சிங்கப்பூர் வணக்க சுயாதீனத்தை அலட்சியம் செய்கிறது
பிப்ரவரி 24, 1995 அன்று மாலை, சிங்கப்பூர் நகரிலுள்ள நான்கு வீடுகள் போலீஸால் திடீர் சோதனை செய்யப்பட்டன. மொத்தமாக 69 பேர் கைதுசெய்யப்பட்டனர்.a அவர்களில் 71 வயது பெண்மணி ஒருவரும் 15 வயது இளம் பெண்கள் இருவரும் உட்பட்டிருந்தனர். ஏன்? ஏதாவது குற்றச்செயல் அல்லது அரசைக் கவிழ்க்கும் நடவடிக்கையின் காரணமாகவா? இல்லை. வெகு குறைந்தளவில்கூட ஆபத்தானதாக, ஒழுக்கங்கெட்டதாக, அல்லது சமுதாயத்துக்கு விரோதமானதாகக் கருதப்படக்கூடிய எதிலும் அவர்களில் ஒருவரும் ஈடுபடவில்லை. தங்களுடைய உடன் சிங்கப்பூரியர்களின் ஒழுக்க மதிப்புகள், பாதுகாப்பு, மற்றும் நலனுக்கு எவ்வித அச்சுறுத்தலையும் அவர்கள் ஏற்படுத்தவில்லை. இருந்தாலும், நான்கு வீடுகளையும் துருவித்தேடிப் பார்த்தப்பின், பைபிள் படிப்பதற்காகவும் ஒரு சமூக கூட்டுறவை அனுபவிப்பதற்காகவும் ஒன்றுகூடி வந்திருந்த 69 பேரை போலீஸார் காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். அவர்கள் இரவு முழுவதுமாக காவலில் வைக்கப்பட்டு, விசாரணை செய்யப்பட்டு, கைரேகை எடுக்கப்பட்டு, படம்பிடிக்கப்பட்டு—ஆம், பொதுவான குற்றவாளிகளைப் போல பயமுறுத்தப்பட்டனர்! தரக்குறைவான நிலைமைகளின்கீழ் 18 மணிநேர அளவு நீண்ட இந்தக் காலப்பகுதியின்போது, சட்ட ஆலோசனை பெறுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டனர்; மேலும் தாங்கள் எங்கிருந்தார்கள் என்பதைக் குடும்ப அங்கத்தினருக்குத் தெரிவிக்கும்படியாக ஃபோன் செய்வதற்குக்கூட தடைசெய்யப்பட்டனர். அப்படிப்பட்ட திடீர் நடவடிக்கை இந்தச் சமாதானமான, சட்டத்தைக் கடைப்பிடிக்கும் குடிமக்களை எவ்வாறு பாதித்தது என்பதை ஒருவரால் கற்பனைசெய்துதான் பார்க்க முடியும்!
நாசி ஜெர்மனியின் இருண்ட நாட்கள் மற்றும் சோவியத் யூனியனிலும் கிழக்கு ஐரோப்பாவிலுமிருந்த கொடூரமான கம்யூனிஸ சகாப்தத்தின்போது இருந்த நிலைமைகளை இந்தக் காட்சி நினைவுக்குக் கொண்டுவருவதாய் இருக்கிறது. சிங்கப்பூருக்குத் தற்செயலாக வருகைதருபவர், அந்த மிகச் சுத்தமான, வளமிக்க நவீன நகர-நாட்டில் இதை எதிர்பார்க்கமாட்டார். பொருளாதார மற்றும் சமுதாய முன்னேற்றத்தின் 20-ம் நூற்றாண்டு அதிசயமென சிங்கப்பூர் பெயர்பெற்றிருக்கிறது. பேச்சு, மதம், மற்றும் ஒன்றுகூடுதல் ஆகியவற்றிற்கான சுயாதீனம் உட்பட அடிப்படை மனித உரிமைகளை தன் குடிமக்களுக்கு வழங்குவதாக உறுதியளிக்கும் அறிவிப்புசெய்யப்பட்ட மக்களாட்சியாக அது இருக்கிறது.
இருந்தாலும், பிப்ரவரியில் கைதுசெய்யப்பட்டவர்கள், பைபிளைப் படிப்பதற்கும் கிறிஸ்தவ கூட்டுறவில் பகிர்ந்துகொள்வதற்கும் ஒன்றுகூடிய யெகோவாவின் சாட்சிகள் என்பதால் மட்டுமே குறியிலக்காக்கப்பட்டிருந்தனர். “சட்டவிரோதமான ஒரு சமுதாயத்தின் கூட்டங்களுக்கு ஆஜராகி இருந்தனர்” என்பதே அவர்களுக்கு விரோதமான குற்றச்சாட்டாக இருந்தது.
உண்மையில், 1972-ல் சிங்கப்பூர் காங்கிரிகேஷன் அதிகார பதிவேட்டிலிருந்து நீக்கப்பட்டு, உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்ட பைபிள்கள் உட்பட பிரசுரங்களுக்கு தடைவிதிக்கப்பட்டது முதற்கொண்டே யெகோவாவின் சாட்சிகளுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் மறுக்கப்பட்டிருக்கிறது. அந்த நடவடிக்கை எந்த ஊகிப்புகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டதோ அவற்றை எதிர்த்துக்கூற எவ்வித வாய்ப்பும் அளிக்கப்படவில்லை. சமீபத்தில், தடைசெய்யப்பட்ட பைபிள் பிரசுரங்களை வைத்திருந்ததற்காக பிப்ரவரி 1994-ல் குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு சாட்சிகளுடைய வழக்கில் சிங்கப்பூர் நீதிமன்றங்களில் இந்த அதிகாரப்பூர்வ ஓரவஞ்சனையின் நியாயத்தன்மை சவாலிடப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு விரோதமான மேல்முறையீடு ஆகஸ்ட் 1994-ல் விசாரிக்கப்பட்டு உடனடியாக தள்ளுபடி செய்யப்பட்டது. உயர் நீதிமன்றத்தின் முதன்மை நீதிபதியாகிய யாங் பெங் ஹௌ அதற்கடுத்த மாதம் தன் கருத்தை வெளியிட்டார். மத சுயாதீனம் மீறப்படவில்லை என்றும், யெகோவாவின் சாட்சிகள் தேச பாதுகாப்புக்கு ஓர் அச்சுறுத்தலாக இருக்கிறார்கள் என்ற அடிப்படையில் அந்தக் குற்றச்சாட்டுகள் நியாயமானவை ஏனென்றால் அவர்களின் அங்கத்தினர்கள் இராணுவ சேவையில் பங்கெடுக்க மாட்டார்கள் என்றும் அவர் தீர்ப்பு வழங்கினார். பிப்ரவரி 17, 1995 அன்று, இந்த எதிரிடையான தீர்ப்பைக் குறித்து சிங்கப்பூர் மேல்முறையீடு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும்படி அந்த நான்கு சாட்சிகள் அனுமதி கோரினார்கள். அந்தக் கோரிக்கை மறுக்கப்பட்டது.
இந்தக் கடைசி தீர்ப்பு, அரசால் கட்டுப்படுத்தப்பட்ட சிங்கப்பூர் செய்தித் துறையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இந்த நீதிமன்றத் தீர்ப்பும் அதன் விளைவாக ஏற்பட்ட பிரச்சாரமும் அதைப் பின்தொடர்ந்த சம்பவங்களுக்கு முன்னிழலாக இருந்தன என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. ஒரு வாரத்திற்குள் 69 சாட்சிகள் கைதுசெய்யப்பட்டனர். இவற்றில் நான்கு பேருக்கு—பிரிட்டன், பிரான்ஸ், லக்ஸம்பர்க் ஆகிய நாடுகளின் குடிமக்களுக்கு—எதிரான குற்றச்சாட்டுகள் பின்னர் தள்ளுபடி செய்யப்பட்டன. என்றாலும் இவர்களுக்கும் அந்த அனுபவம் பயங்கரமானதாக இருந்தது. ஒரு மனிதன் தன் மனைவியோடுகூட சிங்கப்பூரில் பல வருடங்களாக வாழ்ந்தும் வேலைசெய்தும் இருந்தார். அவர்கள் தங்கள் வேலைகளையும் வாடகை வீட்டையும் இழந்து, நெருங்கிய நண்பர்கள் பலரிடமிருந்து பிரியாவிடை பெறும்படி வற்புறுத்தப்பட்டனர்.
மீதமிருந்த வயதுவந்த 63 பேரும், தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டார்கள்; தடைசெய்யப்பட்ட பிரசுரங்களை வைத்திருப்பதாகவும் சிலர் குற்றஞ்சாட்டப்பட்டனர். அவர்கள் அதிகபட்சம் மூன்று வருடங்கள் சிறையிருப்பையோ 3,000 சிங்கப்பூர் டாலர் (2,100 ஐ.மா. டாலர்) தண்டப்பணம் செலுத்துவதையோ அல்லது இரண்டையுமோ எதிர்ப்படுகின்றனர். இளங்குற்றவாளிகளுக்கான நீதிமன்றத்தில், அந்த இளம் 15 வயது பெண்கள் இருவரும் தனியாக ஆஜரானார்கள்.
தேசிய தனித்துவத்துக்கும் ஒற்றுமைக்கும் எவ்வித அச்சுறுத்தலும் இல்லை
உலகெங்கும், யெகோவாவின் சாட்சிகள் வாழ்ந்து வருகிற 200-க்கும் மேலான நாடுகளில், அவர்கள் பண்புள்ளவர்களாக, நேர்மையுள்ளவர்களாக, சட்டத்தைக் கடைப்பிடிக்கும் மக்களாக அறியப்பட்டிருக்கிறார்கள். அரசைக் கவிழ்க்கிற, அரசுக்கு விரோதமான எந்தவகையான நடவடிக்கையிலும் பங்கெடுக்க உறுதியாய் மறுப்பவர்களாக அவர்கள் அறியப்பட்டிருக்கிறார்கள்; இது கிறிஸ்தவமற்ற நடத்தையாகவும் அவர்கள் சபைநீக்கம் செய்யப்படுவதில், அல்லது சபையிலிருந்து விலக்கி வைக்கப்படுவதில் விளைவடைவதாகவும் இருக்கும். உண்மையில், சிங்கப்பூர் அரசு அவர்களைக் குறித்து பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. சிங்கப்பூரின் தேசிய பாதுகாப்பு அல்லது தேசிய தனித்துவம் அல்லது ஒற்றுமையின் உணர்வுக்கு அவர்கள் எவ்விதத்திலும் ஒரு அச்சுறுத்தலாக இல்லை. (ரோமர் 13:1-7) உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியின் பிரஸிடென்ட் மில்டன் ஜி. ஹென்ஷல் அவர்கள், சிங்கப்பூர் பிரதம மந்திரி கா சாக் டாங் என்பவருக்கு எழுதிய மார்ச் 21, 1995 தேதியிட்ட கடிதத்தில் இது தெளிவாகக் குறிப்பிடப்பட்டது. வாசகர்களின் நன்மைக்காக இந்தக் கடிதம் இங்கு பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.
சிங்கப்பூரிலுள்ள இந்த நிலைமை எவ்வாறு உருவெடுக்கும் என்பதை வியாபாரம், அரசாங்கம், மற்றும் தனியார் துறைகளிலுள்ள விடுதலையை விரும்பும் மக்கள் அக்கறையுடன் கவனித்துக்கொண்டிருப்பார்கள். தன் சொந்த அரசியல் அமைப்புச் சட்டத்தாலும் தேசங்களின் சர்வதேச சமுதாயத்தாலும் ஆதரிக்கப்பட்ட அடிப்படை மனித உரிமைகள் மற்றும் சுயாதீனங்களுக்கு இசைவாக சிங்கப்பூர் அரசு செயல்படுமா? நிச்சயமாக, சிங்கப்பூரிலுள்ள தங்கள் உடன் விசுவாசிகளைக் குறித்து உலகெங்குமுள்ள யெகோவாவின் சாட்சிகள் ஆழ்ந்த அக்கறையுள்ளவர்களாய் இருக்கிறார்கள். அவர்களைத் தங்கள் ஜெபங்களில் நினைத்துக்கொள்கிறார்கள்; பைபிளில் கொடுக்கப்பட்டுள்ள பின்வரும் உறுதியளிப்பை நினைவில் கொள்கிறார்கள்: “கர்த்தர் நியாயத்தை விரும்புகிறவர்; அவர் தமது பரிசுத்தவான்களைக் கைவிடுவதில்லை.”—சங்கீதம் 37:28.
[அடிக்குறிப்புகள்]
a இந்த 69 பேர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்துவந்த மாதங்களில், மேலும் 11 சாட்சிகள் கைது செய்யப்பட்டு, சட்டவிரோதமான பிரசுரங்களை வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
[பக்கம் 30-ன் பெட்டி]
மார்ச் 21, 1995
கா சாக் டாங்
பிரதம மந்திரி
இஸ்டானா அனெக்ஸ்
சிங்கப்பூர் 0923
சிங்கப்பூர் குடியரசு
லீ க்வான் இயு
முதுநிலை மந்திரி
பிரதம மந்திரியின் அலுவலகம்
460 அலக்ஸான்ட்ரா ரோடு
37-00 PSA பில்டிங்
சிங்கப்பூர் 0511
சிங்கப்பூர் குடியரசு
அன்புள்ள ஐயன்மீர்:
சிங்கப்பூரிலிருந்து வெளியான பிப்ரவரி 25, 1995 தேதியிட்ட சமீபத்திய ராய்ட்டர்ஸ் செய்தி அறிக்கை ஒன்று மிகவும் கலக்கமடையச் செய்வதாய் இருந்தது. யெகோவாவின் சாட்சிகளுடைய பைபிள் படிப்பு கூட்டங்கள் போலீஸால் கலைக்கப்பட்டு 69 பேர் கைதுசெய்யப்பட்டனர் என்று அது அறிக்கைசெய்தது. 20 வருடங்களுக்கும் மேலாக அவர்களுடைய நடவடிக்கைகளுக்கும் பிரசுரங்களுக்கும் தடைவிதிக்கப்பட்டிருக்கிற சிங்கப்பூர் யெகோவாவின் சாட்சிகளுடைய நிலைமையின்மீது இந்த அறிக்கை உலக கவனத்தை ஈர்த்திருக்கிறது.
200-க்கும் அதிகமான நாடுகளில் சட்டத்தின் முழு பாதுகாப்புடன் வெளிப்படையாகச் செயல்பட்டு வரும் ஒரு மத அமைப்பு, மக்களாட்சியின் நியமங்களை ஆதரிக்கும் நாடாகிய சிங்கப்பூரில் ஏன் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது கடினமாக இருக்கிறது. சிங்கப்பூரின் அரசமைப்புச் சட்டம் அதன் குடிமக்களுக்கு வணக்க சுயாதீனத்தை உறுதிசெய்கிறது என்பதைக் கருதுகையில் அது இன்னும் கவலைக்குரியதாக இருக்கிறது.
எவ்விடத்திலும் யெகோவாவின் சாட்சிகள் ஒருபோதும் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை. உண்மையில், அவர்கள் சமாதானமுள்ளவர்களாக, கடின உழைப்பாளிகளாக, ஒழுக்கத்தில் நேர்மையானவர்களாக, சட்டத்தைக் கடைப்பிடிப்பவர்களாக இருக்கும் பெயரையே உலகெங்கும் பெற்றிருக்கிறார்கள்; நீங்களும் உங்கள் நாட்டில் முன்னேற்றுவிக்கும் பண்புகள் இவை என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.
கிறிஸ்தவர்களுக்கான பைபிள் தராதரங்களை அவர்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்கையில், யெகோவாவின் சாட்சிகளுடைய நிலை சில சமயங்களில் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது அல்லது தவறாகப் பிரதிநிதித்துவம் செய்யப்பட்டிருக்கிறது என்பது மெய்யே. ஆனால், கிறிஸ்தவத்தைத் தோற்றுவித்தவருடைய காரியத்திலும், அவர் தம்முடைய நாளிலிருந்த அரசாகிய ‘இராயனுக்கு’ விரோதமாக இருந்ததாகத் தவறாகப் பிரதிநிதித்துவம் செய்யப்பட்டபோது உண்மையாக இருந்ததல்லவா? யெகோவாவின் சாட்சிகள் வெறுமனே இயேசு மற்றும் ஆரம்பகால கிறிஸ்தவர்களின் முன்மாதிரியைப் பின்பற்றுகிறார்கள். அவர்கள் எங்கு வாழ்கிறார்களோ அங்குள்ள அரசாங்கத்தை மதித்து, தங்கள் வரிகளைச் செலுத்தி, நல்ல ஒழுக்க தராதரங்களைப் பின்பற்றுகிறார்கள். அவர்கள் மனச்சாட்சிக்குக் கட்டுப்பட்ட நேர்மையான குடிமக்கள். யெகோவாவின் சாட்சிகள் ஒருபோதும் எந்த நாட்டிலும் எவ்விதமான அரசைக் கவிழ்க்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டதில்லை; சிங்கப்பூரில் அவர்கள் இருப்பதுதானேயும் உங்கள் நாட்டின் தேசிய அக்கறைகளுக்கு எவ்வித அச்சுறுத்தலையும் ஏற்படுத்துகிறதில்லை என்று நான் உங்களுக்கு உறுதியளிக்க முடியும்.
யெகோவாவின் சாட்சிகள்மீது உங்கள் அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட அடக்குமுறைப் படிகள், சமீபத்திய செய்தி அறிக்கைகளின் காரணமாக தற்போது பொதுவாக அறியப்பட்டிருக்கிறது. உலகெங்குமுள்ள அவர்களுடைய 1.2 கோடி கூட்டாளிகளுக்கு இது விசேஷித்த அக்கறைக்குரிய காரியமாக இருக்கிறது. உங்கள் நல்லதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த நிலைமையைச் சரிசெய்யும்படியும், அரசமைப்பு சட்டத்தால் உறுதியளிக்கப்பட்ட வணக்கம் மற்றும் மனச்சாட்சியின் சுயாதீனத்தை யெகோவாவின் சாட்சிகளுக்கு வழங்கும்படியும் நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.
யெகோவாவின் சாட்சிகளுடைய பிரதிநிதிகளுடன் வெளிப்படையான பேச்சுவார்த்தையானது எங்களுடைய அமைப்பையும் நடவடிக்கையையும் குறித்த எந்தவிதமான தவறான புரிந்துகொள்ளுதல்களையும் அகற்றி, சிங்கப்பூர் அரசானது யெகோவாவின் சாட்சிகளைக் குறித்துப் பயப்படுவதற்கு எவ்வித காரணமும் இல்லை என்று உங்களுக்கு மேலுமாக உறுதியளிக்கும். அப்படிப்பட்ட ஒரு சந்திப்புக்காக ஏற்பாடு செய்ய நான் மகிழ்ச்சியுள்ளவனாக இருப்பேன்.
உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.
தங்கள் பணிவுள்ள,
மில்டன் ஜி. ஹென்ஷல்
பிரஸிடென்ட்