யெகோவா என் அடைக்கலமாக இருந்திருக்கிறார்
பனெலோப்பி மக்ரிஸ் சான்னபடி
என் தாயார் என்னிடம் இவ்வாறு மன்றாடினார்கள்: “உன் கணவரை விட்டு விலகிவிடு; அவரைவிட மேம்பட்டவரை உன் அண்ணன்மார் உனக்குத் தேடித் தருவார்கள்.” என் மண உறவை முறித்துக்கொள்ளும்படி என் அன்புள்ள தாயார் ஏன் விரும்ப வேண்டும்? எது அவர்கள் மனதை அவ்வளவு அதிகமாய் நிலைகுலைவித்தது?
நான், சாமோஸ் என்ற கிரேக்கத் தீவிலிருக்கும் சிறிய கிராமமாகிய அம்பெலாஸில் 1897-ல் பிறந்தேன். எங்கள் குடும்பத்தினர், கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் மதப்பற்றுள்ள உறுப்பினராக இருந்தனர். நான் பிறப்பதற்குச் சிறிது காலத்துக்கு முன்பே தகப்பன் இறந்துவிட்டார். அக்காலங்களின், முற்றிலும் ஏழ்மையான நிலையில் வெறுமனே உயிரோடிருப்பதற்கே என் தாயும், மூன்று சகோதரர்களும், நானும் கடினமாய் உழைக்க வேண்டியிருந்தது.
1914-ல் முதல் உலகப் போர் தொடங்கினது, அதன்பின் சீக்கிரத்திலேயே என் மூத்த சகோதரர்கள் இருவரும் படையில் சேரும்படி கட்டளையிடப்பட்டனர். ஆனால், அவ்வாறு செய்வதைத் தவிர்க்க அவர்கள், என்னையும் என் மற்ற சகோதரனையும் வீட்டில் அம்மாவுடன் விட்டுவிட்டு, அமெரிக்காவுக்குச் சென்று குடியெறினார்கள். சில ஆண்டுகளுக்குப் பின்பு, 1920-ல், எங்கள் கிராமத்திலிருந்த ஓர் இளம் ஆசிரியரான திமிட்ரீஸை நான் மணம் செய்தேன்.
ஒரு முக்கியமான சந்திப்பு
நான் மணம் செய்த பின் சீக்கிரத்திலேயே, என் தாயாரின் சகோதரர் எங்களைப் பார்க்க அமெரிக்காவிலிருந்து வந்தார். சார்ல்ஸ் டேஸி ரஸலால் எழுதப்பட்ட வேதவாக்கியங்களின்பேரில் ஆராய்ச்சி (ஆங்கிலம்) என்ற புத்தகத் தொகுப்புகளில் ஒன்றை அவர் தன்னுடன் கொண்டுவர நேரிட்டது. அது, யெகோவாவின் சாட்சிகள் என்று இப்போது அறியப்படும் பைபிள் மாணாக்கர்களின் ஒரு பிரசுரமாக இருந்தது.
திமிட்ரீஸ் அந்தப் புத்தகத்தைத் திறந்தபோது, அவர், சிறுபிள்ளையாக இருந்த காலம் முதற்கொண்டே அறிய ஆவலாயிருந்த ஒரு விஷயமாகிய, “மனிதன் மரிக்கையில் அவனுக்கு என்ன சம்பவிக்கிறது?” என்பதைக் கவனித்தார். உயர்தர பள்ளியில் இருந்தபோது, கிரேக்க ஆர்த்தடாக்ஸ் இறைமையியல் வல்லுநர் ஒருவரிடம் இதே விஷயத்தைப் பற்றி கேள்வி கேட்டிருந்தார், ஆனால் திருப்திகரமான ஒரு பதிலைப் பெற்றிருக்கவில்லை. இந்தப் புத்தகத்தில் அளிக்கப்பட்டிருந்த தெளிவான மற்றும் பகுத்தறிவுக்குப் பொருத்தமான விளக்கம் திமிட்ரீஸுக்கு அவ்வளவு அதிகமாக மகிழ்ச்சி அளித்ததனால் அவர், கிரீஸிலுள்ள ஆண்கள் வழக்கமாய்க் கூடும் இடமாகிய அந்தக் கிராம காப்பிக்கடைக்கு உடனடியாகச் சென்றார். பைபிளிலிருந்து தான் கற்றிருந்த காரியங்களை அங்கே எடுத்துக் கூறினார்.
பைபிளின் சத்தியத்திற்கு சார்பாக எங்கள் நிலைநிற்கை
பெரும்பாலும் இந்தச் சமயத்தில்—1920-ன் தொடக்கத்தில்—கிரீஸ் மற்றொரு போரின் மத்தியில் இருந்தது. திமிட்ரீஸ் படையில் கட்டாயச்சேர்ப்பு செய்யப்பட்டு, ஆசியா முனையிலுள்ள துருக்கியின் மத்திய பாகத்துக்கு அனுப்பப்பட்டார். அவர் காயப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டார். அவர் சுகமடைந்த பின்பு, ஆசியா முனையிலுள்ள ஸ்மிர்னாவுக்கு (இப்போது இஜ்மிர், துருக்கி) நான் அவருடன் சென்றேன். 1922-ல், திடீரென்று போர் நின்றபோது, நாங்கள் தப்பியோட வேண்டியிருந்தது. உண்மையில், மிகவும் சேதப்பட்ட ஒரு படகில், சாமோஸுக்கு எப்படியோ ஒருவழியாக தப்பிப்பிழைத்து போய்ச் சேர்ந்தோம். வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தபோது, நாங்கள் முழங்காற்படியிட்டு, கடவுளுக்கு—அவரைப் பற்றி மிகக் குறைந்த அறிவையே நாங்கள் இன்னும் கொண்டிருந்த கடவுளுக்கு—நன்றி செலுத்தினோம்.
சீக்கிரத்தில், திமிட்ரீஸ், அந்தத் தீவின் தலைநகராகிய வாத்தியில் இருந்த ஒரு பள்ளியில் கற்பிக்கும்படி நியமிக்கப்பட்டார். பைபிள் மாணாக்கரின் புத்தகங்களை அவர் தொடர்ந்து படித்துவந்தார். மழை பெய்துகொண்டிருந்த ஓர் இரவில், சீயோஸ் தீவிலிருந்து, பைபிள் மாணாக்கரில் இருவர் எங்களை வந்து சந்தித்தார்கள். முழுநேர சுவிசேஷகர்கள் அழைக்கப்பட்டபடி, கோல்போர்ட்டர்களாகச் சேவிப்பதற்கு, அமெரிக்காவிலிருந்து அவர்கள் திரும்பிவந்திருந்தனர். அந்த இரவு அவர்களை எங்களோடு தங்கும்படி செய்தோம். கடவுளுடைய நோக்கங்களைப் பற்றிய பல காரியங்களை அவர்கள் எங்களிடம் பேசினார்கள்.
பின்னால் திமிட்ரீஸ் என்னிடம் இவ்வாறு சொன்னார்: “பெனெலோப்பி, இது சத்தியம் என்று நான் உணருகிறேன், நான் அதைப் பின்பற்ற வேண்டும். கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சர்ச்சில் பாடுவதை நான் நிறுத்த வேண்டும் என்பதையும், பள்ளிப் பிள்ளைகளுடன் நான் சர்ச்சுக்கு ஆஜராக முடியாது என்பதையும் இது குறிக்கிறது.” யெகோவாவைப் பற்றிய எங்கள் அறிவு மட்டுப்பட்டதாக இருந்தபோதிலும், அவரைச் சேவிப்பதற்கான எங்கள் ஆவல் பலத்ததாக இருந்தது. ஆகவே நான் இவ்வாறு பதிலளித்தேன்: “உங்களுக்கு இடைஞ்சலாக நான் இருக்க மாட்டேன். விருப்பப்படி செய்யுங்கள்.”
தயக்கத்துடன் அவர் மேலும் தொடர்ந்து இவ்வாறு சொன்னார்: “ஆம், நம்முடைய நடவடிக்கை தெரியவந்தால், நான் என் வேலையை இழப்பேன்.”
“கவலைப்படாதீர்கள்,” என்று நான் சொல்லி, “ஆசிரியர் வேலை செய்தே எல்லா மக்களும் வாழ்கிறார்களா? நாம் வாலிபராகவும் பலமுள்ளவர்களாகவும் இருக்கிறோம், கடவுளுடைய உதவியால் வேறு வேலையை கண்டடையலாம்,” என்றேன்.
ஏறக்குறைய இந்தச் சமயத்தில், மற்றொரு பைபிள் மாணாக்கர்—அவரும் கோல்போர்ட்டராக—சாமோஸுக்கு வந்திருந்ததாக நாங்கள் அறிந்தோம். பைபிள் பொதுப்பேச்சு ஒன்று கொடுக்க, போலீஸார் அவருக்கு அனுமதி கொடுக்கவில்லை என்று நாங்கள் கேள்விப்பட்டபோது, நாங்கள் அவரைத் தேடிக்கொண்டு சென்றோம். ஒரு கடையில், கிரேக்க ஆர்த்தடாக்ஸ் இறைமையியல் வல்லுநர் இருவரிடம் அவர் உரையாடிக்கொண்டிருப்பதைக் கண்டோம். தங்கள் நம்பிக்கைகள் சரியென்று பைபிளைக் கொண்டு நிரூபிக்க முடியாமல் வெட்கமடைந்து, அந்த இறைமையியல் வல்லுநர்கள் விரைவில் அங்கிருந்து சென்றுவிட்டனர். என் கணவர் அந்தக் கோல்போர்ட்டரின் அறிவால் மனங்கவர்ந்தவராக, அவரிடம்: “இவ்வளவு எளிதாய் நீங்கள் பைபிளை உபயோகிப்பது எவ்வாறு?” என்று கேட்டார்.
“திட்டமிட்டு ஒழுங்காக நாங்கள் பைபிளைப் படிக்கிறோம்,” என்று அவர் பதிலளித்தார். தன் பையைத் திறந்து, தி ஹார்ப் ஆஃப் காட் (கடவுளின் சுரமண்டலம்) என்ற படிப்பு புத்தகத்தை அவர் எடுத்து, அந்தப் புத்தகத்தை அத்தகைய ஒரு படிப்பில் பயன்படுத்துவது எவ்வாறு என்று எங்களுக்குக் காட்டினார். படிப்பதற்கு நாங்கள் அவ்வளவு மிக ஆவலாயிருந்ததனால், என் கணவரும் நானும், அந்த கோல்போர்ட்டரும், மற்றும் இரு ஆண்களும் உடனடியாக அந்தக் கடைக்காரரோடு அவருடைய வீட்டுக்குச் சென்றோம். அந்தக் கோல்போர்ட்டர் எங்கள் ஒவ்வொருவருக்கும் தி ஹார்ப் ஆஃப் காட் புத்தகப் பிரதி ஒன்றைக் கொடுத்தார், நாங்கள் உடனடியாகப் படிக்கத் தொடங்கினோம். நள்ளிரவு கடந்து வெகுநேரமாகிய பின்பும் நாங்கள் தொடர்ந்து படித்துக்கொண்டிருந்தோம், பின்பு பொழுது விடிகையில், பைபிள் மாணாக்கரால் பாடப்படும் பாட்டுகளைக் கற்கத் தொடங்கினோம்.
அந்தச் சமயத்திலிருந்து நான், ஒவ்வொரு நாளும் பைபிளைப் பல மணிநேரங்கள் படிக்கத் தொடங்கினேன். வெளிநாட்டிலிருந்து, பைபிள் மாணாக்கர்கள் எங்களுக்கு பைபிள்படிப்பு உதவிகளைத் தொடர்ந்து அனுப்பிவந்தார்கள். ஜனவரி 1926-ல், ஜெபத்தில் கடவுளுக்கு என் ஒப்புக்கொடுத்தலைச் செய்து, தடங்கலின்றி அவருடைய சித்தத்தைச் செய்வதற்கு உறுதிகூறினேன். பின்னால் அந்த வேனிற்காலத்தின்போது என் கணவரும் நானும் தண்ணீரில் முழுக்காட்டப்படுவதன் மூலம் எங்கள் ஒப்புக்கொடுத்தலை அடையாளப்படுத்தினோம். நாங்கள் கற்றுக்கொண்டிருந்த காரியங்களைப் பற்றி மற்றவர்களிடம் பேச நாங்கள் மிகுந்த ஆவலாயிருந்தோம், ஆகையால், நம்பிக்கையளிக்கும் செய்தி (ஆங்கிலம்) என்ற துண்டுப்பிரதியைக்கொண்டு வீடுவீடாகச் ஊழியஞ்செய்ய தொடங்கினோம்.
கடும் எதிர்ப்பைச் சகித்து நிலைத்திருத்தல்
ஒரு நாள், ஒரு வாலிபப் பெண், ஒரு சிறிய, கிரேக்க ஆர்த்தடாக்ஸ் ஜெப அறையில் நற்கருணைக்கு வரும்படி என்னை அழைத்தாள். “அந்த முறையில் கடவுளை வணங்குவதை நான் நிறுத்திவிட்டேன்,” என்று நான் விளக்கினேன். “பைபிள் கற்பிக்கிறபடி, நான் இப்போது அவரை ஆவியோடும் உண்மையோடும் வணங்குகிறேன்,” என்றேன். (யோவான் 4:23, 24) அவள் திகைப்படைந்து, என் கணவரையும் உட்படுத்தி, நடந்ததை எங்கும் பரவலாக அறிவித்தாள்.
பெரும்பாலும் எல்லாருமே எதிர்க்கத் தொடங்கினார்கள். எங்கள் வீட்டிலோ, அந்தத் தீவில் அக்கறைகாட்டின ஒருசிலரோடு நாங்கள் நடத்தின கூட்டங்களிலோ—ஓரிடத்திலும் நாங்கள் சமாதானத்தைக் கண்டடைய முடியவில்லை. ஆர்த்தடாக்ஸ் குருமாரின் தூண்டுதலின்பேரில், திரளான கூட்டத்தினர், நாங்கள் கூட்டம் நடத்தும் இடத்திற்கு வெளியே கூடி, கற்களை எறிந்துகொண்டும் வசை மொழிகளைக் கத்திக் கூக்குரலிட்டுக்கொண்டும் இருந்தனர்.
நம்பிக்கையளிக்கும் செய்தி துண்டுப்பிரதியை நாங்கள் வினியோகித்தபோது, பிள்ளைகள் எங்களைச் சுற்றி கூட்டங்கூடி, “ஆயிர ஆண்டுக்காரர்” என்றும், இழிவுபடுத்தும் வேறு பதங்களையும் சொல்லி, கூச்சலிட்டுக் கத்தினார்கள். என் கணவரோடுகூட வேலைசெய்வோரும் அவருக்குத் தொந்தரவு உண்டாக்கத் தொடங்கினார்கள். 1926-ன் பிற்பகுதியில் அவர் விசாரணைக்குக் கொண்டுவரப்பட்டு, பொதுப்பள்ளி ஆசிரியராக இருக்கத் தகுதியற்றவரென்று குற்றஞ்சாட்டி, 15 நாட்கள் சிறைப்படுத்தப்படும்படி தீர்ப்பளிக்கப்பட்டார்.
இதைப்பற்றி என் தாயாருக்குத் தெரியவந்தபோது, என் கணவரை விட்டு விலகிவிடும்படி எனக்கு அறிவுரை கூறினார்கள். “என் அன்புள்ள அம்மா, கவனியுங்கள், நான் உங்களை எவ்வளவாக நேசித்து மதிக்கிறேன் என்பதை நீங்களும் அறிந்திருக்கிறீர்கள் நானும் அறிந்திருக்கிறேன். ஆனால், உண்மையான கடவுளாகிய யெகோவாவை நாங்கள் வணங்கும் முறையில் நீங்கள் குறுக்கிட நான் உங்களை அனுமதிக்க முடியாது,” என்று நான் பதிலளித்தேன். அவர்கள் கடும் மனக்கசப்புற்று தன் கிராமத்துக்குச் சென்றுவிட்டார்கள்.
1927-ல் பைபிள் மாணாக்கரின் ஒரு மாநாடு ஆதன்ஸில் நடத்தப்பட்டது. நாங்கள் அதற்கு ஆஜராகும்படி யெகோவா வழியைத் திறந்தார். பல எண்ணிக்கையான உடன் விசுவாசிகளுடன் கூடிவந்ததில் நாங்கள் உள்ளக்கிளர்ச்சியடைந்து ஆவிக்குரியப்பிரகாரம் பலப்படுத்தப்பட்டோம். சாமோஸுக்குத் திரும்பிவந்து, உலக அதிபதிகளுக்கு ஒரு சாட்சியம் (ஆங்கிலம்) என்ற தலைப்பைக்கொண்ட துண்டுப்பிரதியின் 5,000 பிரதிகளை எங்கள் தீவின் பட்டணங்களிலும் கிராமங்களிலும் நாங்கள் வினியோகித்தோம்.
ஏறக்குறைய இந்தச் சமயத்தின்போதே திமிட்ரீஸ், தன் ஆசிரியர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். எங்களுக்கு விரோதமான தப்பெண்ணத்தின் காரணமாக, ஒரு வேலையைக் கண்டுபிடிப்பது பெரும்பாலும் முடியாத காரியமாக இருந்தது. ஆனால், நான் தைக்க முடிந்ததாலும் திமிட்ரீஸ் பெயின்ட் அடிப்பதில் திறம்பட்டவராக இருந்ததாலும் எங்கள் தேவைகளுக்குப் போதுமானவற்றை நாங்கள் சம்பாதிக்க முடிந்தது. 1928-ல் என் கணவரும், சாமோஸிலிருந்த வேறு நான்கு கிறிஸ்தவ சகோதரரும், நற்செய்தியைப் பிரசங்கித்ததற்காக இரண்டு மாதங்கள் சிறையிருப்பு தீர்ப்பளிக்கப்பட்டனர். சிறைப்படுத்தப்படாத ஒரே பைபிள் மாணாக்கராக நான் இருந்ததால், சிறைச்சாலையில் இருந்த அவர்களுக்கு நான் உணவு அளித்துவர முடிந்தது.
கடும் நோய்களோடு போராடுதல்
ஒரு சந்தர்ப்பத்தில், முதுகெலும்பு அழற்சி கீல்வாதத்தால் (tubercular spondylitis) நோயுற்றேன். அப்போது அது நாட்பட நீடிக்கும் அறியப்பட்டிராத நோயாக இருந்தது. நான் பசியை இழந்து, தொடர்ந்து கடும் காய்ச்சலுற்றேன். என் கழுத்திலிருந்து தொடைகள் வரை மாவுக்கட்டுப் போட்டிருக்க வேண்டிய சிகிச்சையை அது உட்படுத்தியது. அந்தச் சிகிச்சையை நான் தொடர்ந்து பெறுவதற்கான பணச்செலவைச் சமாளிப்பதற்கு, ஒரு பகுதி மனையிடத்தை என் கணவர் விற்றார். துயருற்றவளாய், பலத்துக்காக ஒவ்வொரு நாளும் நான் கடவுளை நோக்கி ஜெபித்தேன்.
உறவினர்கள், என்னைப் பார்க்க வருகையில், எதிர்ப்பை விடாது தூண்டிவிட்டுக்கொண்டிருந்தனர். நாங்கள் எங்கள் மதத்தை மாற்றிவிட்டதன் காரணமாகவே இந்த இக்கட்டுகளையெல்லாம் அனுபவிக்கிறோம் என்று தாயார் கூறினார்கள். சகித்து நிலைத்திருப்பதற்கு, பொறுமையையும் தைரியத்தையும் எனக்குத் தரும்படி, நம்முடைய பரலோகத் தகப்பனிடம் நான் மன்றாடுகையில், அசைய முடியாதவளாய் என் தலையணையைக் கண்ணீரால் நனைத்தேன்.
என் படுக்கை அருகிலிருந்த மேசையில், என் பைபிளையும், என்னைக் காணவருவோருக்காகச் சிற்றேடுகளையும் துண்டுப்பிரதிகளையும் வைத்திருந்தேன். எங்கள் சிறிய சபையின் கூட்டங்கள், எங்களுடைய வீட்டில் நடத்தப்பட்டதானது ஓர் ஆசீர்வாதமாக இருந்தது; ஆவிக்குரிய ஊக்கமூட்டுதலை நான் தவறாமல் பெற்றுவர முடிந்தது. ஆதன்ஸிலிருந்து வந்த ஒரு மருத்துவரின் சிகிச்சைக்குப் பணம் செலுத்த, மற்றொரு பகுதி மனையிடத்தை நாங்கள் விற்க வேண்டியிருந்தது.
அதன்பின் சமீபத்தில், பயணக் கண்காணி எங்களை சந்தித்தார். நான் இந்த நிலைமையிலும், திமிட்ரீஸ் வேலையில்லாமலும் இருப்பதை அவர் கண்டு மிகவும் மனம் வருந்தினார். லெஸ்பாஸ் தீவில் இருக்கும் மிட்டிலீனீயில் வாழ்வதற்கு ஏற்பாடுகள் செய்ய அவர் தயவாக எங்களுக்கு உதவிசெய்தார். நாங்கள் 1934-ல் அங்கே மாறிச் சென்றோம், திமிட்ரீஸுக்கும் வேலை கிடைத்தது. சிறந்த கிறிஸ்தவ சகோதர சகோதரிகளையும் அங்கு நாங்கள் கண்டோம். நோய்ப்பட்டிருந்த என்னை அவர்கள் கவனித்துக்கொண்டார்கள். படிப்படியாய், ஐந்து ஆண்டுகள் சிகிச்சைப் பெற்ற பின்பு நான் முற்றிலுமாகச் சுகமடைந்தேன்.
எனினும், 1946-ல், இரண்டாவது உலகப் போருக்குச் சற்று பின்பு, நான் எலும்புப்புடைப்பு வயிற்றறை உறையழற்சியால் (tubercular peritonitis) இந்தச் சமயம் கவலைக்கிடமான முறையில் மறுபடியும் நோயுற்றேன். கடும் காய்ச்சலுடனும் மிகுந்த உடல்வலிகளுடனும் ஐந்து மாதங்கள் படுக்கையில் கிடந்தேன். ஆனால், முன்பு நான் செய்ததுபோல், என்னைக் காண வருவோரிடம் யெகோவாவைப் பற்றி பேசுவதை நான் ஒருபோதும் நிறுத்திவிடவில்லை. காலப்போக்கில் நான் மறுபடியும் சுகமடைந்தேன்.
எதிர்ப்பின் மத்தியில் பயனியர் ஊழியம் செய்தல்
போருக்குப் பின்னான ஆண்டுகளின்போது கிரீஸில், மனமிரங்காத கடும் எதிர்ப்பு, யெகோவாவின் சாட்சிகளுடைய அனுபவமாக இருந்தது. வீடுவீடாகச் செய்யும் ஊழியத்தில் ஈடுபட்டிருக்கும்போது, நாங்கள் பல சமயங்களில் கைதுசெய்யப்பட்டோம். என் கணவர் ஏறக்குறைய ஓர் ஆண்டு சிறையிருப்பை மொத்தமாக அனுபவித்திருக்கிறார். ஊழியத்திற்காக நாங்கள் புறப்பட்டு செல்கையில், கைது செய்யப்பட்டவர்களாகப் போலீஸ் நிலையத்தில் அந்த இரவைக் கழிப்பதைப் பொதுவாய்த் திட்டமிட்டோம். எனினும், யெகோவா எங்களை ஒருபோதும் கைவிடவில்லை. சகித்து நிலைத்திருப்பதற்குத் தேவைப்பட்ட தைரியத்தையும் பலத்தையும் அவர் எப்போதும் அளித்தார்.
1940-ன் பத்தாண்டுகளில், விடுமுறை பயனியர் ஏற்பாட்டைப் பற்றி, இன்ஃபார்மென்ட் (இப்போது நம் ராஜ்ய ஊழியம்) பிரதியில் நான் வாசித்தேன். மாதத்தில் 75 மணிநேரம் ஊழியத்திற்குச் செலவிடுவதைத் தேவைப்படுத்தின இந்த ஊழிய அம்சத்தில் பங்குகொள்ள முயற்சி செய்யும்படி நான் தீர்மானித்தேன். இதன் பலனாக, என் மறுசந்திப்புகளும் பைபிள் படிப்புகளும் அதிகரித்தன—ஒரு சமயம் 17 வாராந்தர படிப்புகளை நான் நடத்திக்கொண்டிருந்தேன். மிட்டிலீனீயின் வாணிகப் பகுதியில் ஒரு பத்திரிகை மார்க்கத்தையும் நான் தொடங்கினேன். அவ்விடத்தில், கடைகளிலும், அலுவலகங்களிலும், வங்கிகளிலும் ஏறக்குறைய 300 தி உவாட்ச்டவர் மற்றும் அவேக்! பத்திரிகைகளின் பிரதிகளை நான் தவறாமல் அளித்து வந்தேன்.
1964-ல் பயணக் கண்காணி எங்கள் சபையைச் சேவித்தபோது, அவர் இவ்வாறு சொன்னார்: “சகோதரி பெனெலோப்பி, உங்கள் ஊழியத்தில் எத்தகைய சிறந்த பலன்கள் உங்களுக்குக் கிடைக்கின்றன என்பதை உங்கள் பிரஸ்தாபி பதிவு அட்டையிலிருந்து நான் கண்டேன். ஒழுங்கான பயனியர் சேவைக்கு ஒரு விண்ணப்பத்தாளை நீங்கள் நிரப்பி அனுப்பலாமல்லவா?” அவருடைய ஊக்கமூட்டுதலுக்காக நான் எப்போதும் நன்றியுள்ளவளாக இருப்பேன்; முப்பதுக்கு மேற்பட்ட ஆண்டுகளாக, முழுநேர ஊழியம் என் மகிழ்ச்சியாக இருந்துவந்திருக்கிறது.
நற்பலனளித்த ஓர் அனுபவம்
மிட்டிலீனீயில், லான்காடா என்றழைக்கப்பட்ட ஜனநெருக்கம் மிகுந்த ஓர் இடம் அருகில் உள்ளது. அங்கு கிரேக்க அகதிகள் வாழ்ந்தனர். நாங்கள் எதிர்ப்பட்ட மதவெறிகொண்ட எதிர்ப்பின் காரணமாக, அங்கு வீடுவீடாக ஊழியம் செய்வதைத் தவிர்த்தோம். எனினும், என் கணவர் சிறைச்சாலையில் இருந்தபோது, அவரைக் காணச் செல்கையில், அந்தப் பகுதியின் வழியாக நான் கடந்து செல்ல வேண்டியிருந்தது. மழை பெய்துகொண்டிருந்த ஒரு நாளின்போது ஓர் அம்மாள், என் கணவர் சிறைச்சாலையில் இருந்ததன் காரணத்தைக் கேட்டுத் தெரிந்துகொள்ள என்னை அவர்கள் வீட்டுக்குள் வரவழைத்தார்கள். கடவுளுடைய ராஜ்யத்தைப் பிரசங்கித்ததற்காக என்றும், கிறிஸ்து பாடுபட்டதுபோல் அவரும் பாடுபடுகிறார் என்றும் நான் விளக்கினேன்.
காலப்போக்கில், மற்றொரு அம்மாளும் அவர்களுடைய வீட்டுக்கு நான் வரும்படி ஏற்பாடு செய்தார்கள். நான் அங்கு போய்ச் சேர்ந்தபோது, மொத்தம் 12 பெண்கள் அவர்களால் வரவழைக்கப்பட்டிருந்ததைக் கண்டேன். எதிர்ப்பு ஏற்படலாமென நான் எதிர்பார்த்தேன். ஆகையால், என்ன நடந்தாலும் அதை எதிர்ப்படுவதற்கு, ஞானத்தையும் தைரியத்தையும் எனக்கு அருளும்படி கடவுளிடம் நான் ஜெபித்தேன். அந்த அம்மாள் பல கேள்விகள் கேட்டார்கள், சிலர் ஆட்சேபணைகளை எழுப்பினார்கள், ஆனால் வேதப்பூர்வ பதில்களை நான் அளிக்க முடிந்தது. நான் போகும்படி எழுந்தபோது, அடுத்த நாள் மறுபடியும் வரும்படியாக, அந்த வீட்டு அம்மாள் என்னைக் கேட்டுக்கொண்டார்கள். சந்தோஷத்துடன், அந்த அழைப்பை நான் ஏற்றேன். அடுத்த நாள், என்னோடு ஒரு துணையும் நானும் வந்துசேர்ந்தபோது, அந்தப் பெண்கள் ஏற்கெனவே காத்துக்கொண்டிருந்ததைக் கண்டோம்.
அதன்பின் எங்கள் வேதப்பூர்வ கலந்தாலோசிப்புகள் தவறாமல் ஒழுங்காய்த் தொடர்ந்து நடந்தன, பல பைபிள் படிப்புகள் தொடங்கப்பட்டன. அந்தப் பெண்களில் பலர் திருத்தமான அறிவில் படிப்படியாய் முன்னேறினார்கள். அவர்களுடைய குடும்பத்தினரும் அவ்வாறே முன்னேறினார்கள். பின்னால் இந்தத் தொகுதி, மிட்டிலீனீயில் யெகோவாவின் சாட்சிகளின் ஒரு புதிய சபையினுடைய தோற்றுமூலமாயிற்று.
யெகோவா என்னிடம் தயவாக இருந்திருக்கிறார்
பல ஆண்டுகளாக, யெகோவாவைச் சேவிப்பதற்கு என் கணவரும் நானும் எடுத்த முயற்சிகளுக்கு யெகோவா பலனளித்திருக்கிறார். 1920-ன் பத்தாண்டுகளில் சாமோஸிலிருந்த சிறு எண்ணிக்கையான சாட்சிகள், இரண்டு சபைகளும் ஒரு தொகுதியுமாக மொத்தம் ஏறக்குறைய 130 பிரஸ்தாபிகள் அளவாய்ப் பெருகிவிட்டிருக்கின்றனர். லெஸ்பாஸ் தீவில், நான்கு சபைகளும் ஐந்து தொகுதிகளும் இருக்கின்றன. அவற்றில் ஏறக்குறைய 430 பிரஸ்தாபிகள் உள்ளனர். என் கணவர், 1977-ல் அவருடைய மரணம் வரையாகக் கடவுளுடைய ராஜ்யத்தைப் பிரசங்கிப்பதில் ஊக்கமாய் ஈடுபட்டார். நாங்கள் உதவிசெய்தவர்கள் ஊழியத்தில் ஆர்வமுள்ளவர்களாய் இன்னும் நிலைத்திருப்பதைக் காண்பது எத்தகைய சிலாக்கியமாக இருக்கிறது! அவர்களுடைய பிள்ளைகளுடனும், பேரப்பிள்ளைகளுடனும், கொள்ளுப் பேரப் பிள்ளைகளுடனும், யெகோவாவை ஒருமிக்கத் தொழுதுகொள்ளும் ஒரு திரள் கூட்டத்தையே அவர்கள் உண்டுபண்ணுகின்றனர்!
இப்போது 70 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்ததாயிருக்கிற, என் கிறிஸ்தவ சேவையின் நடவடிக்கை, எளிதான ஒன்றாக இருந்திருக்கவில்லை. எனினும், யெகோவா ஒப்பற்ற பலத்தக் கோட்டையாக இருந்திருக்கிறார். முதிர்வயதாலும் உடல்பலக் குறைவாலும் படுத்தப் படுக்கையில் கிடப்பதால், நான் செய்ய முடிகிற பிரசங்க ஊழியம் மிகவும் மட்டுப்பட்டதாக உள்ளது. ஆனால், சங்கீதக்காரனைப்போல், நான் யெகோவாவிடம் இவ்வாறு சொல்ல முடியும்: “நீர் என் அடைக்கலம், என் கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர்.”—சங்கீதம் 91:2.
(இந்தக் கட்டுரை தயாராக்கப்பட்டுக் கொண்டிருக்கையில் சகோதரி மாக்ரிஸ் இறந்துபோனார். அவர் பரலோக நம்பிக்கையுடையவர்.)
[பக்கம் 26-ன் படம்]
1955-ல் என் கணவருடன்
[பக்கம் 26-ன் படம்]
ஜனவரி 1997-ல் சகோதரி மாக்ரிஸ் 100 வயதானவராக இருந்திருப்பார்