நீங்கள் பைபிளை உயர்வாக மதிக்கிறீர்களா?
இருநூறுக்கும் மேலான ஆண்டுகளுக்கு சற்றே முன்பாக, மேரி ஜோன்ஸ் என்பவள், அட்லான்டிக் கடற்கரைக்கு அருகில் ஒதுக்கமாகவுள்ள வெல்ஷ் கிராமமாகிய லன்ஃபியான்ஷல் என்ற இடத்தில் பிறந்தாள். ஒரு பைபிளைச் சொந்தமாக வாங்க முடியாதளவுக்கு அவளுடைய பெற்றோர் ஏழ்மையான நெசவுத்தொழிலாளிகளாக இருந்தனர். ஆனால் பைபிள் கதைகளை அவளுக்குச் சொல்வதன்மூலமும் தங்களுடைய நினைவிலிருந்த வசனங்களை மறுபடியும் மறுபடியும் சொல்வதன்மூலமும் தங்கள் மகளுடைய இருதயத்தில் கடவுளுக்கான அன்பை அவர்கள் ஊன்றவைத்தனர். மேரி அடிக்கடி பக்கத்து வீட்டுக்காரருடைய வெல்ஷ்மொழி பைபிளை வாசிப்பாள். அவள் தனக்குச் சொந்தமாக ஒன்றை வாங்கத் தீர்மானித்து, தன்னால் முடிந்த அளவுக்கு கொஞ்சம் பணத்தைச் சேமித்து வைக்க ஆரம்பித்தாள்.
1800-ம் ஆண்டில், மேரிக்கு 16 வயதாக இருந்தபோது, 40 கிலோமீட்டர் தொலைவிலிருந்த பாலா என்ற சிறுபட்டணத்தில், சில வெல்ஷ்மொழி பைபிள்கள் விற்பனைக்கு வந்திருந்ததை அவள் கேள்விப்பட்டாள். தளராத உறுதிபூண்டவளாய், அவ்விடத்திற்கு நடந்துசெல்ல திடத்தீர்மானம் செய்தாள். அதை அவள் செய்தாள், வெறுங்காலோடு மலைகளைக் கடந்துசென்றாள். என்றபோதிலும், அவள் சென்றடைவதற்குள்ளாக, எல்லா பிரதிகளும் விற்பனை ஆகிவிட்டிருந்தன. மேரி, தான் சேமித்து வைத்திருந்த பணம் மிக மிகக் குறைவாக இருந்தது என்பதையும் அறியவந்தாள்.
உள்ளூர் பாஸ்டர் மேரிக்கிருந்த பைபிள் அறிவையும் பற்றையும் கண்டு நெகிழ்ந்துபோனார். அவள் எடுத்த அனைத்து முயற்சிகளுக்குப் பின்பு ஏமாற்றமடைந்த கண்ணீர்களோடு அவளைப் பார்த்ததும், தன்னுடைய சொந்த பைபிளை தயவுடன் அவளுக்குக் கொடுத்தார். அவர் சொன்னார்: “இதைக் கவனமாக வாசி, ஊக்கமாகப் படி, பரிசுத்த வார்த்தைகளை உன்னுடைய நினைவில் பொக்கிஷமாக காத்துக்கொள், அதன் போதனைகளுக்கு இசைவாகச் செயல்படு.”
இந்தக் கதையானது பின்பாக லண்டன் மதத் துண்டுப்பிரதி சங்கக் குழுவினுடைய (Committee of the Religious Tract Society of London) கூட்டத்தில் கூறப்பட்டது. வெறுமனே வேல்ஸ் மக்களுக்கு மட்டுமல்ல, முழு உலகிற்கும் பைபிள் மொழிபெயர்ப்புகளை அளிப்பதற்கு அங்குத் தீர்மானம் செய்யப்பட்டது. இந்த எளிய ஆரம்பத்திலிருந்து 19-ம் நூற்றாண்டில் பைபிள் சங்கங்களில் முதலாவதானது தோன்றியது. அதற்குப் பிறகு, அந்நிய மொழி பைபிள் பிரதிகள் மிக வேகமாக தோன்ற ஆரம்பித்தன.
இன்றைக்கு, 1884-ல் சட்டப்படி அமைக்கப்பட்ட உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸையிட்டி, 200-க்கும் மேற்பட்ட மொழிகளில் பைபிள்களையும் பைபிள் படிப்பு உதவிப்புத்தகங்களையும் அச்சிடுகிறது. உலகமுழுவதுமாக, 7 கோடியே 20 லட்சம் நவீனமொழி பரிசுத்த வேதாகமங்களின் புதிய உலக மொழிபெயர்ப்பு (New World Translation of the Holy Scriptures) பிரதிகளை அது வினியோகித்திருக்கிறது. மூல எபிரெயு மற்றும் கிரேக்க மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட இந்தப் புதிய உலக மொழிபெயர்ப்பு முழுமையாகவோ பகுதியாகவோ 18 மொழிகளில் இப்பொழுது கிடைக்கிறது. மேலுமாக, தற்பொழுது கூடுதலாக 12 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுவருகிறது.
ஏறக்குறைய எல்லாருக்கும் இப்பொழுது கிடைக்கக்கூடிய பைபிளை நீங்கள் எவ்வாறு நோக்குகிறீர்கள்? நீங்கள் பைபிளை உயர்வாக மதிக்கிறீர்களா? நீங்கள் பொக்கிஷமாக வைத்து வாசிப்பதற்கு உங்களிடம் ஒரு பிரதி இருக்கிறதா?
[பக்கம் 3-ன் படத்திற்கான நன்றி]
மேரி ஜோன்ஸுடைய கதையும் அவளுடைய பைபிளும் என்ற புத்தகத்திலிருந்து