தங்களுடைய சிருஷ்டிகரை நினைக்கும் இளைஞர்
“நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை.”—பிரசங்கி 12:1.
1. 11 வயது சிறுவனுடைய எந்த வார்த்தைகள் நம்முடைய சிருஷ்டிகர் அவனுக்கு உண்மையானவராக இருக்கிறார் என்பதை வெளிப்படுத்துகின்றன?
யெகோவா தேவனை உயர்வாக மதித்து அவரை பிரியப்படுத்த விரும்பி, உண்மையான ஒரு நபராக கருதுவதைக் காண்பிக்கும் ஒரு முறையில் பிள்ளைகள் பேசும்போதும் செயல்படும்போதும் என்னே அருமை! 11 வயது சிறுவன் ஒருவன் சொன்னான்: “நான் தனியாக இருந்துகொண்டு ஜன்னலுக்கு வெளியே பார்க்கும்போது, யெகோவாவின் சிருஷ்டிப்புகள் எவ்வளவு அதிசயமானவையாய் இருக்கின்றன என்பதை அறிந்துகொள்கிறேன். பின்பு, எதிர்காலத்தில் பரதீஸ் எவ்வளவு அழகாக இருக்கும் என்பதைப் பற்றியும் அந்தச் சமயத்தில் நான் எவ்வாறு விலங்குகளைத் தொட்டுப்பார்க்க முடியும் என்பதைப் பற்றியும் கற்பனைசெய்து பார்க்கிறேன்.” (ஏசாயா 11:6-9) அவன் மேலுமாக கூறினான்: “நான் தனியாக இருக்கும்போது, யெகோவாவிடம் ஜெபம் செய்கிறேன். எப்பொழுது பார்த்தாலும் அவரிடம் பேசிக்கொண்டிருப்பதற்காக அவர் என்மீது எரிச்சலடைய மாட்டார் என்பதை நான் அறிந்திருக்கிறேன். அவர் எப்பொழுதும் என்னைப் பார்த்துக்கொண்டு அங்கே இருக்கிறார் என்பதை நான் அறிந்திருக்கிறேன்.” இந்தச் சிறுவனுக்கு நம்முடைய சிருஷ்டிகர் உண்மையானவராக இருப்பதுபோல் உங்களுக்கும் அவர் உண்மையானவராக இருக்கிறாரா?
கடவுள் உங்களுக்கு எந்தளவுக்கு உண்மையானவராக இருக்கிறார்?
2. (அ) உங்களுடைய சிருஷ்டிகர் எவ்வாறு உங்களுக்கு உண்மையானவராக ஆகமுடியும்? (ஆ) கடவுள் உண்மையான ஒரு நபர் என்பதை பிள்ளைகள் மதித்துணருவதற்கு உதவிசெய்வதில் பெற்றோருக்கு இருக்கும் பாகம் என்ன?
2 யெகோவாவும் அவருடைய வாக்குறுதிகளும் உங்களுக்கு உண்மையாய் இருப்பதற்கு, நீங்கள் முதலாவதாக அவரைப் பற்றியும் பைபிள் விவரிக்கிற நீதியுள்ள புதிய உலகில் அவர் உங்களுக்கு கொடுக்கும் மகத்தான எதிர்காலத்தைப் பற்றியும் கற்றுக்கொள்ள வேண்டும். (வெளிப்படுத்துதல் 21:3, 4) உங்களுடைய பெற்றோர் இந்தக் காரியங்களைப் பற்றி உங்களிடம் பேசியிருந்தால், நீங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்பதற்கு காரணம் இருக்கிறது; ஏனென்றால், ‘உன் சிருஷ்டிகரை நினை’ என்ற ஏவப்பட்டெழுதப்பட்ட இந்தக் கட்டளைக்கு செவிசாய்க்க உங்களுக்கு இது உதவிசெய்கிறது. (பிரசங்கி 12:1) ஓர் இளம் பெண் தன்னுடைய பெற்றோர் கொடுத்த ஆரம்பகால பயிற்றுவிப்பைக் குறித்து இவ்வாறு சொன்னாள்: “யெகோவா எங்கள் வாழ்க்கையில் எப்படி எல்லா காரியங்களிலும் எப்பொழுதும் உட்பட்டிருக்கிறார் என்பதை என்னுடைய பெற்றோர் அழுத்திக்காண்பித்தார்கள். என்னுடைய சிருஷ்டிகரை நான் நினைப்பதற்கு இதுவே முக்கிய காரணமாய் இருந்தது.” மற்றொரு இளம் பெண் தெரிவித்தாள்: “யெகோவா உண்மையான ஒரு நபராக இருக்கிறார் என்பதை என்னுடைய பெற்றோர் எனக்கு போதித்ததற்காக நான் என்றைக்குமே நன்றியுள்ளவளாக இருப்பேன். அவரை எவ்வாறு நேசிப்பது என்பதைக் காண்பித்து, அவரை முழுநேரமாக சேவிப்பதனால் வரும் சந்தோஷத்தைப் பற்றி எனக்கு சொன்னார்கள்.”
3, 4. யெகோவா உண்மையான ஒரு நபர் என்பதை நினைப்பதற்கு உங்களுக்கு எது உதவிசெய்யக்கூடும்?
3 இருந்தபோதிலும், தங்கள்மீது அக்கறை காண்பிக்கும் உண்மையான ஒரு நபராக கடவுளை மனதில் எண்ணுவதை அநேகர் கடினமாக காண்கிறார்கள். நீங்கள் கடினமாக காண்கிறீர்களா? தனிப்பட்ட முறையில் கடவுளைப் பற்றி சிந்திப்பதற்கு காவற்கோபுரத்திலுள்ள இந்தக் கூற்றின்மூலம் இளைஞர் ஒருவர் உதவிசெய்யப்பட்டார்: “யெகோவா தேவன் தோற்றத்தில் எவ்வளவு பெரியவர் என்பது நமக்குத் தெரியாது.” நிச்சயமாகவே, கடவுளுடைய உயர்வான நிலை அவருடைய அளவு அல்லது வடிவத்தைச் சார்ந்தில்லை; அந்தக் காவற்கோபுரத்திலுள்ள அடுத்த வாக்கியம் இவ்வாறு கூறியது: “அவருடைய உண்மையான மகத்துவம் அவர் எப்படிப்பட்ட கடவுள் என்பதன் பேரில் சார்ந்திருக்கிறது.” உண்மையிலேயே, அவர் சத்தியமும், இரக்கமும், அன்பும் உள்ள மன்னிக்கும் கடவுள்.a (யாத்திராகமம் 34:6; உபாகமம் 32:4; சங்கீதம் 86:5; யாக்கோபு 5:11) யெகோவாவை அப்படிப்பட்ட ஒரு நபராக, அருமையான ஓர் உறவை வைத்துக்கொள்ளுவதற்கு நம்பத்தக்க ஒரு நண்பராக நீங்கள் கருதுகிறீர்களா?—ஏசாயா 41:8; யாக்கோபு 2:23.
4 கடவுளுடன் ஒரு தனிப்பட்ட உறவை அனுபவித்து மகிழ இயேசு தம்மை ஆரம்பகாலத்தில் பின்பற்றியவர்களுக்கு உதவிசெய்தார். இவ்வாறு, பரலோக வாழ்க்கைக்கு உயிர்த்தெழுப்பப்படுவதற்கு தான் எதிர்பார்த்துக்கொண்டிருந்ததைப் பற்றி அப்போஸ்தலன் யோவான் எழுதியபோது, அவர் தெரிவித்ததாவது: “[தேவன்] இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்.” (1 யோவான் 3:2; 1 கொரிந்தியர் 15:44) கடவுளை உண்மையான ஒரு நபராக, தனிப்பட்ட விதமாக அவரை பார்க்க முடியாதபோதிலும், நன்கு அறிந்துகொள்ளத்தக்க ஒரு நபராக கருதுவதற்கு இன்று இளைஞர்களுக்கும் உதவிசெய்யலாம். ஓர் இளைஞன் இவ்வாறு குறிப்பிட்டான்: “‘யெகோவா என்ன சொல்லுவார்? அதை எவ்வாறு நீ உன்னுடைய சொந்த வார்த்தைகளில் விளக்குவாய்? அது எதை அர்த்தப்படுத்துகிறது?’ போன்ற அநேக கேள்விகளைக் கேட்பதன் மூலம் யெகோவாவை நினைத்துப்பார்ப்பதற்கு என்னுடைய பெற்றோர் எனக்கு உதவிசெய்தார்கள்.” இப்படிப்பட்ட கேள்விகள் கடவுளுடன் நம்முடைய தனிப்பட்ட உறவைப் பற்றி சிந்திக்கும்படி செய்கிறதல்லவா?
நினைப்பது என்பது எதை அர்த்தப்படுத்துகிறது
5. ஒருவரை நினைப்பது என்பது அவருடைய பெயரை நினைவுபடுத்திப் பார்ப்பதைக் காட்டிலும் அதிகத்தை உட்படுத்துகிறது என்பதை என்ன பைபிள் உதாரணங்கள் காண்பிக்கின்றன?
5 ‘உன் சிருஷ்டிகரை நினை,’ என்ற கட்டளைக்கு செவிசாய்ப்பது என்பது வெறுமனே யெகோவாவைப் பற்றி நினைவுபடுத்திப் பார்ப்பதைக் காட்டிலும் அதிகத்தைக் குறிக்கிறது. அது செயலை, அவரைப் பிரியப்படுத்தும் காரியங்களைச் செய்வதை உட்படுத்துகிறது. ‘நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்’ என்று இயேசுவிடம் அந்தக் குற்றவாளி வேண்டிக்கொள்ளுகையில், அவனுடைய பெயரை நினைவுபடுத்திப் பார்ப்பதைவிட அதிகத்தை செய்யும்படி அவன் விரும்பினான். இயேசு செயல்படும்படி, அவனை உயிர்த்தெழுப்பும்படி அவன் விரும்பினான். (லூக்கா 23:42) அதைப்போலவே, பார்வோனை சந்திக்கையில் தன்னை நினைக்கும்படி சிறையிலடைக்கப்பட்டிருந்த யோசேப்பு பார்வோனுடைய பானபாத்திரக்காரனிடம் கேட்டுக்கொண்டபோது, தன்னுடைய சார்பாக ஏதாவதொரு செயலை அவன் எதிர்பார்த்தான். கடவுளிடம் யோபு ‘தன்னை நினைக்கும்படி’ விண்ணப்பம் செய்தபோது, எதிர்காலத்தில் எப்பொழுதாவது தன்னை உயிர்த்தெழுப்புவதற்கு கடவுள் செயல்படும்படி யோபு வேண்டிக்கொண்டிருந்தார்.—யோபு 14:13; ஆதியாகமம் 40:14, 23.
6. “நினை” என்பதற்கான எபிரெய வார்த்தை, நினைக்கப்படுகிற ஒரு பொருள் அல்லது நபரின் பேரில் பாசத்தை எவ்வாறு மறைமுகமாக குறிப்பிடுகிறது?
6 “நினை” என்று மொழிபெயர்க்கப்பட்ட எபிரெய வார்த்தை, பெரும்பாலும் ‘மனதினுடைய பாசத்தை(விருப்பத்தை)யும் (affection) அந்த நினைவுபடுத்துதலோடு சேர்ந்துவருகிற செயலையும்’ பெரும்பாலும் மறைமுகமாக அர்த்தப்படுத்துகிறது என்பதாக ஒரு ஆதாரம் தெரிவிக்கிறது. “நினை” என்ற வார்த்தையிலுள்ள ‘விருப்பம்’ என்ற மறைமுகமான கருத்தை, வனாந்தரத்திலுள்ள ‘பல ஜாதியான மக்கள்’ வெளிப்படுத்தின ஆச்சரியத்தில் காணமுடியும்: ‘நாம் எகிப்திலே வழக்கமாய் சாப்பிட்டு வந்த மீன்களை எவ்வளவாய் நினைத்துப்பார்க்கிறோம்!’ அன்புடன் தன்னை நினைவுகூரும்படி கடவுளிடம் யோபு விண்ணப்பம் செய்ததுபோலவே, எசேக்கியா, நெகேமியா, தாவீது, பெயர் கூறப்படாத ஒரு சங்கீதக்காரன் ஆகியோரும்கூட தங்களுடைய உண்மைத்தன்மையை அங்கீகரிக்கும் வண்ணமாக யெகோவா பாசத்துடன் நினைவுகூரும்படி மன்றாடினார்கள்.—எண்ணாகமம் 11:4, 5, NW; 2 இராஜாக்கள் 20:3; நெகேமியா 5:19; 13:31; சங்கீதம் 25:7; 106:4.
7. நாம் கடவுளை பாசத்துடன் நினைவுகூருவோமானால், இது நம்முடைய நடத்தையை எவ்வாறு பாதிக்கும்?
7 இவ்வாறு நாம் கேட்டுக்கொள்ளலாம், ‘நம்முடைய சிருஷ்டிகரை நாம் பாசத்துடன் நினைவுகூர்ந்து, அவரைப் புண்படுத்த அல்லது வேதனைப்படச் செய்யும் எதையும் செய்வதை தவிர்க்கிறோமா?’ இளைஞர் ஒருவர் தெரிவித்தார்: “யெகோவாவுக்கு உணர்ச்சிகள் இருக்கிறதென்பதை அறிந்துகொள்ள என்னுடைய அம்மா எனக்கு உதவிசெய்தார்கள்; என்னுடைய செயல்கள் அவரை பாதிக்கின்றன என்பதை நான் சிறுவயதிலேயே உணர்ந்துகொண்டேன்.” (சங்கீதம் 78:40-42) மற்றொருவர் இவ்வாறு விளக்கினார்: “யெகோவாவிடம் சாத்தான் விட்ட சவாலுக்கு பதிலளிப்பதில் என்னுடைய செயல்கள் உதவியாக அல்லது தடையாக இருக்கும் என்பதை நான் அறிந்திருந்தேன். நான் யெகோவாவின் இருதயத்தை சந்தோஷப்படுத்த விரும்பினேன்; எனவே அது எனக்கு உதவிசெய்தது, இன்று தொடர்ந்து உதவி செய்தும் வருகிறது.”—நீதிமொழிகள் 27:11.
8. (அ) நாம் யெகோவாவை பாசத்துடன் நினைக்கிறோம் என்பதை எதில் ஈடுபடுவது சுட்டிக்காண்பிக்கும்? (ஆ) என்ன கேள்விகளை இளைஞர்கள் ஞானமாய் சிந்தித்துப்பார்ப்பார்கள்?
8 இந்தப் பொல்லாத உலகில், யெகோவாவை பிரியப்படுத்துகிற செயல்களைச் செய்வதில் முழுமையாக பங்குகொள்வதன் மூலம் அவரை நினைவுகூருவது எப்பொழுதும் எளிதானதல்ல என்பது ஒப்புக்கொள்ளத்தக்கதே. என்றபோதிலும், ஒரு பயனியர் ஊழியராக கிறிஸ்தவ சேவையை முழுநேரமாக தொடருவதன்மூலம், முதல் நூற்றாண்டிலிருந்த இளம் தீமோத்தேயுவை—அவர் மட்டுமல்லாமல் இன்று கடவுள் பக்தியுள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்களை—நீங்கள் பின்பற்றக் கூடுமானால் அது எவ்வளவு அருமையாக இருக்கும்! (அப்போஸ்தலர் 16:1-3; 1 தெசலோனிக்கேயர் 3:2) இருப்பினும், பின்வருமாறு கேட்கப்படலாம்: பயனியர் ஊழியத்தில் நீங்கள் உங்களையே ஆதரித்துக்கொள்ள முடியுமா? உங்களுக்கு திருமணமாகி இருந்தால், உங்கள் குடும்பத்திலுள்ளவர்களுக்கு தேவையானவற்றை அளிப்பதற்கான திறமைகள் உங்களிடம் இருக்கின்றனவா? (1 தீமோத்தேயு 5:8) இவை முக்கியமான கேள்விகள், அவற்றிற்கு பொறுப்புணர்ச்சியுடன் சிந்தனை செலுத்துமளவுக்கு அது இன்றியமையாததாய் இருக்கிறது.
நோக்கமுள்ள கல்வி
9. உலகப்பிரகாரமான கல்வி சம்பந்தமாக இளைஞர்கள் எதிர்ப்பட வேண்டிய தீர்மானம் என்ன?
9 மனித சமுதாயம் அதிக சிக்கலாகையில், பயனியர் வேலையில் உங்களை ஆதரித்துக்கொள்வதற்கு தகுந்த வேலைவாய்ப்பைப் பெற அதிகளவான பள்ளிப்படிப்பு தேவைப்படலாம். இன்று முதலாளிகளால் மதிப்பாக கருதப்படுகிற புதிய திறமைகளைப் பெறுவதற்கு பல்கலை கல்வி பயின்ற சிலரும்கூட இன்னும் கூடுதல் கல்விபயில வேண்டியதாய் இருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். எனவே, கடவுளைப் பிரியப்படுத்த விரும்புகிற இளைஞர்களாகிய நீங்கள் எந்தளவு பள்ளிப்படிப்பை தொடருவீர்கள்? ஏவப்பட்டெழுதப்பட்ட பின்வரும் கட்டளையை மனதில்கொண்டு சரியான விதத்தில் தீர்மானம் எடுக்க வேண்டும்: ‘உன் சிருஷ்டிகரை நினை.’
10. நாம் பெற்றுக்கொள்ளக்கூடிய மிகச் சிறந்த கல்வி எது?
10 நிச்சயமாகவே, மிகச் சிறந்த கல்வி என்று உலகப்பிரகாரமான அதிகாரிகள் கருதுகிற, கடவுளுடைய வார்த்தையை கவனமாக படிப்பதைத் தொடர நீங்கள் விரும்புவீர்கள். ஜெர்மானிய எழுத்தாளர் யோஹான் வால்ஃப்காங் வான் கோத்தே இவ்வாறு குறிப்பிட்டார்: “[மக்களுடைய] அறிவு வளர்ச்சி எந்தளவுக்கு இருக்கிறதோ அந்தளவுக்கு பைபிளை அதன் ஆதாரமாயும் கல்விக்கான கருவியாயும் முழுமையாய் பயன்படுத்துவதற்கான சாத்தியம் இருக்கிறது.” ஆம், பைபிளைப் படிப்பது வேறெந்த கல்வியையும்விட வாழ்க்கைக்காக உங்களைத் தகுதியுள்ளவர்களாக்கும்!—நீதிமொழிகள் 2:6-17; 2 தீமோத்தேயு 3:14-17.
11. (அ) நாம் செய்யக்கூடிய மிக முக்கியமான வேலை எது? (ஆ) இளைஞர் ஒருவர் ஓரளவு கல்வியைப் பெற்றுக்கொள்வதற்கு ஏன் தெரிந்தெடுத்தார்?
11 கடவுளுடைய அறிவு ஜீவனளிப்பதாய் இருப்பதால், அந்த அறிவை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதே நீங்கள் இன்று செய்யத்தக்க மிக முக்கியமான வேலை. (நீதிமொழிகள் 3:13-18; யோவான் 4:34; 17:3) என்றபோதிலும், இதைத் திறம்பட்ட முறையில் செய்வதற்கு நீங்கள் அடிப்படையான வழிகளில் அறிவூட்டப்படுவது அவசியம். நீங்கள் தெளிவாக சிந்திக்க முடிகிறவர்களாய், தர்க்கரீதியில் பேசமுடிகிறவர்களாய், நன்கு வாசிக்கவும் எழுதவும் முடிகிறவர்களாய் இருக்க வேண்டும்—இவையெல்லாம் பள்ளியில் கற்பிக்கப்படுகிற திறமைகள். எனவே, மேல்நிலைப் பள்ளியில் தனிச்சிறப்புத் தகுதிபெற்று தேர்ச்சிபெற்ற அ.ஐ.மா., ஃப்ளாரிடாவிலுள்ள ட்ரேஸி என்ற இளம் பெண்ணைப் போல, உங்களுடைய பள்ளி படிப்புகளை அசட்டை செய்யாமல் அவற்றில் அக்கறை எடுத்துக்கொள்ளுங்கள். அவள் தன்னுடைய நம்பிக்கையை இவ்வாறு தெரிவித்தாள்: “என்னுடைய கடவுளாகிய யெகோவாவை முழுநேரமாக சேவிக்கும் ஊழியக்காரியாக ஆவதற்கான இலக்கையே நான் எப்பொழுதும் வைத்திருந்திருக்கிறேன்; இந்த இலக்கை அடைவதற்கு என்னுடைய கல்வி எனக்கு உதவிசெய்யும் என்று நான் நம்புகிறேன்.”
12. கூடுதல் கல்விபயில தெரிவுசெய்தால், என்ன நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு அது உதவலாம்?
12 நீங்கள் ஏன் பள்ளிக்குச் செல்கிறீர்கள் என்பதைக் குறித்து சிந்தித்திருக்கிறீர்களா? முக்கியமாக யெகோவாவின் திறம்பட்ட ஊழியராவதற்கு உங்களைத் தகுதியுள்ளவர்களாய் ஆக்குவதற்காகவா? அப்படியானால், உங்களுடைய கல்வி எந்தளவுக்கு இந்த நோக்கத்தை நிறைவேற்றுகிறது என்பதற்கு கருத்தார்ந்த சிந்தனை செலுத்த நீங்கள் விரும்புவீர்கள். உங்களுடைய பெற்றோருடன் கலந்தாலோசித்த பிறகு, சட்டம் தேவைப்படுத்துகிற குறைந்தளவு கல்விக்கு மேலாக பள்ளிப்படிப்பை தொடரவேண்டுமா என்பதை தீர்மானிக்கலாம். இப்படிப்பட்ட கூடுதல் கல்வி உங்களை ஆதரித்துக்கொள்வதற்கான வேலைவாய்ப்பைப் பெற உதவிசெய்யக்கூடும்; அதோடு ராஜ்ய வேலையில் முழுமையாக பங்குகொள்வதற்கு உங்களுக்கு நேரத்தையும் சக்தியையும் அளிக்கக்கூடும்.—மத்தேயு 6:33.
13. துணைக் கல்வியைத் தொடர்ந்த இரண்டு ரஷ்ய கிறிஸ்தவர்கள் தங்களுடைய வாழ்க்கையின் நோக்கத்தை எவ்வாறு வெளிப்படுத்திக் காண்பித்தார்கள்?
13 துணைக் கல்வியை தொடருகிற சிலர், கூடுதலான பள்ளிப்படிப்பை பெற்றுக்கொள்கையிலேயே முழுநேர ஊழியத்தைச் செய்கிறார்கள். ரஷ்யாவிலுள்ள மாஸ்கோவில் இருக்கும் இரண்டு பருவவயதுப் பெண்களாகிய நதியாவையும் மெரீனாவையும் சிந்தித்துப்பாருங்கள். அவர்கள் இருவரும் 1994 ஏப்ரலில் முழுக்காட்டுதல் பெற்று, அதன் பின்பு துணைப் பயனியர்களாக சேவைசெய்ய ஆரம்பித்தார்கள். அதற்குச் சிறிதுகாலத்திற்குப் பிறகு மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, இரண்டு வருட கணக்கியல் பாடத்திட்டத்தில் சேர்ந்துகொண்டார்கள். மே 1995-ல் ஒழுங்கான பயனியராக சேவைசெய்ய ஆரம்பித்தார்கள்; இருந்தபோதிலும் அவர்கள் தங்களுடைய கணித வகுப்புகளில் “A” கிரேடை தக்கவைத்துக்கொண்டார்கள். மேலும், இதற்கிடையே, அவர்கள் பள்ளிக்கு போய்க்கொண்டிருக்கும்போதே இருவரும் சேர்ந்து ஒவ்வொரு வாரமும் சராசரியாக 14 பைபிள் படிப்புகளை நடத்தமுடிந்தது. முழுநேர ஊழியத்தில் அவர்கள் தங்களை ஆதரித்துக்கொள்ளும்படிக்கு, தகுந்த வேலைவாய்ப்பைக் கண்டுபிடிக்க அவர்கள் படித்த கணக்கியல் உதவிசெய்யும் என்று அந்தப் பெண்கள் நம்புகிறார்கள்.
14. எந்தளவு உலகப்பிரகாரமான கல்வியை நாம் தெரிவுசெய்தாலும்சரி, எது நம்முடைய வாழ்க்கையில் மிக முக்கியமான காரியமாய் இருக்கவேண்டும்?
14 சட்டம் தேவைப்படுத்துகிறதற்கும் மேலாக உலகப்பிரகாரமான கல்வியை நீங்கள் தொடருவீர்களானால், அதற்கான காரணத்தை ஞானமாய் ஆராய்ந்துபாருங்கள். உங்களுக்கு பேரும்புகழும் கிடைப்பதற்கும் பொருள்சம்பந்தமான செல்வங்களை அடைவதற்குமாகவா? (எரேமியா 45:5; 1 தீமோத்தேயு 6:17) அல்லது யெகோவாவின் சேவையில் இன்னும் முழுமையாய் பங்குகொள்வதற்கு துணைக் கல்வியைப் பயன்படுத்துவது உங்களுடைய இலக்கா? கூடுதல் கல்வியை தொடருவதற்கு தெரிவுசெய்த ஓர் இளம் பெண் லிதியா, ஆவிக்குரிய காரியங்களின்மீது சிறந்த விதத்தில் கவனத்தை ஒருமுகப்படுத்துவதை குறிப்பிட்டு விளக்கியதாவது: “மற்றவர்கள் மேற்படிப்பை தொடர்ந்து, பொருளாசை தங்களுடைய வாழ்க்கையில் குறுக்கிடும்படி அனுமதித்திருக்கிறார்கள், இதனால் அவர்கள் கடவுளை மறந்துவிட்டிருக்கிறார்கள். தனிப்பட்ட விதமாக கடவுளோடுள்ள உறவே எனக்கு மிக முக்கியமான காரியம்.” நம் அனைவருக்கும் தேவைப்படுகிற என்னே ஒரு பாராட்டத்தக்க மனப்பான்மை!
15. முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் மத்தியில் இருந்த பல்வகைப்பட்ட கல்விப் பின்னணிகள் யாவை?
15 குறிப்பிடத்தக்க விதமாகவே, முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் மிகவும் பல்வகைப்பட்ட கல்வி பின்னணிகளை உடையவர்களாய் இருந்தார்கள். உதாரணமாக, அப்போஸ்தலன் பேதுருவும் யோவானும் “படிப்பறியாதவர்களென்றும் பேதமையுள்ளவர்களென்றும்” கருதப்பட்டார்கள்; ஏனெனில் அவர்கள் ரபீக்களின் பள்ளிகளில் பயிற்றுவிக்கப்படவில்லை. (அப்போஸ்தலர் 4:13) மறுபட்சத்தில், அப்போஸ்தலன் பவுல் இன்றைய பல்கலை படிப்புக்கு சமமான கல்வியைப் பெற்றிருந்தார். இருப்பினும், தன்னிடமாக கவனத்தைத் திருப்புவதற்காக பவுல் அந்தக் கல்வியைப் பயன்படுத்தவில்லை; மாறாக, பல்வேறு தரப்பட்ட வாழ்க்கை சூழலிலுள்ள மக்களுக்கு அவர் பிரசங்கித்தபோது, அது ஒரு ஆஸ்தியாக இருந்தது. (அப்போஸ்தலர் 22:3; 1 கொரிந்தியர் 9:19-23; பிலிப்பியர் 1:7) அதைப்போலவே, ‘காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோதுடன் கல்விபயின்ற’ மனாயீன், அந்தியோகியா சபையை வழிநடத்திச்சென்றவர்களில் ஒருவராக இருந்தார்.—அப்போஸ்தலர் 13:1.
உங்களுடைய பணத்தை ஏன் ஞானமாக நிர்வகிக்க வேண்டும்?
16. (அ) நாம் கடன்பட்டால் நம்முடைய சிருஷ்டிகரை நினைவுகூருவது ஏன் கடினமாய் இருக்கலாம்? (ஆ) நாம் செலவுசெய்வதற்கு முன்னால் யோசிப்பதன் முக்கியத்துவதைப் பற்றி இயேசுவினுடைய உவமைகளில் ஒன்று எவ்வாறு வெளிப்படுத்துகிறது?
16 நீங்கள் உங்களுடைய பணத்தை ஞானமாக நிர்வகிக்கத் தவறிவிட்டால், உங்களுடைய சிருஷ்டிகரைப் பிரியப்படுத்துகிற காரியத்தைச் செய்வதன்மூலம் அவரை நினைவுகூருவது கடினமாக இருக்கலாம். நீங்கள் கடன்பட்டால், உங்களுக்கு மற்றொரு எஜமான் இருக்கிறார் என்று சொல்லலாம். பைபிள் விளக்குகிறது: “பணத்தை கடன்வாங்குகிறீர்கள், அதனால் நீங்கள் கடன்கொடுத்தவருடைய அடிமையாகிறீர்கள்.” (நீதிமொழிகள் 22:7, டுடேஸ் இங்லிஷ் வர்ஷன்) நாம் செலவழிப்பதற்கு முன்பு யோசிப்பதன் முக்கியத்துவத்தை இயேசுவினுடைய உவமைகளில் ஒன்று சிறப்பித்துக் காண்பிக்கிறது. “உங்களில் ஒருவன் ஒரு கோபுரத்தைக் கட்ட மனதாயிருந்து, அஸ்திபாரம் போட்டபின்பு முடிக்கத் திராணியில்லாமற்போனால், பார்க்கிறவர்களெல்லாரும்: . . . தன்னைப் பரியாசம் பண்ணாதபடிக்கு, அதைக் கட்டித் தீர்க்கிறதற்குத் தனக்கு நிர்வாகமுண்டோ இல்லையோ என்று முன்பு அவன் உட்கார்ந்து செல்லுஞ்செலவைக் கணக்குப் பாராமலிருப்பானோ?”—லூக்கா 14:28-30.
17. ஒருவர் செலவுசெய்வதைக் கட்டுப்படுத்துவது ஏன் பெரும்பாலும் கடினமாய் இருக்கிறது?
17 ஆகவே, “ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்” என்ற வேதப்பூர்வ நியமத்திற்கேற்ப வாழ நீங்கள் ஞானமாக முயற்சிசெய்வீர்கள். (ரோமர் 13:8) ஆனால் இது செய்வதற்கு கடினம், முக்கியமாக உங்களுக்கு உண்மையிலேயே தேவை என்பதாக விளம்பரதாரர்கள் உரிமைபாராட்டுகிற புதிய தயாரிப்புகள் தொடர்ந்து வெளிவருவதை எதிர்ப்படும்போது அவ்விதமாக இருக்கிறது. பகுத்துணர்வைப் பயன்படுத்தும்படி தம்முடைய பிள்ளைகளுக்கு உதவிசெய்ய முயற்சி செய்திருக்கிற பெற்றோர் ஒருவர் தெரிவித்ததாவது: “தேவைப்படுவது என்ன, விருப்பப்படுவது என்ன என்பதை கலந்தாலோசிப்பதற்கு நாங்கள் அதிக நேரத்தை செலவழித்திருக்கிறோம்.” பணத்தைப் பொறுப்புள்ள விதத்தில் எவ்வாறு கையாளுவது என்பதன் பேரில் ஏதாவது அறிவுரையை சிறிதளவாவது அளித்து, இப்படிப்பட்ட விஷயங்களைப் போதிப்பதற்கு பள்ளிகள் பொதுவாக தவறியிருக்கின்றன. “எவ்வாறு பணத்தை சேமிப்பது என்பதைவிட, இருசமபக்க முக்கோணத்தைப் பற்றி அறிந்துகொண்டு ஒரு மேல்நிலைப் பள்ளியிலிருந்து நாம் தேர்ச்சி பெறுகிறோம்,” என்பதாக ஒரு சமூக சேவகி குறிப்பிட்டார். அப்படியானால், ஞானமாக செலவழிப்பதற்கு எது உங்களுக்கு உதவிசெய்யும்?
18. பணத்தை ஞானமாய் நிர்வகிப்பதற்கான ஒரு திறவுகோல் என்ன, ஏன்?
18 ‘உன் சிருஷ்டிகரை நினை’ என்ற அறிவுரைக்கு செவிசாய்ப்பதே உங்களுடைய பணத்தை ஞானமாக நிர்வகிப்பதற்கான ஒரு திறவுகோல். இது ஏனென்றால், நீங்கள் அந்தக் கட்டளைக்கு கீழ்ப்படியும்போது, நீங்கள் கொடுக்கும் முன்னுரிமை யெகோவாவைப் பிரியப்படுத்துவதற்குப் போகிறது; இதனால் உங்களுடைய பணத்தை நீங்கள் எவ்வாறு செலவழிக்கிறீர்கள் என்பதை அவர் பேரில் உங்களுக்கு இருக்கும் பாசம் செல்வாக்கு செலுத்துகிறது. அதற்கேற்றபடி, உங்களுடைய தனிப்பட்ட தேவைகள் கடவுளுக்கு முழு ஆத்துமாவுடன் செலுத்தும் பக்தியுடன் குறுக்கிடும்படி நீங்கள் அனுமதிக்கமாட்டீர்கள். (மத்தேயு 16:24-26) உங்களுடைய கண்களைத் ‘தெளிவாக’ வைத்திருக்க, அதாவது, கடவுளுடைய ராஜ்யத்தின்மீதும் அவருடைய சித்தத்தை செய்வதன்மீதும் உங்களுடைய கவனத்தை ஒருமுகப்படுத்த நீங்கள் கடினமாக முயலுவீர்கள். (மத்தேயு 6:22-24) இதனால், ‘உங்களுடைய மதிப்புமிக்க பொருள்களால் யெகோவாவை கனப்படுத்தும்படி’ சொல்லப்பட்ட கடவுளுடைய புத்திமதியை ஒரு சந்தோஷமிக்க சிலாக்கியமாக நோக்க ஆரம்பிப்பீர்கள்.—நீதிமொழிகள் 3:9, NW.
பின்பற்றுவதற்கு தகுதியான இளைஞர்கள்
19. கடந்த காலத்தில் இளைஞர்கள் எவ்வாறு தங்களுடைய சிருஷ்டிகரை நினைகூர்ந்திருக்கிறார்கள்?
19 சந்தோஷகரமாக, அநேக இளைஞர்கள், கடந்த காலத்திலும் தற்காலத்திலும், தங்களுடைய சிருஷ்டிகரை நினைவுகூர்ந்திருக்கிறார்கள். சிறுவனாகிய சாமுவேல் தன்னுடன் சேவைசெய்தவர்களுடைய ஒழுக்கயீனமான செல்வாக்கின் மத்தியிலும் ஆசரிப்புக்கூடார சேவையில் உறுதியுள்ளவராக நிலைத்திருந்தார். (1 சாமுவேல் 2:12-26) கவர்ச்சியினால் ஆசைகாட்டிய சோதனைக்காரியாகிய போத்திபாரின் மனைவி, வேசித்தனம் செய்யும்படி இளம் யோசேப்பை கவரமுடியவில்லை. (ஆதியாகமம் 39:1-12) எரேமியா ‘சிறுபிள்ளையாய்’ இருந்தபோதிலும்கூட, கடுமையான எதிர்ப்பின் மத்தியிலும் தைரியமாய் பிரசங்கித்தார். (எரேமியா 1:6-8) இஸ்ரவேலைச் சேர்ந்த ஒரு சிறுபெண், வலிமைமிக்க சீரியநாட்டு படைத்தலைவரை யெகோவாவை பற்றி கற்றுக்கொள்ளக்கூடிய இடமாகிய இஸ்ரவேலில் உதவியை நாடும்படி பயமில்லாமல் வழிநடத்தினாள். (2 இராஜாக்கள் 5:1-4) இளைஞனாகிய தானியேலும் அவருடைய தோழர்களும் உணவைக் குறித்த கடவுளுடைய சட்டத்தின் பேரில் பரீட்சையை எதிர்ப்பட்டபோது தங்களுடைய விசுவாசத்தை காத்துக்கொண்டார்கள். சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்ற அந்த இளைஞர்கள், ஒரு சிலைக்கு முன்பாக பணிந்து வணங்குவதன்மூலம் கடவுளுக்கான தங்களுடைய பற்றுறுதியை விட்டுக்கொடுப்பதற்கு பதிலாக கொழுந்துவிட்டெரிகிற அக்கினிச் சூளையில் போடப்படுவதை தெரிந்துகொண்டார்கள்.—தானியேல் 1:8, 17; 3:16-18; யாத்திராகமம் 20:5.
20. இன்று எவ்வாறு இளைஞர்கள் தங்களுடைய சிருஷ்டிகரை நினைவுகூர்ந்திருக்கிறார்கள்?
20 இன்று 19-லிருந்து 25 வயதுகளிலுள்ள 2,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், அ.ஐ.மா., நியூ யார்க் மாகாணத்திலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய உலக தலைமை அலுவலகத்தில் சேவைசெய்கிறார்கள். உலகமுழுவதும் தங்களுடைய சிருஷ்டிகரை நினைவுகூர்ந்து வருகிற ஆயிரக்கணக்கான இளைஞர்களில் அவர்கள் ஒரு சிறு பகுதியினரே. முற்கால யோசேப்பைப் போல, அவர்கள் தங்களுடைய ஒழுக்க சுத்தத்தை விட்டுக்கொடுக்க மறுத்துவிட்டிருக்கிறார்கள். நீங்கள் யாரை சேவிப்பீர்கள் என்பதாக தெரிவுசெய்யும்படி கட்டாயப்படுத்தப்பட்டபோது மனிதருக்கு கீழ்ப்படிவதைவிட கடவுளுக்கே பலர் கீழ்ப்படிந்திருக்கிறார்கள். (அப்போஸ்தலர் 5:29) 1946-ல் போலந்தில், 15-வயதுடைய ஹென்றிக்கா ஸூர் என்பவள், மத சம்பந்தமான உருவ வழிபாட்டை செய்ய மறுத்தபோது சித்தரவதை செய்யப்பட்டாள். “உன் மனசுக்குள் நீ நம்புவதை நினைத்துக்கொள், வெறுமனே கத்தோலிக்க சிலுவை அடையாளத்தை மட்டும் போடு,” என்பதாக அவளை துன்புறுத்தியவர்களில் ஒருவர் சொன்னார். அவள் மறுத்த காரணத்தினால் காட்டுக்குள் இழுத்துச்செல்லப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டாள், அவளுடைய உறுதியான நித்திய ஜீவனின் நம்பிக்கை அழிக்கப்படவில்லை!b
21 நூற்றாண்டுகளாக அவரை நினைவுகூர்ந்திருக்கிற இளைஞர்களால் யெகோவாவுடைய இருதயம் எவ்வளவாய் கனிவூட்டப்பட்டிருக்க வேண்டும்! ‘உன் சிருஷ்டிகரை நினை’ என்ற அழைப்புக்கு நீங்கள் பிரதிபலிப்பீர்களா? உண்மையிலேயே அவரே உங்களுடைய நினைவுகூருதலுக்கு தகுதியானவர்! அவர் உங்களுக்காக செய்திருக்கிற, இன்னும் செய்யப்போகிற எல்லா காரியங்களைப் பற்றியும் தினமும் சிந்தித்துப்பார்த்து, அவருடைய அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்: “என் மகனே, என்னை நிந்திக்கிறவனுக்கு நான் உத்தரவுகொடுக்கத்தக்கதாக, நீ ஞானவானாகி, என் இருதயத்தைச் சந்தோஷப்படுத்து.”—நீதிமொழிகள் 27:11.
[அடிக்குறிப்புகள்]
a ஆங்கில காவற்கோபுரம், டிசம்பர் 15, 1953, பக்கம் 750.
b உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்ட 1994 யெகோவாவின் சாட்சிகளுடைய வருடாந்தரப் புத்தகம் (ஆங்கிலம்), பக்கங்கள் 217-18-ஐக் காண்க.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ கடவுளை உண்மையான நபராக கருதுவதற்கு இளைஞர்களுக்கு எவ்வாறு உதவி செய்யலாம்?
◻ உன் சிருஷ்டிகரை நினை என்பது எதை அர்த்தப்படுத்துகிறது?
◻ நம்முடைய கல்வி என்ன நோக்கத்தை சேவிக்க வேண்டும்?
◻ நம்முடைய பணத்தை ஞானமாக நிர்வகிப்பது ஏன் இன்றியமையாதது?
◻ எப்படிப்பட்ட இளைஞர்கள் நீங்கள் பின்பற்றுவதற்கு தகுதியுடையவர்கள்?
21. ஏற்றுக்கொள்வதற்கு ஞானமாய் இருக்கும் அழைப்பு என்ன, என்ன பலனுடன்?
[பக்கம் 17-ன் படம்]
நீங்கள் ஏன் பள்ளிக்குச் செல்கிறீர்கள் என்பதைக் குறித்து சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா?
[பக்கம் 18-ன் படம்]
பணத்தை ஞானமாக நிர்வகிப்பதற்கு நீங்கள் கற்றுவருகிறீர்களா?