“எந்தக் காற்றும் சாதகமான காற்றாக இல்லை” என்றால்
“ஒரு மனிதன் தான் எந்தத் துறைமுகத்தை நோக்கிச் செல்கிறான் என்று அறியாமல் இருக்கையில், எந்தக் காற்றும் சாதகமான காற்றாக இல்லை.” முதல் நூற்றாண்டைச் சேர்ந்த ரோம தத்துவ அறிஞரான லூக்கியுஸ் ஆனையுஸ் செனிகாவால் சொல்லப்பட்டதாகக் கருதப்படும் இந்த வார்த்தைகள், நெடுங்காலமாக உணரப்பட்ட சத்தியம் ஒன்றை உறுதிப்படுத்துகின்றன: வாழ்க்கைக்கு ஒரு போக்கு இருக்க வேண்டுமானால், இலக்குகள் அவசியம்.
என்றபோதிலும், அநேக சமயங்களில், வாழ்க்கை ஒரு நோக்கமற்ற போக்காக இருக்கிறது. அன்றாட வாழ்க்கையின் பாறைகளையும் சுழல்களையும் வெறுமனே தவிர்ப்பதிலேயே அநேகர் திருப்தி அடைகிறார்கள். உறுதியான நிலைநிர்ணயம் ஏதுமின்றி, “ஒரு கணம் காற்றால் முன்னோக்கிக் கொண்டுசெல்லப்பட்டு, அடுத்த கணம் பின்னால் கொண்டுபோகப்படும்” அலைகளைப் போல அவர்கள் ஆகிவிடுகிறார்கள். (யாக்கோபு 1:6, ஃபிலிப்ஸ்”) அப்படிப்பட்ட மக்களுக்கு “எந்தக் காற்றும் சாதகமான காற்றாக இல்லை.”
இலக்கை நோக்கி செயல்பட்டவர்களுடைய உதாரணங்களை பைபிள் அளிக்கிறது; இவ்வாறு அவர்கள் இன்றைய கிறிஸ்தவர்களுக்கு இதில் இலட்சிய மாதிரிகளாக இருக்கிறார்கள். மோசே ‘இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்தார்.’ (எபிரெயர் 11:26) பவுல் எழுதினார்: “பரிசைப் பெறும்படி நான் நேராக இலக்கை நோக்கி ஓடுகிறேன்.” ‘இதே மனநிலையைக் கொண்டிருக்கும்படி’ உடன்விசுவாசிகளை அவர் உற்சாகப்படுத்தினார்.—பிலிப்பியர் 3:14, 15, “டுடேஸ் இங்லிஷ் வர்ஷன்.”
பைபிளின் வாக்குறுதிகளில் நம்முடைய கண்களை ஊன்றவைத்துக்கொண்டு, இலக்கை நோக்கி செயல்பட்ட அப்படிப்பட்ட மனிதரின் மாதிரியை நாமும் பின்பற்றுவோமாக.—எபிரெயர் 13:7-ஐ ஒப்பிடுக.