரு பூர்வ பைபிள் சம்பவத்தையும் அதிலிருந்து பாடம் கற்பதற்கான தேவையையும் மனதில் கொண்டிருந்தார். (லூக்கா 17:32; ஆதியாகமம் 19:1, 26) ஆங்கில கவிஞரும் தத்துவ ஞானியுமான சாம்யல் டேலர் காலரிட்ஜ் இவ்வாறு எழுதினார்: “சரித்திரத்திலிருந்து மனிதர் கற்றுக்கொள்ள இயலுமானால், எத்தகைய பாடங்களை அது நமக்குக் கற்பிக்கும்!”
பணிவும் நன்றியறிதலும்
மூன்றாவதாக, நினைவில் வைப்பது, கடவுளுக்குப் பிரியமுண்டாக்கும் பண்புகளாகிய பணிவையும் நன்றியறிதலையும் நம்மில் தோற்றுவிக்கலாம். உலகமெங்கும் பரவலாக உள்ள நம்முடைய ஆவிக்குரிய பரதீஸின் பல அம்சங்களில் நாம் களிகூருகையில், குறிப்பிட்ட கட்டிட பாளங்களின்மீது அது தங்குகிறதென்பதை நாம் ஒருபோதும் மறவாதிருப்போமாக. உண்மைத்தவறாமை, அன்பு, தன்னலத் தியாகம், துன்பத்துக்கெதிரில் தைரியம், சகிப்புத்தன்மை, நீடிய பொறுமை மற்றும் விசுவாசம் இவற்றில் உட்பட்டிருக்கின்றன. இவை, பல ஆண்டுகளுக்கு முன்பாகப் பல்வேறு நாடுகளில் ஊழியத்தைத் தொடங்கிவைத்த நம் கிறிஸ்தவ சகோதரராலும் சகோதரிகளாலும் காட்டப்பட்ட பண்புகள். மெக்ஸிகோவில் கடவுளுடைய ஜனங்களின் தற்கால சரித்திரத்தின்பேரிலுள்ள அதன் அறிக்கையைச் சேர்க்கையில், 1995 யெகோவாவின் சாட்சிகளுடைய வருடாந்திரப் புத்தகம் (ஆங்கிலம்) இவ்வாறு சொன்னது: மெக்ஸிகோவில் ஊழியத்தைத் தொடங்கினபோது அதில் பங்குகொண்டவர்கள் எதிர்ப்பட்ட இக்கட்டுகள், யெகோவாவின் சாட்சிகளோடு சமீபத்தில்தானே கூட்டுறவுகொண்டுள்ள ஆட்களுக்கு, ஆச்சரியம் தருவதாக இருக்கலாம். ஏராளமான ஆவிக்குரிய உணவு இருக்கிறதும், கடவுளுக்குப் பயப்படும் லட்சக்கணக்கான கூட்டாளிகள் இருக்கிறதும், கடவுளுக்குச் செய்யும் ஊழியம் நன்றாய் ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் நிறைவேற்றப்படுகிறதுமான ஆவிக்குரிய ஒரு பரதீஸோடு பழக்கப்பட்டவர்களாக அவர்கள் இப்பொழுது இருக்கிறார்கள்.”
முற்கால முழுநேர ஊழியர்கள், பெரும்பாலும் தனியாக அல்லது தனிமையான சிறு தொகுதிகளில் ஊழியம் செய்தனர். ராஜ்ய செய்தியை அறிவிப்பதில் அவர்கள் விடாமுயற்சியுடன் தொடர்ந்தபோது, தனிமையையும், ஏதும் இல்லாமையையும், உத்தமத்தைச் சோதிக்கும் மற்ற கடும் பரீட்சைகளையும் எதிர்ப்பட்டார்கள். இந்த முற்கால ஊழியர்களில் பலர், மரணத்தில் பூமிக்குரிய காட்சியிலிருந்து சென்றுவிட்டபோதிலும், அவர்களுடைய உண்மையுள்ள சேவையை யெகோவா நினைவில் வைத்திருக்கிறார் என்பது எவ்வளவாய் இருதயத்தைக் கனிவிக்கிறதாக இருக்கிறது! அப்போஸ்தலன் பவுல், இவ்வாறு எழுதினபோது இதை உறுதிசெய்தார்: “உங்கள் கிரியையும், . . . தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுவதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே.” (எபிரெயர் 6:10) யெகோவா மதித்து நினைவில் வைக்கிறார் என்றால், நன்றியுள்ள மனப்பான்மையுடன் நாம் அவ்வாறு செய்ய வேண்டுமல்லவா?
சத்தியத்தோடு புதிதாக அறிமுகப்பட்டிருப்பவர்கள், யெகோவாவின் சாட்சிகள்—கடவுளுடைய ராஜ்யத்தின் அறிவிப்பாளர்a என்ற ஆங்கில பிரசுரத்தின்மூலம் இந்தச் சரித்திரத் தகவலைப் பெறலாம். மேலும், நீண்டகால சேவை செய்யும் முதிர்வயதான சகோதரர் அல்லது சகோதரிகள் உட்பட்ட ஒரு குடும்பத்தையோ, கிறிஸ்தவ சபையையோ சேர்ந்தவர்களாக இருக்கும் சிலாக்கியம் நமக்கிருந்தால், உபாகமம் 32:7-ல் குறிப்பிட்டுள்ள மனப்பான்மையில், “பூர்வநாட்களை நினை; தலைமுறை தலைமுறையாய்ச் சென்ற வருஷங்களைக் கவனித்துப்பார்; உன் தகப்பனைக் கேள், அவன் உனக்கு அறிவிப்பான்; உன் மூப்பர்களைக் கேள், அவர்கள் உனக்குச் சொல்லுவார்கள்,” என்று ஊக்குவிக்கப்படுகிறோம்.
ஆம், தேவபக்திக்குரிய முற்கால நடவடிக்கைகளை நினைவுபடுத்திக்கொள்வது, நம் கிறிஸ்தவ சேவையில் மகிழ்ச்சியுடன் தொடர்ந்து நிலைத்திருப்பதற்கு நம்மைத் தூண்டி ஊக்குவிக்கலாம். மேலும், நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் சரித்திரத்தில் அடங்கியிருக்கின்றன. கடவுள் ஆசீர்வதித்திருக்கிற நம்முடைய ஆவிக்குரிய பரதீஸின்பேரில் தியானிப்பது, ஏற்ற நற்பண்புகளாகிய பணிவையும் நன்றியறிதலையும் தோற்றுவிக்கிறது. மெய்யாகவே, “முந்தின நாட்களை நினைத்துக்கொள்ளுங்கள்.”
[அடிக்குறிப்பு]
a உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்டது.