பெற்றோரே, உங்களுடைய பிள்ளைகளில் இன்பம் காணுங்கள்
“உன் தகப்பனும் உன் தாயும் சந்தோஷப்படுவார்கள்.”—நீதிமொழிகள் 23:25.
1. பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளில் இன்பம் காணும்படி எது செய்விக்கும்?
ஓர் இளங்கன்று வளர்ந்து—முக்கியமாக நீங்கள் நட்டு பராமரித்து வந்திருந்த இளங்கன்று ஒன்று வளர்ந்து—அழகையும் நிழலையும் தரும் கம்பீரமான ஒரு மரமாக ஆவதைக் காண்பது எவ்வளவு அருமையானது! அதுபோலவே, கடவுளுடைய முதிர்ச்சியுள்ள ஊழியர்களாய் ஆகும்படி பிள்ளைகளைப் பராமரித்துவரும் பெற்றோர்கள் அவர்களில் பேரின்பம் காண்கிறார்கள்; ஏனென்றால் பைபிள் நீதிமொழி சொல்லுகிறது: “நீதிமானுடைய தகப்பன் மிகவும் களிகூருவான்; ஞானமுள்ள பிள்ளையைப் பெற்றவன் அவனால் மகிழுவான். உன் தகப்பனும் உன் தாயும் சந்தோஷப்படுவார்கள்; உன்னைப் பெற்றவள் மகிழுவாள்.”—நீதிமொழிகள் 23:24, 25.
2, 3. (அ) பெற்றோர் எவ்வாறு பெருந்துயரத்தையும் மனக்கசப்பையும் தவிர்க்க முடியும்? (ஆ) இன்பத்திற்கான ஒரு மூலகாரணமாய் ஆவதற்கு இளங்கன்றுகள், பிள்ளைகள் ஆகிய இரண்டுக்கும் என்ன தேவை?
2 என்றபோதிலும், ஒரு பிள்ளை தானாகவே ‘நீதிமானாகவும்,’ ‘ஞானவானாகவும்’ ஆகிவிடுகிறதில்லை. பிள்ளைகள் ‘பெருந்துயரத்துக்கும்,’ ‘மனக்கசப்புக்கும்’ மூலகாரணமாய் ஆவதிலிருந்து அவர்களைக் காத்துக்கொள்வதற்கு, ஓர் இளங்கன்றை கம்பீரமான ஒரு மரமாக மாற்றுவதில் உட்பட்டிருக்கிற வேலையைப் போலவே, மிகுந்த முயற்சி தேவைப்படுகிறது. (நீதிமொழிகள் 17:21, 25, NW) உதாரணமாக, ஆதாரக் கம்புகள், ஓர் இளங்கன்று நேராகவும் உறுதியாகவும் வளருவதற்கு சீர்படுத்த முடியும். காலந்தவறாமல் தண்ணீர் பாய்ச்சுவது இன்றியமையாதது; மேலும் ஓர் இளங்கன்றை புழு பூச்சிகளிலிருந்து பாதுகாப்பதும் அவசியமாக இருக்கலாம். கடைசியாக, தேவையில்லாதவற்றை களைந்தெறிவது அழகான ஒரு மரத்தை உருவாக்குவதற்கு உதவுகிறது.
3 தேவபக்திக்குரிய பயிற்றுவிப்பு, பைபிள் சத்தியம் என்ற தண்ணீரால் மனதை ஊறவைத்தல், ஒழுக்கநெறி துர்ப்பிரயோகங்களிலிருந்து பாதுகாப்பு, விரும்பத்தகாத சுபாவங்களைக் களைந்தெறிவதற்கு அன்பான சிட்சை போன்ற இப்படிப்பட்ட காரியங்கள் பிள்ளைகளுக்குத் தேவை என்பதை கடவுளுடைய வார்த்தை வெளிப்படுத்துகிறது. இப்படிப்பட்ட தேவைகளை அளிப்பதற்கு, முக்கியமாக தகப்பன்மார் தங்களுடைய பிள்ளைகளை ‘யெகோவாவுக்கேற்ற சிட்சையிலும் மனச்சீரமைப்பிலும்’ வளர்க்கும்படி தூண்டுவிக்கப்படுகிறார்கள். (எபேசியர் 6:4, NW) இது எதை உட்படுத்துகிறது?
யெகோவாவின் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம்
4. பெற்றோருக்கு தங்களுடைய பிள்ளைகளிடமாக இருக்கும் உத்தரவாதம் என்ன, அதை அவர்கள் நிறைவேற்றுவதற்கு முன்பாக என்ன காரியம் தேவைப்படுகிறது?
4 மூல கிரேக்க மொழியில் ‘யெகோவாவுக்கேற்ற மனச்சீரமைப்பு’ என்பது யெகோவாவின் சித்தத்திற்கு இசைவாக நம்முடைய சிந்தையை சீரமைப்பதை அர்த்தப்படுத்துகிறது. அப்படியானால், காரியங்களின் பேரில் யெகோவாவின் சிந்தையை பெற்றோர் தங்களுடைய சிறுபிள்ளைகளின் மனதில் புகுத்த வேண்டும். மேலும் அவர்கள் பரிவிரக்கமுள்ள சிட்சையை அல்லது திருத்துகிற பயிற்சியை அளிப்பதில் கடவுளுடைய முன்மாதிரியை பின்பற்ற வேண்டும். (சங்கீதம் 103:10, 11; நீதிமொழிகள் 3:11, 12) ஆனால் பெற்றோர் இதைச் செய்வதற்கு முன்பாக, அவர்கள்தாமே யெகோவாவின் வார்த்தையை உட்கிரகிக்க வேண்டும்; ஏனெனில் கடவுளுடைய தீர்க்கதரிசியாகிய மோசே பூர்வ இஸ்ரவேலருக்கு புத்திமதி கூறியதாவது: ‘இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற [யெகோவாவிடமிருந்து வருகிற] இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக்கடவது.’—உபாகமம் 6:6.
5. எப்பொழுது மற்றும் எந்த முறையில் இஸ்ரவேல பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளுக்குப் போதிக்க வேண்டியிருந்தது, ‘கருத்தாய்ப் போதிப்பது’ என்பது எதை அர்த்தப்படுத்துகிறது?
5 பைபிளை தவறாமல் படிப்பது, தியானிப்பது, ஜெபிப்பது ஆகியவை மோசே அடுத்தபடியாக கட்டளையிட்ட காரியத்தைச் செய்வதற்கு பெற்றோரை ஆயத்தப்படுத்துகின்றன: ‘நீ [யெகோவாவின் வார்த்தையை] உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேச வேண்டும்.’ ‘கருத்தாய்ப் போதித்து’ என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிற எபிரெய வார்த்தை ‘திரும்பவும் சொல்வதை,’ ‘மீண்டும் மீண்டும் சொல்வதை,’ ‘அச்சாக பதியவைப்பதை’ அர்த்தப்படுத்துகிறது. யெகோவாவின் வார்த்தைகளை முன்னிலையில் வைக்க வேண்டியதன் அவசியத்தை மோசே எவ்வாறு மேலுமாக வலியுறுத்திக் கூறுகிறார் என்பதை கவனியுங்கள்: “அவைகளை உன் கையின்மேல் அடையாளமாகக் கட்டிக்கொள்வாயாக; அவைகள் உன் கண்களுக்கு நடுவே ஞாபகக்குறியாய் இருக்கக்கடவது. அவைகளை உன் வீட்டு நிலைகளிலும், உன் வாசல்களிலும் எழுதுவாயாக.” தெளிவாகவே, பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு ஒழுங்காக, அன்பான கவனிப்பு செலுத்தும்படி யெகோவா தேவைப்படுத்துகிறார்!—உபாகமம் 6:7-9.
6. பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளுக்கு எதைக் கருத்தாய்ப் போதிக்க வேண்டியிருந்தது, என்ன பலனுடன்?
6 பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளின் மனதில் கருத்தாய்ப் போதிக்கவேண்டியிருந்த ‘இந்த வார்த்தைகள்’ யாவை? பத்துக் கட்டளைகள் என்று பொதுவாக அழைக்கப்படுவதை மோசே இப்பொழுதுதான் திரும்பவும் கூறியிருந்தார்; கொலை செய்யக்கூடாது, விபசாரம் செய்யக்கூடாது, திருடக்கூடாது, பொய்சாட்சி சொல்லக்கூடாது, இச்சிக்கக்கூடாது ஆகியவை அதில் உட்பட்டிருந்தன. இத்தகைய ஒழுக்கநெறி தேவைகளும் ‘தேவனாகிய கர்த்தரிடத்தில் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு பலத்தோடும் அன்புகூரும்படி’ கொடுக்கப்பட்ட கட்டளையுமே முக்கியமாக இஸ்ரவேல பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளுக்கு கருத்தாய்ப் போதிக்க வேண்டியவையாய் இருந்தன. (உபாகமம் 5:6-21; 6:1-5) இந்த விதமான போதனையே இன்று பிள்ளைகளுக்குத் தேவை என்பதை நீங்கள் ஒத்துக்கொள்ள மாட்டீர்களா?
7. (அ) பைபிளில் பிள்ளைகள் எதற்கு ஒப்பிடப்படுகிறார்கள்? (ஆ) நாம் இப்பொழுது எதை ஆராய்வோம்?
7 இஸ்ரவேல தகப்பனுக்கு இவ்வாறு சொல்லப்பட்டது: “உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சக்கொடியைப்போல் இருப்பாள்; உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள்.” (சங்கீதம் 128:3) என்றபோதிலும், பெற்றோர் தங்கள் “இளங்கன்றுகளைப்” பற்றி கவலைப்படுவதற்குப் பதிலாக இன்பம் காண்பதற்கு, அவர்கள் தங்களுடைய பிள்ளைகளில் ஒரு தனிப்பட்ட, அன்றாட அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். (நீதிமொழிகள் 10:1; 13:24; 29:15, 17) பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளுக்கு ஆவிக்குரிய விதமாக தண்ணீர் பாய்ச்சி, பாதுகாத்து, அன்பாக சிட்சைகொடுத்து, அவர்களில் உண்மையான இன்பம் காணும் ஒரு முறையில் எப்படி அவர்களைப் பயிற்றுவிக்கலாம் என்பதை நாம் ஆராய்வோமாக.
சிசுவிலிருந்தே பயிற்றுவித்தல்
8. (அ) தீமோத்தேயுவுக்கு சீர்படுத்தும் ஆதாரக் கம்புகளாய் இருந்தது யார்? (ஆ) அந்தப் பயிற்றுவிப்பு எப்பொழுது ஆரம்பமானது, என்ன பலனுடன்?
8 அடையாளப்பூர்வமாய் சொல்லப்போனால், உறுதியாக ஊன்றிவைக்கப்பட்ட இரண்டு சீர்படுத்தும் ஆதாரக் கம்புகளிலிருந்து—தன்னுடைய தாயிடமிருந்தும் தன்னுடைய பாட்டியிடமிருந்தும்—உதவியைப் பெற்ற தீமோத்தேயுவை சிந்தித்துப்பாருங்கள். தீமோத்தேயுவினுடைய தகப்பன் கிரேக்கராகவும், தெளிவாகவே ஒரு அவிசுவாசியாகவும் இருந்ததால், ‘பரிசுத்த வேத எழுத்துக்களை சிசுவிலிருந்தே’ அச்சிறுவனுக்கு பயிற்றுவித்தவர்கள் அவனுடைய யூத தாயாகிய ஐனிக்கேயாளும் அவளுடைய தாயாகிய லோவிசாளும் ஆவர். (2 தீமோத்தேயு 1:5; 3:15, NW; அப்போஸ்தலர் 16:1) தீமோத்தேயுவுக்கு—அவர் ஒரு குழந்தையாய் இருக்கும்போதே—‘[யெகோவா] செய்த அதிசயங்களைக்’ குறித்து போதிப்பதில் அவர்கள் காட்டிய ஊக்கம் அபரிமிதமாக பலனளித்தது. (சங்கீதம் 78:1, 3, 4) ஒருவேளை தீமோத்தேயு இன்னும் பருவவயதினராக இருந்தபோதே தூர தேசங்களில் ஒரு மிஷனரியாக ஆனார்; ஆரம்பகால கிறிஸ்தவ சபைகளைப் பலப்படுத்துவதில் அவர் ஒரு முக்கியமான பாகத்தை வகித்தார்.—அப்போஸ்தலர் 16:2-5; 1 கொரிந்தியர் 4:17; பிலிப்பியர் 2:19-23.
9. பொருள் சம்பந்தமான கண்ணிகளைத் தவிர்ப்பதற்கு இளம் பிள்ளைகள் எவ்வாறு கற்றுக்கொள்ளலாம்?
9 பெற்றோர்களே, நீங்கள் என்ன விதமான சீர்படுத்தும் ஆதாரக் கம்புகளாய் இருக்கிறீர்கள்? உதாரணமாக, பொருள் சம்பந்தமான காரியங்களில் உங்களுடைய பிள்ளைகள் ஒரு சமநிலையான நோக்குநிலையை வளர்த்துக்கொள்ள நீங்கள் விரும்புகிறீர்களா? அப்படியானால், எல்லா அதிநவீன சாதனங்களையோ அல்லது உங்களுக்கு உண்மையிலேயே தேவைப்படாத மற்ற பொருட்களையோ அடைய நாடாமல் இருப்பதன்மூலம் நீங்கள் சரியான முன்மாதிரியை கண்டிப்பாக வைக்கவேண்டும். பொருள் சம்பந்தமான ஆதாயங்களை நாடுவதற்கு நீங்கள் தெரிவுசெய்தால், உங்களுடைய பிள்ளைகள் உங்களைப் பார்த்துப் பின்பற்றும்போது ஆச்சரியமடையாதீர்கள். (மத்தேயு 6:24; 1 தீமோத்தேயு 6:9, 10) உண்மையில், சீர்படுத்தும் ஆதாரக் கம்புகள் நேராக இல்லையென்றால், எப்படி அந்த இளங்கன்றுகள் நேராக வளரமுடியும்?
10. யாருடைய வழிநடத்துதலை பெற்றோர் எப்பொழுதும் நாடவேண்டும், என்ன மனநிலையை அவர்கள் உடையவர்களாய் இருக்கவேண்டும்?
10 தங்கள் பிள்ளைகளில் இன்பம் காணும் பெற்றோர், அவர்களைப் பயிற்றுவிப்பதற்கு தொடர்ந்து தெய்வீக உதவியை நாடுவார்கள்; இவ்விதமாய் ஆவிக்குரிய முறையில் தங்கள் பிள்ளைகளுடைய மிகச் சிறந்த அக்கறைக்கேதுவாயுள்ள காரியங்களையே எப்பொழுதும் சிந்திப்பார்கள். நான்கு பிள்ளைகளுக்குத் தாயான ஒருவர் இவ்வாறு விவரித்தார்: “எங்கள் பிள்ளைகள் பிறப்பதற்கு முன்பே, நல்ல பெற்றோராக இருப்பதற்கும் அவருடைய வார்த்தையால் வழிநடத்தப்படுவதற்கும் அதை எங்கள் வாழ்க்கையில் பொருத்திப் பயன்படுத்துவதற்கும் எங்களுக்கு உதவிசெய்யும்படி நாங்கள் தவறாமல் யெகோவாவிடம் ஜெபம் செய்தோம்.” அவர் மேலும் சொல்லுகிறார்: “‘வாழ்க்கையில் முதலிடம் யெகோவாவுக்கு’ என்பது வாயளவில் மட்டும் இல்லாமல், எங்கள் வாழ்க்கையை நாங்கள் நடத்தின விதத்தில் அது இருந்தது.”—நியாயாதிபதிகள் 13:8.
காலந்தவறாமல் “தண்ணீர்” பாய்ச்சுதல்
11. இளங்கன்றுகள், பிள்ளைகள் ஆகிய இரண்டும் வளருவதற்கு என்ன தேவை?
11 குறிப்பாக இளங்கன்றுகளுக்கு விடாமல் தண்ணீர் பாய்ச்சுவது அவசியம்; இது, ஆற்றோரம் உள்ள மரங்கள் எவ்வளவு நன்றாக வளருகின்றன என்ற காரியத்தால் சுட்டிக்காண்பிக்கப்படுகிறது. (வெளிப்படுத்துதல் 22:1, 2-ஐ ஒப்பிடுக.) பைபிள் சத்தியம் என்ற தண்ணீரை காலந்தவறாமல் குழந்தைகளுக்குக் கொடுத்துவந்தால், அவர்களும்கூட ஆவிக்குரிய விதத்தில் செழித்தோங்குவார்கள். ஆனால் தங்களுடைய பிள்ளை எவ்வளவு நேரம் தொடர்ந்து கவனம்செலுத்தும் என்பதையும் பெற்றோர் சிந்திக்க வேண்டும். ஒருவேளை அடிக்கடி நடத்தப்படும் குறைந்தநேர போதனை, ஒருசில நீண்டநேர போதனைகளைவிட அதிக பலன்தரத்தக்கதாய் இருக்கும். இப்படிப்பட்ட குறைந்தநேர போதனைகளின் மதிப்பைக் குறைவாக மதிப்பிட்டு விடாதீர்கள். ஒன்றாக செலவழிக்கும் நேரம், பெற்றோருக்கும் பிள்ளைக்கும் இடையே ஒரு பிணைப்பை, வேதாகமத்தில் திரும்பத் திரும்ப உற்சாகப்படுத்தப்படுகிற ஒரு நெருங்கிய உறவை உருவாக்குவதற்கு இன்றியமையாதது.—உபாகமம் 6:6-9; 11:18-21; நீதிமொழிகள் 22:6.
12. சிறுபிள்ளைகளுடன் ஜெபிப்பதன் மதிப்பென்ன?
12 சிறுபிள்ளைகளுடன் நடத்தும் அத்தகைய போதனை நேரங்களில் ஒன்றை அந்த நாளின் கடைசியில் வைத்துக்கொள்ளலாம். இளைஞர் ஒருவர் நினைவுகூருகிறார்: “ஒவ்வொரு இராத்திரியும் என்னுடைய பெற்றோர் எங்களுடைய படுக்கையோரத்தில் உட்கார்ந்துகொண்டு, நாங்களே சொந்தமாக ஜெபம் செய்வதை செவிகொடுத்துக்கேட்பார்கள்.” இதுபோல் செய்வதன் மதிப்பைக் குறித்து மற்றொருவர் சொன்னார்: “படுக்கைக்கு செல்வதற்கு முன் ஒவ்வொரு நாள் இராத்திரியும் யெகோவாவிடம் ஜெபிக்கும் பழக்கத்தை அது எனக்குக் கொண்டுவந்தது.” தங்களுடைய பெற்றோர் யெகோவாவைப் பற்றி பேசுவதையும் அவரிடம் ஜெபிப்பதையும் பிள்ளைகள் தினமும் கேட்கையில், அவர்களுக்கு யெகோவா உண்மையான ஒரு நபராக ஆகிறார். ஓர் இளைஞன் கூறினான்: “யெகோவாவிடம் ஜெபம் செய்கையில் நான் கண்ணை மூடிக்கொண்டு உண்மையான தாத்தா மாதிரியான ஒருவரை நான் காண்கிறேன். நாங்கள் செய்கிற, பேசுகிற ஒவ்வொரு காரியத்திலும் யெகோவா ஒரு பாகம் வகிக்கிறார் என்பதைக் காண்பதற்கு என்னுடைய பெற்றோர் எனக்கு உதவிசெய்தார்கள்.”
13. ஒழுங்காக நடத்தப்படும் போதனை நேரங்களில் எதை உட்படுத்தலாம்?
13 பைபிள் சத்தியம் என்ற தண்ணீரை சிறுபிள்ளைகள் கிரகித்துக்கொள்ள உதவிசெய்வதற்கு, ஒழுங்காக நடத்தப்படும் போதனை நேரங்களில் அநேக நடைமுறையான காரியங்களைப் பெற்றோர் சேர்த்துக்கொள்ளலாம். பருவவயதுக்கும் குறைந்த வயதுடைய இரண்டு பிள்ளைகளைக் கொண்ட பெற்றோர் இவ்வாறு சொன்னார்கள்: “இரண்டு பிள்ளைகளும் அவர்களுடைய வாழ்க்கையின் முதல் சில வாரங்களிலிருந்தே ராஜ்ய மன்றத்தில் அமைதியாக இருப்பதற்கு பயிற்றுவிப்பைப் பெற ஆரம்பித்தார்கள்.” தன்னுடைய குடும்பம் என்ன செய்தது என்பதை ஒரு தகப்பனார் விவரித்தார்: “பைபிள் புத்தகங்கள் எல்லாவற்றையும் கார்டுகளில் எழுதிக்கொண்டு, நாங்கள் அனைவருமே மாறிமாறி அவற்றை வரிசையாக வைத்து பழகிப்பார்ப்போம். இந்தப் பொடிசுகள் எப்பொழுதுமே இதை எதிர்பார்த்துக்கொண்டிருப்பார்கள்.” பல குடும்பங்கள் சாப்பாட்டுக்கு முன்போ அல்லது பின்போ ஒரு சுருக்கமான போதனை நேரத்தை சேர்த்துக்கொள்கிறார்கள். ஒரு தகப்பனார் சொன்னார்: “தினவசனத்தைக் கலந்துபேசுவதற்கு சாயங்கால நேரம் எங்களுக்கு ஒரு நல்ல சமயமாக இருந்திருக்கிறது.”
14. (அ) சிறுபிள்ளைகளுடன் ஆவிக்குரிய விதமாக பலனளிக்கும் என்ன நடவடிக்கைகளைப் பகிர்ந்துகொள்ளலாம்? (ஆ) கற்றுக்கொள்வதற்கான என்ன ஆற்றல் பிள்ளைகளிடம் உண்டு?
14 என்னுடைய பைபிள் கதை புத்தகத்தில்a உள்ள தத்ரூபமான பைபிள் விவரப்பதிவுகளை செவிகொடுத்துக் கேட்பதையும்கூட சிறுபிள்ளைகள் அனுபவித்து மகிழுகிறார்கள். “பிள்ளைகள் சிறுவயதாக இருக்கும்போது, பைபிள் கதை புத்தகத்திலுள்ள ஒரு பாடத்தை படித்து முடிப்போம்; அதன் பிறகு பிள்ளைகள், நாடகபாணியில் உடை உடுத்துக்கொண்டு ஒரு சிறுநாடகம் போன்ற முறையில் அதிலுள்ள பாகங்களை நடித்துக்காட்டுவார்கள். இதை அவர்கள் ரொம்ப விரும்பினார்கள்; ஒவ்வொரு படிப்பிலும் ஒரு கதைக்கும் மேல் அவ்வாறு செய்யும்படி அடிக்கடி வற்புறுத்தினார்கள்.” உங்களுடைய பிள்ளையின் கற்கும் திறனை குறைவாக மதிப்பிட்டு விடாதீர்கள்! நான்கு வயதிலுள்ளவர்கள் பைபிள் கதை புத்தகத்திலுள்ள முழு அதிகாரங்களையும் மனப்பாடம் செய்திருக்கிறார்கள், பைபிளை வாசிப்பதற்கும்கூட கற்றிருக்கிறார்கள்! ஓர் இளம் பெண் தான் மூன்றரை வயதாக இருந்தபோது “judicial decisions” என்ற வார்த்தைகளை திரும்பத் திரும்ப தவறாக உச்சரித்ததையும், ஆனால் தொடர்ந்து பழகிப் பார்க்கும்படி அவளுடைய அப்பா உற்சாகப்படுத்தியதையும் நினைவுபடுத்திக் கூறுகிறாள்.
15. பிள்ளைகளுடன் நடத்தும் சம்பாஷணைகளில் என்ன விஷயங்களை உட்படுத்தலாம், இப்படிப்பட்ட சம்பாஷணைகள் மதிப்புடையவை என்பதற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது?
15 கூட்டங்களில் குறிப்பு சொல்லுதல் போன்றவற்றின் மூலம் மற்றவர்களுடன் சத்தியத்தின் தண்ணீரைப் பகிர்ந்துகொள்ளும்படி சிறுபிள்ளைகளைத் தயார்படுத்தவும் போதனை நேரங்களைப் பயன்படுத்தலாம். (எபிரெயர் 10:24, 25) “எங்கள் பழகிப்பார்க்கும் நேரங்களின்போது, நான் என்னுடைய சொந்த வார்த்தைகளில் குறிப்புசொல்ல வேண்டும். புரிந்துகொள்ளாமல் வெறுமனே வாசிப்பதற்கு அனுமதிக்கப்பட மாட்டேன்,” என்பதாக இளைஞர் ஒருவர் நினைவுகூருகிறார். அதோடுகூட, வெளி ஊழியத்தில் பிள்ளைகள் ஓர் அர்த்தமுள்ள பங்கை வகிக்கும்படி பயிற்றுவிக்கப்படலாம். கடவுள்-பயமுள்ள பெற்றோரால் வளர்க்கப்பட்ட ஒரு பெண் இவ்வாறு விளக்குகிறாள்: “எங்களுடைய பெற்றோர் ஊழியத்திற்குச் செல்கையில் அவர்களுடன் அடம்பிடித்துக்கொண்டு சும்மா போகிறவர்களாக ஒருபோதும் இருந்ததில்லை. அது வீட்டின் அழைப்பு மணியை அடித்து ஒரு துண்டுப்பிரதியை விட்டுவருவதாக மட்டும் இருந்தாலும்சரி, அதில் எங்களுக்கும் ஒரு பங்கு இருந்தது என்பதை நாங்கள் அறிந்திருந்தோம். முன்பாகவே ஒவ்வொரு வாரயிறுதி நடவடிக்கைகளுக்கும் கவனமாக தயார்செய்வதன் மூலம் நாங்கள் என்ன சொல்வோம் என்பதை அறிந்திருந்தோம். ஊழியத்துக்குப் போவோமா என்று கேட்டுக்கொண்டு ஒருபோதும் சனிக்கிழமை காலையில் எழுந்தது கிடையாது. நாங்கள் நிச்சயமாய் போவோம்.”
16. பிள்ளைகளுடன் குடும்ப படிப்பு நடத்துவதில் ஏன் ஒழுங்கானதன்மை முக்கியம்?
16 சிறுபிள்ளைகளுக்கு பைபிள் சத்தியத்தின் தண்ணீரை ஒழுங்காக கொடுப்பதன் அவசியத்தை வலியுறுத்திக்கூறாமல் இருக்கமுடியாது; ஒரு வாராந்தர குடும்ப பைபிள் படிப்பு இன்றியமையாதது என்பதை அது அர்த்தப்படுத்துகிறது. இரண்டு பிள்ளைகளுக்குத் தகப்பனாக இருக்கும் ஒருவர் அடித்துக் கூறுகிறார்: “பிள்ளைகளுக்கு எரிச்சலூட்டும் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒழுங்கில்லாமல் நடத்துவதாகும்.” (எபேசியர் 6:4) அவர் சொன்னார்: “என் மனைவியும் நானும் ஒரு நாளையும் நேரத்தையும் குறித்துக்கொண்டு, அந்த அட்டவணையின்படி உண்மையாக அந்தக் குடும்ப படிப்பை நடத்தினோம். அந்த நேரத்தில் நடத்துவதை பிள்ளைகள் எதிர்பார்ப்பதற்கு ரொம்ப நாள் எடுக்கவில்லை.” சிசுப் பருவம் முதற்கொண்டு கொடுக்கப்படும் இப்படிப்பட்ட பயிற்றுவிப்பு அனைத்தும் முக்கியம், உண்மை இதுவே, ‘ஐந்திலே வளையாதது ஐம்பதிலே வளையுமா.’
17. சிறுபிள்ளைகளுக்கு பைபிள் சத்தியங்களைக் கொடுப்பது போன்ற முக்கியத்துவம் உள்ளது எது?
17 சிறுபிள்ளைகளுக்கு பைபிள் சத்தியங்களை அளிப்பது முக்கியம், ஆனால் பெற்றோருடைய முன்மாதிரியும் அதே அளவுக்கு முக்கியம். நீங்கள் படிப்பதை, ஒழுங்காக கூட்டங்களுக்கு ஆஜராவதை, வெளி ஊழியத்தில் பங்குகொள்வதை, ஆம், யெகோவாவின் சித்தத்தைச் செய்வதில் மகிழ்ச்சி காண்பதை உங்களுடைய பிள்ளைகள் பார்க்கிறார்களா? (சங்கீதம் 40:8) அவர்கள் அதைச் செய்வது இன்றியமையாதது. குறிப்பிடத்தக்க விதமாக, தன்னுடைய கணவனின் எதிர்ப்பை சகித்திருந்து, ஆறு பிள்ளைகளை உண்மையுள்ள சாட்சிகளாய் ஆகும்படி வளர்த்திருந்த தன்னுடைய தாயைப் பற்றி ஒரு மகள் சொன்னாள்: “எங்களுடைய மனதில் மிகவும் பதியும்படி செய்தது என்னவென்றால், அம்மாவுடைய சொந்த முன்மாதிரிதான்—அது வார்த்தைகளைக் காட்டிலும் சப்தமாக பேசியது.”
சிறுபிள்ளைகளுக்கு பாதுகாப்பை அளித்தல்
18. (அ) பிள்ளைகளுக்குத் தேவையான பாதுகாப்பை பெற்றோர் எவ்வாறு கொடுக்க முடியும்? (ஆ) இனப்பெருக்க உடலுறுப்புகளைப் பற்றி என்ன விதமான போதனையை இஸ்ரவேலிலுள்ள சிறுபிள்ளைகள் பெற்றார்கள்?
18 ஆபத்தான புழு பூச்சிகளிடமிருந்து இளங்கன்றுகளுக்கு அடிக்கடி பாதுகாப்பு தேவைப்படுவதால், இந்தப் பொல்லாத காரிய ஒழுங்குமுறையில், ‘பொல்லாதவர்களிடமிருந்து’ சிறுபிள்ளைகளுக்குப் பாதுகாப்பு அவசியம். (2 தீமோத்தேயு 3:1-5, 13) இந்தப் பாதுகாப்பை பெற்றோர் எவ்வாறு கொடுக்க முடியும்? தெய்வீக ஞானத்தைப் பெறுவதற்கு உதவிசெய்வதன் மூலமே! (பிரசங்கி 7:12) நியாயப்பிரமாணம் வாசிக்கப்படுகையில் செவிகொடுத்துக் கேட்கும்படி இஸ்ரவேலருக்கு—அவர்களுடைய ‘சிறுபிள்ளைகள்’ உட்பட—யெகோவா கட்டளையிட்டார்; அந்த நியாயப்பிரமாணம் முறையான மற்றும் முறையற்ற பாலுறவு நடத்தையை அடையாளப்படுத்திக் காண்பிப்பதை உட்படுத்தியிருந்தது. (உபாகமம் 31:12; லேவியராகமம் 18:6-24) “விரைகள்” மற்றும் “இன உறுப்பு” உட்பட, உடலிலுள்ள இனப்பெருக்க உறுப்புக்கள் திரும்பத் திரும்ப குறிப்பிடப்பட்டுள்ளன. (லேவியராகமம் 15:1-3, 16; 21:20; 22:24; எண்ணாகமம் 25:8; உபாகமம் 23:10; NW) இன்றைய உலகின் மிதமிஞ்சிய ஒழுக்கச் சீர்குலைவின் காரணமாக, “மிகவும் நன்றாயிருந்தது” என்று கடவுள் அழைத்த சிருஷ்டிப்பின் காரியங்களில் உட்பட்டிருந்த இப்படிப்பட்ட உடலுறுப்புகளின் முறையான, முறையற்ற உபயோகத்தைக் குறித்து சிறுபிள்ளைகள் அறிந்திருப்பது அவசியம்.—ஆதியாகமம் 1:31; 1 கொரிந்தியர் 12:21-24.
19. சிறுபிள்ளைகளுடைய அந்தரங்க உடலுறுப்புகளின் சம்பந்தமாக அவர்களுக்கு அளிக்கவேண்டிய பொருத்தமான போதனை என்ன?
19 பெற்றோர் இருவரும் சேர்ந்து, அல்லது பிள்ளை வளர்க்கும் பொறுப்புள்ள ஒவ்வொரு நபரும், பிள்ளையிடம் அதன் அந்தரங்க உடலுறுப்புக்களை அடையாளம் காண்பிக்க வேண்டும். மற்றவர்கள் இந்தப் பாகங்களைத் தொட அனுமதிக்கக்கூடாது என்றும் அவர்களிடம் விளக்கிக்கூற வேண்டும். தந்திரமான பாலின முயற்சிகளுக்கு சிறுபிள்ளைகள் எவ்வாறு பிரதிபலிக்கிறார்கள் என்பதை அறிய குழந்தையை பாலின துர்ப்பிரயோகம் செய்பவர்கள் சோதிப்பதால், உறுதியாக எதிர்த்துநிற்கவும் “நான் உன்னைப் பற்றி சொல்லிக்கொடுத்துடுவேன்!” என்று சொல்லும்படியும் ஒரு பிள்ளை கற்பிக்கப்பட வேண்டும். எச்சரிக்கும் எந்தவொரு பயமுறுத்தல்களாக இருந்தாலும்சரி, அவர்கள் சங்கடமாக உணரும்படி செய்கிற ஒரு முறையில் அவர்களைத் தொட முயலுகிற எவரையும் பற்றி எப்பொழுதும் சொல்லும்படி உங்களுடைய சிறுபிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுங்கள்.
அன்பான சிட்சை கொடுத்தல்
20. (அ) எவ்வாறு சிட்சையானது தேவையில்லாதவற்றை களைந்தெறிவதைப் போல இருக்கிறது? (ஆ) சிட்சையின் ஆரம்ப விளைவு என்ன, ஆனால் அதன் பலன் என்ன?
20 தேவையில்லாதவற்றை களைந்தெறிகையில் ஒரு மரம் பயனடைவதுபோல, சிறுபிள்ளைகள் அன்பான சிட்சையிலிருந்து பயனடைகிறார்கள். (நீதிமொழிகள் 1:8, 9; 4:13; 13:1) வேண்டாத கிளைகளை வெட்டிவிடுகையில், மற்ற கிளைகளின் வளர்ச்சி ஊக்குவிக்கப்படுகிறது. ஆகையால் உங்களுடைய பிள்ளைகள் குறிப்பாக பொருள் சம்பந்தமான உடைமைகளின்மீது கவனத்தை ஒருமுகப்படுத்துகிறார்கள் என்றால், அல்லது கெட்ட கூட்டுறவினிடமாகவோ ஆரோக்கியமற்ற பொழுதுபோக்கினிடமாகவோ அவர்களுக்கு நாட்டமிருக்கிறதென்றால், இப்படிப்பட்ட தவறான மனச்சாய்வுகள் வெட்டப்பட வேண்டிய கிளைகளைப் போல் இருக்கின்றன. அவற்றை நீக்கிவிட்டால், உங்களுடைய பிள்ளைகள் ஆவிக்குரிய வழியில் வளருவதற்கு உதவப்படுவார்கள். தேவையில்லாதவற்றை களைந்துபோடுவது ஒரு மரத்திற்கு அதிர்வை உண்டாக்குவதுபோல, அப்படிப்பட்ட சிட்சை ஆரம்பத்தில் இன்பமாக தெரிவதில்லை. ஆனால், நீங்கள் உங்களுடைய பிள்ளை வளரவேண்டுமென்று விரும்புகிற ஒரு திசையில் மீண்டும் புதிதாக வளருகையில் சிட்சையினால் சிறந்த பலன் கிடைக்கிறது.—எபிரெயர் 12:5-11.
21, 22. (அ) சிட்சை கொடுப்பதோ அல்லது பெறுவதோ இன்பமாக இல்லை என்பதை எது சுட்டிக்காட்டுகிறது? (ஆ) சிட்சை கொடுப்பதில் பெற்றோர் ஏன் பின்வாங்கக் கூடாது?
21 சிட்சை கொடுப்பதோ அல்லது பெறுவதோ இன்பமாக இல்லை என்பது உடனடியாக ஒப்புக்கொள்ளப்படுகிறது. “நல்ல கூட்டுறவு இல்லையென்று மூப்பர்கள் எனக்கு எச்சரித்திருந்த ஒரு பையனுடன் என்னுடைய மகன் ஓரளவு நேரத்தை செலவழித்துக் கொண்டிருந்தான். நான் செயல்பட்டதைவிட இன்னும் விரைவாக செயல்பட்டிருக்க வேண்டும். அப்பட்டமாக இருக்கும் தவறான காரியங்களில் என்னுடைய மகன் ஈடுபடாதபோதிலும்கூட, அவனுடைய சிந்தனையை சரிப்படுத்துவதற்கு சிறிது காலம் எடுத்தது” என்பதாக ஒரு தகப்பனார் குறிப்பிட்டார். அந்த மகன் தெரிவித்தார்: “என்னுடைய மிகச் சிறந்த நண்பனிடமிருந்து நான் பிரிக்கப்பட்டபோது, அப்படியே நொந்துபோய்விட்டேன்.” ஆனால் அவர் மேலும் சொல்லுகிறார்: “இது ஒரு நல்ல முடிவாக இருந்தது, ஏனென்றால் அதற்குப் பிறகு சீக்கிரத்திலேயே என்னுடைய நண்பன் சபைநீக்கம் செய்யப்பட்டான்.”
22 “போதகசிட்சையே ஜீவ வழி” என்பதாக கடவுளுடைய வார்த்தை சொல்லுகிறது. ஆகையால் சிட்சை கொடுப்பது எவ்வளவு கடினமாக இருந்தாலும்சரி, அதை உங்களுடைய பிள்ளைகளுக்கு கொடுப்பதிலிருந்து பின்வாங்கிவிடாதீர்கள். (நீதிமொழிகள் 6:23; 23:13; 29:17) காலப்போக்கில், நீங்கள் அவர்களைத் திருத்தியதற்கு அவர்கள் நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள். “என்னுடைய பெற்றோர் எனக்கு சிட்சை கொடுத்தபோது நான் அவர்களிடம் ரொம்ப கோபமாக இருந்தது எனக்கு ஞாபகமிருக்கிறது. என்னுடைய பெற்றோர் எனக்கு அந்தச் சிட்சையைக் கொடுக்காமலிருந்திருந்தால் நான் இப்பொழுது இன்னும் அதிக கோபக்காரனாக இருப்பேன்,” என்பதாக ஒரு இளைஞர் நினைவுபடுத்திக் கூறுகிறார்.
கிடைக்கும் பலன் முயற்சிக்கு தகுதியானது
23. இளம் பிள்ளைகளில் முதலீடு செய்யப்படும் எல்லா அன்பான கவனிப்பும் எடுக்கப்படும் முயற்சிக்கு ஏன் தகுதியானது?
23 பெற்றோர்களும் மற்றவர்களும் இன்பம் காண்கிற அப்படிப்பட்ட பிள்ளைகள், தினமும் காட்டிய அத்தனை அன்பான கவனிப்பினால் வந்த பலன்களாக இருக்கிறார்கள் என்பதைக் குறித்ததில் எந்தச் சந்தேகமும் இருக்கமுடியாது. என்றபோதிலும், அவர்கள் பேரில் முதலீடு செய்யும் அனைத்து முயற்சிகளும்—அவர்கள் மாம்சப் பிரகாரமான பிள்ளைகளாக இருந்தாலும்சரி ஆவிக்குரிய பிள்ளைகளாக இருந்தாலும்சரி—அனுபவித்து மகிழக்கூடிய பலனுக்கு மிகவும் தகுதியானதே. வயதுசென்ற அப்போஸ்தலன் யோவான் இவ்வாறு எழுதியபோது இதைக் காண்பித்தார்: “என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று நான் கேள்விப்படுகிற சந்தோஷத்திலும் அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை.”—3 யோவான் 4.
[அடிக்குறிப்பு]
a உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்டது.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ போற்றத்தக்கதாக ஆவதற்கு இளங்கன்றுகள், பிள்ளைகள் ஆகிய இரண்டுக்கும் என்ன தேவை?
◻ பெற்றோர் எவ்வாறு பலன்தரத்தக்க சீர்படுத்தும் ஆதாரக் கம்புகளாக சேவிக்கலாம்?
◻ சிறுபிள்ளைகளுடன் நடத்தப்படும் போதனை நேரங்களில் எதை உட்படுத்திக்கொள்ளலாம், எதிர்த்துநிற்பதற்கு அவர்களுக்கு என்ன கற்பிக்கப்பட வேண்டும்?
◻ ஒரு மரத்திற்கு தேவையில்லாதவற்றை களைந்தெறிவதைப் போல, சிட்சை கொடுப்பது ஒரு பிள்ளைக்கு எவ்வாறு பயனுள்ளது?
[பக்கம் 10-ன் படத்திற்கான நன்றி]
Courtesy of Green Chimney’s Farm