பாஸ்னியாவிலுள்ள நம் விசுவாசிகளின் குடும்பத்திற்கு உதவிசெய்தல்
யெகோவாவின் சாட்சிகள் அரசியல் சச்சரவுகளில் பங்கெடுப்பதில்லை. (யோவான் 17:16) எனினும், “விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கு” நன்மைசெய்யும்படியான பவுலின் அறிவுரையைப் பின்பற்றி, போரால் தாக்கப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள தங்கள் உடன்கிறிஸ்தவர்களுக்கு உதவியளிக்க அவர்கள் உடனடியாகச் செயல்படுகின்றனர். (கலாத்தியர் 6:10) 1993-94-ன் குளிர்காலம் நெருங்கினபோது, ஆஸ்திரியாவிலும் க்ரோஷியாவிலுமிருந்து சாட்சிகள், பாஸ்னியாவிலிருக்கும் தங்கள் விசுவாசக் குடும்பத்தாருக்கு உதவிசெய்ய தங்கள் உயிரையும் ஆபத்தில் வைத்தனர். பின்வருவது அவர்களுடைய அறிக்கை.
1993-ன் மார்ச்சிலிருந்து அக்டோபர் வரை, பாஸ்னியாவுக்கு இன்னல் தவிர்ப்புதவி அனுப்புவதற்கு வாய்ப்பு இல்லாமற்போயிற்று. எனினும், அக்டோபரின் தொடக்கத்தில், சரக்குகள் அனுப்புவதற்குக் கூடியதாயிருக்கலாமென அதிகாரிகள் குறிப்பிட்டனர். பாஸ்னியாவின் போர்முனைகள் எல்லாவற்றிலும் கடும் போர் நடந்துகொண்டிருந்ததால், இது இன்னும் ஆபத்தான பொறுப்பேற்பாக இருக்கும்.
இருப்பினும், செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 26, 1993-ல் நம்முடைய பார ஊர்திகள், பாஸ்னியாவிலிருக்கும் உடன் கிறிஸ்தவர்களுக்காக, 16 டன்கள் உணவையும் விறகுக்கட்டைகளையும் ஏற்றிக்கொண்டு சென்றன. அடையாளம் கண்டுகொள்வதற்காக நாங்கள் எங்கள் மாவட்ட மாநாட்டு பெயர்க்குறிப்பு அட்டைகளை அணிந்துகொண்டோம்.
க்ரோஷியா மற்றும் பாஸ்னியாவின் எல்லையில் வந்து சேர்ந்தபோது, ஓர் இராணுவ படைத்துறைக்கு வழிநடத்தப்பட்டோம். அங்கே எங்கள் பார ஊர்திகள் முற்றிலுமாக சோதனை செய்யப்பட்டன. செர்பியன் பிராந்தியத்தினூடே பயணப்படும்படியான எங்கள் வேண்டுகோள் மறுக்கப்பட்டது. மத்திய பாஸ்னியா வழியாக மாத்திரமே—போர் நடந்துகொண்டிருக்கும் முனையினூடேதானே—செல்வதற்கு அனுமதிக்கப்படும்.
பயனற்ற முயற்சிகளா?
இராணுவ வழிகாப்பாளர்கள் எங்களை ஒரு சோதனை இடத்திலிருந்து மற்றொன்றுக்கு மாறிமாறி வழிநடத்தியபோது, துப்பாக்கிகளிலிருந்தும் பீரங்கிகளிலிருந்தும் செவியைப் பிளக்கும் வண்ணமான வெடியோசைகளை நாங்கள் கேட்டோம். இரவின்போது, இரண்டு பீரங்கிப்படை வண்டிகளாலும் ஒரு பொறிவண்டியாலும் வழிநடத்தப்படுவோராக காடுகளினூடே நாங்கள் பயணப்பட்டோம். மும்முரமான போர்முனையினூடே எங்கள் பார வண்டிகள் மெதுவாய் நகர்ந்தன. காலைவரையில் எல்லாம் நல்லமுறையில் சென்றுகொண்டிருந்தன. காலையில் எங்கள் தலைக்கு மேலாக துப்பாக்கிக் குண்டுகள் சுடப்பட்டன, நாங்கள் ஒரு குன்றுக்குப் பின்னால் ஒளிந்துகொள்ள வேண்டியிருந்தது. சிறிது நேரத்திற்குப் பின் சுடுவது நின்றது, நாங்கள் எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம்.
ஓர் இராணுவ முகாமுக்கு நாங்கள் வந்து சேர்ந்தபோது, படைத் தலைமை அதிகாரி ஒருவர், நாங்கள் யார் எங்களுக்கு என்ன வேண்டுமென எங்களைக் கேட்டார். எங்கள் நோக்கத்தை நாங்கள் கூறினபோது அவர்: “நீங்கள் மேற்கொண்ட காரியம் நிச்சயமாகத் தோல்வியடையும். இந்த முகாமிலிருந்து பத்திரமாய் வெளிச்செல்வது, ஒருசில கஜ தூரங்கூட செல்வது உங்களுக்கு சாத்தியமல்ல. இந்த நாட்டில் அவ்வளவு அதிக பஞ்சம் உண்டாயிருப்பதால் ஜனங்கள் உங்களைத் தாக்கி உங்கள் சரக்குகளைத் திருடிக்கொள்வார்கள்” என்று சொன்னார். சென்றவழியே திரும்பிச் சென்றுவிடும்படி அவர் எங்களை வற்புறுத்திக் கூறினார்.
எங்கள் முயற்சிகள் “நிச்சயமாகத் தோல்வியடையுமா”? போரால் தாக்கப்பட்டு பஞ்சத்தால் பீடிக்கப்பட்ட பகுதிகளினூடே நாங்கள் பயணப்பட்டு அதேசமயத்தில் எங்கள் சரக்குகளையும் எங்கள் உயிரையும் பாதுகாத்துக்கொள்ளக் கூடுமென எதிர்பார்ப்பது வீணாக இருந்ததா? முக்கியமானத் தீர்மானம் செய்ய வேண்டியிருந்தது. நாங்கள் ஏற்கெனவே துப்பாக்கி வெடிகளையும் காதைச் செவிடாக்கும் குண்டு வெடிப்புகளையும் கேட்டுவிட்டோம். அந்தப் போர்ச்சேவகர்களுடன் இரவை நாங்கள் கழிக்கையில், அவர்கள் போரின் கடுமைகளுக்கு ஆயத்தமாயிருந்தனரென நாங்கள் காண முடிந்தது. குண்டு ஊடுருவ முடியாத மார்க்கவசங்களை அவர்கள் அணிந்து, கனத்தமுறையில் போர்க்கலம் தரித்திருந்தனர். சமையற்காரனுங்கூட தன் முதுகின்மீது இயந்திர துப்பாக்கியொன்றைத் தாங்கியிருந்தான். இங்கே நாங்கள் சொக்காய்களையும் கழுத்துக்கச்சைகளையும் அடையாளக் கார்டுகளையும் அணிந்திருந்தோம்! நாங்கள் தொடர்ந்து பயணப்படுவது ஞானமானதா?
ட்ராவ்நிக்கில் வந்துசேர்வது
இந்தப் போரில் பங்குகொள்ளும் மூன்றாவது கட்சியாரோடு கலந்துபேசி முடிவுசெய்வதே எங்கள் ஒரே நம்பிக்கையாகத் தோன்றினது. அடுத்த நாள் காலையில் ஓர் இளம் பெண்ணிடம், அந்தப் பட்டாள படைத்துறைக்களத்தின் தளபதி அலுவலகம் எங்குள்ளதென்று அவளுக்குத் தெரியுமாவெனக் கேட்டோம். “அது அதிக தூரத்தில் இல்லை, இந்தக் காடுகளினூடே சென்றால், ஒரு காலத்தில் மருத்துவசாலையாக இருந்த ஒரு கட்டிடத்தை நீங்கள் காண்பீர்கள்” என்று சொன்னாள். நாங்கள் செல்வதற்கு ஆவலாயிருந்தோம். போர்க்கலம் தரியாமல் அந்த முகாமைவிட்டு வெளிச்செல்ல நாங்கள் தைரியம் கொண்டதன்பேரில் அந்தப் போர்வீரர் ஆச்சரியப்பட்டனர்.
அந்த முந்திய மருத்துவசாலை பாழடைந்து கிடந்தது, ஆனால் ஓர் அதிகாரி அங்கிருந்தார். அவர் உதவிசெய்ய ஒப்புக்கொண்டு, தன் படைத்தலைவரிடம் முதலாவதாகப் பேசும்படி எங்களுக்கு ஆலோசனை கூறினார். அவர், நைந்து உருக்குலைந்த தன் காரில் எங்களை ஏற்றி போர்முனை வழியாகப் பெரும் வேகத்தில் காரை ஓட்டிச்சென்றார். ஒரு கட்டத்தில் போய் நின்றோம், அங்கே படைத்தலை அதிகாரி ஓர் இருண்ட அறையில் எங்களிடம் பேச ஒப்புக்கொண்டார்.
“சென்ற இரவில் நாங்கள் உங்களைச் சுடத்தொடங்க விரும்பினோம், உங்களுக்கு என்ன வேண்டும்?” என்றார்.
“நாங்கள் யெகோவாவின் சாட்சிகள், எங்கள் சகோதரருக்கு துயர்த்தீர்ப்பு சரக்குகளை எடுத்துச்செல்ல விரும்புகிறோம்.”
அவர் மிகவும் ஆச்சரியப்பட்டார்—மேலும் மனம் கவரப்பட்டவரானார். ஏனெனில் பஞ்சநிவாரண தேவைப்பொருட்களைக் கொண்டுவரும் பார ஊர்திகள் ஒன்றும் பாஸ்னியாவுக்குள் நுழைய தைரியமாய்த் துணிவுகொள்ளவில்லை. முழுமையாகச் சோதனை செய்த பின்பு, எழுதப்பட்ட உறுதிச்சான்று எங்களுக்கு அளிக்கப்பட்டது. அதற்கு முந்தின இரவில் எங்கள் பயணத்தைத் தொடர எங்களுக்கு ஒரு வாய்ப்புமில்லையென நாங்கள் நினைத்தோம், இப்பொழுதோ நாங்கள் வழிக்காவலர் இல்லாமலே தொடர்ந்து செல்லக்கூடும்!
காடுகளினூடே நாங்கள் ஓட்டிச்சென்றோம், ஒன்றன்பின் ஒன்றாக சோதிக்கும் இடங்களைக் கடந்தோம், சில சமயங்களில் போர்முனை வழியாகவும் ஓட்டிச் சென்றோம். ஆபத்தின் மத்தியிலும் நாங்கள் பத்திரமாய் ட்ராவ்நிக்கில் வந்து சேர்ந்தோம். நாங்கள் வந்துசேர்ந்ததைக் கேள்விப்பட்ட ஒரு போர்வீரன் நம் சகோதரர் கூடியிருந்த ஒரு வீட்டுக்கு ஓடினான். “உங்கள் ஆட்கள் பார ஊர்திகளுடன் இங்குள்ளனர்!” என்று சத்தமிட்டுக் கூறினான். அவர்களுடைய மகிழ்ச்சியை நீங்கள் கற்பனைசெய்து பார்க்கலாம். நாங்கள் அந்த வீட்டுக்குள் உணவைக் கொண்டுசென்று, ஒருசில வார்த்தைகளைப் பேசினோம், ஆனால் பின்பு நாங்கள் தொடர்ந்து செல்ல வேண்டியதாயிருந்தது. இருண்டுகொண்டிருந்தது, ஆபத்தான 32 கிலோ மீட்டர் தூரப் பயணம் முன்னிருந்தது.
ஸெனிக்காவுக்குச் செல்லுதல்
வழிக்காட்டிக் கொண்டுசெல்லும் ஒரு கார் எங்களை அந்தக் காடுகளினூடே உச்ச வேகத்தில் வழிநடத்தினது. நாங்கள் ஒருபோதும் ஸெனிக்காவுக்குப் போய்ச் சேரமாட்டோமென சிலர் சொன்னார்கள், ஆனால் நாங்கள் போய்ச் சேர்ந்தோம். மனச்சோர்வான நிலை அந்தப் பட்டணத்தின்மீது அமர்ந்திருந்ததாகத் தோன்றினது. பாதையில் விளக்குகளோ கார்களோ எவையும் இல்லை. எல்லா பக்கங்களிலும் ஸெனிக்கா முற்றுகையிடப்பட்டிருந்தது, இது மிகுந்த பஞ்சத்திலும் மனச்சோர்விலும் விளைவடைந்திருந்தது.
வீதிவழியாக நாங்கள் காரை ஓட்டிச் சென்றபோது, ஆச்சரியமான ஒரு காரியத்தைக் கண்டோம்—கிறிஸ்தவ சகோதரிகள் இருவர் சாட்சிகொடுத்துக் கொண்டிருந்தனர்! உணவுப்பொருட்கள் காலியாகிவிட்டதனால், சகோதரர்கள் காடுகளுக்குச் சென்று உணவுக்காகத் தேட வேண்டுமென்று, முந்தின நாள் அவர்களுடைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதென அறிந்தோம். நாங்கள் சரியான நேரத்தில் வந்து சேர்ந்தோம்! காலை நான்கு மணியின்போது, வீதியில் ஒருவரும் இல்லாத சமயத்தில் எங்கள் வண்டிகளில் ஒன்றிலிருந்த சரக்குகளை இறக்கினோம்.
அடுத்த நாள் படைத்தலைவர் ஒருவரைச் சந்தித்தோம். ஸெனிக்காவுக்கு நாங்கள் வந்து சேர்ந்ததைப்பற்றி அவர் மிகவும் ஆச்சரியப்பட்டார். எங்கள் அடுத்த இலக்காகிய சரஜெவோவுக்குப் பயணப்படுவதைப்பற்றி இப்பொழுது விசாரித்தோம்.
“பார ஊர்தியில் அங்கு செல்ல, பல மாதங்களாக ஒருவருமே துணியவில்லை” என்று அவர் சொன்னார். முடிவில் மலைகளின் குறுக்கே பயணப்படுவதற்கு அவர் எங்களுக்கு அனுமதி கொடுத்தார். “ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன், அது மிகக் கடினமானது, நீங்கள் போய்ச் சேர்வதற்கு உங்கள் ஊர்திகள் போதிய உறுதியானவையாவென்பதைப் பற்றி நான் நிச்சயமாக இல்லை” என்று அவர் எச்சரித்தார்.
அந்தப் படைத்தலைவர் மிகைப்படுத்தி சொல்லவில்லை. நாங்கள் சரஜெவோவிலிருந்து 40 கிலோமீட்டர்கள் தூரத்தில்தானே இருந்தபோது, அந்தக் காடுகளினூடே சுற்றி வளைந்து வளைந்து 140 கிலோமீட்டர் செல்ல வேண்டியதாயிற்று! அடிக்கடி மணிக்கு 5 கிலோமீட்டர்கள் மாத்திரமேயான ஒரு வேகத்தில் மூன்று நாட்களும் இரண்டு இரவுகளும் எடுத்த, ஜெனிட்சாவிலிருந்து சரஜெவோ வழியாக யாப்லனிட்சாவுக்குச் சென்ற, இந்த ஊர்திப்பயணத்தை நாங்கள் ஒருபோதும் மறக்கமாட்டோம். இந்தச் “சாலை” இராணுவப் படை ஊர்திகளால் தேய்ந்து கரடுமுரடாக்கப்பட்ட ஒரு பாதையாக இருந்தது. அச்சுறுத்தும் பாறைகள்மீதும் பள்ளங்களிலும் நாங்கள் ஊர்தியை ஓட்டிச் சென்றோம். விளக்கொளி இல்லாமல் அடிக்கடி ஓட்ட வேண்டியிருந்தது. இரண்டு சந்தர்ப்பங்களில் எங்கள் ஊர்திகள் பயங்கர குன்றுகளின்கீழ் வழுக்கி விழவிருந்த நிலைக்குள்ளாகின. எங்கள் ஊர்தித்தொடரைப் பின்தொடர்ந்து வந்த படை ஊர்தி ஒன்று, ஒரு விநாடிக்குத்தானே அதன் விளக்கைப் பிரகாசிக்கச் செய்து உடனடியாகச் சுட்டது. சிலசமயங்களில் நாங்கள், சேதப்பட்டிருந்த பாலங்களைச் சரிப்படுத்தவும் சக்கர டயர்களைப் பழுதுபார்க்கவும் வேண்டியிருந்தது.
சரஜெவோவின் நகர்ப்புற எல்லைகளுக்கு வந்துசேர்ந்தபோது, பொறுப்பிலிருந்த படைத்தலைவருடன் பேசவேண்டுமெனக் கேட்டோம். காத்திருக்கையில், வீதியில் ஒரு பார ஊர்தி பத்துப் பிணங்களையும் ஒரு கோணிப்பை நிறைய தலைகளையும் சுமந்துசெல்வதை நாங்கள் கண்டோம். போர்வீரர்கள் அந்தப் பிணங்களை ஒப்புவிப்பதைப்பற்றிப் பேசி ஏற்பாடுசெய்து கொண்டிருந்தனர்—நிச்சயமாகவே விசாரமுண்டாக்குகிற காட்சி, போர் ஒழிந்துபோகும் அந்த நாளுக்காக ஆவலோடு ஏங்கும்படி எங்களைச் செய்வித்தது.—ஏசாயா 2:4.
காலை 10:00 மணியின்போது, அந்தப் படைத்தலைவருடனும் அவருடைய உயர் அதிகாரிகளுடனும், மெழுகுவர்த்தி ஒன்றின் ஒளி மாத்திரமே இருந்த ஓர் இருண்ட அறையில், பேசுவதற்கு எங்களில் ஒருவர் கடைசியாக அனுமதிக்கப்பட்டார்.
“நீங்கள் யார்?” என்று அந்தப் படைத்தலைவர் கேட்டார்.
“நாங்கள் யெகோவாவின் சாட்சிகள். சரஜெவோவிலிருக்கும் எங்கள் உடன் சாட்சிகளுக்கு உணவு கொண்டுசெல்ல விரும்புகிறோம்.”
“சரஜெவோவில் யெகோவாவின் சாட்சிகள் பலர் இருக்கின்றனரென்று உங்களுக்குத் தெரியுமா?”
“ஆம், அதனால்தான் நாங்கள் இங்கு வந்திருக்கிறோம்.”
பின்பு சாட்சி ஒருவரின் பெயரை அந்தப் படைத்தலைவர் குறிப்பிட்டார். “அவர் உங்களுக்குத் தெரியுமா?”
“ஆம், அவர் எங்களுடைய நண்பர்.”
“அவர் என் நண்பருங்கூட, நாங்கள் ஒன்றாகப் பள்ளிக்குச் சென்றோம். அவர் ஒரு சாட்சியாகிவிட்டதிலிருந்து நான் அவரை இன்னும் அதிகமாய் மதிக்கிறேன். அவர் உங்களுக்காக அதிகம் செய்திருக்கிறார். யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி தயவுசெய்து இன்னுமதிகம் எங்களுக்குச் சொல்லுங்கள்,” என்று அந்தப் படைத்தலைவர் சொன்னார்.
ஒரு மணிநேரம் நீடித்த உரையாடல் நிகழ்ந்தது. அதன்பின் ஒரு டஜனுக்கு மேற்பட்ட பத்திரிகைகளும் சிற்றேடுகளும் அளிக்கப்பட்டன. இரண்டாவதான ஒரு சந்திப்பின்பின்பு, அந்தத் துயர்த்தீர்ப்பு சரக்கை சரஜெவோவிலுள்ள சகோதரர்களிடம் ஒப்படைப்பதற்குத் தனிப்பட்ட ஏற்பாடுகளைச் செய்ய அந்தப் படைத்தலைவர் ஒப்புக்கொண்டார்.
இது பெரிய ஒரு பொறுப்புள்ள வேலையாயிருந்தது. சாட்சிகளல்லாதவர்கள் சிலரும் உட்பட, ஏறக்குறைய 30 ஆட்கள், ஒவ்வொன்றும் 27 கிலோகிராம்கள் எடையுள்ள பெரும் பொட்டலங்களை கடும் முயற்சியுடன் சுமந்துசென்றனர். இரண்டு வெவ்வேறு இரவுகளில், மாலை 8:00 மணியிலிருந்து காலை 5:00 மணி வரையாக—மொத்தம் 18 மணிநேரங்கள்—அவர்கள் உழைத்தனர். இந்தத் துயர்த்தீர்ப்பு முயற்சிகளால், தன் அயலார் அவ்வளவு அதிகமாய் உணர்ச்சிப் பொங்கியவர்களானதால் சகோதரரோடு அவர்களும் முழங்காற்படியிட்டு யெகோவாவுக்கு நன்றிசெலுத்தினரென ஒரு மூப்பர் சொன்னார்! நிச்சயமாகவே, அவர்களும் சிறிது உணவு பெற்றனர்.
ஏறக்குறைய 11,000 கிலோகிராம்கள் எடையளவான துயர்த்தீர்ப்பு சரக்குகளைப் பெற்றபோது நம்முடைய சகோதரரின் மகிழ்ச்சியைக் கற்பனை செய்து பாருங்கள்! நிலைமை மிக மோசமாயிருந்தது. உள்ளூரில் ஒரு கிலோகிராம் மாவு DM450-க்கும் DM1,000-க்கும் (ரூ. 8,700-க்கும் ரூ. 19,220-க்கும்) இடைப்பட்ட விலையுள்ளதாக இருந்தது. ஒரு கட்டு விறகு விலை சுமார் DM400 (ரூ. 7,700). மேலும் ஒரு லிட்டர் டீசல் எரிபொருளின் விலை DM30 (ரூ. 620) ஆகவிருந்தது.
வழியில் நாங்கள் எதிர்ப்பட்ட ஒவ்வொரு ஆபத்துக்கும் இப்பொழுது நாங்கள் பலனளிக்கப்பட்டதுபோல் இருந்தது. இந்தத் துயர்த்தீர்ப்பு சரக்குகளைப் பெற்றபோது நம் சகோதரருக்கு உண்டான மகிழ்ச்சியைச் சிந்தித்துப்பார்ப்பதில் நாங்கள் பெரும் அகமகிழ்ச்சியடைந்தோம். அது அவர்கள்—நாங்களும்கூட—ஒருபோதும் மறக்கமுடியாத ஓர் அனுபவம். ஆனால் இப்போது வீட்டுக்குத் திரும்பும் சவாலைப்பற்றிச் சிந்திக்க நாங்கள் தொடங்க வேண்டியதாயிருந்தது.
வீட்டுக்குத் திரும்புதல்
“நாங்கள் எந்த வழியில் திரும்பிச் செல்வது?” என்று அந்தப் படைத்தலைவரைக் கேட்டோம்.
“நீங்கள் வந்த வழியேதான்” என்று அவர் பதிலுரைத்தார்.
நாங்கள் களைப்புற்றிருந்தோம், எரிபொருள் சிறிதே மீந்திருந்தது, அவசரத்திற்கு உதவ மிகுதிப்படியான டயர்களும் இல்லை. மழைபெய்யத் தொடங்கிவிட்டது, சேற்றினூடே நாங்கள் பயணப்பட முடியாது. நாங்கள் தெற்கே பயணப்படலாமாவென படைத்தலைவரைக் கேட்டோம்.
“அங்கே கடும் போர்கள் நடந்துகொண்டிருக்கின்றன. ஒரு சுண்டெலியுங்கூட பத்திரமாய் நுழைந்துசெல்ல முடியாது” என்று அவர் சொன்னார். எனினும், சிறிது நேரத்திற்குப் பின்பு அவர் திரும்பச் சிந்தித்துப் பார்த்தார். “அதை முயற்சி செய்து பாருங்கள், இங்கே வந்துசேர்வதில் சித்திப்பெற்றீர்களே” என்று கூறினார்.
ஓர் ஊர்தியிலிருந்த எரிபொருளை மற்ற மூன்று ஊர்திகளில் பகிர்ந்து நிரப்பிவிட்டு, அதைப் பின்னால் விட்டுச் செல்ல வேண்டியிருந்தது. நள்ளிரவில் நாங்கள் புறப்பட்டு, மறுபடியுமாகக் காட்டுக்குள் ஓட்டிச் சென்றோம்.
திரும்பிச் செல்லும் எங்கள் பயணம் பிரச்சினைகள் இல்லாமல் இல்லை. நாங்கள் கடக்க வேண்டிய ஒரு பாலத்தை ஓரளவு வழியடைத்துக்கொண்டு, சரிந்து வீழ்ந்து கிடக்கும் இராணுவ ஊர்தி ஒன்றை எதிர்ப்பட்டோம். அதன் சக்கரங்கள் ஒன்றை மட்டுமே கழற்றியெடுக்கக் கூடுமானால் கடந்து செல்ல போதிய இடமிருக்குமெனக் கண்டோம்.
“அந்தச் சக்கரத்தை நாங்கள் கழற்றியெடுத்துவிட்டு நாங்கள் பாலத்தைக் கடந்துசென்ற பின்பு மறுபடியுமாக அதைப் பொருத்தி வைக்கலாமா?” என்று, போர்க்கலம் அணிந்த போர்வீரன் ஒருவனைக் கேட்டோம்.
“அந்தச் சக்கரத்தை நீங்கள் தொட்டால், செய்வதற்கு என் துப்பாக்கிக்கு வேலையிருக்கும்” என்று தன் துப்பாக்கியைக் குறிபார்க்க வைத்துக்கொண்டு சொன்னான்.
சிறிது காப்பி தயாரித்து அந்தப் போர்வீரனுக்கு ஒரு குவளை அளிப்பது மேம்பட்டதென்று நாங்கள் நினைத்தோம். ஜாக்ரெப்பில் நடந்த ஒன்றைப்போன்ற, 1991-ன் சர்வதேச மாநாடுகளைப்பற்றி, சில மணிநேரங்களாக அவனுக்குச் சொல்லிக்கொண்டிருந்தோம். அதற்குப் பின், அவனுடைய எதிர்ப்பு மனப்பான்மை சாந்தமாகியது, அந்தச் சக்கரத்தைக் கழற்றுவதற்கு எங்களை அனுமதித்தான்.
யாப்லெனிட்ஸாவில், நாங்கள் பயணப்பட விரும்பின வழியைப்பற்றி படைத்தலைவர் ஒருவருடன் எங்களில் ஒருவர் பேசினார். தன் செவிகேட்பதை அவர் நம்ப முடியவில்லை. “நெரேட்வா பள்ளத்தாக்கினூடேவா நீங்கள் செல்ல விரும்புகிறீர்கள்?” என்றார்.
விளங்கிக்கொள்ளத்தக்கதாகவே அவர் அதிர்ச்சியுற்றார். நெரேட்வா பள்ளத்தாக்கின் மலைச்சரிவுகளை வெவ்வேறுபட்ட படைகள் கைப்பற்றியிருக்கின்றன. அவர்கள் அடிக்கடி ஒருவரையொருவர் சுட்டுக்கொண்டிருக்கின்றனர். ஏறக்குறைய 16 கிலோமீட்டர்களுக்கு அந்தப் பாதை அபாயகரமாயுள்ளது. “அது அந்த வகையில் உள்ளது, எனினும் நீங்கள் அதனூடே செல்ல விரும்புகிறீர்களா?” என்று அந்தப் படைத்தலைவர் சொன்னார்.
காரியத்தைச் சிந்தித்துப் பார்த்தப் பின்பு, நாங்கள் போகலாம்—ஆனால் அதிகாரிகள் துணையாகச் சென்றால் மாத்திரமே அவ்வாறு செய்யலாமென படைத்தலைவர் கூறினார். எனினும், இந்த அதிகாரிகள் எங்களுடன் செல்ல மனமற்றுத் தயங்கினர்! முடிவில், அந்த அடுத்தப் பக்கத்தோடு தொடர்புகொண்டு, நாங்கள் கடந்துசெல்லலாமென்பதை அறிவிக்கும்படி மட்டுமே நாங்கள் கேட்டோம். அடுத்தநாள் காலையில் வழித்துணைக் காப்பாளர் இல்லாமலே நாங்கள் கடந்துசெல்வோம்.
நாங்கள் எங்களுடைய பார வண்டிகள்மீது, மனிதாபிமான உதவிப்பொருட்கள் கொண்டுசெல்லுபவை என்பதாக பெரிய எழுத்துக்களால் எழுதியிருந்தோம். ஒரு ஜெபம் செய்தபிறகு, நாங்கள் அந்தப் பள்ளத்தாக்கின் வழியாக ஓட்டிச்சென்றோம். துப்பாக்கிக் குண்டுகள் வெடித்தால், நாங்கள் எங்களுடைய வேகத்தை அதிகரித்து சந்தேகத்தை உருவாக்க மாட்டோம் என்று நாங்கள் ஒத்துக்கொண்டிருந்தோம்.
நாங்கள் பாலத்தைக் கடந்து நதியின் மறுபக்கத்தில் சென்று அடுத்தப் பள்ளத்தாக்கினூடே மிருகப் பிணங்களையும் தகர்ந்துகிடந்த ஊர்திகளையும் பீரங்கி வண்டிகளையும் கடந்து, தொடர்ந்து பயணப்பட்டோம். திடீரென்று, நாங்கள் கடந்துசெல்ல முடியாதபடி, சுரங்கவெடிகள் வீதியில் கிடப்பதைக் கவனித்தோம். ஊர்தியின் எச்சரிக்கை ஒலிக்கருவியை நாங்கள் ஒலித்தோம். ஒரு பாறையின் பின்னிருந்து போர்வீரர்கள் இருவர் எட்டிப் பார்க்கும் வரையில் ஒலித்தோம். “நீங்கள் யார்? உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று அவர்கள் அதிகாரத்தோடு கேட்டனர்.
எங்களை அடையாளம் காட்டினபின்பு, அந்த வீதியிலிருந்தவற்றை ஒதுக்கி நாங்கள் செல்ல இடமளிப்பார்களாவெனக் கேட்டோம். அவர்கள் அதற்கு ஒப்புக்கொண்டார்கள்.
அந்தப் போர்வீரர் எங்களைக் கண்டதில் ஆச்சரியப்பட்டனர். அவர்கள் தங்கள் மறைவிடங்களிலிருந்து மெள்ள வெளிவந்து, தங்கள் துப்பாக்கிகளை எங்கள்மீது நேரே குறிபார்த்திருக்கும்படி வைத்துக்கொண்டு ஊர்தியை அணுகினர். நாங்கள் எங்கள் அனுமதி தாள்களையும் அவற்றோடுகூட உரிமையளிப்புச் சான்று தகடுகளையும் காட்டினோம். போர்முனையினூடே நாங்கள் ஊர்திகளை ஓட்டிவந்தபோது, இவற்றைப் பாதுகாப்பு காரணங்களினிமித்தம் கழற்றிவைத்திருந்தோம்.
“ஒருவரும் உங்களை எதிர்பார்க்கவில்லை. நீங்கள் எவ்வாறு செல்ல முடியும்?” என்று ஒரு போர்வீரன் கூறினான்.
எங்கள் வேண்டுகோளுக்கு மாறாக, இந்த எல்லைக்காவலிலிருந்த ஒருவருக்கும் நாங்கள் வருவதைப்பற்றி தகவல் அளிக்கப்படவில்லை! அந்த அதிகாரி மேலும் தொடர்ந்து: “எங்கள் துப்பாக்கிக் குதிரைகள் பின்னிழுக்கப்பட்டிருந்தன, நாங்கள் சுடத் தொடங்கவிருந்தோம்” என்று கூறினார்.
அவர்கள் ஏன் அவ்வாறு செய்யவில்லை என்று கேட்டோம்.
“எனக்குத் தெரியவில்லை. உங்கள் விதியாக இருக்குமென்று நான் நம்புகிறேன். ஆனால் நாங்கள் எங்கள் தொலைநோக்காடிகளின் மூலமாய் உங்களை நோக்கினபோது, ‘மனிதாபிமான உதவிப்பொருட்கள்’ என்று எழுதியிருந்ததைக் கண்டோம், உங்களை என்ன செய்வதென்று எங்களுக்குத் தெரியவில்லை. ஆகவே நீங்கள் பத்திரமாய் வந்து சேர்ந்தீர்கள்.” பின்னால், யெகோவாவின் பாதுகாப்புக்காக ஜெபத்தில் அவருக்கு இருதயப்பூர்வமான நன்றிசெலுத்தினோம்.
அவர்களுடைய சூழ்நிலைமைகள் கடுமையாக இருந்தபோதிலும், பாஸ்னியாவிலுள்ள நம்முடைய சகோதர சகோதரிகளின் மனப்பான்மை எழுப்புதலைத் தருவதாக உள்ளது. தாங்கள் வைத்திருந்த பொருளுடைமைகளையும் விசுவாசம் மற்றும் உற்சாகமளிக்கும் அநேக வார்த்தைகளையும் பகிர்ந்துகொள்கின்றனர். யெனீட்ஸாவில், 2 விசேஷ பயனியர்களும் 11 துணைப்பயனியர்களும், புதிதாக முழுக்காட்டப்பட்ட 14 பேரும் உட்பட 40 சுறுசுறுப்பான சாட்சிகள் உள்ளனர். சரஜெவோ நகரத்தில் இன்னும் இருந்துவரும் 65 சாட்சிகளும் 4 துணைப்பயனியர்களும் 134 பைபிள் படிப்புகளை நடத்துகின்றனர். சாட்சிகள் கடவுளுடைய ராஜ்யத்தின் இந்த நற்செய்தியைப்பற்றி மற்றவர்களிடம் பேசுவதில் ஒவ்வொரு மாதமும் சராசரி 20 மணிநேரங்களைச் செலவிடுகின்றனர்.
மெய்யாகவே, யெகோவாவின் சாட்சிகள் உலகளாவிய விசுவாசிகளின் ஒரு குடும்பமாக அமைகின்றனர். விசுவாசத்தில் தங்களுக்கு உறவினராயிருப்போருக்கு—தாங்கள் முன்னொருபோதும் சந்திக்காதவர்களுக்குங்கூட—நன்மை செய்வதற்குத் தங்கள் உயிரையும் மனப்பூர்வமாய் ஆபத்தில் வைக்கின்றனர். ஏன்? ஏனெனில் அவர்கள் அவர்களை நேசிக்கிறார்கள். இயேசு கிறிஸ்து இவ்வாறு சொன்னார்: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.” (யோவான் 13:35) பாஸ்னியாவிலுள்ள நம் விசுவாசிகளின் குடும்பத்தினுடைய காரியத்தில் நிச்சயமாகவே இவ்வாறு இருந்தது.
[பக்கம் 24-ன் வரைப்படம்/படங்கள்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
ஆஸ்திரியா
ஸ்லோவெனியா
ஹங்கேரி
க்ரோஷியா
பாஸ்னியா
செர்பியா
ட்ராவ்நிக்
ஸெனிக்கா
சரஜெவோ
ஏட்ரியாடிக் கடல்
[படங்கள்]
பாஸ்னியாவுக்கும் ஹெர்சிகோவினாவுக்கும் உதவிப்பொருட்களை கொண்டுசெல்லுதல்
[பக்கம் 26-ன் படம்]
கவிழ்ந்துபோன பாரவண்டியை அப்புறத்திற்கு கொஞ்சங்கொஞ்சமாக நகர்த்துதல்