பைபிள்—வாசிக்கவேண்டிய ஒரு புத்தகம்
பைபிளைப்பற்றி ஒருவர் பேசுகையில் உச்ச உயர்படிச் சொற்களே இல்லை. இது சரித்திரத்திலேயே மிகப் பரவலாக வினியோகிக்கப்பட்ட புத்தகமாகும். பைபிளானது மிகப் பழமையான, மிக அதிகளவில் மொழிபெயர்க்கப்பட்ட, மிக அதிகளவில் மேற்கோள் காட்டப்பட்ட, மிக அதிகளவில் செல்வாக்குச் செலுத்துகிற, மிக அதிகளவில் மதிக்கப்பட்ட புத்தகமாக இருக்கிறது. ஒருவேளை மிக அதிகமான வாதத்திற்குரிய புத்தகமும் அதுதான். மிக அதிகமான தடைகள், தீக்கிரையாகுதல்கள், கொடூரமான எதிர்ப்பு ஆகியவற்றை தப்பிப்பிழைத்திருக்கிற புத்தகமும் நிச்சயமாகவே அதுதான். இருப்பினும், இனிமேலும் பைபிளுக்குப் பொருத்திக்காட்ட முடியாத உச்ச உயர்படி ஒன்று இருக்கிறது என்பது வருந்தத்தக்கதாகும். உலகத்திலேயே மிகப் பரவலாக வாசிக்கப்படுகிற புத்தகம் என்பதாக இனிமேலும் அது எதிர்பார்க்கப்பட முடியாததாக இருக்கிறது.
வீட்டில் எங்கேயாவது ஓர் இடத்தில் மக்கள் ஒரு பைபிளை வைத்திருக்கலாம், ஆனால் உண்மையில் அதை வாசிக்க முடியாதளவிற்கு அதிக வேலையாயிருப்பதாக அநேகர் உணருகிறார்கள். வாசிப்பது ஒரு காலத்தில் மக்களால் விரும்பப்பட்ட ஒரு பொழுதுபோக்காக இருந்தது. என்றாலும், இப்பொழுது மிகப் பெரும்பாலானோர் டெலிவிஷன் பார்ப்பதிலோ வேறெதாவது காரியத்தைச் செய்வதிலோ தங்களுடைய ஓய்வு நேரத்தைச் செலவழிக்க விரும்புகிறார்கள். இன்னும் ஏதாவது வாசிப்பை செய்துவருபவர்கள் சாதாரணமாக சுலபமானதும் எளிதானதுமான ஒன்றை விரும்புகிறார்கள். பைபிளை வாசிப்பது கவனத்தை ஒருமுகப்படுத்துவதைத் தேவைப்படுத்துகிறது, பெரும்பாலான மக்கள் தாங்கள் வாசிப்பதில் இனிமேலும் ஆழமாக கவனத்தை ஒருமுகப்படுத்துவதில்லை.
இருப்பினும், நம்முடைய புத்தக அலமாரிகளில் வெறுமனே படுத்துக்கொண்டிருப்பதற்காக பைபிள் தப்பிப்பிழைக்கவில்லை. ஏன் அதைப் படிக்கவேண்டும் என்பதற்கு நல்ல காரணங்கள் இருக்கின்றன. அதைப் பற்றிய உண்மைகள் சிலவற்றை கவனியுங்கள்.
அது நிலைத்திருந்ததில் ஆச்சரியமேதுமில்லை!
“பைபிள்” என்ற பதம் “சிறு புத்தகங்கள்” என்று அர்த்தங்கொள்ளும் பிப்ளியா (bi·bliʹa) என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து வருகிறது. பைபிளானது அநேக புத்தகங்களினாலான ஒன்று என்பதை இது நமக்கு நினைப்பூட்டுகிறது—அவற்றில் சில மிகவும் சிறியவை அல்ல! அவை பதினாறு நூற்றாண்டுகளடங்கிய ஒரு காலப்பகுதியில் எழுதப்பட்டன. எழுத்தாளர்கள் மனிதர்கள்தான், ஆனால் உன்னத ஊற்றுமூலரினால் ஏவப்பட்டெழுதினார்கள். பைபிள் எழுத்தாளர் ஒருவர் சொன்னார்: “தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்தஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்.” (2 பேதுரு 1:21) வேதப்பூர்வமான தீர்க்கதரிசனத்தைக் குறித்ததில் எது உண்மையோ அதுவே பைபிளின் மீதிபாகத்தைக் குறித்ததிலும் உண்மையாய் இருக்கிறது. கடவுளால் ஏவப்பட்டெழுதப்பட்ட இந்தச் “சிறு புத்தகங்கள்,” யெகோவா தேவனுடைய உயர்ந்த நினைவுகளால் நிறைந்திருக்கின்றன. (ஏசாயா 55:9) இத்தனை நீண்டகாலத்திற்கு பைபிள் நிலைத்திருப்பதில் ஆச்சரியமேதுமில்லை!
கடவுளுடைய ஊழியர்களுக்கு, பைபிள் எப்பொழுதுமே மிக முக்கியமான புத்தகமாக இருந்திருக்கிறது. பைபிள் எழுத்தாளர்களில் ஒருவராக இருந்த அப்போஸ்தலன் பவுலோடு அவர்கள் ஒத்துப்போகிறார்கள். ‘வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் [ஏவப்பட்டெழுதப்பட்டதாகவும், NW] உபதேசத்திற்கு பிரயோஜனமுள்ளதாகவும் இருக்கிறது,’ என்று அவர் சொன்னார். (2 தீமோத்தேயு 3:16) மேற்சொன்னவற்றிற்கு ஏற்றவாறு, பைபிள் இன்று யெகோவாவின் சாட்சிகளுடைய விசுவாசத்திற்கான ஆதாரமாக இருக்கிறது. அவர்களுடைய கொள்கைகளை அது தீர்மானிக்கிறது, மேலும் அவர்களுடைய நடத்தையை ஆட்கொள்கிறது. ஒவ்வொருவரும் கடவுளுடைய வார்த்தையின் ஒரு பகுதியை ஒவ்வொரு நாளும் வாசித்து, அதில் அடங்கியுள்ள பொருள்களின்பேரில் போற்றுதலோடு தியானிக்கும்படியாக முழு இருதயத்தோடு அவர்கள் சிபாரிசுசெய்கிறார்கள்.—சங்கீதம் 1:1-3.
பைபிள் வாசிக்கும் பழக்கம்
வேதாகமங்களை வாசிக்கும் பழக்கம் கடந்தகாலத்தில் பிரயோஜனமுள்ளதாக இருந்திருக்கிறது. இஸ்ரவேல் ராஜாக்கள், இப்பொழுது பைபிளின் ஒரு முக்கிய பாகமாக இருக்கிற நியாயப்பிரமாணப் பிரதி ஒன்றை தங்களுக்காக எழுதி வைத்துக்கொள்ளும்படியும் தங்களுக்கான கடவுளுடைய சித்தத்தைப் பற்றிய தொடர்ச்சியான நினைப்பூட்டுதலாக அதை அனுதினமும் வாசிக்கும்படியும் கட்டளையிடப்பட்டார்கள். (உபாகமம் 17:18-20) இதைச் செய்யத் தவறியது அநேக ராஜாக்கள் வீழ்ச்சியடையும்படி செய்தது.
வேதாகமங்களைப் படிப்பதன் மதிப்பானது வயதுசென்ற தீர்க்கதரிசியாகிய தானியேலின் விஷயத்தில் விளக்கப்பட்டிருக்கிறது. தானியேல், தன்னுடைய நாளிலிருந்த பைபிளின் பாகங்களைத் தனிப்பட்ட விதமாக படித்ததன் காரணமாக, பாபிலோனில் நாடுகடத்தப்பட்டிருக்கையில், எரேமியாவினால் பதிவுசெய்யப்பட்ட முக்கியமான தீர்க்கதரிசனம் நிறைவேற்றப்படவிருந்தது என்பதை ‘புத்தகங்களால் அறிந்துகொள்ள’ முடிந்தது.—தானியேல் 9:2.
இயேசுவினுடைய பிறப்பின் சமயத்தில், “நீதியும் தேவபக்தியும் உள்ள” மனிதனாகிய சிமியோன், கிறிஸ்து அல்லது மேசியாவாக ஆகப்போகிறவரைக் காண்பதற்கு நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருந்தார். கிறிஸ்துவைப் பார்ப்பதற்கு முன்பாக தான் மரிக்கமாட்டார் என்பதாக சிமியோன் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தார். சிசுவாகிய இயேசுவை தன்னுடைய கைகளில் ஏந்திக்கொண்டிருக்கையில் ஏசாயா தீர்க்கதரிசனத்தை சிமியோன் குறிப்பிட்டதானது, தன்னுடைய நாளில் ஏற்கெனவே எழுதப்பட்டிருந்த பைபிள் புத்தகங்களைக் கருத்தாய் வாசிப்பவராக அவர் இருந்தார் என்பதைக் காண்பிக்கிறது.—லூக்கா 2:25-32; ஏசாயா 42:7.
முழுக்காட்டுபவனாகிய யோவான் பிரசங்கித்துவருகையில், மேசியாவை ‘ஜனங்கள் எதிர்பார்த்து இருந்தனர்.’ இது எதைக் குறிப்பிட்டு காட்டுகிறது? யூதர்களின் மத்தியிலிருந்த அநேகர் வேதாகமங்களில் பதிவுசெய்யப்பட்ட மேசியானிய தீர்க்கதரிசனங்களை அறிந்தவர்களாக இருந்தனர் என்பதை இது குறிப்பாகத் தெரிவிக்கிறது. (லூக்கா 3:15, NW) இது அக்கறைக்குரியது, ஏனென்றால் அந்நாட்களில் புத்தகங்கள் உடனடியாகக் கிடைக்காது. பைபிள் புத்தக பிரதிகள் சிரமேற்கொண்டு கையினால் எழுதப்படவேண்டியதாக இருந்தது, அதனால் அவை விலை உயர்ந்தவையாகவும் பெறுவதற்கு கடினமானவையாகவும் இருந்தன. அவற்றிலுள்ள பொருள்களை எவ்வாறு மக்கள் அறிந்துகொண்டார்கள்?
அநேக சந்தர்ப்பங்களில், வெளிப்படையான வாசிப்பின் (public reading) மூலமாகும். உதாரணமாக, சில குறிப்பிட்ட காலங்களில், கடவுளால் கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணம் முழுவதும் கூடிவந்திருந்த இஸ்ரவேலர்களுக்கு வாசிக்கப்படவேண்டும் என்று மோசே கட்டளையிட்டார். (உபாகமம் 31:10-13) பொ.ச. முதல் நூற்றாண்டிற்குள்ளாக, பைபிள் புத்தகங்களை வெளிப்படையாக வாசிப்பது மிகுந்தளவில் பரவியிருந்தது. “மோசேயின் ஆகமங்கள் ஓய்வுநாள்தோறும் ஜெபஆலயங்களில் வாசிக்கப்பட்டு வருகிறபடியால், பூர்வகாலந்தொடங்கிச் சகல பட்டணங்களிலும் அந்த ஆகமங்களைப் பிரசங்கிக்கிறவர்களும் உண்டே” என்று சீஷனாகிய யாக்கோபு குறிப்பிட்டார்.—அப்போஸ்தலர் 15:21.
இன்று, பைபிள் பிரதி ஒன்றை சொந்தமாக வைத்திருப்பது எளிதாக இருக்கிறது. இந்தச் ‘சிறு புத்தகங்களில்’ ஏதாகிலுமாவது, உலக மக்கள்தொகையில் 98 சதவீதமானவர்களுடைய மொழிகளில் கிடைக்கின்றன. இதனால், பைபிள் தங்களுக்கு எதைச் சொல்ல இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள பெரும்பாலானோர் விருப்பமற்றவர்களாய் இருக்கிறார்கள் என்பது வருந்தத்தக்கதாகும். இது விஞ்ஞான சகாப்தமாக இருக்கலாம், ஆனால் கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளானது இன்னும் ஒப்புயர்வற்ற விதத்தில் ‘உபதேசத்திற்கு பிரயோஜனமுள்ளதாக’ இருக்கிறது. ஒழுக்கநெறிகள், மனித உறவுகள், மற்றும் வேறுபல பொருள்களின்பேரில் நல்ல அறிவுரையை அது கொடுக்கிறது. மேலுமாக, சமாதானமுள்ள எதிர்காலத்திற்கான நிச்சயமான ஒரே நம்பிக்கையையும் பைபிள் அளிக்கிறது.
அதை ஒழுங்காக வாசியுங்கள்
ஆகவே பைபிளை ஒழுங்காக வாசிக்கும்படி உற்சாகப்படுத்துவதை யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய வேலையில் மிக முக்கியமான பாகமாக்கியிருக்கிறார்கள். நியூ யார்க், புரூக்லினில் உள்ள அவர்களுடைய தலைமை அலுவலகத் தொழிற்சாலை கட்டடத்தின்மீது தடித்த எழுத்துக்களில் பின்வரும் அறிவுரை காணப்படுகிறது: “கடவுளுடைய வார்த்தையாகிய பரிசுத்த பைபிளை தினமும் வாசியுங்கள்.” இலட்சக்கணக்கான வழிப்போக்கர்கள் இந்த வார்த்தைகளைப் பார்த்திருக்கிறார்கள், அநேகர் அவற்றிற்கு செவிசாய்த்துமிருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது.
உலகமுழுவதிலும் உள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய 73,000-க்கும் மேற்பட்ட சபைகளில், ஒவ்வொரு வாரமும் தேவராஜ்ய ஊழியப் பள்ளி கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அந்தப் பாடத்திட்டத்தின் ஒரு பாகமானது, தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு பைபிள் பகுதியை வெளிப்படையாக வாசிப்பதாகும். ஆஜராகும் அனைவரும் வாராந்தரமாக தங்களுடைய வீட்டில்தானே தனிப்பட்ட விதமாக பைபிளிலுள்ள சில அதிகாரங்களை வாசிப்பதற்கான நியமிப்பையும் பெற்றிருக்கிறார்கள். இந்த அட்டவணையைக் கடைப்பிடித்து வருகிறவர்கள் கடைசியாக முழு பைபிளையும் வாசித்து முடித்திருக்கிறார்கள்.
இந்த ஏற்பாடு இந்தப் பள்ளியில் பயன்படுத்தப்படுகிற பாடநூல்கள் ஒன்றுடன் இசைவாக இருக்கிறது. தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல் (Theocratic Ministry School Guidebook) சொல்கிறது: “உங்கள் தனிப்பட்ட அட்டவணை, பைபிளைத்தானேயும் வாசிப்பதற்கு நேரத்தைக் கொண்டிருக்க வேண்டும். ஆரம்பம் முதல் முடிவுவரையாக அதை வாசிப்பது அதிக பயனுள்ளதாயிருக்கிறது. . . . இருப்பினும் வாசிப்பதில் உங்கள் இலக்கானது வெறுமனே பொருளை வாசித்து முடிப்பதாக ஒருபோதும் இருக்கக்கூடாது, ஆனால் நினைவில் வைத்துக்கொள்ளும் நோக்கத்தோடு அனைத்தையும் உள்ளிட்ட நோக்குநிலையைப் பெறுவதாகவே இருக்க வேண்டும். அது என்ன சொல்கிறது என்பதை ஆழ்ந்து யோசிக்க நேரமெடுத்துக்கொள்ளுங்கள்.”
யெகோவாவின் சாட்சிகளால் வெளியிடப்பட்ட மற்ற பிரசுரங்கள் இதைப்போன்றே பைபிள் வாசிப்பதை உற்சாகப்படுத்துகின்றன. உதாரணமாக, இந்த இதழின் துணைப் பத்திரிகையாகிய விழித்தெழு!-வில், இளைஞருக்காக பின்வரும் உற்சாகமூட்டுதல் காணப்பட்டது: “நீங்கள் பைபிளை எப்பொழுதாவது முழுமையாக வாசித்திருக்கிறீர்களா? ஆம், பைபிள் ஒரு பெரிய புத்தகம், ஆனால் வாசிப்பதற்கு அதை ஏன் சிறு பகுதிகளாக பிரித்துக்கொள்ளக்கூடாது? . . . ‘நற்குணசாலிகளாயிருந்த’ பெரோயா பட்டணத்தார் ‘தினந்தோறும் வேதவசனங்களை கவனமாக ஆராய்ந்துபார்த்தனர்.’ (அப்போஸ்தலர் 17:11, NW) ஒரு நாளைக்கு வெறுமனே 15 நிமிடங்கள் வாசிக்கும் அனுதின அட்டவணை ஒன்றை கடைப்பிடித்தால், . . . ஓர் ஆண்டிற்குள் பைபிள் வாசிப்பதை நீங்கள் முடிக்கமுடியும்.” ஆம், பூர்வீக காலங்களில் கடவுளுடைய ஊழியர்கள் இருந்ததுபோல, நவீனநாளைய கிறிஸ்தவர்கள் வேதவசனங்களுடன் நன்கு பரிச்சயமானவர்களாக இருக்கவேண்டும் என்று யெகோவாவின் சாட்சிகள் உணருகிறார்கள்.
இதை மனதில் கொண்டவர்களாய், வெளிப்படையான பைபிள் வாசிப்பில் 20-ம் நூற்றாண்டு முறை ஒன்றை சாட்சிகள் ஊக்கப்படுத்தியிருக்கிறார்கள். பல்வேறு மொழிகளில், முழு பைபிளையும் உள்ளடக்குகிற வாசிப்பு கேஸட் பதிவுகளை (cassette recordings) தயாரித்திருக்கிறார்கள். பைபிள் வாசிப்பதற்கான சில தடைகளை மேற்கொள்வதில் அநேகருக்கு இது ஒரு சிறந்த உறுதுணையாக நிரூபித்திருக்கிறது. சிலர் இந்தப் பதிவுகளை வீட்டில் வேலை செய்துகொண்டிருக்கையில், தங்களுடைய காரை ஓட்டிக்கொண்டிருக்கையில், அல்லது மற்றநேக காரியங்களைச் செய்துகொண்டிருக்கையில் செவிகொடுத்துக் கேட்கிறார்கள். பைபிளின் ஒரு பகுதி வாசிக்கப்படுகையில் உட்கார்ந்து, அமைதலுடன் செவிகொடுத்து, உங்களுடைய சொந்தப் பிரதியில் கவனித்துவருவது ஓர் இன்பகரமான அனுபவமாக இருக்கும்.
நீங்கள் ஏற்கெனவே பைபிளைத் தினந்தோறும் வாசித்துவரவில்லை என்றால், அவ்விதமாகச் செய்வதை ஏன் உங்களுடைய பழக்கமாக ஆக்கிக்கொள்ளக்கூடாது? இது ஒவ்வொரு நாளும் நீண்ட நேரத்தை எடுக்கவேண்டியதில்லை, ஆனால் நன்மைகள் அதிகளவாக இருக்கும்; ஏனென்றால் வேதவசனங்களைப் பொருத்துவது ஞானமாக செயல்படுவதற்கும் ஆவிக்குரிய விதமாக பலனளிக்கும் வாழ்க்கையை மகிழ்ந்தனுபவிப்பதற்கும் உங்களுக்கு உதவிசெய்யும். வெகுகாலத்திற்கு முன்பு இஸ்ரவேல தலைவராகிய யோசுவாவுக்குக் கொடுக்கப்பட்ட பின்வரும் இந்தக் கட்டளைக்கு நீங்கள் இசைவாக செயல்பட்டுக்கொண்டும் இருப்பீர்கள்: “இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக் கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய்.”—யோசுவா 1:8.
பைபிளின் பக்கங்கள் கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கத்திற்கான யெகோவாவின் அன்பான நோக்கத்தை வெளிப்படுத்துகின்றன. அவருடைய ஏவப்பட்டெழுதப்பட்ட வார்த்தையைப் பற்றிய திருத்தமான அறிவு, உண்மையான மகிழ்ச்சியிலும் முடிவற்ற ஆசீவாதங்கள் நிறைந்த அற்புதமான புதிய உலகிலே, பரதீஸில் நித்திய ஜீவ நம்பிக்கையிலும் விளைவடையும். (லூக்கா 23:43; 2 பேதுரு 3:13) பைபிளை வாசிப்பதற்கும் படிப்பதற்கும் இந்த அதிசயமான வாழ்க்கைக்காக தகுதிபெறவும் உங்களுடைய வாய்ப்பை பற்றிக்கொள்வீர்களாக.