ராஜ்ய அறிவிப்பாளர் அறிக்கை
பள்ளியில் உறுதியான நிலைநிற்கை எடுப்பது பலனளிக்கிறது
பைபிள் முன்னறிவிக்கிறது: “உன் பிள்ளைகளெல்லாரும் யெகோவாவால் போதிக்கப்படுவார்கள்; உன் பிள்ளைகளுக்குப் பெரிய சமாதானமிருக்கும்.” (ஏசாயா 54:13, திருத்திய மொழிபெயர்ப்பு) “உன் பிள்ளைகளெல்லாரும்” என்பது விரிவான விதத்தில், சின்னஞ்சிறியவர்கள் உட்பட, பூமியிலுள்ள கடவுளுடைய ஊழியர்களடங்கிய முழு தொகுதிக்கும் பொருத்தப்படலாம். இன்று, கிறிஸ்தவ பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் வீட்டிலும், கிறிஸ்தவ கூட்டங்களிலும் ‘யெகோவாவால் போதிக்கப்படுவதை’ உறுதிசெய்துகொள்கிறார்கள்.
இருப்பினும், இளம் கிறிஸ்தவர்கள் பள்ளிக்குச் செல்கையில் கடினமான சவால்களை எதிர்ப்படுகிறார்கள். பைபிளில் தாங்கள் கற்றவற்றின் அடிப்படையில் உறுதியான நிலைநிற்கை எடுக்கவேண்டியதன் அவசியத்தை அவர்கள் அடிக்கடி காண்கிறார்கள். அவர்கள் அவ்வாறு செய்கையில் அதன் விளைவுகள் மாணவர்களுக்கும் அதே சமயம் ஆசிரியர்களுக்கும் நன்மையாக முடியலாம். இதை மைக்ரோனிஷியாவிலிருந்து வந்த பின்வரும் அனுபவம் காட்டுகிறது.
சுக் தீவுகளில், ஒரு சிறிய மேற்கு பசிபிக் தீவாகிய டொலில், புனிதர்களின் நினைவு நாள் கொண்டாட்டத்திற்காகத் தயாரிக்கவும், பங்கேற்கவும் உள்ளூர் பள்ளிக்கூட ஆசிரியர்கள் பிள்ளைகள் அனைவரிடத்திலும் கூறினார்கள். பேய்கள், குறும்புக்கார துஷ்ட ஆவிகள், சூனியக்காரிகள் ஆகியவர்களை வர்ணிக்கும் அலங்காரங்களையும் உடைகளையும் இந்தக் கொண்டாட்டம் உட்படுத்தும் என்றும் அவை அனைத்தும் ஆவியுலக பாரம்பரியங்களோடு தொடர்புடையன என்றும் மாணவ மாணவியர்களாக இருக்கும் சாட்சி பிள்ளைகள் அறிந்திருந்தனர். மனச்சாட்சிக்கு விரோதமாக இந்தப் பிள்ளைகளால் பங்கேற்க முடியவில்லை.a
அவர்கள் வீட்டிலும் கிறிஸ்தவ சபையிலும் அளிக்கப்பட்ட அவர்களது பைபிள் அடிப்படையிலான பயிற்றுவிப்பிலிருந்து, அத்தகைய பழக்கங்கள் வெறுமனே பொழுதுபோக்கிற்காக செய்யப்பட்டாலும்கூட கடவுள் விரும்பாதவை என்று அறிந்திருந்தனர். தங்களுடைய நிலைநிற்கையை தங்கள் ஆசிரியர்களிடத்தில் இன்னும் தெளிவாக விளக்குவதற்காக அந்தத் தீவிலிருந்த சாட்சி மிஷனரிகளில் ஒருவரான பாரக் என்பவரை பிள்ளைகள் அழைத்தார்கள்.
விளக்கத்தைக் கேட்டப்பிறகு, அந்த ஆசிரியர்கள் இரண்டாம் முறை கூடிபேசுவதற்கான ஏற்பாட்டை செய்தார்கள், இம்முறை பள்ளி ஊழியர் அனைவருடனும் பாரக் என்பவரால் பேச முடிந்தது. இந்தக் கூட்டத்தில், புனிதர்களின் நினைவு நாளினுடைய உண்மையான இயல்பை காட்டுவதற்காக பாரக் ஆதாரங்களையெல்லாம் அளித்தார். அவர் உவாட்ச் டவர் பிரசுரங்கள் பலவற்றிலிருந்தும், அதே சமயம் மற்ற மூலங்களிலிருந்தும் தனது தகவலைச் சேகரித்தார். அந்தக் கொண்டாட்டத்தின் மூலத்தையும், வரலாற்றையும், மதம்சார்ந்த இயல்பையும் பற்றி என்ன கற்றுக்கொண்டனரோ அதைப்பற்றி ஆசிரியர்களும், நிர்வாகத்தினரும் ஆச்சரியம் அடைந்தார்கள். இந்த நிலைமையை எவ்வாறு தீர்ப்பதென்று தீர்மானிக்க ஊழியர்களின் கூட்டம் ஒன்றை நடத்த அவர்கள் தெரிவுசெய்தார்கள்.
சில நாட்களுக்குப் பிறகு, எதிர்பாராத தீர்மானம் ஒன்று அறிவிக்கப்பட்டது. புனிதர்களின் நினைவு நாளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் ரத்துசெய்யப்பட்டன. அந்த வருடம் புனிதர்களின் நினைவு நாள் கொண்டாட்டத்தைப் பள்ளிக்கூடம் நிச்சயம் கொண்டாடாது. பள்ளிக்கூடத்தில், எது சரியோ அதையே செய்வதற்கான இந்த இளம் சாட்சிகளுடைய திடதீர்மானம் எத்தகைய ஒரு சாதகமான முடிவை விளைவித்தது! பைபிள் சத்தியத்திற்கு உறுதியான நிலைநிற்கையை எடுக்க ஒருபோதும் சிறுபிள்ளைகள் பயப்படவோ வெட்கப்படவோ தேவையில்லை.
பள்ளிக்கூடத்தில் ஊக்கமாக படிக்கும்படி உலகெங்கிலும், யெகோவாவின் சாட்சிகள் தங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுத்தருகிறார்கள். பைபிள் நியமங்களின்படி வாழ்வதற்கும், அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அவர்களுடைய நம்பிக்கையையும் விசுவாசத்தையும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதற்கும்கூட சாட்சிகளுடைய இளம் பிள்ளைகள் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வழக்கில் கிடைத்ததைப்போன்று சாதகமான அல்லது உடனடியான பலன்கள் கிடைக்காவிட்டாலும்கூட சரியானதைச் செய்வதிலிருந்து வரக்கூடிய நம்பிக்கையையும் திருப்தியையும் இளைஞர்கள் கொண்டிருக்க முடியும். அதிமுக்கியமாக, தங்களுடைய பரலோக தந்தை மகிழ்கிறார் என்றும், அவர்களுடைய உண்மையுள்ள கீழ்ப்படிதலுக்காக அவர்களை ஆசீர்வதிப்பார் என்றும் அவர்கள் நிச்சயமாய் இருக்கலாம்.
[அடிக்குறிப்பு]
a புனிதர்களின் நினைவு நாளையும் அதன் ஆவியுலக மூலங்களையும் பற்றிய அதிகமான விவரத்திற்கு, உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி பிரசுரித்திருக்கும் நவம்பர் 22, 1993, விழித்தெழு! ஆங்கில இதழைக் காண்க.