தேவராஜ்ய நூலகம் ஒன்றை ஒழுங்கமைப்பது எவ்வாறு
அறிவுக்கூர்மையுள்ள ஸ்பானிய சிறு பெண் ஷெரெசேடா, நான்கு வயதானவளாக இருந்தபோது, அவளுடைய ஆசிரியை “கிறிஸ்மஸ் தாத்தா” படங்களுக்கு வர்ணம் பூசப் போவதாக வகுப்பாரிடம் சொன்னார். உடனடியாக, ஷெரெசேடா தன்னைச் சேர்க்காது விடும்படி கேட்டாள். அதைச் செய்ய தன் மனச்சாட்சி அனுமதிக்காதென்று அவள் விளக்கம் கூறினாள்.
இந்த மறுப்பின்பேரில் ஆச்சரியப்பட்டு, அந்த ஆசிரியை அவளிடம், அது ஒரு பொம்மையின் படத்திற்கு வர்ணம் பூசுவதுபோல் மாத்திரமே இருக்கும் அதில் தவறு எதுவும் இல்லை என்று அவளிடம் சொன்னாள். ஷெரெசேடா இவ்வாறு பதிலளித்தாள்: “அது ஒரு பொம்மையாக மாத்திரமே இருக்கிறதென்றால், நீங்கள் அனுமதித்தால் ஒரு பொம்மையை நானே வரைந்துகொள்வதை மேலானதாகத் தெரிந்துகொள்வேன்” என்று பதில் சொன்னாள்.
மற்றொரு சந்தர்ப்பத்தில் அந்த வகுப்பு தேசீயக் கொடிக்கு வர்ணம் பூசும்படி சொல்லப்பட்டது. மறுபடியும் ஒரு முறையாக ஷெரெசேடா தான் வேறு எதையாவது செய்யலாமாவெனக் கேட்டாள். அதற்கு விளக்கம் சொல்பவளாக, அவள் தன் ஆசிரியைக்கு, சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவின் கதையைச் சொன்னாள்.—தானியேல் 3:1-28.
சிறிது காலத்துக்குப் பின் அந்த ஆசிரியைத் தன் ஆச்சரியத்தை வெளிப்படுத்திக் கூறுவதற்கு ஷெரெசேடாவின் தாயினிடம் தொலைபேசியின்மூலம் பேசினாள். “உங்கள் மகள் பல சந்தர்ப்பங்களில் என்னிடம் தன் மனச்சாட்சியைப்பற்றிப் பேசினாள். அதைக் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? அவள் வயது சிறுமி, தன் மனச்சாட்சி ஏன் தன்னைத் தொந்தரவுபடுத்துகிறதென்று எனக்கு விளக்குவதை! பாருங்கள், அவளுக்கு நீங்கள் கற்பிப்பவற்றை நான் ஒப்புக்கொள்வதில்லை, ஆனால் நீங்கள் வெற்றிபெறுகிறீர்களென்று நான் உங்களுக்கு உறுதிகூறுகிறேன். உங்கள் மகளை நான் போற்றி மதிக்கிறேன் என்று நீங்கள் தெரிந்துகொள்ளும்படி விரும்புகிறேன்.”
நான்கு வயது சிறுமி பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட ஒரு மனச்சாட்சியை எவ்வாறு அடையக்கூடும்? ஷெரெசேடா தன் படுக்கை அறையில், தன் சொந்த தேவராஜ்ய நூலகத்தை உடையவளாக இருக்கிறாள் என்று அவளுடைய தாய் மரீனா விளக்குகிறாள். அந்த நூலகத்தில் அவள் படித்துக் கோடிட்டிருக்கும் அவளுடைய சொந்த காவற்கோபுர பிரதிகள், பிரசங்கிப்பதற்குத் தேவைப்படும் புத்தகங்கள், மற்றும் அவள் பிறந்ததிலிருந்து வெளியிடப்பட்ட உவாட்ச்டவர் சங்கத்தின் பிரசுரங்கள் யாவும் அடங்கியிருக்கின்றன. அவளுடைய நூலகத்திலுள்ள அவளுக்கு மிகப் பிரியமான பொருள் என்னுடைய பைபிள் கதை புத்தகத்தின் ஆடியோடேப் ஆகும். இதை அவள் ஒவ்வொரு இரவும் கேட்டுக்கொண்டிருக்கையில் தன் சொந்தப் பிரதியில் அதோடு சேர்ந்து வாசித்துக்கொண்டும் இருப்பாள். இந்த பைபிள் விவரங்களே மேல் குறிப்பிட்ட தீர்மானங்களைச் செய்ய அவளுக்கு உதவிசெய்தன.
நல்ல முறையில் ஒழுங்கமைந்த தேவராஜ்ய நூலகம் உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் உதவிசெய்யக் கூடுமா? வீட்டு நூலகம் ஏன் தேவைப்படுகிறது?
“ஒரு நூலகம் ஆடம்பரப் பொருளல்ல”
“ஒரு நூலகம் ஆடம்பரப் பொருளல்ல, ஆனால் வாழ்க்கையின் தேவைகளில் ஒன்றாகும்” என்று ஹென்ரி உவார்ட் பீச்சர் சொன்னார். சந்தேகமில்லாமல் பெரும்பாலும் நாமெல்லாரும் ‘வாழ்க்கையின் தேவைகளான’ இவற்றில் ஒன்றை, நம்மையறியாமலே உடையோராக இருக்கிறோம். எவ்வாறு? நம்மிடம் பைபிளைத் தவிர அதிகம் எதுவும் இல்லை என்றாலுங்கூட, ஒருவகையான நூலகத்தைச் சொந்தமாக உடையோராக இருக்கிறோம்.
பைபிள் உண்மையில், எல்லாவற்றிற்கும் மேம்பட்ட தேவராஜ்ய நூலகமான ஒன்றாக உள்ளது. பைபிள் என்று நாம் அழைக்கும் தேவாவியால் ஏவப்பட்ட புத்தகங்களின் முழு தொகுப்பையும் விவரிப்பதற்கு, நான்காம் நூற்றாண்டில், ஜெரோம், பிப்ளியோதீக்கா டிவைனா (தேவ நூலகம்) என்ற லத்தீன் சொற்றொடரைப் புதிதாக உண்டுபண்ணினார். நமக்கு நடைமுறையில் பயனுள்ள உதவியையும் போதனையும் வழிநடத்துதலையும் அளிப்பதற்கு இந்தப் பரிசுத்த நூலகத்தை யெகோவா நமக்கு அளித்திருக்கிறார். இதைச் சிறிய ஒரு காரியமாக நாம் ஒருபோதும் கருதக்கூடாது. முழு பைபிளையும் நாம் கொண்டிருப்பதுதானே, சென்ற காலங்களில் கடவுளுடைய ஊழியர்களில் பெரும்பான்மையர் கொண்டிருந்ததைப் பார்க்கிலும் அதிக விரிவான நூலகத்தை நாம் கொண்டுள்ளோமெனக் குறிக்கிறது.
மிக விலையுள்ள கையெழுத்துப் பிரதிகள் மாத்திரமே கிடைக்கக்கூடியவையாக இருந்தபோது ஒருசில தனி வீடுகளே முழு பைபிள் ஒன்றை வைத்திருப்பதாகப் பெருமை பாராட்டக்கூடியவையாயிருந்தன. பவுல், ரோமில் தான் கடைசியாகச் சிறைப்படுத்தப்பட்டிருந்த சமயத்தில் வேதவாக்கியங்களைப் படிக்க விரும்பினபோது, சின்ன ஆசியாவிலிருந்து சில சுருள்களை—பெரும்பாலும் எபிரெய வாக்கியங்களின் பகுதிகளைக் கொண்டுவரும்படி தீமோத்தேயுவை அவர் கேட்கவேண்டியதாக இருந்தது. (2 தீமோத்தேயு 4:13) எனினும், ஜெபாலயங்களில் ஒரு தொகுப்பு சுருள்கள் வைக்கப்பட்டிருந்தன, இயேசு கிறிஸ்துவும் அப்போஸ்தலன் பவுலும் தங்கள் பிரசங்க ஊழியத்தில் இந்த நூலகங்களைப் பயன்படுத்தினர். (லூக்கா 4:15-17; அப்போஸ்தலர் 17:1-3) மகிழ்ச்சியுண்டாக, வேதவாக்கியங்கள் இப்போது, முதல் நூற்றாண்டில் அவை இருந்ததைப் பார்க்கிலும் மிக அதிகமாய்க் கிடைக்கக்கூடியவையாக இருக்கின்றன.
அச்சாலை கண்டுபிடிப்புக்காக நன்றி. இன்று ஏறக்குறைய கடவுளுடைய ஊழியர்கள் எல்லாருமே—அவர்களுடைய மொழி என்னவாக இருந்தாலும்—முழு பைபிளை மட்டான விலைக்கு வாங்க முடியும். இந்தப் பரிசுத்த ‘நூலகத்தை’ விரிவாக்கும் தனிப்பட்ட வாய்ப்பும் நமக்கு இருக்கிறது. ஒரு நூற்றாண்டுக்கு மேலாக, “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” ஏற்ற வேளையில் ஆவிக்குரிய உணவை அளிப்பதில் சுறுசுறுப்பாய் இருந்துவந்திருக்கிறது.—மத்தேயு 24:45-47, NW.
நம் சொந்த தேவராஜ்ய நூலகத்தை நாம் அமைக்கவில்லையென்றால் இந்த மதிப்புவாய்ந்த தகவலை நாம் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள பெரும்பாலும் முடியாது. இதை எவ்வாறு செய்யலாம்? நிச்சயமாகவே, முதல் படியானது, அத்தகைய நூலகத்திற்குத் தேவைப்படும் புத்தகங்களைச் சேகரிப்பதாகும். இந்த முயற்சி தக்க பயனுள்ளது, ஏனெனில், பிரச்சினைகளைக் கையாளுவதற்கும் பைபிள் கேள்விகளுக்குப் பதிலளிக்கவும் நமக்குத் தேவைப்படும் சரிநுட்பமான தகவலை உடனடியாகப் பெறக்கூடும்படி இது உதவிசெய்யும்.
என்ன புத்தகங்கள் எனக்குத் தேவை?
உங்கள் மணவாழ்க்கையில் பேச்சுத்தொடர்பு பிரச்சினையைத் தீர்ப்பது எவ்வாறென, அல்லது போதைப்பொருள் துர்ப்பழக்கத்தில் ஈடுபடாதிருக்க உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் உதவிசெய்வது எவ்வாறென எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா? மனச்சோர்வால் துன்பப்படும் நண்பர் ஒருவருக்கு நீங்கள் எவ்வாறு உதவிசெய்யக் கூடும்? கடவுள் இருக்கிறார் என்பதற்கும் அக்கிரமத்தை அவர் ஏன் அனுமதிக்கிறார் என்பதற்கும் என்ன அத்தாட்சிகள் உள்ளனவென்று நீங்கள் தெளிவாக விளக்கிக்கூற முடியுமா? வெளிப்படுத்துதல் 17-ம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் சிவப்புநிறமுள்ள அந்த மிருகம் எதற்கு அறிகுறியாக உள்ளது?
போதிய முறையான தேவராஜ்ய நூலகம் ஒன்று உங்களுக்கு இருந்தால், இவற்றிற்கும் எண்ணற்ற மற்ற கேள்விகளுக்கும் பதிலளிக்க முடியும். வேதப்பூர்வ முழு தொகுதியான விஷயங்களின்பேரில் ஆராய்ந்து தகவல் அளிக்கும் புத்தகங்களை, புரொஷூர்களை, மற்றும் பத்திரிகைக் கட்டுரைகளைச் சங்கம் பிரசுரித்துள்ளது. மேலுமாக இந்த இலக்கியம், குடும்பக் காரியங்களைப் பற்றி கலந்தாராய்கிறது, கடவுளிலும் பைபிளிலும் நம் விசுவாசத்தைக் கட்டியெழுப்புகிறது, நம் பிரசங்கிக்கும் திறமைகளை முன்னேற்ற நமக்கு உதவிசெய்கிறது, மற்றும் பைபிள் தீர்க்கதரிசனங்களைப் புரிந்துகொள்ளவும் நமக்கு உதவிசெய்கிறது.
கடந்த 20 ஆண்டுகளின்போது சங்கத்தால் அச்சடிக்கப்பட்ட பிரசுரங்களில் பெரும்பான்மையானவை இன்னும் கிடைக்கக்கூடியவையாக உள்ளன. சமீபத்தில்தானே நீங்கள் சத்தியத்துக்குள் வந்திருந்தால், உங்கள் மொழியில் கிடைக்கக்கூடிய அத்தகைய புத்தகங்களையெல்லாம் வாங்கிவைப்பது பயனுள்ளதாயிருக்கும். பவுண்டு செய்யப்பட்ட கடந்த ஆண்டுகளின் காவற்கோபுர தொகுப்புகள் உங்கள் மொழியில் ஒருவேளை கிடைக்கக்கூடியவையாக இருக்கலாம். வேதவாக்கியங்களின்பேரில் உட்பார்வை (Insight on the Scriptures) மற்றும் விரிவான சொல்தொகுதி விளக்கப்பட்டியல் (Comprehensive Concordance) போன்ற முதன்மையான குறிப்புத்தரும் புத்தகங்கள், பல்வேறு மொழிகளிலும் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன. எனினும், இந்தப் புத்தகங்களை வாங்கி வைப்பது முதல் படி மாத்திரமேயாகும்.
உங்கள் நூலகத்தை ஒழுங்குபடுத்துங்கள்!
அந்தப் புத்தகம் உங்களிடம் ஏதோவொரு இடத்தில் இருக்கிறதென்று அறிந்திருப்பது ஒரு காரியம், ஆனால் உங்களுக்குத் தேவைப்படும் ஒன்றைக் கண்டுபிடிப்பது மற்றொரு காரியமாகும். நமக்குத் தேவைப்படும் குறிப்பு புத்தகத்திற்காகத் தேடுவதில் மிகுதியான நேரத்தை நாம் வீணாக்க வேண்டியிருந்தால், இந்தக் காரியத்தில் நாம் அக்கறையை இழந்துவிடுவோம். மறுசார்பில், வசதியான இடத்தில், நம்முடைய புத்தகங்கள் நன்றாய் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தால் நம் சொந்த ஆராய்ச்சி செய்வதற்கு இன்னுமதிகம் மனவிருப்பமுடையோராக இருப்போம்.
கூடுமானால், தேவராஜ்ய புத்தகங்களின் பெரும்பகுதியை ஒன்றாக ஓரிடத்தில் வைத்திருப்பது உதவியாயிருக்கிறது. புத்தக மாடங்களை ஏற்கெனவே செய்யப்பட்டதாக வாங்க நம்மால் இயலாதென்றால், அவற்றைப் பெரும்பாலும் கொஞ்ச விலைக்குச் செய்து வைக்கலாம். அவை அதிக இடம் எடுக்க வேண்டியதில்லை. எளிதாக எடுக்கக்கூடிய இடத்தில் நூலகம் இருப்பது முக்கியம். மேல்மாடி சிறு அறையில் சேகரித்து வைத்திருக்கும் புத்தகங்கள் வழக்கமாய் தூசிபடிந்துகொண்டிருக்குமே தவிர அதிக பயனுடையவையாக இரா.
அடுத்தப் படியானது அந்தப் புத்தகங்களை ஒழுங்குபடுத்துவதாகும். புத்தகங்களை அதனதன் பொருளுக்கேற்ற ஒழுங்கில் அடுக்குவதற்கு சிறிது நேரமே செலவிடுவது பயன்தருவதாயுள்ளது.
உங்கள் குடும்பத்தில் பெரும்பான்மையர் யெகோவாவின் சாட்சிகளாக இல்லையென்றால் என்ன செய்வது? உங்கள் விருப்பப்படி, ஒரு நூலகத்தை ஒழுங்குபடுத்த ஒருவேளை உங்களால் முடியாதென்றால், உங்கள் சொந்த அறையில், வேதப்பூர்வ பிரசுரங்கள் சிலவற்றையாவது கொண்டுள்ள ஒரு புத்தக மாடத்தை நீங்கள் வைத்திருக்கலாம்.
தேவராஜ்ய நூலகம் ஒன்று ஆவிக்குரியத்தன்மையைக் கட்டியெழுப்ப உதவிசெய்யக்கூடும்
நம்முடைய புத்தகங்களை ஒருமுறை ஒழுங்குசெய்து அமைத்தப் பின்பு, தகவல் கிடைக்கும் இடத்தைக் காண உதவிசெய்ய நமக்கு ஒரு ஒழுங்குமுறை தேவை. நம்முடைய ஞாபகசக்தி குறைவுபட்டதாக இருக்கலாம். நம்முடைய தேவராஜ்ய நூலகத்திலுள்ள ஒவ்வொரு புத்தகத்தின் பொருளடக்கத்துடனும் நாம் தனிப்பட்டவராகப் பழக்கப்படாதிருக்கலாம். இருப்பினும், அந்த நூலகத்திலுள்ள எல்லா தகவலும் உடனடியாகக் கிடைக்கக்கூடியதாயுள்ளது. நம்முடைய மொழியில் கிடைக்கக்கூடுமானால், உவாட்ச் டவர் பிரசுரங்களின் இன்டெக்ஸ் (Watch Tower Publications Index) ஏறக்குறைய எந்தப் பொருளின்பேரிலும் திட்டமான தகவலைக் கண்டடைய நமக்கு உதவியளிக்கக்கூடும்
விசேஷ பயனியராகவும் மூப்பராகவும் பல ஆண்டுகள் சேவித்திருக்கிற கூலியான், எல்லாரிலும் இளையவனான தன் மகனுக்கு, தனியே தானாகப் படிக்கக் கற்பிப்பதில் இந்த இன்டெக்ஸ் அருமதிப்புள்ளதாக இருக்கிறதென்று விளக்குகிறார். “ஏழு வயதான காய்ரோ, சமீபத்தில் ஒரு நாள் பள்ளியிலிருந்து விட்டுக்கு வந்து, ‘டாடி, டினோசார்களைப்பற்றி சொஸையிட்டி என்ன சொல்லியிருக்கிறது?’ என்று என்னைக் கேட்டான். நாங்கள் நேரடியாக இன்டெக்ஸிடம் சென்று ‘டினோசார்கள்’ என்ற சொல்லைத் தேடிப்பார்த்தோம். உடனடியாக அந்த விஷயத்தின்பேரில் ஓர் அவேக்! அட்டைத் தொடரை நாங்கள் கண்டோம். [பிப்ரவரி 8, 1990] அதே நாளில், கேய்ரோ அதை வாசிக்கத் தொடங்கினான். பெரும்பாலும் எல்லா விஷயத்தின்பேரிலும் எங்கள் தேவராஜ்ய நூலகம் பயனுள்ள தகவலைக் கொண்டுள்ளதென்று அவனுக்கு ஏற்கெனவே தெரிகிறது. நம்முடைய பிள்ளைகள் தேவராஜ்ய நூலகத்தை நன்கு பயன்படுத்தக் கற்றுக்கொள்கையில், ஆவிக்குரியப்பிரகாரமாக வளர அது அவர்களுக்கு உதவிசெய்கிறதென்று நான்தானே உறுதியாய் நம்புகிறேன். அவர்கள் சிந்தித்துப் பகுத்தறிய கற்றுக்கொள்கின்றனர், இன்னுமதிகமாக, தனிப்பட்ட படிப்பு மகிழ்ந்தனுபவிக்கத்தக்கதாக இருக்கக்கூடுமென அவர்கள் கண்டுபிடிக்கின்றனர்.”
தேவராஜ்ய நூலகத்தைப் பயன்படுத்துவதற்குப் பிள்ளைகளைப் பயிற்றுவிக்க, கூடிய சீக்கிரத்தில் நீங்கள் தொடங்க வேண்டுமென்று, தொடக்கத்தில் குறிப்பிட்ட ஷெரெசேடாவின் தகப்பன் ஃபாஸ்டோ நம்புகிறார். “இன்டெக்ஸைப் பயன்படுத்துவது எவ்வாறென்று, இப்பொழுது ஆறு வயதாயுள்ள ஷெரெசேடாவுக்கு நாங்கள் ஏற்கெனவே காட்டுகிறோம்” என்று அவர் விளக்குகிறார். “பூமிக்குரிய பரதீஸின் எதிர்பார்ப்பு அவள் மனதைக் கவர்ந்திருப்பதால், இன்டெக்ஸில் ‘பரதீஸ்’ என்ற சொல்லைக் காட்டி அதில் குறிப்பிடப்பட்ட உவாட்ச்டவர் கட்டுரைகளை எடுத்துப் பார்க்கத் தொடங்கினோம். பொதுவாக அந்தப் படங்களை மாத்திரமே நாங்கள் அவளுக்குக் காண்பிப்போம். இருப்பினும், இந்த முறைமையால், எங்கள் வீட்டு நூலகத்தில் தகவலைக் கண்டடைவதற்கு இன்டெக்ஸ் முக்கிய கருவி என்பதை அவள் கற்றுக்கொண்டாள். ஒரு நாள் ஈஸ்டர் கொண்டாட்டங்களைப்பற்றிய ஒரு கேள்வியுடன் அவள் பள்ளியிலிருந்து திரும்பிவந்தபோது அவள் அந்தக் குறிப்பைப் புரிந்துகொண்டாளென்று நாங்கள் அறிந்தோம். ‘இன்டெக்ஸில் ஒன்றை நாம் எடுத்துப் பார்க்கலாமா?’ என்று அவள் தன் தாயைக் கேட்டாள்.”
நம்முடைய வயது என்னவாக இருந்தாலும், “எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்” என்று பைபிள் நம்மை ஊக்குவிக்கிறது. (1 தெசலோனிக்கேயர் 5:21) இது வேதவாக்கியங்கள் சொல்வதை நாம் ஆராய்ந்து பார்க்கும்படி அவசியப்படுத்துகிறது. (அப்போஸ்தலர் 17:11) நன்றாய் ஒழுங்குபடுத்தப்பட்ட தேவராஜ்ய நூலகத்தை நாம் கொண்டிருந்தால், அத்தகைய ஆராய்ச்சி இன்பம் தருவதாயிருக்கும். ஒரு பேச்சை தயாரிக்க, ஒரு பிரச்சினையைக் கையாளுவதில் நடைமுறையான ஆலோசனையைக் காண, அல்லது அக்கறையூட்டும் தகவலைக் கண்டுபிடிக்க நம்முடைய நூலகத்தை நாம் வெற்றிகரமாய் பயன்படுத்தும் ஒவ்வொரு சமயமும், நம்முடைய நூலகத்தின் நடைமுறையான மதிப்பை நமக்கு அறிவுறுத்தும்.
ஷெரெசேடாவின் பெற்றோர் இவ்வாறு தெளிவாகக் குறிப்பிடுகின்றனர்: “கிறிஸ்தவ குடும்பம் ஒன்றில், தேவராஜ்ய நூலகம் திட்டமாகவே ஆடம்பரப் பொருள் அல்ல!”
[பக்கம் 30-ன் பெட்டி]
உங்கள் புத்தகங்களை நீங்கள் எவ்வாறு ஒழுங்குபடுத்தி அமைக்கலாம்?
உங்கள் புத்தகங்களை ஒழுங்குபடுத்தி அமைப்பதற்கு கண்டிப்பான விதிகள் எவையும் இல்லை. இருப்பினும், பொருளடக்கங்களுக்கேற்ப நீங்கள் ஒழுங்குபடுத்தக்கூடிய, பகுத்தறிவுக்குப் பொருத்தமான பின்வரும் பிரிவுகள் நீங்கள் பயன்படுத்தக்கூடிய ஒரு முறையாகும்.
1. பைபிள் பகுதிகள் சிலவற்றின் வசனவசனமான பகுத்தாய்வு அடங்கிய புத்தகங்கள்
(உதாரணங்கள்: எக்காலத்திலும் வாழந்தவருள் மிகப் பெரிய மனிதர், வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சநிலை சமீபம்!, “நான் யெகோவா என்று தேசங்கள் அறிந்துகொள்ளும்”—எவ்வாறு?, “உம்முடைய சித்தம் பூமியிலேயும் செய்யப்படுவதாக”)
2. குடும்ப வாழ்க்கை சம்பந்தப்பட்ட புத்தகங்கள்
(உதாரணங்கள்: உங்கள் குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியுள்ளதாக்குதல், இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள், என்னுடைய பைபிள் கதை புத்தகம்)
3. பைபிள்களும் துணையாதார புத்தகங்களும்
(உதாரணங்கள்: பரிசுத்த வேத வாக்கியங்களின் புதிய உலக மொழிபெயர்ப்பு—துணைக் குறிப்புகளுடன், மற்ற பைபிள்கள், உவாட்ச் டவர் பப்ளிக்கேஷன்ஸ் இன்டெக்ஸெஸ், காம்ப்ரிஹென்ஸிவ் கன்கார்டன்ஸ், வேதவாக்கியங்களின்பேரில் உட்பார்வை, தி கிங்டம் இன்டெர்லீனியர் டிரான்ஸ்லேஷன் ஆஃப் தி கிரீக் ஸ்க்ரிப்ச்சர்ஸ், ஒரு நல்ல அகராதி)
4. தற்போது சபை புத்தகப் படிப்பிலும் தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலும் பயன்படுத்தப்படும் புத்தகங்கள்
5. ஆடியோ காசட்டுகளும் வீடியோக்களும்
6.காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பவுண்டுசெய்யப்பட்ட தொகுப்புகள்
7. யெகோவாவின் சாட்சிகளின் சரித்திரம்
(உதாரணங்கள்: யெகோவாவின் சாட்சிகளின் வருடாந்தர புத்தகங்கள், யெகோவாவின் சாட்சிகள்—கடவுளுடைய ராஜ்யத்தின் அறிவிப்பாளர்)
8. நம்முடைய ஊழியத்தில் வழக்கமாய்ப் பயன்படுத்தும் புத்தகங்களும் சிற்றேடுகளும்
(உதாரணங்கள்: நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம், வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல், உயிர்—எவ்வாறு இங்கு வந்தது? பரிணாமத்தின்மூலமா படைப்பின்மூலமா?, மனிதவர்க்கம் கடவுளுக்காகத் தேடுதல், ஒரே உண்மையான கடவுளுடைய வணக்கத்தில் ஒன்றுபடுதல்)
[பக்கம் 31-ன் படம்]
ஷெரெசேடா ஏற்கெனவே ஒரு நல்ல பைபிள் மாணவியாகிவிட்டாள்
[பக்கம் 31-ன் படம்]
இளைஞனாக இருக்கிறபோதிலும், இந்தச் சிறுவன் தேவராஜ்ய நூலகம் ஒன்றைப் பயன்படுத்துகிறான்