நம் ருவாண்டா சகோதரர்களின் தைரியமிக்க விசுவாசம்
ஆப்பிரிக்க நாடாகிய ருவாண்டாவில் 1994-ன் தொடக்கத்தில், பேரளவான படுகொலைகள் நடந்ததைப்பற்றிய அறிக்கைகள் வந்துகொண்டிருக்கையில் இந்த உலகம் அதிர்ச்சியுற்றது. கொடுமை மிகுந்த உள்நாட்டுக் கலகம் திடீரென எழும்பியிருந்தது—நூற்றாண்டுகள் கொண்டிருந்த பகைமையின் உச்சநிலை.
சட்டமும் ஒழுங்கும் முற்றிலுமாக தகர்ந்துபோனதை எதிர்ப்பட்டவர்களாக, ருவாண்டாவிலிருந்த 2,000-த்துக்கு மேற்பட்ட யெகோவாவின் சாட்சிகள் தங்கள் உயிருக்காகத் தப்பியோடும்படி வற்புறுத்தப்பட்ட நிலைக்குள்ளானார்கள். ஏறக்குறைய 1,300 பேர் அருகிலுள்ள ஜயரிலும் டான்ஜானியாவிலுமுள்ள அகதி முகாம்களில் புகலிடத்தைக் கண்டடைந்தனர், ஆனால் சிலர் சரியான நேரத்தில் தப்பிக்கொள்ள முடியாமல் போயிற்று. நம்முடைய சகோதரரிலும் சகோதரிகளிலும் ஏறக்குறைய 400 பேர்—நிச்சயமாகவே எல்லாரும் பொதுமக்களாயிருந்த பெரியோரும் பிள்ளைகளும்—அந்தப் பயித்திய வன்முறையில் மாண்டனரென்று அறிவிப்பதில் நாங்கள் வருந்துகிறோம். உலகம் முழுவதிலுமிருக்கும் கிறிஸ்தவர்கள், உத்தமத்தைக் காத்த இந்தத் தைரியமுள்ளவர்களை இழந்ததன்பேரில் துக்கித்து, உயிர்த்தெழுதலைப்பற்றிய பைபிளின் வாக்கில் ஆறுதலடைகின்றனர்.—யோவான் 11:25.
தப்பிப்பிழைத்த ருவாண்டா நாட்டு சகோதரர்களும் சகோதரிகளும் எவ்வாறு இருந்தனர்? காரியங்களை நேரடியாகக் கண்டறியும்படி மூப்பர்கள் பல நாடுகளிலிருந்து அனுப்பப்பட்டனர். ருவாண்டா சகோதரர்கள் அந்த நிலைமையை “மிகுந்த பெருந்தன்மையுடனும் தைரியத்துடனும்” எதிர்ப்பட்டார்கள் என்று ஓர் அறிக்கை சொன்னது. உதாரணமாக, அந்தச் சகோதரர்கள் முதலாவதாகக் கேட்டவற்றில் ஒன்று பைபிள் புத்தகங்களாகும். ‘பல காரியங்கள் அவர்களுக்கு மிக அவசரமாய்த் தேவைப்பட்ட போதிலும், பொருளுதவியைப் பார்க்கிலும் ஆவிக்குரிய உணவைப் பெறுவதைப்பற்றியே அவர்கள் அதிக அக்கறையுடையவர்களாகத் தோன்றினர்’ என்று அந்த அறிக்கை முடிக்கிறது. அந்த முகாம்களில் நிலைமைகள் அலங்கோலமாக இருக்கிறபோதிலும், ‘நம்முடைய சகோதரர் வாழும் இடமே மிக சுத்தமானதாக உள்ளது.’
உணவு, போர்வைகள், உடைகள், புதைமிதிகள் மற்றும் மருந்துகள் வாங்குவதற்கு தி உவாட்ச் டவர் சொஸையிட்டி பணம் கிடைக்கக்கூடியதாக ஏற்பாடு செய்துள்ளது. பிரான்ஸிலுள்ள நம் சகோதரர்கள் தாராளமாய் உதவியளித்தனர். ஜூன் தொடக்கத்திற்குள்ளாக, தேவையிலிருந்த நம் ருவாண்டா சகோதரர்களுக்கு ஏறக்குறைய இரண்டு டன்கள் பொருளுதவிகள் கப்பலில் அனுப்பப்பட்டிருந்தன.
இந்தச் சூழ்நிலைமைகள் சிறந்த சாட்சியில் பலனடைந்தனவென்பது ஆச்சரியமில்லை. நம் ருவாண்டா சகோதரர்கள், உடன்சாட்சிகளிடமிருந்து இத்தகைய உதவியையும் ஆதரவையும் பெற்ற இந்தக் கண்கூடான நிகழ்ச்சி, பார்த்துக்கொண்டிருந்தோரின் உள்ளத்தைத் தொட்டது. இந்த உதவியை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் முடிந்தது. அந்த முகாம்களில் தங்கள் மத உறுப்பினரால் சந்தித்துக் கவனிக்கப்பட்டவர்கள் யெகோவாவின் சாட்சிகள் மாத்திரமே என்று சிலர் குறிப்பிட்டனர்!
நம் ருவாண்டா நாட்டு சகோதரரின் இந்த நெருக்கடிநிலையானது, இந்தக் “கடைசிநாட்களில்” மனிதர் “கொடுமையுள்ளவர்களாயும்,” “வன்செயலாளராயும்” இருப்பார்கள் என்பதை நமக்கு நினைப்பூட்டுகிறது. (2 தீமோத்தேயு 3:1-5, டுடேஸ் இங்லிஷ் வர்ஷன்) யெகோவா தம்முடைய ஜனத்திற்கு சரீர ஆபத்துக்களிலிருந்து அற்புதமான பாதுகாப்பை வாக்களிக்காத போதிலும், அவர்களுடைய ஆவிக்குரியத் தன்மையையும் தம்மோடு கொண்டுள்ள உறவையும் பாதுகாப்பதற்கு வாக்களிக்கிறார். மேலும் இப்போது சாகிறவர்களைக் கிறிஸ்துவின் ஆயிர ஆண்டு ஆட்சியின்போது உயிர்த்தெழுப்புவாரென்றும் வாக்களிக்கிறார். (சங்கீதம் 91:1-10) தப்பிப்பிழைத்திருக்கும் நம் ருவாண்டா நாட்டு சகோதரரை இந்த இக்கட்டான காலத்தின்போது யெகோவா ஆதரித்துத் தாங்கி உதவிசெய்யும்படி அவர்கள் சார்பாக நம்முடைய ஜெபங்கள் தொடர்ந்து செலுத்தப்பட்டு வருவதாக.—சங்கீதம் 46:1.